(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கல்லூரியில் கூட்டம் பொங்கி வழிந்தது. ரோஜா கண்டிப்பாக தனக்கு பொறியியல் கல்லூரியில் தான் விரும்பும் இன்பர்மேஷன் டெக்னா லஜி பாடம் கிடைத்து விடும் என்று தந்தையின் கனவுகளோடு காத்துக் கொண்டிருந்தாள். அவளோடு வந்திருந்த நிர்மலாவிற்கு பிரின்ஸிபல் அறையில் நேர்கானல் நடந்து கொண்டிருந்தது.
“‘உனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது. ஆனால், நீ விரும்பிய பாடம் கொடுக்கப்பட வேண்டுமானால் எனறு இழுத்தார் கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம்,
“என்ன சார்? நீங்கள் கண்டிப்பா என் பொண்ணுக்கு உங்கள் கல்லூரியில் இடம் கொடுப்பீர்கள் அல்லவா?” என்று கேட்டார் நிர்மலாவின் அப்பா முருகேசன்.
“இடம் கண்டிப்பாக சார். ஆனால், உங்கப் பொண்ணு கேட்கிற பாடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு லட்சம் ரூபாய் நீங்கள் அன்பளிப்பு தர வேண்டியதிருக்கும்.”
“ஒரு லட்ச ரூபாய் நான் எங்கேயிருந்து தர முடியும் சார். கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கே எப்படி கஷ்டப்பட்டு பணம் புரட்டப் போகிறேனோ, என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்திலே நீங்கள் ஒரு லட்ச ரூபாய் டொனோஷன் கேட்டால் நான் எங்கிருந்து தர முடியும் சொல்லுங்கள்”.
“உங்கள் பேர் என்ன… ஆங். முருகேசன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். எனக்கு அன்பளிப்பு தந்து படிப்பதற்கு நான் என்று போட்டிப் போட்டுக் கொண்டு இங்கே ஆட்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பெண்ணை நீங்கள் அழைத்துக் கொண்டு போய் ஏதாவது நல்ல காலேஜிலே பிஎஸ்சியோ, பி.ஏ.வோ படிக்க வையுங்கள்” என்றார் பிரின்சிபல்.
”சார், என் மகள் எப்படியும் எஞ்ஜினியரிங் படிக்க வேண்டும் என்கிறாள். எப்பிடியாவது உங்க காலேஜிலே இடம் தந்துதான் ஆகணும் சார்” காலைப் பிடித்துக் கேட்டார்.
“சரி… ஒன்று செய்யுங்கள். உங்கள் நிலத்திலே ஒன்றை விற்று காசாக்கி கொண்டு வாருங்கள். உங்க பொண்ணை கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறேன்.”
“சரி சார். நான் ஏதாவது காடுகரையை விற்று கொண்டு வந்தாவது பணம் தந்து விடுகிறேன். என் பிள்ளையை காலேஜிலே சேர்த்துக் கொள்ளுங்கள்.”
“கவலையே படாதீங்க…நிர்மலா உனக்கு என்ன சப்ஜெக்ட் கேட்டிருந்தாய். இன்பர்மேஷன் டெக்னாலஜி தானே… கவலையேபடாதே… உனக்கு காலேஜிலே கண்டிப்பாக இடம் தர்றேன். அப்பாவை கூட்டிக் கொண்டு போய் காலேஜ் பீஸ் கட்டிக் விட்டு போ” என்றவர், “முருகேசன் நாளைக்கே நிலத்தை விற்று பணத்தை கொண்டு வந்து கட்டிவிட்டுப் போங்கள்” என்றார் பிரின்சிபல்.
“சரி சார். வா நிர்மலா” என்று சோகத்தோடும் கோபத்தோடும் முருகேசன் கிளம்பினார்.
வெளியே வந்ததும்,ரோஜா ஓடி வந்து, “நிம்மி என்னாச்சு. இடம் கிடைத்ததா?” என்று கேட்டாள்.
“ம்.. ஆனால், ஒரு லட்ச ரூபாய் கட்டச் சொன்னார். அப்பாவும் எப்படிதான் கட்டப் போகிறார்களோ தெரியவில்லை” என்றாள் வருத்தத்துடன்,
“ஏன் அங்கிள்? நிம்மிக்குத்தான் நல்ல மார்க் இருக்கிறதே நீங்கள் ஏன் ஒரு லட்ச ரூபாய் தருகிறேன் என்று ஏன் ஒத்துக் கொண்டீர்கள்?”
“இல்லையென்றால் காலேஜில் இடமில்லை என்கிறாரே அம்மா, என்ன செய்யட்டும் ?”
“ஆமாம். எப்படி பணம் கட்டப் போகிறீர்கள்?”
“என்ன செய்ய? பொண்ணைப் படிக்க வைச்சு அப்புறம் வரதட்சிணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். இப்போ ஏதாவது காடு கரையை விற்றுக் கொண்டு வந்துதான் பணம் கட்டணும்” என்று முருகேசன் சொல்லும் போது, “ரோஜா யாரு, பிரின்சிபல் கூப்பிடுறாங்க” என்றவாறு பியூன் கூப்பிட்டான்.
“வர்றேன் நிம்மி. எனக்கு என்ன சொல்லப் போறாங்களோ?” என்றவாறு கிளம்பினாள் ரோஜா.
“நான் கூட வேண்டுமானால் வரட்டுமா?” என்று கேட்டார் முருகேசன்.
“வேண்டாம் அங்கிள்” என்றவாறு பிரின்சிபல் அறைக்கு வந்தாள் ரோஜா.
“வாம்மா… உன் பெற்றோர் யாரும் உன்கூட வரவில்லையா?” என்றார் முதல்வர்.
“இல்லை சார்.”
“நீயும் இன்பர்மேஷன் டெக்னாலஜிதான் கேட்டிருந்தாயா?”
“ஆமாம் சார்.”
“அந்த சப்ஜெக்ட் வேண்டுமெனில் ஒரு லட்ச ரூபாய் டொனேஷன் கொடுக்க வேண்டும். தெரியுமா?”
“கேள்விப்பட்டேன் சார்.”
“எப்படி கொண்டு வரப் போகிறாய்?”
“எனக்கு நல்ல மதிப் பெண் வந்திருக்கிறது. எனக்கு மெரிட்டிலே இந்தக் கல்லூரியிலே இடம் கொடுக்க வேண்டும் சார்.”
“என்னுடைய கண்டிஷன் ஒரு லட்ச ரூபாய்.. ம் ..உனக்கு வேண்டுமானால் நான் அதை மறுத்து விடலாம். ஆனால், ஒரு நிபந்தனை ஒரு முறை-”
“ஒருமுறை…”
“என்னம்மா புரியாத பெண்ணாக இருக்கிறாய்… என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும்.”
“மறுத்தால்”
“கதவு திறந்தே இருக்கிறது. என் கல்லூரியில் உனக்கு இடமில்லை.”
“நான் கண்டிப்பாக இந்தக் கல்லூரியில் சேர்ந்து இன்பர்மேஷன் படித்தே தீர வேண்டும்.”
“ரோஜா உனக்கு அதற்குத்தான் சான்ஸ் தந்திருக்கிறேனே..”.
“நீங்கள் சொன்ன இரண்டுமே என்னாலே முடியாதே.”
“அப்படியானால் நீ போய் வரலாம்” என்றதும் பையைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி நீட்டி, “இப்போது சொல்லுங்கள். எனக்கு உங்க காலேஜில் இடம் உண்டா இல்லையா? உங்களைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதால்தான் துப்பாக்கியோடு வரவேண்டிதாகப் போச்சு” சிரித்தாள் ரோஜா.
“ஏய் சுட்டு விடாதே…” என்று கைகளை தூக்கியவாறு காலிலிருந்த பட்டனை அழுத்தியபோது நான்கு பேர் உள் வந்து ரோஜாவைக் கோழிக் குஞ்சை அமுக்கியது போல தூக்கிக் கொண்டு போனார்கள்.
“கொண்டு போய் நம் கெஸ்ட் ஹவுசிலே வையுங்கடா.. அப்புறமா வந்து நான் கவனிச்சுக்கிறேன்” என்றவாறு வியர்வையை துடைத்தார்.
வெளியே அமர்ந்திருந்த முருகேசனும், நிர்மலாவும் ரோஜாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
– மராத்திய முரசு.