எல்லாமே மாறிப்போச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 753 
 
 

அண்ணே கந்தசாமி அண்ணே எப்படி இருக்கறீங்க?

யாருது தம்பி அங்கமுத்துவா? நீ எதுக்கு தம்பி இங்க வந்தே, நீ எல்லாம் இங்க வரக்கூடிய வயசா தம்பி.

எண்ணன்னே இப்படி சொல்றீங்க, உங்களை விட இருபது வருசம் கம்மியா இருப்பேன் அவ்வளவுதான், ஆனா எல்லா இழவு வியாதியும் இந்த வயசுக்குள்ளே வந்துடுச்சே என்ன பண்ணறது?

அதுதான் தம்பி எங்க காலத்துல எல்லா விஷயத்துலயும் நிதானமா இருந்தோம், உங்க காலம் அப்படியா?

அதை ஏன் கேக்கறீங்க? எல்லாத்துலயும் அவசரம், அவசரம், இப்பவெல்லாம் வீட்டுல சமைச்சு சாப்பிடறதுக்கு கூட நேரமில்லாம நாங்க எல்லாம் ஹோட்டல்லயோ, இல்லை தெருவோர கடைகள்ளயோ முடிச்சுட்டு வீட்டுக்கு போயிடுவோம்.

எங்க காலத்துலயும் இந்த பழக்கம் இருந்தது தம்பி, யாராவது வீட்டுக்கு வந்தா பக்கத்து கடையில போய் டீ வாங்கிட்டு வருவோம், எங்க தெருவுல, இல்ல பக்கத்து தெருவுல இருக்கறவங்க வீட்டுல சுட்டு வைக்கற இட்லி, ஆப்பம், தோசை இதுவெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து பொறுமையா பங்கு போட்டு

சாப்பிடுவோம், விக்கறவங்க எங்க தெரு, இல்லையின்னா பக்கத்து தெரு அப்படீங்கறதுனால கொஞ்சம் சுத்த பத்தமா இருக்கும்.

இல்லை அண்ணே நாங்க அப்படி இல்லை, எங்க தெருவுல வாங்கி சாப்பிட்டா கெளரவ குறைச்சல்னு பஸ் ஸ்டாண்ட் பக்கம், மெயின்ரோடு இதுல போடற கடைகள்ள உட்கார கூட இடமில்லாம நின்னுகிட்டே சாப்பிடுவோம், அது மட்டுமில்லையின்னே இப்ப பர்கர், அப்புறம் கோழிய அப்படியே மசால் தடவி தீயில சூடு பண்ணி ஆ..அதுக்கு என்ன பேரு கிரில்லர், அப்புறம்…பேல் பூரி, பான் பூரி இப்படி நிறைய அயிட்டமெல்லாம் வந்திருச்சு, உங்க காலம் மாதிரி எல்லாம் இட்லி, ஆப்பம், பனியாரம்,குழா புட்டு, அரிசி புட்டு, அதுவெல்லாம். இப்ப காணறதே இல்லை.

நாங்க இப்படி ரோட்டுல சாப்பிடும் போது ஒரே ஒரு குறை அங்க போற வர்ற வாகனங்களோட புகையையும், தூசியும் சேர்த்து சாப்பிட்டிடுவோம்.

அண்ணே இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு, எங்க பாத்தாலும் பசுமையா, கண்ணுக்கு குளுமையா, நாம கூட காத்துலயே மிதக்கற மாதிரி, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே.

தம்பி ரொம்ப சந்தோசப்பட்டுக்காதே, வேளை வந்தா நம்மளை இங்கிருந்து அனுப்பிச்சிடுவாங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உங்கப்பா போனாரு

அண்னே எங்கப்பாவ பாத்தீங்களா? எப்படி இருந்தாரு, நல்லா இருந்தாரா?

ஏன் தம்பி அவர்கிட்டே இதே பாசத்தை அங்கே காண்பிச்சிருந்தா அவரு ஏன் அவ்வளவு சீக்கிரம் இங்க வரப்போறாரு, பாவம் மனுசன் உன்னை பத்தி ரொம்ப வருத்தப்பட்டாரு அப்படியா தம்பி உங்கப்பாவையும், அம்மாவையும் கவனிக்காம இருப்பீங்க?

அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க, வீட்டுல சம்சாரமா? மாமியாரா? இவங்க இரண்டு பேருல யாரை சமாதானப்படுத்தறது. இப்படி இவங்க இரண்டு பேர் நடுவுல நான் மாட்டிகிட்டு அதை தீர்க்கறதுக்கு கடைசியா அவங்களை ஒதுக்க வேண்டியதா போச்சு, கடைசியில இங்க வர்றதுக்கு முன்னாடி கூட அக்கம் பக்கம் எல்லாம் என்னைய குறை சொல்லிகிட்டே இருந்திருக்காரு. நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க?

பேசுவீங்க தம்பி பேசுவீங்க, அவர் இங்கிருந்து போகும்போது என்ன சொன்னாரு தெரியுமா? இந்த மனுச ஜென்மம் எடுத்து நாயா சீரழியறதை விட நாயா பிறந்து நாயாவே வாழ்ந்து இறந்துட்டா கூட ரொம்ப சந்தோசப்படுவேன்னு சொல்லிட்டிருந்தாரு. அநேகமா அவர் சொன்னதை செஞ்சிட்டிருப்பாரோன்னு கூட தோணுது.

எங்க அம்மாவ பத்தி ஒண்ணும் சொல்லமாட்டேங்கறீங்க,

உங்க அம்மா எதுவும் பேசலை, எனக்கு இந்த மனுச ஜென்மமும் வேண்டாம், ஒரு ஜென்மமும் வேண்டாம் அப்படீன்னு சொல்லிகிட்டிருந்தது, ஆனா விடுவாங்களா, அனுப்பிச்சிட்டாங்க.

எண்ணன்னே அநியாயமா இருக்குது, இங்க நடந்துக்கற அராஜகமான முறை. ஒருத்தனோட சுதந்திரத்தை பறிக்கற கொடுமை.

வேணாம் தம்பி இங்கயும் வந்து நம்ம மனுச அரசியலை காட்டாதீங்க.. இங்க யாரும் யாரையும் அதிகாரம் பண்ண முடியாது, பூமியில உங்க கடமை முடிஞ்சு இங்க வந்துட்டா ஓய்வு எடுத்துட்டு இருக்கணும், அடுத்து வரிசையா பூமியை நோக்கி போய்க்கிட்டே இருக்கணும். புரியுதா? நீங்க இப்பத்தான வந்திருக்கீங்க, நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம். நான் எப்பவேனா பூமிக்கு கிளம்பிடுவேன்.

அங்க என்னவாண்னே பிறப்பீங்க?

அது தெரியாது தம்பி, பாம்பா, பல்லியா, மனுசனான்னு, எதுவா இருந்தாலும் போய்கிட்டே இருக்கணும் அவ்வளவுதான்..சொல்ல சொல்ல அவர் அப்படியே மறைந்து கீழ்நோக்கி செலவதை பார்த்துக்கொண்டிருந்தான் அங்கமுத்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *