‘அப்படியானால் நரகத்தைக் காட்டு’ என்றாள் அக்கூட்டத்தின் தலைவி. அவன் புன்னகைத்தபடி தனது இடது கையை விரித்து இடது புறமாகத் தாழ்த்தியபோது தன ரேகையிலிருந்து சிறு துளி சொட்ட ஆரம்பித்து நிலத்தில் வீழ்ந்து மண்ணை உருக்கியபடி நரகத்தின் ஒலிவன் எனும் ஓடையின் ஓங்காரத்துடன் ஓட ஆரம்பித்தது. அது சென்றடைந்த இடம் லாவாக்கள் மூச்சுவிடும் இரவு நேரக் கடலாக இருந்தது. அந்தக் கடலில் இரவு நட்சத்திரங்கள் அனலில் சுருண்டு விழுந்தன. இறுதியில் அது முழு நரகமாக மாறிற்று.
அந்தப் பெண் தன் முந்தானையால் வாயை மூடியபடிதான் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்களின்பால் திரும்பினாள். அதற்கு அந்தப் பக்கமிருந்து குரல் வந்தது, ‘தபால்காரன் வரும் இந்த அழகிய மதியம் அவன் நரகத்தின்பால் மிக இருளாக இருப்பதால் அவை நம்ப முடியாதவை. அழகிய காலை உள்ள சொர்க்கத்தைக் காட்டச் சொல் அவனை’ என்றனர்.
அதைக் கேட்டுப் புன்னகைத்தபடி அவன் வலது கையை எடுத்தபோது மேற்கு வானம் மிக அதிகாலை நீல இருளைக் கொண்டது; பறவைகள் பாட ஆரம்பித்தன; அவன் மென்ரோஸ் நிறக் கையைப் பார்த்த ஈரானியப் பெண்கள்கூடத் தமது தோலின் அழகை நொந்து கொண்டனர். அவன் நெற்றி மத்திய கிழக்கின் வளை குடாக்களிலிருந்து வரும் மனிதர்களைப் போல புருவக் கோடுகளால் நிறைந்ததாகக் காணப்பட்டது. மரக்கிளை போன்ற அவனது அடர்த்தியான சுருண்ட கேசம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. உயரம் குறைவானவனாக இருந்தபோதும் கடவுளுக்குரிய திடகாத்திரம் கொண்டிருந்தான். அவனுடைய இடது கண் வாடிய திராட்சைபோல் பார்வையற்றிருந்தது. வலது கண் பச்சை நிறமாகத் துலங்கியது. சொர்க்கத்தில் பாலாறும் தேனாறும் ஓடின; மது நதிகள் கரைபுரண்டன. அங்கு உலாவிய ஆண்களைப் பார்த்துக் கேள்வி கேட்ட பெண் உட்பட அனைத்துப் பெண்களும் தமது மர்ம ஸ்தானங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். அதில் உலவிய கன்னி தேவதைகளைப் பார்த்த ஆண்கள் அங்கேயே ஸ்கலிதமானார்கள்.
அதன் பிறகு என்ன. . . ?
‘வணக்கத்துக்குரிய நாயகன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை’ என மண்டியிட்டு விசுவாசம் கொண்டனர்.
அன்றைய நாளின் காலை, மரங்களின் இலைகளெல்லாம் உதிர்ந்து நிலத்தில் வீழ்ந்து மட்கும்வரை நீண்டது. அதற்குள் அந்த ஒற்றைக் கண்ணனை விசுவாசம் கொள்ளவேண்டாமென்று கூறி ஆண்கள் கட்டிவைத்த பெண்கள் அநேகர், கட்டை அறுத்துக்கொண்டு கிளம்பி வந்திருந்தனர். அவனைச் சந்திக்காத, சந்திக்க வராதவர்கள்கூட, குளிர் மிகுந்த அந்த நாளில் பரபரப்புற்றிருந்தனர், அவர்கள் விசுவாசம் கொண்டதன் பின் அன்றைய மதியத்திலிருந்து மரங்கள் பூத்துக் குலுங்க ஆரம்பித்தன. தானியங்கள் பால்கட்ட ஆரம்பித்தன. வயல்வெளிக்கு அன்றொரு பொழுது மட்டும் அறுபத்தைந்து தடவை போய்வரக் காலம் போதுமாயிருந்தது.
மறுநாள் ஒரு மாதம்போல் களேபரத்தில் நீண்டது. காற்று விரட்டிச் செல்லும் மேகம்போல் அவன் உலகைச் சுற்றி வந்திருந்தபோதும், பைத்தில் முகத்திஸ்ஸையோ ஹரம்சரிபுனுள்ளேயோ மதினாவின் ஏழு வாசல்களில் எதில் ஒன்றினூடாகவும் அவன் உள்ளே நுழைய முடியாதவனாகக் காணப்பட்டான். அவனிடமிருந்து தன்னுடைய நம்பிக்கைகளைக் காப்பாற்ற விரும்பி அங்குத் தஞ்சம் புகுந்தவர்களில் மதினாவில் தஞ்சம் புகுந்தவர்களில் மட்டும் ஏழு முறை நிலம் நடுங்கி வாழ்வை இழந்தனர். அவர்கள் உலகம் ஏன் இவ்வளவு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டுமென்ற கேள்வியை இறைவனிடம் கேட்டபோது அவர் மலங்க மலங்க முழித்தார். எப்போதும் அவர் அப்படித்தான்.
ஒற்றைக் கண்ணன் வந்ததன் பின்னர்தான் இவ்வாறு என்று புரிந்ததும், அவன் வந்த மறுநாள் காலை அவர்கள் வேதனங்களைப் புரட்ட ஆரம்பித்தார்கள், அப்போது பழைய வேதாகமத்தில் (மத்தேயு 24:4.9) இயேசு அவர்களுக்குப் பிரதியுக்திரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக் கொண்டு நானே இறைவன் என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள் என்று இருந்தது.
குர்ஆனில் அவனைப் பற்றிச் சொல்லவில்லை என்றாலும் கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டில், அவன் சுடுமணலில் நிற்கும் பேரீச்சை மரம் ஒன்றின் பின்னால் மறைந்திருக்கிறான் என்பதுபோல முகம்மது நபி அவர்கள் எச்சரித்திருந்தார்கள். இது பற்றிய ஆதாரங்களை ஹதீஸ் கிரந்தங்களில் இமாம் புகாரியும் திர்மிதியும் அறிவித்திருந்தார்கள். அதில் மேலும் சில உண்மைகளும் காணப்பட்டன. ஏற்கனவே ஒற்றைக் கண்ணனை முகம்மது நபி அறிவித்ததன் பின்னர், முகம்மது நபியைச் சந்தித்த வயோதிகச் செம்படவன் கூறுகையில்,
‘ஒரு மாதம் எங்களோடு அலைகள் விளையாடின. சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் எங்கள் படகு ஒதுங்கியது, அப்போது மயிரடர்ந்த பிராணி ஒன்று எங்களை எதிர்கொண்டது. மயிரடர்ந்திருந்ததால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்பதை அறியவே இயலாமல் இருந்தது.
‘உமக்குக் கேடு உண்டாகட்டும்.’
‘நீ என்ன பிராணி’ என்று கேட்டோ ம்.
‘நான்தான் ஜஸ்ஸாஸ’ எனக் கூறியது.
‘நீங்கள் இந்த மடத்தில் உள்ள மனிதனிடத்தில் செல்லுங்கள். அவன் உங்களைப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான்’ என்று கூறியது. விரைந்து சென்று ஒரு மடத்தை அடைந்ததும் அங்கே ஒரு பருமனான மனிதனைக் கண்டோ ம். ‘உனக்குக் கேடு உண்டாகட்டும். உனக்கு ஏனிந்த நிலை?’ என்று கேட்டோ ம். அதற்கு அந்த மனிதன், ‘என்னைப் பற்றி அறியச் சக்தி பெற்றுவிட்டீர்கள். எனவே நீங்கள் யார்?’ எனக் கேட்டான். நாங்கள் யாரெனச் சொன்னதும் ‘பைஸான் என்னுமிடத்தில் பேரீச்ச மரங்கள் பலன் தருகின்றனவா?’ என்று கேட்டான்.
‘ஆம்’ என்றோம்.
‘அவை இனிப் பயனளிக்காமல் போகலாம்’ என்றான்.
‘தபரியா எனும் சிறுகடலில் தண்ணீர் உள்ளதா’ எனக் கேட்டான்.
‘ஆம். அதிகமாக உள்ளது’ எனக் கூறினோம்.
‘விரைவில் தண்ணீர் வற்றிப்போகலாம்’ என்றான்.
இவ்வாறாக நீளும் அந்த ஹதீஸின் பிரகாரமும் அவனுக்கு வயது பதினாறு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என நம்பினர். அவர் அங்கிருந்து இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக் கால்களுக்கும் இடையில் இருந்து தனது தலையை விலங்கிலிருந்து உடைத்துக்கொண்டு வந்திருந்ததாக மேலும் நம்ப முடிந்தது.
பூமியின் கண்கள் நிரம்பின. நதிகள் சுழித்து மெதுவாகச் சென்றன. அழகிய கீற்றுடன் மின்னல்கள் பிறந்து மழை பெய்தன. அவனை நம்பி அவனுக்குப் பதிலளித்தவர்களுக்குப் பசுமையான அந்த நிலங்களுக்குக் கட்டளையிட்டபோது தானாகவே வித்தைப் பூமிக்குமேல் தள்ளி இரண்டு இலையைவிட்டுப் பூமி முளைப்பித்தது.
அத்தரைகளிலும் அத்தரையல்லாத இடங்களிலும் காலையில் சோம்பலுடன் விலா எலும்புகள் துருத்தித் தெரியக் கிளம்பிச் சென்ற மந்தைகள் தோலின் மினுமினுப்பு ஏறக் குளம்புகளிலிருந்து லாடம் தெறிக்க, வயத்தில் இட்ட குறிகள் சதையுள் புதைந்துபோகும் வண்ணம் திரும்பி வந்தன.
பேராசை மிக்க மக்களுக்கு அதுவும் போதவில்லை என்றபோது பாழடைந்த இத்துக்கு வந்து ‘உன் புதையலை வெளியேற்று’ எனக் கட்டளையிட்டான், அவை தேனீக்களைப் போல் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இவற்றிலெல்லாம் நிறைவு பெற்ற மக்கள் மூன்றாம் நாள் மாலை கூடினர், அவனைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அப்போதும் மக்களுக்குக் கருணையினால் மிகப் பெரும் பாலைவனத்தை ஈர மேகத்தால் மூடிப் பசும் புற்தரையை அமைத்துக் கொடுத்திருந்தான்.
‘நீ இதுவரை எங்கிருந்தாய்?’ என்று கேட்டனர்.
‘அதை அறிய நீங்கள் சக்தி பெற்றிருக்கவில்லை’ என்றான்.
‘அப்போ என்ன மயித்துக்கு நீ வேதங்களிலெல்லாம் உன்னை அறியும்படி வேண்டினான்?’ என்று ஒரு குள்ளமானவன் துள்ளிக் குதித்தான்.
‘அவை என்னுடைய வேதங்கள் அல்ல’ என்றான்.
‘மனிதனை ஏன் படைத்தாய்?’ என்று கேட்டான் ஒரு யூதக் கிழவன்.
‘சபாஷ், நல்ல கேள்வி. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்’ என்றான் ஒற்றைக் கண்ணன்.
இவ்வாறாகக் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. அவன் இறுதியில் நேர்மையாக, நான் கடவுள்தான்; கடவுளிடம் இதற்குப் பதில் இல்லை என்பதுதான் நிஜம் என்று திபத் மேட்டு நிலத்தில் உள்ளங்கையை ஓங்கி அடித்தான். மரியானா ஆழி இருந்த இடம் மேட்டு நிலமாகப் பூமியின் மேல் பகுதிக்குப் பிதுங்கி மேலே வந்தது. திபத்தைக் கடல் சூழ்ந்துகொண்டது. அவர்கள் கேள்வி கேட்டதில் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கடவுள் என்பதை நிரூபிக்க இறந்த மனிதனை உயிர்ப்பித்துக் காட்டினால் போதும்தானே என்று கேட்டுவிட்டு திடகாத்திரமான ஓர் இளைஞனை அழைத்து வாளால் அவனை இரத்தம் பீறிட்டுப் பாய வெட்டி இருவேறு திசைகளில் எறிந்துவிட்டு அவனை அழைத்தபோது அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே மலர்ந்த முகத்துடன் வந்தான்.
ஆனால் மக்கள் இதை எங்கள் வைத்தியர்களும் சூனியக்காரர்களும் செய்துவிடுவார்கள் எனப் புறக்கணித்தனர். அவன் ‘உங்களைத் தண்டனைக் கப்பல்களில் அடிமைகளாகப் பூட்டுவேன்’ என்று அச்சமூட்டி எச்சரித்தான். மக்கள் எள்ளி நகையாடினர். அவனுடைய கண் குரூரமாகச் சிவந்தது. பின்னர் அவனுடைய மக்கள் பிரிந்து தங்களுடைய பழைய மதங்களுக்குச் சென்றனர். அவன் அப்போது ஒரு மஞ்சள் ரோஜாவை எடுத்து அதை மந்திரித்து அவர்கள் மனத்தில் எண்ணங்கள் தோன்றாமல் இருக்க வேண்டுமென்று உச்சாடனம் செய்தான். அந்தப் பரப்பு கடவுளுக்கு அனுமதிக்கப்படாத ஒரு பகுதி என்பதை உணர்ந்ததும் மதத்தின் பெயரால் சண்டை மூட்டிவிட்டு, வென்றவர்கள் தோற்றுப்போனவர்களின் பெண்களை வெற்றுடம்பில் ஆயுதங்களால் தாக்கி, பலாத்காரமாக உடலுறவு கொண்டிருந்தபோது ‘உங்களுடைய கடவுள்களைவிட நான் மேலானவன் இல்லையா?’ என்று கேட்டான். அவர்கள் தொடர்ந்து வெறியடங்கும்வரை புணர்ந்துவிட்டு வெட்கித் தலை குனிந்தனர்.
அவன்பால் ஈடுபாடு கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவன் தன் வாசல்படிவரை வந்துவிட்டான் என்று கைகோத்தபோது அவன் இறுதி நாட்களை நெருங்கினான். அவனுக்கு இவ்வுலகில் நாற்பது இரவும் பகலும் வழங்கப்பட்டிருந்தன. அதன் நிமித்தம் சிலுவையில் அறையப்பட்ட அல்லது வாக்குயர்த்தப்பட்ட மரியமின் மகன், டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வானை முட்டும் வெள்ளைக் கோபுரங்கள் அமைந்திருந்த வெள்ளை மேகங்கள் அலையும் நீல வானிலிருந்து குங்குமப் பூ நிறத்தில் ஆடை அணிந்தவராக இரு வானவர்கள்மீது தன் கைகளை வைத்தபடி இறங்கினார். அவர் குனிந்ததும் தலையில் நீர் சொட்டியது; நிமிர்ந்ததும் முத்துப்போல் சிதறியது. அவர் மூச்சுக் காற்று அவர் பார்வை எல்லைவரை சென்றது. அம்மூச்சுக் காற்றை சுவாசித்த ஒற்றைக் கண்ணனின் எந்தவொரு விசுவாசியும் மரணித்துப்போனான்.
ஒற்றைக் கண்ணன் இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பள்ளத்தாக்கு வழியாக தெருக்களை இரண்டாகப் பிளக்கச் செய்தபடியும் இன்னுயிர்களைச் சிதறடித்த படியும் தன்னை ஏற்காதவர்களைக் கொன்று குவித்த படியும் கூந்தல் வெண்புரவிபோல் அலைபாய வந்துகொண்டிருந்தான். மரியமின் மகன் அவனை எதிர்கொண்டார். அவனுடைய ஆணவம் அவரைக் கண்டதும் தண்ணீரில் உப்புக் கரைவதுபோல் ஆனது. அவனைப் பின்பற்றியவர்கள் சிதறி ஓடினர். அந்தச் சிதறலில் நசிந்த மக்கள் கூட்டம் கரும்புச் சக்கைபோல் கிடந்தது. மீதிப் பேரையும் மரியமின் மகனின் சேனை துரத்திக் கொன்று அழித்தது. அவர்கள் ஓடி ஒளிந்தபோது அன்றைய தினம் மரமும் கற்பாறைகளும்கூட அவர்களுக்கு எதிராக வாய்திறந்து பேசின.
மரியமின் மகன் தன் வாளை உருவினார். இமை வெட்டும் கணத்தில் அவனது இடதுபுற நெஞ்சில் செருகினார். அவன் தன் ஒற்றைக் கண் இமைகளை வலிபொறுக்காமல் மெதுவாக மூடினான். வாளைப் பிடுங்கும்போது தன் வலதுகால் பெருவிரலைப் பூமியில் ஊன்றி நின்றான். மண்ணில் குருதி வீழ்ந்து உறைந்தது. ‘இந்தச் சூரிய குலப் பிறப்பே இப்படித்தான்’ என்றபடி மண்ணில் அவன் கன்னமும் நெஞ்சும் அறைந்த சத்தத்தில் அந்த மாலை கருகிச் சுருண்டது.