என்ன விலை அழகே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 6,919 
 
 

முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு ‘நகமும் சதையும் போல’ அல்லது ‘நீரும் மீனும்போல’ என்பது போன்ற சில வழமையான சொற்றொடர்களைத்தானே கதைகளிலெல்லாம் பயன்படுத்துவார்கள். அதெல்லாம் இப்போது கேட்பதற்கே சலித்துப்போய் விட்டதே…
‘சுனாமியும் சுமாத்ராவும் போல’ அல்லது ‘Q வும் U வும் போல’ அல்லது ‘காக்கிச்சட்டைகளும் லஞ்சமும் போல’ என்று புதிதாக ஏதாவது சொன்னாலென்ன…?

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது.

ஒருகாலத்தில் போற்றப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விடயங்கள் இப்போதெல்லாம் பழைய மினுமினுப்புக் குறைந்து பாவனையின்றி போய்க் கொண்டிருக்கிறது. பழைய இசைத்தட்டுக்கள், வீடியோ கெஸட்டுகள், டேப்ரெக்கோடர்கள், டைப்ரைட்டர்கள், ப்ளொப்பி டிஸ்க்குகள்…உண்மை..நேர்மை..காதல்..பக்தி ..etc. etc. என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நகரின் கடைத்தெரு வழியாக நடந்து கொண்டிருந்தேன்.

அப்போது பேனா ஒன்று தேவையென்பது ஞாபகத்துக்கு வர வாங்கலாம் என்று ஃபென்ஸி கடை ஒன்றினுள்ளே நுழைந்தேன்.

ஒருவரைப் பார்த்தவுடனே ‘எழுதுகிற ஆள்’ என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை. நான், ‘பே…’ என்று ஆரம்பிப்பதற்குள் போல்ட் பொயின்ட் பேனாப் பெட்டியை எடுத்து அதில் ஒன்றை நீட்டியே விட்டார் கடைக்காரர். அதை வாங்கிக்கொண்டு கடையை நோட்டமிட்டேன். கண்ணாடி சட்டகத்தினுள் நிறைந்திருந்த விதவிதமான அலங்காரப் பொருட்களுக்குள் என்னைக் கவர்ந்தது ஒரு அழகான பழைய காலத்து பவுண்டன் பேனா.

‘அட! இந்தக் காலத்திலும் மையூற்றுப்பேனாவெல்லாம் வாங்குபவர்கள் இருக்கிறார்களா?’ அதைக்காட்டி விசாரித்தேன்.

என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே வெளியிலெடுத்துத் தந்தவரிடம், ‘இதற்கு ஊத்துகிற மையெல்லாம் இருக்குதா என்ன?’ என்று கேட்டேன். அவர் லேசாய் சிரித்தபடி, ‘இதுக்கு அதெல்லாம் தேவையே இல்லை, ஸேர்’ என்றார்.

‘ஏன், மை தானாகவே சுரந்து வருமோ?’ என்றேன் அவருக்கு பதில் நக்கல் விடுவதற்காக.

‘இல்ல, இதுவும் ஒரு போல்ட்பொயிண்ட் பென்தான் ஸேர்’ சட்டென்று மூடியைத் திறந்து ஒரு தாளில் எழுதிக்காட்டினார். நம்பவே முடியாமல் ஆச்சரியத்தோடு அதை வாங்கி, ‘என்ன விலை அழகே…’ என்று நானும் ஒருதடவை எழுதிப்பார்த்தேன். அற்புதமாக எழுதியது, அப்படியே பழைய மையூற்றுப்பேனாவின் வடிவிலிருந்த அந்த அதிசயம்.

‘அதெல்லாம் சரி, என்ன விலை இது?’
பதில் சொன்னார் அவர்.

என் முகத்திலிருந்த அத்தனை சந்தோசமும் சட்டென வடிந்திருக்க வேண்டும் போல.

‘ப்ச்! இதெல்லாம் சும்மா! இந்த டீச்சர்ஸ் டே.. வலண்டைன்ஸ் டே.. அது.. இதுகளுக்கு ப்ரஸண்ட் பண்றதுக்குத்தான் சரி. ஸ்கூல் புள்ளைகள்தான் வழமையா வேண்டிட்டுப் போறதுகள்.’ என்று

என்னைத் தேற்றுவது போலக்கூறி அதை வாங்கித் துடைத்த பின் மீண்டும் இருந்த இடத்தில் வைத்து விட்டார்.

லேசான அவமானத்துடன் கடையை விட்டு இறங்கி நடைபாதைக்கு வந்தேன்.

‘அது என்ன? போல்ட்பொயிண்ட் பேனாவா? இதெல்லாம் இப்பவும் வருதா அண்ணன்?’

‘சேச்சே! இதுவும் ஒரு லேசர் பென்தான். சரியாக அந்தக் காலத்துப் பழைய போல்ட் பொயிண்ட் பென்போலவே இருக்குது..! அவ்வளவுதான்!’
என்று கி.பி. 2042ல் இதே கடைத்தெருவின் சுப்பர் மார்க்கட்டின் 76 வது மாடியிலிருக்கும் கடையொன்றிலே நிகழவிருக்கும் ஓர் உரையாடலை இன்றிரவு நான் எழுதப்போகும் சிறுகதைக்காக மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது…

அந்த அவமான உணர்வு கணிசமாகக் குறைந்திருந்தது.

– 06 செப்டம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *