(1993 வெளியான கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்த செய்தி கேட்டு ஆத்தூர் கிராமமே பரபரப்படைந்தது.
அப்படியா சேதி? ‘தெரியுமா சங்கதி?’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
வேகவேகமாகச் சென்று கொண்டிருந்தான் வீரய்யன். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கணக்குப் பிள்ளை அவனை அழைத்துக் கேட்டார்-
“எலே, எப்ப எடுக்கறாங்களாம்?”
“நாலு மணிக்கெல்லாம்.”
“வரவேண்டியவங்க எல்லாரும் வந்துட்டாங்களாமா?”
“வந்துட்டாங்களாம். ஊரே திரண்டு பண்ணையார் வீட்டிலேதான் இருக்கு.”
“அப்ப கரெக்டா எடுத்துடுவாங்கதான்.”
“கண்டிப்பா. அதான் எல்லாரும் கிளம்பிப் போய்க்கிட்டிருக்கோம். ஆமா… நீங்க வரலையா?”
“அதான் யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்”.
“இதிலே யோசனை பண்ண என்ன இருக்கு? இனிமே எப்போ பார்க்கப் போறீங்க? பொறப்படுங்க. இப்ப பொறப்பட்டாத்தான் எடுக்கறதுக்குள்ளாற போய்ச் சேர முடியும்.”
“சரி… இரு வாரேன். ஒருக்கா நேருலதான் பார்த்துப்புடுவோம்.”
துண்டை உதறித் தோளில் போட்டபடி புறப்பட்டார் கணக்குப் பிள்ளை- பக்கத்துக் கிராமத்தில் பண்ணையார் வீட்டில் எடுக்கும் சினிமாப் படப்பிடிப்பைப் பார்க்க.
– 22-07-1993