உல்லாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 973 
 
 

கனடாவின் கிழக்குக் கரையோர சுற்றுலாவாக பிரின்ஸ் எட்வேட் தீவு வரை கோடை காலத்தில் சென்று திரும்புவது ரொரன்ரோ தமிழரின் வாழ் நாள் விருப்பங்களில் ஒன்று.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நேற்றுப் போல் இருக்கின்றது என்பார்கள் ஒரு முறை அங்கு சென்று வந்த தமிழர்கள்.

இன்றும் அப்படித்தான்.

உல்லாசம் விரும்பும் ஐம்பது தமிழ் பயணிகளுடன் விரைந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸின் உள்ளே ஒரே கூத்தும் கும்மாளமும்.

கவிதைகள், கதைகள், சினிமாப் பாடல்கள், தேவாரங்கள், பழமொழிகள், துணுக்குகள், புதிர்கள் என மாறி மாறிச் செல்வதற்காக ஒலிவாங்கி முதலாம் இலக்க இருக்கையில் இருந்தவரிடம் நீட்டப்பட்டது.

“இப்பொழுதெல்லாம் பிரின்ஸ் எட்வேட் தீவு என்றதும் சார்லட்டவுன் என்ற அதன் பிரதான நகரமோ அல்லது 9 மைல்களுக்கு கடலின் மேலாக மிக நீண்டதாக உள்ள பிரசித்தி பெற்ற கூட்டமைப்பு பாலமோ அல்லது அதிகளவில் விளையும் உருளைக்கிழங்கோ அல்லது பிடிக்கப்படும் மக்ரல் மீன்களோ தமிழருக்கு நினைவில் வருவதற்கு முன்பாக தமிழ் சான்றோன் ஜி.யு.போப் நினைவில் வருவார். பெடெக் என்ற அவர் பிறந்த கிராமமும் தமிழரால் அங்கு நிறுவப்பட்ட அவரது சிலையும் நினைவில் வரும்” என்றார் அவர்.

“திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவை அவரால் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் பெற்றன. புறநானூறு, திருவருட்பயன், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களை பதிப்பித்தார். தமது கல்லறை மீது தமிழ் மாணவன் இங்கு உறங்குகின்றான் என்ற வாசகம் வரவிரும்பினார். 1820ல் பிறந்தார் 1908ல் மறைந்தார்” என்றார் அவரின் அயலிலிருந்தவர்.

“இங்கிலாந்து திருச்சபையின் கிறிஸதவ சமயப் போதகராக 40 வருடங்கள் தமிழ் நாட்டில் சேவகம் புரிந்தார். ஆனால் அவர் பிறந்த இதே பிரின்ஸ் எட்வேட் தீவில் உள்ள கோன்வால் நகரில் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து முதலாவது இந்து ஆலயம் அருள்பாலிக்கின்றது” என்றார் அவரோடிருந்தவர்.

கரகோஷத்தில் குலுங்கியது சொகுசு பஸ்.

“பிரின்ஸ் எட்வேட் தீவு கனடாவின் ஆகச்சிறிய மாகாணம். சிவப்பு நிற பாறைகளும் அதனை ஒட்டிய மணற்பாங்கான கடற்கரைகளும் பேரழகு. பென்னம் பெரிய சிங்க றால்கள் சிப்பிகள் அங்கு எராளம். கனடாவின் உணவுத்தீவு என்றும் அது அழைக்கப்படும்.” என்றார்இலங்கையில் புவியியல் ஆசிரியராயிருந்தவர்.

“நாங்கள் செல்லும் இடம் ஜி.யு.போப் பிறந்த இடம் என்று சொல்கின்றார்கள். அவர் பிரபலமானவர்தான். அவரை எனக்கு அங்கு தெரியாது என்பது கசப்பான உண்மை. ஆனால் இங்கு வந்த பின்பும் தெரியாது என்பது அதைவிடக் கசப்பான உண்மை. இதற்காக எல்லோரும் ஒரு முறை எழுந்து நின்று கை தட்டலாமேஎனது பேச்சு பத்து நிமிடத்துக்குத்தான். அதற்குள் ஆகக் குறைந்தது ஒன்பது தடவைகளாவது உங்களை எழுத்தி இருத்தாமல் நான் ஒலிவாங்கியை கையளிக்கப் போவதில்லை என்பது உண்மை. நீங்கள் விரும்பினால் இதற்கும் எழுந்து நின்று ஒரு முறை கை தட்டலாம்.” என்றது ஒன்று.

“சொந்தக் கதைகளுக்கோ சோகக்கதைகளுக்கோ இங்கு அனுமதி இல்லை. கியூபெக், நியூபிரன்ஸ்விக், நோவாஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேட் தீவு ஆகிய மாகாணங்களுக்கான ஏழு இரவுகளையும் எட்டுப் பகல்களையும் உள்ளடக்கிய பயணம் இது” என்றவாறே ஒலிவாங்கியை பிடுங்கி அவரை தொடரவிடாமல் முடித்து வைத்த ஒருவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு “ஆறறிவில் ஓரறிவு அவுட்டு. இருக்கும் ஐந்தறிவும் நிலைக்கும் என்றால் அதுவும் கூட டவுட்டு” என பாட பஸ் ஆரவாரிக்க தயாராகவிருக்கும் அடுத்தவரைத் தேடியது ஒலிவாங்கி.

“பெருவாரியாக தமிழ்ச்சனம் முதன் முதல் கரை ஒதுங்கியது அங்கு தானே” என்றது பின் வரிசைப் பிரமுகர் ஒருவரின் குரல்.

“அங்கில்லை. 1986 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 155 பேர் கனடா கடற்பரப்பில் தவிக்க விடப்பட பிரையன் மல்ரோனியின் அரசின் அனுமதியால் நியு பவுண்ட்லாந்தில் கரை சேர்ந்தனர்” என விபரமறிந்தவர் விளக்கமளித்தார்.

“என்னப்பனே என்னையனே” “மலரே மௌனமா” “எல்லாம் ஜேசுவே” “அடி வெள்ளைக்கார வேலாயி” எனத் தனியார் பாடல்களும் பாட்டுக்குப்பாட்டும் நேயர் விருப்பமும் அமர்க்களப்பட போட்டி நிகழ்ச்சி அவற்றுடன் போட்டி போட்டது.

“எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை இலகுவாக நினைவில் வைப்பது எப்படி” என்ற முதலாவது கேள்விக்கு “வேறு என்ன. எட்டு எட்டாக நாலு எட்டு (8848) அடி வைப்பதுதான்” என்பது பதிலானது.

அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக் சமுத்திரத்துடன் இணைக்கும்மிக நீண்ட நதி எதுஎன்ற அடுத்த கேள்விக்கு “ஒன்டாரியோ கியூபெக் நியூபிரன்ஸ்விக் மா நிலங்களில் பல தடவை எம்மைக் கடந்து பெருக்கெடுத்து ஓடும் செயின்ட் லோரன்ஸ் நதி” என்ற பதில் பலரிடமிருந்து பிரவாகித்தது.

“நியூபிரன்ஸ்விக் மா நில கடலில் திமிங்கலங்கள் உங்களை வரவேற்கும். 12 அடிக்கும் மேலாக எழும்பும் கடலலைகள் பயம் காட்டும். பன்டே வளை குடாவில் 8 அடி உயரமான நீர் தினமும் இரு தடவைகள் பின் வாங்கித் தரை காட்டும். அப்பொழுது கடலின் அடியில் சிறிது நடப்பதை விரும்புபவர் பலர். மாங்டன் நகருக்கு அருகே உள்ள காந்தமலையில் வாகனங்களை இயங்கா நிலையில் வைத்திருப்பினும் அவை தன்னிச்சையாக கீழே இருந்து மேல் நோக்கி உருளும். இன்னும் கனக்கஇருக்கு. நேரில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் அனுபவஸ்தர் ஒருவர்.

“நாம் வருவதே அங்கு ‘கயாக்’ போவதற்குத்தானே. அதாவது வடதுருவ எஸ்கிமோக்கள் பனிப்படகு ஒன்றில் தனியே துடுப்பு வலித்தவாறு கடல் அலைகளுடன் சாகசம் புரிவதுபோன்றது.” என்றான் ஒரு மாணவன்.

“கனடாவின் பெரிய மாநிலம் கியூபெக். ரொரன்ரோவின் எல்லையில் உள்ள பிரஞ்சு மொழி பேசும் பிரதேசம். ரொரன்ரோ வாசிகளுக்கு ஏதோ பக்கத்து ஊருக்குச் செல்வது போன்று ஏழு மணித்தியால பயணம். பார்த்தவர்கள் மீண்டும் பார்க்லாம். பாராதவர்கள் புதிதாய் பார்க்கலாம்.” கோரஸ் பாடியது கூட்டம்.

தரிப்புகளுடன் சேர்த்து பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பயணித்த அந்த பஸ் பன்னிரண்டு நிமிடங்களில் பூர்த்தியான உல்லாச உணர்வுடன் முதலாவது இடத்தை அடைந்தது!

உல்லாசத்துக்கு குறைவில்லாத நாடு கனடா என்ற அனைவரிடமும் சந்தோஷமாக சிரிப்பு வந்தது!

– இக்கதை அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (30.09.2024 வெளியாகியது)

எஸ் ஜெகதீசன், யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த பத்திரிகை யாளார், எழுத்தாளர்.  1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இவர் இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார்.  இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *