ஊடகவாசிகள் கவனத்திற்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,188 
 
 

பிரேதப் பரிசோதனை முடிந்து வெள்ளைப் பொதியாக வந்து சேர்ந்து வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்தது மதுமதியின் உடல். நேற்றிரவு முதல் நீடிக்கிற பட்டினியாலும், தீராத அழுகையாலும் சோர்ந்து சடலத்தருகே அரை மயக்க நிலையில் பெண்களின் தாங்கலில் கிடந்தாள் வேதவல்லி. திருச்செல்வன் இன்னும் கோபம் தீராமல் சாமியானாவுக்கு வெளியே நின்றிருக்க, அவனது நண்பர்கள் அவனைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தனர். அண்ணாமலை மட்டுமே வீட்டுக்கு வெளியில் நின்றபடி, வருகிறவர்களுக்கு வணக்கம் தெரிவித்து, இழவுச் சடங்காக கைகளை நீட்டியபடியும், அவர்களின் துக்க விசாரிப்புகளுக்கு பதில் சொல்லத் திணறியபடியும் இருந்தார்.

தெரிந்தே கேட்கிறார்களா, தெரியாமல் கேட்கிறார்களா என்பது தெரியவில்லை. அது எவ்வாறாயினும், நடந்த அசம்பாவிதங்களை எப்படிச் சொல்வது? சொல்லக் கூடிய காரியமா அது? ஊர் உலகம் முழுக்கப் பரவியும் இருப்பதால் அதை மறைக்கத்தான் முடியுமா? அஞ்சலி செலுத்த வந்திருந்த சொந்த பந்தங்கள், சம்பிரதாயத்துக்கு கோடித் துணி, மலர் மாலை, மலர் வளையங்களை வைத்து துக்க முகம் காட்டிவிட்டு, இப்பால் வந்து இழிவாகப் பேசிக்கொள்வது, அரசல் புரசலாகவேனும் அவருக்குக் கேட்கவும் செய்தது.

“இந்தக் காலத்துல யாரை நம்பறது, யாரை நம்பக் கூடாதுன்னே தெரியில. பாக்கறக்கு அவ்வளவு குடும்பப் பாங்கா, அடக்க ஒடுக்கமா, சுடிதாரைத் தவுத்து வேற மாடர்ன் ட்ரஸ்ஸு கூட போடாத புள்ளை. டீச்சரு வேற. இது பண்ணுன அளும்பப் பாத்தீங்களா? அத்தனையும் அவுத்துப் போட்டுட்டு, வித விதமா போஸ் குடுத்து, போட்டோ, செல்ஃபி எல்லாம் எடுத்திருக்குது. காதலோ, வேற என்ன கண்றாவியோ தெரியில. அவனுக்கு அனுப்பியுட்டா,… அவன் நெட்டுல உட்டுட்டான். அவுங்குளுக்குள்ள என்ன பிரச்சனையோ; இல்ல, காசு கெடைக்குதுன்னு போட்டோவயெல்லாம் வித்துட்டானோ.”

“அனுபவிச்சது போதும்னா அப்பறம் அதையத்தான பண்ணுவாங்க. போஸ்ட் மாடம் ரிப்போர்ட்டுல மாசம்னு கீது வந்திருக்குமோ என்னுமோ, யாரு கண்டா?”

“லெக்கின்ஸ், டிக் டாக் புள்ளைகளக் கூட நம்பீரலாம். ஆனா இந்த மாதிரி இழுத்துப் போத்திட்டுப் போறதுகளத்தான் நம்பவே முடியாது. யூ ட்யூப்லயே பாத்தீங்கன்னா, காலேஜ் படிக்கற புள்ளைக, டீச்சருக, ஆன்ட்டிக பேசற டர்ட்டி டாக்ஸக் காது குடுத்துக் கேக்க முடியாது. டிக் டாக், டப் ஸ்மாஷ்ல பச்சை பச்சையாப் பேசறாளுக. இவளுக எப்படி ஒழுக்கமானவளுகளா இருக்க முடியும்? வெப்சைட்டுகளுக்குப் போனீங்கன்னா, காலேஜ் புள்ளைக, ஹௌஸ் வொய்ஃபுக பண்ற கச்சேரில, ப்ளூ ஃப்லிம் நடிகைக தோத்துப் போயறணும். இப்புடி எசகு பிசகா மாட்டுனா, அதெல்லாம் மார்ஃபிங்னு வேற சொல்லித்

தப்பிக்கலாம்னு பாப்பாளுக. இந்தப் புள்ளையும் அப்புடித்தான் சொல்லிப் பாத்திருக்குது. முடியிலீங்கவும் தூக்குல தொங்கீருச்சு.”

ஏற்கனவே கூனிக் குறுகி நின்றிருந்த அண்ணாமலைக்கு, தானும் கூட நாண்டுகிட்டு சாகலாம் போல இருந்தது. மதுமதி செய்த கேடுகெட்ட காரியத்தால் அவளுக்கு மட்டுமா அவமானம்? குடும்பம் மொத்தத்துக்கும்தானே! அதனால் அவள் தூக்குப் போட்டுக்கொண்டது மட்டும் போதாது. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டிருந்தால்தான் சரி என்று பட்டது அவருக்கு.

மதுமதியா இப்படி என்று மற்றவர்களைப் போலவே அவராலும்தான் நம்ப முடியவில்லை. ஆனால், வெளியார்களிடத்தில் இருப்பதை விட குடும்பத்தாரிடம்தானே அதிகமாக அந்தரங்க காரியங்களை மறைக்கிறார்கள் ஒவ்வொருவரும். இளைஞர்களின் காதல், பெரியவர்களின் கள்ளக் காதல் ஆகியவை பல மாதங்கள், வருடங்களாகவே இருந்துவந்து, ஊர் முழுக்கத் தெரிந்திருதாலும், குடும்பத்துக்குத் தெரிவது கடைசியில் எப்போதாவதுதானே! ஆனால், இந்த மாதிரி இணைய, ஊடக விவகாரங்கள் ஒரு சில மணி நேரங்களிலேயே உலகம் முழுக்கவே பரவிவிடுமே! அப்படித்தான் மதுமதியின் நிர்வாண ஒளிப்படங்கள் ஏதோ ஒரு பாலியல் வலைத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, முகநூலில் போலிக் கணக்கு வைத்துள்ள யாராலோ பதிவிடப்பட்டு, இவர்களது குடும்பத்தாரை அறிந்த முகநூல் வட்டத்தில் பரவி, அவர்கள் மூலம் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரத்திலும் செய்தி பரவியிருந்தது.

மதுமதி எப்படி இந்த அளவுக்குக் கேவலமான செய்கையில் ஈடுபட்டாள் என்பது புரியவில்லை. அவளுக்கு யாருடனாவது காதல் இருந்து, அவனை நம்பித் தனது படங்களை அனுப்பி, அவன் ஏமாற்றிவிட்டானா? அல்லது அவளே பணத்துக்கோ, பிரபலத்துக்கோ ஆசைப்பட்டு வழிகேட்டில் சென்றுவிட்டாளா? கௌரவமான குடும்பத்தில் பிறந்து, கௌரவமாக வளர்க்கப்பட்ட அவள் அப்படிச் செய்வாளா என்பது கேள்விதான். ஆனால, காதல், காமம், பிரபலமாகும் ஆசை, பணத்தாசை, வேடிக்கைப் பொழுதுபோக்கு என்று பல காரணங்களால் குடும்பப் பெண்கள் தவறான வழிகளில் சென்று சீரழிவது காலம் காலமாக நடந்துகொண்டுதானே இருக்கிறது. சாமியானா நிழலில் அமர்ந்திருப்பவர்கள் பேசிக்கொண்டிருப்பது போல இப்போது முகநூல், இன்ஸ்டாக்ராம், ட்விட்டர், டிக் டாக், யூட்யூப் ஆகியவற்றில் இளம் பெண்களும், ஆன்ட்டிகள் என இளைஞர்களால் குறிப்பிடப்படுகிற நடுத்தர வயது திருமதிகளும் செய்கிற கவர்ச்சி மற்றும் ஆபாச அட்டுழியங்கள்தான் எவ்வளவு!

ஆனால், மதுமதி அந்த ரகமான பெண் அல்ல. பண்பாடும் கலாச்சாரமும் பிறழாமல் நன்னடத்தையோடு வளர்ந்தவள். அப்படித்தான் அண்ணாமலையும் வேதவல்லியும் அவளை வளர்த்தனர். அவளும் பள்ளி, கல்லூரிக் காலங்களில் கூட காதல் விவகாரங்கள் எதிலும் ஈடுபட்டதில்லை. பாவாடை தாவணி, சேலை, சுடிதார் தவிர வேறு நவீன ஆடைகள் கூட உடுத்த மாட்டாள். அதுவும் இளநிலைக்குப் பிறகு சேலை, சுடிதார் மட்டும்தான்.

ஆங்கிலம் முதுகலை மற்றும் ஆசிரியைப் பயிற்சி முடித்துவிட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக அண்மையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்துகொண்டிருந்தாள். அடக்க ஒடுக்கமான, அமைதியான, ஒழுக்கம் நிறைந்த பெண் என்று சொந்த பந்தங்களிடமும் ஊரிலும் பேரெடுத்தவள். நல்லாசிரியை என்று பள்ளியிலும் மதிப்பு.

ஆனால், வீட்டுக்கும் வெளி உலகத்துக்கும் இப்படிப்பட்ட முகம் காட்டுகிற குடும்பப் பெண்கள் பலருக்கும், அதற்கு நேர் எதிரான இன்னொரு முகம் இருப்பது, இப்படியான சந்தர்ப்பங்களில்தானே தெரிய வருகிறது. தன்னுடைய மகள் எந்தத் தவறும் செய்ய மாட்டாள் என்று நம்புகிற பெற்றோர்களின் நம்பிக்கைப்படியே தாங்களும் ஏமாந்து, அவளையும் பறிகொடுத்து, குடும்ப மானத்தையும் இழந்து நிற்கிறோமே என்று கலங்கினார் அண்ணாமலை.


இவர்களுடையது எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத அளவான குடும்பம். சொந்த வீடு. மூத்தவன் திருச்செல்வன் பட்டப் படிப்புகள் முடித்துவிட்டு தற்காலிகமாக மென்பொருள் துறை சார்ந்த சுய தொழிலை வீட்டில் இருந்தபடி செய்துகொண்டிருந்தான். அவனது கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற பணி பொள்ளாச்சியிலோ, கோவையிலோ கிடையாது. பெங்களூரு, மும்பை எனச் சென்றால் தக்க பணி கிடைக்கும்; ஆனால் சம்பளம் குறைவாகவே இருக்கும். எனவே பணம் கொழித்த மேற்கத்திய மற்றும் வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் வேலைக்கு முயன்றுகொண்டிருந்தான். அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாமே என்பதற்காக இந்த சுய தொழில்.

இளையவள்தான் மதுமதி. ஆசிரியையாகப் பணி புரிந்துகொண்டிருக்கும் அவளுக்கு வரன் ஆலோசனைகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இருப்பினும் அவள் ஓரிரு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னதால் இவர்கள் அதிக முனைப்பு காட்டவில்லை.

மக்கள் இருவருமே பொறுப்பானவர்கள். பொதுவாக இளைஞர் இளைஞிகள் செய்வது போன்ற வயசுக் கோளாறுத் தவறுகள், இந்தக் காலத்துக்கு உரிய அலைபேசி, முகநூல், டிக்டாக் பைத்தியம் போன்ற குறைகள் எதுவும் இதுவரை இருந்ததில்லை.

திருச்செல்வனும் மதுமதியும் முகநூலில் இருக்கின்றனர். ஆனால் திருச்செல்வன் அதை அவ்வளவாகப் பயன்படுத்துவது கிடையாது. முக நூல் வம்பளப்புகள், கருத்து பயங்கரவாதங்கள், செல்ஃபி மற்றும் வெட்டிப் பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் அவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஒதுங்கி இருந்தான். மதுமதியும் தோழர் தோழிகளோடான நட்புக்காக கல்லூரிக் காலம் முதலே முகநூலில் இருந்தாலும், எப்போதாவது மட்டுமே வந்து செல்வாள். அவளது பதிவுகள் ஆசிரியை என்ற முறையில் பொதுவாக கல்வித்

துறை மற்றும் மாணாக்கர்களின் கல்வி சார்ந்ததாகவே இருக்கும். ஒளிப்படங்களை அதிகம் வெளியிட மாட்டாள். மக்களுக்குப் பயனுள்ள வகையில் கருத்துகளையும் தகவல்களையும் எழுதுவதற்காகவே முகநூலை அவள் பயன்படுத்தினாள். அதனால் அடிக்கடி வர வேண்டிய தேவையோ விருப்பமோ அவளுக்கு இல்லை.

அண்ணாமலைதான் இவர்கள் வீட்டில் முகநூலை அதிகம் பயன்படுத்துகிறவர். அவர் பணி புரிகிற அரசு அலுவலகத்தில் யாருக்குமே அவ்வளவாக வேலை இராது. அங்கே இணைய இணைப்பும் உள்ளது. அதனால் கணிணியில் பணி புரிகிற எண்மரில் அறுவர் முகநூல்வாசிகளாகவே இருந்தனர். பணி செய்துகொண்டிருக்கும்போது அதனோடே சேர்ந்து முகநூல் மற்றும் பிற வலைத்தளங்களில் உலாவுதல் நடக்கும். பணி இல்லாத நேரங்களில் அதையே பணியாகவும் செய்வார்கள். அரசாங்கம் அதற்கு சம்பளமும் கொடுக்கிறது. இது தவிர அவரது ஸ்மார்ட் ஃபோனில், மூன்று மாத ஸ்கீமில் ரீசார்ஜ் செய்தால் வெளி அழைப்புகளோடு, தினம் ஒன்றரை ஜி.பி. இணைய தரவும் இலவசம். ஊரில் இருந்து பொள்ளாச்சிக்குப் போவதும் வருவதுமான முக்கால் மணி நேரப் பேருந்துப் பயணங்களின்போதும், வீட்டில் ஓய்வாக உள்ளபோதும் அலைபேசி வழி முகநூலில் உலாத்துவார்.

நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என நட்பு வட்டம் கண்ணி பிடித்துப் பெருகி, இப்போது அவருக்கு எழுநூற்று சொச்சம் முகநூல் நண்பர்கள் இருந்தனர். சமூகம், நாட்டு நடப்பு, பொதுக் கருத்துகள் என அவர் வெளியிடுகிற நிலைத் தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. குறைந்தது ஐம்பது – அறுபது முதல் அதிக பட்சம் நூறைக் கடந்து விருப்பங்கள் விழும். அதில் அவருக்கு மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் இருந்தது. அதே போல முகநூலர்களுக்கே உரித்தானபடி அவரும் அலைபேசியில் செல்ஃபி எடுத்து அவ்வப்போது ப்ரொஃபைல் படத்தை மாற்றிக்கொண்டிருப்பார். .மனைவி, மகன், மகள் பிறந்த நாள்களில் அவர்களைப் படமெடுத்து வெளியிட்டு அவர்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொள்வார். பண்டிகைக் காலங்கள், வெளியூர் பயணங்கள், ஊர்த் திருவிழாக்கள் போன்ற சிறப்பு தினங்களிலும் குடும்ப சகிதமான படங்களை வெளியிடுவார். மதுமதியின் படத்தைப் பார்த்த சிலர், அவள் போட்டொஜெனிக்காக இருக்கிறாள் என்று பாராட்டவே, அடிக்கடி அவளைப் படமெடுத்து வெளியிடுவதும், அதற்கு விருப்பம் மற்றும் பாராட்டுகள் குவிவதும் வழக்கமாக இருந்தது.

“எங்க வீட்டுக்கார்ருக்கு ஃபேஸ்புக்குதான் கள்ளக் காதலி! அவுருக்குக் குடி, பீடி சிகரெட்டு, சீட்டாட்டம், மத்த பொம்பளைககிட்ட சகவாசம்னு வேற எந்தக் கெட்ட பளக்கமும் கெடையாது; ஆனா, அதுக்கெல்லாம் சேத்தி வெச்சு, இந்த ஃபேஸ்புக்கே கெதின்னு எப்பப் பாத்தாலும் அதுலயே உளுந்து கெடக்கறாரு” என வேதவல்லி குறைபட்டுக்கொள்வாள்.

மதுமதி கூட, “என்னப்பா நீங்களும் காலேஜ் பசங்க மாதிரி எப்பப் பாத்தாலும் ஃபோட்டோ, செல்ஃபி, ஸ்டேட்டஸ்னு எதையாவது போட்டுட்டு எத்தனை லைக் விழுகுதுன்னு பாத்துட்டு இருக்கறீங்க? நீங்களும் இந்தக்

காலத்துப் பசங்க – புள்ளைக மாதிரி எஃப்.பி. அடிக்டா ஆயிட்டீங்களே” என்று அங்கலாய்ப்பாள்.

ஆனால் அவளே இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறாளே என்று எண்ணி இன்னமும் மனம் குமைந்தார் அண்ணாமலை.


நேற்று பிற்பகல் சுமார் மூன்று மணி வாக்கில்தான் திருச்செல்வன் அவருக்கு அலைபேசியில் அழைத்து, முகநூலில் மதுமதியின் நிர்வாணப் படம் வெளியாகியுள்ளதாக அவனது நண்பர்கள் தெரிவித்த விஷயத்தைச் சொன்னான். அவரும் பதறியடித்து அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். இவர் இங்கு வரும் முன்பே விஷயம் ஊருக்குள் பரவி, குடும்ப மானம் சந்தி சிரித்துக்கொண்டிருந்தது. மதுமதியும் இதே காரணத்தால் வீடு திரும்பியிருந்தாள்.

திருச்செல்வன் அவளிடம் எவ்வளவோ மிரட்டிக் கேட்டும் அவள், “அது நானல்ல. யாரோ மார்ஃபிங் செஞ்சது. வேணும்னா நீங்களே அதைப் பாருங்க” என்று அழுதாள்.

“ஏன்டீ, விவஸ்தை கெட்டவளே! அண்ணனும் அப்பாவும் பாக்கக் கூடிய போட்டோவாடி அது? கண்டவன் முன்னாடி முண்டக்கட்டையா நின்னு போட்டோ எடுத்துட்டு, இப்ப மார்ஃபிங்னு சொல்றயா? பவித்ரா எங்கிட்டக் காமிச்சாளே,… தலை வேற ஒடம்பு வேறயா ஒட்ட வெச்ச மாதிரியே இல்ல. உன்னோட ஒடம்பு மத்தவங்களுக்குத் தெரியாட்டியும் எனக்குத் தெரியுமே! அச்சு அசல் அப்படியேதான இருக்குது” என்றாள் வேதவல்லி.

“என்னம்மா நீ கூட என்னை நம்ப மாட்டீங்கற? என்னோட ஒடம்பு மாதிரி வேற ஒடம்பே இருக்காதா? கரெக்ட்டா மேட்ச் ஆகற மாதிரி ஏதோ ஒரு பொண்ணோட ஒடமப என் முகத்தோட ஒட்ட வெச்சிருக்கறாங்கம்மா.”

“என்னோட ஃப்ரண்ட்ஸ் அதைப் பாத்திருக்கறாங்க. அவங்களுக்கும் மார்ஃபிங் பத்தி நல்லாத் தெரியும். உன்னோட ஃபோட்டோ மார்ஃபிங் மாதிரி இல்லேன்னுதான் சொல்றாங்க. உண்மைய சொல்லீட்டா நல்லது. நீயும் பொள்ளாச்சி கேங்க்ல கீது மாட்டியிருந்து, அவங்க உன்னை மெரட்டி போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்துட்டாங்களா? உண்மைய சொல்லித் தொலை. உன் மானம் மட்டுமில்ல. இது குடும்ப மானமே போற விஷயம். அந்த கேங்க்லயோ, வேற எங்கயோ மாட்டிட்ட பொண்ணுன்னாலாவது, அவமானத்துலருந்து ஓரளவுக்காவது தப்பிக்கலாம். மத்தவங்களோட அனுதாபம் கெடைக்கும். இல்லேன்னா போன மானம் போனதுதான். நாங்க யாரும் வெளிய தலை காட்ட முடியாது.” திருச்செல்வன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் அப்படி எதுவும் இல்லவே இல்லை என மறுத்துக்கொண்டிருந்தாள்.

அதற்குப் பிறகுதான் ஆத்திரம் கூடி, அவன் அவளை அடித்துத் துவைத்தான்.

அண்ணாமலையும் வேதவல்லியும் தடுக்கவில்லை. அப்போதாவது உண்மையைச் சொல்வாள் என்று காத்திருந்தனர். அவளோ அப்போதும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.

அக்கம் பக்கத்தவர்களும், ஊர்க்காரர்களும் நேரில் வந்து விசாரிப்பது, அலைபேசியில் சொந்த பந்தங்களின் விசாரிப்பு என்று நிலைமை இன்னும் தீவிரப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைத் தாங்க முடியாமல் அனைவரின் அலைபேசிகளையும் அணைத்து, வீட்டுக் கதவையும் சாத்திக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அன்று இரவு சமையல் கூட செய்யவில்லை. வேதவல்லியும் மதுமதியும் ஒவ்வொரு பக்கம் அழுதுகொண்டே இருந்தனர். அண்ணாமலையும் திருச்செல்வனும் விளக்கணைத்து, ஒன்றரை மணி வரை செய்வதறியாது விழித்திருந்துவிட்டு உறங்கச் சென்றனர். வேதவல்லி எப்போது தூங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. மதுமதி தூங்கினாளா என்பது யாருக்கும் தெரியாது.

விடியற்காலம் வேதவல்லியின் அலறலில் அண்ணாமலையும் திருச்செல்வனும் விழிப்புற்று ஓடி வந்து பார்த்தபோது, கூடத்து மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு மதுமதியின் சடலம் தொங்கிக்கொண்டிருந்தது.


மதுமதியின் பள்ளியிலிருந்து சில ஆசிரிய ஆசிரியைகளும், மதுமதி வகுப்பெடுக்கும் மாணவ மாணவிகள் சிலரும் மலர் வளையங்களோடு வந்து அவளது உடலுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தனர். அதில் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த மதுமதியின் தோழியான ஆசிரியை, அஞ்சலியை முடித்துவிட்டு அண்ணாமலையிடம் வந்து விபரம் கேட்டுவிட்டு,

“உலகமே அவள நம்புலன்னாலும் பரவால்லங் அங்க்கிள். குடும்பத்துல ஒருத்தர் கூடவா நம்பாமப் போயிட்டீங்க? அது தாங்காமத்தான் அவ தற்கொலை பண்ணியிருப்பா. மத்தபடி யாரோ அயோக்கியனுக செஞ்ச மார்ஃபிங்க் போட்டோவுக்காக சாகற அளவுக்கு மதுமதி ஒண்ணும் விபரம் இல்லாதவளோ, கோழையோ இல்ல” என்றாள்.

“நீயும் அத மார்ஃபிங்னு சொல்றயா?”

“ஆமாங் அங்க்கிள். மதுமதிக்கு யார் கூடவாவது லவ் இருந்திருந்தா எங்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பா. அவ அப்படி சொன்னதே இல்ல. நடத்தை கெட்டுப் போற அளவுக்கு அவ ஒண்ணும் மோசமானவளும் கெடையாதுங்கறது உங்களுக்கே தெரியும். நானும் ஃபேஸ்புக்ல அந்த ஃபோட்டோஸப் பாத்தேன் அங்க்கிள். நிச்சயமா அது மார்ஃபிங்கேதான். நீங்க உங்க ஃபேஸ் புக் டைம் லைன்ல போட்ட மதுமதியோட ஃபோட்டோக்கள வெச்சுத்தான் மார்ஃபிங் பண்ணியிருக்கறாங்க” என்றவள், “மதுமதியோட அவமானத்துக்கும். சாவுக்கும் முழுக்க முழுக்க நீங்கதான் காரணம் – ரெண்டு விதத்துலயுமே…!” என்றாள்.

அண்ணாமலை குற்ற உணர்வில் விக்கித்து நின்றார்.

– வாரமலர், 16 ஆகஸ்ட் 2020. குற்றவாளி யார்? என்ற தலைப்பில் வெளியானது.

கதாசிரியர் குறிப்பு:

வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் சிற்சிறு எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, இங்கு எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *