எல்லைக்கு அப்பால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 9,092 
 

ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. அடுத்தவருடம் நான்காம் வகுப்பு! உமா டீச்சரின் வகுப்புக்குப் போக வேண்டும்.

“ஏ பட்டு.. அங்க போவாத!” “அதைச் செய்யாத!” “அண்ணன் கூட சண்ட புடிக்காத!” “பள்ளிகூடம் போகனும் சீக்கிரம் எந்திரி!”

போன்ற வசனங்கள் அல்லாத சலனமற்ற அந்த வேளையில் காற்றாடி சுழலும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அருகே படுத்திருந்த அம்மாவைத் தாண்டி எட்டிப்பார்த்ததில் அனைவரும் சரி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது உறுதிபட்டது. ஓசைப்படாமல் பாயை விட்டு எழுந்து நகர்ந்து தார்சாவிற்கு வந்தேன். அம்மா திரும்பிப் படுக்கும் அசைவு கேட்டது. கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை என்னைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக ஆட்டு உரலின் பக்கம் உட்கார்ந்து குளிர்ந்து போயிருந்த அந்தக் குழியின் உள்ளே கிடந்த சிறுகுப்பைகளைத் துடைத்துவிட்டவாறே என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு பாலித்தீன் பையில் காய்ந்துபோன பழைய மருதாணி இலைகள் தீபாவளிக்கு வைத்தது போகக் கொஞ்சம் மீதமிருந்தன. இதேபோல் ஒரு நாள் காய்ந்துபோன மருதாணி இலைகளைக் கைகளில் அப்பிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கருங்கல்லில் உரசி அரைத்துக் கொண்டிருந்தபோது “இதெல்லாங் கையில பிடிக்காதுல” என்று அப்பா சொன்னதையும் மீறி அசடுவழிந்துகொண்டே ஒரு மணிநேரம் கைகளில் வைத்துவிட்டு எடுத்தபோது அவர் சொன்னதுபோலவே அதில் ஒன்றுமே பிடித்திருக்கவில்லை. வாசம் கூட இல்லை.

மெதுவாக நகர்ந்து பூனைநடை நடந்து தாழ்ப்பாளை விலக்கினேன். மெல்ல கதவைத் திறந்து மீண்டும் சத்தமில்லாமல் சாத்திவிட்டு வாசற்படிகளைத் தாண்டி வெளியே முற்றத்திற்கு வந்து நின்ற போது உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது.

வேப்பமர நிழலில் நிறுத்திவைக்கப்பட்ட சக்கரவண்டியில் பரமசிவம் தாத்தா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பெருமாள் கோவில் பக்கத்தில் இருக்கும் அடிபம்பில் தண்ணீர் எடுப்பதற்காகக் குடத்தை இடுப்பில் வைத்தவாறே நடந்துசென்ற வளர்மதி அக்கா என்னைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள். இன்னும் தாவணி பாவாடை தான் உடுத்திக் கொண்டிருந்தாள். கல்யாணம் ஆனபிறகு எல்லாரும் சேலை தான் உடுத்துவார்கள். “வளரு பிள்ளைக்கு மாப்ளையே அமைய மாட்டேங்குதாம்” என்று அம்மா ஒரு நாள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்து கவலையூட்டியது. ஆனால் கல்யாணம் ஆகும்வரை தான் இந்த ஊரில் இருக்கமுடியும். சுந்தரம் அத்தான் கனகா அக்காவை வேறு ஊரிலிருந்து அழைத்துவந்ததைப் போல இவளையும் வேறு ஊருக்கல்லவா அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டே நான் மெதுவாக சொசைட்டி பால் பண்ணையைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.

என்ன செய்யலாம் என்ற எண்ணம் மனதில் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தொழுவத்திற்குப் போவோம். அம்மா கேட்டால் ஆச்சியைத் தான் பார்க்கப் போனேன் என்று சொல்லிவிடலாம். அடி விழாது. அங்கே குவித்து வைத்திருக்கும் ஆற்றுமணலில் கொஞ்சம் விளையாடிவிட்டு அப்படியே பூவரச இலைகளில் பீப்பீ செய்து ஊதலாம். அதுவும் கொஞ்ச நேரம் தான். பீப்பீ முழுவதும் ஊதி ஊதி எச்சிலானபின் தூர தான் போட முடியும். அப்புறம் அந்த ஏழிலைக் கிழங்குச் செடியில் இலை முளைவிட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஒரே இலையில் ஏழு கிளைகள் போல இருக்கும் என அறிவியல் டீச்சர் சொல்லியிருக்கிறார். எப்படா அந்தச் செடி வளரும் என்று இருந்தது. கொஞ்ச தினங்களுக்கு முன் செத்துப் போன எங்கள் வீட்டு நாயை அப்பாவும் அண்ணனும் குழி தோண்டி அந்தத் தோட்டத்தில் தான் புதைத்திருந்தனர். அதற்கு அருகில் தென்னை மரம் வைத்தால் செழிப்பாக வளருமாம். அதையும் பார்க்க வேண்டும். மாட்டுக் கொட்டகைக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தான் ஆச்சி ஒரு வயர்க்கட்டிலில் படுத்திருப்பாள். எப்படியும் கொஞ்சம் பழைய கஞ்சி ஒரு தூக்குப்போனியில் தொங்கவிடப்பட்டிருக்கும். ஆச்சியிடம் கருவாடு கேட்டால் ஆசையாக அடுப்புத் தனலில் போட்டுச் சுட்டு ஒரு பழைய காகிதத்தில் வைத்துத் தருவாள். நினைத்துப் பார்க்கையிலேயே வாயில் நீர் சுரந்தது. எதுவும் இல்லையென்றால் கூட அஞ்சறைப் பெட்டியில் புளி வைத்திருப்பாள். உப்பைத் தொட்டுத் திங்கலாம்.

நான் அங்கே போய்ச் சேர்ந்தபோது ஆச்சி சற்றே வாயைத் திறந்து வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். கூரையில் இருந்த ஓடுகளின் வழியாக வெப்பம் இறங்கிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் அங்கே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் குளவி எங்கேயெனத் தேடினேன். மெதுவாகச் சென்று அவளருகில் இடுங்கிக் கொண்டு படுத்தேன். தலைக்கு வைக்கப்பட்டிருந்த அவளின் பழைய சேலையில் இருந்து எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வாசனை வந்தது. முகத்தை அதில் வைத்து அழுத்திக் கொள்ளவும் அவள் விழித்துக்கொண்டாள்.

“கஞ்சி குடிக்கியாத்த?”

“வேண்டாச்சி.. நான் வீட்டுலயே சாப்டுட்டேன்”

சரி என்று சொல்ல தயக்கமாக இருந்தது. நான் எழுந்துபோய் அஞ்சறைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். மரத்தால் செய்யப்பட்டிருந்த அதில் நான்கு பக்கமும் சின்ன சின்ன சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த அழகே அழகு. பனைமரத்து நுங்கின் ஓட்டில் கூட இதேபோல் சக்கரம் வைத்து வண்டி செய்து ஓட்டலாம். உள்ளே மிளகாய் வற்றல் தவிர ஒன்றுமில்லை. பெருங்காய வாசனை மட்டும் வீசிக்கொண்டிருந்தது. மூடிவைத்துவிட்டு எழுந்து நடந்து வெளியே வந்தேன். வாசலுக்கருகே படர்ந்திருந்த மஞ்சநெத்திச் செடியின் காய்களைப் பறிக்கலாமா என யோசனை வந்தது. இப்பொழுது பறித்து மண்ணில் புதைத்துவைத்துவிட்டால் இன்னொருநாள் அண்ணனுடன் சேர்ந்து தோண்டி எடுக்கையில் பழங்களாக மாறியிருக்கும். ஆனால் அது எங்கள் மரமில்லை என்றும் பக்கத்து வீட்டு சுதாவிற்குச் சொந்தமான மரமென்றும் அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. வேண்டாமென முடிவு செய்து ‘ஓம்’ கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன்.

தொழுவத்திற்குப் பின்னால் இருக்கும் அந்தப் பிரம்மாண்டமான புளியமரத்தடிக்குப் போக வேண்டும் எனத் தோன்றியது. அந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்றே அப்போது தெரியவில்லை. புளியமரத்துக்கு அப்பால் ஒரு குளம் இருப்பதாகவும் அங்கேயெல்லாம் போகக் கூடாது என்றும் ஆச்சியும் அம்மாவும் அடிக்கடிச் சொல்லி நான் கேட்டிருந்தேன். பொங்கலுக்கு மறுநாள் அந்தக் குளத்திலிருந்து தாமரைப்பூக்களையும் அல்லிப்பூக்களையும் பறித்து வந்து அவற்றின் தண்டுகளை விட்டு விட்டு ஒடித்து மாலை செய்து கழுத்தில் போட்டுக்கொண்டால் குளிர்ச்சியாக அழகாக இருக்கும். வாடிப்போன பின் தாமரைப்பூவின் நடுவில் இருக்கும் அந்த மஞ்சள் பகுதியைத் தின்றுவிடலாம். உடம்புக்கு நல்லதுதான். ஆனால் அல்லிப்பூவை அப்படிச் செய்யக்கூடாது என்பார்கள். விஷம் போல..

மெல்ல நடந்து மாடசாமியின் வீட்டைக் கடந்து பின்னே இருக்கும் புளியமரத்தடிக்கு வந்துவிட்டேன். அம்மம்மா.. எவ்வளவு பெரிய மரம்! கீழே விழுந்துகிடக்கும் புளியங்காய்களுக்காகக் கண்கள் அலைந்தன. ஒரு புளி கூட மிஞ்சாத அளவிற்கு அந்தத் தாத்தா எப்பொழுதும் கூட்டிப் பெருக்கிவிடுவாரோ என நினைத்துக் கொண்டிருந்தபோதே தலையில் பொத்தென்று ஒன்று விழுந்தது. விழுந்ததை எடுத்து ஒட்டியிருந்த மண்ணைச் சட்டையில் துடைத்துவிட்டு உடைத்துத் தின்ன ஆரம்பித்தேன். புளியங்காயின் புளிப்பு கின்னென்று உச்சிமண்டைக்கு ஏறியது. இன்னும் சற்று நடந்து செல்லவே அந்தப் பகுதி முடிந்து இடையே ஒரு சிறிய ஓடை செல்லும் அளவிற்கு இடம் இருந்தது. தண்ணீர் இல்லை. ஆனால் ஒரே சகதி மற்றும் முள்செடிகள். கால் வைத்தால் தொலைந்தோம். சுற்றிப்பார்த்தால் ஒரே மரங்கள். தலைக்கு மேலே ஒரு ஆலமரம் வேர்கள் தொங்கத் தொங்க மிகப் பெரிதாகப் படர்ந்து இருந்தது. பக்கத்தில் எப்பொழுதோ யாரோ ஊஞ்சல் கட்டி ஆடியிருக்க வேண்டுமென அங்கேயிருந்த சில தடங்கள் உணர்த்தின. ஓடை மேலே செல்லவிடாமல் தடுத்துவிடவே மெதுவாக அதன் கரையிலேயே சற்று தூரம் நடந்து வந்து பார்த்தால்.. ஹா! அந்தக் குளம்!

படர்ந்திருந்த மரக்கிளைகளின் ஊடே பளிச்சென்ற சூரிய வெளிச்சத்தில் பளபளத்த அந்தத் தாமரைக் குளம் கண்ணில் பட்டது. அய்யோ.. எத்தனைத் தாமரைகள்! குண்டு குண்டாக. கரையின் ஓரத்திலே கூட சில ஒதுங்கி இருக்கின்றன. முள் பார்த்து நடந்து அருகே சென்றேன். ஒரு விதக் குளுமை உடலில் பரவிச் சிலிர்க்கவைத்தது. பக்கத்தில் இருந்த ஒரு நெடிய கம்பை எடுத்துக்கொண்டேன். உள்ளே சற்று இறங்கி கொஞ்சம் மெனக்கெட்டு முயன்றால் மூன்று தாமரைகளாவது கிடைக்கும். பார்த்துக் கொண்டே முதல் அடியை வைத்தேன். ‘சுருக்’கென ஒரு முள் காலைத் தைத்தது.

வலியில் உயிர் போகக் கம்பை அப்படியே கீழே போட்டுவிட்டுக் காலை மடக்கி உயர்த்திப் பார்த்தேன். கண்களைச் சிக்கென மூடியவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு முள்ளைப் பிடுங்கி அதன் முனையைக் கடித்து ஓர் ஓரமாய்ப் போட்டேன். காலில் குருதி நிக்காமல் கசிந்துகொண்டேயிருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் திரும்ப நடந்துவந்து சிவப்பு நிறத்தில் வடிந்து கொண்டிருந்த பாதத்தைப் புழுதி மண்ணில் வைத்து அழுத்தினேன். வலி சற்று குறைந்தது போலவும் அந்த வலியே ஒரு சுகமாகவும் இருந்தது. தாமரைக் கனவுகளைக் கைவிட்டுவிட்டு மெல்ல நடந்த போது தான் தென்பட்டது அது!

ஓடைக்கு அந்தப் பக்கம் இருந்த பெரிய மரங்களுக்கு ஊடே தெரிந்தது ஒரு வீடு. ஆள்நடமாட்டம் இருந்ததுபோல் தோன்றவே அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியென்றால் இந்த ஓடையைக் கடப்பதற்கு வழி இருக்கத்தான் வேண்டும். அங்கும் இங்குமாக நடந்ததில் ஒரு சிறிய பாலம் பலகையினால் அமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அது யார் வீடாக இருக்கும்? அம்மா இங்கே தான் வரவேண்டாம் என்று சொன்னாளோ? போய்ப் பார்த்துவிட வேண்டியது தான். பலகையில் கால்வைத்து ஓடைக்குக் குறுக்காக நடந்து அந்தப்பக்கத்தை அடைந்தேன். சில குப்பைகளைக் கடந்து நடந்துவந்தால் மிகவும் சுத்தமாகப் பெருக்கி வைக்கப்பட்டிருந்தது அவ்வீட்டின் முற்றம். அட! கொடுக்காப்புளி மரம். பெரிய மரமாக இருக்கிறது. நிச்சயம் வெள்ளையும் சிவப்புமான இனிப்பான பழங்கள் கிடக்கும் என யோசித்தவாறே வீட்டை நோட்டம் விட்டேன். ஓட்டு வீடு அது. வெளியில் விறகடுப்பு மூட்டப்பட்டு உலையில் அரிசி கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த அடுப்பில் ஒரு மண்சட்டியில் கத்திரிக்காய்க்கறி மாதிரி மஞ்சளாய் ஏதோ வெந்து கொண்டிருந்தது. கிளர்ந்துவந்த வாசனை எனக்குப் பசியைக் கிளப்பியது. திடுமென உள்ளேயிருந்து அரக்கு நிற பாவாடைச் சட்டையில் என்னைவிட நான்கைந்து வயது அதிகம் மதிக்கத்தக்க ஒரு பெண் வெளியே வந்தாள். ‘அட! இவளை அதற்கு முன் நம் ஊரில் பார்த்ததே கிடையாதே’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் யார் என்று கேட்பதுபோல் வீசிப்பட்ட அவள் பார்வை வேறு பக்கமாய்த் திரும்பியது. மெலிந்த தேகத்துடனும் கலைந்த சேலை இரவிக்கையுடனும் வெளியில் அலைந்து கறுத்துப்போன ஒரு உருவம் விறகு வெட்டிக் கொண்டு வந்திருந்தது. அவள் இவளுடைய அம்மாவாக இருக்கலாம். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. முகத்தைக் கடுகடுவென வைத்திருந்த இரண்டாமவள் விறகுகளைக் கட்டு பிரித்து அடுக்கத் தொடங்கினாள்.

அவர்கள் என்னிடமும் ஒன்றுமே பேசாதது மிகவும் வினோதமாக இருந்தது. நான் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டுக் கொடுக்காப்புளி கிடைக்குமா எனத் தேடத் துவங்கினேன். கொஞ்ச நேரம் கழித்துச் சோறு வடிக்கும் வாசனை வரவே திரும்பிப் பார்த்தேன். ஒரு அலுமினியத் தட்டில் சோற்றைப் பரிமாறிவிட்டு அந்தக் கத்திரிக்காய்க்கறியை மேலே ஊற்றிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். கையில் ஒன்றிரண்டு கொடுக்காப்புளியுடன் நான் மிகவும் அருகில் போய் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் இருவரும் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. நான் தைரியமாக அந்த முற்றத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமரப்போனேன். சுரீரென வந்து விழுந்தது ஒரு குரல்..

“எங்கள ஊரவுட்டு ஒதுக்கியிருக்கு. பொய்யிரு”

வெறுங்காலுடன் பொடிநடை கட்டிய என்னைக் கொடுக்காப்புளி மரக்கிளைகளின் வழியே விழுந்து வாட்டிக் கொண்டிருந்த அந்த வெயிலின் வெப்பமோ காலைக்குத்திய அந்த முள் ஏற்படுத்திய வலியோ பாதிக்கவேயில்லை. நினைவு திரும்பியதுபோல் இருந்தபோது நான் வீட்டில் அம்மாவுக்கு அருகே அவளை உரசிக்கொண்டு படுத்திருந்தேன். காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *