உள் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2024
பார்வையிட்டோர்: 280 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

கிராமத்தின் கீழ்க்கோடியில் சமப்படுத்தப்பட்ட ஒரு பொட்டல் மைதானம். அந்தப் ‘பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். நைலக்ஸ் ஸாரிகளும், டைமன் சேலைகளும் ஓரிரண்டு கோடம்பாக்கம் சேலைகளும் கலர் கலராக… பூப்பூவாக டிசைன் டிசைன்னாக.. பலரகமானவர்கள். 

பவுடர் அப்பித் துடைத்துப் பாலீசான முகங்கள்… எண்ணெய் கசிகிற முகங்கள்… 

நிறைய வேட்டிகள்… ஓரிரண்டு கயிலிகள், சட்டைகள். 

எல்லோருமே கழுத்தை எக்கி எக்கி ‘பொழுதுக் காலை’யே பார்த்தனர். 

புழுதிப்படலம் தெரியுதா? பஸ் வருமா? நேரம் தப்பிருச்சே… வருமா, வராமலேயே போயிடுமோ… 

அனைவருக்குள்ளும் உட்கார்ந்து உதைத்துக் கொண்டிருந்த பதைப்பு… காத்திருந்து காத்திருந்து களைத்துப் போய்விட்டவர்களின் முகங்களில் சலிப்பு. 

‘பேரு பெத்த பேரு; தாகத்துக்கு நீலு லேது’ என்பதைப்போல, பெரியதலைவர்பெயரில் பெரிய பேருந்து நிலையப் போர்டு நிற்கிறது. பஸ் என்னவோ… ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணாக வந்து போகுது. அதுவும்… காலை மாலை இரண்டு டயம். 

டிரைவர் லீவ்… கண்டக்டர் இல்லே… பஸ் ரிப்பேர்… ஏதாவது கோவில் திருவிழாவுக்கு ஸ்பெஷல் அடிக்கப் போய்… 

இப்படி ஏதாச்சும் காரணத்தாலே, அந்த ஒரு பஸ்சும் வராமல் போயிடலாம். வந்தால் உண்டு. இல்லேன்னா இல்லைதான். 

ஆத்திர அவசர ஜோலிகளை வைத்துக்கொண்டு காத்துக் கிடந்த ஜனங்கள் ஏலாமைப் பெருமூச்சோடு வேலை கெட்டுப் போன புலம்பலோடு வீடு திரும்ப வேண்டியதுதான்! 

சரி… மணி எட்டாகப் போகுது. ஏழேகாலுக்கே வந்து திரும்ப வேண்டிய பஸ் இன்னும்… வரல்லே… அட, இனிமே வருமா? 

அனைவர் மனசிலும் இதே நமைச்சல். ஆளுக்கொரு அவசர வேலை. அத்யாவசியமான காரியம். உழைப்பதற்கே ஜென்மம் எடுத்திருப்பதாக நினைக்கிற கிராமத்து ஆட்கள், ஆத்திர அவசரம் இல்லேன்னா… லேசுலே கிளம்புவார்களா? பொழுது போக ஊருசுத்துற புத்தியுள்ளவுகளா… பாவம்! 

‘இன்னும் பஸ் வரல்லியே’ என்ற நமைச்சல், நம்ம சண்முகத்துக்கு கூடுதலாக இருந்தது. உச்சபட்ச எரிச்சலில் இருந்தார். பாவம், அவர் அவசரம் அவருக்கு. அவர் மனைவிக்கு இது ஏழாவது கர்ப்பம். நிறை மாசம். மெடிக்கல் செக்கப்புக்கு ராஜபாளையம் போய் வரணும். அதோ முகத்தில் துளிர்த்த வியர்வையோடு கல்லில் உட்கார்ந் திருக்கிற பார்வதி. 

சண்முகம் நல்ல சிவப்பு. முகத்தில் கொஞ்சம் படிப்பு வாசனை, நாலுகாடு போய் வந்த அனுபவம். நாலு விபரம் தெரிந்த மனிதர். ஊர்க் கூட்டத்தில் அவர் சத்தம்தான் ஓங்கிக் கேட்கும் 

பஸ் வராதா என்று மற்ற சராசரிகளைப்போல மௌனமாக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை அவர். சுற்றி நின்றவர்களிடம் கோபத்துடன் அங்கலாய்த்துக் கொண் டிருந்தார். எரிச்சலில் சகட்டுமேனிக்குத் திட்டிக் கொண் டிருந்தார். 

“இந்த டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் எல்லாருக்கும் திமிர் ஏறிப் போச்சு. மாசா மாசம் கை நிறைய சம்பளம் வாங்குறாங்க. கொஞ்சங்கூட பொறுப்புணர்ச்சியே கிடையாது. யாரு செத்தா நமக்கென்னன்னு அக்கறையில்லாம நடந்துக்கிறாங்க…” 

சுற்றி நின்ற சிலர் ‘அதானே’ ‘ஆமாமா’ ‘நெசந்தா’ என்பது போன்ற தலையாட்டல் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு ஆமோதித்துக் கொண்டிருந்தனர். 

அதிலும் சண்முகத்துக்கு எதிரில் நின்ற பெரியவர் முத்தையா ரொம்ப உடன்பாடாக தலையை அசைத்தார். “சம்முகம் சொல்றதுதான், நூத்திலொரு வார்த்தை” என்று இடை இடையே ஒரு பாராட்டையும் போட்டு வைத்தார். 

அப்போதுதான்- 

ஊரின் கீழ்க் கோடியில் கதிரவன் உதயமாகி வருவதைப் போல பஸ்ஸின் உருவம் சன்னஞ் சன்னமாய்த் தெரியத் தொடங்கியது. 

“ஹேய்… பஸ் வந்துருச்சு… பஸ் வந்துருச்சு” சிறுவர் களின் உற்சாகமான ஆனந்தக் கூச்சல் புழுதிப் படலமாக எழுந்து உயர்ந்தது. ‘வராதோ’ என்று துவண்டு கிடந்த எல்லோர் முகத்திலும் பளிச்சிட்ட வெளிச்சங்கள்… கண்களில் உற்சாக மின்னல்கள்… மகிழ்ச்சி நதிகள்… 

வேகமாய் வந்து நின்ற டவுன் பஸ்ஸை புழுதிப் படலம் மறைத்து, விலகி, அடங்கியது. 

முதலில் இறங்கிய கண்டக்டர் விட்டுவிட்டு, விசி லடிக்க, பஸ் பின்னோக்கி ஊர்ந்தது. உச்சகட்ட விசிலடிப்பில், பஸ் முன்னோக்கி வளைந்து, பாய்ந்து, மூச்சடங்கியது. 

அதற்குள். சனங்கள் பஸ்ஸை மொய்த்தனர். ஏறுவதில் போட்டி. இடம் பிடிக்க முந்துகிற முயற்சிகள். ஒருவரை யொருவர் இடித்துக் கொண்டு, திட்டிக் கொண்டு, மிதித்துக் கொண்டு… காட்டுக் கூச்சலாக இருந்தது. 

இறங்க வேண்டியவர்கள் இறங்க விடாமல் ஏறுவோ ரின் அவசரம். அவர்களை இடித்து வெளித்தள்ளிக்கொண்டு இறங்குவோரின் பிரயத்தனங்கள்… 

ஒரே கசகசப்பு… இரைச்சல்… ஒரு சின்ன யுத்தம். 

இறங்கி நின்ற டிரைவரையும், கண்டக்டரையும் சூழ்ந்து கொண்ட ஒரு வாலிபவட்டம், கேள்விகளால் நச்சரித்தனர். 

‘என்ன, இன்னைக்கு லேட்டு?’ என்ற கேள்வியை நிறைய பேர் மாறி மாறிக் கேட்க… 

கூட்டம் ஏகப்பட்ட கூட்டம் ஃபுல்லா ஸ்டாண்டிங், வழிநெடுக ஏகப்பட்ட ஸ்டாப்பிங்ஸ். நின்னு நின்னுவர நேரமாயிடுதுல்லே…?’ என்ற பதிலை டிரைவரும் சலிக்காமல் மாறி மாறிக் கூறினார். 

முன்வாசல் வழியாக பார்வதியைப் பத்திரமாக ஏற்று வதற்குள் சண்முகம் ரொம்பச் சிரமப்பட்டு விட்டார். ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகி விட்டது. அவரும் ஏறிக் கொண்டார். வியர்த்து விறுவிறுத்து விட்டது. அவருக்குள் ரொம்ப கடுகடுப்பு. 

”எறங்குறவங்க எறங்க முடியலே, ஏர்றவங்க ஏற முடியலே. இதையெல்லாம் கன்ட்ரோல் பண்ணாம.. கவனிக்காம, கண்டக்டர் எங்க போயிட்டார்… ச்சே!” என்று உஷ்ணத்துடன் முணுமுணுத்துக் கொண்டார். 

பெரியவர் முத்தையா “என்ன, என்ன சொன்னீர்” என்று கேட்டுக்கொண்டே உட்கார சீட் தேடினார். நல்ல வேளைமுன் பகுதியிலேயே சீட் கிடைத்தது. மனைவியை உட்கார வைத்துக் கொண்டார். முழுவயிறும் சுமையாக இழுக்க, பாவம் பார்வதி மூச்சிரைத்தாள். சண்முகம் நடுவில் உட்கார்ந்தார். முத்தையா அதே சீட்டில், ஓரத்தில். 

கண்டக்டரும் டிரைவரும் பேசிக்கொண்டே ஊருக்குள் சென்றனர். கண்டக்டர் துரிதப்படுத்தினார். “வாங்கண்ணே சீக்கிரம், டயமாகுது” 

“என்னப்பா, டிபன் சாப்பிட வேண்டாமா?” 

“டயமாகுதே… டிரிப் அடிக்க முடியாதே” 

“இப்படயமெடுத்துப் போனா ராஜபாளையம் போய்ச் சேர மணி ஒன்பதரை ஆயிடுமே’ 

”என்ன செய்யறது… அங்க போய்த்தான் டிபனை பார்க்கணும்.” 

“இப்ப மணி எட்டு பத்தாகுது. வயிறு பசிக்குதே” 

”டீயை ஊத்திக்க வேண்டியதுதான்…” 

“நல்ல பொழைப்புதான். சாப்பிடக்கூட நேரமில்லாம்… நாயைவிடக் கேவலமப்பா…” 

டீக்கடைக்குள் நுழைந்தவுடன், கண்டக்டர் கடைக் காரரைத் துரிதப்படுத்தினார். சுற்றி நின்றவர்கள் அந்த காக்கிச் சட்டைகளை அதிசயமாகப் பார்த்தனர். 

டவுன் பஸ்சுக்குள் நல்ல கூட்டம். ஏறுவெய்யில் சுள்ளென்றது. புழுங்கியது. வழிகின்ற வியர்வைப் பெருக்கு அயர்ன் பண்ணிய சட்டைகளை நனைத்து உடம்போடு ஒட்ட வைக்கிறது. 

பார்வதி இருப்புக் கொள்ளாமல், அசைந்து கொண்டு, நெளிந்து கொண்டு, சலனப்பட்டுக் கொண்டேயிருந்தாள். வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். உள்ளுக்குள் குழந்தை நெளிகிற வேதனை உணர்ச்சி. வயிற்றின் வலது மேல் முகப்பில் குழந்தையின் பிஞ்சுக்கால் உதைக்கிற உதைப்பு… அந்த இடத்தில் காலின் உருவ அடையாளம் தெரிந்து மறைகிறது. 

‘வவுறு பெருசாக இருந்தால் பெண் பிள்ளையாக இருக்கும்னு சொல்வாகளே… அப்படியும் இருக்குமோ… ம்க்சூ… எதுவாயிருந்தாலென்ன வவுத்தைவுட்டு கழிஞ்சா… சரி!’ 

அவளுக்கு மூச்சுவிடக்கூட முடியாத திணறல். முகத்தில் வலியை தாங்கிக்கொள்ள முடியாத கோணல்கள். அடிக்கடி அடி உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டாள். சீட்டில் வாகாகச் சாய்ந்து கொண்டாலும், நெளிந்து கொண்டே யிருந்தாள். கல்லெறி பட்டுத்துடிக்கிற பறவையின் வேதனை கண்களில் அப்பியிருந்தது. 

இதையெல்லாம் கவனிக்காமல்… எரிச்சலும் கோபமுமாக முத்தையாவுடன் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தார் சண்முகம். 

சூழ்ந்து சுற்றிய உள்ளூர்க்காரர்களுடன் பேசிக் கொண்டே, சிகரெட்டை அணைத்து விட்டு வண்டியில் ஏறினார், டிரைவர். 

அவரையே கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்த சண்முகம், உணர்ச்சியை மறைக்காமல்… சள்ளென்று சீறினார். 

“வந்ததே லேட்டு. இங்கயும் கால்மணி நேரம் போட்டா எப்படி சார்? அவசர ஜோலிகளுக்குப் போக வேண்டாமா, நாங்க?” 

“மணி ஒம்பதாகுது. டிபன் கூட சாப்பிடலே.ஒரு டீயாச்சும் சாப்பிட வேணாமா? நாங்களும் மனுஷங்க தானே, சார்?” 

“அதுக்கும் ஒரு லிமிட் இல்லே. எவ்வளவு நேரம்தான் லேட்டாகுறது?” 

“அவ்வளவு அர்ஜென்ட்னா டாக்சியிலே போக வேண்டியது தானே. காருக்கு எதுக்கு வாரீக…? எங்க உசுரை வாங்கவா?” 

“நாங்க காருக்கு வரலேன்னா ஆயிரம் ஆயிரமாசம்பளம் யார்கிட்டே வாங்குவீ௧?” 

“ஆமா! ஊர் பூராவுக்கும் இவருதான் படியளக்கிறவரு. நீங்க வரவும் வேணாம், சம்பளம் தரவும் வேணாம். பேசாம இருங்க சார்.” 

“பேசாம இருக்கவா? நானா? என்னைப் பேச வேண்டாம்னு சொல்ல, நீ யாரு? ஆஃப்ட்ரால் ஒரு டிரைவர். நீயா, என் வாயை மூடுறது?” 

“சொல்லிட்டேன்… மரியாதையா பேசணும். வார்த்தை தடிச்சா… அப்புறம், நாறிப் போகும். ஆமா, இப்ப என்னய்யா செய்யணும், ஒனக்கு? ரொம்ப முறுக்குறீயே… என்னமோ பெரிய இவரு கணக்கா…” 

வார்த்தைகள் தடித்து, உணர்ச்சிகளில் உஷ்ணம் ஏற, சத்தம் உயர்ந்து, சண்டையாக வந்து முடிய… 

பஸ் முழுவதும் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தது. கண்டக்டர் அவசரமாக முன்பக்கம் ஓடிவந்தார். 

“என்ன இங்ககசகசப்பு. வார்த்தையை நிறுத்துங்க. வீண் சண்டை எதுக்கு? நீங்க சும்மா இருங்க சார்… அண்ணே, நீங்க ‘கம்’முன்னு வண்டி எடுங்க…” 

‘என்ன செய்யணும்’ என்ற வழி அனைவருக்கும் தெரிந்து விட்டது, கண்டக்டரைப் பின்தொடர்ந்து, சண்முகத்தை யும் டிரைவரையும் கண்டித்து, சமாதானப்படுத்துகிற சத்தங்கள். 

பார்வதி உள்ளுக்குள் பயந்தாள். பதைத்தாள். புரு ஷனைப் பேசாமலிருக்கச் சொல்ல நினைத்தாலும், ஆயாசத் தில் கண்களை மூடிக் கொண்டாள். 

கோபத்தின் கடுகடுப்போடு டிரைவர் வண்டிக்கு உயிரூட்டினார். காற்று உள்ளுக்குள் வந்தது. புழுக்கமும் நசநசப்பும் ஒரு இனிய சுகமாக மாறியது. சண்முகத்திற்குள் மட்டும் ஒரு கொதிப்பு. 

‘இந்த மீசைக்காரன் எம்புட்டு திமிரா பேசிட்டான்? அடிக்கவர்ரவன் மாதிரி அரட்டுறானே… ஊர்ப்பயகளும் அவங்கூட சேர்ந்துக்கிட்டு, என்னை சத்தம் போடுறானுகளே… எம்புட்டு கேவலமாப் போச்சு’ 

அடிபட்டு வெகுண்ட நாயாக கண்டக்டரைப் பார்த்தார். பார்வையில் பகைமை அனல் பறந்தது. கண்டக்டர் பின்பக்கத்தில் டிக்கட் கொடுப்பதில் கவனமாயிருந்தார். அடுத்த ஸ்டாப் வருவதற்குள் டிக்கட் கொடுத்து முடிக்கணும். 

அந்த டவுன் பஸ். கிழக்காக ஓடியது. எலும்பு தெரிய மெலிந்து கிழட்டு நோயாளியாக குற்றுயிராக கிடந்த மெட்டல் ரோட்டில் பஸ் குதியாட்டம் போட்டுக் கொண்டே சீறிப் பாய்ந்தது. 

“டிக்கட்… டிக்கட்… டிக்கட் எடுங்க சார்…” 

“சில்லரையா குடுங்க. நோட்டாக நீட்டுனா நா சில்லரைக்கு எங்க போக? 20 பைசா இருந்தா குடுங்க. 4 ரூபாயாதர்ரேன்” 

“ஏம்மா, குழந்தையை வச்சுக்கிட்டு நிக்கிறீக! தம்பி, தள்ளியிரு. எம்மா இங்க உக்காருங்க. டிக்கட், டிக்கட்…” 

ஒரு யந்திரச் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார் கண்டக்டர். 

பார்வதி, வதைத்தெடுக்கிற அயற்சியிலும், சோர்விலும் கணவனுக்காகவும் அழுது கசிந்தாள். 

ஆலங்குளத்தைத் தாண்டும்போது பஸ் நிரம்பி வழிந்தது. காற்று நிற்கக்கூட முடியாமல் மனித அடைசல். சதையும் எலும்புமாக குழைக்கப்பட்டு மனிதர்களைகிட்டித்து விட்டதைபோல, பஸ் திணறியது. 

அவமதிக்கப்பட்டு, புண்பட்டுப்போன உள் மனக் காயங்களின் வேதனையோடு சண்முகம் உள்ளுக்குள் முணங்கிக் கொண்டிருந்தார். புழுக்கமும் நசநசப்பும் வேறு இச்சிலாத்திப் படுத்தியது. 

“ஆடுகளை அடைச்சமாதிரி ஆளுகளை ஏத்துறீகளே, இது என்ன நியாயம் சார்?” 

“என்னசார் செய்றது? ஏறிக்கிட்ட நீங்க, ஏத்தாதீங்கிறீக. காத்துக்கிட்டிருக்கிற பயணிகள், ‘கையை காட்டுனா நிக்காம போறானே’ன்னு எங்களைத் திட்டுவாங்க. நாங்க யாருக்குப் பதில் சொல்றது சார்? ஜனங்களோட தேவைக்கேத்தாப்புல கூடுதலா பஸ்விட வேண்டிய கவர்மென்ட்டை எதித்து ஒரு வார்த்தைக்கூடப் பேசமாட்டீக. உங்களுக்கு இளைச்சவங்க நாங்கதான்; எங்களைத் திட்டித் தீத்துக்கிடுறீங்க… இது என்ன சார் நியாயம்? நாலு வண்டிகளை ஓட்ட வேண்டிய ரூட்லே ஒரு வண்டியை ஓட்டுற சர்க்கார், உங்களையும் எங்களையும் கீரியும் பாம்புமா ஆக்கி, வேடிக்கை பாக்குது சார்” 

கண்டக்டரின் சொற்கள் சண்முகத்திற்குள் நெருஞ்சி முட்களாக விழுந்து சிக்கிக் கொண்டன. நினைவு இழைகள் முடிச்சு விழுந்து திகைத்து நின்றன. அவருள் திரண்ட மழை மேகங்கள், தென்றலுக்காகக் காத்திருந்தன. வெக்கை மிகவும் அடங்கியிருந்தது. 

ஆயாசத்திலும் அயற்சியிலும் கண்களை மூடிக்கிடந்த பார்வதி, கொடிய வலியை தாங்க முடியாமல் “ஹ் ஹா” என்று கீச்சிட்டாள். அந்த அலறலில் பதறிப்போன சண்முகம் திரும்பிப் பார்த்தார். 

அடிவயிற்றை தாங்கிப் பிடித்துக் கொண்டு வேதனை யில் கத்தினாள். முகமெல்லாம் பொடிப் பொடியாய் வியர்வை. அடி உதட்டை ரத்தம் வரக் கடித்தாள். முகம் கோணிக்கொண்டே போனது. கால்கள் சீட்டுக்கடியில் விறைத்துக் கொண்டு, நீண்டு அகல விரிந்துகொண்டு… 

சண்முகம் ஆடிக்குலுங்கிப் போனார். அடிவயிற்றில் ஏதோ புரண்டது. பயத்தில் உறைந்து கொண்டிருந்தார். 

“ஐயய்யோ… பிரசவவலியா? பஸ்ஸுக்குள்ளேயா? அடப் பாதரவே, நடுக்காட்டுலே… ஓடுற பஸ்லே… என்ன செய்ய முடியும்?” 

பின்சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் பார்வதியின் துடிப்பை கவனித்து விட்டனர். பதறிப் பதைத்து எழுந்தனர். 

“வாங்கய்யா இங்கிட்டு, அட, விலகுங்கய்யா! பெண்கள் சண்முகத்தையும், முத்தையாவையும் அதட்டி அப்புறப்படுத்தினர். பரபரப்பாகச் செயல்பட்டனர். 

”ஐயய்யோ… மறைப்புக்கு ஒரு சீலையாச்சும் வேணுமே. யார்கிட்டேயாச்சும் இருக்கா?” 

“முத்தம்மா, நீ தலையை தாங்கிப் பிடிச்சுக்கோ.ஏய் தாய், இங்கவா. காலு ரெண்டையும் தூக்கி சீட்லே போடு… மெல்ல மெல்ல… பாத்து… பாத்து” 

உத்தரவுகள் பறந்தன. பஸ்ஸுக்குள் பரபரப்பும் பதைப்பும் உச்சகட்டத்தை எட்டியது. ஒருத்தி பாலியஸ்டர் சேலையை அவசரமாக எடுத்துத் தந்தாள். பார்வதி படுத்திருந்த சீட்டைச் சுற்றிச் சேலையைப் பிரித்து இரண்டு பெண்கள் பிடித்துக் கொள்ள மூன்று பெண்களும் மறைப்புக்குள் நின்று பார்வதிக்கு ஆறுதல் சொல்லி, யோசனைகள் கூறி, வாய்த்த கைப்பக்குவம் செய்தனர். 

பஸ் முழுவதும் ஒரே உணர்ச்சி மயம். ஒருத்தர் உத்தரவுக்கு ஓடுவதற்கு நூறு பேர் முந்தினர். ஒவ்வொருத்தரும் ஏதாவதும் செய்ய வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தனர். காற்றுக் கூட நிற்க முடியாத அந்த பஸ் முழுவதும் மனிதாபிமானம் விஸ்வரூபமாக எழுந்து நின்றது. 

சண்முகத்திற்கு முகம் கறுத்துவிட்டது. அவமானமும் லஜ்ஜையும் உயிரைப் பிடுங்கித் தின்றது. ஓரிரு நிமிஷத்திற்குள் பரிதாபத்திற்குரிய இழிபிராணியாக தாழ்ந்து நிற்கிற அவலம் அவருக்குள் அறுத்தது. அலைக்கழித்தது. அழக்கூடத் தோன்றாத ஸ்தம்பிப்பில் உறைந்து நின்றார். 

‘அட… இதென்ன கொடுமை…? இப்படியாகிப் போச்சு’ போக்கிடமறியாத குருட்டு ஈயாக மனம் அலை மோதி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. 

‘அர்ஜெண்டா ஆஸ்பத்திரி போய்ச் சேரணுமே. நம்ம அவசரத்துக்கு பஸ் போகுமா? இடையிலே எத்தனைஸ்டாப்? இன்னும் ஏழு மைல்லாச்சும் இருக்குமே… ஏறியிருக்கிற ஆளுகளை இறக்கி விடுவதற்காவது ஸ்டாப்புகளிலே நின்னா கனுமே. நின்னு நின்னு போனா… அரைமணி நேரமாவது ஆயிடுமே. அதுக்குள்ள பார்வதிக்கு என்ன ஆகுமோ’ 

மனசு மருகித் தவித்தது. கண்ணுக்குள் உறுத்தல். கண்களின் ஓரங்களில் நீர்ப் பிசுபிசுப்பு. சிறகொடிந்த பறவையாகத் துடித்த மனசோடு, ஏக்கமும், சோகமுமாய் பார்வையால் அலைந்தார். அனைவர் கண்களிலும் திகில்… பயம்… அனுதாப உணர்வுகள்… 

‘பார்வதிக்கு என்ன ஆகுமோ’ என்ற சிந்தனை குலை நடுங்க வைத்தது. சர்வாங்கமும் பயத்தில் நடுங்கி ஒடுங்கியது. 

“முகம் முறிச்சு சண்டை போட்ட டிரைவர்கிட்டே, எந்த முகத்தோட எப்படிச் சொல்றது? என்ன கேட்பது?” 

மனசு பலதையும் எண்ணி மருகியது. தவித்தது. பலமெல்லாம் வடிந்துவிட்டதைப் போல… மருட்சியும் சோகமும் அவரை மௌனத்தில் புதைக்க… செய்வதறியாமல் திகைத்து நின்ற போது 

கண்டக்டரின் சத்தம் ஓங்கி ஒலித்தது: 

“பிளீஸ்… எல்லோரும் இந்த ரெண்டு சீட்டை விட்டுட்டு பின்னுக்குப் போங்க… போங்க சார்… ஏய் தம்பி. போப்பா அங்குட்டு” 

அவரையும் மீறிக்கொண்டு பஸ்ஸுக்குள் மனிதர்களின் கூச்சல்… புலம்பல்… அனுதாப வார்த்தைகள்… 

“டிரைவரண்ணே, இப்ப என்ன செய்றது? ஏதாச்சும் செய்யணுமே?” 

“அதுதான் நானும் யோசிக்கிறேன்” என்ற டிரைவர், சட்டென்று சொன்னார்: ”இடையிலே இறங்க வேண்டிய வங்களை திரும்பி வரும்போது எறக்கி விட்டிடுவோம். எந்த ஸ்டாப்புலேயும் நிக்காம, ‘சல்லு’ ‘ண்ணு வண்டியை அழுத்தி, நேரா ஆஸ்பிட்டலுக்கு விட்டிடுவோமா?” 

“விடுங்க. சீக்கிரமாவிடுங்க. எவ்வளவு ஹைஸ்பீடுலே போக முடியுமோ… அழுத்திருங்க… நேரா ஆஸ்பத்திரிக்குள்ளேயே விட்டிடுங்க” 

“ரூட்டைவிட்டு விலகிப் போனா… நிர்வாகம் மெமோ குடுப்பாங்கப்பா” 

“குடுக்கட்டும் குடுக்கட்டும் அதையெல்லாம் பார்த்தா, ஒண்ணும் நடக்காது” 

பஸ் எங்கும் நிற்காமல் விரைந்தது. 

முகத்திலும் கழுத்திலும் வழிகிற வியர்வையைக் கூட துடைத்துக் கொள்ளாமல், டிரைவர்ஸ்டீயரிங்கை சுழற்றினார். 

கண்டக்டர் டிக்கட் கட்டுகளையெல்லாம் பைக்குள் போட்டுவிட்டு, சிறுவர்களைப் பின்னுக்குத் துரத்தினார். மற்றவர்களை அதட்டி உட்காரச் சொன்னார். 

சேலை மறைப்புக்குள் பார்வதி துடித்துக் கொண்டும், அலறிக் கொண்டும், அவளைச் சுற்றி மூன்று பெண்கள் வியர்வை வழியப் பராமரித்துக் கொண்டும்…

பார்வதி அலறும் போதெல்லாம் சண்முகத்தின் உயிர்ப் பறவை துடித்தழுதது. அவரை எதிர்பார்க்காமல், காரியங்கள் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த ஏழாவது நிமிஷத்தில்- 

அனைத்துச் சட்ட விதிகளையும் அலட்சியப்படுத்தி விட்டு, அந்த டவுன் பஸ் அரசு மருத்துவமனைக்குள் பாய்ந்து வட்ட வடிவமாக வளைந்து, வாசலோரத்தில் குலுங்கி நிற்க… 

மருத்துவமனையே அதிர்ந்து குலுங்கி ஓடிவர… 

டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினார். ஆறாகப் பெருக்கெடுத்தோடிய வியர்வையைக் கழுத்துத் துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டார். கண்டக்டர், அவசரமாக இறங்கினார். திகைத்து நின்ற நர்ஸுகளிடம் “ஸ்ட்ரெட்சர் கொண்டு வாங்க, சீக்கிரம் டெலிவரிகேஸ்” என்று கத்தினார். அந்த அதட்டலில் வேலைகளுக்குச் சிறகு முளைத்து, வினாடி வேகத்தில் பறந்தது. பார்வதி, ஆஸ்பத்திரிக்குள் கொண்டு செல்லப்பட்டாள். 

அவரவரின் ‘அவசர வேலை’களையெல்லாம் மறந்து அனைவரும் வராண்டாவில் திகைத்து நின்றனர், மனிதர்களாக! 

டிரைவரும் கண்டக்டரும் ஆசுவாசப் பெருமூச்சுடன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் களிதுள்ளப் பார்த்துக் கொண்டனர். 

டிரைவர் மீசையை நீவிக்கொண்டே மகிழ்ச்சியுடன், “எப்படியோ… நல்லபடியா கொண்டு வந்து சேர்த்தாச்சப்பா…” 

“ஆமண்ணே, இப்பத்தான் எனக்கு மூச்சே விட முடியுது” மனசுக்குள் பொங்கிப் பிரவகித்த திருப்தி. சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்க ஒருவரையொருவர்குதூகலப் பார்வையால் தழுவிக் கொண்டனர். அந்தப் பார்வையில் மானுடம் ஜெகஜோதியாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. 

முகம் கறுத்து, செய்வதறியாமல் கைபிசைந்து நின்ற சண்முகத்திடம் வந்தனர். “நீங்க ஆஸ்பிட்டலுக்குள்ளே போய், ஆக வேண்டியதைப் பாருங்க. நல்லபடியாக பாத்துக் கோங்க” 

சண்முகம் தலையாட்டினார். கண்களில் கண்ணீரோடு சேர்ந்து கொண்டு, ‘எதை எதையோ’ நினைத்துக் கொண்ட ஏதேதோ உணர்ச்சிகள் திமிறிக் கொண்டு ததும்ப…… 

“பரவாலே… ஒண்ணும் மனசுலே வச்சுக்காதீக. அங்க போய் கவனிங்க” என்ற டிரைவர், சண்முகத்தின் கையைப் பற்றிப் பரிவோடு அழுத்தினார். ஆயிரம் விஷயங்களைப் பேசி முடித்துவிட்ட அந்த அழுத்தலோடு, வண்டியில் ஏறினார். 

“வண்டிக்கு வர்ரவங்க… வாங்க. க்விக்”, என்று சத்தம் கொடுத்த கண்டக்டர் வண்டியில் ஏறிக் கொள்ள… 

வராண்டாவிலும், மரநிழல்களிலும் அன்பின் வடிவங்களாக – மனித உன்னதங்களாக – நின்று கொண்டிருந்த அத்தனைபேரும் அவசர அவசரமாய் ஓடி வந்தனர். ஏக காலத்தில் ஏற முயன்று – ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு, திட்டிக் கொண்டு, ஈரமில்லாமல் மிதித்துக் கொண்டு… 

எல்லாருக்கும் இடம் பிடிக்கிற அவசரம்… ஆத்திரம்… 

சிறுவர்களைக் கசக்கிக் கொண்டு குழந்தைகளைக் கசக்கிக் கொண்டு நடந்த இந்த யுத்தத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் விஷய ஞானமுள்ள கண்டக்டர். மெல்லிய வியப்பு அவருள் படர்ந்தது. 

“இந்நேரவரை இங்கிருந்த மனுஷங்க எல்லாம் என்ன மாயமாய் மறைஞ்சுட்டாங்க! அதுக்குள்ளே மாறிட்டாங்களே… சமூகப்பிராணிகளாக, சண்டைப் பிரஜைகளாக!”

பஸ்ஸுக்குள் மறுபடியும் வெக்கை. 

– செம்மலர் – ஜூலை, 1985.

– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *