எழுத்தாளன் வியாபாரி ஆகிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 7,023 
 
 

சுரேஷ் இப்பொழுது வலைதள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளராகிவிட்டான்.அவனது கதைகளும் வலைதளத்தில் அடிக்கடி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு தோன்றியது, கணினி உபயோகிப்பவர்கள் மற்றும் கை பேசி வைத்திருப்போரும் இவனது கதைகளை வாசிப்பது இவனுக்கு பெருமைதான் என்றாலும், அச்சில் வந்தாலும் நன்றாக இருக்குமே. என்று நினைத்தான்.அதற்காக பத்திரிக்கைகளும் இவனது கதைகளை வாங்க போட்டி போட்டுக்கொண்டிருக்கவில்லை,அப்படியே ஒரு பத்திரிக்கையில் வந்தாலும் இவனாக அந்த பத்திரிக்கையை கையில் வைத்துக்கொண்டு அந்த பத்திரிக்கையை காண்பித்து என் கதை வந்துள்ளது என்று சொன்னால் “ஓ அப்படியா” நான் இந்த பத்திரிக்கையெல்லாம் படிக்கறதில்லை அதனால தெரியாம போச்சு என்று உதார் விடுவார்கள். ஒருவனை மனசு திறந்து “எழுத்தாளன் இவன்” என்று ஏற்றுக்கொள்வதில் மக்களுக்கு கொஞ்சம் கஞ்சத்தனம்தான்.அதே நேரத்தில் அவனது எழுத்துக்களை ஏற்றுக்கொண்டுவிட்டால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இவன் ஏன் இதைப்பற்றி இப்போது பேசுகிறான் (புலம்பல்) என வாசகர்கள் நினைக்க வேண்டாம்,ஏனென்றால் இந்தக்கதையின் கதாநாயகனும் சுற்றி உள்ளோரும் தன்னை எழுத்தாளனாய் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.அதற்காக தன்னுடைய கதைகளை அச்சாக்கிகொண்டு வருவது என்று முடிவு செய்துவிட்டான். அதற்கு நாமும் நம் வாசகர்களைப் பற்றி அவனுக்கு நாலு வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்றுதான் இந்த பேச்சு.(புலம்பல்)

முதலில் வெளி வந்த கதைகளை வரிசைப்படுத்த வேண்டும். எப்படி வரிசைப்படுத்துவது? நண்பர்களிடம் யோசனை கேட்டான்.பலர் அதைப்பற்றி தெரியாது என்று சொல்ல ஒரு நண்பன் மட்டும் நீ புத்தகத்தை விக்கணும்னு நினைக்கிறயா, இல்லை உன் திருப்திக்கு வெளியிடுறயா? திருப்திக்கு செலவு செய்து வெளியிடும அளவுக்கு சுரேஸ் வசதியானவனும் அல்ல, இல்லை நண்பா வரும்படி கொஞ்சமாவது வந்தாத்தான் நல்லா இருக்கும்.அப்படியின்னா படிக்கும்போது முதல்ல விறுவிறுப்பான கதைகள் இருந்தா வாசகனும் விறு விறுப்பாயிடுவான், உடனே படிச்சு முடிச்சே ஆகணும்னு தீவிரமா படிப்பான். அப்படியே கதைகளை வரிசைப்படுத்தினான்.

அடுத்த விசயமாக பதிப்பாளரை அணுகவேண்டும் என்று நண்பர்களை கேட்க அவர்கள் நகலம் மூலம் புத்தகமாக்கலாம், செலவும் குறைவு என்று யோசனை சொன்னார்கள், ஆனால் புத்தக உலகில் பதிவாகாமல் போய்விட வாய்ப்புண்டு என்று சொல்ல, பயந்துவிட்டான்.

புத்தக வடிவிலே கொண்டு வருவதுதான் நல்லது என்று முடிவு செய்தான். தெரிந்தவர் ஒருவர் புத்தக பதிப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் இவனை வரவேற்று புத்தகம் வெளி வருவதில் உள்ள சாதக பாதகங்களை சொல்லி, அவரிடம் புத்தகமாக்கி எடுத்துச்சென்ற எழுத்தாளர்களின் கதையைச்சொல்லி,(உங்கள் காதுகளுக்கு “கதி” என்று விழுந்தால் நான் பொறுப்பல்ல) அதில் ஒரு எழுத்தாளரின் மனைவி அவரிடம் சண்டைக்கே வந்துவிட்டார்களாம் (சொத்தை எல்லாம் புத்தகம் செய்தே அழித்து விட்டதாக) சொல்லி இவன் வயிற்றில் புளியை கரைத்தார்.

மொத்தம் எத்தனை பிரதிகள் வேண்டும் என்று கேட்க இவன் தோராயமாக சொல்ல இவர் வெளிவரும் பிரதிகளின் அளவுக்கு தொகையும் இருக்கும் என்று சொல்ல இவன் ஏடாகூடமாக ஏன் சார் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு போடலாமே என்று சொல்ல அவருக்கு கோபம் வந்துவிட்டது, சார் இந்த மாதிரி ஐந்துக்கும் பத்துக்கும் போடுவதாய் இருந்தால் பேசாமல் பதிப்பகத்துக்கு வராமல் நகலகத்துக்கு சென்றுவிடுங்கள் என்று பதில் சொல்ல இவன் அவரை சமாதானப்படுத்தினான்

சமாதானமான அவர் இவன் கொண்டு வந்த கதைகளை வாங்கிப்பார்த்து அதை ஒழுங்கு படுத்தி ஒரு வாரத்தில் பதில் சொல்வதாக சொன்னார். இவனும் ஒரு வாரம் காத்திருக்க, அவர் முதலில் நீங்கள் பதிவு பண்ணிய “எழுத்துரு” புத்தக வடிவுக்கு ஏற்றதல்ல, ஆகவே முதலில் அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றார். இவன் மீண்டும் அதை எல்லாம் மாற்ற மெனக்கெட்டான். இப்படியாக ஒரு மாதம் ஒடியது.

அடுத்ததாக உங்கள் கதைகளில் எழுத்துப்பிழைகள்,குறியீட்டுப்பிழைகள் நிறைய இருக்கின்றன, அதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்று சொல்ல, அதற்கும் காத்திருக்க ஆரம்பித்தான்.பின் ஒரு வழியாக ஓரளவு பிழைகள் சரிசெய்யப்பட்டபின், உங்கள் கதைகளை மதிப்பீடு செய்ய பிரபலமான கதை ஆசிரியர் ஒருவர் தேவைப்படுமே என்று சொல்ல இவன், “நான் ஒரு அரை குறை எழுத்தாளர், எனக்கு எப்படி ஒரு பிரபல கதாசிரியர் என் கதைக்கு மதிப்பீடு தருவார் என்று சொன்னான்.

உடனே அவர் ஒரு புன்னகையை சிந்தவிட்டு கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன்,என்று சொல்ல சுரேஸ¥க்கு அவர் “அபயம் அளிக்கும் கிருஷ்ண பரமாத்மாவாக” அப்பொழுது தோற்றமளித்தார்.

புத்தகத்துக்கு ஒரு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல விலை நிர்ணயம் செய்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து ஒரு விலையை அவரே நிர்ணயித்தார்.நிர்ணயித்த விலையை விட பாதி அளவே உங்களுக்கு செலவாகியிருக்க வேண்டும், அப்பொழுதுதான் விற்பனை செய்பவருக்கும் வருமானம் கிட்டும் என்று சொல்ல இவன் கணக்கு போட்டு பார்த்ததில் நிர்ணயித்த விலையை விட அதிகமாக அவன் கையிலிருந்து செலவாகியிருந்தன. இவை வெளியே வந்தாலும் செலவு செய்த தொகை கிடைப்பதே “குதிரைக்கு கொம்பு முளைத்தது போல” என்பது புரிந்தது, என்றாலும் முன் வைத்த காலை பின் வைக்க மனசு வரவில்லை நம் எழுத்தாளனுக்கு.

ஒரு வழியாக புத்தகம் அச்சிடப்பட்டு பதிப்பகத்தார் புத்தககட்டுக்களை அவன் கையில் கொடுத்து ஒரு பரிதாபப்பார்வை பார்த்து வழி அனுப்பி வைத்தார். வெற்றிகரமாய் புத்தகங்களை கொண்டு வந்து வீட்டில் வைத்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவனை வினோதமாக பார்த்தனர். இவன் வீட்டுக்காரி “இது எங்க வீட்டுக்காரரு எழுதின புத்தகம்” என்று விளம்பரப்படுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள் புத்தகததை ஆவலுடன் (பரிதாபமாக என்று எடுத்துக்கொண்டாலும் தவறில்லை) பணம் கொடுத்து வாங்கிச்சென்றனர்.இப்படியாக இவன் வசிக்கும் இடங்களில், புத்தகங்களை விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுத்து (பணம் அப்புறம் தருவதாக சொன்னவர்கள்) எழுத்தாளன் என்று அறிமுகமாகிவிட்டான்.அடுத்ததாக புத்தக கடைகளுக்கு படை எடுத்துக்கொண்டிருக்கிறான்,எல்லா நண்பர்களுக்கு போன் போட்டு விசாரிக்கிறான். (அதன் சாக்கில் புத்தகத்தை தள்ளி விடவும்) முயற்சிக்கிறான்.

நீங்களும் எங்காவது பார்த்தால் அவனிடம் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு எழுத்தாளனை ஊக்குவித்த புண்ணியம் கிடைக்கும்.

இவ்வளவு துன்பப்படும் அவனிடம் கேட்டால் அடுத்த புத்தகம் சீக்கிரம் வெளியிடவேண்டும் என்று சொலுகிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *