“அன்புத்தம்பி அன்புத்தம்பி ஒரு சேதி ஒன்னு சொல்லுகிறேன் கேளடா. இது சாதி மறந்து நம் முன்னோர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த ஊரு தானடா. அன்று பெயரினிலே சாதி உண்டு மனதினிலே இல்லையடா. இன்று பெயரினிலே எடுத்த பின்பு மனதிலே புகுந்து கொண்டு நம் ஒற்றுமையை சாதியும் கெடுக்குதடா. அன்று தமிழுக்கு சங்கம் வைத்து மொழியை வளர்த்தாங்க. இன்று சாதிக்கு சங்கம் வைத்து பழியை வளர்க்கப்பார்க்கிறாங்க. ஓட்டுக்காக சாதி, மதம் பேரைச்சொல்லி ஊரில் வாழும் உறவுளைப்பிரித்து வைப்பாங்க.

பின் நாட்டின் நலன் என்று சொல்லி சாதி, மதம் இல்லையென ஏட்டில் மட்டும் எழுதி வைப்பாங்க. பல காலமாக சாதி, மதம் நமக்குள்ளே இருந்தது. செய்யும் தொழில் தெரிய வேண்டி கொண்டு வந்த கணக்கது.
சாதிக்குள்ளே கூட்டமெனும் பிரிவு கூட இருக்குது. அண்ணன் தம்பி உறவு முறை தெரிய வேண்டும் என சொல்லும் செய்தி தானது. ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் ஒன்று சேர்ந்து குழந்தை பெற்றால் ஊனமாக பிறக்கக்கூடும் என்று சொல்லி பிரித்து வைத்த பிரிவது. அதுவும் கூட மருத்துவம். அதுதானே மகத்துவம்” என ஆவேசமாக தனது பூர்வீக ஊரிலே நடந்த விழா மேடையில் பாடுவது போல் பேசினார் சமூக சேவகர் பரமசிவம்.
பரமசிவத்தின் முன்னோர்கள் நஞ்சை, புஞ்சை நிலமென நூற்றுக்கணக்கான ஏக்கரில் சிறப்பாக விவசாயம் செய்து வாழ்ந்தாலும், பின் வந்த வாரிசுகள் உழைக்காமல் நிலங்களை விற்றே வாழ்க்கை நடத்த, இன்று ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாத நிலையானது.
நகரத்துக்கு குடி பெயர்ந்த பரமசிவத்தின் பெற்றோர் வேலைக்கு சென்று வந்த வருமானத்தில் தங்கள் மகனை நன்றாகப்படிக்க வைத்தனர். படித்து முடித்து வேலையில் சேர்ந்து, திருமணமாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் படித்து வேலைக்கு வந்ததால் தனது வருமானம் குடும்பத்துக்கு தேவையில்லை எனும் நிலையில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பொது சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பூர்வீக ஊரில் நடந்த விழாவுக்கு தன்னைப்பேச அழைத்ததால் வந்து பேசியது சிலரைத்தவிர பலருக்கும் பிடித்துப்போனது.
“நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். ஊரில் எனது பாதம் படாத இடமே இருக்காது. அப்போதெல்லாம் இவர் இன்ன சாதி என்று சொல்லி என்னுடைய பெற்றோர் என்னை வளர்க்கவில்லை. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவங்க அத்தை, இவங்க சித்தி என்றுதான் அறிமுப்படுத்துவார்கள். ஒருவருடைய பெயரில் உள்ள சாதியும் பெயர்தான் என நினைத்துக்கொள்வேன். இன்று வெறுப்பாக, வேறு நபராக என்னையே சிலர் ஏசிப்பேசியதைப்பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். நான் மாமா என அழைத்தவருடைய பேரன் என்னைப்பார்த்து ‘இவரை எதுக்கு பேச கூப்பிட்டீர்கள்? இவர் அந்த சாதி ஆளாச்சே…’ என என்னுடைய முகத்துக்கு நேராகவே பேசிய துணிச்சல் என்னை கண்கலங்க வைத்தது. பஞ்சாக இருக்க வேண்டிய இளைஞனுடைய மனதை இந்த அளவிற்கு நஞ்சாக்கியது யார்? ” என பேசிய போதும் கண்கலங்கினார்.
பால்ய நண்பர் சுந்தரம் வந்து பரமசிவத்தை ஆசுவாசப்படுத்தியதோடு அவரது குடும்பத்தினரின் நற்செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக்கூறினார்.
“ஊர் என்ற சொல்லே ஒற்றுமையைத்தான் குறிக்கும். ஒற்றுமையாய் வாழுமிடம் என்பது மாறி ஓரிடத்தில் வாழ்வது என்றாகி விட்டது.
உண்டு, உறங்கி வாழ்வது வாழ்க்கையில்லை.
விளையும் பொருட்களை பங்கிட்டுக்கொள்வது மட்டுமில்லாமல் துன்பத்திலும் பங்கெடுத்துக்கொண்டார்கள். பெருமையில் பங்கெடுத்தவர்கள் வறுமையிலும் பங்கெடுத்தார்கள். இந்த ஊரில் வாரிசுகளோ, சொத்துக்களோ இல்லாமல் வயதான பல பெரியவர்களை பாது காத்தனர் பரமசிவத்தின் முன்னோர். மழை பெய்யாமல் பஞ்சம் வந்தால் சேமித்து வைத்த உணவு தானியங்களை ஊருக்கே தானமாகக்கொடுத்தார்கள். குழந்தைப்பாலுக்கும், தாகத்துக்கு குடிக்கும் மோருக்கும் காசு வாங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுடைய வாரிசு இன்று நமது விழாவில், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் பேசியதை இந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பாக்கியமாகக்கருத வேண்டும். அவரையே கண்கலங்க வைத்ததை வன்மையாகக்கண்டிக்கிறேன்” என ஆசிரியர் சுந்தரம் பேசிய போது பரமசிவத்தை இழிவாகப்பேசிய இளைஞன் அவரது காலைத்தொட்டு மன்னிப்பு கேட்டான்.
“இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. யாரும் சொல்லவுமில்லை. ஊரோடு உறவாக , வேற்றுமையின்றி ஒற்றுமையாக வாழ நாங்களும் இவரது பேச்சைக்கேட்டதும் முடிவு செய்து விட்டோம். நம் முன்னோர்கள் கட்டிக்காத்துக்கடைப்பிடித்த சிறந்த வாழ்வை வாழ்ந்திட உறுதி மொழி எடுத்துக் கொள்கிறோம்” என கூறிய இளைஞனை வாழ்த்தி விடை பெற்றார் பரமசிவம்.