கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 1,078 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கறுப்பில் சிவப்புக்கரை போட்ட கம்பளியின் கதகதப்பு அதி காலைக் குளிருக்கு இதமாக இருக்கிறது. இருந்தும் பல்லைக் கடித்துக் கொண்டு கம்பளியை உதறிவிட்டு சின்னவர் எழுந்துவிட்டார்.

சின்னவர் என்றால் சின்னக்கணக்குப்பிள்ளை. கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டார். கருமை இன்னும் விலகவில்லை…நிலம் தெளியவில்லை…காலைத் தடவிப் பார்த்துக் கொண்டார். ‘சொறசொற’ வென்றிருந்தது, கல்லைப்போல.

கணுக்காலுக்குக் கீழே அடியில் கால்வாசிப் பாதம் கன்னங்கரேல் என்று.

கட்டிலை விட்டிறங்கியவர் காலை ஒருக்களித்து ஊன்றி மெதுவாக நடந்து கோடிப் பக்கம் போய் அமர்கின்றார்.

அவர் அமர்வதற்கும் ‘தடால்’ என்று கூரைத் தகரத்தின் மேல் ஏதோ கனமான ஒன்று விழுவதற்கும் சரியாக இருக்கிறது. “அறைய வேண்டும் றாஸ்கல்களை” என்று முனகிய வண்ணம் நடந்தவர் அண்ணாந்து ‘கம்பளிமாசி’ மரத்தைப் பார்க்கின்றார்.

கானோரம் வளர்ந்து தகரக்கூரைக்கு மேலாகக் கிளை படர்ந்து நின்ற மரத்தில் கறுப்பும் சிவப்புமாய் கம்பளிப் பூச்சிகள் போலவே பழங்கள்… சடைசடையாய்!

பள்ளிக்கூடம் போகும் பையன்கள் பழம் பறிக்க வீசி எறியும் கம்புகள், கற்கள் சடைத்து நிற்கும் மரக்கிளைகளில் தொக்கி நிற்கின்றன.

அப்படித் தொக்கி நின்ற கம்போ, கல்லோ தான் சின்னவர் உட்கார்ந்த நேரம் பார்த்து ‘டமார்’ என்று விழுந்திருக்கிறது. கூரைத் தகரத்தில்.

மரத்தை அண்ணார்ந்து பார்த்தபடி நடந்தவர் கானோரக் கல்லில் காலை உரசிக் கொண்டார்.

சுரீரென்றது.

வலது காலைத் தூக்கி இடது கையால் இலேசாகத் தடவிக் கொண்டார்.

மாடு புண்ணாக்குத் தின்பது போல மொச் மொச்’ சென்று விரல் கள் அந்தக் கறுப்பின் மேல் மேய்ந்தன. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் வாசல்கல்லில் அமர்ந்து காலைத் தூக்கி இடதுத் தொடை மேல் வைத்துக் கொண்டு பறக் பறக்’ கென்று சொறிந்தார்.

அரிப்பு அடங்குவதாக இல்லை!

விரலைத் திருப்பிப் பார்த்தார். நகத்திற்கு மேலாக ஒரு கால் அங்குல உயர்த்துக்கு சதையே மேவி நிற்கிறது.

நகம் கடிக்கும் பழக்கம் பொல்லாதது என்பதை உணர்கின்றார்.

வெடித்துக் கிளம்பும் பேய் அரிப்பிற்கு போதுமான நகம் இல்லை.

காலை விந்தி விந்தி நடந்தவர் ஜன்னல் விளிம்பைத் தடவி சீப்பு டன் மீண்டும் அமர்ந்தார்.

அரிப்பு அடங்கியதும் லேசாக எரிச்சல் தொடங்கியது. பொட்டுப் பொட்டாய் நீர் துளிர்த்து நின்றது. சாரத்தை இழுத்து ஒத்திக் கொண்டார்.

பையன் தேநீர் விளாவிக் கொண்டிருந்தான். பலகைக் கட்டையை இழுத்துப் போட்டு அடுப்பின் முன் அமர்ந்தவர் காலைத்தூக்கி அடுப்பு மேடையில் வைத்துக் கொண்டார்.

அடுப்பு மேடையின் மண்சூடு நீர் கசியும் அந்த இடத்திற்கு மிகவும் இதமாக இருந்தது.

பட்சிகள் ஓசை எழுப்பத் தொடங்கின. கணுக்கால் மறையக் கட்டிய வேஷ்டியுடன் நொண்டுவது தெரியாமல் நொண்டி நொண்டி பிரட்டுக் களத்தை அடைந்தார்.

வெற்றிலை வாயும் வெறுங்காலுமாய் பெரிய கணக்கர் நின்று கொண்டிருந்தார்.

கைப்பிரம்பைத் தரையில் ஊன்றி அதன் மேல் வளைவில் லாவக மாய்ச் சாய்ந்து கொண்டிருந்தவரின் வேஷ்டி முழங்காலுக்கு மேல் மடிந்து முன்னிடைக்குள் செருகி நின்றது.

கைச்செக்ரோலில் லயித்துக் கிடந்த பெரியவர் முதலில் பார்த்தது சின்னவரின் கணுக்கால் மறைக்கும் வேஷ்டிக்கட்டை. பிறகு பார்த்தது அவருடைய முகத்தை.

“றோட்டுக் கூட்டுறாப்புல வேஷ்டி கட்டிக்கிட்டா மலையேறி வேலை பார்க்க முடியுமான்னு படியளக்குற தொரை எங்கிட்ட கேக்குறான்” என்று சின்னவருக்கும் தனக்கும் மட்டுமே கேட்கக் கூடியதாக முனகிக் கொள்ளுகின்றார்.

சின்னவரின் பாதத்தில் ஒரு சத அகலத்தில் பொட்டுப் போல லேசாக அரிக்கத் தொடங்கியபோது சொறிந்து கொள்வதுடன் நிறுத்திக் கொண்டார்.

அதுவே பிறகு ஐம்பது சத அகலமாகி ஒரு ரூபாய் அகலத்துக்குப் படரத் தொடங்கியதும் இது என்னவாக இருக்கும் என்னும் ஆராய்ச்சியில் இறங்கினார்.

பூச்சிக்கடியா… படையா.. சொறியா…. சிரங்கா.. என்று நிர்ண யித்துக் கொள்ள முடியாத ஒரு மாத காலத்துக்குள் அது வளர்ந்து கால்வாசிப் பாதத்தை ஆக்ரமித்துக் கொண்டது.

லயம் பார்க்க வந்த தோட்டத்து டிஸ்பென்சர் கொழுந்து லொறி யில் ஏறிப்போய்விடும் உத்தேசத்துடன் கொழுந்து நிறுக்கும் இடத் துக்கு வந்து லொறி இன்னும் வராததால் சின்னவருடன் பேசிக் கொண் டிருந்தார்.

சந்தர்ப்பம் அப்படி அமைந்திராவிட்டால் சின்னவரை எல்லாம் மதித்து டாக்டரய்யா பேச்சுக்கு வந்திருக்கமாட்டார்.

அவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாகவே கால்சட்டை தொப்பிக்காரர்கள்.

சின்னவரோ…!

வாசல் கூட்டி வைரவனின் வயிற்றில் பிறந்து ஏதோ அரைகுறை யாகப் படித்து எப்படியோ சின்னக் கணக்கப்பிள்ளையாகி லயத்தில் இருந்து வெளியேறி இன்று ஸ்டாப் குவாட்டஸ்ஸுக்குள் குடி நுழைந் தவர்.

அவருக்கும் இவருக்கும் எட்டுமா…?

சின்னவரின் காலைப் பார்த்த அய்யா “திஸ் இஸ் எக்சிமா நோ!” என்றார்.

சின்னவர் மௌனமாகத் தலையை ஆட்டிக் கொண்டார்.

“காலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதெல்லாம் கவனிக் காததால் தான் இது போன்ற தோல் வியாதிகள் ‘உங்களுக்கு’ வருகின்றன”

அய்யா ‘உங்களுக்கு’ என்றது சின்னவருக்குத் தனியாக உபயோகித்த மரியாதைப் பதம் அல்ல. எந்தச் சமூகத்தை நம்பி வயிறு வளர்க்கின்றாரோ அந்தச் சமூகத்தையே அப்படிக் கிண்டலாகக் குறிக்கின்றார் என்பது, ‘உங்களுக்கு’ என்ற அந்தச் சொல்லுக்கு அவர் கொடுத்த அழுத்தத்தில் புலனாகின்றது.

“ஐயான்னா சப்பாத்து மேசுல காலை வைச்சிருப்பீங்க!. பங்களாவுக்குப் போனப்புறமும் சிலிப்பர்லே வைச்சிருப்பீங்க!. என்னால ஆவுமாங்க? அதோ பாருங்க எட்டேக்கர் உச்சி! அதுல ஏறி பத்தேக்கர் வறக்கட்டு வழியா எறங்குனேன்னா…காலா, கையா…! எதைப் பாக்குறது!”

“அது கெடக்கட்டுங்க அய்யா இதுக்கு மருந்து தருவிங்களா? நானும் ஏதேதோ போட்டுப் பாத்துட்டேன். ஒன்னுக்கும் மசியுதில்லே!”

“இது சிம்பிள் கணக்குப்பிள்ளே! சின்னப் போத்தல் அனுப்பினா ஒரு மருந்து அனுப்புறேன்! கர்பாலிக் சோப் தெரியுமா? செவப்பு கலர்லே இருக்குமே? சுடுதண்ணி போட்டுக் கழுவிட்டு நல்லா ஒத்திட்டுக் கோழி மயிரிலே தொட்டுத் தொட்டுப் போடணும்….சரியா ரெண்டே கௌமியில் கால் சுகமாயிறும்!”

சின்னவருக்குத் திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி. கால் ஒன்றுக்குமே ஆகாது போய்விடுமோ என்று பயந்து போயிருந்த அவருக்கு டாக்டரய்யாவின் பேச்சு வரப்பிரசாதம் போல் இருந்தது.

“ஆறிப் போயிறும் தானுங்களே!?” என்று மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றார்.

“ஆறாமே சின்னக் கிளாக்கரய்யா தங்கச்சிக்கு இதைவிட மோசமா இருந்துச்சே.! நானே தான் கழுவி மருந்து போட்டேன்..! ஒரே மாசத்துல தளும்பு கூட இல்லாமப் போச்சு!”

“அவுங்களும் கால் கை கழுவாமல், குளிக்காமல் இருந்தாங்களோ?” என்று சின்னவர் நினைத்துக் கொண்டார். ஆனால் கேட்கவில்லை .

“அந்தத் தங்கச்சிக்கும் இதே எடத்துலயாங்க?” என்று கேட்டவர் ஐயா ஒரு வினாடி தயங்கியதைக் கண்டதும் “ஏன் கேட்டோம்’ நமக்கேன் வீண் வம்பு என்று எண்ணிக் கொண்டார்.

ஒரு வினாடி தயங்கிய ஐயா…. “மொளங்காலுக்கு கொஞ்சம் மேலே” என்றபடி லொறியில் ஏறிப் போய்விட்டார்.

“நானே கழுவி நானே மருந்து போட்டேன்” என்று அவர் கூறியதி லிருந்து மொளங்காலுக்கு கொஞ்சம் மேலேயா இருக்காது! கூடவே மேலேயாத்தான் இருக்கும்” என்று எண்ணிக் கொண்டவர் “எந்த எடமா இருந்தா நமக்கென்ன இது ஆறுனா சரி” என்றவாறு காலைப் பார்த்தார்.

தோல் வெடிப்புற்று நீர் கசிந்து காய்ந்து கோரமாய்க் கிடக்கிறது அந்த இடம்.

***

கார்பாலிக் சோப் போட்டுக் கழுவிவிட்டு மிகவும் நம்பிக்கை யுடன் அய்யா அனுப்பியிருந்த மருந்தைப் பூசத் தொடங்கினார் சின்னவர்.

ஆனால் கால் அரையாகி முக்கால்வாசிப் பாதமுமே கன்னங் கறேல் என்று சொறிக் கல்லாய் மாற மாற அவருடைய நம்பிக்கையும் மாறிவிட்டது.

அந்தம்மாவுக்குப் பூசக்கொடுத்த அதே மருந்தைத்தான் தனக்கும் கொடுத்திருப்பார் என்று அவரால் நம்ப முடியவில்லை.

மருந்து வியாதிக்கு ஏற்றவாறு வித்தியாசப்படாமல் ஆளுக்கு ஏற்றவாறு வித்தியாசப்படுவது என்ன விந்தை!

அய்யாவின் மருந்துதான் காலை ரொம்பவும் மோசமாக்கிவிட்டது என்றாலும் தப்பில்லை.

அவர் கொடுத்தனுப்பிய மருந்துப் போத்தலைத் தூக்கித் தலையைச் சுற்றி வீசிவிட்டு ஒரு சில நண்பர்கள் கூறியபடி ஒரு நிக்சோடம் (NIXODERM) டின்னை வாங்கிக் கொண்டார்.

அடுப்புக்கு மேல் இருக்கும் கறுத்தச் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதுபோல் ஆள்காட்டி விரலால் நிக்சோடம்மைத் தொட்டு அள்ளிப் பாதத்தின் கறுப்பில் பூசிக் கொண்டு விந்தி விந்தி நடந்துவரும் சின்னவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

மட்டக் கொழுந்து மலையைப் பார்வையிட்டு விட்டு இறங்கிக் கொண்டிருந்தவர் கானைத் தாண்டுவதற்காக கானொட்டில் கிடந்த கல்லில் இடது காலை ஊன்றினார்.

கல் ஆடி உருளவும் தடுமாறிப் போனவர், சமாளித்து ஒரு எட்டில் கானைத்தாவி வலது காலை ஊன்றி நின்றார்.

நீட்டிக் கொண்டிருந்த ஒரு தேயிலைக் கம்பு தாண்டும்போது எக்சீமாவில் கீறிவிட்டது.

சுரீர் என்றது சின்னவருக்கு. உயிர் நிலையில் அடி விழுந்ததுபோல் வயிற்றுக்குள்ளே ஒருசுழற்சி. கண்கள் கலங்கிவிட்டன. காலை இறுகப் பற்றிப் பிடித்தபடி தேயிலைக்குள் அமர்ந்து கொண்டார்.

வெள்ளையாகப் பூசப்பட்டிருந்த நிக்சோடத்துக்கும் மேலாக தண்ணீரும் இரத்தமும் கசிந்து இழைந்து கொண்டிருந்தன.

மௌனமாகச் சிறிது நேரம் அழுது ஆற்றிக் கொண்டவர் மண்ணை அள்ளி லேசாகத் தெள்ளி கசியும் இரத்தத்துக்கு மேல் தூவி விட்டுக் கொண்டார்.

இதுபோல் எத்தனையோ தடவைகள் கம்பும், கல்லும், குச்சியும், கோலும் கீறிப் பிளந்திருக்கின்றன.

அப்பொழுதெல்லாம் அவர் இரத்தம் வடியும் காலுடன் நேராகப் பெரியவரிடம் வந்து முறையிடுவார்.

“பாத்தீங்களா..! இந்த எளவுக்காகத்தான் ஒரு சப்பாத்தை மாட்டிக்கிறேன்னு உங்ககிட்ட கேட்டுக்கிட்டே இருக்கேன்!” என்பார் அழாத குறையாக.

பெரியவரா அசைந்து கொடுப்பார்!

“என் காலைப் பாருங்க… எத்தனை காயம்…எத்தனை கீறல்..! எனக்கு சப்பாத்து போட்டுக்குற தெரியாதா? தொரை ஒரு மாதிரியா பாப்பானே..! ‘என்ன இன்னைக்கு சப்பாத்தோட வர்றாரு! நாளைக்கு கார்ல வருவாரோ’ன்னு கருவிப்புட்டான்னா…நாம அவ்வளவுதான்!”

அதற்கு மேல் பெரியவரிடம் கெஞ்சியும் பலனில்லை வாதாடியும் பலனில்லை என்பது சின்னவருக்குத் தெரியும்.

நேராகத் துரையிடம் போய்த் கேட்டுவிடவும் முடியாது. “இவனும் திங்க மாட்டான் திங்கிறவனையும் விடமாட்டான். “வைக்கப் போருல படுத்துக்கிட்ட நாய் மாதிரி!” என்று முனகியபடி நடந்து விடுவார்.

காட்டோரத் தேயிலையடியில் பாசி மண்டுவது போல் காலில் கறுப்பு மண்டிக்கொண்டே இருந்தது.

இதுக்கெல்லாம் இங்கிலீஸ் மருந்து ஒத்துவராது என்று பலரும் கூறக்கேட்ட சின்னவர், பதுளை டவுனில் உள்ள ஒரு மலையாள வைத்தியரிடம் போய் காலைக் காட்டினார்.

“கேஸ் முத்திப்போச்சு” என்று தொடங்கிய வைத்தியர் காலை நன்றாக உற்றுப் பார்த்தார். “நான் மருந்து தாறன். மறு கெழமவரணும்!. தோலுக்குப் பூசி ஆவப்போதில்லை!. உள்ளுக்குக் குடிக்கணும்!.” என்றார்.

“மொதல்ல வயத்தைக் கழுவணும் பெறகு பத்தியம் இருக்கணும்..! இறைச்சி, கருவாடு நாடப்படாது..! வாரக் கெழம வரட்டும்…நான் ரெடி பண்ணித் தாறன்” என்று அனுப்பிவிட்டார்.

அவர் சொன்ன அடுத்த வாரம் சின்னவர் போய் நின்றார்.

ஒரு சிறிய ‘ஹோர்லிக்ஸ்’ போத்தல் நிறைய லேகியமும் வயிற்றோட்டத்துக் குடிக்க ஒரு பொட்டலமும் கொடுத்த வைத்தியர் “முப்பது ரூபாய் முடியுது” என்று முடித்தார்.

காசைப் பார்த்தால் காலைப் பார்க்க முடியாதே. சின்னவர் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டார்.

காசை வாங்கி மேசையில் போட்டுக் கொண்டே வைத்தியர் கூறுகின்றார் “புண்ணுல ரத்தம் கசியக்கூடாது…நகம் படக் கூடாது…நல்லா அரிக்கும் ஆனா சொறியக்கூடாது…சொறிஞ்சிரத்தம் வந்ததோ..! இந்த ஜென்மத்துல ஆறாது…கணுக்காலுக்கு மேலே ஏறிச்சோ அவ்வளவுதான்! கால் முழுக்கப் படர்ந்துரும்…ஒரு கால் ஊனமானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே!”

சின்னவர் பயந்து போனார்.

“நான் தோட்டத்துல சின்னக்கணக்கப்பிள்ளை வைத்தியரே!. தேயிலைக்குள்ளாற ஏறணும் எறங்கணும! குச்சி கிச்சி ஒரசாமலா இருக்கும்..? ரத்தம் வராமலா இருக்கும்..?”

வைத்தியருக்குக் கோபம் வந்துவிட்டது. டிராயருக்குள் கையை விட்டு முப்பது ரூபாயைத் தூக்கி மேசை மேல் போட்டுவிட்டு மேசை மேல் எடுத்து வைத்திருந்த மருந்துப் போத்தலை விருட்டென்று இழுத்து அலமாரியில் மற்ற போத்தல்களுடன் வைத்து விட்டார்.

“நான் மருந்து கொடுத்தா சொகமாகணும். காசுக்கு மட்டும் நான் வைத்தியம் பாக்குறதில்லே!. புண்ணுல ரத்தம் வரப்படாதுன்னா வராமப் பாத்துகுறணும்!” என்றவாறு ஒரு மலையாளப் பத்திரிகைக்குள் புதைந்து கொண்டார்.

அவரை சமாதானப்படுத்தி மருந்தை வாங்கிக் கொள்ள சின்னவர் பட்ட பாடு பெரும்பாடு!

கடைசி முறையாகவும் பெரிய கணக்கரிடம் கேட்டு மனமொடிந்து போன சின்னவரால் ஒரேயொரு முடிவுக்குத்தான் வரமுடிந்தது.

***

வெற்றிலை வாயும் வெறுங்காலுமாய் பெரட்டுக் களத்தில் நின்றுக் கொண்டிருந்த பெரியவர் புதுச்சின்னவருக்காகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

புதுச் சின்னவரை இன்னும் காணவில்லை.

‘டக்… டக்… கென்ற சப்தம் சின்னக் கணக்கப்பிள்ளை வீட்டுப் படிகளில் கேட்கிறது.

முழங்காலுக்கு மேல் மடிக்கப்பட்டு முன்னிடைக்குள் செருகிய வேஷ்டியும் வெறுங்காலுமாய் கைச்செக்றோலுக்குள் லயித்துக்கிடந்த பெரியவர் கண்களை உயர்த்திப் பார்த்தார்.

பகீரென்றிருந்தது.

அரைக்கால் சட்டை சப்பாத்து மேல்சோடு சகிதம் தோட்டத்துச் சின்னத்துரை போல் வந்து கொண்டிருந்தார் புதிய சின்னவர்.

– தமிழமுது – 1968, மல்லிகை

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *