என்னை விட்டுப்போகாதே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 7,990 
 
 

‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’

‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என் விருப்பத்திலா பிரிகிறேன்..? விதி. நம்மைப் பிரிக்கிறது.’’

‘’ விதி என்றெல்லாம் பழிபோட்டு நம் பிரிவை நியாயப்படுத்தாதே. கொஞ்சம் யோசித்துப் பார். நாம் எத்தனைகாலம் ஒன்றாகவே ஒட்டி ஒற்றுமையுடன் இருந்தோம்.. ஹூம்.. ‘’

‘’ புரியுது. நீ நான் பூவாயிருந்த பொழுதில் இருந்தே என்னுடன் ஒட்டி உறவாடி என் எல்லா கஷ்டத்திலும் காற்று மழையிலும் ஒன்னா இருந்தே.. அதை மறுக்க முடியுமா..?’’

‘’ உண்மைதான். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு இணைப்பு இருந்தது. நீ இல்லை என்றால் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை என்றெல்லாம் ஊரும் உலகமும் சொல்லும் வகையில் இருந்தோம்.. ஹூம் யார்கண் நம்மீது பட்டதோ.. இப்போது பிரிந்துகொண்டு இருக்கிறோம்.. ‘’

’’ ஐயோ, நீயாவது எந்த இடத்திலாவது போய் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கு.. ஆனால் .என்னை நினைத்துப்பார்.. என்னை அப்படியே கடித்துத் தின்ன ஒருவன் காத்திருக்கிறான்.. என் நிலைமை மோசம் இல்லையா..? ‘’

‘’ என்ன அப்படிச்சொல்லிவிட்டாய்..? நீ என்னைவிட்டுப்பிரிந்தபின் எனக்கு அப்படி என்ன மதிப்பிருக்கிறது என்று நினைக்கிறாய்.. நீ இல்லாத நான் ஒரு குப்பைத்தொட்டிக்கே போய்ச் சேரவேண்டும். என்னை எந்த மனிதரும் சீந்தக்கூட மாட்டார்கள்..’’

’’ அது என்னவோ உண்மைதான். நான் உன்னுடன் ஒட்டி இருக்கும் வரைதான் உனக்கும் ஒரு விலை உண்டு என்பதை நான் அறிவேன். நான் இல்லாத உன்னை மனிதர்கள் என்ன மிருகங்கள் கூட மதித்திடாது. மிதிபடுவாய். சீர்கெடுவாய். அழிந்தும் போய்விடுவாய். பாவம்தான் நீ..’’

’’ இது தெரிந்துமா என்னைவிட்டுப்பிரிந்து அந்த மானிடனுடன் சங்கமிக்க நினைக்கிறாய்..? யோசித்துப் பார். நாம் சிலகாலம் முன்வரை நம்மைப் பிரிக்க எத்தனையோ முயன்றும் யாராலும் பிரிக்க இயலாதபடி அன்பால் ஒட்டுப்பசை போல ஒட்டி இருந்ததால் பிரித்திட கடினமாய் இருந்தோம். காலம் கனிந்ததும் நம்மிடையே மெல்ல மெல்ல ஒரு இளகல் தன்மையும் விலகல்தன்மையும் வந்ததால் எளிதாக நம்மைப்பிரித்து விட்டார்கள். ‘’

‘’ வேறு வழிதான் என்ன இருக்கிறது..? நம் விருப்பப்படியா எல்லாமே நடக்கிறது. நாம் ஒன்றாக இருந்தாலும் என் கனிவு அதிகப்பட அதிகப்பட அனைவரையும் கவர்ந்தேன். எல்லோரும் எப்போது நீ என்னைவிட்டுப் பிரிவாய் என்று காத்திருந்து நீ சற்றே தளர்ந்து உன் பசுமை இழந்து மஞ்சள்வானம் போல் நிறம்மாறினாய். ஹூம்.. விதிதான் ‘’

‘’அப்படி முழுதாக என் மேல் குற்றம் சொல்லவும் முடியாது. உன் இயல்பு கனிவுத்தன்மை. உன் இனிமை உன் குணம் மணம் அனைவரையும் கவர்வதில் வியப்பென்ன இருக்கிறது.. ‘’

‘’ஹூம்.’’

‘’ ஆனாலும் என்னைவிட்டுப் பிரிந்து ஓர் குழந்தைக்கு உன்னை அர்ப்பணித்து அந்த குழந்தையின் உடலில் ஆன்மாவில் கலந்து அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணை ஆகி இருந்தால் அகமகிழ்ந்திருப்பேன்.. போயும் போயும் ஒரு சாதாரண மனிதனுக்கு இரையாகப்போகிறாய் என்பது தான் என் வருத்தம்..’’

‘’ உன்னால் என்னைக் காக்க முடியவில்லையே.. நீ என்னில் இருந்து இப்படி தளர்ந்திருக்கவில்லையானால் என்றும் ஒன்றாக இருந்திருக்கமுடியுமா என்பது சந்தேகம் என்றாலும் இன்னும் சில காலம் ஒன்றாய் இருந்திருக்கமுடியும்.. இப்போது வேறு வழியில்லை.. ‘’

‘’ மனம் வலிக்கிறது. என்னை விட்டு மெல்லமெல்ல பிரிக்கிறார்கள் உனக்கு வலி இல்லையா..?’’

‘’ இல்லை. என்னைப் பக்குவப்படுத்திக்கொண்டுவிட்டேன். என்னைக் கனியவைத்துவிட்டான் அந்த மானிடன். இனி அவன் என்னை இரையாக்கிக்கொள்வது தான் மிச்சம் .. இதோ வந்துவிட்டது அந்த நேரமும்..’’

‘’ ஆம் பிரிக்கிறார்கள் நம்மை. வலியுடன் நான் மெல்ல மெல்ல உன்னைவிட்டுப் பிரிகிறேன்.. ஓ.. என்னை உன்னிலிருந்து பிரித்தே தூர எறிந்துவிட்டார்கள்.. நீ அவனது இரையாவதைப் பார்க்கக்கூட வழியில்லாமல் என்னை எங்கோ எறிந்துவிட்டார்களே.. நான் போகிறேன். என் இணையே…’’

‘’ போய்வா.. இனி நாம் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. இதோ என்னை விழுங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மனித மிருகம்.. பழமாகிய நான் இதோ மெல்ல மெல்ல அரைபட்டுப்போகிறேன் சென்றுவாவாழைப்பழத்தோலே..

பி.கு:

இக்கதை முத்தமிழ்மன்றம் தமிழ்மன்றம் தளங்களில் பதியப்பட்டுள்ளது. பத்திரிகை எதற்கும் அனுப்பவில்லை.

கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *