உறைத்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 443 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீங்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள் அவள்; அதில் வியாபாரம் மட்டும் இல்லை; உணர்ச்சிக் கலப்பும் இருந்தது.

அவள் பின்னணிப்பாட்டில் ஒரு சோக கீதம் இருப்பதை உணர முடிந்தது.

ஓரம் கட்டப்பட்டவள் என்பது அவள் சோர்வு காட்டியது.

அந்தக் கதையைக் கேட்பதற்காகவாவது அவள் கட்டுக்களை அவிழ்ப்பதற்குச் சம்மதம் தெரிவிக்க நேர்ந்தது.

கட்டியவன் அவன் உறவு வெட்டி இருக்கிறான் என்பது தெரிந்தது; தேய்ந்த பழங் கயிறு அவன் பழைய பந்த பாசத்தைக் காட்டியது.

“அவர் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலவில்லை” என்றாள்.

புதிரா புனிதமா என்ற தலைப்பு என்று இவர் எண்ணத் தொடங்கினார்.

“வரதட்சணை என்று கேட்கவில்லை; கொடுத்திருக் கலாம்; அவர் நம்பிக்கைக்கு நான் பாத்திரமாக இருக்க வில்லை”

விடுகதை போல் இருந்தது.

“அவர் ஒரு பிள்ளை பெற்றுத் தருவேன் என்று எதிர்பார்த்தார்; மூன்றும் பெண்கள்” என்றாள்.

“யார் இவர்களைக் காப்பாற்றுவது? நீயே வைத்துக் காப்பாற்று போ என்று என்னை ஒதுக்கிவிட்டார்.”

அவள் சொன்னதை இவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை ; ஒரு சோகக்கதை தேவைப்பட்டு அதை அவள் சொல்லி முடித்தாள்.

அவள் இதில் இரக்க உணர்வைக் கூட்டி எழுப் பினாள். கதையைக் கேட்டுவிட்டு அவளை எப்படி அனுப்புவது?

கடலை உருண்டை; பிரிட்டானியா இந்த விளம் பரங்களில் திணிக்கப்படும் பண்டமாற்றுகள் பாலிதின் பைகளில் போட்டு அதை ஒளிபெறச் செய்திருந்தாள்.

இனி மறுக்க முடியாது; அவருக்கு அவற்றில் விருப்பம் இல்லை, வீட்டிலிருந்தால் யாராவது தீர்த்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

மறுபடியும் அவளைப் பார்த்தார்; மத்திய தர வகுப்பு; அதாவது அவள் வயது பற்றிக் கூறப்பட்டது; பொறுப்புமிக்கவள் என்பது தெரிந்தது.

படிதாண்டும் பத்தினிதான்; அவள் இப்படி வந்து சோர்ந்திருக்கிறாள் என்பதை அறிகிறார்.

அந்த நடுத்தர வர்க்கத்திடம் இந்த மேல்தர மனிதர் உரையாடுவதை இடைத் தர மாந்தர் விரும்ப மாட்டார்கள்.

அவர் வீட்டில் இந்த வசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்த வெகுசனம் அதாவது அவர் துணைவியார் கண்டிக்கிறார்.

“என்ன அவளிடம் பேச்சு” இது அவள் வினா.

“வியாபாரம்; கொடுக்கல் வாங்கல்” என்று விளக் கம் தருகிறார்.

“இனிமேல் இந்த மாதிரி குப்பைகளை வீட்டுக்குக் கொண்டு வரவேண்டாம். அவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் காசு கொடுத்து அனுப்புங்கள் ” இந்த ஆணை பிறந்தது.

“சுவை கண்டார்; அவர்கள் விடமாட்டார்கள்” இது எங்கோ படித்த நினைவு. குட்டி போட்ட பூனை சுற்றிச் சுற்றி வரும் என்பது பழமொழி.

அவள் மறுபடியும் இதே வீட்டை நாடி வருகிறாள். புதுக்கதை எதுவும் சொல்வதற்கு இல்லை. பழங்கதைகள் பேசினால் மகிமை இல்லை. அதனால் அவள் நேரே வியாபாரத்துக்கு வந்தாள்.

“என்னிடம் நீ விற்க வரும் பொருளில் உனக்கு என்ன லாபம் கிடைக்கும்?”

“இவர் இந்தத் தொழிலுக்குப் போட்டியாக வரு கிறார். இவருக்கு என்ன அது தேவை யாரோ? இவருக்கு வேண்டியவருக்கு இவர் சிபாரிசு செய்யக் கருதுகிறார்” இது அவள் கணிப்பு.

“பத்து ரூபாய் கிட்டும்” என்று சட்டென்று பதில் தருகிறாள்.

தன் கைவசம் இருந்த பழைய நோட்டுகளில் புதிய நோட்டு; அது பத்து ரூபாய். அதை அவளிடம் தருகிறார்.

“போதுமா? சென்ற முறை நாற்பதுக்கு வாங்கினீர்களே”

“இது பண்ட மாற்று அல்ல; உலக நிதியில் இருந்து தரப்படும் பொருள் உதவி”.

அவளுக்கு இந்தப் பத்திரிகைத் தமிழ் விளங்க வில்லை.

“நீ இங்கு எதிர்பார்க்கின்ற லாபம் பத்து; அதை உனக்குத் தருகிறேன்; நீ பெற்றுக்கொள். இது நான் தரும் பரிசு” என்றார்.

பரிசு என்பது இன்று கொச்சைப்படுத்தப்படும் சொல். ஆசிரியர்களுக்கு முன்பு பரிசு தந்தார்கள்; இன்று வாசகர்களுக்குத் தரத் தொடங்கிவிட்டார்கள்; நாடகக் கலைஞருக்குப் பரிசு தரப்பட்டது. அதைப் பொறுமையாகப் பார்க்கின்றவர்களுக்கு நஷ்ட ஈடு தரப்படுகின்றது. இதுவும் பரிசு என்றுதான் கூறப்படுகிறது. அவற்றின் தாக்கம் இவரையும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தச் செய்து இருக்கிறது.

பரிசு அவளுக்கு விளங்கவில்லை.

“இனாம்” என்று எளிமைப்படுத்தி அந்தச் சொல் லைக் கூறுகிறார்.

“கண்ணியம் என்னைத் தடுக்கிறது; நீங்கள் என்னை வைத்துப் புண்ணியம் தேடத் தேவை இல்லை” என்றாள் அவள்.

“இல்லை; பண்டம் தேவை இல்லை; இது ஒரு பொருள் உதவி”

“பெண் ஒருத்தி பணம் பெறுகிறாள் என்றால் உங்களுக்குத் தெரியும்; அவள் தன் உழைப்பைத் தருவாள்; அல்லது அவள் தன்னைத் தருவாள்; வியாபாரம் உழைப்பு; விபசாரம் தன்னைத் தருவது; இதில் முதல் வகுப்பைச் சார்ந்தவள் இவள்; தவறான வழியில் இவளுக்கு ஈட்ட விருப்பம் இல்லை; நீங்கள் தருகிற நன்கொடை அது இன்றைய கலாச்சாரம்; ஒப்புக் கொள்கிறேன்; பழைய கலாச்சாரம் ‘ஏற்பது இகழ்ச்சி’; அந்த மரபை மதிக்கிறேன். தயவு செய்து என்னை இழிவுபடுத்த வேண்டாம்; உங்கள் நோட்டை’ யார் இந்த அறிவுரை உமக்குத் தந்தார்களோ அவர்களிடமே தந்துவிடுங்கள். இதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள்” என்று நிதானமாகத் தான் நினைத்ததைச் சொல்லி முடித்தாள்.

அவள் உரைத்தது அவருக்கு உறைத்தது.

– கிளிஞ்சல்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, அணியகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *