எச்சில் சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 6,135 
 

அவரை நான் பார்த்தது காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் ஒரு சாக்கடை அருகில்.

இதில் என்ன அதிசயம் இருக்கிறது. சாக்கடை அருகில் குடிபோதையில் உருளும் மனிதர்களை தினமும் காண்பதெல்லாம் எங்களுக்குப் புதிய விஷயம் இல்லை என்பவர்களுடன் முரண்படுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

இந்த மனிதன் கட்டியிருந்தது உயர்தரப் பட்டு வேட்டி. மேல்துண்டும் பட்டு. புத்தம் புதிது. பக்கத்தில் குவிந்து கிடந்த துண்டு சிகரெட், பீடித் துண்டுகள். ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போன்ற தோற்றம், அடிக்கடி ஒரு வெடிச் சிரிப்பு. காட்சியே மிகவும் வித்தியாசமாக, வினோதமாக இருந்தது. ஆனால் என்னைத் தவிர சாலையில் செல்லும் எவருக்குமே இதில் எந்த வியப்பும் இல்லை.

நண்பர் சீனிவாசன் என்னோடு பணியாற்றியவர். காஞ்சியில் பல காலமாக வசிப்பவர். எனக்கு நாற்பதாண்டு கால நண்பர்.நான் அவரிடம் இந்த முரண்பட்ட காட்சி பற்றி கேட்டபோது,
“ சாமி உன்னை எதாவது திட்டிச்சா வீயெஸ்?” “இல்ல, பட்டு உடுத்தி அழுக்காக, துண்டுபீடி புகைத்தபடி, சாக்கடை அருகில் உட்காரும் மனிதன் வித்தியாசமாக இருந்தது. அதனால் தான்”

“சரி. அவர் ஓரு புதிர். அப்புறம் மகானா மனசிதைவு நோயாளியா, சித்தரா எப்படின்னு புரியாத எந்த வகையிலும் அடங்காதவர்”. என்றதுடன் முடித்துக் கொண்டார்.

காஞ்சியில் இருந்த காலத்தில் அன்றாட வாழ்சூழல் காரணமாக இதை மறந்தும் போனேன்.
அவ்வப்போது ஆடிசன் பேட்டையில் முத்தீஸ்வரன் கோவில், வரகு வாசல் தெருவில் அண்ணா நினைவில்லம், பூக்கடைச் சத்திரம்,சர்வ தீர்த்தக் குளம இப்படி பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
சில நேரங்களில் கிழிந்த அழுக்கான கந்தல், சில நேரத்தில் புதுப் பட்டு.555 சிகரெட், காஜா பீடி, இப்படி.

காஞ்சிபுரத்தை விட்டு சென்னை வந்த பின் எல்லாம் மறந்து போனதில் ஆச்சரியமில்லை.

போன தடவைக்கு முன் நண்பரின் புது மனை புகுவிழாவுக்கு போன போது காஞ்சி அடியோடு மாறி இருந்தது.பள்ளிக்கு போகும் போது காலை ஏழு மணிக்கே சாப்பிட்டு விடும் பழக்கம் காரணமாக பசி வயிற்றில் கானம் பாடியது.பேருந்து நிலையம் அருகே சாதாரண அதிகம் கூட்டமில்லாத உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட நுழைந்தேன்.இடதும் வலதுமாக ஆறு ஆறு நால்வர் சாப்பிடும் மேசைகள். வலப்புறம் உள்ள இரண்டாவது மேசையில் நடுத்தர வயதில் ஒரு கிராமத்து தம்பதி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.சொற்ப மனிதர்களுடன் இருந்த உணவகத்தில் திடிர் சலசலப்பு.

கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி எழுந்து இடுப்பில் துண்டைக் கட்டியபடி,

“ சாமி வரணும். ஆசிர்வாதம் வேண்டும்”, என்றவர்

“ டேய் யாரது சாமிக்கு இலை போடு” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே மனிதர். சடைப்பிடித்த தலை, அழுக்கடைந்த உடம்பு, தாடியும் மீசையுமாக.உள்ளே நுழைந்தவர் கல்லாவில் இருந்தவரை முறைத்தபடி ,” ஒழுக்கமா வாழப் பாரு. அப்புறம் விருந்து வை” என்றார்.நேராக அந்த நடுத்தர வயது தம்பதி அருகில் சென்றதில் கலவரமான தம்பதி பயந்தபடி எழுந்தனர்.

அந்த பெண் அருகே சென்றவர்,” அந்த பெண்ணைக் கும்பிட்டபடி “ஒரு வாய் ஊட்டு” என்றதும் அவளும் கணவன் செய்வதறியாது திகைத்தபடி நிற்கவும்.

“பயமா இருக்கா? நீ இப்போ ஊட்டாட்டாலும் அப்புறம் நிறைய நாளு எனக்குத்தான் ஊட்டணும்”
என்றபடி அந்த பெண்மணியின் எச்சிற் தட்டிலிருந்து எடுத்துத் தின்றது.

அவள் கணவனிடம், “ பயிர் பொழைச்சுக்கும்” என்றது.

வந்த வேகத்தில் காலண்டரில் ஓரு தாளைக் கிழித்து கல்லாவில் கொடுத்தது.” போடா, யோக்கியமா வாழு” என்றபடி தெருவில் இறங்கி காணாமல் போனது. கண்மூடி கண் திறக்கும் பொழுதில் எல்லாம் முடிந்து விட்டன. கல்லாவில் இருந்தவர் அந்த காலண்டர் பேப்பரை பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரமாக கல்லாவின் உள் வைத்தார். சாமி சாப்பிட்ட அந்தப் பெண்ணின் தட்டை பயபக்தியுடன் எடுத்தவர் தன் கையில் ஏந்தியபடி ஓரமாய் வாஷ் பேசின் அருகே வைத்தார்.

இன்னும் நான் உட்பட அங்கிருந்த யாரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்த அந்த பெண்ணக்கும், அவள் கணவனுக்கும் புதியதாக தட்டு வைத்து திரும்பவும் சிற்றுண்டி தர கல்லா மனிதர் ஆணை இட்டார்.

கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த தம்பதியிடம் கல்லா ஆசாமி விசாரிக்க ஆரம்பித்தார்.

“ எங்களுக்கு கருவேப்பம் பூண்டிங்க. வெவசாயந்தேன்.நெம்ப நாளா குழந்தை இல்லங்க. காமாட்சி கண் தெறந்து பாக்கணும். அதுக்காக நேர்ந்துகிட்டு வந்தோம்.தரிசனம் பாத்துட்டு இங்க வந்து சாப்பிட வந்தமுங்க. அதக்குள்ற இப்படி ஆகிப் போச்சு” எனறார் பெண்ணின் கணவர்.

அதற்கு கல்லா ஆசாமி,” அம்மா நீ புண்ணியவதி. கோடிப் பணம் கொடுத்து சாப்பிட சொல்ல ஆள் காத்திட்டு இருக்கு. ஆனா அது உன் எச்சிலை சாப்பிட்டது பார். நீங்க நினைச்சது நிறைவேறும்” என்றவர் அவர்களிடம் பணம் வாங்க மறுத்து விட்டார்.

“தன் கடைக்கு வந்து பட்டு எடுக்க மாட்டாரான்னு எத்தினி பேர் ஏங்கறாங்க தெரியுமா. அவர் தொட்டா குபேரன் தான்” என்றார்.

“தாயே உங்க புண்ணியத்தில் சாமி என்கடைக்கு வந்தது. நன்றி அம்மா” என்று அவர்களை மரியாதையாக வழியனுப்பி வைத்தார்.

நண்பரின் புது இல்லம் போகும் வழியில் நல்ல வெய்யிலில் எங்கிருந்தோ எடுத்த எச்சில் இலைகளைத் திரட்டி ரசித்துத் தின்றவரைப் பார்த்தேன். ஒரே ஒருகணம் என்னைப் பார்த்த அந்தக் கண்களை இன்று வரை மறக்க முடியவில்லை.

ஒரு வருடம் முன் போன தடவை போன போது அந்த சித்தரைப்(?) பார்க்க வேண்டும் என்று சீனிவாசனைக் கேட்க,”அவர் எங்கே இருப்பார் என்று யாருக்குத் தெரியும். உனக்கு தெரியணுமின்னு அவர் நினைச்சா பார்க்கலாம்” என்றார் சர்வ சாதாரணமாக.

அப்புறம் இந்த சித்ரா பவுர்ணமிக்கு காஞ்சிபுரம் போக எண்ணம். அப்போது காண முடியுமா தெரியவில்லை. ஆனால் அந்த கண்களை அந்த நிகழ்ச்சியை என்றுமே மறக்கவே முடியாது.

ஆனால் அந்த உணவு விடுதி இந்த கால இடைவெளியில் காணாமல் போய் இருந்ததும், அங்கே புதிய உணவு விடுதி இருந்ததும், கல்லாவில் பழைய ஆசாமி தங்க பிரேம் கண்ணாடியுடன் சிரித்தபடி,”வாங்கோ, வாங்கோ” என்று வரவேற்றதும் உண்மை.

அடி மனதில் அந்த பெண்ணிற்கும் குழந்தை பிறந்திருக்குமோ? என்ற வினா. கருவேப்பம் பூண்டிக்கும் போய் பார்க்க ஆவலாயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *