உள் வாங்கும் உலகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 8,126 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மா கடிதம் எழுதியிருந்தாள். ஆறாவது கடிதம். பத்து நாட்களுக்குள் தொடர்ச்சியாய் ஆறு கடிதம். கடிதத்தைப் பார்க்கிறேன். அம்மாவின் முகம். நீரில் மிதப்பது மாதிரி மிதக்கிறது. கிணற்றுத் தண்ணி கற்கண்டு மாதிரிக் கிணற்றுத் தண்ணி. அதில் அம்மாவின் முகம் பொலிவுற்றுத் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருந்தேன். படிக்கவில்லை . படிக்க குரல் உயர்கிறது. உலர்ந்து துவண்டு போன அவளின் உதடுகள் படபடக்கிறது. அம்மாவிற்குப் பயம். எங்கே நான் வராமல் போய் விடுவேனோ என்று பயம். வருஷா வருஷம் நடக்கிற மாரியம்மன் திருவிழாதானே என்று ஒதுங்கி விடுவேனோ என்ற பயம். இதுதான். இந்தப் பயம்தான் இப்படித் தொடர்ச்சியாய் ஆறு கடிதங்கள் எழுத வைத்திருக்கிறது. இந்த வருஷம் விஷேசமாம். இத்தனை வருஷம் நடந்த திருவிழாவைவிட இந்த வருஷம் நடக்கப் போகிற திருவிழா ரொம்ப ரொம்ப விசேஷமாம்! காரணம். அம்மன் அருள் பெற்ற பொன்னையா பாகவதரின் வள்ளித் திருமணம் நாடகம் நடக்கப் போகிறதாம்!

இதுவரை கருப்பூரில் ‘வள்ளி திருமணம்’ நாடகம் நடக்கவே இல்லை. அரந்தாங்கி ஆவுடையார் கோவில் என்று பக்கத்து ஊர்களில் எல்லாம் நடந்திருக்கிறது. அதுக்கு ஜனங்கள் ஆலாய் பறக்கும். நடு இரவில் இரண்டு மூன்று மைல் தூரம் நடந்து போய்ப் பார்த்து விட்டு வரும். இந்த வருடம் எப்படியும் விடாப்பிடியாய் கருப்பூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று கொண்டு வத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் திருவிழா! ‘முதல்நாள் முடியா விட்டாலும், இரண்டாவது நாளுக்காவது வரவும்’ என்று எழுதியிருக்கிறாள். இரண்டாவது நாள்தான் நாடகம். எனவே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

அம்மாவின் இந்த சலசலப்பிற்காவது போய் வரவேண்டும். எங்கோ முள் காட்டில் சுள்ளி பொறுக்குகிறேன் என்று செடி கொடிகளில் சுழன்று அலைந்து, புல்லிலும், முள்ளிலும், கல்லிலும், தரையிலும் நடந்து – காற்றில் அடிபட்டு கண் கசக்கி நடந்து தேய்ந்து. ஓடாய் உடைந்து என்னை வளர்த்த அம்மாவே! நான் வருகிறேன். எப்படியும் நான் வருகிறேன். அத்தனை சுலபமாய் பத்திரிகை அலுவலகத்திலிருந்து கிளம்ப முடியுமா? முடியாதுதான். பாரம் படிக்க வேண்டியது நிறைய இருக் கிறது. இஷ்யூ முடிக்க வேண்டும். இருப்பினும் எப்படியாவது எடிட்டரிடம் பேசிக் கிளம்பி வேண்டும்.

“கிருஷ்ணா!”

“…”

“கிருஷ்ணா!”

அந்தப் பூனைக் குரல் என்னை விழிப்படையச் செய்தது. மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தேன்.

சூசன் மாத்யூ!

“பத்திரிகைக்காரன் என்றால் எப்போதும் கண்ணைச் சொறுகி உத்திரம் பார்த்து யோசனையிலே தான் இருக்கணுமா?”

“இல்லை . இது வேற…”

“என்ன ?”

சூசன் தமிழ்ப் பேசுவதைக் கேட்டாலே ஒரு சந்தோஷம்! குரல் தழைத்து, குலைந்து. குளத்தங்கரையில் துள்ளுகின்ற மீன் மாதிரி…குருகுருப்புக் காட்டுகிற பாலை! சூசன் அமெரிக்கப் பெண். கொலம்பியா யூனிவர்சிட்டியில் ‘ஜர்னலிஸம்’ படித்தவள். தமிழ் பத்திரிகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாள். எடிட்டரின் ஸ்நேகிதரின் மகள். எங்கள் பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிறாள். வெளிநாட்டுக் கலை, கலாச்சாரங்கள் பற்றி நிறைய எழுதுவாள். தெளிவான எழுத்து. ஒவ்வொன்றையும் ஆணிவேர் வரைச் சென்று ஆராய்ந்து பார்க்கின்ற எழுத்து. சூசன் ஆங்கிலத்தில் எழுதுவதை நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருவேன்.

“எனி இம்பார்டெண்ட்?”

“நோ. சூசன்.”

“பின்னே?”

“ஊருக்குப் போகணும். அம்மா லெட்டர் போட்டிருக்காங்க. ஊர்லெ மாரியம்மன் திருவிழா நடக்குதாம்.

“நானும் வரட்டுமா?”

நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.

“வரட்டுமா?”

“தாராளமா…”

“வாவ்” – ஒரு அலறல்! யப்பா இதுமாதிரி நான் கேட்டதே இல்லை. இதற்குப் போய் இப்படி ஒரு கூச்சலா! கண்ணில் பளபளப்பு! கண்ணைச் சிமிட்டினாள். பால் கதிர் அசைவது மாதிரி லேசாய் உடலை அசைத்துச் சந்தோஷம் காட்டினாள். ஜில்லென்று காற்றுப்பட்டது மாதிரிச் சந்தோஷம்!

“எனக்கு ஆசை! இந்த மாதிரித் திருவிழாவெல்லாம் பார்க்கனும்னு ரொம்ப ஆசை. டாக்குமெண்ட்ரி ஃபிலிம்ஸ் நிறையப் பார்த்திருக்கேன். நேர்லெ பார்க்கணும். உங்க மக்களோட கலாச்சாரம் – பண்பாடு – நம்பிக்கை – தாகம் – எதிர்பார்ப்பு இதெல்லாம் இந்த மாதிரித் திருவிழாக்களிலெதான் வெளிப்படும். இட் இஸ் எ குட் சான்ஸ் ஃபார் மீ. நிறைய மேட்டர்ஸ் கலெக்ட் பண்ணணும்.”

“ஷ்யூர்! போகலாம்”

சொல்லி விட்டேன். உள்ளே வெடவெடவென்று உதறிற்று! சூசனை அந்தப் பட்டிக்காட்டுக்குக் கூப்பிட்டுப் போய் ஊர் வாயில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறேன். இது பிசகோ? எதற்கு ஊருக்குப் போகிறேன் என்று சூசனிடம் சொல்லுவானேன். நினைப்பு தாவிற்று! எங்கெங்கோ தொட்டு நகர்த்தது. குசன் என் ஸ்நேகிதி! அவளைச் சந்தோஷப்படுத்த வேண்டும். எனக்குள் மௌனம் இறங்கிற்று! வெடுக்கென்று என் தோளில் கிள்ளினாள். விழிப்பு! எடிட்டர் வந்து விட்டாராம். அவளே பேசி சம்மதம் வாங்கி விட்டாளாம். அவள் அவளாய் இல்லை. சந்தோஷம் அவளைப் பிடுங்கித் தின்றது.

ஊருக்குள் கால்வைத்ததுமே ஊரே வியத்திற்று! ‘கிருஷ்ணன் யாரோ வெள்ளைக்காரியைக் கூப்பிட்டு வந்திருக்கான்.’ புகை ஊதிற்று! யாரும் வாய்விட்டுச் சொல்லவில்லை. வாய்விட்டுப் பேசினால் தான் பாஷையா? ஆனால் பேச்சு ஊர் முழுக்கப் புழுதிக் காற்றாய் சுழன்றிற்று! அவரவர் பக்குவத்திற்கேற்ப. விருப்பத்திற்கேற்ப எப்படி எப்படியோ உருவம் செதுக்கிற்று!

“வாய்யா” – அம்மா.

சூசன் அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள்.

“வா தாயி!”

அம்மாவின் கண்களுக்குள் சின்னதாய் ஒரு திகில் பூத்தது. உடம்பெல்லாம் ஈரம் படர்ந்த மாதிரி ஒரு ஜிலுஜிலுப்பு. படபடப்பாய் வீட்டிற்குள் போய் பாய் போட்டாள். திகைப்புடன் சூசனைப் பார்த்தாள். நான் அம்மாவுக்குப் புரிகிறவிதமாக சூசனை அறிமுகப்படுத்தினேன். அம்மாவின் முகம் மாறிற்று! உடலில் அயர்ச்சி நீங்கின தெளிவு. குசனும் அம்மாவுடன் நன்றாகப் பேசினாள். சிரித்தாள். பழகினாள். அம்மா சூசனைக் கூப்பிட்டுக் கொண்டு நான்கு தெரு சுற்றி வந்தாள். பலசரக்குக் கடை, பூக்கடை நல்லத் தண்ணிக் கிணறு. சூசனுக்கு ருசி கண்ட பூனையின் ஏக்கம். அம்மாவை விடவில்லை.

நான் என் கிராமத்தைச் சுற்றினேன். ஒவ்வொரு இடமாய்த் தொட்டுத் தொட்டு என் பால்ய தழும்புகளைத் தடவி பார்த்தேன். தனியாக நடத்தேன். எப்பவோ நான் இடறி விழுந்த குண்டும் குழியுமான ரோடு, எப்போதோ அடித்த புயலில் கீழே சாய்ந்த கருவேல மரம் – அது இருந்த இடம். சின்ன வயசில் பிரமிப்பாய் பார்த்த தோப்பு. சிங்கத்தின் கர்ஜனை – சிறுத்தையின் சீற்றம் – புலியின் உறுமல். கழுதைப் புலி, கொம்பானை எல்லாம் இருக்கும் என்று நினைத்து நினைத்துக் குலை நடுங்கிய தோப்பு. இப்போது பொட்டல் காடாய் நிற்கிறது. பள்ளம் தோண்டிக் காக்காய் முட்டை புதைத்து வைத்த இடங்கள் – இன்றுவரை குஞ்சு பொறிக்கவில்லையே என்ற ஏக்கம்!

பதினெட்டு வயது கூட ஆகாத அந்த வயசில் மாரியம்மன் கோவில் பொட்டலில் நொண்டி விளையாடும் பெண் பிள்ளைகளைப் பார்க்கப் பார்க்க எப்படியெப்படியெல்லாமோ தெரிந்தார்கள். உடைந்த பாலம், செங்கல் சூளை…. என்னவோ தெரியவில்லை. இத்தனை நாட்களுக்குப் பிற்பாடு இதையெல்லாம் பார்க்கின்றபோது ஒரு சந்தோஷம். பால்ய ஸ்நேகிதனைப் பார்க்கிற மாதிரிச் சந்தோஷம். ஆனால் எதுவும் பார்த்தவுடன் சிரிக்கவில்லை. கை குலுக்கவில்லை. தோளைப் பிடித்துத் தடவிப் பிரியம் காட்டவில்லை. இருப்பினும் ஒரு ஸ்தேகம். நெஞ்சோடு பேசி நீவிவிடுகின்ற ஸ்நேகம்.

“கிட்டா…”

“அட ஆவுடையப்பனா?”

“திருவிழாவுக்கு வந்தாப்பிலை யாக்கும்!”

“ஆமாம்.”

“மெட்ராஸ்லெ என்ன வேலை?”

“பத்திரிகை ஆஃபீஸ்லெ.”

“நிருபர் மாதிரியா?”

“சப்-எடிட்டர்”

“ஏன் நிருபர் மாதிரி ஒண்ணும் கிடைக்கலையா?”

“அது மாதிரித்தான்.”

“அப்ப சினிமா ஆளுங்க எல்லாம் பேட்டி எடுப்பீங்களா?”

“உண்டு.”

“ரஜினியைப் பேட்டி எடுத்திருக்கீங்களா?”

“ம்.”

“ரஜினி எப்படி? – நல்லா பேசுவாரா?”

“ம்.”

“கை கொடு கிட்டா” அவனை மீறி அவன் உடம்பு குதித்திற்று!

“ஒரு வாட்டி ரஜினியைப் பார்க்கணும். முடியுமா? மனுஷன் நல்ல மாதிரின்னு கேள்விப்பட்டேன்.”

“சரி. நீ எப்படி இருக்க?”

“ஏதோ இருக்கோம். ரஜினியைப் பார்க்க முடியாதா?”

“பார்க்கலாம்…பார்க்கலாம்…”

“ஊருக்குப் போகயிலே வந்து பார்க்கறேன் – திருவிழா முடிஞ்சு தானே போவாப்லெ. வள்ளி திருமணம் நாடகமெல்லாம் இருக்கு. ஜோராப் பார்த்திட்டுப் போங்க…” – குப்பென்று வாடை.

“இன்னும் அந்தப் பழக்கம் விடலையா?”

“முடியலெ.”

“விட்டுடு ஆவுடை”

“ஊனத்தினாத்தான் உழைக்க முடியுது.”

ஆவுடையப்பன் ஆளே உருமாறி விட்டான். அழுக்குப் படித்த தலை. சிக்குத் தாடி. சுந்தல் ஆடை – குளிக்காதவன் மாதிரி ஆளே அசிங்கமாய் உருமாறி விட்டாள். நான் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கோ ஒருதிசை பார்த்து தொண்டையைச் செறுமினான். ‘நான் வரட்டுமா?’ என்பது மாதிரி நகர்த்தேன். அவன் நகரவில்லை. அவன் பார்வை நுனி கூர்ந்து நீண்டது. தலையைச் சொறிந்தான்.

“என்ன ஆவுடை?”

கோணலாய் சிரித்தான்.

“காசா?”

“ரெண்டு ரூபாய் போதும்.”

“எதுக்கு?”

கண்ணைச் சிமிட்டினான்.

என்ன செய்வது! கொடுத்து விட்டேன். அம்மாவிடம் சொன்னால் குதிப்பாள். ‘அந்தக் குடிகாரனுக்கு எதுக்குடா கொடுத்தே! எப்ப எப்பன்னு காத்துக்கிட்டிருந்தானாக்கும். அந்தக் கிராதகன்’, அம்மாவிடம் சொல்லப்படாது.

***

விடிந்ததும் மழை. கொட்டு மழை! நேற்று வரை வெயில் தாள முடியவில்லை. இன்று பிலுபிலு வென்று பிடித்துக் கொண்டது. கொட்டுக் கொட்டெனக் கொட்டித் தீர்த்திற்று! சேறு காய ஒரு மாசம் ஆகும். அப்படி ஒரு மழை! அம்மன் சாட்டினாலே மழைதானாம். மாசம் முப்பதும் அப்படிக் காயுமாம். அம்மன் பூஜையன்று சூரியனையே கரைச்சுப்பிடுறது மாதிரி மழை. எனக்கும் ஆச்சரியம்தான். சூசன் வியந்து வியந்து கேட்டாள். ஊருக்கே பயம். இன்று பாகவதரின் வள்ளி திருமணம். நடக்க விடுமோ விடாதோ என்று பயம். நல்லவேளை மதியம் வாக்கில் லேசாய் வெள்ளை மேகம் தெரிந்தது. தெருவில் நடமாட்டம் கூடிற்று.

“கிட்டா!”

“என்னம்மா?”

“ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கியாந்திடேன்.”

“எதுக்குமா?”

“முறுக்குச் சுட்டு வெக்கிறேன். ராவுக்கு வள்ளி திருமணம் பார்க்கணுமே? ஏறுமயில் ஏறின்னு முருகன் தரிசனம் பார்க்க எப்படியும் விடியக் காலை மூணு மணியாயிடும். அதுவரை எதுனாக் கொறிச்சுக்கிட்டிருக்கணுமே!”

‘எதுக்கு சிரமம்.”

“என்ன சிரமம்பா?”

அம்மா விடவில்லை. படியிறங்கினேன். தெருமுனையில் கடை. கடைக்காரரின் மகன்தான் கடையில் இருந்தான். அவனுக்கு எண்ணெய் எல்லாம் எடுத்துத் தரத் தெரியாதாம். அப்பாவைக் கூப்பிடு என்றேன். தூங்குகிறார் என்றான்.

“யார் – யாரது?”

“வாங்க கடைக்காரரே!”

“அட கிருஷ்ணனா! வாங்க தம்பி. இப்பத்தான் லேசா கண் அசந்தேன். ராத்திரி வள்ளி திருமணம். ஏறு மயில் ஏறின்னு முருகன் காட்சி பார்க்கணுமே! எப்படியும் காலையிலெ மூணாயிடும். முழிச்சிருந்து பார்க்கணுமேன்னுதான்…லேசா கண் அசந்தேன்.”

எண்ணெய் வாங்கிக் கொண்டு விட்டிற்கு வந்தேன். வருகிற வழியிலும் இதே பேச்சுத்தான். “பொழுதோட போயி தண்ணி பாய்ச்சிட்டு வந்திடுய்யா. ராவுக்கு முருகக் கடவுளைப் பார்க்கணும்! மதிலுக்குப் பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிய திசையெல்லாம் இதே பேச்சுதான். இரவு நாடகம். குறிப்பாக கடைசிக் காட்சி! முருகக் கடவுள் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டு, மயில் மீது ஏறி, வானத்திற்குள் பறந்து செல்கின்ற காட்சி. முருகனாய் நடிக்கிறவர் அப்படியே அவதாரம் எடுத்து வந்தது மாதிரிக் காட்சியளிப்பார். அந்தக் கதாநாயகனைத் தரிசிக்கத்தான் இத்தனை கூட்டமும் உருகி உருகிக் காத்திருக்கிறதாம்.

இரவு வந்தது.

சூசனை அழைத்துக்கொண்டு நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்தேன். நல்ல கூட்டம். சிறிசுகளும், புதுசுகளுமாய் கூட்டம். கூட்டத்தில் உற்சாகம் புரண்டு ஓடிற்று. அலையலையாய் ஏறிக் குதித்து உருண்டு ஓடும் உற்சாக அலைகள். கோவிலை ஒட்டிப் பெரிய திண்டு. நல்ல விசாலமாக இருந்தது. அதில் போய் உக்கார்ந்து கொள்ளலாம் என்று கூட்டம் பிளந்து சென்றோம்.

“வாங்க தம்பி” – ஆவுடையப்பன்.

குப்பென்று நாத்தம்.

“என்ன ஆவுடை?”

கண் சிமிட்டினான். எனக்கு கண்பட்டதும் நெஞ்சு படக்கென்றது. கிளை முறிந்தது மாதிரி. எங்கே பணம் கேட்டு விடுவானோ என்ற பயம்தான்.

“உக்காரு கிருஷ்ணா. பெட்ஷீட் கொண்டாந்திருக்கலாமே! சரி. பரவாயில்லை. பேப்பர் கொண்டாந்து போடட்டுமா?”

“பரவாயில்லை.”

படபடப்பாய் நகர்த்து ரெண்டு நியூஸ் பேப்பர்களைக் கொண்டுவந்து போட்டான். நானும், சூசனும் அமர்ந்து கொண்டோம். அம்மா பக்கத்தில் சற்றுத் தள்ளி உள்ளூர் கூட்டத்தோடு அமர்ந்து கொண்டாள். மேடை விளக்குகள் பிரகாசம் காட்டியது. அம்மன் பூஜை முடிந்ததும் நாடகம். பூஜையில் கூட்டமில்லை.

“அவுக யாரு – வெள்ளைக் காரங்களா?”

நான் சிரித்தேன்.

“பழக்கமா?”

“கூட வேலை செய்யுறாங்க.”

சூசன் ஆவுடையப்பனைப் பார்த்து சிரித்தாள். அவன் முகம் வெக்கத்தில் கோணலாக மாறிற்று. ஆவுடையப்பன் சற்று நேரம் என் முதுகுக்குப் பின்னாடி நின்றிருந்தான். மெல்ல என் காதருகே வந்து “வெள்ளைக்காரங்கன்னா ஃபோட்டோ எடுக்கிற காமிரா எல்லாம் வெச்சிருப்பாங்களே! கொண்டாந்திருக்காங்களா?” – என்றான். நான் ‘இருக்கு’ என்று தலையசைத்தேன்.

“என்னை முழுசா எடுக்கணும்.”

“எடுக்கலாம்.”

“இந்தா! ஆவுடை. பேசாம இருக்கமாட்டயா! வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருடா; வெளியூர்லெ இருந்து வந்திருக்காங்க. டீஸெண்டா பேசவேண்டாம்? நவுந்து பேசாம போ. அவங்க நிம்மதியா நாடகம் பார்க்கட்டும்” – முதுகுக்குப் பின்னாலிருந்து ஆவுடையப்பனை விரட்டினார்கள். ஆவுடை ‘சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்’ என்று மெல்ல நகர்ந்து கொண்டான். மேடை அருகே போய் நின்று கொண்டான்.

பூஜை மணி கிறுகிறுத்தது.

திரை விலகியது.

இருளுக்குள் இருந்த அத்தனை விழிகளும் பார்வையைத் தீட்டியது. டும் டும் டும் டமாரம் அதிர்ந்திற்று. மேடை விளக்குகள் ஜொலிப்புக் காட்டிற்று. கட்டியங்காரன் கட்டியங் கூறினான். திரை மூடியது. மீண்டும் திறந்தபோது தோட்டம், வெள்ளை மொட்டாய் பூத்திருக்கிற மல்லிகைத் தோட்டம். ரெண்டு பெண்கள் பூப்பறித்து விநாயகருக்குப் போடுகிறார்கள். திரைக்குப் பின்னாலிருந்து விநாயகர் துதி, நாடகம் ஆரம்பமாயிற்று. சூசன் மிகவும் ஆர்வமானாள்.

***

நாடகம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழாய் மலர்வது மாதிரி ஒவ்வொரு காட்சியாய் மலர்ந்து கொண்டிருந்தது. கூட்டம் உற்சாகம் காட்டிற்று. பாதி இரவு தாண்டியதும் தீனிப் பொட்டலங்களைப் பிரித்தது. நான் எழுந்து தின்று காலார நடந்து திரும்பினேன். கூட்டம் சரி பாதிக்கு மேல் சாய்ந்து கிடந்தது. சூசன் ஒவ்வொன்றாய் படம் பிடித்துக் கொண்டிருந்தாள். மெல்ல இரவு கரைந்து கொண்டிருந்தது. கடைசி காட்சி! குபுக்கென்று நீர் மட்டம் உயர்வது மாதிரிக் கூட்டம் கூடிற்று. கால், அரை, முக்கால் கோழித் தூக்கமெல்லாம் விழித்தது. மேடையில் தபேலா ஒலி உக்கிரமாயிற்று! சாம்புராணிப் புகை மெல்ல மேடையில் நுழைந்து சுழண்டு மண்டலமாய் உருவாகி நின்றது. இசை எழும்பியது.

முருகனின் முகம். முழு வெளிச்சமும் அந்த முகத்தில் பாய்ந்தது. செதுக்கிச் செவேல் என்று பொலிவு காட்டுகின்ற முகம். கால் பாவாமல் வந்து மணவறையில் அமர்கிறான். பக்கத்தில் வள்ளி. சுற்றிலும் தோழிகள். மந்திரங்கள் முழங்கப்பட்டது. முருகக் கடவுளின் கரங்கள் மாங்கல்யத்துடன் வள்ளியின் கழுத்தை நோக்கி உயர்கிறது. அவ்வளவுதான். எங்கோ வெடிச் சிதறல். வானம் வரமிழத்திற்று, கோவில் மணி கிறுகிணுத்தது. டமாரம் அதிர்ந்திற்று. அந்தக் காட்சி கரைந்து அடுத்த காட்சி தெளிகிறது. தோகை மயில் ஒன்று படபடக்க நிற்கிறது. பின்னணியில் புகை. சாம்புராணிப் புகை. நெளி நெனி ஆறாய் ஓடுகிறது. முருகனும் வள்ளியும் மயில் மீது ஏறுகிறார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. எது பூமி எது வானம்? புரியாத ஆர்பாட்டம். பாகவதரின் கட்டைக் குரல். ‘ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று… ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று… ஒவ்வொரு முகமாய் மாறுகிறது. கலர் விளக்குகள் துடி துடித்தது. முருகனாய் நடித்திருப்பவரின் முகம் ஒளி விளக்கில் மிதந்தது. முருகனின் ஜொலிப்பு கூடிற்று.

கூட்டத்தின் ஒவ்வொரு மூச்சும் “முருகா… முருகா…” என்ற மிதப்பாய் இருந்தது. அந்த க்ஷணம் அந்தக் கதாதாயகன் தெய்வமாகி விட்டான். கூட்டம் தலைக்கு மேல் கைகூப்பி அவனை வணங்கிற்று. பூக்களை அள்ளி அள்ளி அவன் மீது வீசியது. சில்லறைக் காசுகள் அவன் காலடியில் துள்ளிக் குதித்திற்று. முன் வரிசையில் இருந்த சிலர் தாம்பாளத் தட்டில் சூடம் ஏற்றி அவனுக்குச் சுற்றிக் காட்டி வணங்கினார்கள். மேடைக்கு முன் இருந்த கூட்டம் அவன் கால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டது. ஒருமுறை; ஒரே ஒருமுறை – என்ற ரீதியில் கூட்டம் முன்னே நெருங்கிற்று. பூமி பிதுங்கிற்று.

அவரவர் பக்குவத்திற்கேற்ப – பக்திக்கேற்ப அந்தக் கதாநாயகனின் காலைத் தொட்டு வணங்குவதும், கையை உயர்த்தி வணங்குவதுமாய் இருந்தார்கள். அந்த அரை இருட்டில் அந்தக் கதாநாயகன் கர்ப்பக்கிருகத்திற்குள் இருக்கும் முருகக் சுடவுளாகவே இருந்தான்.

ஒருவன் வேகமாக மேடை ஏறினான் – அவன் யார் என்று தெரியவில்லை. துள்ளலும் துடிப்புமாய் வந்தான். அந்தக் கதாநாயகனின் பாதங்களை எடுத்துத் தாம்பாளத் தட்டில் வைத்தான். நீரை ஊற்றிக் காலை அபிஷேகம் செய்தான். அந்த நீரை மாவிலையில் தொட்டுக் கூட்டத்தின் மேல் தெளித்தான். மேடைக்கு முன்னாடி இருந்த சிறிசுகள் தண்ணீர் என் மீது விழாதா, உன்மீது விழாதா என்று அடித்துக் கொண்டது. சூசன் சுழண்டு சுழண்டு காமிராவை இயக்கினாள்.

***

திடீர் என்று மொத்தக் கூட்டமும் மேடைக்கு இடது பக்கம் திரும்பிற்று! சின்னதாய் மண் தரையில் புழுதி எழும்பி டியூப் லைட் வெளிச்சத்தில் மிதந்திற்று. ஆவுடைபப்பனுக்கு அருள் வந்து விட்டது. சாமியாடுகிறான். கையை உயர்த்திப் பின்னிக்கொண்டு உடம்பை வில்லாய் முறுக்கிக் காட்டினான். பல் நறநறவென்று நடுங்கிற்று. கூட்டம் அவனைத் தாங்கிப் பிடித்தது. கோவில் பூஜாரி ஓடிவந்து திரு நீற்றினை அள்ளி எடுத்து அவன் நெற்றியில் கோடாய் இழுத்து விட்டார். அவன் நாக்கைக் கடித்துக் கொண்டு – முகத்தை கொடுரமாக்கி – விழியை உருட்டி “டாய்…” என்று உறுமினான்.

“நீ யாரு – யாருன்னு சொல்?”

“டாய்ய்….ய்..”

“தெய்வமே! நீ யாருன்னு சொல்லு. என்ன குத்தம்? உனக்கு என்ன குறை வெச்சோம்? நீ யாருன்னு சொன்னாத்தானே தெரியும்” பூசாரி உடல் பதறிற்று.

“உங்க ஆத்தாடா!”

“மகமாயி!”

ஆவுடையப்பன் துள்ளி நெழித்து – ஆடினான். தரையில் விழுந்து சுருண்டான், கூட்டம் பக்தியுடன் தூக்கி நிமிர்த்தியது.

“என்ன குத்தம் தாயி?”

“என்னடா நாடகம் போடுறீங்க..”

விழாக் கமிட்டியினர் எல்லாம் வந்து கூடினார்கள். தோளில் கிடந்த ஜரிகைத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு மரியாதை காட்டினார்கள். எல்லோருக்கும் மூச்சுத் திணறிற்று. உடல் பதறிற்று.

“மகமாயி! அறிஞ்சும் – அறியாமலும்; தெரிஞ்சும் தெரியாமலும் செய்த சகல குத்தங்களை எல்லாம் பொறுத்து எங்களைக் காத்தருள வேண்டும்…” தலைக்கு மேல் கை உயர்ந்து குவிந்தது.

“என் சன்னதியிலே வந்து… இது என்னடா நாடகம்? நாடகமா போடுறீங்க. கலி முத்திப் போச்சுடா. டாய்…. ம்ஹூம்.” மூச்சு இரைத்தது.

நாடகத்தின் முக்கியஸ்தர் டைரக்டர் பொன்னையா பாகவதர் அங்கவஸ்திரத்தை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஓடி வந்தார். “தாயே! ஏதாவது குத்தம் குறை இருந்தா உன் பிள்ளையை மன்னிச்சிடு. உன் பிள்ளைங்க போட்ட நாடகம். எல்லாம் உன் ஆசிப்படி. தாளம் தப்பியிருந்தாலும், பாவம் மாறியிருந்தாலும், ஆத்தாதான் பொறுத்துக்கணும்”, கட்டைக் குரல் உடைந்து சிதறிற்று.

சாமி மலை ஏறவில்லை . கண் அனலாய் சிவந்து துள்ளிற்று. அரட்டல் அடங்கவில்லை. ஓங்கி ஒலித்தது. பொன்னையா பாகவதர் தெற்றி நிலத்தில்பட விழுந்து வணங்கினார். “மன்னிச்சிட்டேன்னு சொல்லு தாயே…” உடல் பதறிற்று.

சாமி மன்னிக்கவில்லை. மலையேறு தாயே. மலையேறு தாயே என்று கூட்டம் போடுகிற கூச்சல் தான். சாமி ஆங்காரமாய் ஆடிற்று. எல்லோருக்கும் குலை நடுங்கியது. எங்கோ வானம் இடி இடிக்க, எல்லோருடைய முகத்திலும் பிரளய பீதி. ஒவ்வொருவராய் வந்து – ஆவுடையப்பன் காலில் விழுந்து வணங்கினார்கள். கோவில் மணி ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆர்மோனியம் வாசித்தவன், தபேலா ஒலித்தவன், வீணை மீட்டியவள், நாரதராய் வந்தவன், பூசாரியாய் நடித்தவன், தோட்டக்காரன் என்று நாடக ஆட்கள் ஒவ்வொருவராய் வந்து ஆவுடையப்பன் காலில் விழுந்து வணங்கினார்கள்.

“ஹோய்….ஹாய்…உம்…ம்ஹ்ம் …என்னங்கடா நா…டா. ம்ஹ ம் கம்… ” அலறல் ஒடுங்கி விசும்பலாயிற்று. ஆவுடையப்பன் உடம்பு உடம்பாகவே இல்லை. துள்ளித் துடித்துக் கொண்டிருந்தது.

மகமாயி!

மகமாயி!

அந்தக் கதாநாயகன் – முருகக் கடவுள், ஆளுயர மாலையணிந்த அந்த முருகக் கடவுள். எனக்குப் படபடப்பாயிற்று. நான் அவன் முகத்தைப் பார்க்கிறேன். பால் முகம். பட்டை பட்டையாய் விபூதிக் கீற்று. தலையில் பளபளப்பான கிரீடம். தலை உரசும் பூமாலை. ஜிவ்வென்று மணக்கிற பூமாலை. இடது கையில் வேலாயுதம். திரையை விலக்கிக்கொண்டு வேகமாக நடந்து வந்தான். பால் பொங்குகிற வேகம். ஆவுடையப்பன் முன் நின்று கை குவித்து. தலைதாழ்த்தி வணங்கினான். பின்பு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினான். சிரீடம் சிதறி விழுந்திற்று. “குத்தம் குறை இருந்தா மன்னிச்சிடு…. தாயே” அந்த முருகச் கடவுள் ஆவுடையப்பன் காலைப் பிடித்துக்கொண்டது. எனக்கு திக்கென்றது. சூசனும் திடுக்கிட்டாள். ‘என்ன இது?’ என்பது போல் பீதியுடன் என்னைப் பார்த்தாள். எனக்கு என்ன சொல்லுவது என்று ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்லுவது?

– ஜனவரி 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *