ஐயாவே வாக்கு கொடுத்தா சரியா இருக்கும் புள்ளே ! ரங்கன் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
க்கும்..ஒரு கணைப்பு கனைத்து நிறுத்தினாள் வள்ளி! இந்த கணைப்பின் அர்த்தம் ரங்கனுக்கு புரிந்துதான் இருந்தது.அவளை நம்ப வைக்க முடியாது என்பதும் அவனுக்கு தெரிந்தது.
இவர்களின் இத்தனை உரையாடலுக்கும் காரணமான சச்சிதானந்தம் புன்னகையை முகத்தில் தவழ விட்ட வண்ணம் நின்று கொண்டிருந்தார்.
வயது அம்பதுக்கு மேல் இருக்கும் அவர். நல்ல நிறமாய் இருந்தார், சட்டை பையில் ஒரு பேனாவை சொருகி படோபடமாய் இருந்தார். கையில் விலையுர்ந்த வாட்ச்,கழுத்தில் ஒரு செயின், வெள்ளை வெளேர் வேட்டி, ஆக மொத்தம் அவருடைய தோற்றம் ஒரு கனவானாய் காண்பித்து கொண்டிருந்தது.இந்த தோற்றமே ரங்கனுக்கு இவர் வார்த்தை தவறாதவர் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
இத்தனைக்கும் ரங்கனும், அவன் மனைவியும் அன்னாடங்காய்ச்சிகள், கிடைத்த இடத்தில் வேலை செய்து வயிறு வளர்ப்பவர்கள்.இதில் அவர்கள் குழந்தைகள் இரண்டும் நண்டும் சிண்டுமாக இடுப்பில் ஒன்றும், கையில் ஒன்றுமாக தொங்கிக்கொண்டிருக்கும்.
இவர்கள் சச்சிதானந்தம் வசித்த பங்களா வழியாக தோட்ட வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என்று வந்து கொண்டிருந்த பொழுது அப்பொழுதுதான் காரை வெளியே எடுத்து வீதிக்கு வந்தவர் இவர்கள் நடந்து செல்வதை பார்த்து விட்டு அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு காரை ஓரமாய் நிறுத்தி இறங்கி வந்தார்.
ரங்கனுக்கு இவரை ஏற்கனவே தெரியும், நிறைய பத்திரிக்கைகளில் தலை காட்டியுள்ளார். ஒரு சில மேடைகளிலும் பார்த்த ஞாபகம். ஊரில் பெரிய மனிதர் என்றும் கேள்விப்பட்டிருந்தான். அவர் இவர்கள் எதிரில் வரவும் ஐயா என்று ஏழைகளுக்கு உரிய பதவிசுடன் கும்பிடு போட்டான். வள்ளி அந்த அளவுக்கு இறங்கி போகவில்லை.மரியாதையான பார்வை இது மட்டுமே அவளிடம் காணப்பட்டது.
ஏம்ப்பா வீட்டுல ஒருத்தரும் இல்லை, நானும் வெளியே கிளம்பிட்டேன். வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு போறேன் நீ உள்ளார போய் சுத்தி புதரா வளர்ந்திருக்கு, அதையெல்லாம் வெட்டி சரி பண்ணிடு. நான் முடிஞ்சா மதியத்துக்கு மேல வந்துடுவேன், வந்த உடன் எவ்வளவு கேக்கறியோ அதை கொடுத்துடறேன்.
ரங்கனுக்கு மிகுந்த சந்தோஷம், சரிங்க ஐயா, என்றவன் வா புள்ளை என்று வள்ளியை அழைத்தான். வள்ளி சின்ன எதிர்ப்பை முகத்தில் காட்டி “அட்வான்ஸ் கொடுத்துட்டு போக சொல்லு” அதுக்கப்புறம் மிச்சம் வாங்கிக்கலாம்.அவனுக்கு மட்டும் காதில் கேட்கும் வண்ணம் சொன்னாள்.
அதுவும் நியாயமாகப்பட்டது ரங்கனுக்கு, “ஐயா” தலையை சொறிந்து கொண்டான்.
என்ன கேட்க வருகிறான் என்பதை புரிந்து கொண்ட சச்சிதானந்தம், என்ன சொல்றா உன் பொண்டாட்டி அட்வான்ஸ் அது இதுன்னு காதுல விழுந்துச்சு. இங்க பாருப்பா எனக்கு நேரமாச்சு, உன்னால முடிஞ்சா போய் செய்யுங்க, இல்லையின்னா கிளம்புறேன்.
காரை எடுக்க திரும்பினார்
காலையில் வந்த வேலையை விட மனமில்லை, ரங்கனுக்கு, சட்டென விரைத்து,
அதுதான் வந்து கொடுத்துடறேன்னு சொல்றாருல்ல, வா புள்ளை, அவளை இழுத்தான்.
“ஐயாவே” வாக்கு கொடுத்தா சரியாத்தான் இருக்கும்” இந்த வார்த்தையை சொல்லி அவளை கிளப்பினான்.
“க்கும்..என்று கணைத்து நம்பிக்கையின்மையை காட்டினாலும், ரங்கனுடனே
சச்சிதானம்ந்தம் பங்களாவுக்குள் நுழைந்தார்கள். பின்னால் வந்த சச்சிதானந்தம் “வாட்ச்மேனை அழைத்து இவர்கள் தோட்ட வேலை செய்து முடிக்கற வரைக்கும் பார்த்து அனுப்பிச்சுடு.” சொல்லியவர் காருக்கு அவசர அவசரமாக சென்றார்.
வாட்ச்மேன் கேட்டிலிருந்து பங்களா வாசல் வரை இரு புறமும் புற்கள் காடுபோல் வளர்ந்திருந்தன. ரங்கள் அவளை அந்த புறத்திலிருந்து ஆரம்பிக்க சொல்லி விட்டு இந்த பக்கம் புற்களை அறுக்க ஆரம்பித்தான்.
உச்சி வெயில் ஏற ஏற களைத்து போனார்கள். ஏறக்குறை வேலையும் முடியும் தருவாயில் வந்து விட்டது..”வாட்ச்மேனிடம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா? அவர் உதட்டை பிதுக்கி விட்டு பின் மனம் கேட்காமல் தான் உட்கார்ந்திருந்த பலகையின் அடியில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். எல்லாத்தையும் குடிச்சுடாதீங்க, எனக்கும் கொஞ்சம் வையுங்க, சாயங்காலம் வரைக்கும் நான் வச்சிருக்கணும்.
முதலாளிதான் மதியானம் வந்துடறேன்னு சொல்லிட்டு போயிருக்காருல்ல
அப்ப உள்ளே போய் தண்ணி பிடிச்சுக்கலாமுல்லை, வள்ளி சொன்னாள்.
அவர் எங்கே மதியம் வரப்போறாரு, அவங்க வூட்டுல எல்லாரும் சென்னைக்கு போயிருக்காங்க, இவரும் அப்படியே சென்னை கிளம்புனாலும் கிளம்பிடுவாரு. சொல்ல முடியாது.
திக்கென்றது வள்ளிக்கும், ரங்கனுக்கும். அவர் வந்து கூலியை கொடுத்தால்தான்
ஏதேனும் வாங்கி குடிசைக்கு போய் குழந்தைகளுக்கு ஆக்கி போட முடியும். அதுகள் இரண்டும் பால்வாடியில் அதுவரை இருக்கும்.
அதுக்குத்தான் அட்வான்ஸ் வாங்கிக்கோன்னு சொன்னேன் கேட்டாத்தானே, வள்ளி
பசியின் வெறியில் ரங்கனிடம் கத்த ஆரம்பித்து விட்டாள்.
ரங்கனுக்கும் பசிதான், இருந்தாலும், சச்சிதானந்தம் பெரிய மனிதர், வசதியானவர், சொன்ன சொல் காப்பாற்றுவார்; நம்பிக்கையுடன் சொன்னான், கொஞ்சம் கம்முனு இரு,
அவர் எப்படியும் வந்துடுவாரு.குரலில் உறுதி தெரிந்தாலும், சற்று ஊன்றி கவனித்தால் அதில் பிசிறு தட்டியது தெரியும்.. சரி மிச்சம் வேலையை சீக்கிரம் முடி, அப்புறம் நின்னு
கதையளக்கலாம். கை விறு விறுவென புற்களை அறுக்க ஆரம்பித்தது.
வேலை முடிய மதியம் மூன்றுக்கு பக்கம் ஆகி விட்டது.இருவருமே களைத்து போனார்கள்.அதுவரை சச்சிதானந்தம் வரவே இல்லை. பசி மயக்கத்தில் வள்ளிக்கு தன் கணவனை திட்ட கூட முடியவில்லை. வாட்ச்மேன் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து அக்கடாவென உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.பொதுவாக இவர்கள் வேலை செய்யும் வீட்டிலேயே பழைது கிடைத்தால் சாப்பிட்டு விடுவார்கள்.
இப்பொழுது அதற்கும் வழியில்லை.
பால்வாடிக்கு போய் இரண்டையும் கூட்டிக்கொண்டு குடிசைக்கு செல்லும்போது மணி நாலாகி விட்டது.ஏதாவது கிடைக்குமா என்று துழாவி கிடைத்த சில்லறைக்கு
ரங்கன் வெளியே வந்து நான்கைந்து பன்னை கட்டிக்கொண்டு போய் ஆளுக்கொன்று கொடுத்து,சாப்பிட சொல்லி தண்ணீரை குடித்து மதிய உணவை முடித்துக்கொண்டனர்.
ரங்கன் வள்ளியிடம் நீ வீட்டுல இரு, நான் மறுபடி போய் பார்க்கறேன். வாட்ச்மேன் இவன் நிலைமையை பார்த்து அவரு சென்னை போயிருப்பாருன்னு நினைக்கிறேன்
அனேகமா இரண்டு நாளாயிடும்.
ரங்கனுக்கு இரத்தம் கொதித்தது, பாவி இவனெல்லாம் பெரிய மனுசன், எங்களை மாதிரி அன்னாடங்காய்ச்சிகளை கையேந்த விடறான், பல பல வார்த்தைகளில் மனதுக்குள் திட்டினாலும் வெளியில் ஒன்றும் செய்ய முடியாதவனாய் மயங்கி சரியும் நிலையிலேயே குடிசைக்கு சென்றான்.
மறு நாள் காலையிலயே பக்கத்து குடிசையில் இருந்த ஒரு வயதானவன்,
இவர்கள் இருவரையும் ஒரு வீட்டில் தோட்ட வேலை செய்ய கூப்பிட்டு சென்றான்.
அவர்கள் புண்ணியம் அன்று பொழுது ஓடி விட்டது. இரவு குடிசைக்கு வந்தவுடன் ரங்கன் வேக வேகமாக சச்சிதானந்தன் பங்களாவுக்கு ஓடினான். அவர்கள் வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிய அப்பாடி என்று மனதுக்குள் நினைத்து கொண்டவன் வாட்ச்மேனிடம் சென்றான். இவனை அடையாளம் கண்டு கொண்ட வாட்ச்மேன், உள்ளே போய் பார், அவங்க எல்லாம் இப்பத்தான் வந்தாங்க.. இவன் பதட்டத்தோடு உள்ளே சென்றான்.
நல்ல வேளை சச்சிதான்ந்தம் வெளியே நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இவன் போய் எதிரில் நின்றதும் சிறிது முகம் சுழித்தவர் நினைவு வராமல் தடுமாறினார்.
ஐயா முந்தா நேத்து தோட்ட வேலை செய்ய சொல்லிட்டு மதியமே வர்றேன்னுட்டு போனீங்க, நாங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு உங்களுக்காக காத்திருந்தோம்.குரலில் கூடிய வரைக்கும் குற்றம் சாட்டுகிற மாதிரி தெரிய கூடாது என்று கட்டுப்படுத்தி கொண்டான்.
சரி அதுக்கு இப்பத்தானா நேரம் கிடைச்சுது, போயிட்டு காலையில வந்து பாரு.
ஐயா, இப்ப குடுத்தீங்கன்னா வீட்டுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போவேன்.
சச்சிதான்ந்துக்கு கோபம் வந்து விட்டது. என்னப்பா எங்கேயாவது இந்த பொழுது போன வேளையில பணம் தருவாங்களா? என்னையும் உன்னைய மாதிரி இருக்கணும்னு நினைக்கறியா? போ, போ நாளைக்கு வந்து பாரு.
ரங்கனுக்கு அழுகை அழுகையாக வந்தது. கோபத்தில் வார்த்தை விட துடித்தான். ஆனால் இப்பொழுது பணம் கொடுப்பது அவர் கையிலே. கோபித்து தர முடியாது என்று சொல்லி விட்டால். சே..வள்ளி அப்பவே சொன்னா, அட்வான்ஸ் வாங்குன்னு, நான் இவனை பெரிய மனுசன்னு நினைச்சேன். மனதுக்குள் நினைத்து கொண்டாலும், சரிங்க காலையில வந்து பாக்கறேன். வெளியே சென்றவனை வாட்ச்மேன் கழிவிரக்கத்துடன் பார்த்தான்.
மறு நாள் காலை அவர் எதிரில் போய் நிற்க, அவருக்கோ கடும் கோபம், காலங்காத்தால உன் முகத்துல முழிக்கணுமா? போய்ட்டு பத்து மணிக்கு மேல வா. மீண்டும் தலை குனிந்து வெளியே வந்தான். பத்துமணிக்கு வேலை செய்யும் இடத்தில்
சொல்லி விட்டு இவரை பார்க்க அவர் எங்கோ வெளியே சென்று விட்டதாகவும், மாலையில் வந்து பார் என்று சொன்னார்கள்.வாட்ச்மேன் மீண்டும் இவனை இரக்கத்துடன் பார்த்தான். மாலை மீண்டும் படையெடுத்தான். நல்ல வேளை சச்சிதானந்தம் இருந்தார். அவனை கண்டவுடன் முகத்தை சுருக்கி உனக்கு வேலையே கிடையாதா? முணங்கி கொண்டே எழுந்து சென்றவர் நூறு ரூபாயை கொண்டு வந்து அவன் கையில் திணித்தார்.
ஐயா ஆள் கூலி கூட கட்டாது, நானும் சம்சாரமும் பொழுது வரைக்கும் வேலை செஞ்சுருக்கோம். நூறு ரூபாயை கையில் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கோபம் தொனிக்க சொன்னான்.
என்ன விளையாடறியா? நூறு ரூபாயே அதிகம், போனா போகுதுன்னு கொடுத்தா மிரட்டுறே? இவர்தான் அவனை மிரட்டினார்.
அதெல்லாம் முடியாது, இன்னும் நூத்தைம்பதாவது கொடுக்கலியின்னா நான் இங்கிருந்து போக மாட்டேன். அவன் குரலில் வைராக்கியம்.
ஓ அப்படியா? உன்னை எப்படி போக வைக்கிறதுன்னு எனக்கு தெரியும். அவசரமாய் செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தார்.
அதற்குள் இவரின் சத்தம் கேட்டு வெளியே வந்த இவர் மனைவி அடடா, இதென்ன சத்தம். ஏம்பா? எவ்வளவுதான் கேட்கிறே? இவன் தொகையை சொன்னான். இந்தாப்பா இந்த நூறு ரூபாயை வச்சுக்கோ, முதல்ல இங்கிருந்து கிளம்பு, கையில் மீண்டும் ஒரு நூறு ரூபாயை கொடுத்து விரட்டினாள்.
இவன் மீண்டும் சண்டை போட நினைத்தவன் சரி தொலையுது, இந்த மாதிரி ஜென்மங்களோட போராடி நமக்குத்தான் அசிங்கம். நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். சச்சிதானந்தம் மனைவி ஏங்க இந்த மாதிரி ஆளுங்களோட சண்டை போட்டு ஏன் தான் அசிங்கம் பண்ணிக்கறீங்களோ? ரங்கனுக்கும் காதில் விழுந்தது.
யாருக்கு அசிங்கம்?இவன் மனதுக்குள் கேள்வியை எழுப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நான்கைந்து நாட்கள் கழித்து ஒரு இடத்தில் வேலை முடிந்து வந்து கொண்டிருந்த பொழுது யாரோ மேடையில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. எங்கோ கேட்ட குரலாய் இருக்கிறதே என்று மனதுக்குள் நினைத்தவர்கள் பேசிக் கொண்டிருந்தவரை ஊன்றி கவனித்தனர்.
“உழைப்பவர்களுக்காகவே எங்கள் இயக்கம், உழைப்பாளி உழைத்து முடித்து வியர்வை காயுமுன் அவனுக்கு ஊதியம் கொடுத்து விடவேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” முழங்கிக்கொண்டிருந்தார் சச்சிதானந்தம்..