(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இது எந்த இடம்? இதெல்லாம் என்ன?”
“இதுதான் சினிமாக் கொட்டகை. பூலோகமா கைலாசமா என்று கேட்கிறாயே!…இல்லாவிட்டால் தூக்கமா?”
“ஆனால் இது தையற்காரன் கடை அல்லவா?”
‘பட்’ என்று என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு, “சும்மா உட்கார்ந்துகிட! இந்தப் பயல்களே இப்படித் தான்…’ என்றான் என்னுடன் பேசியவன்.
நான் சும்மா உட்கார்ந்திருந்தேன். ஆங்காங்கே விளக்குகள், வெள்ளை ஊமத்தம் பூவைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தன. தரை மகாஜனங்கள் கேஜகஜூ” என்று பேசிக்கொண்டும், புகையிலை எச்சிலைப் பக்கத்திலுள்ளவர் மீதெல்லாம் தெளித்துக்கொண்டும் இருந்தார்கள். எனக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு இரண்டணாப் பிரபு பீடி குடிக்க ஆரம் பித்தார். பீடியின் வாசனை-எழுபத்து ஈராயிரம் நாடிகள் என்பார்களே-அத்தனை நாடிகளையும் துளைத்தது. அத்துடன் பக்கத்திலிருந்தவர், பெரிய ரஸிகரைப்போல், சிகரெட் புகையை உருவ விசித்திரங்களுடன் மூக்காலும், வாயாலும் விட ஆரம்பித்தார். ஐப்பசி மாத ஆரம்பத்தில் மேகங்கள் வானத்தில் குப்குப் என்று வருமே, அது மாதிரி புகை வந்து கொண்டிருந்தது.
“ஏன் ஐயா, புகையை முகத்தில்தானா விடவேண்டும்?”
“ஏனையா முகரக்கட்டையை இந்தப் பக்கம்தானா வைத்துக்கொள்ள வேண்டும்?…பிரபுக்கள் என்றால் சோபாவுக்குப் போக வேண்டும்; தரைக்கு வரக் கூடாது”
எனக்குப் பேச வாயில்லை. சிவனே என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரண்டுதரம் மணி அடித்தார்கள்! ஓவ்வொரு ஊமத்தம் பூவாக அவிந்தது, மூன்றாவது மணி அடிக்கவும் முற்றிலும் இருள் சூழ்ந்தது. சினிமாவின் பெயர் “சகுந்தலை”
முதல் படம்: காலை வேளை, கரிச்சான்கள் பாடின. மைனாக்கள் பேசின. பெரிய அப்பளத்தைப் போல் சூரியன் வானில் தெரிந்தது. கலப்பைகளைத் தோளில் மாட்டிக் கொண்டு குடியானவர்கள் குறுக்கே சென்று கொண்டிருந்தார்கள்.
‘லைட்’ லைட்’ என்ற கூச்சல் கிளம்பிற்று.
“லைட் போட்டால் படம் தெரியுமா?” என்றேன்.
“நீ என்ன வெறும் பட்டிக்காடா? முதல் முதலிலே இப்பத்தான் சினிமா பார்க்கிறயா?” என்றான் பக்கத்திலிருந்தவன்.
“ஆமாம், சினிமாவுக்குப் புதுசு!”
“அப்படியானால் நான் எல்லாம் சொல்லுகிறேன். சந்தேகம் வந்தால் கேளு… இப்பொழுது படத்தில் இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தை ஏத்தச் சொல்கிறார்கள். அப் பொழுது படம் இன்னும் நன்னாத் தெரியும். முழு இருட்டில் ஓரு இடத்தில் நன்னா வெளிச்சம் தெரிந்தால், அங்கே உருவங்கள் தெரியும். புரிந்ததா?”
“புரிந்தது!” என்று சும்மா இருந்தேன். மறுநிமிஷம் ஏதோ ஒரு பிராணி துள்ளிக்கொண்டு வந்தது. ஏன் ஏதோ ஒரு பிராணி என்றால், பிராணியின் தலை தெரியவில்லை! வெள்ளைப் படுதாவுக்கு மேல் அதன் தலை போய்விட்டது!
நான் படுதாவைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுதே அந்தப் படம் இப்படியும் அப்படியுமாக ஆடிற்று.
“இப்பொழுது தெரிந்ததா?” என்றது ஒரு குரல். பேசியது மனிதனே அன்று: ஊன்றிக் கவனித்தேன். சினிமாத் திரைதான் பேசிற்று; “அழகு, உயிர்க் கூட்டம். ஜீவன்களின் லீலை-இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே,முழுசாக ஒரு மான் திரையில் வந்தா லல்லவா அது துள்ளுவதை ஜனங்கள் பார்ப்பார்கள்! நான் இல்லாவிட்டால் இதெல்லாம் ஏது? உயிரின் லீலையை வெளிப்படுத்த ஒரு ஒழுங்கான திரை வேண்டும், சமூகத்தின் வளர்ச்சி தெரிய ஒரு அமைப்பு இருக்க வேண்டும்- ஒழுங்காக இருக்க வேண்டும், உடம்புக்கு உருக் கொடுப்பது எலும்புக்கூடு எப்படியோ அப்படித்தான் ஒழுங்கான அமைப்பு சமூகத்திற்கும். அப்படியேதான் சினிமாவுக்குத் திரையும்”.
அதிருப்தி தொனிக்கும்படி ஜனங்கள் கூச்சலிட்டார்கள். தலை தெரியாவிட்டாலும் மான் துள்ளிக் குதித்துக் கொண் டிருந்தது. திரைக்குப் பொறுக்க முடியவில்லை. அது மேலும் பேசிற்று.
“ஒழுங்கு என்று அடித்துக் கொண்டிருக்கிறேன்; இந்த மான் தலை தெரியாமல் புரட்சி செய்து துள்ளிக் கொண்டிருக் கிறது. கட்டுக்குள் அடங்கவில்லை. புரட்சி அடங்கினால் ஒழிய அமைப்பு வெளியாகாது. கதிமோட்சம் கிடைக்காது.
மான் : இதெல்லாம் புரட்சி அல்ல. இதுதான் உயிரின் துள்ளல். அழகின் நர்த்தனம், ஜீவ லீலை கோடுகளையும் அத்துகளையும் மதிக்காது.
திரை : இதனால் என்ன பயன்?
மான் : இன்பந்தான் ஜீவனுடைய, போக்கு. லீலையில் சங்கமாகிறது.
ஜீவனும் கட்டின்மையும் தழுவும் இடம் லீலை. அதுதான் உயிரின் உயிர். அதன் ஒரு வடிவுதான் சினிமா.
“கட்டுக்கடங்காத உயிரின் துள்ளலை ஜனங்கள் மதிக்கக் காணோமே! காட்டாற்றைக் கண்டு வெருண்டு கூச்சலிடுவதுபோல், தலையில்லாத உன்னைப் பார்த்து கொட்டகையில் எவ்வளவு கை கொட்டுகிறார்கள் பார்த்தாயா?”
இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சட்டென்று ஒரு சத்தம் கேட்டது. படமும் காணோம், ஒன்றையும் காணோம்?.. ஒரே இருள்.
“என்ன ஐயா ஆகிவிட்டது?” என்று பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன், “படம் அறுந்துபோய் விட்டது. ஒட்ட வைக்க வேண்டும். பிறகு படம் தெரியும்” என்றார்.
“இந்த விசை யாரிடம் இருக்கிறது?”
“அதோ ஜன்னல் வழியாக இப்பொழுது வெளிச்சம் வந்ததே. அங்கே ஒரு ஆள் இருக்கிறான்-ஆபரேடர் அவனிடம்தான் இருக்கிறது.”
“ஒரு ஆளா இந்தப் படத்தைக் காட்டுகிறான்?”
‘‘ஆமாம். ஆள் என்றாலும் சரிதான். அறிவு என்றாலும் சரிதான். இந்தப் படத்துக்கெல்லாம் காரணம் விஞ்ஞானம், உயிரின் போக்கு வெள்ளத்தைப் போல் பரவும். திக்கு திசை இருக்காது. திக்கு திசையெல்லாம் காட்டுவது அறிவு. அது இல்லாவிட்டால் உலகம் இல்லை. அவன் இல்லாவிட்டால் சினிமா இல்லை. அறிவின் வலக்கை விஞ்ஞானம். படம் கூடப் பெரிதல்ல. அந்த ஆள்தான் முக்கியம். உயிர்கூடப் பெரிதல்ல; அறிவுதான்!” இதற்குள் பளிச்சென்று வெளிச்சம் வந்துவிட்டது. மான் திரை நடுவில் அடங்கிப் புல்மேய வந்தது. சினிமாவுக்கு வந்தது. புதிதாகையால் கால் மறத்துவிட்டது. பிறகு எழுந்திருந்து சோபாக்கள் நாற்காலிகள் இருக்கும் இடத்திற்குப் போனேன்.
யாரோ ஒரு ஜரிகைத் தலைப்பாகைக்காரர் டார்ச்லைட் அடித்துக்கொண்டு வந்தபோதிலும் தட்டுத்தடுமாறி நாற்காலிக்குப் போனார்.
நாற்காலியில் ஜாக்கிரதையாக உட்கார்ந்தார். இருந்தாலும் நாற்காலி ஒடிந்து கீழே சரிந்தது. நல்லவேளை. செட்டியாருக்குக் காயமில்லை. ஜரிகைத் தலைப்பாகை மட்டும் புகையிலை எச்சிலில் விழுந்து மஞ்சள் நீர் விளையாடிவிட்டது.
செட்டியார் அடுத்த நாற்காலிக்கு நகர்ந்தார். நாற்காலியைத் தூக்கிக்கிடாசுடா133 என்றார் சி னிமா மானேஜர். ஓர் ஆள் ஓடிவந்தான்.
‘‘செட்டியாரே! ஒரு வார்த்தை! இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டுதானே நிற்கிறீர்கள்! பழய பணக்காரன், பழமையானது ஒன்றுக்கும் கௌரவம் கிடையாதா? கௌரவம் எல்லாம் புதுசுக்குத்தானா?” என்று படபடத்தது பழய நாற்காலி.
“அப்படி அல்ல. பழசெல்லாம் உளுத்துப் போச்சு, தூக்கி குப்பையில் போடத்தான் லாயக்கு. பழசு என்கிற தற்காக மரியாதை கொடுக்க முடியுமா? பழமை நொண்டிக் குதிரை மாதிரி நம்மையும், நம்முடைய புது நாகரீகத்தையும் தாங்காது!
“ஆமாம்! புதுப் பணக்காரர்கள் நீங்கள் அப்படித்தான் பேசுவீர்கள்!” என்று மொண மொணத்துக் கொண்டிருக்கும் பொழுதே. ஒருவன் பழய நாற்காலியைத் தூக்கி கொட்டகைக்கு வெளியே தொப்பென்று எறிந்தான்.
செட்டியார் மெத்தை போட்ட நாற்காலியில் உட்காரப் போனார்.
‘”செட்டியாரே!’ என்றது நாற்காலி.
“ஏன்?”
“உங்களைக் கொட்டகைக்காரன் ஏமாத்தி விட்டான்!”
“ஏன்?”
“நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களே, ஜாஸ்தி பணம் கொடுத்தால் உயர்ந்த சாமான் கொடுக்க வேண்டியது தானே?”
“அதுதான் வியாபாரத்துக்கு அழகு நாணயம்.”
“இப்பொழுது அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினீர்களே, உங்களுக்கு இடம் எங்கே கிடைத்தது, பாருங்கள்!.. கடைசியில்! இது ஏமாத்துகிற வித்தை யில்லையா?”
“ஆமாம், சுத்தப் புரட்டு! ஆனால் இந்த நாளிலெல்லாம் தலைகீழாய் போய்விட்டது. வியாபாரத்திலே நாணயமே இல்லாமல் போய்விட்டது. உயர்ந்ததை தாழ்ந்தது என் கிறார்கள்; தாழ்ந்ததை உயர்ந்தது என்கிறார்கள்; இவ்வளவு மோசம் வியாபாரத்தில் ஆகாது!”
“அதுதான் புதுயுகப் புரட்சி! மதிப்பு கௌரவம் என்பதற்கே அகராதியில் புது அர்த்தம் எழுத வேண்டியது தான்.”
இதற்குள் பூமியும் தரை மகா ஜனங்களும் வாய்திறந்து விட்டார்கள்.
“இந்த நாற்காலி, சோபாவா உலகம்? இவைதானா முக்கியம்? நாங்கள் கொடுக்கிற டிக்கெட் பணத்தைக் கொண்டு சோபா, மெத்தை, நாற்காலி எல்லாம் அமைக் கிறார்கள்- பூமியில்லாவிட்டால் உலகமேது? உயிரேது, லீலை யேது? சுவரில்லாவிட்டால் சித்திரமுண்டா? இயற்கையை- மறந்துவிட்டு, ஜீவனின் லீலையைப்பற்றி கொம்மாளமடிக் கிறீர்களே! பூமித் தாய்க்கும், சாதாரண ஆளுக்கும் அல்லவா கௌரவம் தரவேண்டும்? செல்வத்தை நாங்கள் உற்பத்தி செய்வது; முதலாளிகள் பிடுங்கிக் கொள்வது-
இதைவிடப் பெரிய மோசடி என்ன?”
“ஆமாம், நியாயந்தானே! விதைக்கு உயிர் இருந்தாலும், அழகு சடைக்கும் கதிருக்கு அது தந்தையானாலும் பூமிக்குள் போடாவிட்டால் விதை முளைப்பதேது? இயற்கையோடு உயிர் கலந்தாலன்றி உயிரோட்டம், உயிராட்டம் எது? உங்களை அவமானப்படுத்துவது தகாது, தகாது!” என்றேன்.
ஜகஜக என்று ஒரு சத்தம் கேட்டது. சினிமாவாவது?.. ஒரு மண்ணாங்கட்டியையும் காணோம்!
“சினிமா எல்லாம் எங்கே?
“தையற்காரன் கடையிலே சினிமா கதையா? வெறும் பைத்தியமாய் இருக்கிறாய்? சினிமா ஓடவில்லை. தையல் மிஷின்தான் ஓடுகிறது!”
“இப்பொழுதெல்லாம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தூங்குவது நிஜமா? விழித்துக் கொண்டிருப்பதா?”
“அதுதான் எனக்கும் தெரியவில்லை. உலகம் நிஜமா அல்லது சினிமாவா? என்றான் தையற்காரன்.
“என்ன விசித்திரம்! விழித்துக் கொண்டிக்கும் பொழுது அடிபட்டால் வலிக்கிறது. அதே மாதிரி நான் பார்த்த சினிமாவில் அடிபட்ட பொழுதும் வலித்தது. அடிவாங்குவது உடம்பா, மனசா?” என்றேன்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.