எருமைக் கடா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 106 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டில் இருந்து நெடுந்தொலைவு இருந்தது அந்த வயல். ஆற்றில் வெள்ளம் இல்லாமல் இருந்து, இறங்கிக் குறுக்கே நடந்தாலும்கூட ஒன்றரைக் கற்கள் இருக்கும். திருவெண்பரிசாரம் போகும் சாலையில் தேரேகாலை ஒட்டி நடந்து, பொன்னையா பணிக்கர் தென்னந்தோப்பு தாண்டி, ஆற்றுத் தடத்தில் இறங்கி மறுகரை ஏறி, வயல் வரப்போடு போக வேண்டும். அந்த இடத்தில் ஆறு நல்ல பள்ளம். சாரத்தை எப்படித் தூக்கிச் சுருட்டிக்கொண்டு நடந்தாலும் பயனில்லை. உபயோகமான தோர் வழி, அங்குமிங்கும் ஆள் பார்த்து, சாரத்தை வயிற்றுக்கு மேல் சுருட்டிவிட்டுத் தண்ணீரில் இறங்கி விடுவதுதான். தற்செயலாகப் பார்த்த கோனார் பாட்டா ஒரு நாள் கேட்டார்,”என்னலே, தம்பிக்கு தண்ணி காட்டுகியா?” என்று. தண்ணீர் மட்டம் உயர உயரத் தூக்கிக்கொண்டு போய், இறங்க இறங்க தாழ்த்திக்கொள்ள வேண்டும். ஒக்கச் சிரித்தால் வெட்கமில்லை. அல்லது ஆற்றில் இறங்காமல், சாலையில் நடந்து, விவசாயப் பண்ணை வந்ததும் பாலமேறித் திரும்பி, வீமநேரி சாலையில் சற்றுத்தூரம் நடந்து, மறுபடியும் பத்துக்காட்டில் இறங்க வேண்டும்.

அங்கு போய் ஏன் வயல் பார்த்தார் அப்பா என்று அவனுக்குத் தோன்றும். கைக்கெட்டும் தூரத்தில் இருந்த வயல்களுக்கெல்லாம் நல்ல விலை இருந்தது. ஒரு குமர் கரையேற ஒரு வயல் விலையாயிற்று. கல்யாணம் மட்டுமல்லாமல் சீர் சிறப்பு, பொங்கல்படி, பிள்ளைப்பேறு என பெண்ணைப் பெற்றவன் பாடு பெரும்பாடு. கடைசியில் அப்பா பங்குக்கு சாஸ்தா கோயில் வயல் மட்டும் நின்றது.நல்லேர் பூட்டவும், நாள் வித்துப் பாவவும், நாட்கருது கொள்ளவும், புத்தரிசி உண்ணவும் விவசாய சம்பத்துக்களின் எச்சம்.

வீமநேரிப் பார்ப்பனர்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோயில். திறந்த வெளியில் காற்றுக்கும் மழைக்கும் வெயிலுக்கும் இடிமின்ன லுக்கும் அந்த வழியாக நடமாடும் மனிதர்களுக்கும் அஞ்சாத சாஸ்தா. சுற்றுக்கட்டுச்சுவரினுள் நாலைந்து அரளி மூடுகள். செவ்வரளி, தங்கரளி, வெள்ளரளி. ஆளாக முயன்றுகொண்டிருக்கும் ஆடு கடித்துத் துப்பிய அரசு. புதரும் அல்லாத மரமும் அல்லாத புங்கு. சாஸ்தா சந்நிதிக்குப் போகும் காலடித் தடம் தவிர எங்கும் புற்களும் புதர்களும். எருக்கலை, பீநாறி, குருக்கு,கருநொச்சி, பேய்த்துளசி, வெள்ளுமத்தை, பெருந் தும்பை… சாஸ்தாவின் வெளிச்சுற்றுச் சுவரைத் தெற்கெல்லையாகக் கொண்டது அவன்வயல்.

தூரம் கருதி, கதிர் முற்றிய வயலை அறுக்க, அறுப்புக்காரர்கள் இலேசில் வருவதில்லை. வந்தாலும் அறுத்து, அரிகாய விடுவதில்லை. அறுத்து விழுந்தவுடன் அரி வாரிக்கட்டி, நெட்டோட்டமாய்க் கொண்டு களம் சேர்த்துவிடுவார்கள். பண ஏர்க்காரர்கள் பிடிக்க அப்பா நிரம்ப சிபாரிசு செய்ய வேண்டும். ஏர் கிடைக்காமல் ஒற்றை ஏரை வைத்துக் கொண்டு பதினான்கு மரக்கால் விதைப்பாட்டை உழுது, மறுத்து, முச்சால்வைத்து, மரமடித்து மொழுக்கி, பொழித்தட்டி…

விற்றுத் தொலைத்துவிட்டால் ஓராண்டு காலாட்டிக்கொண்டு தின்னலாம். அடுத்த ஆண்டில் சோற்றுக்கு விலையரிசி வாங்க வேண் டும். யாருக்காவது உழப் போக வேண்டும். சிலசமயம் சங்கப்புல வனுக்கு யானை பரிசில் கிடைத்ததெனத் தோன்றும்.

அம்மாவும் பிள்ளையுமான எருமையையும் தொழுப்பிறப்பு கிடாக் கன்றையும் பத்திக்கொண்டு, தோளில் கலப்பை, நுகம், மண்வெட்டி, துடைக்கயிறு, வடக்கயிறு சகிதம் அவ்வளவு தூரம் நடந்து போவார் அப்பா. எருமை அதட்டலுக்குப் பணியும். கிடாக்கன்றுக்கு எதுவும் பொருட்டில்லை. சாலையில் இருந்து புல் மேய ஆற்றங்கரைக்கு இறங்கி விடாமல், அடுத்தவர் பயிரில் இரண்டு வாய் கடித்துவிடாமல் ஓட்டிக் கொண்டு போகவேண்டும்.

அப்பா ஏர்கட்டி இரண்டு சால் அடித்து முடியுமுன் அம்மா கஞ்சி கொண்டு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். கைப்பிள்ளையை இடுப் பில் தூக்கிக்கொண்டு, சோற்றுப் போணியை கையில் பிடித்துக் கொண்டு, பிள்ளையும் நனையாமல், சோற்று வாளியும் நனையாமல், உடுத்திருக் கும் கண்டாங்கியும் நனையாமல் ஆற்றைக் கடப்பது எளிதான காரியம் அல்ல.

ஆனியாடிச் சாரலில் அல்லது ஆவணிப் பருவ மழையில் தேரேகால் பொங்கிப் பூரித்துச் சிவந்து கலங்கிப் பிரவகிக்கையில் விவசாயப் பண்ணை பாலமும் சுற்றித்தான் ஆகவேண்டும்.

அம்மாகஞ்சி கொண்டுபோகும் நாட்களில் ஆற்றங்கரை ஓரமாய்க் காடு பிடித்து வளர்ந்திருக்கும் கொடுப்பைக் கீரையை வாளி நிறைய ஆய்ந்து வருவாள். எவ்வளவு தேங்காய் துருவிப்போட்டு வைத்தாலும் அவனுக்கு கொடுப்பைக்கீரைத் துவரன் பிடிக்காது. சூடு பறக்கும் முதல் சோற்றில், கொடுப்பைக்கீரைத் துவரன் போட்டு அப்பா பிசைந்து தின்பதைக் காண வியப்புத் தோன்றும்.

அப்பாவுக்குப் பிடித்த பல பதார்த்தங்கள் அவனுக்குப் பிடித்த தில்லை. உதாரணத்துக்கு வெண்டைக்காய் அவியல், பூசணிக்காய் கூட்டுக்கறி, அவித்துத் தாளித்த உளுந்து…

சோற்றுப்பானையில் கிடக்கும் பழையதையும் நாரத்தங்காய் ஊறு காயையும் காலையிலேயே குடித்துவிட்டுப் போய்விட்டால் அம்மா வுக்கு ஒரு அலைச்சல் மிஞ்சும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அம்மாவுக்கு வெறும் வயிற்றில் நீத்தண்ணி குடிக்கத் தரும்போது இது தோன்றாமலா இருக்கும்?

சனி,ஞாயிறு என்றால் கஞ்சி சுமக்கும் வேலை அவனுக்கு. உப்புப் பரலும் பச்சை மிளகாயும் கைகொண்டு பிசைந்து கலந்த பழையதுக்கு பழங்கறியைத் தொட்டுக்கொண்டு அவர் சாப்பிடக் காண அவனுக்கும் பசி எடுக்கும். சோற்று வாளியையும் தண்ணீர் வாளியையும் ஓடைத் தண்ணீரில் அலசிக் கொடுப்பார். அதற்குள், தனிமைச் சிறை இருக்கும் சாஸ்தாவை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு வருவான்.

வானம் கறுத்துக்கொண்டு வந்ததோர் மழை நாளில், சாஸ்தா சிலைக்குப் பின்னால் காடடைந்து கிடந்த வாடாமல்லிப் புதரில், எட்டி யெட்டி வாடாமல்லிப் பூக்கள்பறித்துக்கொண்டு நின்றபோது, பென்சில் கனத்தில், நல்ல பாம்புக் குஞ்சொன்று படம் காட்டி எழுந்தது.பறித்த பூக்களை விட்டெறிந்துவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்தவன் அப்பாவிடம் சொல்லவில்லை.

உளுந்தங்கஞ்சியும் எள்ளுத்துவையலும் கருப்புக்கட்டியுமோ, சுடுகஞ்சியும் சிறுபயிறு துவரனுமோ கொண்டு போகும்போது அப்பா அவனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைப்பார். உளுந்தங்கஞ்சி, உளுந்தஞ் சோறு,உளுந்தங்காடி, உளுந்தங்களி எல்லாம்தான் வெள்ளாளன் வீட்டுப் பலகாரங்கள்.

ஒரு ஆடிக் கொந்தலில் எருமை ‘சங்கடைப்பான்’ வந்து செத்துப் போயிற்று. வாய்விட்டு அம்மா அழுததை அன்று பார்த்தான். அப்பாவின் அழுகை வெறித்த பார்வையில் கரந்திருந்தது.

எப்போது அந்த எருமை தொழுவுக்கு வந்தது என்று அவனுக்கு ஞாபகம் இல்லை. ஞாபகம் முதலே தொழுவத்தில் கிடந்தது.பெருஞ் சினையாக இருக்கும்போதும் கறவையில் இருக்கும்போதும் அதைக் கலப்பையில் கட்டுவதில்லை.

எண்ணெய் மினுமினுக்கும் கறுப்பு. தரை நோக்கிய வாத்தியம் போல் தாழ்ந்திருக்கும் கூழைக் கொம்புகள். எத்தனை அடி கொடுத் தாலும் தன் திட்டத்தில் மாறாத மந்த நடை.

அவனறிய இரண்டு மூன்று கன்றுகளை அது சாகக் கொடுத் திருக்கிறது.கிடாக்கன்று மாத்திரம் தப்பிப் பிழைத்தது போலும். எருமை யாரையும் பாய்வதோ முட்டுவதோ இல்லை. வாழைப்பழத் தோலை முன்னால் காட்டினால் நாக்கைச் சுழற்றி வாங்கிக்கொள்ளும். அளியில் கட்ட வேண்டும் என்றோ அவிழ்க்கவேண்டும் என்றோ நிர்ப்பந்தம் இல்லை.

உழவு வேலை இல்லாத நாட்களில் மாலையில் பள்ளி விட்ட பிறகு ஆற்றங்கரையோரம் புல்கரம்ப ஒட்டிக்கொண்டு போயிருக்கிறான். விடுமுறை நாட்களானால் வெயிலுக்கு முன் ஒட்டிக்கொண்டு போய், காலாற்றி, வெயில் ஏறியதும் ஆற்றங்கரைக்கு அடித்துக்கொண்டு போனால் சரசரவென இறங்கித் தண்ணீரில் விழுந்து கொள்ளும். முகத்தை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டு, பளீரெனப் பல் காட்டிக் குரலெழுப்பும். வைக்கோல் சுருணையை வைத்துத் தேய்க்கும் பாடுதான் சொல்ல வகையில்லை.

இறந்து கிடந்த தாய் எருமையை வெறித்துக்கொண்டு நின்றது கன்று. நாலைந்து பேராய் இழுத்துக்கொண்டு போனார்கள். அன்றெல் லாம் செத்துப் போன மாட்டுக்கு விலை பேசுவதில்லை வெள்ளாளன். மாற்றாக நாலைந்து துடைக்கயிறு கொடுப்பார்கள். இந்த எருமையின் துடைக்கயிறும், ஒட்டுப் பனங்கையில் தூங்கும் கயிற்றில், எலி கடித்து விடாதபடிக்கு, நான்று கொண்டு கிடக்கும் பல பூக்கள் இனிமேல்.

அந்தப் பூ உழவு, நடவு முடிந்துவிட்டது. இனி அறுப்படிப்பு முடிந்து இரண்டு மாதம் கோடைக்குக் காய்ந்து, பங்குனி – சித்திரைகட்டி உழவு தொடங்குமுன் எருமையோ கடாவோ பிடிக்க வேண்டும்.எந்த உருப்படியைப் பணயம் வைத்துப் பணம் தேற்றுவது என்பது அப்பாவின் கவலையாக இருக்கும். எருமை படுத்திருந்த மூலை வெறித்துக் கிடந்தது. அடுத்த மாடுபிடிப்பது வரைக்கும் அது கவலைக்கான வெற்றிடம்.

ஒற்றை மாடாகப் பிடிக்க கிடைக்கவில்லை. வடசேரி கனகமூலம் சந்தை, வெள்ளிக்கிழமை தாலியறுத்தான் சந்தை, திங்கள் சந்தை என ஏக அலைச்சல். கலப்பைக்கானாலும் வண்டிக்கானாலும் எல்லாம் சோடி சோடியாக விற்றனர். தொழுப்பிறப்பை விற்றுவிட்டு, சோடியாகக் கடாக்கள் பிடித்துக்கொள்ளலாம் என்றால், தொழுப் பிறப்பை விற்க மனமில்லை.

தார்போட்டுப் போட்டுப் புண்ணாகிய எருமையின் சட்டம் மறுபடி மறுபடி ஞாபகம் வந்தது. உழவு முடிந்து தொழி போக ஆற்றில் போட்டுக் கழுவி, வீட்டுக்கு வந்ததும் உப்பும் சாம்பலும் கலந்து கரைத்து சட்டத்துப் புண்ணில் பூசுவார் அப்பா. ஒருமுறை அப்பா கஞ்சி குடிக்க வரப்பில் அமர்ந்தபோது, தார்க்கம்பை கையில் பிடித்துக்கொண்டு இரண்டு சால்கள் ஏர் ஒட்டினான். வரப்பில் இருந்து அப்பாகூவினார்-எருமைக்கு புண்ணுலே குத்தாதே! மேலே கொஞ்சம் ஏந்தி லேசாக்கு குத்து” என்று. கிடாக்கன்று தார்க் கம்புக்கு இடம் கொடுப்பதில்லை. கம்பைக் காட்டி னாலேயே நடையில் துரிசம் கூடும். எருமை பாவம், வேதாந்தத்தில் திளைத்திருக்கும்போல.

சீவலப்பேரி சந்தையில் இருந்து ஓட்டிக்கொண்டு வந்தார் புதிய எருமைக் கடாவை. இரண்டு நாட்கள்துயந்த நடையில் பாதங்கள் கன்னி விட்டன.

கடா பார்க்க அம்சமாக இருந்தது. நல்ல வட்டக்கொம்பு. செம் பட்டை பாய்ந்த அடர்ந்த உடல் மயிர். மிதமான சதைப்பிடிப்பு. கண் களில் ஒரு தீவிரம். ஆனால் பாய்ச்சல் இல்லை. முக்கிய முகத்தை எடுக் காமல் ஒரு தொட்டிக் கழுநீரை உறிஞ்சியது. வைக்கோலை, புல்லைக் கழிக்காமல் தின்றது.

“விலை ரொம்ப சகாயம்” என்றார்கள். அப்பாவுக்கு பணம் போனா லும் போகட்டும் நல்ல மாடு வாய்த்த திருப்தி இருந்தது. புதிய கடாவைப் பார்க்க, கிடாக்கன்று சற்று மட்டமாகப்பட்டது. நடையிலும் கழுத்து வெட்டலிலும் சத்தத்திலும் ஒரு மிடுக்கு இருந்தது.

பங்குனி மாதம் பிற்பாதியில் சீலை நனையத் தூற்றியது மழை. கட்டி உழவுக்கு அது போதாது என்றார்கள். கலப்பை கட்டிப் பார்த்ததில் கொழு முனைகீற முடியவில்லை மண்ணை. இரண்டு நாட்களில் மேலும் சற்றுக் கனத்துப் பெய்தது. எல்லா ஏர்களும் வயலில் இறங்கின. அப்பா நீண்ட நாட்களுக்குப் பிறகு எருமை இல்லாமல் ஏர்பூட்ட இரண்டு மாடுளையும் பத்திக்கொண்டு போனார். அவரது தார்க்கம்பு வீச்சில் புதிய மாட்டைப் பற்றியதொரு செருக்கு இருந்தது.

அவன் ஒன்பது தேறி, பத்துக்குப் போக வேண்டும். இன்னும் இருந் தன விடுமுறை நாட்கள்.

முதல் நாள் உழவு என்பதால் வாளி நிறைய சர்க்கரைக் கொழுக் கட்டை அவித்து காப்பிச் செம்பில் பாலூற்றாத கருப்புக்கட்டிக்காப்பியும் தந்து அனுப்பினாள் அம்மா.

ஆற்றில் பாசியும் கலங்கலுமாய் கரண்டைக்கு மேல் தண்ணீர் இல்லை. என்றாலும் காலையில் ஒழுகும் நீர் சில்லென்றிருந்தது. குடிக் கவும் அதுதான், மாடு குளிப்பாட்டவும் அதுதான், குளிக்கவும் அதுதான்.

எல்லோர்வயல்களிலும் ஏரோடிக்கொண்டிருந்தது. மாட்டை அதட் டும் ஓசை. பக்கத்து வயல்காரரிடம் உரையாடும் ஓசை. காற்றில் மழை பெய்த ஈரம் இருந்தது. புதுமண் மறிந்த வாசனை எங்கும். தொழிப்பூவில் குழை சமுண்டிய வயல்களில் குழைக்கம்பு பொறுக்குவோர் ஏருக்குப் பின்னால் ஒடிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நடந்து கொண்டு பார்க்கும்போது சாஸ்தா கோயில் வயலில் ஏர் நின்றுகொண்டிருப்பது புலப்பட்டது. சற்று நெருங்கிப் போனதும் ஒரு மாடு நின்றிருப்பதும் ஒரு மாடு படுத்துக் கிடப்பதும் தெரிந்தது. அருகில் போனபோது, கிடாக் கன்று நிற்க, புதிய எருமைக் கடாபடுத்திருந்தது.

கால்வாசி வயல் உழுது மண் மறித்த நிறமாற்றம். அழிசங்கம்பால் நின்றவாக்கில், ‘சளார், சளார்’ என சாத்திக்கொண்டிருந்தார் அப்பா.

தூக்குவாளியையும் காப்பிச் செம்பையும் வரப்பில் வைத்துவிட்டு ஏருக்கு அருகில் போனான். அப்பா முகத்தில் கோப வெறியாட்டம். தார்க்கம்பால் மூர்க்கமாக் குத்துவதும் முதுகில் ஒங்கியோங்கிச் சாத்துவ துமாக. புதிய கடா அசைந்து கொடுக்கக் காணோம். வாயோரம் சற்று வெண்ணுரை மட்டும். கிடாக்கன்று ‘சிவனே’ என்று ஓய்வெடுப்பில் நின்றது. கம்பைக் கீழே வீசிவிட்டு, கிடாவின் பின்னால் போய் வாலைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் முறுக்கினார். கிடா பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை.

அவன் மெதுவாகச் சொன்னான் -“உடம்பு கிடம்பு சரி இல்லையோ என்னவோ?”

“உடம்பா? உடம்புக்கு ஒரு கொள்ளையும் இல்லே! கறி கொழுத் துப் போச்சு. வெற என்னா?”

பேசிக்கோண்டே குனிந்து, கிடாவின் வாலை எடுத்து, பல் பதியக் கடித்தார். வெறுப்பும் கோபமும் நுரை பொங்கியது. மறுபடியும் தார்க் கம்பை எடுத்து முகத்தில் அறைந்தார். வலி பொறுக்காமல் கிடா முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அப்பாவுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. பொடிடப்பியைத் திறந்து, நயம் பட்டணம் பொடியை இடது உள்ளங்கையில் கொட்டி, சிட்டிகை சிட்டிகையாகக் கிடாவின் மூக்கினுள் திணித்தார்.

கிடா அங்கும் இங்குமாகத் தலையை மட்டும் உதறியது. கிடையில் இருந்து நகரவில்லை.

“சவம், எந்த நேரத்திலே கயத்தை வாங்கினேனோ? கள்ளக் கிடாவை காசு கொடுத்து வாங்கிட்டு வந்திருக்கனே” என அலுப்பாக முனகினார்.

சட்டென, “நீ ஒரு காரியம் செய்யி… அன்னா அந்த வயல்லே உ உழுது கிட்டு இருக்கவன் கிட்டே தீப்பெட்டி இருக்காண்ணு கேட்டு வாங்கிட்டு வா” என விரட்டினார்.

தீப்பெட்டி கிடைத்தது. ஆனால் வைக்கோல் சருகெல்லாம் மழை யில் நனைந்து கொவர்ந்துபோய் இருந்தது. சாஸ்தா கோயில் சுவரோரம் அதிகம் நனையாத கூளம் கொஞ்சம் திரட்டினார் அப்பா. கிடாவின் பின் பக்கம் சுகூட்டிப்போட்டு, தீக்குச்சியை உரசினார். இரண்டு மூன்று குச்சிகள் எரிந்து ஒய்ந்தபின், அடுத்த குச்சியில் சருகு புகைந்தது. சற்று நேரத்தில் அவிந்தும் போயிற்று.

ஆத்திரமாக வந்தது அவனுக்கு. இதற்குள் பாதி வயல் முதல் உழவு ஆகி இருக்க வேண்டும். அக்கம்பக்கம் உழுதவர் எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே உழுதுகொண்டிருந்தனர். யாரோ உரத்துக் கேட்டார். “என்னண்ணே, கிடாவு அனங்க மாட்டங்கா? சவத்தை அடுத்த சந்தை யிலே கையடிச்சுப்போட்டு, வேற சோடி புடிக்கப் பாரு. கள்ளக்கிடாவை வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு மாரடிப்பே…”

மணி பத்து தாண்டியிருக்கும். நன்றாகப் பசித்தது. கோபமும் எரிச் சலும் சலிப்புமாய் கிடாக்களின் கயிற்றை அவிழ்த்து விட்டார். கிடாக் கன்று வரப்போரம் புல் கரம்பப் போயிற்று. புதுக்கடா காதுமடல்களை மட்டும் ஆட்டிக்கொண்டு, நாசிகளை விரித்துக்கொண்டு, படுத்துக் கிடந்தது.

எப்போதும் பிடித்தமான சர்க்கரைக் கொழுக்கட்டையை சுவாரசிய மில்லாமல் தின்னத் தொடங்கினார். மழைக்கான வெயில் ஏறி அடித்தது. சற்று நேரத்தில் படுத்துக்கிடந்த கடா எழுந்தது. உடம்பைச் சற்று சிலிர்த் துக்கொண்டது. முதுகெல்லாம் அழிசங் கம்பின் அடி, வரிவரியாகக் கிடந்தது. முகத்திலும் சில தடிப்புகள் தெரிந்தன.

சற்று நேரம் நின்று சூழலை அனுமானித்தது. திரும்பவும் கலப்பை யில் கட்டுவார்களோ அல்லது அழிசங் கம்பால் சாத்துபடி நடக்குமோ என யோசித்திருக்கலாம். மெல்ல நடந்து வரப்போரம் சென்று புல் கரம்ப ஆரம்பித்தது.

நடையில் மிடுக்கு குறையவில்லை. நோய் அல்ல காரணம் என்று தோன்றியது அவனுக்கு. வலுக்குறைவும் அல்ல. நீண்ட நாட்கள் உழவில் அடிபட்டுக் குளம்பு வெடித்த புண்ணின் வலியும் அல்ல.

அப்பா நுகத்தை அவிழ்க்க ஆரம்பித்தார். இதை எந்தச் சந்தையில் கொண்டுபோய் விற்றுக் காசாக்குவது என்பது அவர் கவலையாக இருந்தது.மேற்கொண்டு எவ்வளவு ரூபாய் போட்டு, எத்தனை சந்தை அலைந்து இன்னுமோர்கடாபிடிக்க என்ற கவலை இருக்கக்கூடும். எதை மேலும் விற்க அல்லது பணயம் வைக்க?

வெற்று வாளியையும் காலி காப்பிச் செம்பையும் தூக்கிக்கொண்டு வரப்பில் நடக்க ஆரம்பித்தபோது வெறுப்புடன் எருமைக்கடாவின் முகத்தைப் பார்த்தான். எருமைக்கடா அவனைத் திரும்பப் பார்த்தது. அதன்கண்களில் கேள்விகள் இருந்தன.

– அம்பலம், ஏப்ரல் – 2000

நன்றி: https://nanjilnadan.com/2011/06/14/எருமைக்கடா/ 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *