எங்கிருந்தோ வந்த நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 4,960 
 
 

எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதை பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பை காண்பித்தது.இதனை கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலை பின் கால்களில் நுழைத்து வளைந்து குலைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ என பயந்து பயந்து நகர்ந்தது.குட்டி நாய் தன்னைக்கண்டு மிரண்டு சென்றதை, பெரிய வெற்றியாக கருதிய இந்த நாய் தன் இடத்தை முகர்ந்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வளைத்துவிட்ட திருப்தியுடன் தனது உடலை வளைத்து படுத்தது.பசியினால் கண்களை மூடி கனவு காண ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு சத்தம். விருக்கென்று நிமிர்ந்து பார்த்தது,பாதையின் அந்தப்புறம் இருந்த வீட்டிலிருந்து “இங்க எல்லாம் ஒண்ணும் கிடையாது போம்மா” என்ற விரட்டலும் பசிக்கு ஏதாச்சும் போடுங்க சாமி” என்ற அந்த பெண்ணின் குரலும் இதற்கு கேட்டன. “போம்மா முதல்ல” என்ற அந்த வீட்டுக்காரனின் அதட்டலால் அந்தப்பெண் முணுமுணுத்தவாறு அடுத்த வீட்டுக்கு செலவதை பார்த்தது.இந்த காலனியில இருக்கும் வீட்டுக்காரர்களைப்பற்றி இந்த பெண்ணுக்கு தெரியாது போலும் என்று நினைத்துக்கொண்ட அந்த நாய் மீண்டும் தன் கண்களை மூடி கனவினை தொடர்ந்தது.ஐந்து நிமிடங்கள் ஒடியிருக்கும், அந்தப்பெண் முணுமுணுத்தவாறு தன்னை கடந்து செல்வதை, கழுத்தை தரையோடு படுக்கவைத்து கண்களை மட்டும் விரித்து பார்த்தது.அந்தப்பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கலாம், எண்ணெய் காணாத தலை, கையில் ஒரு துணி மூட்டையை வைத்திருந்தாள். அதனுள் என்ன வைத்திருப்பாளோ ! அப்படி ஒரு இறுக்கத்துடன் அந்த மூட்டையை பிடித்திருந்தாள். முக்கை சற்று நிமிர்த்தி அந்த மூட்டைக்குள் தான் சாப்பிடத்தகுந்த ஏதாவது வைத்திருப்பாளா என முகர்ந்து பார்த்தது.அந்த மூக்கில் சட்டென்று ஒரு மணம் உள்ளே நுழைந்தது. விலுக்கென எழுந்து அந்தப்பெண்ணை தொடர ஆரம்பித்தது.

ஏதோ புலம்பியவாறு நடந்து கொண்டிருந்த அந்தப்பெண் தன்னைத் தொடர்ந்து வரும் இந்த நாயை “ஏய் போ போ” என்று விரட்டி தன்னை விரட்டிய அந்த வீட்டுக்காரன் மேல் இருந்த கோபத்தை காண்பித்துக்கொண்டாள்.இது மாதிரி எத்தனை விரட்டுதலை இந்த நாய் பார்த்திருக்கும், அதற்கெல்லாம் அஞ்சாமல் அந்தப்பெண்ணின் மூட்டையை பார்த்தவாறு மூக்கை துருத்தி காண்பித்தது.அந்தப்பெண் மூட்டையை இன்னும் இறுக்கிக்கொண்டாள்.

நாலைந்து தெருக்கள் சுற்றிவிட்டார்கள் அந்தப்பெண்ணும், கூடவே அந்த மூட்டையை குறி வைத்து வந்த நாயும். இரண்டு இடங்களில் கிடைத்த பழைய சாதத்தை அந்தப்பெண் இதற்கும் பங்கு பிரித்து கொடுத்தாள்.முதலில் தேவையில்லை என்பது போல் முகத்தை திருப்பிக்கொண்ட நாய் இவள் அரக்க பரக்க சாப்பிடுவதை பார்த்து மெல்ல மூக்கை அதன்மேல் வைத்தது. அதற்கு பிடித்த வாசம் மூக்கில் ஏற அதன் பின் அதுவும் வேகமாக காலி செய்ய ஆரம்பித்துவிட்டது.சாப்பிட்டு அவள் உட்காருவாள் என நாய் எதிர்பார்த்தது, அவளோ மீண்டும் அடுத்த தெருவுக்குள் நுழைந்துவிட்டாள். நாய் தயங்கியது, அங்கு வேறு இரண்டு நாய்கள் அந்த தெருவுக்கு ராஜாவாக இருந்தது.வீணான பிரச்சனைகளை சந்திக்க விரும்பாததால், அந்த பெண்ணை அடுத்த தெருவில சந்திப்பது என முடிவு செய்துவிட்டது.

மீண்டும் இருவரும் சந்தித்துக்கொண்டபோது நடுப்பகல் கடந்துவிட்டது. அந்தப்பெண் மூடியிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாய் மெல்ல அவளிடம் நெருங்கி வாலை ஆட்டி நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று தெரிவித்தது. அவள் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இதனை படுக்கச்சொல்லி சைகை செய்தாள். இவள் சைகையை புரிந்து கொண்டது போல மெல்ல அவள் உடலை உரசி படுத்துக்கொண்டு தலையை நிமிர்த்தி எனக்கும் ஒரு எஜமான் உண்டு என்பது போல பார்த்தது.

இப்பொழுது மூட்டையில் இருந்து வந்த வாசம் அதற்கு அறிமுகமானது போல இருந்தது.ஆனால் அது என்னவென்று பிடிபடாமல் இருந்தது.அடிக்கடி டீக்கடைகளில் நிற்கும்போது இதன் வாசம் வந்ததாக நினைவு.மெதுவாக அந்த மூட்டைமேல் தன் மூக்கை வைத்து மூச்சை இழுத்து பார்த்தது.

ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். அந்தப்பெண் திடீரென்று எழுந்து விரு விருவென நடக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த நாயிற்கு ஒன்றும் புரியவில்லை, அதை தொடர்ந்து போகலாமா, இல்லை இங்கேயே இருந்துவிடலாமா என்று தயங்கியது.அந்த மூட்டை வாசம் அதன் நினைவுகளில் வர அதுவும் எழுந்து அந்தப்பெண்ணின் பின்னால் நடக்க ஆரம்பித்துவிட்டது.

ஒரு ஆள் இவளை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். இந்தப்பெண் அவன் அருகில் சென்று ஏதோ சொல்ல, என்ன பேசுகிறார்கள் என நாயிற்கு புரியவில்லை, இருந்தாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பது போல அந்தப்பெண்ணை உரசி நின்று கொண்டு அவனை தலையை உயர்த்தி பார்த்தது.அவனுக்கும் தன் அன்பை தெரிவிக்க தன் வாலை மெல்ல ஆட்டி காண்பித்தது.

இப்பொழுது அந்தபெண்ணுடன் இந்த ஆணும் இணைந்து நடந்ததால் நாயிற்கு கொஞ்சம் கோபம் வந்தது.திடீரென்று வந்த இந்த நட்பால் தான் ஒதுக்கப்பட்டதாக கருதியது. வாலை நிமிர்த்தி வைத்தாவாறு விரைப்புடன் இவர்கள் உடனே அதுவும் நடந்தது.அவன் ஏதோ இந்த நாயைப்பார்த்து சொல்ல அவள் கெக்கலி இட்டு சிரித்ததை “இது தன்னைப்பற்றித்தான் பேசி சிரிக்கிறார்கள் என நினைத்து தன் கோபத்தை காட்ட உர்..என உறுமி காட்டியது.

இது உறுமியவுடன் இவன் அந்தப்பெண்ணிடம் ஏதோ சொல்லி கீழே குனிந்தான்.இவன் கீழே குனிந்ததை பார்த்த அந்த நாய் கல்லை தூக்குவதாக நினைத்து அவனை பார்த்து மீண்டும் உறுமியது. அவன் நிமிர்ந்து அந்தப்பெண்ணை பார்த்து ஏதோ சொல்லி மீண்டும் குனிய அந்த நாய் அவன் தன்னை தாக்கிவிடுவானோ என்ற பயத்தில் குலைக்க ஆரம்பித்துவிட்டது. அவன் உண்மையிலேயே கல்லை எடுத்து விட்டான், அந்தப்பெண் அவன் கையைப்பிடித்து ஏதோ சொல்ல, அவன் கோபமாய் அதற்கு பதில் சொன்னான்.

இப்பொழுது நாயிற்கு கோபம் வர ஆரம்பித்துவிட்டது, அதற்கு காரணம் அந்த பெண்ணிடம் அவன் அதீத நட்பாய் இருப்பது அதற்கு பிடிக்கவில்லை.ஆனால் கோபத்தை காட்ட குரைக்க ஆரம்பித்தால் அவன் கல்லை எடுத்து தன்னை தாக்குவான் என்று உணர்ந்து துக்கம் தாளாமல் அவனைப்பார்த்து ஊளையிட ஆரம்பித்துவிட்டது.

அந்தப்பெண், நாயை சமாதானப்படுத்துவது போல கூப்பிட்டாள்.இதற்கு அருகில் போக ஆசையிருந்தாலும் அவன் கையில் கல் இருந்ததால் பயந்து அங்கேயே நின்று ஊளையிட்டது. அந்தப்பெண் நாயை சமாதானப்படுத்த மெல்ல மூட்டையை பிரித்து ஒரு பேப்பரில் சுற்றி வைத்திருந்த வடையை எடுத்து அதனை நோக்கி வீசினாள். இவ்வளவு நேரம் தனக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த அந்த பொருள் தன்னை நோக்கி வருவதை பார்த்த நாய் வேகமாக அதை கவ்வ,ஓடி வந்தது. அப்பொழுது எங்கிருந்தோ வந்த மற்றொரு நாய் அந்த வடையை தானும் கவ்வி பிடிக்க பாய்ந்து வந்தது.

இந்த நாயிற்கு எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ தெரியவில்லை, அந்த வடையை ஒரே கவ்வாய் கவ்விக்கொண்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டது. அந்தப்பெண்ணும், ஆணும்,விழுந்து விழுந்து சிரிப்பதை கூட கவனிக்கவேயில்லை.

அதனுடைய இடத்துக்கு வந்த பொழுது, மீண்டும் அந்த குட்டி நாய் அந்த இடத்தில் படுத்து கிடந்தது. இந்த நாய் வந்தவுடன் மெல்ல எழ முயற்சிக்க அந்த நாய் அதனை சட்டை செய்யாமல் தள்ளிப்போய் படுத்துக்கொண்டு தன் கனவை மீண்டும் தொடர ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *