ஊரா இது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,890 
 
 

எனது ஊர் நீலகிரி மலை தொடர்களுக்கு மேல் ஒதுக்குப்புறமாய், மலை அடிவாரத்தின் ஓரத்தில் கேரளா, கர்நாடகா எல்லைகளை ஒட்டிய சிறு மிகச்சிறு கிராமம்.

நான் ஒரு பட்டதாரி. எங்கள் ஊரிலேயே நான்தான் முதல் பட்டதாரி !

உங்களுக்கெல்லாம் ‘ஊட்டி’ அப்படீங்கறது ஒரு சுற்றுலா ஸ்தலம், ஆனா அதைய தாண்டி ஒரு நாள் இந்த ஊரில் வந்து தங்கி பாருங்க. உங்களை தனிமை சிறையில் போடவே தேவையிருக்காது, அந்தளவுக்கு தனிமையோ தனிமை. மொத்த மக்கள் தொகையே சுமார் நூறு பேர் இருக்கலாம். அதில் முக்கால் பங்கு குடும்பம் சொந்தமாய் நிலம் வைத்து விவசாயம் பார்த்து அதில் வரும் விளைச்சலை ஊட்டியில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு கொடுத்து விட்டு பணத்தை வாங்கி வீட்டு சுவற்றுக்குள்ளோ, அல்லது வீட்டுக்குள் ஒரு குழி பறித்தோ பதுக்கி விடுவார்கள். அவ்வளவுதான் அதை பற்றி நினைக்க கூட மாட்டார்கள். காரணம் அதை செலவு பண்ண வேண்டிய அவசியமே அவர்களுக்கு வருவதில்லை. சினிமா, உற்சாக பானம், (ஒரு சிலர் தவிர) நடிகர் நடிகைகளுக்கு கொடி கட்டறது, மன்றம் வைக்கிறதும் ஹூஹூம், ஒண்ணுமே கிடையாது. வெத்தலை பாக்கு சிகரெட் இதுக கூட அவ்வளவு செலவு கிடையாது. ஏன் தொலைக்காட்சிகள் கூட அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. இரவு ஏழு மணிக்கு மேல் விழித்திருப்பதில்லை. இரவு சாப்பாடு என்பது ஆறு மணியில் இருந்து ஏழுக்குள் முடிந்து படுக்கையை போட்டு விடுவார்கள். அதற்கு மேல் குளிர் வந்து ஊரை கவ்வி விடும். சீக்கிரமே இருட்டியும் விடும், மின்சார வசதி கூட ஒரு சில பல்புகள் மட்டுமே எரிய கூடிய வகையில்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட கிராமத்தில் இருந்து முதன் முதலாக வெளியூர் சென்று படித்து பட்டதாரியாகி வந்தவனுக்கு என் ஊர் கண்டிப்பாய் பிடிக்கவில்லை. இது ஊரா? மனுசன் இருப்பானா? ஒரு பொழுது போக்கு உண்டா? சீக்கிரம் வேலை கிடைத்து போய் விடவேண்டும்.

மாலை ஐந்து மணி இருக்கலாம், வீட்டில் இருக்க சங்கடப்பட்டு தனியாக உலா சென்று கொண்டிருக்கிறேன். எங்கள் ஊர் எல்லை அருகில் நடுவில் மச்சு வீடு கொஞ்சம் பெரியதாக இருந்தது, சுற்றி வர நிலம். ஒருவர் ஏதோ அந்த நிலத்தின் ஓரத்தில் மண்ணை கொத்திக் கொண்டிருந்தார். சற்று வித்தியாசமாய் இருந்தது, மிகுந்த சிரமப்பட்டு வேலை செய்வதாக தோன்றியது. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எங்கள் பேச்சு மொழியில் கேட்டேன். அவர் சற்று திகைத்து சுற்று முற்றும் பார்த்தது தெரிந்தது.

ஒன்றுமில்லை “டேலியா கிழங்கு” ஒன்றை நட்டுக்கொண்டிருக்கிறேன். அதை இப்பொழுது வைப்பதை விட காலையில் வைத்தால் நன்றாக இருக்குமே. உண்மைதான், நாளை வேறு ஒரு வேலை வைத்திருக்கிறேன் என்றார்.

அது சரி நீ யார் தம்பி?. அவர் ‘நீ” என்று கூப்பிட்டது மரியாதை குறைவாக தெரிந்தது, எனக்கு பிடிக்க வில்லை. காரணம் இந்த ஊரில் நான் ஒரு பட்டதாரி. கடுப்புடன் என் பெயரையும், கூட நான் வாங்கிய பட்டத்தையும் பெருமையுடன் சொன்னேன். அவர் வியப்புடன் (நடித்தாரா) தெரியாது, ரொம்ப நல்லது, அடுத்து என்ன செய்ய போகிறாய்? ஏதேனும் கண்டக்டர் லைசென்ஸ் வாங்கி பேருந்தில் கண்டக்டராய் முயற்சி செய்யலாமே? இந்த யோசனையை கேட்டவுடன் அந்த ஆளின் மண்டையை பிளக்க வேண்டும் என்கிற ஆத்திரம் வந்தது. இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நான் கோயமுத்தூரில் வேலைக்கு முயற்சித்து கொண்டிருக்கிறேன், கிடைத்து விடும் என்றேன் பெருமையுடன் (கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்கு மட்டுமே தெரியும்) உஷ் கண்டு கொள்ளாதீர்கள்,

டீ சாப்பிடுகிறாயா? வேண்டாம் நேரமாகிறது நான் வருகிறேன், சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன். சரியான ஆளாய் இருக்கிறான், மரியாதை தெரியாத ஆள் மனதுக்குள் முணங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் அந்த பக்கம் மீண்டும் போகவே இல்லை. அப்பாவிடம் கேட்டேன்,ஒரு காலத்தில் அவர்கள் குடும்பம் இங்கிருந்ததாம், இப்பொழுது வந்து போகிறார், அவ்வளவுதான் தெரியும் என்றார்.

என்ன சார் ஊர்? ஒரு செல் போன் டவர் கிடைக்கறதில்லை, டி.வி, இல்லை, அன்றைய நியூஸ் பேப்பர் கூட மதியம்தான் ஊருக்குள் எட்டி பார்க்கும், அதுவும் யாராவது வெளியே போய் வந்தால்தான். ஒரு மாதம் ஓட்டி பார்த்தேன், முடியலை, கோயமுத்தூர் போய் நண்பன் ரூமுல தங்கி ஏதாவது வேலை தேடி பாக்கலாம், மறுநாளே கிளம்பி விட்டேன்.

ஊட்டி பஸ் ஸ்டாண்டில் அந்த விடியற்காலையில் கோயமுத்தூர் பஸ்ஸுக்காக வரிசையில் காத்திருந்தேன். அது யார்? வரிசையில் எனக்கு முன்னால் இரண்டு பேர் தள்ளி நிற்பது? யோசித்தவன் எங்கோ பார்த்திருக்கிறோமே? ஞாபகம் வந்து விட்டது, அந்த மரியாதை தெரியாத ஆளா? மனதுக்குள் கோபம் வர வரிசையாய் நகர்ந்து டிக்கெட் வாங்கி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். என்னுடைய கெட்ட நேரம் அந்த ஆள் என்னை தாண்டி உட்கார போனவர் என்னை கண்டதும் எப்படி இருக்கிறாய் தம்பி? நான் சொன்ன மாதிரி கண்டக்டர் வேலைக்கு முயற்சி பண்ணினியா? அந்த கூட்டத்தில் இந்த ஆள் இப்படி கேட்கவும் எல்லோரும் என்னை பார்ப்பது போல் பிரமை. இந்த ஆளை…பல்லை கடித்து இல்லைங்க, இப்ப கோயமுத்தூருக்கு போயிட்டிருக்கேன்.. சட்டென பேச்சை துண்டித்து வெளியே வேடிக்கை பார்ப்பது போல கண்ணை திருப்பிக் கொண்டேன்.

ஒன்பது மணிக்கெல்லாம் கோயமுத்தூர் வந்து சேர்ந்தோம், அந்த ஆள் என் முதுகை தட்டி ஏதாவது வேணும்னா என்னை வந்து பாரு சொல்லிவிட்டு கார்டு ஒன்றை கொடுத்து விட்டு போனார். எனக்கு கோபம், அசட்டையாய் வாங்கி சட்டை பைக்குள் போட்டுக்கொண்டவன் சாயிபாபா காலனி போகும் பஸ்ஸை நோக்கி ஓடினேன்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, வேலை அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடுமா? ஆரம்பத்தில் சிரித்து பழகிய நண்பன் கூட இப்பொழுது சரியாக பேசுவதில்லை. வாடகை கொடுக்காமல் தங்குவதால் இருக்கலாம், கையில் இருக்கும் பணம் கரைந்து கொண்டே போனது, வீட்டில் பணம் கேட்கவும் தயக்கம். ஒரு பகல் வேளையில் பொழுது போகாமல் கழட்டி போட்ட்டிருந்த பழைய துணிகளை துவைக்கலாம் என்று ஒவ்வொன்றாய் உதற ஒரு சட்டையிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழ எடுத்து பார்த்தவன் அட “விசிட்டிங் கார்டு” ரவீந்திரன், கீழ் கம்பெனி பெயர் போட்டிருந்தது. சரி இங்கு இன்றைக்கு போய் பார்ப்போம். முடிவு செய்தேன்.

அந்த இடத்தை விசாரித்து டவுன் பஸ் பிடித்து போய் சேர்ந்தேன். நான் எதிர் பார்த்ததை விட பெரிய கம்பெனியாய் இருந்தது, வரவேற்பு அறையே அவ்வளவு அழகாய் இருந்தது என்றால் அதில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் எவ்வளவு அழகாக இருந்திருப்பாள்? மன சலனத்தை சட்டென கழட்டி விடவேண்டியிருந்தது, காரணம் அவள் பேசின ஆங்கிலம்.

ஒன்றும் புரியாமல் இந்த கார்டை கொடுத்து தமிழில் சொன்னேன் இவர் என்னை இங்கு வந்து பார்க்க சொன்னார்.. ! அந்த பெண் என்னை வியப்பாய் பார்த்தாள். நான் என் உடைகளை “அயர்ன் கூட செய்வதில்லை”(வசதி இல்லை) அங்கு உட்கார சொல்லி கை காட்டினாள். (ஆங்கிலத்தில் சொன்னால் இவனுக்கு புரியாது என்றிருக்கலாம், இல்லை தமிழில் சொன்னால் இவளுக்கு கெளரவ குறைச்சல் என்று நினைத்திருக்கலாம்)

பத்து நிமிடத்தில் அழைக்கப்பட்டேன். உள்ளே போனவன் மயங்கி விழாத குறைதான். அன்று அரை குறையாய் “அண்டர்வேர்” தெரிய தோட்ட வேலை செய்த நபர் அட்டகாசமான கோட்டு சூட்டுடன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். என்ன மேன் எப்படியிருக்கே? இயல்பாய் கேட்க நான் வாய் பிளந்து ஒன்றும் பேசாமல்….

சரி..நீ பேசமாட்டே, எங்க பஸ் கம்பெனிக்கு ஒரு பையன் தேவைப்படுது, ஆனா அதை பத்தி தெரிஞ்சிக்கணும்னா ஒரு மாசத்துக்கு எங்க பஸ் ஏதாவது ஒண்ணுல கண்டக்டரா வேலை பாக்கணும், அப்பத்தான் அதோட நெளிவு சுழிவு தெரியும், நாளைக்கே வந்து ஜாயின் பண்ணிக்கோ, லைசென்ஸ் ஏற்பாடு பண்ணிதருவாங்க. இப்ப உன்னைய கூட்டிட்டு போக ஆள் வரும். அங்க போய் பாரு. என்ன போய் வேலை பாக்கறயா?

ஏன் சார், (வாசகர்களிடம்) நானே காஞ்சு கிடைக்கிறேன், இந்த வேலைய எவனாவது விடுவானா? சந்தோசமாய் தலையாட்டினேன்.

சரி உனக்கு வந்தவுடனே வேலை கொடுக்கறேனே, எதுக்கு தெரியுமா? நான் எதுவும் பேசாமல் அவரை பார்க்க, நீ எங்க தாத்தாவோட ஊரை சேர்ந்தவன்கறது னாலதான், புரியுதா? அந்த ஊர்ல கிடைக்கிற அமைதி இந்த ஊர்ல எங்க போனாலும் கிடைக்காது. வருசத்துல பத்து நாளு நான் அங்க போய் அவர் வீட்டுல தங்கி உலகத்தோட எந்த தொடர்பும் இல்லாம, நிம்மதியா அவர் கால் பதிச்ச மண்ணுல இருந்திட்டு வருவேன். ஏதோ உனக்கு ஒண்ணு பண்ணூனா அது எங்க ஊருக்கு பண்ணற மகிழ்ச்சி கிடைக்குது, புரியுதா?

ஒவ்வொருத்தனும் அவன் பிறந்த ஊரோட வருசத்துல கொஞ்ச நாள் உறவாடணும் அப்பத்தான் நிம்மதி கிடைக்கும் தனக்குள் பேசிக்கொண்டாரா அல்லது என்னிடம் பேசினாரா தெரியாது.

எங்கப்பா அந்த ஊரை விட்டு ஓடி வந்த ஆள், ஆரம்பத்துல கண்டக்டராத்தான் இருந்தாரு ! நான் சொன்னது புரிஞ்சுதா?

எனக்கு புரிந்தது. இந்த வாய்ப்பை கொடுத்தது எனது ஊர்தான் என்பதும், வெற்றி பெற வைராக்கியம் சார்ந்த உழைப்பு இருந்தால் போதும், படிப்புக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *