இளம் விஞ்ஞானி ராஜசேகரன் வீடு. அவருடைய வீட்டு கூடத்தில் அவரது நண்பர்கள் நான்கு பேர் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். வாசல் கதவு திறந்து இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. வாசலில் சேலை உடுத்திய அழகான இளம்பெண் தோன்றினாள். அவர்கள் அருகில் வந்தாள். பெண்ணைப் பார்த்ததும் ஒரு இளைஞன் பாட்டில்களை சோபாவுக்கு கீழே ஒளித்து வைத்தான்.
மற்றொரு இளைஞன் பேசினான் ‘அடடே வாங்க ஷீலா மேம் நீங்க கண்டிப்பா நம்ம விஞ்ஞானியை தேடி வருவீங்க ன்னு நான் சொன்னேன். இவன்தான் பிரேக் ஆயிடுச்சுன்னு சொன்னான்’
அவள், அவர்கள் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்தாள். மற்றொரு இளைஞன் பேசினான் ‘நம்ம ஆளு உள்ள உட்கார்ந்து ஆராய்ச்சி பண்றான். இவங்க நம்மள ஆராயறாங்க’ என்று சிரித்தான்.
‘சரி எங்கள பத்தி அறிமுகம்’ என்று தொடர்ந்தான் ‘நான் ஜெயபிரகாஷ், இவன் விஜயபிரகாஷ், இவன் ராஜேஷ், இவன் ராஜேந்திரன். இன்னொரு பிரகாஷ் இருக்கான் சந்திர பிரகாஷ் அவன்தான் நம்ம விஞ்ஞானியோட பைனானஸ் கன்ட்ரோலர். அதோ சின்ன கட்டிலில் படுத்து இருக்காரே அவரு குக் நல்ல தம்பி, அங்க ஸ்டூல்ல உட்கார்ந்து மொபைல் பார்த்துட்டு இருக்கற பையன் குமாரு இங்க உதவியாளரு… அங்க டிவி கீழே உட்கார்ந்து இருக்கற அக்கா’
அவள் பேசினாள்’ இங்க உங்களுக்கு தூய்மைப் பணி செஞ்சு கொடுக்கிறவங்க இது தவிர துணி துவைக்க இன்னொரு அம்மா வருவாங்க ஜெயப்பிரகாஷ் ‘அட எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க கில்லாடி மேம் நீங்க அவள் இடை மறித்தாள் ‘ஓங்க நாலு பேருக்கும் வேலை போயிடுச்சு இப்ப இருக்கிற சூழ்நிலையால. அதனால் நண்பன் வீட்டில் செட்டில் ஆயிட்டிங்க கரெக்ட்டா……? ‘
ராஜேஷ் பேசினான் ‘அப்படி சொல்ல முடியாது. நண்பனோட லவ்வர் பிரிஞ்சுட்டிங்க இல்ல அவனுக்கு ஒரு மாரல் சப்போர்ட் ஆக நாங்க இருக்கோம்’ என்றான்.
‘நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் அவருக்கு நாலைஞ்சு நிறுவனம் பண்ட் கொடுத்துகிட்டு இருக்காங்க அவருடைய ஆராய்ச்சிக்காக… திடீரென அவங்க நிறுத்திட்டா என்ன பண்ணுவீங்க’ கேட்டாள் அந்தப் பெண்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
குமார், மொபைலிலிருந்து விடுபட்டு இவளைப் பார்த்தான்.
‘யோசிச்சுக்கோங்க… ஒளவைப் பாட்டி சொல்றா போனகம் என்பது தான் உழந்து உண்டல் ன்னு அதாவது நம்ம உழைப்பில் வந்த பணத்தில் இருந்து உணவு பெறணும்னு சொல்றா… நான் ஷீலா இல்ல ஷீலா வோட ட்வின் சிஸ்டர் மீரா… அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றாங்க இல்ல சேராமா போறாங்க அவங்க ரெண்டு பேரும் அவங்க கதையைப் பார்த்துப்பாங்க வீட்ல தேடாம இருக்காங்க ன்னு நண்பன் வீட்லயே இருக்கலாமா யோசிங்க ‘.
அவள் விடுவிடுவென வாசலை நோக்கி நடந்தாள்.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை