எஞ்சிய நாட்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 2,095 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அழகிய செவ்வந்திப் பொழுதை விழுங்க இருள் மிக வேகமாகத் துரத்திக் கொண்டிருந்தது. பீல்ட் ஒபிசர்’ தாஹா சாமத் கொழுந்து மடுவத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஏனோ அவரது நடையில் மிகுந்த சோர்வு கொஞ்ச நாட்களாய் அது அவர் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

பாவம்! எப்படி இருந்த உடம்பு! என்னமாய் உருக்குலைந்து ஒல்லியாகிப் போய்……. ஐந்தரை அடி உயரம். அதற்கேற்ற அந்த வட்டமான மொங்கோலிய – மலாய் முகம் வாடி விட்டதே! அந்தச் சிவந்த முகத்தில் வெட்டி ஒட்டினாற் போல வாட்டசாட்டமாக, கறுத்த முறுக்கு மீசையும், மூப்பினால் நிறம் மாறி வெளிறிப் போய்! இனியும் அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோசனம்? தொழிலாளரை மிரட்டி அச்ச மூட்டி வேலை வாங்க முடியுமா? ஒன்றுக்கும் உதவாத தேங்காய்த் தும்பாய்க் கொஞ்ச நாளாக….. ஒரு காலத்தில் இலங்கையை ஆண்ட அந்த டச்சுக்காரர்களைத்தான் கண்டபடி ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் திட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்சத் தூரம் நடந்தாலும் உடம்பில் ஒரு தளர்வு. மலை ஏறினால் அந்தப் பொல்லாத களைப்பு, எல்லாம் மனிதனுக்கு சொல்லிக் கொண்டாவருகிறது! வந்துவிட்டதே!

கடமை….. கடமை…… கடமையுணர்விலேயே லயித்துப் போய். அப்பாடா…எவ்வளவு வேகமாய் மூன்றரை தஸாப்தங்கள் நகர்ந்திருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன்புதானே அந்தச் சம்பவம் நடந்தது. அதைச் சற்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கிறார் தாஹா.

அவரது பொல்லாத காலத்திற்குத் தான் அன்றைக்குத் தத்தி தத்தி மலை ஏறிய போது. இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி. முக்கோணவடிவம் காட்டப் போய்……. அல்லது பரத நாட்டியத்திற்கு ஆயத்தமாக, அபிநயம் காட்டப் போய்……. சற்று மேலே ரோட்டில் நின்று கொண்டிருந்த தோட்டத்து ‘சுப்றின்ட’னின் கழுகுப் பார்வைக்கு இரையாகி விட்டார். முழங்காலுக்கு மேல் காக்கி நிறத்தில் காற்சட்டையும் அதே நிறத்தில், அரைக்கைச் சேர்ட்டும் முழங்கால் வரை ஸ்டொக்கிங்ஸும் பட்பட்டென்று பூமியை அறையும் அந்த பூட்ஸ்க ளும்……

அவருக்கு இது வரை காலமும் ஒரு தனி பர்சனலிட்டியை அளித்தது.

அந்த அணிகலன்கள் எல்லாமே ஒரு கணம் வெடவெடத்துப் போய்…

ஒரு சின்னஞ் சிறிய விளையாட்டுப் படகு போல் தலையை மூடியிருந்தது. அந்த போட் தொப்பி’ யார் வைத்ததோ. பொருத்தமான காரணப் பெயர் தான். அந்த அகன்ற தொப்பியைக் கழற்றி கக்கத்தில் செருகி மரியாதை செலுத்தப் போய். அந்தப் படகு தரையில் மோதி. கவிழ்ந்து கிடக்க….. ஒரேயொரு செக்கனுக்குள். எப்பவும் இல்லாமல் என்ன இப்படியொரு அபசகுனம்’ என்று மனம் குமைந்து. அதைப் பொறுக்கி எடுத்து இடது புறக் கக்கத்தில் அடக்கிக் கொண்டு மூச்சிரைக்க, இரைக்க துரைக்கு முன்னால் பவ்வியமாக கைகட்டி நின்றார் தாஹா.

பெரிய துரை வானத்தைப் பார்த்துச் சிரித்தார். தாஹாவுக்கு ஒன்றும் புரியாமல் கூனிக் குறுகி விழித்துக் கொண்டிருந்தார்.

“மிஸ்டர் தாஹா இட் இஸ் றைற் பொர் யுவர் ரிட்டையர் மெண்ட் இஸ்… இன்ட் இட்?” சம்பிரதாயத்திற்காகத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். மனமோ திடீரென்று காடு பற்றி எரிவது போல்….

‘நீ இனி ஒன்னுக்கும் உதவ மாட்டே. மலை ஏறி இறங்க லாயக்கில்ல…..’ என்பதைத்தான் குத்திக் காட்டுகிறார்.

“டிட் யூ சீ மிஸ்டர் தாஹா’ இந்த உடம்பு பழசானதும்…. அணிகலன்கள் கூட நம்மை உதறித் தள்ளி விடப் பார்க்கின்றன.

துரைக்கு நல்ல மூட். தத்துவம் பேசுகிறார்.

ஒரு சாதாரண மூத்த தலைமுறை பீல்ட் ஓபிசருக்கு. துரையின் கருத்தை வெட்டி, எதிர்த்துப் பேச முடியுமா……? யேஸ் சேர்….. யேஸ்….. சேர் என்று சொல்வதைத் தவிர.

இவரும் என்றுமே கண்மூடித் தனமாகக் கருத்துக்கள் தெரிவித்து மாட்டிக் கொள்ள விரும்பமில்லை. துரைக்கு வந்த புதிதில் பீல்ட் வேர்க் கற்றுத் தந்ததே தாஹாதான். ஆனால், அதையெல்லாம் யார் இப்பொழுது பேசப் போகிறார்கள்?

எப்படியோ துரையின் மனத்திரையில் தாஹாவுக்கு இளி பீல்ட் வேர்க் செய்ய முடியாது என்ற கருத்து பதிந்து விட்டது.

சில நாட்களுக்குப் பிறகு துரையும் ஹெட் கிளார்க்கும் அவரது பர்சனல் பைலை துருவிக் கொண்டிருந்து விட்டு –

எக்ஸ்டென்சன் பீரியடையும் கடந்து விட்டார். சட்ட திட்டங்களை மீறி இனியும் சேவையை நீடிக்க முடியாது. வயது அப்படி என்ற முடிவுக்கு வந்தனர். –

“தேர்ட்டி சிக்ஸ் யியர்ஸ் ஒவ் சேர்விஸ்…வெரி சின்சியர்…ஒனஸ்ட் அன் ஹார்ட்வ ர்க்கிங்…டெல் ஹிம் டு கம் அன் சீ…மி…’

தாஹாவுக்கு நம்பிக்கையான ஆள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

அடுத்த நாள் அலுவலகத்தில் துரை. கிளார்க், தாஹா ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.

தாஹா எத்தகைய உதவியும் கேட்டுத் தலை சொறிந்து கொண்டிருக்கவில்லை.

அறையுமாப் போல. எதற்கும் எந்த நேரத்திலும் தாம் வெளியேறத் தயாராக இருப்பதாக, மிகுந்த தன்மான உணர்வுடன் ஆணித்தரமாக ஆங்கிலத்தில் கூறி வைத்தார்.

ஒரு கணம் அசந்து போன துரை மிகுந்த அக்கறையை வரவழைத்துக் கொண்டு,

“அவரர் யுவர் டர்மினேசன் யூ நீட் நொட் வெக்கேட் தி குவார்ட்டர்ஸ்… ரில் யூ சோல்வ் ஆல் யுவர் பர்சனல் ப்ரொப்லம்ஸ்.

அத்துடன் அந்த அழகிய செவ்வந்தி மாலைப் பொழுதை விழுங்க மிக வேகமாகத் துரத்திக் கொண்டு வரும் இருளரக்கன் முப்பத்தைந்து வருடங்களாக வசித்து வந்த ‘பீல்ட் ஒபிசர்’ எனும் உயர் பதவியையும், இன்னும் ஒரு மணித்தியாலயத்தில் விழுங்கி ஏப்பமிட்டுவிடுவான்.

இனி விடிந்தால்…. ஆட்டம் குளோஸ்.

அன்று பரத நாட்டியத்திற்கு அபிநயம் காட்டி நின்றவர் நாளை முதல், தமது ‘ததிங்கின தோம் தத்தம்’ ஆட்டத்தை எப்படி ஆடப்போகிறாரோ…..?

ஆழ்ந்த சிந்தனையோடு. கொழுந்து மடுவத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவருக்கு. தொழில் ரீதியாக….. ‘எல்லாம சரியாக இயங்குகின்றனவா என்று சுற்றும் முற்றும், மலை உச்சிகளையும் மரங்களையும் அண்ணாந்து. அண்ணாந்து நோட்டமிடும் பழக்க தோசம் விட்டுப் போகாது போலிருக்கிறது.

திடீரென்று அவரது பார்வைக்குப் பட்டுப்போன அந்தச் சவுக்கு மர உச்சிதான் குத்தியது. அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார் ஒரு கணம். தமக்கென ஒரு கூடு கட்டுவதற்கு, மெல்லிதான நீண்ட குச்சிகளைக் சொண்டில் கௌவிச், சுமந்து எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பறவைகள்.

இந்தப் பட்டுப் போன மரத்தை எவரும் வெட்டப் போவதில்லை என்பதை அந்தக் காகங்கள். முன் கூட்டியே அறிந்து கொண்டனவா? எப்படிக் கண்டு கொண்டன?

மேலதிகாரியான ‘சுப்றின்டன்டனைத் தவிர வேறு எவருக்குமே தொப்பியைக் கழற்றாதவர் இப்போது அந்தக் கிரீடத்தைக் கழற்றி –

மரத்தின் உச்சியில் அவை கூடு கட்டும் விந்தையை நீண்ட நேரம் நின்று உற்று நோக்கியவருக்குப் பொறாமையாக இருந்தது.

அட காகங்கள் கூட ஒரு பாதுகாப்பான தளத்தில் கூடு கட்டுகிறதே!

பீல்ட் ஒபிசர்’ தாஹா சாமத்… இல்லை , சற்று நேரத்திற்கு முன் பீல்ட் ஒபிசர் என்ற பட்டமும், பதவியும் ‘பெரியையா’ என்ற சிறப்பும் கௌரவமும் இருளோடு இருளாய், காற்றோடு காற்றாய்ச் சங்கமித்து விட்டதே! விடிந்தால் –

எல்லா அதிகாரங்களும் இழந்த வெறுமனே தாஹா சாமத். அவ்வளவுதான்.

பொக்கட் செக்ரோலில் முதலாம் ஆளிலிருந்து நாநூற்று நாற்பத்தெட்டாவது ஆள் வரைக்கும் அதட்டி, ஏசிப் பேசி….. ஏன் அன்பு செலுத்தக் கூட ஓர் ஈக்குஞ்சு கூட இருக்காது.

விடிவதற்குள் அவருக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய சீனச் சுவர் முளைத்து விடும். இந்த வயதும் தள்ளாமையும் மனிதனை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுகிறதே!

வந்ததும் வராததுமாக பிளாஸ்க்கிலுள்ள தேநீரை ஊற்றிக் குடித்துவிட்டு, மனைவியிடம். ‘சம்மா சொ அப்பிஸ்…..’ எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறினார். மலாய் மொழியில்,

தாஹா சாமத்தின் குடும்பப் பின்னணி இதுதான்: அவரது குடும்பம் சிறியது. இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள். சொந்த மண் மாத்தளை. அங்கு அவருக்கு பரம்பரையாக சொந்தம் கொண்டாட ஒரு ஐந்து பேர்ச்சஸ் காணியில் ஒரு சிறிய வீடு. அவ்வளவுதான் பூர்வீகச் சொத்து. தற்பொழுது மூத்த மகன் ம… ரூப்தான் குடும்பமாக அவ்வீட்டில் வசிக்கிறான். அவனுக்கு மாத்தளைப் பிரதேசத்து, ‘பன்வில’யில் தொழில். அதற்கடுத்த மகள் பர்வீன் ஹட்டன் யூலிபீல்டில் குடும்பமாகியிருக்கிறாள். தன்னோடு இருக்கும் மூன்றாவது மகன் ரசீன் வருட முடிவில் ஓ.எல் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். நான்காவது அவனுக்கும் இளையவள் யெஸ்மீன் படித்துக் கொண்டிருக்கிறாள்.

சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு. வியர்வையால் தோய்ந்து போன தன் உடம்பைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டு வந்து. முன் விறாந்தையில் அமர்ந்தார். கையோடு வளைந்த ‘பைப் குழாயையும், புகையிலை டின்னையும் ஏந்தி வந்தவர். அந்த டின்னைத் திறந்த போது கமகமவென்று புகையிலையின் மணம் வீசியது. விரல்களால் புகையிலையை எடுத்துக் குழாயில் திணித்து. இரண்டு மூன்று தீக்குச்சிகளைக் கீறி பக் பக் கென்று தீ மூட்ட ரம்மியமான அந்தப் புகையிலையின் வாசம் சூழலில் பரவியது.

சற்று நேரம் அப்படி அமர்ந்திருந்து புகைப்பது அவரைப் பொறுத்த வரையில் சிறிது நேர ரிலெக்ஸ். அந்த நேரத்தில் டீ.வி.. ரேடியோ செய்திகள். அன்றைய ஆங்கிலப் பத்திரிகை என்று மூழ்கிவிடுவார்… ஆனால் இன்று –

டியூசன் வகுப்புக்குப் போயிருந்த மகன் ரசீனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மனைவியின் முணுமுணுப்பில் தொடங்கும் வாய்ச்சண்டை கூட வலுவடைய வில்லை. வேறு நாட்களாயிருந்தால்….

“இப்படிக் கட்டுக் கட்டா சுருட்டும் ‘பைப்பையும் இழுத்துக் கிட்டு இருந்தா…… ரிட்டயர் ஆன பிறகு எப்படிக் காலம் போகப் போகுது” என்று முணுமுணுப்பில் தொடங்கி உச்சக் கட்டத்திற்குப் போயிருக்கும்.

தாஹாவைப் பொறுத்த வரையில், டீ.வி.ரேடியோவைப் போல…… அதுவும் ஒரு ராகம். நிகழ்ச்சி சரியில்லாவிட்டால் டீ.வியையும் ரேடியோவையும் போட்டு உடைப்பதில்லையே! காது கொடுக்காமல், அல்லது சும்மா அலறி ஓயட்டும் என்று விட்டு விடுவது தான் அவர் கடைப்பிடிக்கும் பண்பு. ஆனால் அதற்கும் ஒரு புரிந்துணர்வும் மனப்பக்குவமும் வேண்டுமே! அது அவருக்கு இருந்தது.

மரம் நாட்டினவனுக்கு தண்ணீர் ஊற்றத் தெரியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. வகுப்புக்குப் போயிருந்த ரசீன் வந்த சிறிது நேரத்தில் “அங்க குசினியில எல்லாரும் என்ன செய்றீங்க…..? எல்லாரும் முன் விறாந்தைக்கு வாங்க…….” என்று மலாய் மொழியில் உரத்து கூப்பிட்டார்.

மனைவியின் ஓயாத நச்சரிப்புக்கு……. இன்று தன் முடிவுகளைப் பிரகடனப் படுத்தப் போகிறாரே! இது வரை காலமும் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடத்தி பதுக்கி வைத்திருந்த தீர்வுகளா அவை? “ஏன் இப்படி மலைக்காட்டில் ஆளுங்களுக்கு மிரட்டிக் கத்துற மாதிரி…….. சத்தும் போடுறீங்க?” என்று அவள் கேட்கவில்லை .

குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வந்து விறாந்தையில் அமர்ந்ததும் சிறிது கலந்துரையாடினார். அதிகம் பேசாத வீட்டின் தலைவரான அவருக்கு மனைவி பெரும்பாலும் ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தாள். ஆனால் இன்று தாஹா எல்லோருடனும் நீண்ட நேரமாக அன்புடன் கலந்துரையாடியது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. மனைவியும் பொறுமையின் சின்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தனர்.

ரசீன் ஆண்டிறுதி வரைக்கும் ராஜன் ஹாஸ்டலில் தங்கியிருந்து பரீட்சைக்குத் தோற்றவேண்டும். தாயும் யெஸ்மினும், தனது, மாத்தளை இல்லத்தில் ‘தாஹாஸ் ஹட்’டில் நிரந்தரமாக குடியிருக்கலாம். குடும்ப அங்கத்தவர் இருவர் தங்குவதில் மஃருபிற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. யெஸ்மினது விடுமுறை காலங்களில் ஹற்றனுக்குச் சென்று மகளோடு தங்கியிருந்து அவளுக்கு உதவ வேண்டும். குளிர் காலங்களில் அவள் தனியே இரண்டு பிள்ளைகளோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள்.

அடுத்து தாஹா சாமத்தின் புரொவிடன்ட் பன்ட் வந்து விட்டால்? முடிந்த வரைக்கும் மாத்தளை வீட்டைச் சிறிது திருத்தவும்…… மேலதிகமாக ஓர் அறையைக் கட்டவும் யெஸ்மினை எதிர் காலத்தில் கரை சேர்க்கவும் அல்லது அவளது பெயரில் ஒரு பிக்ஸ்’ டிபொசிட் செய்யவும் போதுமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். திருமதி சாமத்துக்கு. கணவர் இன்னுமின்னும் உழைக்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால், தாஹா இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதை ஆட்சேபித்து ஒன்றும் முணுமுணுக்க வில்லை.

அன்றிரவு ரொட்டியும் மீன் கறியும், உறைப்பான தேங்காய்ச் சம்பலுடனும் இராச் சாப்பாடு முடிந்ததும். சற்றுப் பொறுத்து ஒரு தம்ளர் பாலுடன், நித்திராதேவியின் வருகைக்காகப் பேப்பரில் மேய்ந்து கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணயரத் தொடங்கியதும் கர்முர்ரென்று குறட்டை ஒலி கிளம்பியது. பழக்க தோசத்தால் விடி காலையில் விழித்ததும் ‘மஸ்டரு’க்குப் போக வேண்டிய கடமை இல்லாததால், படுக்கையை விட்டு எழும்பாமல் இருந்து விட்ட பின்னர். ‘அட சாமான்களை மூட்டை கட்டுவதற்கு. இரண்டொரு தொழிலாளர் வருவார்களே’ என்ற எண்ணம் உதயமானதும் சட்டென்று எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளிப்பதற்கு ஆயத்தமானார். அதற்குள் அந்தப் புதுமை நடந்து விட்டது. இதுவரை காலமும் கட்டிக்காத்த அந்த முறுக்கு மீசையைக் காணவில்லை. அதனை முற்றாகச் சவரம் செய்து விட்டிருந்தார். உருண்டையான அந்த முகத்திற்கு இப்பொழுது ஓர் இளமைத் தோற்றத்தைத் தந்தது. –

அதனைக் கண்டதும் முதலில் மனைவி மக்கள் எல்லோரும் கண்டும் காணாமலும் நகைத்தனர். சரியாக ஏழு முப்பதுக்கு வந்த அந்தத் தொழிலாளர்களும் மலைத்துப்போய் நின்றனர்.

“ஏம்பா மலச்சிப் போய் நிக்கிறீங்க…..? நா இந்த முறுக்கு மீசை வச்சதே ஒங்களயெல்லாம் பயமுறுத்தி வேல வாங்கத் தான்…. சில சமயங்களில் நா ரொம்ப கடுமையா பேசியிருப்பேன்….. அதுக்கெல்லாம் மன்னிச்சிக்குங்க…. இனிமே நீங்களும் நானும் ஒன்று தான்…” ஒரு கணம் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தொழிலாளர்கள் அவரது வீட்டு முன்றலில் கும்பலாகக் கூடி நின்றனர். ‘மஸ்டருக்கு நிற்பதுபோல ஆனால் கண் கலங்கியவாறு.

அப்பொழுது அவர் மனந்திறந்து சில கருத்துக்களைச் சொல்ல முற்பட்ட போது தான் துரை அவர்களின் கார் வந்து நின்றது. பீல்ட் ஒபிசர் பதட்டப் படாமல் வீடு தேடி வந்த நிர்வாகியை தரிசிக்கச் சென்ற போது துரையவர்கள் அப்படியே திகைத்துப் போய் “யூ சீம்ஸ் டு பி வெரி யங்……….” என்று பாராட்டி விட்டு…. “டேக் யுவர் டைம் அன்ட்பினிஸ் வித் தெம்……… அய் வில் ரிலெக்ஸ் போர் எ வயில்…..”

அவர் நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் வந்து சேர்ந்தார்.

“அப்ப ஐயா தோட்டத்துக்கு வந்து எவ்வளவு காலங்க…? இனி போய் என்ன செய்யப் போறீங்க…?”

இப்படிப் பல கேள்விகள். அப்பாவித் தொழிலாளர்கள் பாச மேலீட்டால் அறியத் துடித்தனர்.

“நா இந்தத் தோட்டத்துக்கு வந்து முப்பது வருஷம் முடியப் போகுது. இங்க வாரத்துக்கு முந்தி பதுளையில் ஆறு வருஷம்…. எல்லாமாக முப்பத்தாறு வருஷ சர்வீஸ்….. இப்பதான் தலை நிமிர்ந்து யோசிச்சிப் பார்க்கிறேன். நாளக்கி நா தோட்டத்து பௌண்டறிக்கு வெளியே நின்னு என்ன செய்யப் போறேனோ…? மிச்ச நாட்கள் எப்படிப் போகும்…? நீங்க கேட்ட கேள்வியத் தான் நானும் என்னையே கேட்கிறேன். ஆம்புள புள்ளங்க எப்படியும் தலைதூக்கிட்டாங்க… பிரச்சினை இல்ல. ஆனா ஒரு பொம்புள புள்ள இருக்கு. முறைப்படி நல்ல இடத்தில் கட்டிக்குடுக்கத் தான் பிரவிடன்ட் பண்ட் போதுமா…?

சரிதான்னு அதையும் சமாளிச்சிட்டாலும் மிச்ச முள்ள காலத்துக்கு எங்களுக்குச் சாப்பிட வழி…? தோட்ட நிர்வாகமா குடுக்கப் போகுது…? என்னுடைய சேவைக்குக் கிடைக்கும் ‘கிரட்டியூட்டி’ பணந்தான் எவ்வளவு நாளக்கி? அந்தக் காலத்தில் அரச ஊழியனாகச் சேர்ந்திருந்தாலும், ஒடம்பு தளர்ந்து போன இந்தக் காலத்தில் கஞ்சி குடிக்கவாவது மாதா மாதம் பென்சன் கிடைக்கும்…. நீங்க நினைக்கிற மாதிரி ரிடையர் மெண்ட்டுக்குப் பொறகு சாய்வு நாற்காலியில் சுகம் தேடக் கிளம்பல்ல. வாழ்க்கையில் கடைசி நிமிஷம் வரைக்கும் தொழில் தான் எங்க தலையெழுத்து. இந்த மெஷின் பழசாகிட்டா மலை ஏறுவது கஷ்டம். கராஜிலே போட்டு வைக்க வேண்டியது தான். திருத்த முடியல்லேன்னா. அப்படியே கிடந்து தானாகவே துருப்பிடிச்சித் தனது முடிவைத் தேடிக் கொள்ளும்.

அவரது முப்பத்தாறு வருட அனுபவ முத்திரை அது!

“ஒங்க பரம்பரை பூமிக்கு அடியில் தங்கம் தோண்ட வந்திச்சி எங்க பரம்பரைய டச்சுக்காரன் படை வீரர்களா கொண்டாந்தான்…

நா ஒன்னும் சம்பாரிச்சி கொட்டல்ல. எங்க மூத்த பரம்பரை எனக்குன்னு அஞ்சி பர்ச் காணிய வச்சிட்டுப் போயிருக்கிறாங்க… அதில் ஒரு வீடும் கெடக்கு…… இரண்டு பையன்களும் தலை யெடுத்துட்டாங்க மூத்த பெண்ண நல்ல இடத்தில் எப்படியும் கட்டிக் குடுத்து குடும்பமா இருக்கா…… வேறே என்ன செய்யலாங்க….. இனி மேலே என்னால குடும்ப பாரத்த சுமக்க ஏலாது.”

“சரி…தொரே காத்துக் கிட்டு இருக்காரு…நா அவரெ சந்திச்சி என்னன்னு பார்த்துட்டு ஓடியாந்திடறேன்….மிச்ச வேலைய முடிச்சிருங்க…”

ஜயாவின் உருக்கமான பேச்சுத் தொழிலாளர்களை உலுக்கி விட்டிருந்தது. சற்று நேர மௌனத்திற்குப் பிறகு எல்லாருமாகச் சேர்ந்து தேவையில்லாத. மூட்டை கட்டிக் கொண்டு போகுமளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பொருட்களை எல்லாம், வீட்டின் பின் புறத்தில் குவித்தார்கள்.

அன்றைய தினம், சாமான் சட்டி முட்டிகள் உடுதுணி… என்று கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மிகக் கொஞ்சமாகத் தானிருந்தன.

சிலவற்றை வந்து உதவிய தொழிலாளர்களுக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். இறுதியாக அவரைச் சந்தித்துப் போக பலர் வந்து கொண்டிருந்தனர்.

அந்தப் பழைய போட் தொப்பி. காக்கி உடைகள் அனைத்தும் தேவையற்ற பண்டங்களுக்குள் முடங்கி ஓய்வு பெற்றுக் கொண்டன.

அந்தப் போட் தொப்பி ஒரு மூலையில் எறியப்பட்டு கவிழ்ந்து கிடந்தது.

ஒரு தோட்டத்தின் பெரிய துரை சாதாரண உத்தியோகத்தர் வீட்டுக்குள் புகுந்து உரையாடுவது அந்தஸ்துக் குறைவு என்று பேணப்பட்டு வரும் மரபை துரை அவர்களால் மீற முடியாததால் காரை விட்டு வெளியே இறங்கியிருந்தார்.

“என்னடா இது அதிசயமாயிருக்கு. எப்பவும் இல்லாம மாதிரி இறங்கிவிட்டாரே!” என்று தொழிலாளர்கள் அங்கலாய்த்தனர்.

ஒபிசரும் சுப்றின் டனும் சினேகபூர்வமாக உரையாடினர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே

“நான் அந்த நாலாம் நம்பர் மலைய பத்தித்தான் அபிப்பிராயம் கேட்க வந்தேன்…. ஆனா உங்க பேச்சைக் கேட்ட பிறகு என் மனம் குழம்பிப் போச்சு….. இப்ப எனக்குத் தெளிவா தெரீது. நான் ஒரு பக்கமா இருந்து தான் சிந்திச்சிருக்கிறேன்னு”.

“வருஷக் கணக்கா உங்க வாழ்க்கையைத் தியாகம் பண்ணி, நீங்க வெளியேறும் போது உங்களுக்கு கிடைக்கிற வருமானமெல்லாம் மீதமுள்ள வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமா? என்று கேள்வியெழுப்பி நீங்க சுருக்கமா சொன்னது என் மனசை அப்படியே…ஐ பீலிட் வெறி டீப்லி…”

துரையின் கார் ஊர்ந்து சென்றதும் தாஹாசாமத் விரைந்து வந்தார்.

வேலைகளை முடித்துவிட்டு காத்திருந்த தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்தார். “நாளை காலை பத்து மணிக்கு பன்வில’ யிலிருந்து மகன் வேனைப் பேசி எடுத்துக் கொண்டு வருவான். டெலிபோன் செய்தி கொடுக்கப் பட்டிருக்கு….. எஸ்டேட் லொறியைக் கேட்க எனக்கு விருப்பமில்ல…’பௌன்றி’யை விட்டு வெளியேறும் போது எனக்கும் எஸ்டேட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது”.

அடுத்த நாள் காலையில் எல்லாரும் சுறுகறுப்பாக நித்திரையை விட்டு எழுந்திருந்தனர். ஒவ்வொரு வேலையாகச் செய்து முடித்துவிட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் நேற்று மாலையே குடும்பமாகப் போய்த் தரிசித்துக் கண்ணீரும் கம்மலையுமாக விடை பெற்றுத் திரும்பினர்.

மூன்று தஸாப்தங்களின் பிணைப்பு அது!

இன்று காலையில் கூடச் சில நெருக்கமானவர்கள் வழியனுப்ப வந்திருந்து உதவி ஒத்தாசைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

தஹாவுக்கு காலை எட்டு முப்பதுக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.

இறுதியாகத் துரையைச் சந்திக்க வேண்டும். வழக்கமாக வெள்ளிக்கிழமை நாட்களில், ‘ஜும்மாவுக்கு’ அணியும் நீண்ட வெண்ணிறக் காற்சட்டையையும் வெள்ளை சேர்ட்டையும் அணிந்து சேர்ட்டை வெளியில் விட்டிருந்தார். ‘லெதர்’ செருப்பை மாட்டிக் கொண்டு நடந்தார். தலையில் மலாய்த் தொப்பி கிரீடமாகப் பளிச்சிட்டது. அவரை அலுவலகத்தில் உள்ளவர்களுக்குக் கூட அடையாளங்காண முடியாதிருந்தது. நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு தான் இலிகிதர்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து.

“இட் ஈஸ் வெரி ஸ்ட்ரேஞ்” “யூ ஹேவ் சேஞ்” என்று பல அபிப்பிராயங்கள் பீறிட்டன. “யேஸ் அப் கோர்ஸ்…தெயர் சுட் பீ…எ. சே…” என்று தாஹா நிதானமாகக் குறிப்பிட்டார்.

அப்பொழுது அலுவலகத்திற்குள் துரை நுழைந்தார். தாஹா சாமத் மலாய் ‘கொங்கோ’ தொப்பியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

அவருக்குக் கூட தாஹாவை முதலில் இனங்காண முடியாமல், “நாம் நேற்று சந்தித்த தாஹாவா?” என்று திணறினார்.

“ஐ நெவர் எக்ஸ் பெக்டட் தெட் யூ வில் லீவ் அஸ் சோ சூன்….”

துரை தொடர்ந்தார் –

“நேற்று நான் உங்கள சந்தித்து. வந்ததிலிருந்து. எனக்கு மனம் சரியில்ல. தீரயோசிச்சேன்…பக்கத்து எஸ்டேட் ‘சுப்றின்டன்’களுடனும் டெலிபோனில் அபிப்பிராயம் கேட்டேன். நம்ம அட்மினிஸ்ட்ரேஷன் செட் அப் கம்பனியினால் உருவாக்கப் பட்டிருக்கிறது.

மெக்சிமம் எங்களால் செய்யக் கூடியது இதுதான் –

உங்களுக்கோ பென்சன் வயது கடந்து விட்டது. எக்ஸ்டன்சனில் தான் கடமை செய்றீங்க…உங்களுக்கு மகன்மார் இருந்தா பொருத்தமான தொழில் கொடுக்கலாம்.

மூன்று மாதம் குவார்ட்டசில் தங்கவைக்கலாம். இன்னும் இரண்டொரு மாதத்தில் நம்ம எஸ்டேட்டையும் ‘ஜனவசம்’ எடுத்துக் கொள்ளும். அதற்குப் பிறகு யார் யாருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ… இல்லாமல் போகுதோ தெரியாது வயது காரணமாக உங்களையும் டிஸ்மிஸ் பண்ணினாலும், நாங்க குடுக்கிற சலுகைப் பணங்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். ஆனால், நிச்சயமா அரச ஊழியருக்குக் கிடைக்கும் மாதாந்த பென்சன் இல்லை”.

தாஹா சாமத் பேசத் தொடங்கினார். “சேர் எனக்காக நீங்க அக்கறை எடுத்து எதுவும் செய்ய வேண்டாம். விதிப்படி என் தலையெழுத்து இப்படித்தான். முடியட்டும். நான் உங்களிடம் எந்த விதமான சலுகைகளையும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் எனக்குப் பின்னால் வரும் இளைய பரம்பரையினரை. முப்பது வருட சேவைக்குப் பின் வீதியில் விடாம அவர்களுக்காவது ஆயுட் காலம் முழுவதுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கட்டும்”

“யெஸ் மிஸ்டர் சாமத்…அத நீங்க நேற்று உணர்ந்திட்டீங்க…வரப்போற ‘ஜன்வசம’வுக்கு எல்லாருமாச் சேர்ந்து ஒரு மகஜர் கொடுத்துப் பார்ப்போம்…”

மனம் இரங்கிப் போன துரை அவர்கள் ஏதோ பேசிக் கொண்டே போனார்…

இனி தாஹா சாமத் அவர்களுக்குச் சேர வேண்டிய கொடுப்பனவுகள் அனைத்தையும் உத்தியோக பூர்வமாக வழங்குவது. துரை பல திருத்தங்களை செய்திருந்தார்.

“மிஸ்டர் தாஹா சாமத் நாலாம் நம்பர் மலையைப் பற்றி…உங்கள் ஆலோசனை”.

“ஐ எம் சொரி சேர்…”

சற்று நேரம் மௌனம் சாதித்த சாமத் இப்படிக் கூறினார் –

“என் உடம்பு பழசாகி விட்டதும் எனது பீல்ட் உடைகள் கூட என்னை உதறித் தள்ளி விட்டன”.

“எனது பிளான் ரேசன் அறிவு கூட என் தொப்பியோடு கவிழ்ந்து விட்டது. எப்படியிருந்தாலும், நீங்கள் என்னை தேடி வந்து கேட்டதனாலே…ஐ ப்ரொமிஸ் யூ…நான் தபாலில் அனுப்பி வைப்பேன்…சோ…குட்…பாய்…”

துரை வெல வெலத்துப் போய் மௌனியாகி நின்றார். தாஹா விறுவிறுவென்று நடந்து இல்லத்தை அடைந்தபோது. மஃறூப் வாகனத்தோடு வந்திருந்தான்.

“நான் முதலில் ஹற்ரனுக்குச் சென்று…பிறகு உறவினர்களைப் பார்க்கப் பதுளைக்குப் போய்த்தான்..” என்று கூறி மனைவி மக்களை வேனில் ஏற்றினார். ரஸீனும் அவர்களுடன் போய் பின்னர் ஹாஸ்டலுக்குத் திரும்புவதாகக் கூறியிருந்தான்.

தொழிலாளர்கள் கண்ணீர் சொரிந்து நிற்க வேன் புறப்பட்டுச் சென்றது.

தாஹா சாமத் பிரயாணப் பையைத் தோளில் மாட்டி நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.

– மல்லிகை – ஓகஸ்ட் 1998.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *