என் மண்ணும் என் வீடும் என் உறவும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 12,703 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி…

கொளுத்தி எரியும் வெயிலில் யாழ்மண் கருகிக் கொண்டிருந்தது! இராணுவக் கெடுபிடிகள் தாளாமல், வடமராட்சி மண்ணில் சொந்த வீட்டைவிட்டு, யாழ் மண்ணிற்கு இடம் பெயர்ந்து சுய அடையாளங்களை மறைக்க முயன்று கொண்டு இருக்கிற போதும் பிறந்து வளர்ந்த ஊரும், தவழ்ந்து மகிழ்ந்த வீடும் மனத்திற்குள் வந்துவந்து, எங்களை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும்!

எனக்குத் திருமணப் பேச்சுக்கள் நடைபெறுகிறது ஒரு புறம்! என் குட்டித் தங்கை குதியன் குத்திக்கொண்டு, வேம்படிச் சிநேகிதிகளுடன் யாழ் நகரம் முழுவதும் சைக்கிளில் ஊர்வலம் சென்று வருவது மறுபுறம். சுற்றிவர முகாமிட்டிருக்கும் இந்திய இராணுவத்திற்கு இவளின் குடும்ப வேதம் எதுவும் இன்னமும் தெரியாது என்ற தைரியம் அவளுக்கு!

வடமராட்சிப் பகுதியில் ‘லிபறேசன் ஒப்பரேசன்’ என்ற சிங்கள ராணுவ நடவடிக்கை முடிந்து, அடுத்த அத்தியாயமான இந்திய இராணுவ அமைதிக்காப்பும், அக்கிரமங்களும், அரசியல் நாடகங்களும் நடந்தேறிக் கொண்டிருக்கிற காலம்! ஊரில் – வீட்டில் தனியே இருக்கிற அப்பாச்சியும் அவ்வப்போது அங்கே வந்து போகிற தம்பியும் அடிக்கடி எங்கள் நினைவுக்கு வருவார்கள்.

நானும் குட்டித் தங்கையும் யாழ்நகரிலிருந்து வடமராட்சியி லிருக்கும் எமது வீட்டை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு மணி நேர ‘பஸ்’ பயணம் – அப்போது இராணுவச் சோதனைகளால் இரண்டரை மணி நேரப் ‘பஸ்’ பயணமாக இருக்கும்! ‘பஸ்’சுக்குள் இருப்பவர்களை அவர்கள் சோதனை செய்யும் போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட நபரைத் தெரியுமா என்று கேட்டுக் கேட்டு வதைப்பார்கள். அந்த நபர் வேறு யாரு மல்ல – அது என் அருமைத் தம்பியாக இருக்கும், அன்பும் பாசமும் மானுட நேயமும் மிக்க என் தம்பியாக இருக்கும், வீரமும் விழுப்புண்களும் சுமந்த, விடுதலை வேட்கை மிக்க என் தம்பியாக இருக்கும்!

மனசிற்குள் அழுகை பொங்கும் .. . கண்கள் விழித்தபடி மிரண்டு கொண்டேயிருக்கப் பயணம் தொடரும்! எந்த நிமிடமும், நானும் என் தங்கையும் ‘பஸ்’ஸிருந்து இறக்கப்படலாம். இறக்கிய பின் காரணங்கள் கூறப்படாமலே சுட்டுத் தள்ளப்படலாம் – அல்லது சுக்கு நூறாய்ச் சிதைக்கப்படலாம்! அதே பயம் விழி முழுவதும் படர்ந்து இதயம் துடித்துக் கொண்டு கிடக்கும்!

ஒரு பாவமும் செய்தறியாதவர்களுக்கு இந்தப் பயம் எதற்கு என்று மட்டும் யாரும் வினா எழுப்பி விடாதீர்கள். அதுதான் அப்போது அங்கு விதிக்கப்பட்டிருந்த விதி!

ஒரு தடவை வீட்டு மண்ணை மிதித்து, மரங்களுக்கு நீரூற்றி, அப்பாச்சியுடன் ஆசை தீரக் கதைத்து, தம்பியைத் தேடிக் கண்டுபிடித்து உச்சிமுகர்ந்து, ஒரு நேர உணவாவது உண்ண அழைத்து, ஒரு இரவு – ஒரேயரு இரவாவது உறங்கி எழுந்தால் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விடலாம். இதுதான் என் ஆசை!

ஆசையாசையாக ஊர் மண்ணை மிதித்தோம்.

மாலை நேரம்! இருள் சூழ ஆரம்பிக்கும் அடுக்கெடுப்பு! வீடெல்லாம் சோபையிழந்து, வேலிகளும் தள்ளாடியபடி, மல்லிகைப் பந்தலோ விட்டுவிட்டுப் போன சோகத்தில் வாடி வதங்கிப் போய்க் கிடக்கிறது! செவ்வரத்தம் பூக்களெல் லாம் களைத்துச் சோர்ந்து நிலம் நோக்கி முகம் சாய்த்து நிற்கிறது! முருங்கைக் காய்கள் முற்றி வெடித்து, மரங்களிலேயே காய்ந்தபடி தொங்கிக் கிடந்தன! எப்பொழுதோ விழுந்து சிதறிப் போன பிச்சிப்பூக்களும் வேப்பம் பூக்களும் காய்ந்து சுருண்டு, சருகுத் திரளாக முற்றத்தில் ஒதுங்கிக் கிடந்தன. முற்றிப் பழுத்த நெல்லிக்காய்கள், நைந்து போனதொரு வாசனையை வீசியபடி முற்றமெங்கும் சிதறிக் கிடந்தன.

பென்னம்பெரிய வீட்டில், ஒரு சின்னஞ் சிறு மூலைக்குள் உட்கார்ந்திருந்தபடி அப்பாச்சி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தா. எங்களைக் கண்டதும் மறந்துபோன ஒன்றை முகத்தில் வரவழைத்துக்கொள்ள முயல்வது போல் கண்கள் மலர எழுந்தா.

அப்புறம் என்ன? ஆயிரம் கதைகள் சொன்னா. ஒரு மாதக் காலமாய் ஊருக்குள் நிகழ்ந்துவிட்ட சுக துக்கச் சேதியெல்லாம் சொன்னா.

நான் பூட்டியிருந்த ஜன்னல்களைத் திறந்து விட்டேன். சாமியறையில் சுவர் மூலையில் சிவன் அதே நிஷ்டையில் இப்பவும்! பிள்ளையாரும் முருகனும் தூசி படிந்த சால்வையில் அதே புன்னகையோடு இன்னமும்! சாமியறையைக் கூட்டிப் பெருக்கினேன். அப்பாச்சி கொண்டு வந்து தந்த இரண்டு வாளித் தண்ணீரையும் அடித்து ஊற்றி சிமெண்ட் தரையைச் சுத்தமாக்கி விட்டு, பால்சாம்பிராணியைப் போட்டதும் குளிர்மை கலந்த புகைமணம் வீடெங்கும் கமழத் தொடங்கியது.

கிணற்றடிக்குப் போனேன். கிணற்றை எட்டிப் பார்க்க ஆசையாக இருந்தது. ஒருவர் மாறி ஒருவராய்க் கலக்கியடித்துக் கொண்டிருப்பதில் அடிக்கடி வற்றுவதும் ஊற்றெடுப்பதுமாய்ச் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் கிணறு, இப்போ பழுத்த தென்னம்பூக்களைப் போர்வையாக்கி, ஏராளம் சோகங்களை உள்ளே புதைத்தபடி, அசைவற்று, மௌனித்துக் கிடக்கிறது! கிணற்றுக் கட்டில் காகங்கள் மட்டுமே கரைந்து விட்டுப்போன அடையாளங்கள்! கட்டின் ஓரமாய் அம்மா கவிழ்த்து வைத்திருந்த மண்சட்டிகள் தூசி படிந்தபடி இப்பவும் அப்படியே!

அதற்கு மேல் என்ன? ஆடைகளைக் களைந்துவிட்டு, ஆழக்கிணற்றில் அள்ளியள்ளிக் குளித்தேன். இனம்புரியாத சந்தோஷத்தில் பாட்டுப்பாடிக் களித்தேன். மறுநாள் காலை
என் தம்பி வரப்போகிறான் என்ற பரவசம்!

தங்கை அங்குமிங்குமாய்த் தாவித்திரிந்து கொண்டிருந்தாள். வேகம் வேகமாய் உருளும் கிணற்றுக் கப்பியின் ஓசை, அக்கம் பக்கத்தவரை உசார் நிலைக்குக்கொண்டு வந்திருக்கக் கூடும். ஒருவர் மாறி ஒருவராய் வந்து, குசலம் கேட்டுப் போனார்கள்.

அப்பாச்சி ஊற வைத்திருந்த உழுந்தை, நான் கழுவி அரைத்தேன். இரவு நித்திரை வரவில்லை. இரவின் நிசப்தம் ஒரு வெறுமையையும் தவிப்பையும் உடலினுள் பரப்புவது போலிருந்தது! மறுநாள் தம்பியைக் கண்டு, சுகம் கேட்கும் வரை, அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாதென்ற பிரார்த்தனையில் மனம் தானாகவே மூழ்கிக்கொண்டது.

ஒரு விதமாய்ப் பொழுது புலர்ந்தது. ஆயினும் குருவிகள் இன்னும் கூவவில்லை. மைனாக்கள் இன்னும் சிறகடிக்கவு மில்லை. வண்ணத்துப் பூச்சிகள் கூட எங்கோ தொலைந்து போயிருந்தன.

பிள்ளையார் கோவில் மணி முன்பு போல் நேரத்திற்கு நேரம் அடிக்குமோ தெரியவில்லை. ஒற்றைச் சேவல் மட்டும் எங்கிருந்தோ கூவுவது கேட்டது. அதன் பின்னணியில் இணைந்தபடி விநோதமான ஓசைகள்!

உற்று உற்றுப் புலன்களை அலையவிட்டுக்கொண்டிருந்தேன். சமுத்திரத்தின் ஓசையா? சப்பாத்துகளின் ஓசையா? சரியாகப் புரியவில்லை. பின்பு சிறிது நேர அமைதி. விடிந்து
விட்ட பின்பும் வீதியலி எதுவும் காலை நேரத்தை உறுதிப்படுத்தத் தொடங்குவதாயில்லை!

இப்போது மிகத் தெளிவாகக் கேட்டது – துப்பாக்கி வேட்டொலிகள்!

மனப்பதைப்போடு எழுந்து உட்கார்ந்தேன். சில நிமிடங்கள் தான் – எல்லாம் சாதாரணமாகி விட்டதுபோல இயற்கை ஒலிகள் இசைக்கத் தொடங்கின! கோவில் மணி ஒலித்தது! குருவிகள் கூவின! காகங்கள் கரையத் தொடங்கின! மனிதர் களின் காலரவங்கள்; முணுமுணுப்புகள்; கிசுகிசுப்புகள் .. ! ஆயினும் சொல்ல விரும்பாத பல சேதிகளைச் சொல்லாமலே, ஒரு புன்னகையோடு கடந்து போவதாக அவர்களது கண்கள் மிதந்து சென்றன!

சமையலறையோடு ஒட்டியபடியிருக்கும் சிறிய ‘சிமெண்ட’ தரையில் கழுவிக் காயவைத்த அம்மி கிடந்தது. நான் தோசைக்குச் சம்பல் அரைக்கத் தொடங்கினேன். தம்பிக்குத் தோசையென்றால் ஆசையல்லவா? அதுவும் பச்சைச் சம்பல் இஞ்சி போட்டு அரைத்தால்… உறிஞ்சியுறிஞ்சி… பொச்சடித்துச் சாப்பிடுவான். கத்தரிக்காய்களைக் குறுணி குறுணியாக நறுக்கி, சின்ன வெங்காயம், கடுகு கறிவேப்பிலை போட்டு ஒரு பிரட்டல் கறியும் வைக்க வேண்டும். ஏதேதோ ஏகாந்தத்தில் மூழ்கியபடி, அம்மிக்குழவியை இழுத்து இழுத்துச் சம்பலை அரைத்துக்கொண்டேயிருக்கிறேன்.

திடீரென ஊரொலிகள் அடங்கிவிட்ட பெரு நிசப்தம்! நாய்கள் மட்டும் தூரத்தில் எங்கோ அசாதாரணமாய்க் குரைத்தபடி! ஏகாந்தம் ஏனோ திடுமென்று சிதைந்து போனது!

முற்றத்து மாதுளை மரத்தில் தாவிய அணிலொன்று படீரென்று நிலத்தில் விழுந்து அடிபட்ட வேகத்தில் மீண்டும் தாவி ஓடி மறைந்தது. நான் அணில் எங்குப் போயிருக்கும் என்று எட்டிப் பார்ப்பதும், சம்பலை அரைப்பதுமாக இருந்தேன். மனம் ஒரு நிலையற்று அம்மியோடு சேர்ந்து அவதிப்படுவதாய் இருந்தன! மீண்டும் அந்த அணில் மாதுளையின் குறுக்காக ஓடியது. திரும்பிப் பார்த்தேன். திபு திபுவென்று அடுக்கடுக்காய் நகரும் வாகன இரைச்சல்கள்! கூடவே கடலை நெய்யின் கமறல் மணம்! வீட்டிற்குள் சிமெண்ட் தரைகளில் ‘பூட்ஸ்’ ஒலிகள்!

எனக்கு எல்லாமே விளங்கி விட்டது. பேசாமல் சம்பலை அரைத்துக் கொண்டேயிருப்பதா? அல்லது நிறுத்தி விட்டு எழும்புவதா? தீர்மானிப்பதற்கு ஒரு நொடியாவது கிடைத்திருக்குமோ என்னவோ?

வீடு முழுவதும் பச்சைப்புழுக்களென இராணுவம்! தோசைப்பானை ‘டமார்’ என்ற பேரோசையுடன் எகிறி விழுந்தது! பொங்கி வழியத் தயாராயிருந்த தோசை மாக்கூழ்
சிதறி… மரத்தூண்களிலும் விறாந்தா ஓரங்களிலும் வழியத் தொடங்கின! அம்மிக் குழவி உருண்டு சென்று, தரையில் தொபீரென்று விழுந்து நீளமாய் உருண்டது! – தரை உடைந்திருக்கலாம்! ம் … சிறிது உடைந்துதான் விட்டது!

எனது கூந்தலைப் பற்றியிழுத்த மிருகத்தின் கைகள் மிகவும் கரடுமுரடாக இருந்தன! எண்ணெய் வழியும் முகங்கள் கண்களுக்குக் கிட்டவாக வந்து நின்றன! ‘பெரிய பெரிய’
மீசைகளுடன் பற்களை ‘நெரித்து நெரித்து’ உதடுகளை அசைக்கிறார்கள். காதுகள் அடைபட்டதான அதிர்ச்சி! பாஷைகள் எதுவுமே புரியவில்லை. கிந்தியா, உருதா, பஞ்சாப்பா… கூர்க்காவின் அதட்டலா… ஒன்றுமே விளங்கவில்லை!

ஒரு விழி அசைப்பிற்குள், ஜன்னல் கண்ணாடிகள், பீங்கான் கோப்பைகள், மேசைகள், கதிரைகள் யாவும் மளமளவென்று நொறுங்கும் ஓசைகள்! வேகமாக வீசப்பட்ட தென்னம் மட்டை ஒன்று என் கீழ் உதட்டைப் பிய்த்துக்கொண்டு போய் சுவரில் மோதி விழுந்தது! நான் துடித்துப் போய் உதட்டை விரல்களால் பொத்தியபடி நின்றிருந்தேன். என் மார்புச் சட்டையில் இரத்தம் சிந்தியது! என் இடது பாதத்தை நோக்கி ஒரு பூட்ஸ் நகர்ந்து வந்தது. அதன் அடிப்பாகம் என் விரல்களை மிதித்து நசித்தபடி விஷமத்தனத்தோடு நின்றிருந்தது! நான் வலியின் வேதனை தாங்காது “அம்மா…” என்று அலறியதைக் குரூரமாக ரசித்தவாறே ‘பூட்ஸ்’ மெல்ல இடம்மாறியது.

அதற்குள் மலையென உயர்ந்து நின்ற ஒரு மனித மிருகம் எதையோ என்னிடம் வினவியபடியே இருந்தது. நான் ‘மிரள மிரள’ விழித்தபடி நின்றிருந்தேன். அவனின் விழிகளிற்குள் தீயென எதுவோ பற்றியெழத் தொடங்குவதாய்ச் சுவாலை அசைந்தது – வெப்பம் என் மேல் வீசியடிக்கத் தொடங்கியது! கைவிரல்களை இறுக மடித்தபடி நின்றிருந்தேன். உதட்டுப் புண்கள் தணலாய் எரிந்துகொண்டிருக்க, எனக்குத் தெரிந்திருந்த அரைகுறை ஆங்கிலமும் அந்நேரம் அண்ணாக்கில் ஒட்டிப் போனது! விலங்குக் கைகள் என் இடையை வளைத்து இழுத்துக்கொண்டன! அவனின் மார்புச் சட்டையில் தொங்கிக் கொண்டிருந்த உலோகப் பட்டயங்கள், தகடுகள்… என் முகமெங்கும் பிறாண்டின..! இடுப்பில் தொங்கிய துப்பாக்கியின் ஏதொவொரு முனை என் மார்பில் சிராய்த்தது! என் முழுச்சக்தியையும் பிரயோகித்து, அவனுக்கும் எனக்கும் இடையில், ஒரு இடைவெளியை உண்டாக்க நான் கடினமாய்ப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தேன்.

அதற்குள் இன்னுமொரு மிருகம் அசிங்கமாய் இளித்தபடி, என் தம்பியின் பெயரை மந்திர உச்சாடனம் செய்து கொண்டு, உலகிலேயே மிக அசிங்கமான ஸ்பரிசம் எப்படியோ, அப்படி என்னைப் ஸ்பரிசித்தது!

அப்பாச்சியின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தா. அத்தனை இம்சைகளின் மத்தியிலும் என் கண்கள், அழகு மிக்க என் தங்கையைத் தேடின. அவள் மல்லிகைப் பந்தலின் கீழ் மண்டியிட்டு மன்றாடிக்கொண்டிருக்கிறாள்! ஆறேழு மிருகங்கள் அவளைச் சுற்றி இளித்தபடி நிற்கின்றன! அவர்களின் நீண்ட கால்களிற் கிடையாக, அவளது நீலநிறச் சட்டையின் ஓரங்கள் தெரிந்தன. என்னை மீறிய திமிறலுடன் “அம்மா…” என்று அலறிய ஓசை அந்த ஊர் முழுவதும் கேட்டிருக்கலாம்!

யாரோ ஒரு பெரியவன் திடுமென்று முன்னால் வந்து நின்றான். அத்தனை பட்டாளங்களையும் மேய்ப்பவனாக இருக்க வேண்டும். சட்டையில் நிறையப் பட்டிகள் தொங்கின.

என் அலறலின் வேகத்தில் வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. மிருகங்கள் அவனுக்கு ‘சல்யூட்’ அடித்தன. சில நிமிட ஸ்தம்பிதத்தைப் பயன்படுத்தி என் தங்கை
என்னருகில் ஓடிவந்து நின்றுகொண்டாள். வந்தவன் இருவரதும் சிதைந்த கோலங்களை மாறி மாறிப் பார்த்தான். பட்டாளத்தை ஒரு தடவை முறைப்போடு சுற்றிப் பார்த்தான். ஏதேதோ பாஷையில் மளமளவென்று ஏதேதோ பேசினான். கட்டளை களிட்டான். எல்லோரும் மிருக மூச்சுக்களை அடக்கிக்கொண்டு அப்படிஅப்படியே வெளியேறிக்கொண்டிருந்தார்கள்!

அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். தெளிவான ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினான்.

“உன் தம்பி நல்லவன் – நாங்கள் அறிவோம். அவன் ஒரு திறமைசாலி – அதுவும் நாங்கள் அறிவோம். அவன் மிகவும் துணிச்சலான வீரன் – அதுவும் எமக்குத் தெரியும். ஆனால் மிகவும் இளைஞன். தெளிவற்ற மனிதர்களுடன் சகவாசம் வைத்திருக்கிறான். அவனை ஒரு தடவை எம்மை வந்து சந்திக்கும்படி யாரிடமாவது தகவல் அனுப்பி விடு. நாங்கள் அவனை அதி சிறப்புக்குரிய வி.ஐ.பி நண்பனாக வரவேற்கக் காத்திருக்கிறோம். அதுவரை நீங்களிருவரும் எம்மோடு எமது முகாமில் வந்திருங்கள், பாதுகாப்பாக இருக்கலாம்” என்று மிகவும் தன்னடக்கத்துடனும் ஒரு பிக்குவின் தோரணையிலும் கூறினான்.

நிலைமையின் திடீர் மாற்றம், எதற்கான அடியெடுப்புகள் என்பது மட்டும் எனக்கிப்போ தெளிவாகப் புரியத்தொடங்கியது. அவன் இதமாகப் புன்னகைத்தான். அது ஒரு விஷக்கிருமியின் வேடிக்கையான நகைச்சுவைபோல இருந்தது!

அவன் தன்னருகில் நின்றிருந்த இரண்டு படையினருக்கும் ஏதேதோ கட்டளைகள் பிறப்பித்த பின், தன் பிரத்தியேக வாகனத்தில் போய் ஏறுவது தெரிந்தது.

“ம் … நடவுங்கம்மா … ”

அந்தக் குரலைக் கேட்டதும் திடுக்குற்றவளாகத் திரும்பிப் பார்த்தேன். இந்திய இராணுவத்தில் ஒரு தமிழ்க் குரல் கேட்டதும் ஆச்சரியமாகவும் சற்றுத் தெம்பாகவும் இருந்தது.

“எங்களோட வந்து vehicleஇல் ஏறுங்கம்மா .. .” அவனின் தமிழ் வார்த்தைகளைக் கேட்டதும், உலகத்து மகாசக்தி யெல்லாம் எம்மோடு சேர்ந்து விட்டது போன்ற மகிழ்ச்சிக்
கனவொன்று அவசரமாய் முகிழ்த்தது. நடுக்கத்துடன் அவனின் கைகளைப் பற்றினேன்.

“எங்களை விட்டிடுங்கோ .. . நாங்கள் இங்கையிருந்து எங்காவது போயிடுறம் எங்களைக் campக்குக் கொண்டு போகாதேங்கோ. please . . .” என்று கெஞ்சினேன். அவன் தனக்கிடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதா அல்லது எம் கண்ணீருக்கு விடை சொல்வதா என ஒரு கணம் யோசித்திருக்க வேண்டும். அதற்குள் மற்றவன் ஏதேதோ அதட்டலுடன் உரத்துக் கத்தினான். இவன் அவசரமாக என் கைளை விடுவித்து, மெல்லிய குரலில் –

“நீங்க … இங்கிருந்தா மேலும் கஷ்டப்படுவீங்க. ஏன்னா .. . நமக்கப்புறம் மேலும் வேற படையினர் வாறாங்க. அவங்க உங்களை ‘சூட்’ பண்ணினாலும் பண்ணிடுவாங்க. அவங்க ரொம்ப பொல்லாதவங்கம்மா. இதைவிட நம்மளோட campக்கு வந்திர்றது safety. வந்திடுங்கம்மா . . .” என்றான்.

இது உண்மையா அல்லது வேஷமா என்ற சிந்தனைத் தவிப்போடு நான் செய்வதறியாது நின்றிருந்தேன். பின்னர் வீட்டின் முன்னால் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ
வண்டிகளில், முதன்மையாய் நின்றிருந்த நீளமான வண்டியில் ஏற்றப்பட்டோம். கால்களில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளால் அங்கங்கு வலி! உதட்டுக் காயம் சரியாகப் பேச முடியாமல் சொற்களை நசித்துச் சிதைத்துக்கொண்டேயிருந்தது!

வண்டியினுள் ஏறியதும் திடுக்குற்று மிரண்டு போனேன். தாறுமாறாய் அள்ளி வீசப்பட்டிருக்கும் எங்களூர் இளைஞர் கள்! மண்டை உடைந்த நிலையிலும் கை கால்கள் கிழிந்து குருதி சிந்தியபடியும் எங்களைப் பரிதாபமாக விழித்துப் பார்த்தார்கள். அவர்களின் தீனமான முனகல்கள் ஒன்றை யன்று முட்டி மோதிக் காற்றில் கரைந்து போய்க்கொண்டிருந்தன.

நெஞ்சிற்குள் ஒரு பெரிய கல் உட்கார்ந்திருந்தது. கண்ணீரை வரவிடாமல் தடுக்கும் ஏதோ ஒன்று மனத்திற்குள் உருண்டு பிசைந்தபடி! தங்கை அசைவுகளேதுமற்று விறைத்த படி என்னருகில்!

இராணுவ வண்டிகள் தொடராக, ஒரு ஊர்வலம்போல வீதியில் நகர்ந்துகொண்டிருந்தன. மயான அமைதியின் மத்தியில் இராணுவ வாகனங்களின் இரைச்சல் மட்டும் ஒரு பேரழிவுக்குக் கட்டியம் கூறுவதுபோல! நமக்குத் தெரிந்த பாதைகளே ஆளரவம் ஏதுமற்ற காட்டுப் பாதைகள் போல வளைந்து நெளிந்து பயமுறுத்தின! இந்த நகரம் இத்தனை தெளிவாக, மிகக் கவனமாக, சரியான நேரத்தில் ஓசைகளனைத் தையும் துறந்து, இப்படி ஊமையாகிப் போவதில் எவ்வளவு பரிச்சயமாகியிருக்கிறது என்ற ஆச்சரியம் என்னுள் தானாய் எழுந்தது!

வண்டிகள், ஓராங்கட்டை, கிராமக்கோடு, சாரையடி .. . கடந்து பாரிய திட்டமிடலுடன் விஸ்தரிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்டமான மந்திகை இராணுவ முகாமருகில் போய்
நின்றுகொண்டன. எல்லோரும் இறக்கப்பட்டோம். முகாமினுள் கொண்டு செல்லப்பட்டோம். கிழிந்த ஆடைகளோடும் மரணக்களை உறைந்து இறுகிப்போன முகங்களோடும் சில இளம்பெண் களும் ஆண்களும் ஏற்கெனவே அங்கு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தார்கள். அவர்களின் இம்சிக்கப்பட்ட உணர்வுகளும் கண்ணீர் வற்றிய, வெறித்த பார்வைகளும் தூரத்திலிருந்து நடந்து வரும்போதே எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. நாமும் அவர்களோடு அதே வரிசையில் நீளமாக நிறுத்தப்பட்டோம். எல்லோர் கண்களும் இறுதிக் கணங்களைப் பரிமாறுவது போல ஒருவர் மேல் ஒருவராய் மோதிச் சென்றன. அனைவரும் சுட்டுத் தள்ளப்படுவதற்கான ஆயத்தங்களோடு துப்பாக்கி முனைகளில்! நிலைமையின் பயங்கரம் எல்லோரையும் தன்னுள் இழுத்து வைத்துக்கொண்டிருந்தது!

முகாமின் வடக்குச் சுவரோடு ஒட்டியபடி இருக்கும் இடம் பெயர்ந்த, வங்கிக் கட்டிடத்தின் ஜன்னலினூடாகச் சில மருண்ட முகங்கள் இடையிடையே தெரிந்தன. வங்கி உத்தியோகத்தர்களுக்கு இது ஒரு வழமையான துப்பறியும் தொடர் நாடகம் போல இருக்குமோ என்னவோ!

முகாமின் அலுவலகப் பகுதிகளிலிருந்து புதிய புதிய கொமாண்டோக்கள் வந்து தம்மை அறிமுகப்படுத்தி எம்மை விசாரித்தார்கள். எல்லா விபரங்களும் விளக்கங்களும் விசாரணைகளும் பதிவாகிக் கொண்டிருந்தன. ‘தூரதர்ஷன்’, ‘நேசக்கரம்’ என்பவற்றின் செய்திப் பிரிவிற் குரிய ஒளிப்பதிவுகள் – ஒலிப்பதிவுகள் எம்மை நோக்கி நடைபெற்றுக்கொண்டிருந்தன. செய்திப் பிரிவிற்கு அனுப்பும் அளவிற்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பதெல்லாம் என்னுள் பெரும் கேள்விக் குறிகளாகி இருந்தன.


இலங்கையின் வடபகுதியில் இருக்கும் அத்தனை இராணுவ முகாம்களுக்கும் தலைமைப்பீடமாக அமைந்திருக்கும் ‘காங்கேசன்துறை’ (கே.கே.எஸ்) இராணுவமுகாமிற்கு நானும் என் தங்கையும் அனுப்பப்படவுள்ளதாக ஒரு கொமாண்டோ சுட்டுவிரலை நீட்டிச் சொல்லிவிட்டுப் போனான்.

தங்கை துடித்துப் போனவளாய், மிரட்சியுடன் என்னைப் பார்த்தாள். எம்மைச் சுற்றி நின்றவர்களும் வரிசையில் நின்றவர்களும் பயத்துடனும் பரிதாபத்துடனும் வார்த்தைகளை வெளியிட முடியா அவஸ்தையோடு எம்மைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

வாழ்வின் எல்லைகளிற்கு நாம், காரணம் தெரியாமலே தள்ளிச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகியிருந்தது. மனத்திற்குள் அவசரமான சிந்தனைகள் எல்லாம் முளைக்கத் தொடங்கின. ஊர்ப்புதினங்களோடு திரும்பி வருவோம் என எமக்காகக் காத்திருக்கும் அம்மாவை மீண்டும் ஒரு தடவை பார்க்க முடியாமலே போய்விடலாம்!

ஆசையுடன் எமைத் தேடிவரும் தம்பியுடன் பேச முடியாமலே போய்விடலாம்! எனக்கு மனம் மெல்ல மெல்லத் தேம்பத் தொடங்கியது! வெயிலில் காய்ந்த தலைமுடியை மேலும் சீரழித்துக்கொண்டிருக்கும் புழுதிக் காற்று, கண்களில் பொங்கி வழிந்த சில கண்ணீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது!

தங்கை திடீரென்று பின்னால் திரும்பிப் பார்த்துத் திணறிக்கொண்டிருந்தாள். சின்னத்தான் மூக்குடைபட்டு இரத்தம் சிந்த, பின்னால் கைகள் கட்டப்பட்டு விலங்கு பூட்டப்பட்டிருந்தார். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த இவருக்கும் காரணமில்லாத ஒரு விலங்கா? எல்லோரும் அவரையே சில கணங்கள் பார்த்தபடி நின்றார்கள்.

நானும் தங்கையும் அந்த வரிசையிலிருந்து தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வேறு ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். தம்பியின் வாழ்க்கை வரலாறு விசாரிக்கப்படுகிறது. அந்த விசாரணைக்குப் பதில் சொல்வதில் மனம் ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை அனுபவிக்கத் தொடங்கியது. நிறையச் சொன்னோம். எம்மோடு உண்டு, உறங்கி, விளையாடிக் களித்த காலங்களைப் பற்றியெல்லாம் சொன்னோம். எமது ஞாபகங்களில் பதிந்து போன அந்த இனிமையான காலங்களை விட, வேறு எவற்றை எம்மால் இவர்களுக்குச் சொல்லிவிட முடியும்?

“இன்னும் சில மணி நேரங்களுக்குள் உங்கள் சகோதரன் எம்மிடம் வந்து சரணடையாவிட்டால்… அள்ளிப் பொறுக்க முடியாதபடி உங்கள் இருவரையும் சுட்டுத்தள்ளிவிடப் போகிறோம்.”

தடித்த மீசையுடன் நின்றிருந்த ஒரு படைவீரன், உயரதிகாரி சொல்வதைத் தெளிவாகத் திரும்பவும் கூறி அடிக்கடி பயமுறுத்தல்கள் நிறைந்த அறிவித்தல்களைத் தந்து
கொண்டேயிருந்தான்.

ஒரு பத்து மணிநேரப் பொழுது .. . விசாரணை என்ற பெயரில் கடந்து போனது. பொழுது மெல்ல இருட்டிக் கொண்டு வரத்தொடங்கியிருந்தது. முகாமினுள் ஜெனரேற்றரின் ஓசையோடு மின்சாரம் ஆங்காங்கே வேலை செய்யத் தொடங்கியிருந்தது. வெளியில் நகரம் மேலும் அடங்கி ஒடுங்கி அமைதியாகிப் போயிருந்தது. அலுவலகங்கள் யாவும் இப்போ மூடப்பட்டிருக்கும். இடையிடையே கேட்டுக்கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து ஒலிகளும் இப்போ கேட்பதாக இல்லை. பசியும் தாகமும் பயமும் அவநம்பிக்கையும் கலந்த ஒரு பேதலிப்பில் வாழ்வின் இறுதிக் கணங்களும் வழி தெரியா இருளும் எம்மை வேகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன!

காங்கேசன்துறை முகாமிற்குப் புறப்படும் வண்டிகள் startஇல் விடப்பட்டன. படைவீரரின் மூட்டை முடிச்சுக்கள், பொட்டலங்கள் முதலில் ஏற்றப்பட்டன. இறுதியாக எம்மை வரும்படி ஒருவன் கையசைத்தான்! நானும் தங்கையும் ஒருவரையருவர் திரும்பிப் பார்த்தோம். மரணத்தின் கடைசிக் கணங்களைச் சுமந்து நிற்கும் கடைசிப் பார்வை அது! இந்த வடமராட்சி மண்ணில் கால்பதித்துப் போகும் என் கடைசிநாள் இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவான நம்பிக்கையுடன் ஆத்தியடிப் பிள்ளையாரை ஒரு கணம் நினைந்து, மரணத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை வரமாகக் கேட்டபடி இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்!

திரும்பிய கணத்தில் முகாமெங்கும் ஒரு சலசலப்பு .. ! புதிய ஜீப் வண்டிகள் பேரிரைச்சலுடன் திபு திபுவென்று வரிசையாக வந்து முகாமினுள் நுழைந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ புதிய இராணுவ வீரர்கள் சாரி சாரியாக வந்து குதித்தார்கள். திடுமென்று ஒரு உசார் நிலை, சல்யூட் அடிப்பு .. . என்று பல இராணுவச் சம்பிரதாய அமளிகள்! வாட்டசாட்டமாக, ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட, ஆளுமை மிக்க ஒரு இராணுவ உயர் அதிகாரி எம் முன்னால் வந்து நின்றார். தலைப்பாகையும் மீசையும் தாடியும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் என்று தெளிவாகச் சொல்லியது. எல்லோரையும் அமைதியாக உற்றுப் பார்த்தார். அவரின் பார்வை எம் காயம் பட்ட உதடுகளிலும் கிழிக்கப்பட்ட உடைகளிலும் படர்ந்து மீண்டது.

“உங்களில் யாருக்காவது ஆங்கிலம் புரியுமா ..?” என்று கேட்டார். நான் கையை உயர்த்தினேன். அதற்குள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யவென ஒரு இராணுவவீரன் முன்னால் வந்து நின்றான். மொழிபெயர்ப்பு ஆரம்பமானது. தளபதி சொல்வதை அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

“நான் இந்த வடமராட்சிப் பகுதிக்கான சிறப்புத் தளபதி. நீங்கள் எல்லாம் எதற்காக இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்? நான்அறியலாமா?”

பதிலேதுமற்ற மௌனம் சில விநாடிகளை விழுங்கியிருந்தது. நெக்குருகி, நெளிந்து, வியந்து . . . எல்லோரும் அவரைப் பார்த்தார்கள். தலைக்குள் மளமளவென்று பட்டாம் பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் தாறுமாறாய்ப் பறக்கத் தொடங்கின. அடுத்த கணமே “ஓ .. .”வென்று ஒன்றாகக் கதறியழத் தொடங்கி விட்டார்கள்!

“வேண்டாம் … யாரும் அழாதீர்கள் .. .” அவர் அவசரமாக வேண்டிக்கொண்டார்.

“நீங்கள் எல்லாம் என் பிள்ளைகள் மாதிரி. உங்கள் வயதில் எனக்குப் பெண்குழந்தைகளெல்லாம் இருக்கிறார்கள். உங்கள் கண்ணீரும் கோலமும் எனக்குத் துயரத்தைத் தருகிறது. உங்களுக்கு என்ன கஷ்டங்கள் நடந்தன? மறைக்காமல் சொல்லுங்கள்”

அந்த அதிகாரியின் கண்களில் அன்பும் கருணையும் பொங்கித் ததும்புவதாய்த் தோன்றியது. அளந்தளந்து அமைதியாகப் பேசும் வார்த்தைகள் எம்மைத் தொட்டுத் தழுவி அரவணைப்பதாய் இதம் தந்தன. எனக்கருகில் நின்ற பெண்களின் கிழிந்த உடைகளை உற்றுப் பார்த்தார். பின் சில நிமிடங்கள் மௌனமாகத் தரையை நோக்கியபடி நின்றிருந்தார்.

“இவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் ..? ”

“அடித்தார்கள்… உதைத்தார்கள்… எங்கட உடுப்புகளைக் கிழித்தார்கள். அசிங்கமாகவெல்லாம் கட்டியணைத்தார்கள் . . .தங்கள் ஆசைகளைத் தீர்க்க … முயன்றார்கள்… ”

அதற்கப்பால் எதையுமே சொல்ல முடியாமல் ஒவ்வொருவரும் விம்மி உடைந்து பொருமிப் பொருமி அழுதுகொண்டிருந்தார்கள்.

அழுகைகள் முடியும்வரை அவர் பொறுமையாக அப்படியே நின்றிருந்தார்.

“பிள்ளைகள்! ஆம் … நான் உங்களை என் பிள்ளைகள் போலவே நினைத்துப் பார்க்கிறேன். யாரும் அழ வேண்டாம். உங்கள் நிலை எனக்கு மிகுந்த வேதனை தருகிறது. நீங்கள் எந்தத் தவறும் செய்யாத சாதாரணப் பிரஜைகள். இந்த இராணுவத்தினர் உங்களுக்குச் செய்த அநீதிகளிற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இப்போ நீங்கள் எல்லோரும் அமைதியாக உங்களுங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். இனிமேல் இப்படியேதும் நிகழாவண்ணம் நான் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களிற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.”

அவர் இரண்டு கைகளையும் கூப்பி, தலையைச் சரித்துக் கண்களால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

நாங்கள் கனவிலும் நினைத்திராத ஒரு மாயப் பொழுது அது!

முகாமை விட்டு வெளியேறினோம். ஓளியிழந்த தெருவில் நீளமாய் நடக்கத் தொடங்கினோம்! புதிய நம்பிக்கைகளை மனம் ஒத்தி வைத்திருந்தது! அந்த இரவைக் கடப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களையும் திட்டமிடல்களையும் மனம் சிந்திக்க வேண்டியுமிருந்தது! சுற்றியிருந்த அச்சம் விலகாமலே அந்த இரவு கடந்து போனது!


1989ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி…

இயந்திரங்களின் ஆதிக்கத்துடன் அதிர்ந்துகொண்டே விடிந்தது ஒரு அதிகாலைப் பொழுது! துப்பாக்கிகளின் ஓசையில் ஊர் திணறியது! யாரும் எதிர்பார்த்திராத ஒரு கனவின் ஈன ஓசை எல்லோர் காதுகளிலும் விழத் தொடங்கி யிருந்தது! யாரும் விரும்பாத ஒரு துயர்மிகுந்த மெல்லிய கானம் காற்றில் மிதந்துகொண்டிருந்தது! ஒரு பிரளயத்தின் பின்னரான பேரமைதிக்கு அணிசேர்ப்பதாய் உயிரற்ற உடல்கள் வீதிவழியாய் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன – கடினமான பூட்ஸின் ஒலிகள் பிணங்களை இழுத்துச் செல்லும் கழுகுகளின் சிறகோசையாய் அமைதிக்கான பேரிசையை மீட்டிக்கொண்டிருந்தன ..!

அந்த நாளின் நகர்வு, காலம் காலமாய் மீட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது!

அந்தப்பொழுதின் பின்னரான எந்தப் பொழுதிலும், நான் பிறந்த என் மண்ணை மகிழ்வோடு மிதிக்க எனக்கொரு வரம் கிடைத்ததில்லை! அன்பும் ஆரவாரமும் பொங்கும் எங்கள் வீட்டில், நிறைவாக ஓரிரவு உண்டு உறங்கியெழும் அதிர்ஷ்டம் எனக்கின்னும் அமையவில்லை! என் அருமைத் தம்பியைக் கண்டு கதைத்து மகிழும் ஒரு இன்பப் பொழுதெனக்கு வரவேயில்லை! ஒரு புன்னகை சிந்தவும் உறவுகளைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் சிந்தவும் ஒரு பொற்காலம் கைகூடவில்லை! கனவுகளை நாமின்னும் பகிர்ந்துகொள்ள வில்லை! நிலாவில் நீரிறைத்து நீராடி மகிழவில்லை!

பந்தயங்கள் பிடிக்கவில்லை – தோப்படித்துச் சிரிக்கவில்லை! அம்மா குழைத்துத் தரும் சோற்றை அடிபட்டு வாங்கி உண்டு களிக்கவில்லை! ஆளுக்காள் பகிடி விட்டு, விழுந்துவிழுந்து சிரிக்கவில்லை..! இன்னும் பல இல்லை … இல்லையென்றாகி …

குருதியுறைந்த புழுதிமணம் கமழ, யாருமில்லாத மாலைப் பொழுதொன்றில், என் தம்பியவன் தனியாக அங்கு வந்தானாம்! காய்ந்த சருகுகள் நொறுங்க .. . நெளிந்து போன ‘கேற்’றைத் தள்ளித் திறந்து கொண்டு, பூட்டிய வீட்டினைச் சுற்றி வலம் வந்து உள்ளே முற்றத்தில் நின்ற பிச்சி மரத்தில் ஒரு கையை ஊன்றியபடி கன்னம் குழி விழும் புன்னகை யோடு எதிரில் நின்றானாம்! தோளின் மீதிருந்த துப்பாக்கியை நிலத்தில் ஒரு கையால் ஊன்றியபடி, அரும்பு மீசையில் படிந்திருந்த வியர்வைத் துளிகள் மெல்லிய மஞ்சள் வெயிலில் பளபளவென்று மின்ன, புன்னகை மாறாமலே கேட்டானாம் …

“அப்பாச்சி சுகமாய் இருக்கிறீங்களே?”

“ஏதோ இருக்கிறன் மோனை .. .”

“அம்மா வரேல்லையோ ..? ”

“இல்லையப்பு .. .”

“இளையக்கா வந்திருப்பாவே ..!!”

“இல்லை ராசா வரேல்லை .. .”

“தங்கச்சியும் வரேல்லையே ..? ”

“ . . .”

புன்னகையை மேவி, மனத்தின் வலிமைகளைத் தாண்டி …கண்களினுள் கசிந்திருந்த … அந்தத் துயர்படிந்த ஏக்கம் வார்த்தைகளின் மெல்லிய அசைவுகளில் மெதுவாய்க் கரைந்து, அங்குள்ள சுவர்களிலும் மரங்களிலும் சருகுகளிலும் பட்டுப் பரவி, ஒரு காலத்தை மீட்டும் மெல்லிய இசையென இன்னமும் கேட்டபடியே இருக்கிறது..!

– 1996

– 2011இல் பொங்குதமிழ் இணையச் சஞ்சிகையில் பிரசுரமானது.

– நிலவுக்குத் தெரியும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2011, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

குறிப்பு:- வடமராட்சியில் ‘லிபறேசன் ஒப்பறேசன்’ இராணுவ நடவடிக்கை 1987 மே 26இல் ஆரம்பமானது. 1987 யூன் 29இல் ஜே.ஆர். ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய இராணுவம் ஈழ மண்ணில் வந்து நிலை கொண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *