உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 652 
 
 

அன்றிரவு பத்து மணி. பாரதியார் நாடக அரங்கு. நாடகம் முடிந்து பார்வையாளர்கள்  அனைவரும் கலைந்து சென்ற பின்னர், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கனமான உடல்வாகு கொண்ட அழகிய இளம்பெண் கண்ணம்மா, அரங்கின் வாசலை நோக்கிப் போகாமல் நாடகம் நடந்த மேடைக்கு வந்தாள். போடப்பட்டிருந்த திரையை விலக்கி உள்ளே சென்றாள்.

அங்கே நாடக ஏற்பாடுகளை மேற்கொண்ட தீபக் என்ற ஒல்லியான இளைஞன் ,  நாற்காலியில் அமரந்து கொண்டு நோட்டுப் புத்தகத்தில்

கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். அவனருகில் வாட்டசாட்டமான வயதான ஒருவர் ஜிப்பா வேட்டி அணிந்து மற்றொரு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவர் தான் நடைபெற்ற மேடை நாடக்கத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சோழ நிலத்தோன். தீபக், கணக்கு எழுதுவதிலிருந்து விடுபட்டு கண்ணம்மா வந்திருப்பதைப் பார்த்தான்.

தீபக் பேசினான் –

‘வாங்க மேம், சார்! இவங்க யார் தெரியுமா நம்ம ஏரியாவுல ரெண்டு மூணு பிசினஸ்ல கொடி கட்டிப் பறக்கறாரே இளம் தொழிலதிபர் ஆதவன் அவரோட பாசம் மிகு தங்கை கண்ணம்மா மேம். சரி பேரை சொல்லாம அறிமுகம் செய்ய முடியாதே சார், இவங்க நம்ம கதாநாயகன் செல்வாவோட…‘ என்றான்.  ‘உட்காருங்க மேம்’ என்று தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான். கண்ணம்மா நின்று கொண்டே இருந்தாள்.

சோழ நிலத்தோன் பேசினார் .- ‘பராவாயில்லையே நம்ம நாடகத்தைப் பாராட்ட மேடை ஏறி வந்து இருக்காங்களே… ‘

அதை கவனிக்காத மாதிரி இருந்த கண்ண்ணம்மா தீபக்கைப்  பார்த்துக் கேட்டாள் – ‘யோவ் – எங்கேய்யா அவரு ? ‘

‘யோவ்வா.. செல்வாவை கேட்கறீங்களா..அவரு இங்க தான் இருந்தாரு..எங்க போனாருன்னு தெரியல..‘ என்ற தீபக் , கண்ணம்மா முகத்தில் கோபக் குறி இருப்பதைப் பார்த்தான்.

‘என்னை பார்த்து நான் அடிப்பேன்னு ஓடி இருப்பாரு..’ என்றாள் கண்ணம்மா.

தீபக் சொன்னான் – ‘காதலிச்சா அடி உதை எல்லாம் வாங்கணுமா..நல்ல வேளை நான் காதல் வலையில விழலை..‘

‘இது என்னய்யா இருக்கற வேலை எல்லாம் விட்டுட்டு நாடகத்தில இறங்கிட்டாரு…‘ கேட்டாள் கண்ணம்மா .

‘அது நண்பர்  நாடக கலை சேவை செய்யணும்னு எல்லாம் வரலை. சார் தான் இந்த கேள்விக்கு பதில் சொல்லணும் சார் சொல்லுங்க..‘ என்றான் தீபக்.

‘என்னப்பா என்னை கோத்து விடறே’ என்ற சோழ நிலத்தோன் கண்ணம்மாவைப் பார்த்துப் பேசினார் – ‘மேம் ஒங்க அண்ணன் கிட்ட செல்வ நாராயணன், ஒங்கள பொண்ணு கேட்டு போயிருக்காரு..அப்ப அவரு நான் கஷ்டப்பட்டு ராப்பகலா உழைச்சு என் அந்தஸ்தை சின்ன வயசுலேயே உயர்த்திக்கிட்டேன்.. சொத்து எல்லாம் சேர்த்து இருக்கேன். நீ பத்து வருசமா நின்ன இடத்துலய  நிக்கறே.. பணத்துக்குப் பின்னாடி போகாமல், பெட்டிக் கடை மாதிரி சின்ன பிசினஸ் பண்ணி காலத்தை ஓட்டிகிட்டு இருக்கே.. உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும் ன்னு பேசிட்டாரு ..  அதுல ரொம்ப நொந்து போய் இருந்தாரு..நான்தான் ஒரு மாற்றம் இருக்கட்டும்னு நாடக மேடைக்கு அழைச்சு வந்தேன்’

கண்ணம்மா அவரை முறைத்துப் பார்த்தாள்.. ‘மண்ணாங்கட்டி..எங்க அண்ணன் அப்படி சொல்லிட்டா..அதையே சவாலா எடுத்துகிட்டு பேய் மாதிரி வேலை செஞ்சு அவர் அளவுக்கு உயர்ந்து காட்டணும்..அதை விட்டுட்டு பைசா பிரயோசனம் இல்லாத இந்த வேலை என்ன வேலை..‘

‘மேம்.. ஒரு டைவர்சனுக்காக..‘

‘என்னங்க பொல்லாத டைவர்ஷன்..ஒருத்தர் அவமானப்படுத்தற மாதிரி சொல் சொல்லிட்டா..உன்னை விட பெரிய ஆளா ஆகி காட்றேன்னு கர்ஜிக்கணும்..‘

‘அண்ணாமலை படத்துல வரா மாதிரி  கேலண்டர்ல குறிச்சு வெச்சுக்கன்னு பேசணுமா?‘

‘ஆமாம் அப்படித்தான்..‘

‘இல்லம்மா..கவிஞர்கள் பாடி இருக்காங்களே எல்லா மழைத் துளியும் முத்தாகாதுன்னு…‘

‘ஏன் திருவள்ளுவர் சொல்லி இருக்காரே..வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு..அதெல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வராதா.. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..தெரியாதா..’

‘நீங்க நல்லா ஞாபகம் வெச்சு இருக்கீங்க .. ‘

‘என்னது’

‘இல்லீங்க மேம்.. நீங்க படிச்சதை நல்லா நினைவுல இருத்தி வெச்சு இருக்கீங்க .. ‘

‘பெரிய மனுசனா நீங்க ஒங்க கிட்ட பழகற இளைஞர்கள் கிட்ட இதெல்லாம் தானே எடுத்துச் சொல்லணும்..நல்லா சம்பாதிச்ச அப்புறம் மேடை  நாடகத்துக்காக என்ன வேணா செய்யட்டும், மேடை நாடகங்களை காட்ற யூட்யூப் சேனல்  நடத்தட்டும், ரொம்ப நல்லா வசதி வாய்ப்பு வந்துட்டா, ஜீ குரூப் ஜீ தியேட்டர்ன்னு மேடை நாடகத்துக்காக டிவி சேனல் நடத்தாறாங்களே, அது போல நடத்தட்டும். யார் கேட்கப் போறாங்க தடுக்கப் போறாங்க..‘

‘ஒங்க கற்பனை கேட்கறதுக்கு நல்லா இருக்கு..காதுக்கு இனிமையா இருக்கு’

‘இப்படித்தான் கனவு இருக்கணும்.. ஒங்க இளம் நண்பரை நீங்க நல்வழிப்படுத்தி அவரோட பொருளாதாரத்தை உயர்த்திக்க வைக்கணும் நீங்க..ஒங்களுக்கு ரெண்டு மாசம் அவகாசம் தரேன்… ‘

‘இது என்ன சூ மந்திரக் காளி மாதிரி மந்திரம் போட்டு மாத்திட முடியுமா?‘

‘நீங்க தானே இந்தப் பக்கம் இழுத்துட்டு வந்தீங்க.. நீங்க தான் அவரை பிசினஸ்ல தீயா வேலை செய்ய மோட்டிவேட் பண்ணனும்.. இல்லேன்னா..‘ என்று நிறுத்தினாள்.

‘இல்லேன்னா என்ன .. அதையும் சொல்லிடுங்க மேம் ‘ என்றான் தீபக்.

‘தீபக் இவருக்கு இத்தனை வயசாகியும் வாழ்க்கையில கல்யாணம் ன்னு நடத்திருக்காதே…‘ கேட்டாள் கண்ணம்மா. தீபக் பதில் சொன்னான் – ‘ஆமாம் மேம் எனக்கு காதல் கொடுப்பினை இல்லாத மாதிரி இவருக்கு திருமண பாக்கியம் இல்ல.. வயசும் வாழ்க்கையும் கரைந்து போச்சு தலையும் வெள்ளையா ஆயிடுச்சு..பாவம்’.

சோழ நிலத்தோன் அவனை முறைத்துப் பார்த்தார்.

‘சார் நான் சொன்ன காலக் கெடுவுக்குள்ளே நீங்க செல்வாவை மாத்தலைன்னா … ‘ என்றாள் கண்ணம்மா .

‘அதை சொல்லுங்க இவன்தான் ஆர்வமா இருக்கானே.. ‘கேட்டார் சோழ நிலத்தோன் .

‘வயசு வித்தியாசத்தை  எல்லாம் பார்க்காம நான் ஒங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒங்க  வீட்ல வந்து உட்கார்ந்துடுவேன்’ என்றாள் கண்ணம்மா .

‘அய்யிய்யோ’ என்று அலறிய சோழ நிலத்தோன், ‘நீங்க அந்த மாதிரி விபரீத முடிவு எல்லாம் நெனச்சுக் கூட பார்க்காதீங்க.. நான் அவர்கிட்ட பேசி மோட்டிவேட் பண்ணி முன்னேற்றம் காண தூண்டி விடறேன்..‘ என்றார்.

‘நான் என்ன முடிவு எடுக்கணும்ங்கறது ஒங்க கையில தான் இருக்கு’ என்று கூறி விட்டு கண்ணம்மா, திரையை விலக்கி மேடையை விட்டு இறங்கிச் சென்றாள்.

குறிப்பு – சவால் என்பதை  அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Print Friendly, PDF & Email
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *