எழுதப்பட்ட அத்தியாயங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 2,426 
 
 

(1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

சரியாக எட்டேமுக்கால். வழமையான நேரந்தான். பிந்தவில்லை. அவதிப்படாமல் போகலாம் என்று திருப்தியாக இருந்தது. படலையைத் திறந்து சைக்கிளைத் தள்ளியபடி வெளியே வந்தான். பள்ளிச் சந்தடிகள் ஓய்ந்து தெரு அமைதியாக இருந்தது. இளம் வெய்யிலும் காற்றுமாய் இந்தக் காலைப் பொழுது அழகாக இருந்தது. எல்லாக் காலைவேளைகளும் எல்லாக் குழந்தைகளையும் போல அழகானவைதாம் என நினைத்தான். நித்தியின் பாடல் நினைவுக்கு வந்தது. 

“இன்றோர் புதிய தினம்….” 

படலையைச் சார்த்திக்கொழுவினான். சைக்கிள் சில்லுகளை அழுத்திக் காற்றுப் பார்த்துக் கொண்டு விரல்களை ஸீற்றுக்கடியிலிருந்த துணியில் துடைத்துக்கொண்டான்.. எதிர்முடக்கில் ஒரு சைக்கிள் வருவது தெரிந்தது. அது போகட்டும் என்று காத்து நின்றான்.கிட்ட வந்ததும் தெரிந்தது. அது, செல்வநாயகம். 

“நான்தான் முழுவியளம் போலை….” சிரித்தபடி சொன்னார்: 

“……நீ உதுகள் பார்க்காத ஆள்தானே…” 

அவனும் சிரித்தபடி பெடலைமிதித்தான். 

“சங்கதி தெரியுமே. அம்மன் கோவிலடியெல்லாம் பெடியள் ஆயத்தமா நிக்கிறாங்கள்…” 

“என்னது?இப்ப என்ன?” 

காலை எடுத்துவிட்டு நின்றான். 

“ஆமி இறங்கப் போகுதெண்டு சனம் பெரிய அவதி” 

இது ஒரு புதுக்கதையாயிருந்தது. 

“அப்பிடியிருக்காது…..சமாதானப் பேச்செண்டு எங்கும் பெரிய அமளியாயிருக்கு இது வேறேதோ விஷயமாக்கும்”. 

“நம்பாட்டிப் போய்ப் பார்.” செல்வநாயகம் போய் விட்டார். 

அவருக்குப் பதில் சொன்னாலும் மனம் குழம்பி விட்டது. பிரச்சினை நடந்த நாட்களெல்லாம் நினைவுக்கு வந்தன…. அப்படி ஏதும் நடந்தாலும்…. வீட்டை விட்டுப்போகக் கூடாது என்ன செய்யலாம்? ? போகிற வழிதானே. விசாரிக்கலாம் என்று பட்டது. யோசித்தபடி சைக்கிளை மிதித்தான். 

என்ன வாழ்க்கை இது என்றிருந்தது -ஒன்றுமே நிச்சயமில்லாமல்! அடுத்த கணத்தில் இது தான் வாழ்க்கை என்றும் இருந்தது. 

வாசிகசாலை தாண்டும்வரை ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை. மதவடிக்குக் கொஞ்சம் இப்பாலிருந்தே போராளிகள் நின்றார்கள். ஆயுதபாணிகளாய். சனநடமாட்டமும் அசாதாரணமாய்த் தெரிந்தது. என்னவாயிருக்கும்? எப்படி அறியலாம்? அம்மன் கோவிலடியில். தெருவில் பெரிய கும்பல் நின்றது. அதிலும் கோவில் முகப்பு வயல்களிலும் கூடப் போராளிகள்… எதையோ எதற்கோ-காத்து நிற்கிற மாதிரி. 

கும்பலில் நின்றவர்கள் ஆளுக்கொன்று சொன்னார்கள். குழப்பம் கூடிவிட்டமாதிரி இருந்தது. ஆமி இறங்கப் போகிறதென்று சொல்லிக் கொண்டும், வேடிக்கை பார்க்க முடிகிறது அதிசயந்தான். இதில் நின்று வினைகெட முடியாது – நேரம் போய்க் கொண்டிருக்கிறது. 

ஒரு முடிவுக்கு வந்தவனாய்க் கோவிலின் பின்புறம் போனான். பிள்ளையாரடி மூலையில் இரண்டு பையன்கள் அவர்களருகில் போய் மெல்லக் கேட்டான் 

“ஏதும் பிரச்சினையே தம்பி?…” 

“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. அண்ணை…” 

“சனம் பயப்பிடுகுது போலை இருக்கே. ..”

“ஒண்டும் நடக்காது. பயப்பட வேண்டாமெண்டு சொல்லுங்கோ…” 

“என்ன சங்கதி?”

ஒரு கணம் தயங்கினாற் போலிருந்தது. 

“பயப்பிடுகிறதுக்கோ பிரச்சினைக்கோ ஓண்டுமில்லை, நாங்கள் ஏதோ ரெஸ்ற் பண்ணப் போறம்….” அந்தக் குரலில் தொனித்த ஆதரவு. அதை நம்பலாம் – பயப்படத் தேவையில்லை – என்றது. ஆனால் காரணத்தைத்தான் ஒப்புக் கொள்ள இயலவில்லை.. என்றாலும் வற்புறுத்த முடியாது கூடாது. 

“சரி, தம்பி…மெத்தப் பெரிய உபகாரம்…” 

சைக்கிளைத் திருப்பிக்கொண்டு வந்தபோது தெருவடியில் நின்ற சனக்கூட்டம் அடர்த்தியிலும் கனத்திலும் அதிகரித்திருந்தது. இவனும் ஆட்கள் வந்தபடி இருந்தார்கள்…. கும்பலைக் கடப்பது கஷ்டமாக இருந்தது. மெல்ல மெல்ல விலகிக் கொண்டு போனான். எதிரே வரும் ஆட்களிலும் மோதாமல் தெருக்குழிகளிலும் விழுந்துவிடாமல் போவது வலுசிரமம். 

வீட்டில் போய் விஷயத்தைச் சொல்லி. பயப்படத் தேவையில்லை என்பதையும் சொல்லிவிட்டு வேலைக்குப் போகலாம். அரை மணித்தியாலம் பிந்திவிடும். பரவாயில்லை…. 

அரசடிச் சந்தியில் திரும்பிய போது எதிரே பெரிய வெள்ளைக் காரொன்று வந்தது. தெருக்கிடங்குகளைத் தவிர்த்துப் போகும் முயற்சியில் அதன் வேகம் குறைந்த போது பின் ஸீற்றில் உட்கார்ந்திருந்தவர் பளிச்சென்று கண்ணிற் பட்டார். நிச்சயம் எங்கள் பத்திரிகைகளில் காட்சிதருபவர். சந்தேகமில்லை – தாடியும் தலைப்பாகையும்-அவரே தான் விசேஷமாய் ஏதோ நடக்கத்தான் போகிறது. சைக்கிளை திருப்பிக் கொண்டு பின்னால் போனான். 

அவனைப் போலப் பலபேர் அவரைக் கண்டிருக்க வேண்டும். காரின் பின்னால் ஒரு கும்பலே ஓடத்தொடங்கியிருந்தது. கோவிலடிக்குப் போனபோது அது மிகவும் பெரிதாகி விட்டிருந்தது. ஆனால் முழுவதும் தொடர அனுமதிக்கப்படாமல் கும்பலிற் போனவர்கள் நிறுத்தப்பட்டார்கள். இன்னும் பின்னால் வந்து கொண்டிருந்த அவன் சைக்கிளை எதிர் வேலிக் கரையோரமாக விட்டுவிட்டு உயர்ந்த ஒரு இடமாக நின்று பார்த்தான். 

கார் கோவிலடியில் திரும்பி. வேப்பமரத்தின் கீழ் போய் நின்றது. பட பட படவென்று சிலர் இறங்கினார்கள். அவனுக்கு அடையாளந் தெரிந்த இன்னொருவர். முன்னையவரின் சகா – ஸஃபாரி ஸுட்காரர். 

இருவரும் விறு விறென்று தேர்முட்டிப் பக்கமாக நடந்தார்கள். இடையில் என்ன நினைத்தார்களோ -யாராவது சொன்னார்களோ – சட்டென்று திரும்பிக் கோவில் வாசலடிக்குப் போய் படியைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மீண்டும் திரும்பி அதே நடையுடன் கிழக்கே போனார்கள். கோவில் வாசலுக் கெதிரேயிருந்த வயலை நோக்கி. 

2 

பள்ளிக்கூட விளையாட்டிடத்தை மிதித்து எத்தனை வருடங்களாகிவிட்டன? ஐந்தாம் வகுப்புவரை இந்தப் பள்ளியில் படித்த அந்தப் பிஞ்சுக் காலத்தில் தினசரி வந்து போன இடம் எத்தனை விளையாட்டு. எத்தனை கும்மாளம் போட்ட இடம்! கல்லால் மாங்காய்க்கு எறியப்போய். கனகநாதனின் மண்டையை உடைத்த இடம். வலது பக்கம் கொய்யாப் பற்றை. காணடைகள். எதிர் மூலை பாண கிணற்றடியில் நெல்லிமரம். இந்த விளையாட்டிடமே மாந்தோப்பு. வேறென்ன வேண்டியிருந்தது அப்போது? 

ஆனால் விளையாடச் சொல்லி நிற்பார்கள். வாத்திமார் வேர்க்கவேணும். உடம்பிலுள்ள அழுக்கு நீரெல்லாம் வெளியே வரவேணும். சட்டை நனைய வேணும். வாத்திமார் விட மாட்டார்கள். இந்தக் கொய்யாவும். காண்டையும். மாங்காயும் கவர்ந்த வேளை வாத்திமாரும் பாண்கிணற்றின் பாம்புகளும் வெருட்டி வைத்த நாட்கள். 

இது விளையாட்டிடமாக இல்லாமலாகியும் பல காலமிருக்கும். இப்போது புதுக்கட்டிடத்தோடு விசாலமான மைதானம் இருக்கிறது. 

மாந்தோப்பு மாறாமலே இருக்கிறது. வடக்கிலும் மேற்கிலும் வயல்வெளிகள் வருஷத்திலும் ஒருதடவை-அதுவும் சிலவேளை- நெல்லும், மீதி நாட்களில் கிடைச்சியும் விளைகிற வயல்கள். கிழக்கில் பனங்கூடல். தெற்கே `ட’ வடிவில் குச்சொழுங்கை. தெருவிலிருந்தும் பள்ளியிலிருந்தும் வருவதற்கான பாதை. எல்லாம் அப்படியேதானிருந்தன. ஆனால் இடம் மட்டும் சின்னதாகிவிட்ட மாதிரி. 

சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மெல்ல இடதுபக்கம் நடந்தான். சருகுகள் காலடியில் சரசரத்தன. நிழல் குளிர்மையாக இருந்தது தோப்பு முடிந்து வயல்வரம்பு தொடங்குகிற இடத்தில் கரை அடித்தது போல நிழல் நீளவிழுந்திருந்தது. நேரே முன்னால் மேற்கே-வயல்களைத் தாண்டி கூப்பிடு தொலைவில் கோவில். இளம்பகல் வெளிச்சத்தில் கோபுரம் பளிச்சென்றிருந்தது. 

கோயில்முகப்பு. மருதமரத்தடி மேட்டொழுங்கை எல்லாம் வரிசை கட்டினாற் போல சனங்கள். இங்கே. இவன் நிற்கிற இந்த தோப்பருகில் ஐந்தாறு பேர்மட்டுமே இங்கிருந்து பார்க்கிறயோசனை எதிர் வெய்யிலையும் சனநெருக்கத்தையும் தவிர்த்து. வசதியாகப் பார்க்கிற யோசனை பலருக்கு வராமலே போயிருக்கலாம். பக்கவாட்டுச்சிந்தனை பற்றாக்குறையான ஒரு பொருள்தான்… 

இந்த இடத்திற்கும் கோவில் முகப்பிற்கும் சரி நடுவில் குளங்களிரண்டிற்குமிடையில் அந்தக் கறுப்பும் வெள்ளையுமான துணிக் குழாய் காற்றிலாடுகிற இடந்தான். போராளிகளின் தலைவரை அழைத்துப்போக வருகிற ஹெலி இறங்கப் போகிற இடமாயிருக்கவேண்டும். 

முந்தி எங்கள் ஓட்டப்பந்தயம் நடக்கிற மைதானம். இன்றைக்கு விமானத்தளமாகி விட்டிருக்கிறது. அதுவும் ‘இன்ரநஷனல்….. இந்தக் குறும்புத்தனமான எண்ணத்தால் கிருஷ்ணன் தன்னையறியாமலே முறுவலித்தான். 

மாந்தோப்பில் கெந்தியடிக்கலாம். ட்றில் செய்யலாம். தாச்சி விளையாடலாம். ஆனால் ஓட்டப்பந்தயம் வைக்கமுடியாது. அது வயலில்தான். நேரே மருத மரத்தடிக்கு ஓடவேண்டும். ஓடி. நிலத்தோடு அரைந்து கொண்டு கிடக்கிற மரங்குழைகளில் இரண்டு இலை பிடுங்கிக் கொண்டு வரவேண்டும் – அதுதான் பந்தயம். 

பள்ளியிலிருந்து கோவிலுக்குப் போவதும் இந்தவழிதான். மூன்றாம் நாலாம் வகுப்புப் படிக்கிற நாட்களில் ஒவ்வொரு வெள்ளியும் முதல் பாடம் கோவிலுக்குப் போவதாயிருந்தது. அந்த உசாரில் காலை வெய்யிலும் கிடைச்சிக்கட்டையும் குத்துகிறது கூடத் தோற்றாது. வரிசையாகப் போகவேண்டும். கொஞ்சம் குழம்பினாலும் வாத்தியாரின் பூவரசங்கம்பு எங்கிருந் தென்றில்லாம் வந்து முதுகில் சுள்ளென்று பாயும் கோவில் – அயலில் இரண்டு குளங்களோடு- ஒரு கேணியும். இதனால் கண்காணிப்பும் கண்டிப்பும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். 

இங்கிருந்து போகும் போது வயல்வெளி ஒருகடல்போலும். கோவில் ஒருதீவு போலும் படும். உண்மையில் மாரி வந்தால் அப்படித்தான். ஊர்வெள்ளமெல்லாம் கோவிலடியில் சேரும். வெள்ளமென்றால் லேசல்ல. சில இடங்களில் ஆளுயரம். 

கோவில் மேடையும் வலுபெரிது. நல்ல உயரம். ஆளுயர வித்தியாசம். அதற்கும் நிலத்திற்கும். அந்த நாட்களில் இரண்டு பக்கத்திலும் நீளத்திற்கு கம்பிக்கிராதி. மேடை நீளத்திற்கு இருபுறமும் செவ்வரளி பூத்திருக்கும். கிராதிக்கும் மேடை விளிம்பிற்குமிடையில் ஒட்டி ஒட்டிப்போக ஒற்றைக்கால் வைக்க இடமிருக்கும். இந்த விளிம்பில் துணிந்து நடந்து அந்த நெடு மேடையை வெளிப்புறமாகவே கடந்து விடுபவன் அவர்களிடையே வீரனாக இருந்தான். 

வரிசை நேரே கிணற்றடிக்குப் போகும். வாத்தியாரோ அல்லது பெரிய பையன்களோ அள்ளி ஊற்றுகிற நீரில் ஒவ்வொருவராகக் கால் கழுவிக்கொண்டு, உள்ளே போய் சுற்றி வந்து. முன்னாலிருந்து சில தேவாரங்கள் பாடி, பிறைக்குள்ளிருக்கிற திருநீற்றையும் கல்லில் கட்டையால் உரைக்கிற சந்தனத்தையும் பூசி… இவ்வளவும் செய்ய வேண்டும். செய்து விட்டு. வாத்தியார் கும்பிட்டு விட்டு வருகிறதுக் கிடையில் விளிம்பில் நடக்கலாம். அரளிப் பூ ஆயலாம்… 

கோவிலில் அநேகமாக அவர்கள் பாடுகிற தேவாரம் மாதர்ப்பிறைக்கண்ணியானை ஆக இருந்தது. கிருஷ்ணனுக்கு இன்றைக்கும் – இந்த முப்பது முப்பத்தைந்து வருஷத்திற்குப் பிறகும் – அம்மன் கோவிலை நினைத்தவுடன் மனதில் வருகிற தேவாரமாக இது இருக்கிறது. 

அப்படியான காலங்களில் ஒருநாள்தான் கொத்தலாவலை வந்தது. பிரதம மந்திரி வருகிறார் என்று சொல்லி, ஒரு கிழமையாகப் பள்ளியெல்லாம் ஒரே அமளியாக இருந்தது. பிறகு ஒரு நாள் காலையில். வெள்ளைக் காற்சட்டையும் சேட்டும் போட்டு வேளைக்கே வெளிக்கிட்டுஅன்றைக்கு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. என்றொரு ஞாபகம்- பள்ளிக்குப்போய் அங்கிருந்து வரிசையாகக் கோவிலுக்குப் போய். முதல் வாத்தியார் சொன்னபடி கோவில் வாசலிலிருந்து இரண்டு புறமும் வரிசையாக அணிவகுத்து நிற்க. அந்த வரிசை மண்டபத்தையும் தாண்டி முன் வீதியிலிறங்கி வலது பக்கம் திரும்பி நெடுகப் போனது. கைகளில் முதல் நாளே தயாரித்துவைத்த வெற்றிக் கொடி. ரிஸ்யூப் பேப்பரை வெட்டி ஈர்க்கிலில் ஒட்டிய இரட்டைக் கூர்க்கொடி. 

கொஞ்சப் பேர் கோவிலுக்குள்ளிருந்து வெளி வந்து மெல்ல இந்த வரிசைக்கு நடுவால் போனது மட்டும் நினைவிருக்கிறது! அதில் யார் கொத்தலாவலை என்று தெரியாதிருந்தது. அவரும் வெளிக்கிட்டு மழையும் விட்டவுடன் பள்ளிக்குப் போனார்கள். அன்றுபள்ளி அவ்வளவுதான். பொது அறிவுப்பாடப் புத்தகத்தில் படித்த பிரதம மந்திரி கொழும்பிலிருந்து இலங்கையை ஆள்கிற பெரிய மனிதர்-தங்கள் ஊருக்கு வரவும். தாங்கள் அவரைப் பார்க்கவும் நேர்ந்த மகிழ்ச்சியிலும் அன்று வேளைக்குப் பள்ளி முடிந்த மகிழ்ச்சி பெரிதாயிருந்ததும் நினைவு. 

பிரதமர் இன்னொன்றும் செய்தார் என்று பிறகு சொன்னார்கள். கோவிலடி வெள்ளம் ஓடுவதற்காக வெட்டப்பட்ட பெரியவெள்ள வாய்க்காலைத் திறந்து வைத்தாராம். இன்றைக்கும் அந்த வாய்க்கால் பகடி வெற்றியாக கொத்தலாவலை நைல அல்லது கொத்தலாவலை நதி’ என நாமங்கொண்டுள்ளது. இந்த நதி மூலம். கோவில் வயலுக்குள் சேர்கிற வெள்ளந்தான் நதி. மருதடிப்பிள்ளையார் கோவில் வரை ஓடி வழுக்கையாற்றுடன் சேர, வழுக்கையாறு கல்லுண்டாயில் கடலுடன சங்கமிக்கிறது. 

3 

ஐம்பத்தேழோடு பள்ளி மாற நேர்ந்தபின் இந்த வாராந்தக் கோவில் விஜயம் நிற்க நேர்ந்தது என்றாலும். மானிப்பாய்க்குப் போகத்தொடங்கிய பின்னும் அம்மன் கோவிலடியைத் தினசரி இரண்டு தரம் தாண்டுவது தவிர்க்க முடியாததுதான். இது ஒரு வருஷம். 

பிறது வந்த பின்னேரங்கள் அம்மன் கோவிலடி வெளியில் கால்பந்தை நினைவு படுத்துவனவாக அமைந்தன. கிருஷ்ணன் நல்லதொரு கோல் காப்பாளனாக இருந்தான். பள்ளியால் வந்து புத்தகத்தை வைத்துவிட்டு. தேத்தண்ணி குடித்தது பாதி. குடியாதது பாதியாக ஓடுகிற பின்னேரங்கள்… 

ஜேக்கேயின் நட்புக்கிட்டியதும் இந்த நாட்களில் தான். கொழும்பு இந்துக் கல்லுரியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்துவிட்டு. ஐம்பத்தெட்டாம் ஆண்டில் தாய் தகப்பன் சகோதரங்களுடன் ஊரோடு வந்துவிட்ட ஜேக்கே அங்கிருந்து கொண்டுவர முடிந்தவற்றில் ஒன்று இந்தக் கால் பந்து அபிமானம். 

கால்பந்தை மிஞ்சியும் வேறு பல விஷயங்கள் ஜேக்கேயை கிருஷ்ணனுடன் இணைத்தன என்று படுகின்றது. விளையாட்டிற்கு மற்றவர்கள் வரப்பிந்திய சமயங்களில் அல்லது வேறெப்படியோ பேசக் கிடைக்கிற போதுகளில் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து அலச இருவருக்குமே நிறைய விஷயங்களிருந்திருக்கின்றன….”உங்கட கோல்ஃ பேஸ் இந்த வெளிக்குக் கிட்ட நிக்குமா?… என்று ஆயிரந்தடவை கேட்டிருப்பான் கிருஷ்ணன். 

வருஷத்திற்கொரு தடவை பள்ளி விடுமுறைக்கு மாமா வீட்டில் போய் நின்று பார்க்கிற மிருகக் காட்சிச்சாலை, மியூசியம். கோல்பேஸ் இரட்டைத்தட்டு பஸ்கள்.ஐஸ்கிறீம் வண்ணமீன்கள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கொழும்பை ஜேக்கே இந்த மண்டபத்தில் கிருஷ்ணனுக்குக் காட்டியிருக்கிறான். கலவரம்,பயம்,அகதிமுகாம். கப்பல் பயணம் என்று இது வேறொரு கொழும்பாக இருந்தது. 

ஜேக்கே சொல்கிற கதைகளைக் கேட்கும்போது கிருஷ்ணனுக்கு மேலெல்லாம் விறுவிறுக்கும் இப்படியா? இப்படியும் மனிதர்கள் செய்வார்களா? நம்ப முடியாமலிருக்கும்… 

இதுகளுக்கெல்லாம் என்னென்ன செய்யலாம் என்று அதோ தெரிகிற அந்த மண்டபத்திலிருந்து இருவரும் எத்தனை திட்டங்கள் போட்டிருப்பார்கள்…சேர.சோழ,பாண்டியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ்ந்தார்கள்? நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம்? இருக்கக்கூடாது… 

அவர்கள் பார்த்த படங்கள் படித்த கதைகள் எல்லாவற்றிலும் என்னென்ன நடக்கிறது. அப்படிச் செய்ய ஏன் துணிவு போதாது? சனம் பயப்படக்கூடாது… 

இன்றைக்கு நினைத்தால் சிரிப்பு வருகிற. மெய் சிலிர்க்கிற பயப்படுகிற எத்தனை திட்டங்கள் அன்று அந்த இரண்டு இளம் மூளைகளுக்குள்ளிருந்தும் உருக்கொண்டன! 

தங்களுக்குப் பின்னால் வந்த தலைமுறை. நம்பமுடியாத அந்தக் கனவுகளையெல்லாம் நனவாக்க முயன்றதைக் காணும் சாட்சியாய்யாவது தானிருக்க முடிந்திருக்கிறது. ஆனால் ஜேக்கே? அதன் பின் அடித்த சூறாவளிகளில் அள்ளுண்டு எந்தத் தேச அகதியாய் எங்கு போயிருக்கிறானோ? 

“எத்தனை மணிக்கு வருகுதாம்?…” – சற்றுத்தள்ளி நின்ற வீரவாகு இவனைக் கேட்டார். 

“சரியாத் தெரியேல்லை. அண்ணை…”

“பன்னிரண்டு மணிக்குள்ளை வந்திடும் எண்டு ஆரோ சொல்லிச்சினம்…” 

“பன்னிரண்டோ?…” இருவரும் கேட்டார்கள். 

“…அவ்வளவு க கு ஆகாது எதுக்கும் இன்னொரு அரைமணித்தியாலம் பாப்பம்…”என்றபடி கிருஷ்ணன் கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பது இருபத்தாறு. 

“எண்டாலும் இது எங்களுக்குப் பெரிய வெற்றிதான்… இல்லையே?” – வீரவாகு கேட்டார். 

“எது? ” 

“இந்தியா எங்கட போராட்டத்தை அங்கீகரிச்சு இவ்வளவும் செய்யிறது…”

“இனித்தான் தெரியும்…” 

“இதுதான் நடக்குதெண்டு நம்பேலாம இருக்கு….” – அவர் புளகாங்கிதத்துடன் கூறினார். 

“எனக்கு அண்டைக்கே தெரியும்…” – புதிய மனிதர் இடையிட்டுச் சொன்னார். 

‘என்ன?’ என்பது போல அவரைப் பார்த்தான் கிருஷ்ணன் 

“மன்னிக்க வேணும்…” – வீரவாகு அன்பாகக் கேட்டார்: 

“எனக்கு உங்களைத் தெரியேல்லை? ” 

“நாங்கள் தெல்லிப்பளை…” புதியவர் சொன்னார். 

“…பிரச்சினை வந்ததோட அங்க இருக்கேலாம வந்து இங்கதான் றோட்டடியிலை வீடு எடுத்திருக்கிறம்…” 

“ஆஆ…” என்று வீரவாகு கேட்டார்.

“என்னவோ சொன்ன நீங்கள்?” 

“ஓ! எனக்கு. இது அண்டைக்கு மானிப்பாயாலை போன ஊர்வலத்தைப் பாத்த உடனையே தெரியும்…” 

“எதைச் சொல்லுறியள்? உதவிப்பொருள்…”

“ஓ! உதவிப் பொருளோட வந்த முக்கியமான ஆக்கள். பாக்கேல்லையே. நீங்கள்?” 

“பின்னை? மத்தியானம் ஒரு மணியிலையிருந்து நிண்டு.இரவு எட்டு எட்டரைக்குத் தானே வந்தினம்…” – என்று வீரவாகு சொன்னார்.

“…இண்டைக்கும் நீங்கள் சொன்ன மாதிரி அப்படித்தானாகுமோ தெரியேல்லை…எதுக்கும் நான் ஒருக்கால் வீட்டை போட்டு ஓடிவந்திடுறன்…”-வீரபாகு எட்டி நடந்தார். 

“ஓமோம்… இதுகள் சரித்திர சம்பவங்கள். தவறவிடக்கூடாது” என்றபடி புதியவரும் திருப்பினார். 

“இவர்களுடைய எதிர்பார்ப்புக்கள்… நம்பிக்கைகள்.!”

கிருஷ்ணனுக்குக் கால் உளைந்தது. மெல்ல நடந்து ஒரு மாவடியில் போய் நின்று பார்த்தான். வசதியாக்கிடந்த கல்லைத் தள்ளிவிட்டுக் குந்தினான்.எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த இடம் ? எங்களூரில் இவ்வளவு கிட்ட இருந்தும் எத்தனை தரம் இங்கே வர முடிந்திருக்கிறது? இந்த நிழலில் ஒரு துண்டை விரித்துப் படுத்துக் கொள்ள முடிந்தால்… 

கிருஷ்ணனுக்குப் பாரதியும் உமர்கய்யாமும் நினைவுக்கு வந்தார்கள்… 

ஒரு கலைஞனுக்கும் ரசிகர்களுக்குமிடையேயுள்ள அடையாள பேதம் வலு மெல்லியதென்று படுகிறது கிருஷ்ணன் கூட.ஏ.எல்.படித்துக்கொண்டிருந்த காலங்களில் எழுத ஆரம்பித்தான். அவனை எழுத்தையும் இயற்கையையும் உபாசிக்க வைத்ததில் இந்த இடத்திற்குப் பெரும் பங்கு உண்டென்று தான் தெரிகிறது. 

அவன் எழுதிய முதல் கதையிலேயே இந்த வயல்வெளி வந்திருக்கிறது. பிறகும் பலவற்றில் இந்த இடங்கள். அவன் கதையொன்றில் வருகிற ஒரு பாத்திரம் ஓரிடத்தில் இவ்வாறு கேட்கிறது: 

“எங்கட இந்த இடம்மாதிரி வேறை ஒண்டுமே இல்லையடாப்பா… இந்தாபார்.இந்தளவு உயரமான தேர்முட்டி.சுத்திவர வயல்வெளி, இந்த மகிழமரம்.ஐயர் வீட்டுரேடியோவிலை தூரத்திலை கேட்கிற பாட்டு. இந்தக் காத்து இதெல்லாம் வேறை எங்கை இருக்கு?” 

இன்னொரு கதையில் இப்படி எழுதினான். அம்மன் கோவில் தேர்முட்டி அப்போதைய வாழ்வின் மையமாக இருந்தது. நண்பர்களின் சந்திப்பிடம். கனவுகளை. வாழ்க்கையை எல்லாம் அவர்கள் பகிர்ந்துகொண்ட இடம். உலக ஞானத்தை வளர்த்த வித்தியாசாலை. தேர்முட்டிக்கு அப்போது கூரை இல்லாதிருந்தது. படிப்படியாக ஏறி, பன்னிரண்டு பதின்மூன்றடி உயரத்திற்கு வயல் சூழ்ந்த வெளியில் வானத்தை நோக்கியபடி அந்த இடத்தை ஆளும் அரசு கட்டிலாக அது திகழ்ந்தது. மாலைப் பூசை முடிந்த கையுடன் உச்சிக்கு ஏறினால். வெய்யில் தாழ்ந்து செவ்வானம் பூத்து -பிறகு அதுவும் அந்திக்கருக்கலிற் கரைந்து விடுகிற மட்டும்… அர்த்தசாமப் பூசை மணி கேட்கும் வரை பொழுது போவதே தெரியாமலிருக்கும்…தேர்முட்டிக்கு நேர் முன்னால் மகிழமரம் நிற்கிறது. சோழகம் தொடங்குகிற போது மகிழ் பூக்கும் பௌர்ணமியன்றைக்கு மகிழின் உச்சிக்கும் அப்பால். வயல்வெளிகனைத் தாண்டி தூரத்தில் திரைகட்டி நிற்கிற பனைகளுக்கு மேலே தொடுவானத்தில் அந்த முழு வெண்ணெயப் பந்து காலித்து எழுகிற நேரம் உன்னதமானது. கட்டு பெத்த வாழ்வுடன் இந்த விடலைத் தனத்திற்கு விடை தர நேர்ந்தது. 

5 

கட்டுபெத்தை 

அறுபத்தொன்பதில் கட்டுபெத்தையில் படித்துக் கொண்டிருந்த போது பொழில்’ என்றொரு மாத சஞ்சிகையை கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் கொஞ்சக் காலம் வெளியிட்டார்கள். ஐந்தோ, ஆறோ இதழ்கள் வந்தன. இலக்கியம் விஞ்ஞானம். புதிய அரசியற் சிந்தனைகள்…அந்த வயதிற்கேற்ற வீறு… 

“இண்டைக்கு போஸ்ரர் ஒட்டப்போவம்…” – அமரபால சொன்னான். பேர்தான் அப்படி ஆள்.தமிழன்,கொக்குவில்.

“ஆரார்?”

“பொழில்” இலக்கிய வட்ட உறுப்பிளர்கள் பெயர்கள் எல்லாமே சொன்னான் அவன். 

“விளம்பரம் இல்லாமல் சரிவராது தான்…”

“கொழும்பு முழுதும் வெள்ளவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனை வரை ஒட்டவேணும்…” 

இரவு பதினொருமணிக்குப் பசைவாளியும் போஸ்ரர் கட்டுமாய்ப் புறப்பட்டார்கள். நாலு சைக்கிள். ஆறு பேர் காலிவீதி அசாதாரண அமைதிக் கோலம் காட்டியது. ஊர் ஒழுங்கைகளில் ஓடுவது போல ஓட முடிந்தது. 

“இப்ப பொழில் நோட்டீஸ் ஒட்டிப் பழகினால் தான் பிறகு தேவையானதெல்லாம் ஒட்டலாம்…”தர்மராஜா சொன்னான். 

“நோட்டீஸ் ஒட்டுறதோட சரியோ. தருமா?…” 

“பாரன், நான் யூகேக்குப்போட்டு வரேக்குள்ளை என்ன கொண்டு வாறனெண்டு!…”

“வெள்ளைக் காறியோ?” ராஜேஸ்வரன் கேட்டான். 

“மடையா…ஒரு பிறிண்டிங்மெஷின் அல்லது ஜீப் இரண்டிலை ஒண்டில்லாம ஐயா வரார்…” 

“அப்ப, ஐயா வரார்!…” ராஜேஸ் தொடர்ந்த சிரிப்புகள் ஓயுமுன்னே சத்திவேல் கத்தினான். 

“பொலிஸ் கலைக்குது ஓடு ஓடு…” திடுக்கிட்டுத் திரும்பினார்கள். 

“…அங்கையில்லையடா ஏதோ பண்ணிப் போட்டு வாறமாம்….கலைக்கிறான் ஓடு, பாப்பம்..” 

காலி வீதியைக் கிழித்துக் கொண்டு பறந்தன நாலு சைக்கிள்கள். 

6 

ஒரு மாலை வகுப்புக்கள் முடிந்து அறைக்குப் போய் உடைமாற்றிவந்து பட்மின்ரனுக்காகவோ அல்லது நாடக ஒத்திகைக்காகவோ-எதுவென்று சரியாக நினைவில்லை – கூடியிருந்த வேளையில் கன்ரீனில் இது நடந்தது. கதைகள் கட்டுரைகளில் வர்ணிக்கப்படுகின்ற மாதிரி மஞ்சள் வெயில் பொன்னொளி பரப்பியிருந்தது.வெக்கை அடங்கிய குளிர்மையான காற்று. புதிதாக எழுப்பிக் கொண்டிருந்த கட்டிடத்தின் வேலைத்தல இயந்திரங்களின் கடமுடாக்கள் கூட ஓய்ந்து இதமான அமைதி. கன்ரீனின் மூன்று புறமும் புற்றரைகளை நோக்கிய விறாந்தைகள். பதிவான கூரைகளும், அதைத் தாங்கும் தூண்களுமாய் ரம்யமான மண்டபங்கள். தேநீரும் கையுமாய் எல்லோரும் வந்து ஒரு மேசையைச்சூழ இருந்து பேசிக் கொண்டிருந்த போது தான் அது நடந்தது. இந்தக் கும்பலில் எட்டுப்பத்துப்பேர் இருந்தார்கள். கிருஷ்ணன்.சிவராஜ சிங்கம். விநாயகம், கீர்த்தி. ரஞ்சித், காமினி. விமல். மதநுவரநாணா இன்னும் பூட்டானியும் இருந்தான்.அவன் இந்த எவரையுமே சாராத ஒரு வடஇந்திய சமூகத்தினன். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படாதவன் -கூட இருந்தான். என்பதைத் தவிர என்றாலும் இந்த நிகழ்வுடன் பூட்டானி நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. கண்ணாடிக்குள்ளால் தெரியும் பெரிய விழிகளும்.பருப் பொலிந்த முகமும். இங்லீஷ் நிறைந்த சிகரட்டால் கறுத்த சிவந்த உதடுகளும் கொண்ட கட்டையான ஆள். 

இவர்கள் கதைகள் எங்கும் ஓடி.பிறகு அரசியலில் நிலைத்த போது வழமைபோல ஸ்போர்ட்டிவாக அதையும் பேசிக்கொண்டார்கள். மாணவர் பேரவை இயங்கிக்கொண்டிருந்த காலம். கட்டுபெத்தைக்கும் பேராதனை பொறியியல் பீடத்துக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருந்த.தாய்மொழி வழிக்கல்வியாளருக்கு முன்பே புதிய மாக்ஸிய சிந்தனைகள் – சின்னச் சின்னக் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளுமாய்- உருக்கொள்ள முனைந்த விடியற்காலம். கனவுகளும் திட்டங்களும் கருக்கொள்ள முயன்றகாலம்.. 

இந்தப் பேச்சின்போது சிவராஜசிங்கம் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபித்தான். இந்த அரசியல் ஸ்போர்ட்டி – பேச்சினிடை தான் அவன் அதைக் குறிப்பிட்டான் என்ன தொடர்பில் எதற்குப் பதிலாக அவன் அதைச் சொன்னானென்னு நினைவில்லையெனினும் அவன் வார்த்தைகளும் அதைச்சொன்ன போது அவன் முகத்தில் பூத்த அந்த வழக்கமான புன்சிரிப்பும் நன்றாக மனதில் பதிந்திருக்கின்றன. 

பாதி முடிந்த. தன் சிகரட்டை காமினியிடம் நீட்டியவாறே அவன் சொன்னான்: “மச்சான்.விஷயங்கள் இதேகதியில் போனால் நாங்களும் நீங்களும் ஆளுக்காள் எதிரெதிராகத்துவக்குத் தூக்கக் கனநாளாகாது.. எல்லோரும் சிரிக்கத்தான் செய்தார்களெனினும் சிவாவின் கூற்றின் கனத்தை உணராமலில்லை. 

இதன் பிறது. தோளிற் கைபோட்டுக் காண்டு அந்த பட்மின்ரனுக்கோ ஒத்திகைக்கோ போனார்கள். 

7

தொப்பென்று முன்னால் ஏதோ விழுந்தது. கிருஷ்ணன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். ஒரு மாங்கொட்டை. பறவைகளும் அணில்களும் அறக்கோதி மீந்த கொட்டை. 

பின்னால் யாரோ பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அந்தப் புதிய மனிதர்- தெல்லிப்பளையிலிருந்து வந்தவர். பொன்னுத்துரையோடு பேசிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. 

“…சேர் பொன். ராமநாதன்ரை தகப்பன் பொன்னம்பலம் கேள்விப்பட்டிருப்பியள். மானிப்பாய்தான். அவருக்குத் தர்மவானெண்டு பேர். பெரிய மனுசன்…..அநாதியாயிருந்து வந்த கோயிலை அவர் தான் முதலிலை கட்டுவிச்சார் எண்டு சரித்திரம்…. அது. கிட்டத்தட்ட இருநூறு வருஷத்துக்கு முந்தி அதுக்கு ஒரு ஐம்பது வருசத்துக்குப் பிறகு தான் கல்லாலை கட்டினவையாம்…..அதிலையிருந்து அம்மாளாச்சி ஒவ்வொண்டாப் பாத்துத் தேடிக் கொண்டா…. கோயில் பெரிசா வந்தது- மண்டபங்கள். கேணி. கிணறு. கொட்டகை எண்டு யாழ்ப்பாணத்திலை மாவிட்டபுரம். நல்லூர். அதுகளுக்குப் பிறகு முதலிலை பெரியகோபுரம் கட்டினது. அம்மாளுக்குத் தானெண்டு நினைக்கிறன்- அறுபதிலையாயிருக்க வேணும். ” 

கிருஷ்ணனுக்கு. ‘சந்தம்” பத்திரிகையில் கணேசரத்தினம் எழுதிய ‘கோபுரம்’ கதை நினைவுக்கு வந்தது. கணேசு, தூரத்து உறவினர். இடதுசாரி. கிருஷ்ணனுக்கு இலக்கியத்திலிருந்த ஆர்வத்தையும் ஆற்றலையும் தூண்டி விட்டவர். இந்தக் கோபுரத்தை வைத்துத் தான் அந்தக் கதையை எழுதியதாக அவர் சொன்ன ஞாபகம்….. 

அறுபதுகளின் நடுப் பகுதியில் கோவில் வீதியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் கூட்டம். அப்போது தமிழ்ப் பகுதிகளில் அரசு செலுத்திக் கொண்டிருந்த ஒரு கட்சியின் கூட்டம். கிருஷ்ணனும் ஜெயநாதனும் போயிருந்தார்கள். ஜெயநாதன் நெருங்கின கூட்டாளி, கிருஷ்ணனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவன். கூ கூட்டத்தில் கணேசைச் சந்திக்க நேரிட்டது. அப்போது அவர் பல்கலைக் கழக விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். 

பேச்சாளர்களின் பேச்சுக்களுடன் ஒத்துக் போகாத இடங்களிலெல்லாம் இவர்கள் கைதட்டப் போக. சனம் திரும்பிப் பார்க்க. இந்த ஒத்துப்போகாத் தன்மை அடிக்கடி தலைகாட்ட….. 

யாரோ முதுகில் தட்டினார்கள். சப்இன்ஸ்பெக்டர் சுப்பையா. டியூட்டியில் வந்திருக்கவேண்டும். முரட்டுத்தனத்திற்குப் பேர்போன ஆள் மூவரையும் தனியே அழைத்துப் போய் அந்தாள் சொன்னது இதுதான். “உந்தச் சேட்டை எல்லாம் இங்கை வாயாது… நீங்கள் மூண்டு பேரும் கூட்டத்தைக் குழப்ப வந்திருக்கிறியள்… உங்களை ஒண்டா இருக்க விட்டாத்தான் பிழை. நீ அந்தப் பக்கம் போ…. நீ கோவிலடிக்குப் போ… நீ றோட்டடிக்குப் போ… இனி உங்களை ஒண்டாக் கண்டனோ…?” “எங்கடை கோயிலுக்குப் பாருங்கோ. வராத வித்துவனில்லை…. பொன்னுத்துரையர் சொல்லிக்கொண்டிருந்தார். 

ராஜரத்தினம் பிள்ளையென்ன டி.கே.சி நடராஜன் என்ன. தட்சணாமூர்த்தி யென்ன…. காருக்குறிச்சி. சௌந்தரராஜன் கூடவந்திருக்க வேணும். சரியா நினைவில்லை… சனங்களின் கவனம் இப்போது இந்த இடத்திற்கும் திரும்பியிருக்க வேண்டும். ஒருவர் இருவராக ஒழுங்கையால் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி வர முதல் இந்த இடமும் நிரம்பிவிடும் என்றுபட்டது கிருஷ்ணனுக்கு. 

8 

சிவராஜசிங்கத்தின் பேச்சு சரியாகப் பதின்மூன்று வருசங்களின் பின் தன்னை நிரூபித்துக்கொண்டது. 

கிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்து ஒரு வருசம் கூட இராது. ஒரு பகல் சாப்பாடு வேளைக்கு முந்திய நேரம். வேலையோடு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான். ஒரு படிக்கட்டு வடிவமைப்பு சரியாக வரமாட்டேன் என்று கொண்டிருந்தது. நீளமும் உயரமும் இளகமறுத்தன. எத்தனையோ தரம் விதம் விதமாக மாற்றிமாற்றிப் போட்டுப் பார்த்தும் சரிவருவதாயில்லை… பிளானையே மாற்ற வேண்டியது தான். பென்சிலைக் கடிக்கத் தொடங்கினான். 

கனத்த வாகனமொன்று வரும் ஓசை கேட்டது. திரும்பி ஜன்னலால் பார்த்தான். ஒரு ஜீப். ராணுவத்தினரினது போலப்பட்டது. அப்போது அது வலு சாதாரணமான விஷயம் அவர்கள் நடமாடுவது. கிருஷ்ணனின் கந்தோருக்கு வர அடிக்கடி அவர்களுக்கு அலுவல்களிருந்திருக்க வேண்டும். கட்டுமானம். பராமரிப்பு இவை சம்பந்தமாக…. 

கிருஷ்ணன் தன் வேலையில் ஆழ்ந்துபோய் ஐந்து நிமிடமாகியிராது. இ. இ. யுடன் பேசிவிட்டுத் திரும்பிய அந்த அதிகாரி கனத்த பூட்ஸ் ஒலிக்க கிருஷ்ணன் முன்னால் வந்து நின்றார். ‘ஹலோ கிருஷ்ணா! நீர் இங்கேயா?…..” வியப்புடன் ஒலித்தது குரல். கிருஷ்ணன் நிமிர்ந்து பார்த்தான். 

“கீர்த்தி!? எப்படி விளிப்பது என்று தெரியவில்லை. சிவராஜசிங்கந்தான் கீர்த்தியை விலக்கி விட்டு முன்னால் வந்தான். 

கீர்த்தி இப்போது படைத்துறைப் பொறியியல் பிரிவில் ஒரு அதிகாரி. ஆச்சரியமான சந்திப்புத்தான். பழைய புதினமெல்லாம் விசாரித்தான். எப்போது இங்கு வந்தாய்? 

கொழும்பிலேயே இருந்திருக்கலாமே? கூட்டாளிகள் விமல். காமினி. ரஞ்சித், தாணா எல்லாம் என்ன செய்கிறார்கள்? 

“ஏன் நீங்கள். “மரியாதைப்பன்மை பிரச்சினை வரவே திடீரென ஆங்கிலத்திற்குத்தாகவி…. அவர்களைச் சந்திக்கவேயில்லையா?”இந்தத் தடுமாற்றத்தைக் கீர்த்தி கவனித்ததாகத் தெரியவில்லை.” 

“நான் தான் கிருஷ்ணனுக்கு முதலிலே யாழ்ப்பாணத்து ஆளாகிவிட்டேனே…” என்று சிரித்தான். 

“…கட்டு பெத்தையை விட்ட பிறகு காணவேயில்லை. ரஞ்சித்தை மட்டும் கண்டிப் பெரஹராவின்போது ஒரு தரம் சந்தித்தேன். அவன் வீட்டுக்குக் கூட கூட்டிப் போனான். நான் தான் தனி .நீங்கள் எல்லோரும் ஒரே கந்தோர் தானே..?”

“நான் இங்கு வரும்வரை…”

“பழைய மாதிரியே வாயடிக்கிறீர் கீர்த்தி சிரித்தான். கீர்த்தி சிரித்தான்.” கனக்கப் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் ஐந்து நிமிடங் கூடப் பேசவில்லை…எதைப் பேசுவதென்று தெரியாமலிருந்தது. அந்தக் கோலம் மட்டும் இல்லாதிருந்தால் ஐந்து நாட்கள் பேசியிருந்திருக்கலாம். என்றும் பட்டது… கீர்த்தி முன்புபோலத்தானிருந்தான். அன்பாக விடை பெற்றான். அதிகாரிக்குரிய மிடுக்குடன் முன்ஸீற்றில் இருந்துகைகாட்டிக்கொண்டு போனான். 

அதன் பின் அவனைக் காணமுடியவில்லை. வேறு ஆட்கள் வந்து போனார்கள். கீர்த்தி மாற்றலாகிப் போயிருக்கலாம் 

தான் சரியாகப் பேசாததை அவன் கவனித்திருப்பானா? அதையிட்டு மனம் நொந்திருப்பானா? என்று கிருஷ்ணன் பல நாட்கள் யோசித்தான்… 

9 

கல்யாண அழைப்பிதழை நீட்டியதும் ஃபெர்னாண்டோ வாழ்த்திக் கை குலுக்கினார். பிறகு சொன்னார். நான் கட்டாயம் வருவேன். உன்னைச் சாட்டியாவது யாழ்ப்பாணத்தை ஒரு தரம் பார்த்துவிடவேண்டும்….’ ஃபெர்னாண்டோவிற்கு இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வு பெறும் வயது. 

“நல்வரவு. எங்கள் கோஷ்டி முழுதாக வருகிறது… நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்……” என்றான் கிருஷ்ணன். ”உன் சீடப்பிள்ளைகள் வராமல் விடுவார்களா?. ஃபெர்னாண்டோ சிரித்தார். 

திருமணம் அம்மன் கோவில் முன் மண்டபத்தில் தான் நடந்தது. நல்ல வசந்த காலத்தின் ஒரு பகற்பொழுதில் வெய்யிலும், தென்றலும், மகிழ் மணமும். சூழ்ந்திருந்த ஒரு வேளையில் சடங்கு நிகழ்ந்தது. கல்யாணத்திற்கு முதல் சனிக்கிழமை மத்தியான யாழ்தேவியில் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஃபெர்னாண்டோ. ரஞ்சித். காமினி, விமல். நாணா 

கோண்டாவில் ஸ்ரேஷனுக்குக் கார் பிடித்து அனுப்பியிருந்தான். பூட்டியிருந்த முருகையர் வீடு ஒரு கிழமைக்கு இரவல் எடுக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டிருந்தது. இவர்களைக் கவனிக்கவென்றே பாலு நின்றான். வந்தவர்கள் விருந்தாளிகளாக உட்கார்ந்து விடவில்லை. முடிந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள். பந்தல் போட்டு, அலங்காரம் பண்ணி… கல்யாணத்தன்றைக்கு வெள்ளைச் சாரமும் ஷேட்டுமாய் ஓடியாடி… 

அந்தா. அந்தக் குளக்கரையில் கிருஷ்ணனும் நண்பர்களும் ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக் கொண்டார்கள். அது நடந்தது பதின்நாலு வருஷங்களுக்கு முந்தி. 

10 

“என்றாலும் இந்த அளவுக்கு மாறிப் போவாய் என்று நாங்கள் நினைக்கவில்லை….” என்று காமினி ஒரு நாள் சொன்னான். அதற்கு காரணம் இவன் கூறிய விஷயம். மச்சான். இந்த இனப் பிரச்சனையையும். பிரிவையும் வளர விடுவோமானால் எக்கச் சக்கமான சிக்கலாகும். இந்த நாட்டோடு நிற்காது இந்து சமுத்திரப் பிரச்சனையாகவும் ஆகும்… இதை விளையாட்டாக எடுக்கக் கூடாது”. 

தன்னுடைய கணிப்புச் சரியாகி விட்டதையெண்ணி திருப்திபடுவதா? கவலைப்படுவதா? என்று இப்போதெல்லாம் அடிக்கடி யோசிக்கின்றான். கிருஷ்ணன். 

ஆனால் தொண்ணூற்றொன்பது வீதப் பேரைப் போல அவர்களும் அப்போது அவன் சொன்னதை அலம்பலாகத் தான் எடுத்தார்கள். 

“உனக்குக் கற்பனை கனக்க” இந்தக் கதைகள் நடந்த போது நண்பர்களின் யாழ்ப்பாண விஜயம் முடிந்து இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. இடையில் ஒரு வருஷம் திருகோணமலையில் வேலை பார்த்து விட்டு கிருஷ்ணன் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியிருந்தான். 

“திருகோணமலைக்குப் போய் வந்த பிறகு உன்னைப் பார்த்தால் கொஞ்சம் வகுப்பு வாதிமாதிரிப் படுகிறது….” என்பான் காமினி. பகிடி போலவும் இருக்கும். 

என்றாலும். இன்னொரு திசையிலிருந்து இக்குற்றச்சாட்டு பலமாகவே முன்வைக்கப்பட்டது. திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் – எழுபத்தி நாலில்-கிருஷ்ணன் ஒரு சிறுகதை எழுதினான். அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய கதை. அந்தக் கால மார்க்கட், நிலவரப்படி கிருஷ்ணன் வகுப்பு வாதியாக முத்திரை குத்தப்பட்டான். 

கண்மூடித்தனமான ஒருமைப்பாட்டுவாதிகள் ஆத்திரத்தால் குழம்பிப் போனார்கள். “எல்லை எப்படிப் போடுவீங்கள்? சொல்லும் பார்ப்பம்….”தர்மேந்திரன் ஒரு நாள் கேட்டான். 

இந்தக் கேள்வி கிருஷ்ணனுக்கு எக்கச்சக்கமான எரிச்சலூட்டியது. அதிதீவிர இடது சாரியாகத் தன்னை இனங்காட்ட முயன்ற இந்த இளைஞனின் கொச்சைத்தனமான புரிந்துகொள்ளலுக்கு என்ன பதில் சொல்லலாமென்று உடனே புரியவில்லை. 

‘உதெல்லாம் படுபிற்போக்குத்தனம்…’. தர்மேந்திரன் பல்லவி பாடினான். செம்பூக்கள். இலக்கிய வட்டத்தின் உறுப்பினன் அவன். ‘இனத்தின்ரை பேராலை காணடப்படுறதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது பிற்போககுத் தனமெண்டால். நான் பிற்போக்கு வாதியாயிருக்கிறதிலை எனக்கு வலு சந்தோஷம்….” என்று சொல்லி விட்டு வந்தான் கிருஷ்ணன். 

‘ஒரு வருஷத் திருமலை வாழ்வு என்னை இன ரீதியில் சிந்திக்கப் பண்ணியிருக்கிறது. என்கின்றான். காமினி. ஆனால் இந்தத் தர்மேந்திரன் – அதிசயம் – அங்கேயே பிறந்து வளர்ந்தவன் அவனால் எப்படி அப்படிப் பேச முடிந்தது. தர்மேந்திரனைச் சந்தித்த அதே திருகோணமலையில் தான் சதானந்தனையும் சந்திக்க நேரிட்டது. சதானந்தனின் பேச்சுக்கள் பிரமிக்க வைப்பனவாயிருந்த அதே நேரத்தில் அசாத்தியங்களை அவன் பேசவில்லை என்ற உணர்வையும் உருவாக்கின. பரப்பளவோடு பார்த்தால் எல்லை மிக நீண்ட கிழக்கு. புத்தளத்திலிருந்து ஒரு புது சூயஸ். ஆனையிறவை நிரவுதல். முல்லைத் தீவு ஊடாக ஒரு நெடுஞ்சாலை என்று ? பேசிக்கொண்டிருந்த சதானந்தன். 

சதாநந்தனும் தர்மேந்திரனும் மோதிக் கொள்வதைப் பார்ப்பது வலு விசேஷம். இதற்குச் சாட்சியாய் இருவருக்கும் இடை ஆளாய் பல தடவைகள் இருக்க நேரிட்டிருக்கிறது. கிருஷ்ணனுக்கு திருகோணமலையை விட்டு வந்த பிறகு சதானந்தனைக் காணக்கூடச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் தர்மேந்திரனை முடிந்தது. எழுபத்தேழில் வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் அகதி முகாம் வாசலில்… 

“கிட்ணா….” பொன்னுத்துரையரின் குரல். திரும்பிப் பார்த்தான். புதியவரைக் காணவில்லை. இவர் மட்டும் தனியே. 

“..என்ன, இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையே?” 

“எப்படிப் போறது? எட நான் வீட்டை கூடப் போய்ச் சொல்லாமலிருந்திட்டேனே…” என நினைத்தான். 

….ஆனா. இதுவரையிலை புதினம் என்னவெண்டு தெரிஞ்சிருக்கும். நான் விட்டுட்டுச் சொல்லப்போய் வாறதுக்குள்ளை இங்கை வந்திட்டுப் போட்டா என்ன செய்யிறது.’ 

கடைசியில் நானுங்கூட ஒரு விடுப்புப் பார்க்கிற ஆளாக மாறி விட்டேனா என ஒரு விநாடி கூசினான் கிருஷ்ணன். ஆனால் அடுத்த கணமே நினைவு வந்தது. இப்படித்தான் நடக்குமென்றில்லாவிட்டாலும் இப்படியானவைகள் நிதர்சனங்களாகையில் விளைவு எப்படித் தானாகுமென்றாலும் இதோ முந்தி அவர்கள் சொன்னது போல ஒரு சரிக்கா சம்பவம் இதற்கொரு சாட்சியாகிற சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது வெறும் விடுப்பல்ல. 

11

கட்டுபெத்தையிற் படித்துக் கொண்டிருந்த காலத்தில். ஒரு விடுமுறைக்கு வந்திருந்த போது கிருஷ்ணன் ஊரிலிருந்த தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகம் போட்டான். பிரதியை எழுதிக்கொண்டு வந்திருந்தான். அப்போது தன்னுடையவும் தன்னொத்த மிகச் சிறுபான்மையினரதும் இலட்சியமாயிருந்த ஒரு கருத்தைச் செல வாணியாக்க எழுதப் பட்ட நாடகம். ‘விடிவு’ என்று பெயர். தேர்முட்டியில் வைத்துத்தான் நண்பர்களுக்குப் பிரதியைப் படித்துக் காட்டினான். பாத்திரத் தேர்வும் பொறுப்புப் பகிர்வுங் கூட அங்குதான் நடந்தன. நோட்டீஷில் அச்சிடப் பட்ட விளம்பர வரிகள் இன்றுங் கூட நினைவிலிருக்கின்றன. பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தால் பாதிக்கப்ப பட்ட சிறுபான்மைக் கடம்பகள் தங்கள் விடிவிற்காக மரகதபுரியில் கிளர்ந்தெழுகிறார்கள். அவர்களின் முடிவு ‘விடிவு’ சொல்லும். இது ஓர் சரித்திர நாடகம். இன்றைய எம்நிலைமைக்கு மாற்றுத்தருகிற கருத்தை இதிலே காணுங்கள். தமிழிளைஞர்கள் எல்லோரும் இதைப் பார்க்க வேண்டும் மென்று மட்டுமல்ல. பார்த்துவிட்டுச் சிந்திக்கவும் வேண்டுமென வேண்டுகின்றோம். 

இரவுபகலாக நாடகம் பழகினார்கள். அப்பு வீட்டின் முன் மண்டபத்தில் தான் நடந்தது. அப்பு இருந்தபோது ஆளும் பேரும் செல்வமும் செல்வாக்குமாய் நிரம்பிவழிந்த வீடு. அவர் இல்லாமலான நாலைந்து வருடங்களிலேயே வெறுமையாகிப் போனது. பழைய கால அரண்மனை ஒன்றைப்போலச் சிதிலமுறத் தொடங்கியிருந்த அந்த வீட்டில் தான் அவர்கள் ஒத்திகை நடத்தினார்கள். 

வசதியான இடம் மண்டபத்தின் வலப்பக்கம் கிணறு. கிணற்றுக்கும் வடக்கே வைரவர் கோவில் அந்த வளவுக்கும் சுற்றாடலுக்குமான காவல் தெய்வம். கோவிலைத் தாண்டிப் படலை. ஆள்புழக்கம் குறைந்த அமைதியான இடம். இவர்களின் ஒத்திகைகள் முடிவடைகிற நேரத்தில் தான் யாரோ புதிதாய்க் குடிவந்தார்கள். அதற்குப் பிறகு பதினைந்து வருஷங்களாக அந்தப் படலையைத் திறக்கவே சந்தர்ப்பம் நேரவில்லை. கிருஷ்ணனுக்குப் பிறகு நேர்ந்த சந்தர்ப்பந்தான் எவ்வளவு வேடிக்கையான முரண்.!… 

12 

எண்பத்து மூன்று ஜுலைக்குப் பிறகு எல்லாமே மாறித்தான் விட்டன. இந்த யாழ்ப்பாணம் இப்படியாகுமென்று எவர் நினைத்திருப்பார்கள்? ஆபத்துகளுக்கிடையில் நெடும் பயணமொன்றிற்கு ஆயத்தமாகிற மனநிலை வந்தது. எல்லோருக்கும் ஒரு விதி என்றாகிப் போனதினாலே என்னவோ எல்லோருமே நெருங்கிப் போனார்கள்….. 

ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாகச் சேதிகள் வந்தன விடிந்தால். பொழுதுபட்டால் பட்டணம் போனால் பேப்பர் படித்தால் என்று சேதிகள் வந்தன. புராணங்கள். சரித்திரங்கள் எல்லாம் மீண்டும் ஒரு முறை மெய்யாகி விடப் பார்த்தன. அசாதாரணங்களோ. சாதாரணமாகிப் போயின. 

ஐந்தாறு மாதங்கழித்து ஒரு வியாழனாயிருக்க வேண்டும். காலை, ராசேந்திரம் மாஸ்ரர் தேடி வந்தார். அவரோடு ஒரு சேதியும் வந்திருந்தது. அது சேதியாக மட்டுமின்றி, போகப் போகக் குற்றச்சாட்டாகவும் மாறப் பார்த்தது. பிறகு அயலவர் ஊரவர் என்று ஒவ்வொருவராக வரவர அது குற்றச்சாட்டாகவே மாறியது. 

“உனக்குத் தெரியாமல் எப்படி?” 

“நீதான் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாயாம்…” 

“நானா?” 

எப்படி இந்த முடிச்சைப் போட்டார்கள்? அந்த நாடகம் இன்னும் நினைவிருக்கிறதா? அல்லது அவர்களுக்கெல்லாம் வித்தியாசமான தன் நடத்தைகளாலா, அல்லது வீட்டுடைமையாளர்கள வெளி நாட்டிலென்பதால் அடுத்த பொறுப்பாளி இவன் தான் என்ற நினைப்பிலா? 

“அப்பு வீட்டில் பெடியள் வந்து இருக்கிறார்களாம்!”

“நானென்ன செய்ய?” என்று கேட்டான். 

“அவர்களை மெல்ல எழும்பச் சொல்லு” 

“நான் எப்படிச் சொல்லுறது?” 

“அக்கம் பக்கம் குடிசனம் உள்ள இடம்…. எல்லாரும் பயப்பிடுகினம் எண்டு…” 

“ஏன் பயப்பிடுகினமெண்டு கேட்டா?….” 

“ஏனோ?” வந்தவர்களுக்குக் கோபம் வந்தது போலிருந்தது: 

“..ஆமி மணந்து பிடிச்சுவந்தா ஊரை விட்டு வைப்பாங்களே?” 

“உப்பிடி எல்லாருங்கலைச்சா அவங்களுமிருக்க இடம் வேணுமே?…..”

“உன்ர கதையைப் பாத்தா உண்மை போலத்தானிருக்கு” 

“என்ன?” 

“நீ தான் கொண்ணந்து…” 

“பேய்க் கதை பேசாதையுங்கோ….” இடைமறித்துக் கோபத்துடன் சொன்னான். 

“உங்களுக்கு வேணுமெண்டா நீங்களே போய்ச் சொல்லுங்கோ….” வந்தவர்கள் போய் விட்டார்கள். கோபித்துக் கொண்ட மாதிரித்தானிருந்தது. 

அடுத்த இரண்டு நாட்கள் அந்தக் குறிச்சியே அவனைப் பிரஷ்டம் பண்ணிய மாதிரி நடந்து கொண்டது. அந்த வீட்டில் வந்திருக்கிறவர்களைப் பார்க்க நேரிடுகிற போது இளித்தும் நெளிந்தும் நெருக்கம் காட்டியும் நடந்து கொள்கிறவர்கள். தன்னோடு கோபம் சாதிக்கிற போக்கிலித்தனம் ஆத்திரத்தையும் அருவருப்பையும் ஊட்டியது. அதுவும் தனக்கிந்த விவகாரத்தில் எள்ளளவு சங்காத்தமும் இல்லாத போது கூட ஒதுங்கி நடவாதவர்கள் காணுகிற போதெல்லாம் முடிந்தளவு வெருட்டினார்கள். 

”உன்ர வீடும் பக்கத்தில் தானே….” 

பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது. 

கடைசியாக, அவர்களைச் சந்திக்கப் போன தூதுக் குழுவில் அவனும் அங்கம் வகித்தான். “நாங்கள் உங்களோடைதான் எண்டாலும் எங்கட பிரச்சினையை நீங்கள் கொஞ்சம் விளங்கிக் கொள்ளவேணும். இது குடிமனை நெருங்கின இடம். அதுதான்….” 

தூதுக்குழு பவ்வியமாகத் தன் வேண்டுகோளை முன்வைத்தது. 

“உடனடியாக வெளிக்கிடுறது கஷ்டம். ஒரு கிழமைக்குப் பிறகுதான் சொல்லலாம்…..” 

தூதுக்குழு திரும்பும் போது வைரவருக்கு நோந்துகொண்டு வந்தது. 

ஒரு கிழமைக்குப் பிறகு போனபோது. ‘இன்னும் இரண்டு கிழமைக்குள்ளை மாறி விடுகிறம்….” என்று உறுதி தந்தார்கள். குறித்த தவணை அரைவாசி கழியுமுன்னரே அதை நிறைவேற்றவும் செய்தார்கள். நேர்த்திப் பொங்கல் – எல்லோருக்கும் வசதியான ஒரு ஞாயிறு பிற்பகல் நடந்தது. கிருஷ்ணனும் போயிருந்தான்…. வைரவர் கோவில் மட்டும் மாறாமல் இருக்கிறது. ஆளுயரங்கூட இல்லாத சின்னக் கோவில். இலந்தை மரத்தினடியில் சதுரமாய் நிற்கிற சீமெந்துக் கட்டிடம், சுவர்கள் கறுத்துப் போயிருந்தன. சின்னக் கதவுகளிரண்டும் கழன்று போயிருந்தன. மற்றப்படி மாற்றமில்லை. கற்பூரம் எரிக்கவென்று முன்னாலிருந்த கல்லிற் கூட புகை அடிக்கடி கண்களைக் கரித்தது. சுள்ளிகள் சடசடவென்று எரிந்து கொண்டிருந்தன. பொங்கற் பானையில் நீர் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் கருமத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவனைத் தவிர. பக்கத்து வீட்டு செல்வரத்தினத்தாரின் ரேடியோ அவனை ஈர்த்துக் கொண்டிருந்தது. இந்திய நிலைய மொன்றில் நடக்கிற நாடகம். நடிகர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய் நாட்டைக் காக்கப் போராடுகிற வீரனின் கதையை விபரிக்கிற சரித்திர நாடகம்… 

இந்த வேடிக்கை – எந்த நோக்கத்திற்காகக் கடைசித் தடவை இந்த இடத்திற்கு வந்தானோ, அதுவே இன்று யதார்த்தமாகி வருகையில். தான் அதற்குமாறாகச் செயற்பட வேண்டி நேர்ந்த இந்த வேடிக்கை வேதனையாயிருந்தது. 

தான் மாறிவிட்டானா? என்கிற கேள்வியை கிருஷ்ணன் அடிக்கடி கேட்டுக் கொள்கிறான். ஒரு விதத்தில் மாற்றம் தான். எப்படியான மாற்றம்? முதிர்ச்சி தந்த அநுபவ விசாரிப்பில், பார்வை விரிவில் ஏற்பட்ட மாற்றம். நோய் உண்டென்றும், வைத்தியம் அவசியம் என்றும் ஒப்புக்கொள்கிற அதேவேளையில் சிகிச்கை எது என்பதில் ஏற்பட்ட அபிப்பிராய மாற்றம். அவ்வளவே. 

ராசதுரை இதை வெளியாய்க் கேட்டார் 

13 

“நான் ஓடிவந்திட்டன்” என்ற குரல் கேட்டது. வீரவாகு சைக்கிளை இழுத்து நிறுத்திக் கொண்டிருந்தார். 

“இன்னும் வரேல்லையோ?” 

“ம் ஹூம்….” நேரத்தைப் பார்த்தபடி தலையாட்டினான். கிருஷ்ணன் ஒன்பது முப்பத்தொன்று. 

வீரவாகு கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் வந்து நின்றார். காற்சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டு அவனும் எழுந்தான். 

“நீ ஒண்டைக் கவனிச்சியா கிருஷ்ணா. நான் இப்ப வரேக்குள்ளைதான் யோசிச்சன்…..” 

“என்ன? என்பதைப் போல அவரைப் பார்த்தான். இந்த இனப்பிரச்சினை சம்பந்தமான விஷயங்களெல்லாம் அநேகமாக ஆடியிலை தான் நடக்குது. கவனிச்சியா?” 

“எப்படி?” 

“இப்ப பார் இது ஆடி… எண்பத்து மூண்டிலை ஆடி… நானும் நீயும் ஓடி வந்ததும் எழுபத்தேழிலை ஆடி….

அந்தக் கலவரத்தின் போது கொழும்பிலிருந்தான் கிருஷ்ணன். எவர் இட்ட தீயோ… எப்படிப் பரவியதோ….. அந்த வெப்பில் தகித்துத் தவித்து ஒருகிழமையாகப் பட்ட அவதி எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிற அந்தப் பதட்டமும் பயங்கரமும் அவதி தாங்காமல் அந்த நாட்களில் வீசிக்கொண்டிருந்த பெரும் புயலில் – அது தந்த கலக்கத்தில் எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற அந்தரந்தாங்க முடியாமல் வருவது வரட்டும் என்ற முடிவில் வேணியையும் அழைத்துக் கொண்டு ரயிலில் புறப்பட்டான். அதே ரயிலில்தான் வீரவாகுவும் வந்து கெண்டிருந்தார். யாழ்ப்பாணம் ஸ்ரேஷனில் ஒரே ரக்ஸியையே பிடித்துக் கொண்டு ஊருக்கு வந்தார்கள். 

ரக்ஸி நின்றதும் நிற்காததுமாய்ப் படலையைத் திறந்து கொண்டு யாரோ ஓடி வருவது தெரிந்தது. அம்மா பார்த்துக்கொண்டு நின்றிருக்க வேண்டும். நாங்கள் இன்று இப்படி வருவோமென்று எப்படித் தெரியும்? 

பிறகுதான் தெரிந்தது. இப்போதுதான் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. மூன்று நான்கு நாட்களாகவே இந்தக் காத்திருத்தல் தொடர்ந்து படலையடியில் நடக்கிறதென்று…. 

கொண்டு வந்த ஒரே சூட்கேஸையும் காட்போட் பெட்டியையும் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். அம்மா கண்கலங்க இருவர் தலைகளையும் தடவினார். பேசமுடியாமலிருந்தது. ஐயர். யாரிடமோ விசாரித்துக்கொண்டு வரப்போய் விட்டாராம். “பிளேனிலை வருவீங்களோ? எண்டு கேட்க. இன்னும் ஒரு கிழமை காத்திருந்தாலும் இந்திய விமானத்தில் இடங்கிடையாதென்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்?

“கப்பல் பயணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாதெண்டு ஐயாவுக்கு ஒரே கவலை…” 

ஒரு கிழமையாக சாப்பாடும் நித்திரையுமில்லாமல் பயமும் பதட்டமுமாய்க் கழித்த கதையைச் சொல்லி முடியாதிருந்தது. இங்கும் அதே கதையாகத்தான் இருந்திருக்கிறது…. 

“உத்தியோகமும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். உள்ளதைப் பார்த்துக் கொண்டு இனி ஊரோடையே இருங்கோ…” அம்மா சொன்னா  

“ஏதோ அந்த அம்மாளாச்சிதான் இந்தளவிலையாவது கொண்டுவந்து விட்டது…” 

“ஏதோ இந்த எண்பத்தேழு ஆடியோடையாவது இந்தப் பிரச்சினை தீந்தாப்போதும்…. முப்பது வருஷமா மனைஞ்சுகிடக்கு..” வீரவாகு சொன்னார். 

“உண்மைதான் நான் கச்சேரிச் சத்தியாக்கிரகத்திலையிருந்து அடி வாங்கின ஆள்…. இப்ப மகேந்திரன் இப்பிடி…”அவர் மகன் இயக்கத்தில் சேர்ந்திருந்தான். 

“இன்னும் எத்தனை சந்ததிக்கு இது இழுபட வேணும்? “

“உண்மைதான்……” என்றான். கிருஷ்ணன். மீண்டும் பிரச்சினை இவ்வளவுக்கு இறுகி, எண்பத்திமூண்டிலை பெடியள் துவக்கும் தூக்கி, இவ்வளவு சங்காரம் நடந்து முடிஞ்சாப் பிறகு இப்பதான் இந்தியாக்கு கண் திறந்திருக்கு…” 

“ம்ம்…”

“…இந்தா வருகுது பின்னை வருகுது எண்டு எத்தனை தரம் பாத்திருந்தம்? அந்த மனுசி இருந்திருந்தா எப்பவோ எல்லாம் நடந்திருக்கும். எங்கட விதி….”..வீரவாகு எட்டிப் போய்ப் புகையிலையைத் துப்பிவிட்டு வந்து சொன்னார்.போன மாதம் சாப்பாட்டுப் பார்சல் கொண்டு வந்து பிளேனாலை போடேக்குள்ளையே, வந்திட்டுது எண்டு சனம்பட்டபாடு…” 

எல்லையைத் தாண்டி போன யாரோ ஒருவனை காவலுக்கு நின்ற போராளி தடுத்துத் திருப்பி அனுப்பினான். 

“இந்த உலகத்திலுள்ள சகல சாத்தான்களும் சேர்ந்து எங்களைத் துடைச்சு வழிக்க வெளிக்கிட்டாப் பிறகும் இந்தியா இவ்வளவுக்குப் பொறுத்திருந்திருக்கு..” 

“அவனவனுக்கு அவனவன் பிரச்சினை….” 

“சரி. என்னவோ…. இவ்வளவிலையாவது இது நடக்கிறது பெரிய விஷயம்.” என்ற வீரவாகு “வெள்ளம் வந்த மாதிரிச் சனம் வருகுது பார்….” என்றார். 

மருத மரத்தடி, கோவில் மேடை. தேர்முட்டிப் பக்கம் எங்கும் ஒரே தலைகளாய் இப்போது தெரிந்தன. ஹெலி இறங்கப் போகிற இடத்திற்கும் மருத நிழலுக்குமாய் முக்கியஸ்தர்கள் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். 

“நான் அதிலைபோய் நிற்கப்போகிறன். “கொஞ்சம் முன்னுக்காய், இடப்புறமிருந்த மதிற்கரையைக் காட்டினார் வீரவாகு. 

“நீயும் வாவன்?” 

“நான் இதிலை நிக்கிறன் தெரியுதுதானே நீங்கள் போட்டு வாங்கோ..” 

சைக்கிள் பூட்டியிருக்கிறதா? என்று இன்னுமொருமுறை பார்த்துவிட்டு வீரவாகு நடந்தார். 

புறாக்களும் காகங்களும் பறந்து கொண்டிருந்தன. சோழகமும் சனங்களும் இரைவது கேட்டது. 

14 

தர்மேந்திரன் தன்னை யாராக இனங்காட்ட முயன்றானோ அதே குழுவில் அப்போது ராசதுரையும் இணைந்திருந்தார். தொழிலால் ஆசிரியர். நல்ல வாசகர். கிருஷ்ணனுக்கு அப்போது அவரில் மதிப்பிருந்தது. இங்கே அவருக்கு சொந்தக்காரர் கனபேர். இதுதான் அவர் ஊரோ என்று நினைக்குமளவிற்குப் புழக்கம். திருகோணமலைக் குடியேற்றம் பற்றிய கதை அவர் கண்ணிலும் பட்டிருக்க வேண்டும். அதற்கடுத்த தடவை கிருஷ்ணனும் அவரும் சந்தித்த போது ஒரு பின்னேரம் முழுவதும் அந்த விவாதத்திலேயே கழிந்தது. 

இப்போது அதோ. சனம் நிரைகட்டி நிற்கிற அந்த மேட்டொழுங்கையின் சீமெந்து விளிம்பில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள் எக்கச்சக்கமாக விமர்சித்தார். அன்றைக்கு அநேகமாகத் தர்மேந்திரன் கேட்ட மாதிரித்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான். அவர் ஒப்புக் கொள்வதாயில்லை. 

“நீ படு வகுப்புவாதி….” எதிர்பார்க்கப்பட்ட பாணியிலேயே முத்தாய்ப்பு வைத்து விட்டுப் போனார். 

அதற்குப் பிறகு போன வருஷம் திருவிழாவில் சந்தித்தான். மத்திய கிழக்கில் நாலைந்து வருஷம் வேலை பார்த்து விட்டுத் திரும்பியதாகச் சொன்னார். 

“நீ அப்ப எழுதினது சரி தான்….. நாங்கள்தான் கவனிக்கேல்லை….” புன்சிரிப்புக் காட்டுவதைவிட வேறென்ன செய்யலாம்? ஆனால் உள்ளுக்குள்ளே மனம் கேட்டது. ஏன் அநேகம் பேர் பத்து வருஷம் பின்னாலேயே வருகிறீர்கள்? 

தான் இப்போது சார்ந்திருக்கிறதாக ஒரு இயக்கத்தின் பெயரை அவர் கூறினார். அவன் வியப்புற்றான். இவ்வளவு தீவிரம் இவருக்கு இதற்கிடையில் எப்படி வந்தது? அந்த முற்று முழுதான தளமாற்றம்…தன் தற்போதைய நிலைப்பாட்டை நிரூபிக்க அவர் பட்ட அவதி அவனுக்குச் செயற்கையாகப் பட்டது. அந்த முயற்சியைக் கண்டு இலேசாக எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாயிருந்தது. அர்ப்பணிப்பிலும் மெய்மையிலும் தெரியக் கூடிய ஆழத்திற்குப் பதில் மேலோட்டமான ஒரு பரபரப்புக் கோலத்தையே அவர் காட்டுவதாக அவன் உணர்ந்தான். தங்களைப் பரித்தியாகம் பண்ணி இளைஞர்கள் வளர்க்கிற வேள்வித் தீயில் பிரக்ஞை பூர்வமாகவோ அன்றியோ… அவர் குளிர்காய முனைகிறாரா? 

“நீ யாரோடு?” யாருடனாவது கட்டாயம் சேர்ந்திருக்கத்தான் வேண்டுமென அவர் எதிர்ப் பார்ப்பதாய்ப் பட்டது. 

“நான் சனங்களோடு…” 

முகத்தில் கேள்விக்குறி தோன்ற அவனைப் பார்த்தார். அவன் சொன்னான். 

“நான் தனிநாட்டுக்கும் மாறில்லை. ஐக்கிய இலங்கைக்கும் எதிரில்லை…” 

அவர் இன்னும் குழம்பிப் போனார். 

“அதெப்படி?” 

“சனங்கள் எதைத் தீர்மானிக்கிறார்களோ, அது தான். என்னைப் பொறுத்தளவிலை தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். அவர்களுடைய சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாதது. எந்தவித சுரண்டல்கள். பாகுபாடுகள். அடக்கு முறைகள், அடிமைத் தனங்களுக்கும் ஆளாகாமல் இறைமையோடும் கௌரவத்தோடும் தாங்கள் வாழ எந்த வழி ஏற்றது என்பதைத் தெரிவு செய்கிற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எந்த விதத்திலென்றாலும் அவர்களுக்கு நியாயமும் பாதுகாப்பும் இருக்க வேண்டும்…..பிரச்சினை தீர வேண்டும். அதுதான் முக்கியம்….” 

“சுயநிர்ணயம் எண்டு சொல்லுறாய்.?. 

“ஓம். மாக்ஸிஸ,லெனினிஸ. கோட்பாடான – விரும்பினால் தங்களது சொந்த அரசினை அமைப்பதற்கான உரிமை உட்பட்ட தேசிய இனங்களுக்குள்ள சுயநிர்ணய உரிமை….” என்று கிருஷ்ணன் சொன்னான்.

“ஆனா ஒண்டு…..”. 

“என்ன? 

“ஒரு சோஷலிஸ அமைப்பு முறையின் கீழ் தான் அது முற்று முழுதாக சாத்தியப்படும் எண்டு நான் நினைக்கிறேன்…..” ராசதுரை சிரித்தார். 

“உப்பிடித்தான் நானும் முந்திச் சொல்லிக் கொண்டு திரிஞ்சனான்…..” 

“சோஷலிஸம் எண்டு சொல்லிக் கொண்டு!….” அவன் ரசிப்பைப் புரிந்துகொள்ளாமல் அவர் கேட்டார், “ஐக்கிய இலங்கைக்குள்ளை அதெப்படி?….” 

“பிரதேச சுயாட்சி….” கிருஷ்ணன் பளிச்சென்று சொன்னான். 

“வடக்குக் கிழக்குச் சேர்ந்த பிரதேச முழுமை ஒப்புக்கொள்ளப் பட்டு ஒரு தமிழ் மாநிலமாக – சுயாட்சிப் பிரதேசத்திற்குரிய அதிகாரங்களோடு…” 

“ஏன். அது தனிநாடக இருந்தாலென்ன?” 

“இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. அது தான் சொன்னேனே – அதைத் தீர்மானிக்க வேண்டியது சனங்கள். ஆனா. சாத்தியம், அகப்புறக்காரணிகள். தாக்கம் சர்வதேச அரசியல் இதெல்லாம் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ கவனத்திலெடுக்க வேண்டியிருக்கு..” 

“நீ போராட்டத்தைக் குறைச்சு மதிப்பிடுகிறாய் போலை….”

“நிச்சயமாக இல்லை…. தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட நிர்ப்பந்தந்தான் போராட்டம். அந்தப் போராட்டத்தாலைதான் இவ்வளவுக் கெண்டாலும் நிலமை வந்திருக்குது. மற்றது, கொள்கையிலை வித்தியாசமிருந்தாலும் நினைச்சுக் கூடப் பார்க்கேலாத அந்த அளவு அர்ப்பணிப்பு, வீரம். தியாகம் – இதெல்லாத்துக்கும் நான் மரியாதை செய்யிறன். தலை வணங்கத்தான் வேணும்…..” கிருஷ்ணன் மெய்சிலிர்த்து மீண்டும் சொன்னான். 

“…அது நினைச்சுக் கூடப் பார்க்கேலாத அளவு பெரிசு. எங்களுக்கு முன்னாலை நடந்து கொண்டிருக்கு…” 

“எண்டாலும் நீ மாறித்தான் போனாய். எண்டு நான் சொல்லுறன்.”

“அதை நீங்கள் சொல்லக் கூடாது” கிருஷ்ணன் லேசாக உணர்ச்சி வசப்பட்டவனாய் ராசதுரையரைப் பார்த்துச் சொன்னான். 

“ஏனெண்டா நீங்கள் அப்பதென்துருவத்திலையிருந்து பாத்தீங்கள். நான் வடக்கே நிண்டமாதிரித் தெரிஞ்சுது…. இப்ப வடதுருவத்திலையிருந்து பாக்கிறீங்கள். தெற்கே நிற்கிறமாதிரித் தெரியுது…. நான் நிண்ட இடத்திலை தான் நிக்கிறன். ” 

அதன் பிறகு இரண்டொரு தரம் தெருவில் சந்திக்க நேர்ந்த வேளைகளில் அவர் வடிவாகக் கதைக்கவில்லை….. 

15 

ஹெலிச் சத்தம் கேட்டாலே ஒளித்தோடுகிற சனம். இன்றைக்கு அது எப்போ கேட்கும் என்று தவங்கிடக்கிறது! எல்லாம் எப்படி எப்படி மாறுகின்றன…இந்த ஒரு ஐந்து வருடத்திற்குள் என்னென்ன வெல்லாம் நடந்து விட்டன. இந்த இயந்திரப் பறவையைப் பார்த்து மிரள வேண்டிய நிலை கூட இந்த ஊரில் தான் ஏற்பட்டது. உண்மையில் ஆகாயத் தாக்குதல்கள் எல்லாம் இந்த வட்டாரத்தில் தான் அரங்கேற்றப்பட்டன. 

அந்த முதல் ஹெலித் தாக்குதல் நடந்து இரண்டு வருஷங் கூட ஆகவில்லை. 

திருவெம்பாவைக் காலம். பஜனை. விடியுமுன் போயிருக்க வேண்டும். ஆறு ஆறரை ஆகியும் குளிர் ஒட்டிக்கொண்டு கிடந்தது. எழும்பலாமா? என்று யோசித்துக் கொண்டு கிடந்தான். இருந்தாற் போல குருவிகளின் சத்தத்தையும் மீறிக் கொண்டு அது…லான்ட் மாஸ்ரரா? இல்லை. 

இண்டைக்கு வேளைக்கே வெளிக்கிட்டிட்டான்கள் என்று நினைத்த போதே இயந்திரத் துப்பாக்கி ஆகாயத்தில் சடசடத்தது! திடுக்கிட்டான். இதுவரை நடவாத விஷயம். ஹெலியிலிருந்து சுடுகின்றான்கள்.எங்கிருந்து? எதை நோக்கி? சத்தமென்னவோ கூரைக்கு மேல்தான் கேட்டது. கண்டபடி ஊர்மனைகளுக் வேட்டு வைக்கிறான்கள் போலும்…. 

எந்த நேரமும் இந்த அஸ்பெஸ்ரஸ் தகட்டைப் ‘புஸ்க்’ கென்று துளைத்து விட்டுக் குண்டு பாயலாம்…. சட்டென எழுந்தான். சமையலறையிலிருந்து வேணி ஓடி வந்தாள். 

சடைத்த மாவின் அடியோடு ஒண்டிக் கொண்டு இருவரும் கவனித்தார்கள். மெஷின்கண்கள் விடாமல் குரைத்தன. ஒன்றல்ல. இரண்டோ மூன்றோ ராட்ஸஸத் தும்பிகள் வானில் வளையமிட்டன. இடைவிடாமல் சூடு. எங்கே பட்டன. என்பது தெரியாமலிருந்தது. இந்தச் சத்தங்களுக்கிடையில் எங்காவது அவலக் குரல் ஏதும் கேட்கிறதா என்று கவனித்தார்கள். ஒன்றும் தெளிவாயில்லை. 

சின்னவயதில் ராமாயணத்தில் படித்த வானத்தில் வந்து கொடுமைகள் செய்கிற அரக்கர்களின் நினைவு வந்தது. இது வரை கேள்விப்படாத அறிந்திராத – புதுவிஷயம் நடக்கப்போகிறது? 

இப்போது கீழேயிருந்தும் குண்டும் வெடியும் கேட்கத் தொடங்கின…. தெருவில் சனங்களின் பரபரப்புக் கேட்டது. 

எறும்புப் புற்றுக்குள் தண்ணீர் போனது போல கலைவுகொண்டு விட்டார்கள். படலைக்கு ஓடினான் தெருக்கரை வீடுகளிலிருந்தவர்களெல்லாம் உட்புறமாக வரத் தொடங்கியிருந்தார்கள். மலை வேம்படி ஒழுங்கையில் பெடியளின் முகாமொன்று இருந்ததாயும் அதற்குத்தான் சூடு நடக்கிறதென்றும் சொன்னார்கள். இல்லை. ஆமி ஹெலியில் வந்து பாலாவோடை தோட்ட வெளியில் இறங்கி விட்டது என்றார்கள். எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள். என்ன செய்யலாம். எங்கு போகலாம். எப்படித் தப்பலாம் ஒன்றுமே தெரியாதிருந்தது…. 

வேணி கத்தக்கத்த “இந்தா வாறன்…” என்று சொல்லிவிட்டு மெல்லத் தெருப் பக்கம் நடந்தான். வேலிக் கதிகால்களின் குழைநிழலிற் பதுங்கிப் பதுங்கி-ஏதோ அந்த வானத்து வல்லூறுகள் தன்னைத் தான் குறிபார்க்கிறதாகப் பயந்து அரசடிச் சந்திக்கு வந்தபோது நாலைந்து பையன்கள் துவக்குகளோடு நின்றார்கள். ஒருவனிடம் ரேடியோக் கருவியிருந்தது. அவர்களைச் சுற்றி ஊர்ச் சனங்கள் கொஞ்சப் பேர் தேத்தண்ணீர், சோடா, வாழைப் பழத்துடன் அந்த நெருக்கம் புல்லரிக்க வைத்தது. 

பதினொரு மணிவரை யந்திர துப்பாக்கிகள் இடைவிடாது குரைத்தன. மெல்ல மெல்லச் சேதி பரவியது. போராளிகளின் முகாமைப் பிடிக்க. தோட்டவெளியில் ஆமி இறங்கியதென்றும். பையன்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பிப் போனதென்றும் சொன்னார்கள். ஒரு பையன் சண்டையில் இறந்து போனானாம். ஊர்ச் சனங்களில் அகப்பட்ட இரண்டுபேரை ஆமி பிடித்துக் கொண்டு போனதாம். 

பிறகுதான் பயம் அதிகரித்தது. அடிபட்ட பாம்பு சும்மா விடாது என்றார்கள். ஊர் கெலித்துப் போனது. தெருக்கரை வீட்டுக்காரர்கள் ஓடிப்போய் ஏதோ அகப்பட்டதை எடுத்துக் கொண்டு குச்சொழுங்கைகளிலிருக்கிற உறவினர் வீடுகளுக்குத் திரும்பினார்கள். எல்லாரும் பெரிதாக ஏங்கிப் போய் இருந்தார்கள். இனி. இந்த ஊரைச்சும்மாவிடுவானா? 

அடுத்தநாள் பயம் தெளிந்து ஆங்காங்கு பார்க்கப் போனவர்கள் கழுத்தில் கட்டுகிற அட்சரக்கூடு மாதிரி கை நிறைய அள்ளி அள்ளிக் கொண்டு வந்தார்கள். துவக்குக் குண்டுகளாம். பெருவிரலை நுழைக்கக் கூடிய அளவிற்குக் கூட அந்தப் பித்தளைக் குழாய்கள் இருந்தன. 

அதற்கடுத்த நாளும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த கிழமையும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த மாதமும். அடிபட்ட பாம்பு மறந்து விட்டதென்றே பட்டது. 

ஊரைக்காத்த கடவுளுக்கு நன்றியாக தை மாதம் அம்மன் கோவிலில் ஹோமம் நடைபெற்றது. 

16 

“இது இங்கை உள்ள ஆக்களுக்குத் தெரிஞ்சு தானே நடக்குது?’ 

“தெரியாமலிராது…” 

“எப்படிப் பேசாம இருப்பினம்?” 

“அவங்களும் சம்மதிச்சிருக்கலாம்.” 

“இந்தியா எதையும் செய்யும் எண்டு காட்டியிருக்கு.” 

“எண்டாலும் அமெரிக்காக்காரன் சும்மா இருப்பானோ…….சி.ஐ.ஏ. தானே கால். எல்லாத்துக்கும்?…” 

“இந்தியாவுக்குப் பின்னாலை ரஷ்யன் இருக்கிறான்…அவன் தன்ரை கூட்டாளியை விட்டிடுவானோ..?” 

சாதாரண சனங்கள் எதையெல்லாம் இப்போது பேசுகிறார்கள் என வியந்தான் கிருஷ்ணன். 

“உலகத்திலை நடக்கிற அட்டூழியங்கள் எல்லாத்துக்குப் பின்னாலையும் கழுகும் அதின்ரை ஆக்களும் தான்…. இங்கையும் திருக்கணாமலையிலை கண்வைச்சு. இந்து சமுத்திரப் பகுதியிலை அதிகாரம் செலுத்துகிறதுதான் அவயின்ர நோக்கம்…” 

“அதுக்குத்தான் கால்வைக்க இடம் எங்கை கிடைக்கும் எண்டு பார்த்துத் திரிஞ்சவைக்கு எங்கட பிரச்சினை நல்ல வாய்ப்பாய்ப் போச்சு….இந்தியாக்காரன் விடுவானோ. இல்லை. ரஷ்யாக்காரன் விடுவானோ. உதுக்கு…” 

சர்வதேச அரசியல் கூட எப்படித் தண்ணீர் பட்ட பாடாக வருகிறது இவர்களுக்கு? சாதாரண சனங்கள்- தொழிலாளிகளாகவே படுகிறது. எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்? இது கூடப் போராட்டத்தின் ஒரு பெறுபேறுதான் ஒவ்வொரு நாளும் பத்திரிகை படிக்காதவர்கள் இப்போதில்லை… முன்பு பத்திரிகை படித்தவர்களிலும், பாதிப்பேர் சினிமாவையும். விளையாட்டுகளையும், வழக்குகளையும் தான் பார்த்தார்கள். இப்போது அப்படியல்ல. எல்லாம் படிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்வே அரசியலோடு சம்பந்தப்பட்டுப் போய் விட்டது. உள்நாட்டு அரசியலுடன் மட்டுமல்ல சர்வதேச அரசியலோடும்.. 

ஆனால் இவ்வளவுந்தானா? இந்தப் பேச்சுக்களை மட்டும் வைத்துக் கொண்டு திருப்திப்பட்டு விடுவது எவ்வளவு சரி? சனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது வேறு. இன்னுங் கனதூரம் போக வேண்டும். வெகுஜனப் பங்களிப்பின்றி போராட்டங்கள் சாத்தியமாகுமா? அந்தப் பங்களிப்பு எவ்வளவுக்கு இருக்கவேண்டும்? மக்கள் விலகி நிற்கும் வேளைகளில் வீரங்கள் எல்லாம் சாகசங்களாகவும், தியாகங்களெல்லாம் வீணாகவும் போகும் – சாத்தியப்பாடு உண்டல்லவா? இந்த இடைவெளி – இந்தக் கவனயீனம் எப்படி நேர்ந்தது? அரசியல் விழிப்புணர்வு பெறாத வேளையில் முன்னேற்றங்கள் எப்படி நேரும்…? 

யோசித்தவற்றையே திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான் கிருஷ்ணன். தன் சிந்தனைத் தடம் சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. இப்போது சில வருஷங்களாக அடிக்கடி வருகிற யோசனை தான். தத்துவம் -நடைமுறை – கோழியும் முட்டையும். 

இந்த வாழ்க்கை எவ்வளவு புதினமானது. எவ்வளவு புதிரானது. இந்தச் சவால்கள் தேடல்கள் எவ்வளவு மகத்தானவை! இவையெல்லாம் இருப்பதால் இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது. அழகானது! 

17 

ஹெலி இங்கேயிருந்து நேரே இந்தியாவுக்குத் தானே போகும் யாரோ கேட்டார்கள். 

“பின்னை?” 

“எம். ஜி. ஆரை சந்திச்சிட்டுத்தான் பிறகு டெல்லிக்குப் போவினம்…..என்ன?” 

“அப்படித்தானிருக்கும்..” 

மற்றவர் ஆமோதித்தார்.

ஒரு கார்டூன். 

எம். ஜி. ஆரின் கையில் புலியொன்று பொம்மையாக ஆடுகிறது. அவர் இந்திரா காந்தி கையில் ஆடுகிறார். ஒரு பெரிய கரடி இந்திரா காந்தியை ஆட்டுவிக்கிறது. கரடியின் தொப்பியில் அரிவாள். சுத்தியல். ‘ஓ’ வரைந்ததோ ‘வி’ வரைந்ததோ. நினைவில்லை-ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. பொம்மலாட்டம் என்று தலைப்பு. 

இன்னொன்று, ‘வி’ வரைந்தது “கிரான்ட் மாஸ்ரஸ் மூவ்” சதுரங்கப் பலகையில் எதிரெதிர்க் காய்களாக தமிழரும் சிங்களவரும். ராட்சதக் கைகளிரண்டு ஒரே ஆளுடையவை-காய்களை நகர்த்துகின்றன. மணிக்கட்டுப் பட்டியில் மீண்டும் அரிவாள் சுத்தியல். 

இப்படியான விஷமப் பிரசாரங்கள் எண்பத்து மூன்று ஆடியை அண்டி நடத்தவே பட்டன. அரசாங்கம் கட்சியையும் தடை செய்தது. ஆடிக் கலவரங்களின் சூத்திரதாரிகளில் ஒன்றென. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய இந்த வேடிக்கையை – மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் போடப்பட்ட இந்த வம்புத்தனமான முடிச்சைப் பார்த்து அழுவதா. சிரிப்பதா என்றே தெரியாதிருந் தது. ஆனால் தடை அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் ஐந்து நிமிடத்திற்கொருமுறை ரேடியோவில் ‘திரைவிருந்து” குதூகலத்துடனும் அட்டகாசத்துடனும் அறிவிப்பாளர் சொல்லிக்கொண்டிருந்த போது அருவருப்பும் ஆத்திரமுமே வந்தன. தடைசெய்யப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களுக்கு சிறைத் தண்டனை சொத்துக்கள் பறிமுதலாகும் அவர்களுக்குத் தஞ்சம கொடுப்பவர்களுக்கும் அதே தண்டனை என்கிற பயங்கர அறிவிப்புகள் பீதியைத் தந்தன. 

என்ன செய்யலாம்மென்று தெரியாதிருந்தது. முடிந்தளவு எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதென்பது கடிதங்களையும், டயறிகளையும். சிவப்பு மட்டைகளையும் எரிப்பது அல்லது ஒளிப்பது என்பதாகவே இருந்தது. ஏற்கெனவே ஒரு தடவை வீடுவீடாகப் புகுந்து படையாட்கள் தேடுகிறார்கள் என்ற பயத்தில் – வடிகட்டித் தீர்த்தவை போக இப்போது இன்னொரு தடவை பெட்டிபெட்டியாக அலுமாரி அலுமாரியாகச் சல்லடை போடவேண்டியிருந்தது. முதல்தரம் வடித்தெடுத்தவை தமிழ் விடுதலை. சுதந்திரம் என்று வருகிறவை. இம்முறை மார்க்ஸிஸம் – லெனினிஸம். இப்படி முக்கியமான சிவத்தப் புத்தகங்கள் சில ஒரிஜினல் சட்டைகளைக் கழற்றிவிட்டு சினிமாக்கவர்களில் அடைக்கலம் புகுந்தன. வேறுசில தலைமறைவாயின. அண்டர்க்ரவுண்ட் வாழ்வு, இன்னும் சில தீக்குளித்தன. எவ்வளவு கஷ்டப் பட்டு எப்படியெல்லம் சேர்த்த பொக்கிஷங்கள்….. 

தெருவில் இரைகிற வாகனங்களெல்லாம் அழைத்துப் போக வருகிற வாகனமாகவே காதில் ஒலித்தன. ரேடியோ ஓயாமல் வெருட்டியது. தலை மறைவாகலாமா? எப்படி எத்தனை நாளைக்கு? போதாக் குறைக்கு நாட்டிலிருந்த கொந்தளிப்பு – அவசரகாலம், ஊரடங்கு – எல்லாவற்றுக்கும் உச்சம் போல வெலிக்கடைக் கொடூரம். வாழ்க்கை எவ்வளவு பயங்கரமான தாகலாம் என்ற அநுபவம்….. 

கட்சியில் சேர்ந்ததற்குக்கூட முக்கிய காரணம் இந்த தேசிய இனப்பிரச்சினையில் கட்சி எடுத்த நிலைப்பாடுதான். இலக்கியத்திலும் – அதன் பயனாகவோ அன்றி சமாந்தரமாகவோ – அரசியலிலும் இருந்த ஈடுபாடு – இயல்பாகவே. மனித நேயக் கொள்கைகளுக்கு இட்டுச் செல்ல… இந்தக் கொள்கைகளை வரித்தவர்கள் இலங்கையில் மட்டும் இனப்பிரச்சினையில் ஏனிந்தநிலை எடுத்தார்கள் என்ற கேள்வியில் அதற்கு மாற்றாய்த் தளம் தேடி அவனும் அவனொத்த தோழர்களும் சேர்ந்தமைத்த “செந்தமிழர் அமைப்பு….” 

அந்த நாட்களில் சக்திதாசன் ஒன்றைச் சொல்லுவான்-வேடிக்கையாக: “தோழர்.நாங்கள் இரட்டிப்புக் கவனமாக இருக்க வேணும். எங்கட அமைப்பின்ர பெயரிலேயே இரண்டு ஆட்சேபகரமான விஷயமிருக்கு…ஒண்டு சிவப்பு. மற்றது தமிழர்….” 

அமைப்பு ஏதோ காரணங்களால் அதே வேகத்தில் மறைய… 

என்றாலுமிந்த இடைக்காலங்களில் இவை போன்ற தாக்கங்களால் கட்சி தன்னைச் சுயவிமர்சனம் செய்து சீர்ப்படுத்தி நேர்ப்பட்டமை நிகழ்ந்தது. லெனின் சொன்னது போலத் தவறு செய்யாதவர்கள் இரண்டுபேர். ஒருவன் இறந்து போனவன். மற்றவன் இன்னும் பிறக்காதவன். பரவாயில்லை. இயங்குபவன் தவறிழைப்பது தவிர்க்க முடியாதது தான். இங்கே தவறு நேர்ப்படுத்தப்பட்டு விட்டது. 

பதினோராவது மகாநாட்டு அறிக்கையைப் படித்த பின் கட்சியில் சேராமலிருப்பதற்கான காரணமெதுவும் இருப்பதாய்ப் படவில்லை. இன்னும் அந்தக் காலகட்டத்தில் நேரான வெளிப்படையான நடைமுறை சாத்தியமான ஒத்துக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வேறுயாரும் வைத்ததாயும் நினைவில்லை.. 

முன்பு ஒரு கட்டுரையில் கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தான்- “அவர்களோடு சிலது ஒத்துப்போகிறது. இவர்களோடு சிலது ஒத்துப் போகிறது. எவரோடும் முழுமையாக இனங்காட்ட முடியவில்லை” என்று. இந்தச் சுய விமர்சனத்துக்கும் மகாநாட்டுப் பிரகடனத்துக்கும் பின்னர் இவர்களோடு முழுமையாக இனங்காட்டுவது இயல்பான தேயாயிற்று. தன் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்ட திருப்தி…. 

தடை பற்றிய முதல் அறிவிப்பு எதிர்பாராத வியப்பாயும் அதிர்ச்சியாயும் வந்தது. ஒரு முன்னிரவில் ஊரடங்குக் கெடுபிடிகள் தளர்ந்த முதற் காலையிலேயே வேணி அம்மன் கோவிலுக்குத்தான் ஓடி வந்தாள்… 

18 

இந்தச் சனக்கூட்டத்தைப் பார்க்க திருவிழா ஞாபகம் வருகிறது. இப்படிச் சனஞ் சேர்ந்து கனகாலந்தான். ஒலி பெருக்கியும் கோட்டை வெடியும் காதைச் செவிடுபடுத்துகிறது. திருவிழாக்கள். இரவுகளில் வாணவேடிக்கையும் இசைக் கச்சேரிகளுமாய் அமளிப்படும். முதற் தடவை இரவுத் திருவிழாப் பார்க்கப் போய் வெடித்துச் சிதறி வீழ்ந்து, தீப் பூக்களைப் பார்த்துப் பயந்தமை இன்னும் தான் நினைவிருக்கின்றது. 

சோழகத்தில் விண் கூவிய கொடிகளுக்கும் கோட்டை வெடிகளுக்கும் பதிலாக ஹெலிகளும் ஷெல்களும் எல்லாம் எப்படி மாறின? அம்மன் கோவில் திருவிழா வைகாசிப் பூரணையை அண்டி வருகிறது. எண்பத்தி மூன்றின் பிறகு இரவுத் திருவிழாக்ககள் இல்லையென்றாகின. ஆறு ஆறரைக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிடும். பகல் திருவிழாக்கள் கூட அமைதியாயிருந்தன. ஆனால். இம்முறை அப்படிக் கூட நடக்க முடியாது போயிற்று. அதற்குக் காரணமாயிருந்த பயங்கரத்தை கிருஷ்ணன் நேரிலே கண்டான். இங்கிருந்தல்ல ஆறு மைல்களுக்கப்பால் நின்று. 

ஒரு பென்னம் பெரிய ரி. வி. திரையில் பார்ப்பது போல எல்லாமிருந்தன. வானம் நல்ல பளிச்சிட்ட நீலமாயிருந்தது.மேகங்கள் திரைந்து ஆங்காங்கே குவிந்து கிடந்தன என்றாலும். முதல்நாள் பெய்த மழையில் கழுவிய மாதிரிச் சுத்தமான நீலம். முன்னாலும் பக்கங்களிலும் வயல் வெளி பரந்து கிடந்தது. அறுவடை முடிந்த வெறும் வயல். இடைக்கிடை சணல் பாத்திகள். மஞ்சள் சதுரங்களாகத் தெரிந்தன. வயல்களைத் தாண்டிதொடுவானில் பனை நிரைகள் குடிமனைகள், காற்று மெல்லக் குளிர்ச்சியாக வீசியது. சணல் பூ மணத்தை அது கொண்டு வந்தது. வெய்யில் பளிச்சென்று எறித்தது. அண்ணாந்து பார்த்தால் உச்சிக்கு நேரே மேலே நின்று கண்ணைக் குத்துகிற சூரியன். 

ஆனால், இவையெல்லாவற்றையும் ரசிக்கிற மனநிலையாயில்லை. இந்தப் பகைப்புலனில் இந்த ஒளிர்நீலவானில் மேகங்கள்களுக்கிடையிலும் பனங்கூடல் உச்சிகளுக்கிடையிலும். மறைந்தும் வெளித்தும் கொண்டு திரும்புகிற சரிகிற நேரங்களில் பளபளத்துக் கொண்டு விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆறு பொம்மர்கள் ஒரு ஹெலி என்றான் கிருஷ்ணன். இல்லை. ஐந்துதான் பொம்மர். மற்றது அவ்ரோ என நாகு திருத்தினான். இருக்கலாம். இடைவிடாமல் ரீங்கரித்துக்கொண்டு பெரிய வட்டங்களாக வளைய வந்து கொண்டிருந்தன. அந்த வட்டங்களின் மையம். சுதுமலை. மானிப்பாயாக இருக்கலாம் போலிருந்தது. அவர்களிருந்த இடத்திலிருந்து நேரே கிழக்காக இருந்தது. பட்டணமாக இருக்குமோ?” கிருஷ்ணன் தன்னை ஆறுதல் படுத்திக் கொள்ளத் தானே கேட்டான். 

“இல்லை. ஸே…..அது இன்னும் வலப் பக்கமாகத் தெரியும். அந்தப் பனைக்கு நேரை தான் பட்டணம். இது மானிப்பாய்ப் பக்கந்தான்…” நாகு சொன்னான். 

“ஏன் இவ்வளவு பெரிய வட்டமாகப் போடுகிறார்கள்? வட்டுக்கோட்டைக்குக் கூட வருகுதே..அந்தா பாருங்கோ…” அன்ரனி தலைக்கு மேல் காட்டினார். 

அண்ணாந்து பார்த்தால் ஒரு பருந்தின் அளவில் ஒரு பொம்மர் வானத்து உச்சியில் வழுகிக் கொண்டிருந்தது. 

எப்படியாவது உடனே வீட்டுக்குப் போய்விட வேண்டுமென அந்தரமாயிருந்தது. ஆனால் அது முடிகிற காரியமல்ல. ஹெலி நோட்டமடிக்கிற இடத்திற்குள் மோட்டார் சைக்கிளில் போவதைவிடத் தற்கொலைக்குச் சிறந்த வழி வேறிராது….கூட இருந்தால் நல்லதுதான். என்றாலும் ஆபத்தில் தலைபோட்டுத் தனக்குத் தீங்கைத் தேடிக் கொள்வது யாருக்குமே நல்லதல்ல….வளவில் பதுங்குகுழி இருக்கிறது. பயமில்லை. 

முதற் தடவை இந்த அரக்கத்தனம் அரங்கேறிய போது எங்குதான் தயாரிப்புகளிருந்தன? ஒரு வீட்டில் கூட குழி இல்லை. எதிர்பாராமல் வந்த பிரளயம் அது. 

வேடிக்கை என்னவென்றால் அன்று பகல்தான் குண்டு வீச்சிலிருந்து தப்புவது பற்றிய புத்தகம் கிருஷ்ணனுக்குக் கிடைத்திருந்தது. “கொண்டு போய் வாசியுங்கோ. ஸேர்,” என்று சொல்லி குமார் ஒரு பிரதி கொடுத்திருந்தான். ”இதுகும் நடக்கப் போகுதோ!” என்று வியப்போடு கேட்டுவிட்டு, படித்துப் பார்க்கலாமென்று வாங்கி வந்திருந்தான். 

எவ்வளவு விசித்திரம் – அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்த அந்த மாலையே-அதை விரித்துப் பார்க்க முதலே எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தேறியது. வழமைபோல வட்டமிடும் பிளேன்கள் என்று தான் நினைத்தார்கள் எல்லோரும். காதைப் பிளக்கும் இடிகள் ஒன்றன் பின் ஒன்றாய் குளித்துக் கொண்டிருந்தவன் சவர்க்காரம் போட்டது பாதி போடாதது பாதியாய் அள்ளி ஊற்றிக்கொண்டு வெளியே பாய்ந்தான். சூடென்றால் கொங்கிறீற் கூரைக்குக் கீழ் பதுங்கலாம் . குண்டுக்கு என்ன செய்யலாம்? சத்தங்கள் மிக அருகில் தான் கேட்டன. எங்கென்பது தெரியாதிருந்தது… வீடு நடுங்கியது….. காற்றில் கந்தக நெடி கலந்து வந்தது…..பயத்திற்கு ஒலியும் மணமுமிருந்தன.. அரை மணிநேர ஊழிக்காலம் பயப்பிரமை தெளியு முன்பே சேதிகள் வந்தன. தாவடியில் கருகிய அரும்பையும் மற்றவர்களையும் பற்றி இரண்டு கிழமையாவதற்குள் அடுத்த தாக்குதல். இது காலையில். இம்முறையும் அதே வட்டாரந்தான் ஏன் இங்குதான் பாய்கிறார்கள்? ஹெலி. பொம்மர். குண்டு, சூடு – இவையெல்லாம் சேர்ந்து கிளப்புகிற சத்தம் சாவின் சங்கீதமாய்….இத்தடவை மலைவேம்படி ஒழுங்கையிலிருந்த அந்த வெறும் வீட்டில் பழி தீர்த்துக் கொண்டார்கள். 

கிருஷ்ணன் போய்ப் பார்த்தான். போரின் நாச குணம் புரிந்தது. சிதறிக் கிடந்த கட்டிடம். முறிந்து சாய்ந்த மரங்கள்….நல்ல காலம் யாரும் உள்ளே இருக்கவில்லை. 

லெனின் கிராத்தில் பார்த்த பிஸ்கரேவ்ஸ்கிளே இடுகாடு நினைவு வந்தது….. பாத்தி பாத்தியாய் எல்லையற்றுப் பரந்து கிடந்த கூட்டுப் புதைகுழிகள்.. பாஸிஸ்ட் பசாசுகள் என்றைக்குமே மனித உயிர்களை மதித்ததில்லைத் தான்…. இந்த இரண்டாவது தாக்குதலுடன் பதுங்கு குழி வெட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகிப் போனது. கந்தமுத்துவைக் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருந்தது. ஆளுக்குச் சொல்லி வைத்துக் காத்திருந்து கண்டு தான் பிடிக்க வேண்டியிருந்தது. புத்தகத்தில் பார்த்த விஷயத்தைப் படங்கீறி விளங்கப்படுத்த முயன்ற போது கந்தமுத்து சொன்னார்! “அதெல்லாம் எனக்குத் தெரியும். தம்பி…. நீ இடத்தையும் ஒரு தென்னை மரத்தையும் காட்டு..அஞ்சுயார் பொலித்தீனும் பத்து உரப்பையும் கொண்ட… அவ்வளவு தான்.” 

வெட்டும் போது ஒரு நினைவு வந்தது. கீழால் வந்தான்களெண்டால் கண்ணில் படுமே கூடவே ஒரு சமாதானமும் அப்படி வரும் போது இங்கிருந்தால தானே. 

இந்தப் பிரச்சினைகள் உச்சங் கொண்டதன் பிறகு இந்த நிலத்தைத்தான் எத்தனை தரம் எத்தனை தேவைகளுக்காக தோண்ட நேர்ந்திருக்கிறது… வியட்நாம் யுத்தகாலத்தில் கூட்டுக் குடியிருப்புகளே கூட நிலத்திற்கடியில் உருவாக்கப்பட்டனவாம். அந்த நிலைமை இங்கும் வருமா? பூமி தாய். தான் தன் பிள்ளைகளைப் பாதுகாக்கிற தாய். 

இந்தப் போரே இப்படி இருந்தால் நியூக்கிளியர் யுத்தம் எப்படி இருக்கும்? ஆனால் ஒன்று அதில் கவலைப்பட எவராவது மிஞ்சப் போவதில்லை. நட்சத்திரப் போர்த் திட்டங்களும், நியூக்ளியர். ரசாயன ஆயுதங்களும் எஸ். டி.ஐ. க்களும் ஏவுகணைகளும், அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளும்…… 

எதனுடைய உறுமல் எது வென்று தெரியாமல் ஆறு இயந்திரங்களும் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. 

“என்ன பத்து நிமிஷமாக வட்ட மடிச்சுக் கொண்டே இருக்கிறான்…” சரியாகப் பதினொன்றே முக்காலுக்கு இந்த இரைச்சல்கள் கேட்டு வெளியே வந்திருந்தார்கள். 

எதெது எங்கே என்று தெரியாமல் அந்த ஆள் தின்னிப் பறவைகள் வட்டமடித்தன. 

“முழு யாழ்ப்பாணத்தையும் சுத்துறான்கள் போல இருக்கு…” என்றார் அன்ரனி. 

“அந்தா, போடப் போறான் ஸே….பாருங்கே….” என்றான் நாகு. எங்கோ உச்சியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு விமானம் திடீரென நாற்பத்தைந்து பாகை சரிவில் விரைந்து சறுகியது. ஒரு பனை மட்டத்தில் அதன் வயிற்றிலிருந்து ஒரு புகைத்திரள் வந்து கரைய மீண்டும் முன்னே மேலெழுந்தது. 

“போட்டிட்டான்கள்…” என்றார் அன்ரனி. 

ஆறேழு வினாடிகளின் பின்னர் சத்தம் வந்து சேர்ந்தது. 

“எங்கட பக்கந்தான்…” என்றான் கிருஷ்ணன். கலங்கிப் போய். 

“இண்டைக்கு அம்மன் கோவிலும் கொடியேத்தம் – இப்பதான் பன்னிரண்டு மணிக்கு.”

பிறகும் ஐந்தாறு சத்தங்கள்…. 

அடுத்த நாள் தான் சரியான தகவல் தெரிந்தது. 

இறந்து போன ஏழு பேரில் ஐயர் ஒருவர். கிருஷ்ணனின் பால்ய கால நண்பன்-வகுப்புச் சகா ஒருவன். 

கொடி ஏறவில்லையாம். 

19 

அன்று தான் – அதாவது கோவிலடிக் குண்டு வீச்சின் தாக்கங்கள் பற்றித் தெரிய வந்த அன்று தான் – காலையில் யாழ்ப்பாண வானொலியின் ஜனனம் நிகழ்ந்தது. வடமராட்சியில் விடுவிப்பு நடவடிக்கைகளும் தொடங்கின. முழு யாழ்ப்பாணமும் எனத் தொடங்கிப் பின்னர் வடமராட்சியில் மையம் கொண்ட அந்தச் சூறாவளி வீசிய நாட்கள்……. 

அந்த நாட்களைப் பற்றி இதழொன்றில் ‘இரா’ எழுதிய செய்தி விமர்சனக் குறிப்பொன்று கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது….. 

சில காலமாகவே இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பேசப் பட்டு வந்ததால் இந்த விடுவிப்பு நடவடிக்கை எவருக்கும் ஆச்சரியமளிக்க வில்லை. ஆனால் இதிற் கண்டதுதானென்ன? 

யாழ் குடாவின் வடகரையில் அதுவும் பருத்தித்துறையிலிருந்து காங்கேசந்துறை வரை – ஒரு மூன்று கிலோ மீற்றர் அகலப் பரப்பில் தீவிரவாதிகளை தற்காலிகமாக? வெளியேற்றுவதில் இந் நடவடிக்கை வெற்றி கண்டுள்ளது. தீவிர வாதிகளுக்கேற்பட்ட பொருள் நஷ்டம் பற்றிக் கணக்கிடுவது சிரமம். எனினும் அவர்களைப் பொறுத்தளவில் ஆட்கள் இழப்பு என்பது மிகக் குறைவாகவே தெரிகிறது. ஆனால் தாங்கள் எதிர்பார்த்ததிலும் அதிகப்படியான இழப்புக்களுக்கு இராணுவம் முகம் கொடுக்க நேரிட்டது என்பதும் உண்மை. 

இந்தப் போர் விளைவுகளை விடவும் இதனால் பொதுமக்களிடத்தேற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றியும் அரசின் நோக்கங்கள். போக்குகள் பற்றியுமே நாங்கள் அதிகம் கவனிக்க வேண்டியவர்களாயுள்ளோம். இந்த நடவடிக்கைகள் பொது மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கின என்பது சரியே. இதுதான் நடவடிக்கையின் முக்கிய நோக்கமுமாகும். மக்களைப் பீதியடையவும் அதன் மூலம சோர்வடையவும் செய்வதன் மூலமும் தீவிரவாதிகளின் போராட்டத்தைக் கைவிடும்படி செய்வதே நோக்கமாயிருந்தது என ஊகிக்க முடிகிறது. 

விமானக் குண்டுகளும். எரியூட்டும் பீப்பாக் குண்டுகளும். ஷெல்களும், துப்பாக்கிகளும். கத்திகளும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் குடித்துள்ளன. கொல்லப் பட்ட தீவிரவாதிகளின் தொகையிலும் இது பன்மடங்கு அதிகம் அடைக்கலந்தேடுமாறு அறிவுறுத்தப்பட்ட ஆலயங்களுட்படப் பல கட்டிடங்கள் – பாடசாலைகளும். வீடுகளும், தாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுத் தென் பகுதிக்குத் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களிற் சிலர் உள்ளூர் முகாம்களில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். வேடிக்கை என்னவெனில், தம்மை விடுவிக்க வந்தோரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தப்பியோட நேர்ந்தது. 

சக்திதாசன் சொல்லுவான், வேடிக்கையாக “இந்த விடுவிப்பு என்பது சமயங்கள் கூறுகிற விடுவிப்பாக இருக்கிறது. இந்த உலக பந்தங்களினின்றும் அளிக்கப்படுகிற விடுவிப்பு……… 

படைகள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது. தீவிரவாதிகளே தமது ஒரேயொரு பாதுகாப்பு என மக்கள் எண்ணத் தலைப்படுவது மிக இயற்கையானதுதான். 

இராணுவ நடவடிக்யைானது தீவிரவாதிகளை பேச்சுவார்த்தைகளுக்கு வரச்செய்வதற்காகவே. எனவும், தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னிற்கிறார்களெனவும் உலக அரங்கில் அபிப்பிராயமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் பின்னிற்பவர்கள் யார்? 

‘இணைப்பு-சி’ என்பதை அமுலாக்க முன் வந்திருந்தாலோ அன்றி டிசம்பர் பத்தொன்பது யோசனைகளை ஏற்றுக் கொள்வதில் பின்னடைவு காட்டப்படாதிருந்தாலோ கூட நிலைமை இவ்வளவுக்கு வந்திருக்காது. இராணுவத் தீர்வை நியாயப்படுத்த முயலாமல் உண்மையாகவே சமாதானத் தீர்வொன்று காணப்படுவதில் அக்கறை இருக்குமெனில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்.. 

இந்த அறிக்கைக்கு அடுத்ததாக, விடுவிப்புப் பற்றி நினைவுக்கு வருகிற அடுத்தது சுகுணேந்திரன் பற்றிய ஞாபகம். எதிலும் தலைபோட்டுக் கொள்ளாமல் தானுண்டு தன் பாடுண்டு என்றிருந்த அப்பாவி இளைஞன். 

“உங்களைப் பாத்தா-தாடியும் ஆளும் – மொஸாட்டுக்காரன் மாதிரி இருக்கு ஸேர்..” என்றான் ஒருநாள். 

“உமக்கென்ன கோபம், என்னிலை?” என்று கிருஷ்ணன் கேட்டான் “……பொல்லாத ஆளாயிருப்பீர் போல இருக்கே.. எங்கை கண்டீர் அவங்களை?” 

“ரீவிலை, ஸேர்.”

ஆஜானுபாகுவான உடலும் அதற்குள்ளொரு குழந்தை உள்ளமும் ‘கொண்ட சுகுணேந்திரன் கலகலப்பாகப் பேசுகிற, படிப்பில் அக்கறை மிக்க இளைஞன். அவனையுந்தான் பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம். எல்லோருக்கும் நடக்கும்போது செய்தியாகவும். புதினமாகவும் படுகிற ஒன்று தமக்கு வேண்டியவர்கள் சம்பந்தப்படுகையில் உணர்வுப் பரிமாணமும் பெற்று வேறொன்றாகி விடுகிறது.. 

20 

எதிரே இடப் புறமிருந்த வரிசையிலிருந்து. யாரோ தன்னைப் பார்த்துக் கை அசைப்பது போலத் தெரிந்தது கிருஷ்ணனுக்கு வீரவாகு. “இங்கே வந்துவிடேன்”. என்று சைகையால் கேட்டார். `பரவாயில்லை. இங்கேயே நிற்கிறேன்’ என அபிநயங்களாலேயே பதில் அனுப்பினான். 

வீரவாகு கச்சேரி சத்தியாக்கிரகத்திலிருந்து அடிபட்டவர் என்பது இன்றுதான் தெரிய வந்தது கிருஷ்ணனுக்கு ஆள் பரவாயில்லை. கிருஷணன் கூட இந்தச் சத்தியாக்கிரகத்தில் தன் பங்கைச் செலுத்தித் தானிருக்கிறான். ஆதரவு தெரிவித்து நடந்த ஊர்வலங்களிலொன்று அவன் பள்ளியிலிருந்தும் போனது. பத்தாம் வகுப்பு மாணவர்களிலொருவனான கிருஷ்ணனும் அதிலிருந்தான். 

மண்டையைப் பிளக்கும் வெய்யிலில், தாகம் தொண்டையை எச்.எஸ்.ஸி. வரட்டக் கத்திக் கொண்டு போனார்கள். விக்னராஜா-எச். எஸ். ஸி. வகுப்பு மாணவர்-இவர்களுக்கெல்லாம் அப்போதைய காலத்துக்கு ஹீரோ – தலைமையில் ஊர்வலம் போனது. கிரிக்கட் வீரனான. எப்போதும் லோங்ஸும். வெள்ளை வேட்டும் கண்ணாடியுமணிந்து – ஷேட்டை அலட்சியமாக மூன்று பொத்தான்கள் திறந்து விட்டு அதற்குள்ளிருந்து சங்கிலியும். நெற்றியில் கற்றை மயிரும் ஊசலாடுகிற விக்னராஜா. ஜேக்கே கொழும்பிலிருந்து வந்த அதே சமயத்தில் அதே மாதிரி வந்தவர் தொண்டை அறக் கோஷம் போட்டார். அவர் இராணுவத்தை இங்கிலீஷில் விளிக்க வேண்டியது. இவர்களெல்லாம் ‘கெற்அவுட் என்று கத்தவேண்டியது. இப்படியாக ஊர்வலம் உசாராகப் போனது. 

பட்டணத்திற்குள் நுழைந்த பிறகு உண்மையாகவே ஒரு இராணுவ ட்ரக் இவர்களைத் தாண்டிப் போக நேரிட்டது. துப்பாக்கிகளுடன் உட்கார்ந்திருந்த சிப்பாய்கள் சுட வந்தால் சட்டையைத் திறந்து நெஞ்சை முன் தள்ளிக் காட்ட வேண்டும் என்ற அந்த வயதின் வீரக் கற்பனைகள். 

ஊர்வலத்தின் பிறகு நாலைந்து நாட்கள் தலையிடி காய்ச்சல். சத்தி என்று பள்ளிக்குப் போகமுடியாமலே போனது.விக்னராஜா இப்போது எங்கிருப்பார்? அந்த வருட முடிவோடு ஆளைக்காண முடியாமல் போனது திரும்பவும் கொழும்பிலே குடியேறியிருப்பாரா? அப்படியானால் தன்னுடைய அந்தப் பதினைந்து வருட கொழும்பு வாழ்வின்போது எங்கோ எப்படியோ ஒரு தடவையாவது சந்திக்க முடியாமல் போயிருக்குமா? விக்னராஜா வெளிநாட்டிற்குத்தான் போயிருக்க வேண்டும்-அப்போதே. பசுமையைத் தேடிப் பறந்திருக்க வேண்டும். 

ஆனால், இந்தப் போராட்டம் என்று வந்த பிறகு போனவர்கள் எத்தனை? உண்மையான பயத்திலும் பாதிப்பாலும் போனவர்கள் பாதிப்பேர் என்றால். நிலைமையைச் சுரண்டித் தம்மைப் – பலவழிகளிலும் வளமாக்கப் பறந்தவர்கள் பாதி.. 

இந்த இக்கட்டான வேளையில் சொந்த மண்ணை விட்டு ஓடாமல் இங்கே வாழ்ந்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். சுய இயல்புக்கும் இசைவுக்குமேற்ப அளிக்கப்பட்ட மெய்யான எந்த ஒன்றும் போராட்டத்திற்கான பங்களிப்புத்தான். 

தன்மனச்சாட்சிக்கும் அறிவுக்குமேற்ற வகையில் செயற்பட்ட எவனும் விலகி நின்றதாய் கூறமுடியாது. இன்னொரு வகையில் போராளிக் குழுக்கள் என நேரடியாகக் குறிக்கப்பட்டவர்களைப் போல அதே அளவுக்கு இக் குழுக்களை ஆக்கபூர்வமாக விமர்சித்தவர்களும் கொள்கை கருதி விலகி நின்றவர்களுங் கூட போராட்டத்தின் சமபங்காளிகளேயாவர். போராளிகள் எனக் குறிக்கப்பட்டவர்களுடன் பரிச்சயங்களைப் பேணிக் கொள்வதனாலோ அல்லது வசதி கருதித் தம்மை அவர்களுடன் அடையாளங் காட்டிக் கொள்வதினாலோ பம்மாத்துப் பண்ணுகிறவர்களை விட. இந்தப் போராட்டத்திற்கு உண்மையான ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்கள். 

போராட்டம் என்பது குழுக்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு சமூகம், முழு இனம். பரந்த மக்கள் கூட்டம் தழுவிய விவகாரம். இயற்கையின் நியதி. முரண்களின் அறுவடை. இயங்கியல் தழுவிய வளர்ச்சிப் போக்குகளில் இயல்பாகவே முளை கொள்கிற சமாசாரம். முக்காலமும் சம்பந்தப்பட்டது. 

போராளிக் குழுக்களும் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுப்பவர்களாயிருக்கலாம். ஆனால் அவற்றில் பங்கெடுப்பவரும் வெற்றிகொள்ள வைப்பவர்களும் மக்களேயாவர். மக்கள் பங்களிப்பில்லாதது எப்படிப் போராட்டமாகும்? அது இங்கே எவ்வளவு சாத்திமாயிற்று. 

மக்கள் பங்களிப்பிற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில். அதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டபோதில். முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது மெல்ல மெல்ல உருக்கொள்கையில் சிதைய நேர்ந்தது எவ்வாறு?. 

தமிழ்பேசும் மக்கள் இணைப்புக் குழு முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் அமைப்புகள் சேர்ந்துருவாக்கிய அந்த அமைப்பு….திரும்பப் பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தப்பட்ட ஐந்தம்சத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போராடவென அமைக்கப்பட்ட அந்தப் பேராயத்தில் கிருஷ்ணன் உறுப்பினனாயிருந்த தொழிற் சங்கமும் சேர்ந்திருந்தது. தங்கள் அமைப்பின் பிரதிநிதியாகக் குழுவில் அவனும் இடம் பெற்றிருந்தான். மகாநாடு. ஊர்வலங்கள் எதிர்ப்புத் தினங்கள். ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கிய வேளையில் ஏற்பட்ட அந்த பின்னடைவு..மக்கள் போராட்டம் குறைத்து மதிப்பிடப்பட்டதன் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படத் தவறியமையின் விளைவு மட்டும்தானா? 

21 

அந்த இடத்திற்கு வந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் போகிறது. …எதிரே மருத மரத்திற்கு இப்பால் குளத்தடியில் அமளியாயிருக்கிறது. முக்கியஸ்தர்கள் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். சனக்கூட்டம் இப்போது இரு மடங்காகிவிட்டிருக்கிறது. கிருஷ்ணன் நின்று கொண்டிருக்கிற இந்த இடத்திற் கூட இப்போது நூறு பேருக்குமேல் சேர்ந்து விட்டார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி, பெருமிதம், பரபரப்பு…கிருஷ்ணன் மீண்டும் பக்கவாட்டுச் சிந்தனை பற்றி நினைக்கிறான். கூடுதலாக எதிர் பார்க்கிறார்களா?. 

கண்களை இடுக்கிக் கொண்டு மேற்கு வானத்தைப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கும்பலின் இரைச்சலையும் எங்கோ கத்துகிற காக்கையின் குரலையும் கூடச் சோளகம் சுழற்றிக் கொண்டு போய் விடுகிறது. இந்த வெளியில் இந்த வானத்தைப் பார்க்கிற விளையாட்டு. ..கிருஷ்ணனும் கூட்டாளிகளும் விடலைகளாயிருந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்தமாயிருந்த ஒரு விளையாட்டு ..இரவுத் திருவிழா வேளைகளில் சனங்கள் ஓரளவு கூட்டமாக நிற்கிற இடத்தருகில் போவார்கள். ஒருவன் கொஞ்ச நேரம் வானத்தை உற்றுப் பார்த்துவிட்டு, வலு ஸீரியஸாக மற்றவனைத் தட்டி மேலே காட்டுவான். 

“அந்தா,அந்தா…” 

“ஓமோம்…..” என்பான். மற்றவன். 

இப்போது கோஷ்டி முழுவதும் இருவரையும் சுற்றிக் கொள்ளும். 

“அந்தா,அந்தா…” 

“ஓமோம். இங்கை..” 

“இல்லையடா. அது…” 

“போடா, அது தான்…” 

அருகில் நிற்கிற சனக்கூட்டம் இவர்களைச் சூழ்ந்து தானுமிந்த இந்தா-அந்தாவில் பங்கேற்கத் தொடங்க இவர்கள் ஒவ்வொருவராகக் கழன்று. விலகி, எட்ட நின்று தாங்களில்லாமலே தொடர்கிற வேடிக்கையை ரசிப்பார்கள். 

இதுபோல. இன்னும்மொன்றிருந்தது. ஆனால் அது பகிடியில்லை. புதிர். அந்த அறுபதுகளின் நடுப்பகுதி மாலைகளில் ஐந்தரை, ஆறு மணிப்போதில் அது நிகழும். தினசரி. தேர்முட்டி மீதிருந்து மேலைவானின் உச்சியைப் பார்க்கும் போதில் அநேகமாக அது தெரியும். சரிந்து போன சூரியனைப் பிரதிபலிப்பதே போல ஒரு ஒளிப் பொட்டு. எக்கச்சக்கமான உயரத்தில் சீரான வேகத்தில் சறுக்கிக் கொண்டே போகும் தெற்கிலிருந்து வடக்காக. அது கண்ணுக்குப் பட நேர்ந்த ஆரம்ப நாட்களில் ஜெற் விமானமா? செயற்கைக் கோளா? என்று பரபரப்பான விவாதம் நடந்து. பிறகு என்ன வென்றில்லாமலே அது இவர்கள் சூழலில் ஒன்றாகிப் போனது.. 

22 

காற்றின் இரைச்சலோடு சேர்ந்தொத்த அந்த மெல்லிய சுருதி.. அதை மீறிக்கொண்டு சனங்கள். கிருஷ்ணனும் கவனித்தான். சத்தம் நெருங்கி வந்தது. ஹெலிதான். ஒன்றல்ல. இரண்டும் சத்தம். 

தென்மேற்கிலிருந்து இரண்டு ஹெலிகள் – வழமையானவையல்ல என்று பார்த்தவுடன் தெரிந்தது. தாழப் பறந்து தோன்றின. ஆனால் இதென்ன? வெளியைத் தாண்டி வடக்கே போய் மறைந்து…வட்டம் போட்டு வருவார்களென எதிர்பார்த்த சனம் அண்ணாந்து அதிசயிக்க..ஏன் இறங்க முயலாமல் நேரே போகிறார்கள்? என்றாலும் இவைதான்.. சரி. அழைத்துப் போக இந்திய ஹெலிகள் வந்து விட்டன. இனி என்ன நடக்கும் சமாதானப் பேச்சின் முடிவு எப்படி இருக்கும்? சமாதானம் பிறக்கத்தான் வேண்டும். அது அவசியம். அத்தோடு நியாயமும். அது மிக அவசியம். இவ்வளவு இழப்புக்களுக்கும் கஷ்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகட்டுகிற தீர்வுதான் நியாயமானது. அது தான் சமாதானத்தைக் கொண்டு வரும். நியாயமும் சமாதானமும் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன. 

சத்தம் மீண்டும் பலத்துக் கேட்டது. ஹெலிகளிரண்டு திரும்பி வருவது தெரிந்தது. மிகப்பதிவாக, வெளியைச் சுற்றி வந்தன. கரும்பச்சை. இங்கத்தையச் சகாக்களிலும் இவை பெரிதாய்த் தெரிந்தன. ‘இந்தியவான்படை’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. 

ஒரு ஹெலி அதே உயரத்திலேயே சுற்றிப்பறக்க மற்றது பனை தென்னை வட்டுக்களைத் தழுவுவது போலத் தாழவந்து இறங்குகிற இடத்திற்கு மேலே நிலை கொண்டு-முன்புறம் கோவிலைப்பார்க்க நின்று- தளம்பாமல் மெல்ல மெல்லப் பதிந்தது. 

இராட்சத விசிறிகளின் சுழற்சியில் புழுதிப் படலம் கிளம்பிப் படர்ந்தது. மக்கள் கோஷமிட்டார்கள். மெல்லப் பதிந்த அசுரப் பறவை கால் பதித்தது. 

– 16-08-87 லிருந்து ‘முரசொலி’ வாரமலரில் தொடராக வெளியானது. 

– பின்னர் ’87லிலும் 90லும்’ இரு தடவைகள் நூலுருப் பெற்றும் அசம்பாவிதங்களால் பிரதிகள் அழிபட்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *