எல்லைக் கிராமங்களின் தொல்லைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 474 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடைமழை பெய்து அந்த கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை இல்லாமல் செய்துவிட்டது. பார்த்த பக்கமெல்லாம் வெள்ளம். பாதைகளில் வீதிகளில் கூட தண்ணீர் மேவி நிற்கிறது. அந்த மக்களின் அன்றாட வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் பெய்த மழை கொஞ்சம் அதிகமாகவே கிழக்கில் கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மழையின் அழிச்சாட்டினம் அதிகமாக இருக்கிறது… தொடர்ந்து பெய்து கொண்டுதான் இருக்கிறது. 

சிவரூபன் எடுத்துக் கொண்டிருக்கும் “எல்லைக் கிராமங்களின் தொல்லைகள்” என்ற ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு இன்று மிக தொலைவில் இடம்பெற இருப்பதால் அவன் மிகவும் பதட்டமாக இருக்கிறான். விடாமல் பெய்து கொண்டிருக்கும் மழையினால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

மனச் சோர்வுடன் வீட்டின் வரவேற்பு கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான். 

அவனின் அலைபேசி அலறியது..எடுத்து பேசினான். 

“வணக்கம் சிவா கதைக்கிறன்…ஆ சொல்லுங்க ரமேஸ், எல்லாம் ரெடி பண்ணி முடிச்சிட்டன்.மழை கொஞ்சம் விட்டிட்டால் கிளம்பிடுவேன். 

அவங்க வந்திட மாட்டாங்கதானே… அப்படியா சரி,,சரி அவர்கள் காரில் வருவதால் சீக்கரம் வந்திடுவாங்க..நான் இதோ ஆட்டோவில் புறப்படுகிறேன். ஓகே… இந்தா புறப்படுறன்” 

அலைபேசியில் ரமேசுடன் கதைத்து முடித்துக்கொண்டான் சிவா. 

மழை பெய்து கொண்டு இருந்தாலும் பரவாயில்லை தான் நேரத்துக்கு அங்கு நிற்கவேண்டும் என்ற உணர்வோடு பாணமை நோக்கி புறப்பட்டு விட்டான் சிவரூபன். 

பாணமை…என்ற பழம்பெரும் கிராமம் அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியில் எல்லைக் கிராமமாக தற்போது இருந்தாலும் அது முன்னர் தமிழர்களின் கிராமமாக இருந்திருக்கிறது. இராவணன் ஊழிக்காலத்திலிருந்து கண்டிக்கால வரலாறு வரைக்கும் அது தமிழ் கிராமமாகவே இருந்திருக்கிறது. காலப் போக்கில் அது AD சிங்கள மக்களின் குடியேற்றத்தால் இரு இனங்கள் சேர்ந்து வாழும் கிராமமாக மாறியது. பல தமிழ் குடும்பங்கள் படிப்படியாக பாணமை கிராமத்தைவிட்டு வேறு இடங்களுக்கு சென்றபடியால் அது இப்போது சிங்களப் பெரும்பான்மைக் கிராமமாக மாறி இருக்கிறது. இன்று சுமார் முன்னூறு தமிழ் குடும்பங்கள் இங்கு வாழ்கிறார்கள் என்ற தகவல் சிவரூபனுக்கு கிடைத்திருக்கிறது. அதைவிட அதிர்ச்சி தரும் ஒரு செய்தியும் அவனுக்கு கிடைத்தது.அது. இருக்கும் தமிழர்களும் சிங்களமயமாக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். என்ற செய்தியும், அங்குள்ள தமிழ் முன் பள்ளிகள் மூடப்பட்டு தமிழ் சிறுவர்கள் சிங்களப் பாடசாலையில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சிங்களமொழி கற்பிக்கப்படுகிறது.. இன்னும் மிக கொடுமை அவர்களின் பெயர்கள்கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுகிறது. என்ற செய்தியும் சிவாவை வந்து எட்டியது. 

மேலும் அங்குள்ள தமிழ் பாடசாலையின் மாணவர் வருகை குறைவாக இருக்கிறது. க.பொ.த சாதாரண தரம் வரை உள்ள அந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் வீதம் குறைவாக இருக்கிறது.என்ன காரணம் என்றால் அவர்கள் சிறுவயதிலே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் சிவரூபனுக்கு கிடைத்திருக்கிறது. 

இந்த கிராமத்தின் நலனில் அக்கறை கொண்ட சிலர் எடுத்த நடவடிக்கையினால் நோர்வே நாட்டிலுள்ள ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன் ஒரு முன்பள்ளி தொடங்கப்பட்டு, அதற்கான ஒரு ஆசிரியையும் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது பாணமை தமிழ் பாடசாலையின் ஒரு பகுதியில் அந்த முன்பள்ளி நடத்தப்படுகிறது. இது எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ள நோர்வேயிலிருந்து அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருக்கிறார்.அவர் இன்று அங்கு வருகை தருகிறார்.என்ற செய்தியை ரமேஸ் முன்னரே சிவரூபனுக்கு தெரிவித்து இருந்ததால்தான் அவன் இன்று தன் ஆவணப் படத்துக்கு அங்கு நடக்கும் நிகழ்வுகள் உதவக் கூடும் என்று புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறான். 

மழை இன்னும் விட்டபாடில்லை. ஏறக்குறைய முப்பது மைல்கள் செல்லவேண்டும். ஆட்டோவும் தன்னால் முடிந்தவரை விரைவாக செல்லத்தான் பார்க்கிறது. மழை, அதன் வேகத்தைக் குறைக்கிறது. “உச்சி வெட்டாப்பு” என்று சொல்லுவார்களே. அது உண்மையென்றால் மழை நின்றுவிடும். ஆனால் அதுதான் நடக்கவே இல்லை. 

எப்படியோ தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்துவிட்டான் சிவரூபன். அவர்கள் வருவதற்கு முன்னரே அவன் வந்தது, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரமேஸ், பாடசாலை அதிபர் ஆகியோருக்கு மகிழ்ச்சியே. 

சிவரூபனுக்கு பாணமை கிராமம் புதிதல்ல. உகந்தை மலைமுருகன் உற்சவ காலங்களில் அவன் அந்தக் கோவிலுக்கு செல்வதுண்டு. அதற்கு பாணமைக் கிராமத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். உகந்தை முருகன் தரிசனம் மிக அபூர்வமாக கிடைப்பதொன்று.,மலையும் மலைசார்ந்த இடமும், காடும் காடுசார்ந்த இடமும்,வயலும் வயல்சார்ந்த இடமும், கடலும், கடல்சார்ந்த இடமுமாக நானிலங்களுக்கு மத்தியில் அல்லவா உகந்தை முருகன் இருக்கிறார். இந்த வேல்பெருமானின் புகழ் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு தெரியும். பாணமை மக்களுக்கும் உகந்தை முருகன் கோவிலில் பங்களிப்பு உண்டு. 

பள்ளிக்கூட வாசலில் கார் ஒன்று வந்து நிற்கிறது. அந்தக் கார் எம்.பி யின் கார். ஆம் எம்.பி அவர்களுடன் தான் நோர்வே பிரதிநிதியும் வந்திருக்கிறார். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள். ரமேஸ் ஆகியோர் அவர்களை வரவேற்றுக் கொண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வந்தது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. 

பாடசாலை மண்டபத்தில் எல்லோரும் ஒன்றுகூட, மாணவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். விளகேற்றுதல்,அகவணக்கம் என்ற நிகழ்வுகளுக்குப் பின், அதிபர் பேசினார். 

“எல்லோருக்கும் வணக்கம். நாங்கள் எதிர்பாராமல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வந்தது, எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த பாடசாலையில் நிறைய குறைகள் இருக்கின்றன, அவற்றை எம்.பி ஐயா தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோம், மாணவர் வரவு குறைவாக இருபதற்கு, பெற்றோரும் ஒருவகையில் உடந்தையாக இருக்கிறார்கள். பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பாமால் தங்களோடு வயலுக்கு கூட்டி சில்கிறார்கள். சிலர் வேறு தொழில்களுக்கு அனுப்புகிறார்கள். சிலர் இவர்களை திருமண பந்தத்தில் சின்ன வயசிலே இணைத்து விடுகிறார்கள். இதனால் மாணவர்களின் வரவு குறைவாக இருக்கிறது. மற்றது ஆசிரியர்கள் இந்த பாட்சாலைக்கு வருவதற்கு போக்குவரத்து ஒழுங்கு சரியாக இல்லை. பொத்துவிலில் இருந்து பத்து மணிக்கு முதல், ஒரு பஸ் கூட இங்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்கள் நேரத்துக்கு பாடசாலை வர முடியாமல் இருக்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று கேட்டுக்கொண்டு, நோர்வே பிரதிநிதி பரத்ராஜ் அவர்களை பேச அழைத்தார். 

பரத்ராஜ் தனது உரையில், தங்கள் அமைப்பால் முன்னெடுக்கப்படும் முன்பள்ளி கண்டிப்பாக மேலும் பல வசதிகளையும்,நன்மைகளையும் பெற இருக்கிறது. இந்த எல்லைக் கிராமத்தில் தமிழர்கள் படும் நெருக்குவாரங்கள் ஒழிக்கப்படவேண்டும். தமிழ் பிள்ளைகளை சிங்களப் பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அதை மாற்றி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள சிறுவர் முன்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டும்.அவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும். தமிழ் குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டவேண்டும். ஆசிரியர்களும் உணர்வு பூர்வமாக தங்களுக்கு ஒரு தார்மிக கடமை இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கு போதிக்க வேண்டும். மாணவர்களும் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் கிராமத்துக்காக, இங்கு வாழும் மக்களுக்காக மாணவ சமூகத்துக்காக உதவ முன்வரவேண்டும். அதற்கு நீங்கள் கண்டிப்பாக அக்கறையுடன் படிக்கவேண்டும்.உயர்படிப்பு படித்து,பட்டதாரிகளா வரவேண்டும். நல்லாட்சி நடப்பதாக சொல்லும் நாட்டிலே கடந்தகால கசப்பான அனுபவங்களை புறந்தள்ளி புத்துணர்ச்சியுடன் செயல்பட எல்லோரும் துணிய வேண்டும். தொடர்ந்தும் நோர்வே அமைப்பு தன்னாலான உதவிகளை செய்யும். இந்த மாவட்டத்துக்கு நல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்திருக்கிறார். இவர் ஒரு பொதுத் தொண்டர். கொடைவள்ளல், மக்கள் நலன் விரும்பி, என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர். இவர் உங்களின் அனைத்து விடயங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் எல்லோரையும் சந்தித்தில் மகிழ்ச்சி “என்று முடித்துக்கொண்டார் பரத்ராஜ். 

அடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உரையாற்றினார். அதில் அவர், “நான் இந்த மாவட்டம் முழுதும் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி. எமது தொகுதியில் ஏழு எல்லைக் கிராமங்கள் இருக்கின்றன. முன்பு நான்கு தமிழ் கிராமங்கள் காணாமல் போயுள்ளன. எல்லைக் கிராமங்களில் சகோதர இனத்தை சேர்ந்தவர்களால் எமது மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாக அறியமுடிகிறது. எமது மக்களின் கல்வி வளர்ச்சி அடையாமல் மிக பின்தள்ளப்பட்டு இருக்கிறது.முப்பது வருட போர்ச் சூழலும் இந்த பின்னடைவுக்கு ஒரு காரணியாகும். முன்பு எமது மக்களின் கல்வியை, அவர்களின் உயர்ச்சியை பார்த்து பெருமூச்சு விட்டவர்கள் இன்று எங்கேயோ எட்டாத உயரத்துக்கு போய்விட்டார்கள். அது அவர்களின் திறமை, அல்லது தந்திரோபாயம் அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் என்றும் சொல்லலாம். எது எப்படியோ இனி இந்த எல்லைக் கிராமங்களில் இருக்கும் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். இங்கு இருக்கும் மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நான் கூடிய உதவிகளை, வசதி வாய்ப்புகளை வழங்க இருக்கிறேன். என் சொந்த நிதியிலிருந்து பெருந்தொகைப் பணம் கல்விக்காக வழங்குகிறேன்.புலம்பெயர் சமூகத்தின் உதவியும் இதற்கு கிடைக்க இருக்கிறது. குறிப்பாக நண்பர் பரத்ராஜ் போன்ற பலர் எமது கலை கலாசார கல்வி மேம்பாட்டிற்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். மேலும் இந்த பாடசாலை அதிபர் அவர்கள் குறிப்பிட்ட குறைபாடுகளை நிறைவேற்ற ஆவன செய்வேன்.போக்குவரத்து வசதிக்கான ஏற்பாட்டை உடனடியாக கவனிக்கிறேன்.முன் பள்ளி ஒன்றை இங்கு நிறுவி அதனை நிர்வகிக்கும் நோர்வே கல்வி, தொழில் மேம்பாட்டு பொதுமன்றதுக்கு என் நன்றிகள். நண்பர் பரத்ராஜ் அவர்கள் இங்கு வருவதாக இருந்தபடியால் அவருடன் நானும் வந்தேன். உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி.”என்று முடித்தார். 

மேலும் அங்கு வாழும் தமிழ் மக்களின் அக்கறையில் கூடிய கவனம் எடுக்கும் பாதர் பெஞ்சமின், ஆன்மிக பேச்சாளர் ராஜகுரு அவர்களும் உரையாற்றினார்கள். 

அங்கு நடந்த அத்தனை நிகழ்வுகளையும் தன் ஆவணப் படுதுக்காக பதிவு செய்துகொண்டான் சிவரூபன் முடிவில் எல்லோரும் முன்பள்ளி சென்றார்கள். சிறுவர்களைப் பார்த்தார்கள். பரத்ராஜ் மிகவும் ஆர்வமாக இருந்தார். எம்.பியும் அவரும் முன்பள்ளி ஆசிரியையுடன் பேசினார்கள். “எப்படி டீச்சர் பிள்ளைகள் ஒழுங்காக வருகிறார்களா?” எம்பி கேட்டார். 

“கொஞ்சம் கஷ்டம்தான் சார். அதுவும் இன்று மழை,வெள்ளம் என்றவுடன் வரவு மிக குறைவாக இருக்கிறது. நானும் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். அவர்கள் எதிர்காலம் நல்லா இருக்கும். நாங்க நல்லமாதிரி சொல்லிக் கொடுக்கிறோம் என்று. ஆனால் சில பெற்றோகள் இன்னும் உணர்வதாக தெரியல்ல. போகப்போக சரிசெய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கு சார்” 

‘நிச்சயமாக டீச்சர் உங்கள் அக்கறையும், அர்ப்பணிப்பும்தான் இவர்களுக்கு அவசியம்.அதீத சிரத்தை எடுத்து இந்த முன்பள்ளியின் மாணவர்களின் வரவை கூட்டுங்க. உங்களுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்தித்தர எங்கள் அமைப்பு தயாராக இருக்கிறது.” என்று பரத்ராஜ் சொன்னார். 

“கண்டிப்பாக டீச்சர் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உங்களின் சம்பளமும் அதிகரிக்கும்.” என்றார் எம்.பி சிரித்துக்கொண்டே. 

குழந்தைகள் பாடல்கள்,திருக்குறள், எல்லாம் பாடியும் சொல்லியும் காட்டினார்கள். 

சிவரூபனின் கமரா அந்த அழகிய சிட்டுக்களை படம்பிடித்துக்கொண்டது. 

அவனின் ” எல்லைக் கிராமங்களின் தொல்லைகள்” என்ற ஆவணப் படம் நன்றாக அமைய வாழ்த்துகள் சொல்லி அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். 

மழை இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *