அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது.
கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பறவையைக் கூட காணவில்லை.கானல் நீர் தேங்கிக் கிடந்த சாலையில் வழி தவறியது போல் இரைக்க இரைக்க ஓடி வந்த நாயொன்று இவளைக் கண்டதும் திகைத்து நடுங்கி உடல் ஒடுக்கி ஊளையிட்டபடி தலைதெறிக்க ஓடி மறைந்தது.
அவள் காத்திருந்தாள்.
இரண்டு மைல் தூரம் நடந்து வந்த களைப்பு வியர்வையும் பெரு மூச்சுமாய் வழிய பஸ் வரும் சாலையைப் பார்த்தாள்.அடர்ந்து கருத்த மேகங்கள் வானில் தொங்கிக் கொண்டிருந்தன.தெறிக்கும் மின்னல்களைத் தொடர்ந்து வானில் பெரும் பாறைகள் உருண்டன. அர்ச்சுனா,அர்ச்சுனா ஆத்துக்கே அர்ச்சுனா என உரக்கச் சொன்னாள்.சற்றுத் தொலைவில் மழை பூமியில் இறங்கியிருப்பதைக் காண முடிந்தது.
கரங்களை விரித்தபடி அணைத்துக் கொள்ளும் முதியவரைப் போல,குடிபடைகளுக்கிடையே நின்று குறை கேட்கும் பேரரசனைப் போல சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தேர்ப்புளியமரத்தின் கீழ் சென்று நிற்கலாமாவென்று இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து சத்தமில்லாமல் நின்றது ஒரு வெளி நாட்டுக் கார். அதிலிருந்து இறங்கியவனை முதல் பார்வையிலேயே இவளுக்கு பிடிக்காமல் போனது.
பஸ்க்கு வெயிட் பண்றியா?
முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
பஸ் வராது.ஸ்டிரைக்.
திக்கென்றது.நிஜமாகத்தான் சொல்கிறானா?
எங்க போகணும் சொல்லு.கார்லயே போயிடலாம்.
காரிலிருந்து இன்னும் இரண்டு பேர் இறங்கினார்கள்.
பெண்மையின் இயல்பான எச்சரிக்கை உணர்வு ஓடு என்று கட்டளையிட்டு உடல் அதை செயல்படுத்துவதற்குள் பிடிபட்டாள்.காரினுள் அடைபட்டாள்.
மிகுந்த வலுவுடன் பூமியில் இறங்கியது மழை.தன்னைப் பெற்றவளும், உடன் பிறந்தவளும்,துணையாய் வந்தவளும்,தனக்குப் பிறந்தவளும் இவளைப் போலவே பெண் என்பதை மறந்த ஆறறிவு மனிதர்களின் வெறியாட்டத்தை, மழைத்திரையினூடே கைகளைப் பிசைந்தபடி பார்த்துக் கொண்டிருந்த தேர்ப்புளிய மரத்தின் கண்ணீர் மழை நீருடன் கலந்து வழிந்தது.பிறந்து இரண்டே வருடத்தில் தாயை இழந்து தகப்பனின் நிழலில் வாழ்ந்த வந்த அந்த பரிதாபத்திற்குரிய பெண்ணின் நிராதரவான குரல், மழையின் திரையினூடாக அந்த பொட்டல் வெளியெங்கும் அலைந்து தேய்ந்து மறைந்தது.
அவள் தேர்ப்புளியமரத்திலேயே தூக்கிட்டு தொங்கியதையும்,அவளின் அப்பா கிணற்றில் விழுந்து இறந்ததையும் நீங்கள் நாளிதழில் படித்து மறந்திருப்பிர்கள்.
அவள் உடல் இறக்கப்படுவதை,யாருமற்ற இரவில் அப்பா வயல் கிணற்றில் விழுந்தததைக் கண்டாள்.சற்று நேரத்தில் மேலேறி வந்த அப்பாவின் அருகில் நின்றபடி ஊறி உப்பிய உடல் மேலே எடக்கப்படுவதை சிதையில் எரியூட்டப்படுவதை பார்த்து அழுதாள். எல்லோரும் ஊருக்குள் திரும்பியவுடன் இருவரும் தேர்ப்புளியமரத்தின் விரிந்த கையில் விரலென நீண்டிருந்த அகலமான கிளையொன்றில் அமர்ந்தார்கள்.
எனக்கு புரியலப்பா
இன்னும் நமக்கு காலம் இருக்கும்மா.பூமியோட தொடர்பு முழுசா அறுந்து போற வரை இங்க இருந்துதான் ஆகணும்.
விரல்களினூடே வழியும், உள்ளங்கையில் அள்ளிய நீராய் காலம் வழிந்து கொண்டிருந்தது.
சிவன் கோவில் எதிரேயுள்ள மரத்தில்தான் அப்பா பெரும்பாலும் அமர்ந்திருப்பார்.இவளோ நாளெல்லாம் சுற்றிக் கொண்டேயிருப்பாள்.வழியில் எதிர்ப்படும் நாய்களும்,மாடுகளும் படும்பாட்டினைக் காண வேடிக்கையாயயிருந்தது.இவள் வரும் திசையில் முகரும் நாய்கள், இவள் அருகில் வர வர பின்வாங்கியபடி குரைக்கும்.அருகில் வந்ததும் ஊளையிடம். மாடுகளோ கருவிழிகள் தெறித்து விழும்படி விழிகளை விரித்து ம்மா என்று தீனமாய் குரல் கொடுக்கும். ஒருமுறை பால்கார கவுண்டர் வீட்டு மாடு அறுத்துக் கொண்டு ஒடி விட்டது.
சிவந்த பெரிய விழிகளைச் சுழற்றியபடி முறுக்கிய மீசையுடன் மின்னும் அரிவாளுடன் பூமி அதிர அதிர ஊர்க்காவலக்குப் போகும் கருப்புச்சாமியை மரத்தின் மறைவில் இருந்து பயம் கலந்த பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த நாய்க கணக்க நான்தான் முடிக்கணும், அதை மட்டும் நிறைவேத்தி வைக்கணும் சாமின்னு அவள் வேண்டிக் கொள்கையில் சட்டென்று திரும்பி இவளைப் பார்த்த பார்வையின் தீட்சண்யத்தைத் தாள முடியாமல் நடுங்கி தரை வீழ்ந்தாள்.அடர்ந்த மீசையினூடே உதடுகள் விரியும்படி புன்னகைத்து நகர்ந்து வெகுநேரமாகியும் நடுக்கம் தீரவில்லை இவளுக்கு.
அப்பாவிடம் சொன்னதும் விழிகள் விரிய அப்படியாம்மா,அப்படியாம்மா என்று வியப்புடன் கேட்டபடி இவளின் தலையை வருடிக் கொடுத்தார்
ஒருநாள் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டிருந்த போது காற்றில் அலையலையாப் பரவியது நறுமணம். எழுந்து உட்கார்ந்தாள். மெல்ல தன்வசமிழப்பது புரிந்தது. உயிரின் கட்டுக்களையறுத்து நித்யமான வெளிக்குள் வீசியெறியும் இ,னிமையான மணம். அதில் திளைத்துக் கொண்டிருந்த போதே சூழ்ந்தது உயிரைக் கரைக்கும் இன்னிசை.மாய உதடுகளிலிருந்த புறப்பட்டு துளைகளின் வழியே வெளியேறி கோகுலத்தில் பிருந்தாவனத்தில் ஆநிரைகளின் கோபியர்களின் உயிரை உறைய வைத்த இசை. தாளமுடியாத இன்பத்தில் திணறினாள்.
அழைப்பு வந்தாச்சும்மா
சுற்றப்புறமெங்கும் பொன்னால் வார்த்தது போல் தகதகவென மின்னியது.மேலே பார்த்தாள்.,ஆகாயத்தின் நீலத்தை மறைத்து பொன்னிற பிரகாசத்துடன் ஆனால் கண்கள் கூசாத ஒளி. எத்தனை பருகியும் தீராமல் பார்வையை விலக்க மனமின்றி மீண்டும் மீண்டும் விழிகள் பருகும் பேரொளி.
போகலாம்.
சட்டென்று இறுகினாள்.
நீங்க போங்கப்பா நான் வரலே
என்னம்மா சொல்றே
தீர்க்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்குப்பா
வேணாம்மா நமக்கெதுக்கு வன்மமும் குரோதமும்.பண்ணின கர்மத்தின் பலனை கண்டிப்பா அவங்க அனுபவிப்பாங்க.நாம நீதிபதியாக முடியாது.அதுக்கு ஒருத்தன் இருக்கிறான்.
நீங்க சொல்றது சரிதாம்ப்பா.தீர்ப்பு சொல்றது மட்டுந்தான் நீதிபதி. தண்டனைய நிறைவேத்தறது அதிகாரி. அவனுகளைப் பொறத்தவரை தீர்ப்பு எப்பவோ சொல்லியாச்சு.நான் தண்டனையை நிறைவேத்தணும்.என்னை வற்புறுத்தாதீங்க.
ஆழமாய் அவளை ஊடுருவிப் பார்த்தவர் ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தார்.பின் அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து மெல்ல மெல்ல மேலே உயர்ந்து ஒளியில் கலந்து மறைந்தார்.
சற்று நேரத்தில் இயல்பு நிலை திரும்ப துக்கமும் அயர்வும் பொங்க கதறியழ ஆரம்பித்தாள்.
அவள் காத்திருந்ததாள்.
சாலையின் முடிவில் கானல் நீருனூடே நடுங்கியபடி சிறு புள்ளி தெரிந்து பெரிதாகிக் கொண்டே வந்தது. இவளுள் உக்ரம் கொப்பளிக்க ஆரம்பித்தது. வாங்கடா வெறிநாய்களா
கார் அருகில் வந்து நின்றது. எதிர்ப்பக்கம் திரும்பி நின்றாள்
ஹலோ லிப்ட் வேணுமா?
திரும்பினாள்.
சிரிப்பு வடிந்து போதையெல்லாம் வினாடியில் ஆவியாக வெளிறிய முகங்களின் திகில் இவளுள் சந்தோஷ வெறியை மீட்டியது.
நீ.. நீ…
சிரித்தாள். செவிப்பறைகளையெல்லாம் கிழித்து மயிர்க்கால்களிலெல்லாம் இரத்தம் கசிய உடல் உறைந்து உயிர் தெறிக்கும்படியான ஆங்காரச் சிரிப்பு அந்த வெளியெங்கும் நுரைத்துப் பரவி தேர்ப்புளியமரத்தில் பட்டு எதிரொலித்தது.
இன்னிசையுடன் காற்றில் அலையலையாய் பரவத் தொடங்கியது நறுமணம்.