எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 431 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“செக் பொயின்டுகளில் மாட்டிக் கொள்ளாமல் போய்விட்டால் நல்லது. நேரத்துக்குப் போய்விடலாம்”

ஆட்டோவின் அலறலொலியுடன் மனைவியின் மெலிதான குரல் காதுவழி புகுந்து மனதைக் குடைந்தது.

இப்போது ஐந்தரை ஆகிறது. ஆறரை மணிக்கு “நொவினா” வத்தளையிலிருந்து “கும்பனித்தெரு” என்று தமிழால் பிரசித்தம் பெறத் தவறிவிட்ட “ஸ்லேவ் ஐலண்ட்” குழந்தை யேசுவின் கோவி லுக்குப் போக வேண்டும்.

ஒரு மணி நேரம் இருக்கிறது. நல்ல நாட்களில் என்றால் ஒரு மணி நேரம் என்பது மிகத் தாராளம். நாற்பது நிமிடம் இருந்தாலே போதும்.

இன்றைய நாட்களில் எதையும் நிச்சயிக்க முடியாது. இடையில் மாட்டிக் கொண்டோமென்றால் தொலைந்தது.

கோவிலாவது…குழந்தை யேசுவாவது… பிரார்த்தனையாவது…

வெள்ளிக் கிழமை விடாமல் தொடர்ந்து குழந்தை ஏசு கோவி லுக்கு நாங்கள் போகத் தொடங்கிய ஆரம்பத்தில் நண்பர் ஒருவர் எங் களை இப்படிக் கிண்டல் செய்தார்.

“வளர்ந்த ஏசுவாலேயே ஒன்றும் செய்து கொள்ள முடியவில்லை. சிலுவையில் அறையப்பட்டு வருந்தி வருந்திச் செத்தார். குழந்தை ஏசு என்னத்தைச் செய்துவிடுவார்?” என்று.

“ஆண்டவர்களை யார் வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆள்பவர்களைத்தான் ஒன்றும் சொல்ல முடிவதில்லை. காணாமல் போய்விடுவீர்கள்” என்று அவருக்கு நான் கூறினேன்.

ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஆறரை மணி நவநாள் வழி பாட்டுக்குத் தவறாமல் செல்வதை ஒரு மரபாகக் கொண்டிருக் கின்றேன். அதுவும் மனைவி மக்களுடன் குடும்பமாக.

இன்று மாதத்தின் முதல் வெள்ளி.

அதுதான் “ஒரு மணி நேரம் போதுமா” என்னும் மனைவியின் ஆதங்கம்.

வத்தளையில் இருந்து எத்தனை செக் பொயின்ற்கள். மனம் கணினியாகிப் படர்கிறது.

ஹெந்தலைச் சந்தியைத் தாண்டியதுமே ஒன்று. ஏழெட்டு பேர் போல் நிற்பார்கள். அதில் மாட்டாமல் தப்பிக்கவே முடியாது. அடுத் தது ஓலியமுல்லை. இதுவரை எங்களை நிறுத்தியதில்லை. இன்றைக்கு எப்படியோ!

பிறகு பேலியகொடையைத் தாண்டி கொழும்புக்குள் பிரவே சிக்கு முன் விக்டோரியா பாலத்திடம் ஒன்று.

பாலத்துறைப் பக்கம் திரும்பாமல் நேராகப் போய் கண்டி றோட் வழியாக கொழும்புக்குள் நுழைந்துவிடலாம் என்றால் புதுப்பாலத்திடமும் பெரியதாக ஒன்று. மணல் மூட்டைகளும் பீப்பாய்களுமாக…கையை நீட்டாமல் விடவே மாட்டார்கள்.

சுகததாச ஸ்டேடியத்தைத் தாண்டியதும் ஸ்போர்ட்ஸ் ஹோட்ட லுக்கு முன்பதாக ஆமர் வீதி முகப்பில் ஒன்று. ஆமர் வீதியில் விழுந்து கொச்சிக்கடை வழியாகப் போய்விடலாம் என்றால் மீன் மார்க் கட்டை எட்டுமுன் ஒன்று. துறைமுகவாயில் சுற்றுவட்டத்திடம் ஒன்று. லேக் ஹவுஸ் றவுண்ட் பெண்ட்டிடம், ரீகலுக்கு முன்பாக ஒன்று.

அத்தனையும் தாண்டி அந்தா இந்தா என்று கோவிலை அடையும் போது கொம்பனித்தெரு போலீஸ் ஸ்டேசனிடம் ஒன்று.

கொச்சிக்கடை வழி வேண்டாம். கூடுதலான சோதனைச் சாவ . டிகள்! மருதானையால் போய்விடலாம் என்றால் கெப்பிடலுக்கும் டவர் மாளிகைக்கும் இடையில் ஒன்று. அதைத்தாண்டி நிம்மதியாக ஓடி அதோ தெரிகிறது கோவில் என்னும் தூரத்துக்கு வந்துவிட்டதும் யூனியன் பிளேசில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை எட்டுமுன் ஒன்று. பாதையின் குறுக்கே போடப்பட்ட கம்பித் தடைகளும் தாங்களுமாய்.

அப்பாடா..! ஒரு மணி நேரம் எப்படிப் போதும். ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கோடி தெரிந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் பெண்களுடன் கோவிலுக்குப் போவதே வழக்கம்.

ஏதாவது ஒரு காரணத்தின் நிமித்தம் ஒரு வெள்ளிக் கிழமை போக முடியவில்லை என்றால் அதுவே ஒரு பெருங்குறையாக விஸ்வரூபம் கொண்டு மனதை அழுத்திக் கொண்டிருக்கும்.

ஆகவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல் சில மாறுதல்களைச் செய்து கொள்வோம்.

ஒரு தடவை எனக்கு ஆபீஸ் தாமதமாகும் போல் தெரிந்தது. வழமையான ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு மனைவி யையும் மகளையும் கிளம்பி வரச் சொல்லிவிட்டு நான் ஆபீசடியில் நின்றேன். எங்கள் ஆபீசைத் தாண்டித்தான் கோவிலுக்குப் போக வேண்டும்.

ஐந்துக்கெல்லாம் வெளியேறி வழிமேல் விழி வைத்து ஓடிவரும் ஓட்டோக்களை எல்லாம் உற்று உற்றுக் பார்த்து கண் பூத்துவிட்டது.

“நாலு மணிக்கெல்லாம் கிளம்பி வரச் சொன்னேனே. இன்னும் என்ன… வழியில் ஏதாவது….?” என்று மருகி நிற்கையில் ஆறு மணிப் போல் ஆட்டோ வந்து நின்றது.

“என்னப்பா?” என்றவாறு ஏறிக் கொண்டேன்.

“என்னவா…? அதை ஏன் கேட்கிறீர்கள்…?” என்று ஆரம்பித்தாள் மனைவி.

மகளைப் பார்த்தேன். முகங்கள் பொலிவாக இல்லை இருவருக்கும்.

‘விக்டோரியா’ பாலமுனையில் ஆட்டோ நிறுத்தப்பட்டதாம்! உள்ளே இரண்டு பெண்கள் மட்டுமே! பிறகு கேட்பானேன்.

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால் இவர்களுக்குத் தமிழ்ப் பெண்களைக் கண்டுவிட்டால் பேயைக் கண்டது போலத்தான். “பயின்ட” வைத் தொடர்ந்து இருவரும் இறங்கிக் கொண்டனர்.

“கோவிலுக்கு” என்னும் பதிலுடன் அடையாள அட்டை நீட்டப்படுகிறது.

“மெயா கவுத” தாயிடம் கேள்வி.

“எனது மகள்” மனைவியின் பதில்.

அடையாள அட்டைகளை நீண்ட நேரம் திருப்பித் திருப்பிப் பார்த்தவன் “எதைக் கொண்டு நான் அதை ஏற்றுக் கொள்ள முடியும்? பிறந்த இடமும் வசிக்கும் இடமும் கொழும்பு என்று உங்களுக்கு….இந்தப் பெண்ணுக்கு தெல்பெத்தை – பதுளை என்றிருக்கிறது. இப்படி ஓரமாக நில்லுங்கள்” என்றவன் பெரியவனிடம் நடந்தான். அவனுடைய கேள்வி மிகவும் அசட்டுத்தனமாகப் பட்டிருக்கிறது மனைவிக்கு.

திரும்பி வந்தவனிடம் “என்னுடைய பெயருடன் இணைந்திருக்கும் பெயர் எனது கணவருடையது. இதில் என் மகளின் பெயருடன் இணைந்திருக்கும் அதே பெயர் அவளது தந்தையினுடையது…”

“அவள் என்னுடைய மகள் என்பதற்கு அதுதான் இப்போதைய அத்தாட்சி…”

“நான் பதுளைக்குப் போயிருந்தபோது இவள் பிறந்தாள். அதனால் தான் பிறந்த இடம் பதுளை என்றிருக்கிறது. இதில் என்ன கேள்வி வேண்டியிருக்கிறது…! அதுவும் போக எனக்கும் அடையாள அட்டை இருக்கிறது…! அவளுக்கும் இருக்கிறது…! பிறகு அவள் எனது மகளாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன…?”

மனைவியின் சிங்களம் அவனை மருள வைக்கிறது. இருந்தாலும் சமாளிக்கிறான்.

“நீங்கள்தானே மகள் என்று சொன்னீர்கள். அதனால் தான் உறுதி செய்து கொள்ள, கேட்க வேண்டி வந்தது” என்றவன் மெதுவாகக் கேட்கின்றான் “தெலிபெத்தை, எங்கிருக்கிறது? யாப்பண நெவே நே?

மனைவி விளங்கப்படுத்தி இருக்கின்றாள்.

“பதுளையில் இருந்து பசறை போகும் பாதையில் இரண்டாவது மைலில் இருக்கிறது தெல்பெத்தை என்னும் தேயிலை தோட்டம்” என்று.

தெளிவத்தை என்பதன் ஆங்கிலப் பதம் அது. அதைத்தான் சிங்களத்தில் அப்படியே எழுதி இருக்கின்றார்கள்.

அதைக் கண்டுதான் அவனும் மிரண்டிருக்கின்றான். ஏதோ ‘தெல்லிப்பளை’ மாதிரி ஒலிக்கிறதே என்று.

“யாழ்ப்பாணப் பக்கம் இல்லையே” என்னும் அவனுடைய வினாவின் தொனியும் அதுதான்.

யாழ்ப்பாணத்தை விடமாட்டோம் என்றவர்களும் இவர்கள்தான். யாழ்ப்பாணம் என்றதும் வெருள்கிறவர்களும் இவர்கள்தான்.

அடையாள அட்டைகளைத் திருப்பித் தந்து “போங்கள்” என்றான்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர அலைக்கழிப்பு. தனியாக வெளியே சென்று பழகியிராத இவர்களுக்குப் பயமாகவும் வெறுப்பாகவும் போய்விட்டது.

“வேண்டாம்னு போயிறிச்சீங்க… ஏண்டா கோயிலுக்குக் கெளம்புனோம்னு…நடு றோட்டுல நிப்பாட்டி வச்சுக்கிட்டு…என்னமோ அவனோட சொத்தை கொள்ளையடிக்க வந்த மாதிரி! போறவாறவன்லாம் பாத்துப் பாத்துக்கிட்டு போறானுக…..ஸுவுல வேடிக்கை பாக்குறாப்புல…” சிறுமைப்படுத்தப்பட்ட சீற்றத்திலிருந்து அவள் இன்னும் மீளவில்லை.

அடையாள அட்டைகள் தமிழில் எழுதப்பட்டிருப்பதால் தான் நடுப்பாதையில் நிறுத்தி வைக்கின்றார்கள்.

அரச அலுவலங்களில் தமிழ் எழுதுகின்றார்களா? இல்லை. ஆஸ்பத்திரிகளில் பொது இடங்களில், போக்குவரத்துச் செய்யும் ரயில்களில்…பஸ்களில்…இடங்களைக் கூறும் பெயர்பலகைகளில்…இல்லை!

அரசு அனுப்பும் சுற்று நிருபங்கள், படிவங்கள், பத்திரங்கள் அவ்வளவு ஏன் அரசு நடத்தும் தமிழ்விழா போன்றவைகளின் அழைப்பிதழ்களில் இல்லை….

ஆனால் ஆட்களைக் காட்டும் அடையாள அட்டைகளில் தமிழ் இருக்கிறது அது ஏன்?

இது போன்ற செக் பொயின்டுகளில் இருப்பவர்களுக்கு “இவன் தமிழன் சந்தேகமற, பரிபூரணமாகச் சோதனை செய்துக்கொள்” என்று அறிவுறுத்தத்தான். அதைத்தான் இவர்களும் செய்கின்றார்கள். இதில் கொதிக்கவோ கோபிக்கவோ என்ன இருக்கிறது? அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டியது நமது பொறுப்பு.

இந்த ‘செக்கிங்’ நிலைமைகள் வருவதற்கு முன் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கவில்லையே!

காரணத்துடன்தான் காரியங்கள் நடக்கின்றன.

கோவிலுக்குப் போவதற்குக்கூட நாங்கள் அனுபவிக்கும் இன்னல்கள்..! சோதனைகள்..!

யாருக்குப் புரிகின்றன இவைகள். இன்னல்களிலிருந்து விடுபடத்தான். கோவிலுக்கே செல்கின்றோம்.

இன்றும் அப்படி யாராவது ஒரு அதிகப் பிரசங்கியிடம் அகப்பட்டுக் கொண்டால் தொலைந்தது. வழிபாடு முடிந்த பிறகுதான் கோவிலை அடைய முடியும்.

“தடங்கல்கள் ஏதுமின்றி நேரத்துடன் கோவிலை அடைய வேண்டும். நவநாள் வழிபாட்டில் முழுதாகப் பங்கேற்க வேண்டும்” என்று மன்றாடியபடியே ஆட்டோ பயணம் தொடர்கிறது.

வத்தளையிலிருந்து லேக்கவுஸ் சுற்றுவட்டம் வரை ஒரு இடத் திலும் சிக்கிக் கொள்ளாமல் அந்த நாள் போல் ஜிவ்வென்று வந்து ரீகலையும் தாண்டியாக விட்டது.

ஒவ்வொரு பொயின்ட்களையும் தாண்டும்போது மனம் லேசாக அடித்துக் கொள்ளும். முன்னால் போன வாகனத்தை நிறுத்திவிட்டார்கள். நம்மை நிறுத்த மாட்டார்கள் என்னும் போலியான மகிழ்ச்சி வேறு.

அந்தா இந்தா என்று கோவிலை அடையும் நேரம் படுபாவி ‘ஸ்டொப்’ கார்டைத் தூக்கிப் பிடித்தானே!

ஆட்டோக்காரன் ஓரத்திலடித்து நிறுத்தினான். டக்கென இறங்கி நின்று லைசன்ஸ் இத்தியாதிகளை நீட்டினான்.

நானும் இறங்கி, மனைவிக்கு இறங்க வழி விடுகையில் ஆமிக்காரன் அருகே வந்தான்.

தோளில் தட்டி என்னை ஒதுக்கிவிட்டு உள்ளே பார்த்தான் பெண்கள்.

“பயின்ட ஓன நே” என்று மெதுவாகக் கூறியபடி இறங்கத் தேவையில்லை என்று சமிஞ்சை செய்தான்.

அதற்குள்ளாக டிரைவரின் லைசன்ஸ் இத்தியாதிகளையும் எங்களுடைய அடையாள அட்டைகளையும் சோதணையிட்ட மற்றவன் “டமில் கட்டிய நே” என்றவாறு “இவர்களைத் தெரியுமா” என்று சாரதியிடம் வினவினான்.

“நன்றாகத் தெரியும்” என்று சாரதி சட்டிபிக்கேட் வழங்கினான்.

மனைவியின் முகம் திடீரென மாறியது. “நாங்கள் தமிழர்கள் என்பதால் ஒரு ஆட்டோ சாரதி எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்க வேண்டி இருக்கிறது” என்பதே அந்தத் திடீர் முக மாற்றத்துக்கான காரணம்.

இவன் அவனைப் பார்த்தான்.

“ஆட்டோ சாரதியின் விலாசமும் உங்கள் விலாசமும் ஒரே இடத்தைக் குறிப்பதால் தான் கேட்டேன்” என்றான் அவன்.

எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறவர்களாக அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

“எங்கே போகின்றீர்கள்?”

“இன்று முதல் வெள்ளி இன்ஃபன்ட் ஜீஸஸ் கோவில் நொவீனாவுக்குப் போகின்றோம். ஆறரை மணிக்கு நொவீனா!” மனைவி கட கடத்தாள்.

“ஓ… இன்று வெள்ளிக் கிழமை! அதுவும் மாதத்தின் முதல் வெள்ளி. எங்களுக்கு அதெல்லாம் ஒன்றும் தெரிவதில்லை. நாள் கிழமை…. கோவில் …. திருவிழா…எதுவும் தெரிவதில்லை! நேரமும் இல்லை…இரவு…பகல்…வெயில்…மழை என்று இப்படி எங்காவது நிற்போம். டீயூட்டி முடியும் வரை உயிருடனிருந்தால் ‘கேம்ப்’, பிறகு ‘டீயூட்டி’ நீங்கள் செல்லுங்கள்.”

என்றவன் ஒரு ஏக்கத்துடன் கூறினான்.

“கோவிலில் பூசையின்போது எங்கள் நினைவும் வருமானால் எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்.”

“பாவமா இருக்குங்க” என்றாள் மனைவி.

நொவினா தொடங்க இன்னும் நேரமிருக்கின்றது. ஆலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகின்றது. தேவ அன்னை மரியாளையும் சகல புனிதர்களையும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்னும் மன்றாட்டுப் பிரார்த்தனை.

“எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்” என்னும் அவர்களின் குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றைய நவநாள் பிரார்த்தனையை அவர்களுக்கு ஒப்பு கொடுத்து அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

மணி ஆறரை.

THERE SHALL BE SHOWERS OF BLESSINGS
THIS IS THE PROMISE OF LOVE

என்னும் ஆரம்ப கீதத்துடன் வழிபாடு தொடங்குகிறது. குருவானவர் சீடர்களுடன் பீடத்தில் ஏறுகின்றார்.

கோவில் கொள்ளாத சனம். தங்களைச் சுற்றி நடக்கின்ற சகல விதமான புற நிகழ்வுகளையும் மறந்து இறைவனுடன் ஒரு மணிநேரம் ஒன்றிவிடும் அற்புதம் ஒரு சிலருக்கு எப்படியோ சித்தித்து விடுகிறது.

நவநாள் வழிபாடு நடந்து முடிவதற்கடையாளமாக இறுதி கீதம் ஒலிக்கத் தொடங்குகின்றது.

கோவிலில் அத்தனை கூட்டமும் ஒன்றித்து அக்கீதத்தில் இணைகிறது.

இசையும் கீதமும் உச்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஆலயம் அதிர்கிறது. பூகம்பம் வந்தது போல் அமர்ந்திருந்தவர்கள் ஆடி விழுந்து எழுகின்றனர்.

அத்தனை பெரிய சத்தத்தை இதற்கு முன் நாங்கள் கேட்டதே இல்லை .

ஒரு வினாடி ஆலயம் ஸ்தம்பித்துவிட்டது.

குண்டுதான் வெடித்திருக்கிறது.

கோவிலுக்குள்ளா..? தெரியவில்லை!. அத்தனை கூட்டமும் விதிர் விதிர்த்துப் போய் நிற்கின்றது.

குண்டு கோவிலுக்குள் வெடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சில வினாடிகள் பிடித்தன.

அமைதியாக இருங்கள்… சிரம் தாழ்த்தி மன்றாடுங்கள… பீடத்தில் இருந்து குருவானவரின் நம்பிக்கைக் குரலுடன் இறுதி கீதம் தொடர்கிறது.

நாவுலர்ந்து போன வாய்களில் இருந்து கீதம் எழ மறுக்கிறது.

ஒரு வினாடிதான்… பிறகு தொடர்கிறது…

WHEN MY LIFE IS ALMOST GONE
HEAR MY CRY HEAR MY CALL
HOLD MY HAND LEST I FALL

நொவினா முடிந்து விட்டது.

பாதைக்கிறங்கப் பயந்து போய் கோயிலில் நின்ற கூட்டம் வெளியேற வெகு நேரம் பிடித்தது.

மெது மெதுவாகச் செய்தி வருகிறது.

சோதனைச் சாவடியில்தான் வெடித்திருக்கிறது குண்டு. சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆமிக்காரர்களும் உடல் சிதறி..!

“டியூட்டி முடியும் வரை உயிருடன் இருந்தால்…” என்ற அந்த இரட்டை முகங்கள் எங்கள் இதயத்தின் ஆழத்தில்.

– மல்லிகை 36 வது ஆண்டு மலர் ஜனவரி 2001.

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *