எங்கள் ஏகாம்பரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,597 
 

வயிற்றுப் பிழைப்புக்காகப் பம்பாயின்மீது நான் படையெடுத்து வந்து எத்தனையோ வருஷங்களாகி விட்டன. ஆயினும் எங்கள் டிவிஷனையும் எங்களுடைய டிவிஷன் கெளன்ஸிலரான ஏகாம்பரம் அவர்களையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

சிலர் உலகத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தங்கள் தேசத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தாங்கள் பிறந்த ஜில்லாவைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தாங்கள் வசிக்கும் வட்டாரத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள். இவர்களில் கடைசி இனத்தைச் சேர்ந்தவர் எங்கள் ஏகாம்பரம்.

நான் மட்டும் அல்ல; எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த எல்லோருமே அவரை ‘எங்கள் ஏகாம்பரம்’ என்று செல்லமாகக் குறிப்பிடுவது வழக்கம்.

கடந்த இருபது வருஷ காலமாக இந்தப் பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது. அதாவது, அவர் எங்கள் வட்டாரத்துக்குக் கெளன்ஸிலராக வந்ததிலிருந்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அதற்கு முன்னால் அந்தப் பக்கத்தில் அவரை எல்லாரும் ‘பொடிக்கடை ஏகாம்பரம்’ என்று அழைப்பது வழக்கம்.

ஆமாம், பூர்வாஸ்ரமத்தில் அவருடைய தொழில் பொடி வியாபாரமாய்த்தான் இருந்தது. வெகு நாட்களாக எங்கள் டிவிஷனில் நல்ல பொடி கிடைக்காமலிருந்த பெருங் குறையை அவர்தான் முதன் முதலில் நிவர்த்தி செய்து வைத்தார். அதைப் பற்றி அவர் அடைந்த பெருமை இவ்வளவு அவ்வளவு அல்ல. அவரிடம் இருந்த சிறப்பான குணம் என்னவென்றால், அவர் எதையுமே எப்பொழுதுமே தமக்கென்று செய்வதில்லை; எல்லாவற்றையும் எங்கள் டிவிஷன் வாசிகளின் நன்மைக்கென்றே செய்வார். அதற்கேற்றாற்போல் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று எழுதப்பட்ட ஒரு சிறு போர்டு அவருடைய கடையின் முகப்பை எப்பொழுதும் அலங்கரித்துக் கொண்டிருக்கும். பொடி வியாபாரத்தையும் ஒரு பணியாகக் கருதிய அவருடைய மேதையை என்னவென்று சொல்வது, போங்கள்!

* * *

திருவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கு எங்கள் வட்டாரத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதில் இருந்த ஆர்வம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த ஆர்வத்தை என்னுடன் பேச நேரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் காட்டிக் கொள்ளத் தவற மாட்டார்.

தினந்தோறும் நான் கடைக்குச் செல்லும் வழியில் தான் அவருடைய வீடு இருந்தது. அவர் வசித்து வந்த தெருவைக் கடக்கும்வரை யாரும் மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் செல்ல முடியாது. காரணம், அந்தத் தெருவில் பூமிக்குக் கீழே செல்ல வேண்டிய சாக்கடைக் கால்வாய்களெல்லாம் மேலே சென்று கொண்டிருந்ததுதான்.

இதேமாதிரி இன்னும் எத்தனையோ தெருக்கள் எங்கள் வட்டாரத்தில் இருந்தன. வீட்டுக்கு வீடு ஒரு நாள் கடைக் கால்வாய் கிளம்பி எதிரேயிருக்கும் மைதானத்தை நோக்கி மெளனமாகச் செல்லும் காட்சியையும் கொசுக்கள் தங்களுடைய ரீங்காரத்தின் மூலம் அவற்றின் மெளனத்தைக் கலைத்து மகிழும் காட்சியையும் எங்கள் வட்டாரத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடை முறையில் இருந்துவரும் இந்த அதிசயத்தை எண்ணி வியந்த வண்ணம் மேலே சென்றால், தெருக் கோடியில் இருக்கும் சென்னை நகரசபையாரின் போர்டு, தெருவை அசுத்தம் செய்யாதே; அசுத்தமே வியாதிக்குக் காரணம்’ என்று நம்மை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கையைக் கண்டு சிரித்தால் எதிரே ஏகாம்பரம் தோன்றி “என்ன ஸார், சிரிக்கிறீர்கள்?” என்று கேட்பார்.

“ஒன்றுமில்லை; இந்தத் தெருவை இவ்வளவு அழகாக வைத்துக் கொண்டு ‘அசுத்தம் செய்யாதே!’ ஒன்று கார்ப்பொரேஷன்காரர்கள் நம்மை எச்சரிக்கிறார்களே என்று நினைத்தேன் சிரிப்பு வந்துவிட்டது” என்பேன்.

“அதற்குத்தானே ஸார், இரண்டு வருஷங்களாக நான் கரடியாய்க் கத்திக் கொண்டு வருகிறேன் – எனக்கு உங்கள் வோட்டைப் போடுங்கள் ஐயா, இதையெல்லாம் வெளுத்துக் கட்டிவிடுகிறேன் என்று யாராவது கேட்டால் தானே?” என்பார்.

பாவம், இரண்டு வருஷங்களாக நகரசபைத் தேர்தலில் நின்று, தாம் தோல்வியடைந்து விட்டதைத்தான் அவர் அடிக்கடி மேற்கண்டவாறு குறிப்பிடுவது வழக்கம்.

* * *

ஏகாம்பரம் இப்படி யென்றால், எங்கள் வட்டாரத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அதன் பெருமைகளைப் பற்றிச் சொல்லப் போனால் அவை எண்ணில் அடங்கா; எழுத்தில் அடங்கா; ஏட்டிலும் அடங்கா; மலேரியா, வைசூரியா, காலராவா – எது வந்தாலும் அதற்கு முதல் வரவேற்பு அளிக்கும் பெருமை எங்கள் வட்டாரத்தையே சாரும். மழைக் காலங்களிலோ சொல்ல வேண்டியதில்லை, எங்கள் தெருக்களைப் பார்க்க இரண்டு கண்களும் இல்லாமலிருக்கக் கூடாதா என்று தோன்றும். இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்து விட்டால் ஒரே வெள்ளக்காடுதான். அந்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டு சென்றால், “இதற்குத்தானே இரண்டு வருஷங்களாக எனக்கு உங்கள் வோட்டைப் போடுங்கள் என்று நான் அடித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே ஏகாம்பரம் எதிரே வந்து நிற்பார்.

இப்படி அவர் என்னைக் கண்டால் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை; எங்கள் வட்டாரவாசிகளில் யாரைக் கண்டாலும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தத் தொந்தரவைத்தாங்க முடியாமல்தானோ என்னவோ மூன்றாவது வருஷம் அவர் தேர்தலுக்கு நின்றபோது எங்கள் வட்டாரவாசிகள் அவரையே தங்கள் கெளன்ஸிலராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்

அத்துடன் அவருடைய கவலை தீர்ந்தது! அதற்கு பிறகு அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியவில்லை. அதற்குள் வோட்டுச் சேகரிக்கும் வித்தையில் அவர் கைதேர்ந்தவராகிவிட்டார். அதன் பயனாக எங்கள் வட்டார வாசிகளின் ஆதரவு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவரே வருஷா வருஷம் கெளன்ஸிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்

* * *

பத்து வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் பழைய நண்பர்களைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்பதற்காக நான் சென்னைக்குத் திரும்பினேன். எங்கள் வட்டாரத்தில் எத்தனையோ மாறுதல்களை நான் எதிர்பார்த்து வந்தேன். ஆனாலும் இங்கே வந்ததும் எந்த விதமான மாறுதலையும் காணாமல் திகைத்துப் போனேன். சர்க்கார் புராதனசின்னங்களைப் பாதுகாப்பது போல் திருவாளர் ஏகாம்பரமும் எங்கள் வட்டாரத்தின் பழம் பெருமைகளைப் பாதுகாத்து வருகிறாரோ என்று நினைத்தேன். இருந்தாலும் அவரை நேரில் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவலாயிருந்தது. வழக்கம்போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு சென்று அவருடைய வீட்டை  அடைந்ததும் “ஏகாம்பரம் இருக்கிறாரா?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

“யார் அது ஏகாம்பரமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளேயிருந்து வந்தார் ஒருவர்.

“ஆமாம், இந்த டிவிஷன் கெளன்ஸிலரைத்தான் கேட்கிறேன்” என்றேன்.

“அவர் இந்த வீட்டை விட்டுப் போய் இரண்டு வருஷங்கள் ஆகப் போகிறதே!”

“அப்படியா இப்பொழுது எங்கே இருக்கிறார்?”

“தியாகராய நகரில்!”

“அவருடைய விலாசம் தெரியுமா?”

“தெரியாது; அடுத்தாற்போல் இருக்கும் கடைத் தெருவில் ‘ஏகாம்பரம் எம்போரியம்’ என்று ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. ஒருவேளை அங்கு இருப்பார்” என்றார் அவர்.

உடனே நான் கடைத்தெருப் பக்கம் திரும்பி, ஒவ்வொரு கடையின் போர்டையும் கவனித்துக் கொண்டு சென்றேன். பத்து வருஷங்களுக்கு முன்னால் எங்கே பொடிக்கடை இருந்ததோ, அங்கே தான் ‘ஏகாம்பரம் எம்போரியம்’ இருந்தது. அந்தப் பெரிய போர்டுக்குக் கீழே, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று ஒரு சிறு போர்டு தொங்கவிடப் பட்டிருந்ததைக் கண்டதும் ‘சந்தேகமேயில்லை; இது அவருடைய கடைதான்’ என்று தீர்மானித்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அங்கும் ஏகாம்பரத்தைக் காணவில்லை. உள்ளே யிருந்த ஒருவர், ‘உங்களுக்கு யார் ஸார் வேண்டும்?” என்று கேட்டார்.

“ஏகாம்பரம் அவர்களைப் பார்க்க வேண்டும்” என்றேன் நான் பவ்வியமாக.

“அடடா இப்பொழுது தான் அவர் இங்கிருந்து போனார். நீங்கள் ஒன்று செய்யுங்கள்; நேரே ‘டவு’னுக்குச்செல்லுங்கள். அங்கே ‘ஏகாம்பரம் ஜூவல்லர்ஸ்’ என்று ஒரு கடை இருக்கிறது. அந்த கடையில் அவரைப் பார்க்கலாம்” என்றார்.
எப்படியாவது அவரைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலில் அடுத்த நிமிஷமே சைனாபஜாருக்குக் கிளம்பினேன். ஆனால் என்ன ஏமாற்றம்! அங்கும் ஏகாம்பரத்தைக் காணவில்லை!!

 “பணி செய்து கிடப்பதையே தங்கள் கடனாகக் கொண்டவர்களுக்கு ஒய்வென்பதே இருக்காதோ!” என்று எண்ணி நான் தயங்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர் என்னை நோக்கி “யாரைப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஏகாம்பரம் அவர்களைத்தான் பார்க்கிறேன்!” என்றேன்.

“அவர் இப்பொழுது தியாகராய நகரிலிருக்கும் பாண்டி பஜாரில் இருப்பார். அங்கே ‘ஏகாம்பரம் அண்டு ஸன்ஸ் – கெமிஸ்ட்ஸ் அண்டு ட்ரக்கிஸ்ட்ஸ்’ என்று ஒரு மருந்துக்கடை இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை அங்குதான்பார்க்கலாம். ஒருவேளை அங்கில்லாவிட்டாலும் அடுத்தாற்போல் தான் அவருடைய பங்களா இருக்கிறது. ‘ஏகாம்பர நிலையம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். அந்தப் பங்களாவில் முகப்புச் சுவரில்…..” என்று அவர் மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போனார்.

நான் பொறுமையிழந்து “….அந்தப் பங்களாவின் முகப்புச் சுவரில் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எழுதியிருக்கும். அந்தப் பங்களாவிலும் அவர் இல்லாவிட்டால் கார்ப்பொரேஷன் கட்டிடத்தில் கட்டாயம் அவர் இருப்பார். அங்கும் இல்லாவிட்டால்…. ” என்று அவருடன் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தேன்.

அந்த மனிதர் என்னை முறைத்துப் பார்த்தார். நானும் பதிலுக்கு அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே நடையைக் கட்டினேன்.

எதிரே என்னுடைய நண்பன் கைலாசம் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் “என்னப்பா கைலாசம்! இந்த ஏகாம்பரத்தைப் பார்க்கவே முடியாதோ?” என்றேன் வெறுப்புடன்.

“ஏன், நீ அவருக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறாயா? அட பைத்தியமே இப்பொழுதெல்லாம் அவரை அவ்வளவு லேசில் பார்த்துவிட முடியாதே! அப்படிப் பார்ப்பதாயிருந்தால் முன்னாலேயே அவருக்கு எப்பொழுது செளகரியப்படும் என்று கேட்டுக் கொண்டுதான் நீ வந்திருக்க வேண்டும்” என்றான் அவன்.

எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. “என்ன, அவ்வளவுதூரம் அவர் முன்னுக்கு வந்துவிட்டாரா?” என்றேன்.

“ஆமாம், நம் டிவிஷனுக்குக் கெளன்ஸிலரானாரோ இல்லையோ டிவிஷன் முன்னுக்கு வருவதற்குப் பதிலாக அவர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்” என்றான் அவன்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *