(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[இந்தத் தலைப்பின்கீழ், சில பண்டிதர்கள் தங்க ளுடைய மனப் போக்கின் மார்க்கங்களைக் குறித்து எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லோரும் நெல்லை உலர்த்துவதைக் கண்ட எலி தன்னுடையலை உலர்த்திய மாதிரி, நானும் என் கதைகளின் வரலாற்றை எழுதத் துணிந்தேன். இக்கட்டுரை யில் உண்மையைத் தவிர யாதொருகுணமும் காணக் கிடைக்காது என்பதை வாசகர்களுக்கு விநயத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.]
இவ்விஷயத்தை ஒரு சிறிய நாடக ரூபத்திலேயே வெளியாக்குவது சுலபமாயிருக்கும். இரண்டே பாத்திரங்கள்! ஒன்று, ‘மலய மாருத’த்தின் பத்திரா சிரியர்; இரண்டாவது நான். ஆனால், இங்கே, நான் என்பது வாஸ்தவத்தில் இரண்டு ஆசாமிகள் ; அதாவது என் மனத்தின் வாதியும் என் மனத்தின் பிரதிவாதியும்.
அங்கம் I. காட்சி 1.
[இடம்: ‘மலயமாருத’த்தின் காரியாலயம்.]
பத்திராசிரியர்: உங்களிடமிருந்து ஒரு கதை கிடைத்து வெகு நாட்களாய்விட்டன. இப்போது-
நான்: அதற்கு என்ன தடை? நாளைக்கே ஒன்று அனுப்புகிறேன். கதை வேண்டுமா? கட்டுரை வேண்டுமா?
பத்திராசிரியர்: எதுவாயிருந்தாலும் சரி.
நான்: நாளைக்கு இந்நேரத்திற்குள், இரண்டில் ஒன்றை அனுப்பிவிடுகிறேன்.
பத்திராசிரியர்: மறதியாய் இருந்துவிடக் கூடாது. நான்: கட்டாயம் அனுப்புகிறேன். (இரு கக்ஷி யும் முணுமுணுத்தல். பிரிதல்.)
அங்கம் II. காட்சி 1.
[அதிலிருந்து மூன்றாவது நாள். இடம்: என்னுடைய வீடு.]
என்னுடைய மனத்தின் வாதி: மறந்தே போய் விட்டாயே! ‘மலய மாருத’த்திற்கு ஒரு கதை எழுதி அனுப்ப வேண்டாமா?
மனத்தின் பிரதிவாதி: நான் ஒன்றும் மறந்து போகவில்லை. எனக்குக் கொஞ்ச நேரமாவது ஒழிந்தால்தானே? நான் என்ன, சோம்பேறித் தனமாய்ப் பொழுதை வீண் அடிக்கிறேனா?
வாதி: அது ஏது!
அங்கம் II காட்சி 2
[அதிலிருந்து ஐந்தாவது நாள். என்னுடைய வீடு.] v
மனத்தின் வாதி: ‘மலய மாருதம்’ ஞாபகத்தில் இருக்கிறதோ? அடியோடு நழுவ விட்டாயோ?
பிரதிவாதி: நழுவவிடவாவது! நான்தான் எப் பொழுதும் அதே எண்ணமாயிருக்கிறேனே! ‘கதை எழுதுவதா, அல்லது கட்டுரை எழுதுவதா’ என் பதை முதலில் தீர்மானிக்க வேண்டாமா? வெறுமனே அவசரப்பட்டால் மாத்திரம் போதுமா?
வாதி: அவசரப்படுத்துகிறேனா! போன புதன் கிழமை சரியாய் ஒரு மணிக்கு வாக்குதத்தம் செய் தது, மறுநாள் ஒரு மணிக்குள் கொடுப்பதாக-
பிரதிவாதி: புதன்கிழமை ஒரு மணிக்கா ? எனக் குத் தெரியும், அதில் ஏதோ விக்கினம்உண் டென்று. ராகுகாலத்தில் ஒரு காரியத்தை ஒப்புக் கொண்டால்-
வாதி: சரி! ராகுவின்மேல் பழியைப் போடப் போகிறாயா? ஒரு பாம்பின் தலையா உன்னைத் தடுத்து நிற்கிறது?
பிரதிவாதி: நீ சொல்லுகிறது சரிதான். ராகு மாத்திரம் என்ன பொல்லாதது? கேது மாத்திரம் என்ன நல்லது? இரண்டும் சேர்ந்துதானே ஒரு முழுப் பாம்பு? அப்படியிருக்க, ராகுவை மட்டும் பழிப்பானேன் ? ஏன் கேது காலம் என்று சொல் லக் கூடாது? இதை ஆராய்ச்சி செய்து ஒரு கட் டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது.
வாதி: எதைக் குறித்தாவது எழுது; வீண் பொழுது போக்காமல், காரியத்தைத் தொடங்கினால் போதும்.
அங்கம் III காட்சி I
[அதற்குப் பிறகு ஏழாவது நாள். வீட்டில் என்னுடைய ‘படிப்பு அறை’.]
மனத்தின் வாதி: கோணற்சித்திரங்களை எழுதி, நல்ல காசு கொடுத்து வாங்கின கடிதங்களை வீணாக் காமல், கதையை எழுது, பார்க்கலாம்.
பிரதிவாதி: நீ சொல்வது நியாயந்தான். கடிதத் திற்கு ஏன்தான் இப்படி விஷம் ஏறுகிற மாதிரி விலை ஏறிக்கொண்டு போகிறதோ? எல்லாம் வியா பாரிகளின் கிருத்திரிமம் என்றே தோன்றுகிறது.
வாதி: அது எப்படியாவது இருக்கட்டும். கதையை எழுது.
பிரதிவாதி: ‘ யுத்தத்தினால் காகிதத்திற்கு அதிகச் செலவு ஏற்பட்டுவிட்டதா, கிராக்கி உண்டாக? எல்லாம் –
வாதி: கதை, கதை, கதையை எழுது.
பிரதிவாதி: வெறுமனே வெருட்டாதே. எதைக் குறித்து எழுதுவது என்று யுக்தி சொன்னால் உப யோகமாக இருக்கும். எந்த விஷயத்தைப் பார்த்தாலும், யாராவது அதைப்பற்றி முன்னாலேயே எழுதியிருக்கிறார்கள். எனக்குத் தோன்றுகிறது என்னவென்றால், நாம் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிறந்தது ஒரு பெரிய தப்பு. முன்பே பிறந்திருந்தால் உலகத்தில் எல்லாம் புதிதாக இருந்திருக்கும். தாராளமாகப் ‘பிளாட்டு’கள் கிடைத்திருக்கும் –
வாதி: பிறவியைக் குறித்து இப்பொழுது செய் யக் கூடிய நிவர்த்தி என்ன இருக்கிறது? ஆக வேண்டிய காரியம் ஒரு கதை எழுதல். அதைச் செய். பார்க்கலாம்.
பிரதிவாதி: நாம் மாத்திரம் காளிதாஸர், கம்பர், ஷேக்ஷயர், இவர்களுக்கு முன்பே பிறந்திருந் தால் அவர்கள் எழுதியிருப்பதையெல்லாம் நாம் முன்னதாகவே எழுதியிருப்போம் எழுதுவதற்குப் புதிதாய் ஒன்றும் அகப்படாமல் தவிப்பது அவர் களுடைய பாகத்திற்குக் கிடைத்திருக்கும்.
வாதி: இதெல்லாம் தெரிந்துதானே ஒரு கதை எழுதுவதாக ஒப்புக்கொண்டாய்? ஒப்புக்கொண்டபடி முதலில் செய்துவிட்டுப் பிறகு உன் ஜன்மாந்தரப் பிரதாபங்களைச் சொல்லிக்கொள்ளேன்.
(இந்தச் சமயம், அறைக்குள் குழந்தை வருகிறது. தான் நாடக பாத்திரங்களில் சேர்க்கப்படவில்லை என்பதை அறியாமலே, உள்ளே நுழைந்து பேசுகிறது.)
குழந்தை: அப்பா, இன்னிக்காவது என்னைக் கோவிலுக்குக் கூட்டிண்டு போறயா?
நான்: ஆகட்டும். இன்னும் கொஞ்ச நாழி கழிக் கட்டும். இப்போ ரொம்ப வெய்யிலாய் இருக்கிறது.
(குழந்தை அறையை விட்டுப் போகிறது.)
வாதி: பார்த்தாயா! குழந்தையின் வாயில் யக்ஷிணி பேசும் என்பார்களே; அது சரிதான்.
பிரதிவாதி : அது இப்பொழுது என்ன பேசியது?
வாதி: அது கோவில் என்று சொல்லிற்று. இந்தக் கதை ஒரு கோவிலில் நடக்கட்டும்.
பிரதிவாதி: புதிதாய் என்ன இருக்கிறது? கோவிலில் தெய்வம் பிரத்தியக்ஷமாய் வந்து பேசுவது விக்கிரமாதித்தியன் கதை முதலியவைகளில் வந்தாய்விட்டது. ஒரு மனிதன் தெய்வம்மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு பேசுவதை, கிப்ளிங்க் தம்முடைய (க்ருஷ்ண மல்வேநி’ என்கிற கதையில் உபயோகித்துவிட்டான்.
வாதி: கோவிலில் கர்ப்பக்கிருகம் ஒன்றுதான் இருக்கிறதா? த்வஜ ஸ்தம்பம் இல்லையா? குளம் இல்லையா?
பிரதிவாதி: த்வஜஸ்தம்பம் எதற்கு உபயோகம்? எவனாவது அதில் தூக்குப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்தமாதிரிக் கதை ‘மலய மாருத’க்காரர் களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ?
வாதி: அட, அது வேண்டாமே; குளத்தில் விழச் செய்யேன். ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் சரி. அப்பொழுது கதை ஆரம்பமாகிவிடும் அல் லவா? ஆரம்பந்தானே கஷ்டம்?
பிரதிவாதி: சரி. அதை ஒரு பொற்றாமரைக் குளமாக வைத்துக்கொள்ளுவோம்.
வாதி: எதற்காக?
பிரதிவாதி: பொற்றாமரைக் குளங்களில்தான் ஒருவிதத் தாமரையுமே இருக்கிற வழக்கம் இல்லை. அதற்குப் பதிலாக, நல்ல பச்சை வர்ணத்தில் பாசி படர்ந்திருக்கும், வழுக்கி விழுவதற்குச் சுலபமாய். கதாநாயகி அதில் வழுக்கி விழப்போகிறாள். ஏனென்றால் அவளுடைய குரும்புக்காரத் தம்பி அவளைத் தள்ளிவிடுகிறான். சற்று நில்லு ; அகரா தியைப் பார்க்கிறேன்.
வாதி: எதற்காக?
பிரதிவாதி: ‘குரும்பு’க்கு, சின்ன ‘ர’வா, பெரிய ‘ற’ வா, என்று அறிவதற்குத்தான். புஸ்தகத்தில் ‘குறும்பு’ என்று எழுதியிருக்கிறது. இனிமேல் ஞாபகம் இருக்கவேண்டும்: குறும்பு, குறும்பு, குறும்பு. ‘எரும்பு’க்குத்தான் சின்ன ‘ர’ போல் இருக்கிறது.
வாதி: (அகராதியைப் புரட்டிவிட்டு) தப்பு. அதுவும் ‘எறும்பு’ என்று பெரிய ‘ற’ தான்.
பிரதிவாதி: அதையும் நெட்டுருச் ச் செய்து கொள்ள வேண்டும். எறும்பு, எறும்பு, எறும்பு. குறும்புக்கார எறும்பு. எறும்புக்காரக் குறும்பு-
வாதி: வெகு அழகாயிக்கிறது. இவ்விதம் நீ இலக்கணம் கற்றுக் கொள்ளுகிறவரைக்குமா உன் கதாநாயகி குளத்து ஜலத்தில் தத்தளித்துக்கொண்டிருப்பாள்?
பிரதிவாதி: அவசியம் இல்லை. உடனே குளத்தில் குதிப்பதற்குத் தயாராகக் கதாநாயகன் கரை மேல் இருக்கிறான். ஆனால் அவன் குதித்து அவளைக் காப்பாற்றுவதாகவும், அதன் தொடர்ச் சியாக அவர்கள் காதல் கொள்ளுவதாகவும் எழுதினால், இதில் புதிதாய் என்ன இருக்கிறது? இம் மாதிரி நூற்றெட்டுக் கதைகள் வந்தாகிவிட்டன. இது நூற்றொன்பதாவதாய் இருக்கும்.
வாதி: வாஸ்தவம்.ஆனால் இதில் நூதனத்தை எப்படி நுழைக்க எண்ணுகிறாய்?
பிரதிவாதி: அவன் ஜலத்தில் குதிப்பதற்கு முன்னதாகவே, “நான் இப்பொழுது உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு என்னிடம் காதல் கொள்ளக் கூடாது. எனக்கு ஏற்கனவே இரண்டு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள்” என்று இரைந்து கத்த வேண்டும். அது புதிதாய் இருக்குமல்லவா?
வாதி: சந்தேகம் இல்லை. ஆனால் ஒருவன் சட்டியைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு தெருவில் போனால் அதுவும் புதிதாய்த்தான் இருக்கும்.
பிரதிவாதி: உனக்கு இஷ்டமில்லை என்றால், அது வேண்டாம். இதற்கு என்ன சொல்லுகிறாய்? நாயகன் ஒரு பட்டினவாசி. இதுதான் முதல் தடவை, அவன் கிராமத்திற்கு வந்தது. இதற்கு முன் குழாய் ஜலத்தைத் தவிர, ஒருவிதமான ஜலத்திலும் அவன் ஸ்நானம் செய்ததில்லை. ஆகை யால் அவனுக்கு நீந்தத் தெரியாது. இருந்தாலும் தன்னுடைய வீரகுணத்தினால் நாயகி ஜலத்தில் விழுந்ததைக் கண்டவுடன், மறு யோசனையின்றித் தானும் குதித்துவிடுகிறான்.
வாதி: அப்புறம் நீ போய் இருவரையும் கரை யில் இழுத்துப்போட்டு ஆசீர்வதிக்கப் போகிறாய் போலும்!
பிரதிவாதி: நான் கதையை எழுதுவதற்காகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் கிறேன். காப்பாற்றப் போகிறவள் கதாநாயகியே. அவளுடைய வீட்டுப் புழைக்கடையில் ஓடும் வாய்க் காலில் சிறுவயசு முதல் நீந்திப் பழகினவளாத லால், தன்னைக் காப்பாற்ற வந்த நாயகனை யாதொரு கஷ்டமும் இல்லாமல் அவள் காப்பாற்றி விடுவாள். மூர்ச்சையடைந்த அவனைப் பத்திரமாய்க் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவாள். அது முதல் அவர்களுடைய அந்நியோன்னிய வாஞ்சை ஓங்கி வளரும்.
வாதி: இது இருக்கலாம். ஆனால் இந்தப் ‘பிளாட்’டில் இரண்டு குறைகள் இருக்கின்றன.
பிரதிவாதி: என்ன குறைகள்?
வாதி : இது முழுவதும் தித்திப்பாயிருப்பதைத் தவிர வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடுகிறது. புரோ கிதரும் மேளகாரனும் குளக்கரையிலேயே காத்துக்கொண்டு இருக்கிற மாதிரி தோன்றுகிறது. கொஞ்சம் தாமசம் வேண்டும்; கொஞ்சம் கைப்பு வேண்டும். குலாப் ஜாமுனுக்கு, அல்பம் கைப்புள்ள குங்குமப்பூவைச் சேர்த்தால்தான் ருசி சோபிக்கிறது. அந்தமாதிரி, கொஞ்சமாவது துக்கத்தை இந்தப் ‘பிளாட்’டில் கலக்கவேண்டும்.
பிரதிவாதி: இரண்டாவது குறை என்ன ?
வாதி: தேகப்பயிற்சியில் நாயகிக்கு நாயகன் சளைத்தவன் தானே என்கிற எண்ணத்தினால், நாளடைவில் அவளுடைய மனத்தில் சற்று அலக்ஷ் யமும், அவனுடைய மனத்தில் சற்றுப் பணிவும் தோன்றிவிடும். பிறகு, தம்பதிகளின் வாழ்வில் பூர்ண சந்தோஷம் இராது.
பிரதிவாதி: இந்த இரண்டு குறைகளையும் ஒரே உபாயத்தினால் நீக்கப்போகிறேன்.
வாதி: எவ்விதம்?
பிரதிவாதி: குளக்கரைப் படலத்திற்கு அடுத்த நாலைந்து நாட்களில் இருவருக்கும் சிநேகம் வளர்ந்துகொண்டு வரும் மத்தியில், அவன் திடீ ரென்று அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே கிராமத்தை விட்டுப் போய்விடுகிறான்.
வாதி: எதற்காக?
பிரதிவாதி: அதுதானே ஒரு ரகசியம் ! ஊரில் யாருக்கும் விளங்கவில்லை. இரண்டு மூன்று வாரம் அவனுடைய சமாசாரமே கிடைக்கவில்லை. அவள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிப் புண்படுகிறாள். கடைசியில் ஒரு பலத்த நோய்க்கு இரையாய்ப்போகும் சமயத்தில், அவன் கையில் ஒரு பளபளப்பான கடிதத்துடன் திரும்பி வருகி றான். ரகசியம் வெளியாகிறது ;- துக்கக் கலப்புப் போதுமா?
வாதி : ரகசியம் என்ன? சொல்லு.
பிரதிவாதி: நீ இரண்டாவது குறையாய்ச் சொன்ன பயந்தான் அவனுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால், பாவம்! தன்னுடைய அறியாமை யைக் குறித்து அவளிடம் பேசுவதற்கே அவனுக் குத் தைரியம் இல்லை; அவ்வளவு வெட்கம். ஆகை யால் அவன் ஒன்றுமே சொல்லாமல் புறப்பட்டுப் போயிருக்கிறான். போய் என்ன செய்திருக்கிறான்? சென்னபட்டணத்தில் உள்ள ஒரு ‘ நீச்சல் கிளப்’பில் சேர்ந்து இருபது நாள் இரவும் பகலுமாய் முயன்று, மீன்போல் நீந்தக் கற்றுணர்ந்து, கிளப்பின் அதிகாரிகளிடமிருந்து அத்தாட்சிப் பத்திரமும் வாங்கி வந்திருக்கிறான்.
வாதி: சபாஷ்! அந்தப் பத்திரத்தை வீசிக் கொண்டுதான் அவளிடம் ஓடிவருகிறான் போலும்!
பிரதிவாதி: ஆம். இனிமேல் அவர்கள் ஆயுசு முழுவதும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதில் உனக்குச் சந்தேகமுண்டோ? இந்தப் ‘பிளாட்’டுக்கு என்ன சொல்லுகிறாய்?
வாதி: தகுந்ததாய் ஒரு வார்த்தையும் சொல்ல முடியாமல் திணறுகிறேன் என்பது உனக்குத் தெரியவில்லையா? சொல்ல வேண்டியதை ‘மலய மாருத’ப் பத்திரிகையின் ஆசிரியர் சொல்லிக் கொள்ளட்டும்.
பிரதிவாதி: இப்பொழுது கிடைத்த ‘பிளாட் டைச் சுற்றி வார்த்தைகளைக் குவித்துக் கதையை எழுதிவிட்டால் என்னுடைய கவலை நீங்கிவிடும்.
வாதி செங்கல்களைச் சேகரித்தாய்விட்டது, இனிமேல் வீட்டைக் கட்ட வேண்டியதுதான் பாக்கி என்று சொல்லுகிற நிலையில் இருக்கிறாய்.
பிரதிவாதி: அது ஒரு க்ஷணத்து வேலை. நான் கதையை எழுதிக் கடிதங்களைக் கீழே போடப் போட அருகில் உட்கார்ந்துகொண்டு, அவைகளைப் பக்கவாரியாக அடுக்கி வைப்பதற்கு யாரையாவது கூப்பிடலாம்.
வாதி: இந்த வாசாலம் இல்லாமற் போனால், சற்று முன்பு, வார்த்தைக்கு எழுத்துக் கூட்டத் தெரியாமல் இருந்தாயே, அந்த ‘எறும்பு ‘கூட உன்னை எங்கேயாவது இழுத்துக் கொண்டு போய் விடும். கதையைக் கட்டு.
[கதை அவ்விதமே கட்டப்படுகிறது.]
– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.