கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 967 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேவநாயகம் ஆசிரியர் பாடசாயிைலிருந்து வீட்டுக்கு செல்லும் பாதையில் மலைச் சரிவில் அமைந்துள்ள குறுகிய படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கின்றார். நாலைந்து படிகளை கடக்கும் போதே களைப்பு: வழமைக்கு மாறாக சோர்வு கால்கள் வெட வெடத்து தள்ளாடுகின்றன. முழங்கால்களைப் பிடித்தபடி ‘அப்பாடா……..’ என்று பெரு மூச்சு விட்டவாறு நின்று திரும்பி பார்க்கின்றார்.

பள்ளத்தில் பதுளை நகரை வலப்புறமாகச் சுற்றி அணைத்தவாறு வளைந்து வளைந்து ஓடும் மகாவலி நதியும், ஆற்றுக்கு சமாந்திரமாக குன்றில் அமைந்துள்ள பாடசாலைக் கட்டிடமும், கட்டத்தின் முகப்பில் முகிலில் தவழும் சம்மன சென பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும் கொடியும்; அக்கரையில் கலைத்த தேன் கூட்டில் தேனீர்கள் மொய்ப்பது போல் நகரில் உலாவும் மக்களும் மாலை ஒளியில் புகைக்குப் பின்னால் துலங்கும் ஓவியமாகத் தெரிய…

சின்ன சின்ன மேகங்கள் கீழே இறங்கி வாடி இட இடம் தேடி அலைகின்றன.

இன்று நேற்றா? கடந்த பதினைந்து வருடங்களாக துள்ளி குதித்து கட்டுக்கடங்காமல் கொட்டும் அருவியாக; எதுவித சோர்வோ கலக்கமோ இன்றி உற்சாகத்துடன் தினமும் ஏறி இறங்கிய படித் கட்டுகள் தான். ஆனால் இன்று….

நான்கு படிகட்டுகளைத் தாண்டும் போதே கால்கள் சோர்ந்து தள்ளாட …உடல் மட்டுமா? உள்ளமும்….இனம் புரியாத கலக்கம். தேயிலைத் தளிரில் சிந்தியிருக்கும் பனி முத்துக்களென கண்கள் பனிக்க…இமைக் கோடியில்

திரளும் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொள்கிறார்.

எத்தனையோ வருடங்களாக அவர் எதிர்பார்த்து ஏங்கிய கனவு மலர்ந்து; இன்று நனவாகியபோது…

காலங்காலமாக கட்டிய மனக்கோட்டை மாயமாகி விடாது; கண் முன்னே கை கூடி நிதர்சனமாகிய வேளை; அவர் உள்ளம் சிலிர்த்து கொள்கிறது.

மலையும்; நதியும்; தழுவும் மேகக் கூட்டங்களும் மயன் பட்டினமாக விளங்கும் நகரும் நாளெல்லாம் பார்த்தாலும் சலிக்காத காட்சி. கண் கொள்ளக் காட்சி. குளிர்கால மேகங்கள் மலையில் இறங்குவதைப் போல வாத்ஸல்யத் தோடு பதியும் பார்வையை பெயர்த் தெடுத்து; மீண்டும் படியேற முனையும் போது; பாடசாலைக் கட்டிடம் கண்ணில் விரிகின்றது.

தேவ நாயகம் வாலிபத்திற்கு கட்டியம் கூறி கரு கரு வென வளர்ந்து நிற்கும் அரும்பு மீசையோடு; இந்தப் பகுதிக்கு வேலைக் கென வந்த போது அவருக்குப் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்கும் எண்ணம் துளி கூட இருந்த தில்லை.

கண்டியில் உள்ள பிரபல கல்லூரியென்றில் படிப்பினை முடித்த பின்னர்; கம்பெனி தோட்டம் ஒன்றில் சேர்ந்து இரண்டு வருட பயிற்சியினைப் பெற்றுக் கொண்டு; நேரடியாக இந்தப் பகுதியிலுள்ள தோட்டமொன்றிற்க்கு உத்தியோகத் தராகத்தான் வந்து சேர்ந்தார். கை நிறைய சம்பளம், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆள்; இட்ட வேலைக்கு எடுபிடிகள் என்று அதிகாரம் குறைவில்லாத உத்தி யோகம்தான். ஆனால் தொழிலாளரைக் கசக்கி பிழியும் அந்தத் தொழிலில் தொடர்ந்தும் ஒட்டிக்கொண்டிருக்க அவர் மனசாட்சி கொஞ்சமும் இடந் தரவில்லை. துரை த்தனத்தையும் தொழிலாளரை கூலி அடிமைகளாக நடத்தும் போக்கையினையும் அடியோடு வெறுத்தார்.

ஓர் அதிகாரியாக இல்லாது; தொழிலாளர்களின் உணர்வுகளோடு இணைந்து அவர்களின் சுக துக்கங்களில் கொண்டுழைக்கும் அவரது இயற்கையான இனிய சுபாவம் எல்லாம் ஒன்று சேர்ந்து இறுதியில் அவருடைய உத்தியோகத்திற்கே “உலை” வைப்பதாக அமைந்து விட்டது.

“லேபர்ஸ்களோடு அதிகமாக ‘மூவ்’ பண்ணுகிறார் கண்ட்ரோல்’ கிடையாது. டிசிப்பிலின் கெட்டுப்போகும். நிர்வாகத்தின் பங்கில் எழுந்த நியாயம் இவை. முதலில் அறிவுறுத்தல் பின்னர் எச்சரிக்கை – விளக்கம் கேட்டு கடிதக் கணைகள் இறுதியில் விசாரணையோடு டிவிசன் மாற்றம். இவை தொடர் கதை யெனத் தொடர்…

ப்….பூ விட்டது சனியன்! என்று உத்தியோகத்தை உதறித் தள்ளி; இறங்கி விட்டார் தோட்டத்தைவிட்டு.

“ஆள் நல்ல மனுசன். ஆனால் பிழைக்கத் தெரியாதவன்” என்று சக உத்தியோகத்தர்கள் ஒரு பாட்டம் அழுது வைத்தார்கள் “வாலிப முறுக்கு இப்போ தெரியாது. போகப் போகத் தெரியும்.” அனுபவசாலியான சீப் கிளார்க் சமாதானம் சொல்லிக் கொண்டார். உத்தியோகத்தை தூக்கி எறிந்தாகி விட்டது. அடுத்து “தன்மானத்தோடு சுய மரியாதையுடன் ஒரு தொழில் செய்ய வேண்டும்” இது உணர்வு தரும் உந்தல். தன் இனம் உழைத்து, உழைத்து உடலும் நொந்து வருந்துவது அறியாமை இருளில் மூழ்கி அல்லல்பட்டு; சுய நலக் காரர்களினதும், வஞ்சகர்களினதும் வலையில் வீழ்ந்து சுய சிந்தனையின்றி நாளும் பொழுதும் நலிவுற்று வாடுவதற்கு கல்வி இன்மையே; மூல காரணமாகும். இது அனுபவம் தந்த முனைப்பு….முத்திரை.

“நமது சமூகம் உயர்வு பெற கல்வி வளர்ச்சி அவசியம் இதற்கு நமது பங்கிளிப்பு..? வெறுமனே விமர்சனங்களும் வியாக்கியானங்களும் பிரயோசனமற்றவை சமுதாய உணர்வில்லாத படிப்பாளிகளால் நன்மை இல்லை. ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தேவை. சிக்கலற்ற சிந்தனை செயல்படவும் தூண்டியது.

தேவநாயகம் ஆசிரியரானால்……? எண்ண ங்கள் விரிந்தன. ” நாமே ஒரு வழிகாட்டியானால்…….” மனதுக்குள் மத்தாப்பு சிதறியது. “தோட்டம் தோறும் பாடசாலை நடக்கின்றது எதை காட்டிக் கொள்ள மாட்டுத் தொழுவத்தைப் போன்று ஓர் ஆரம்ப பாடசாலை அதன் உள் நோக்கம் சிறார்கள் தன்னிச்சையாக தோட்டத்தில் அலைந்து திரிந்து பயிர்களை நாசம் செய்து விடாமல் காப்பது. அதில் தானே; “சர்வ சகல கலா வல்லவனாக விளங்கி” “வன் மேன்” ஷோ நடத்தக் கூடிய ஒரு தமிழ் வாத்தியார். இது தான் ஆதி ஆரம்ப தோட்ட பாடசாலையின் சராசரி வரைவிலக்கணம்.

ஆசிரியர் தோட்டத்திற்கு வெளியே இருந்து “வந்து போறவர்” என்றால் பாடசாலை எப்போது ஆரம்பிக்கும் எப்போது மூடும் என்பதெல்லாம் அறிய முடியாத ரகசியம்தான் கல்வி வளர்ச்சி எப்படி ஏற்படும். நகரில் பெரிய கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வி போதிக்கப் படுகின்றது. அங்கு தோட்ட தொழிலாளியின் குழந்தைக்கு இடம் கிடைக்குமா? துரை, உத்தியோகத்தர் எனத் தொடங்கி பெரிய கங்காணியின் பிள்ளை வரையில் சிபாரிசு முடிந்து விடும். இதற்கும் கீழே சிபாரிசு பட்டியல் இறங்காது. நகரில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பிக்கப் பெரும் பணம் வேண்டும்…

அடுத்த மாதமே நகரில் ஆற்றோரமாக புறம் போக்கில் கிடந்த இந்த நிலத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பித்து விட்டார்.

ஒரு தகரக் கொட்டிலில் நாலைந்து பெஞ்சுகள்; ஐந்தாறு வாங்குகள், பழுப்பு நிறத்தில் ஒரு கரும்பலகை, ஒரு ஆசிரியர் மேசை, ஒரு முக்காலி இதுதான் சரசுவதி வித்தியாலயத்தின் அட்சரம். ஆனால் தோட்ட தொழிலாளரின் பிள்ளைகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்கு சூக்குமமாக வியூகம் வகுத்தது. அவர் மனதில் வரித்து நின்ற கல்விக் கூடம் பூசலார் கட்டிய ஆலயமாக பிள்ளையார் சுழி போட்டு விட்டது.

காலை, மாலை, இரவு என்று பாராமல் வேதனத்தை முதன்மை படுத்தாது சேவை மனப்பான்மையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் தேவ நாயகம் ஆசிரியரின் நல்ல நோக்கத்தை நகரிலுள்ள பலர் இனங் கண்டு தாமாகவே முன்வந்து உதவினர். இந்த நற்பணிகளுக்கு துரை விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தகர கொட்டிலுக்குப் பக்கத்திலுள்ள வங்கிச் சரிவை இடித்து பள்ளத்தை நிரப்பி தளம் வெட்டப்பட்டது. ஞாயிறு, போயா தினங்களில் போட்டி போட்டுக் கொண்டு சிரமதானம் நடைபெற்றது.

பரிசுக் குலுக்கல் இடம் பெற்றது வெட்டிய தளத்தில் அத்திவாரத்தைப் போட நாடகங்களை அரங்கேற்றி கூரையை அமைத்தனர். வேலை நடைபெறும் விறு விறுப்பையும் தேவ நாயகத்தின் சுறு சுறுப்பையும் கண்ட அபிமானிகள் கொடுத்த நன் கொடைகள் சுவர்களுக்கு சாந்து பூசி வெள்ளையிட்டு கொள்ளை அழகு காட்டின. பழைய தார் பீப்பா தகரக் கொட்டில் மண்டபமாக மாற; பாடசாலை குறிஞ்சிப் பூவாக மலர்ந்து.

ஒரு புறம் கட்டிடங்கள் எழுந்து கொண்டிருக்க, மறு புறம் ஐந்தாம் வகுப்பு ஆரம்பக் கல்வியோடு படிப்பினை இடை நிறுத்தி விட்டு உயர் கல்வி பெற முடியாது. கல்லூரி வளவில் மழைக்கு ஒதுங்கவும் முடியாது; தவித்தவர்கள், அதிகரித்துவிட்ட விட்ட வயதினையும் பொருட் படுத்தாது; சந்தர்ப்பம் கொடுத்து வகுப்பில் சேர்க்கப்பட்டு; கல்வியினைத் தொடர்ந்தார்கள்.

தேவநாயகம் ஆசிரியருக்கு உதவியாக ஆசிரியர் பலர் சேர்க்கப்பட்ட போதிலும் சலிப்பின்றி, களைப் பின்றி, தேவநாயகம்; தலைமை ஆசிரியராக, நிர்வாகியாக, உதவி ஆசிரியராக, குமாஸ்தாவாக பியோனாக தானே சுறுசுறுப்பாக இயங்கினார்.

“பாடசாலையாவது நடக்கிற காரியமாவது” என்று ஆரம்பத்தில் எடுத் தெறிந்து பேசிய வாய்கள் கூட இன்று வருடந்தோறும் நடைபெறும் கலைமகள் விழா, கலை விழா, விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா, என்பவற்றைப் பார்த்து சுருதியை மாற்றிக் கொண்டு வியந்து புகழ்ந்து பேசுகின்றனர். பரீட்சைகளிலும்; போட்டிகளிலும், மாகாணத்திலே முன்னணியில் நிற்கும் மாணவர்கள் வேறு உரம் சேர்க்க.

ஒழுக்கம் கட்டுபாடு என்பவற்றிலும் மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய நிலையில்…….. தேவ நாயகம் ஆசிரியர் பணி, புகழ் மேலோங்கியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை தேவ நாயகம் ஆசிரியரை தேவ நாயகம் பிள்ளை என அழைத்து கண்ணியப்படுத்தினர். மதிப்பில் மட்டுமல்ல, மரியாதை, பணிவுடன் வழங்கும் கௌரவம்.

கல்வி வளர்ச்சியும்; காலமும் நீண்டு தொடர காலச் சக்கரம் நீண்டு சுழல்கின்றது.

தேர்தல் வந்தது.! இது பொதுத்தேர்தல் கட்சிக்கு கட்சி, ஆளுக்கு ஆள் பம்பரமாய் சுழல்கின்றனர். ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தல் “கலை” கட்டிய போது ஸ்ரீமான் பொது ஜனத்தின் இதுவரை கண்டு கொள்ளாத குறைகள்; தேவைகள் எல்லாம் அலசி ஆராயப்பட்டன.

பொதுத்தனி கோரிக்கைகளை போட்டா போட்டி போட்டு கொண்டு நிறைவேற்ற; துடியாய்த் துடித்தனர். நடந்து முடிந்த தேர்தல்களில்…ஒரு பொருட்டாக இல்லாத’ இப் பாடசாலையினை இப்போது “கண்டு கொண்டு ” விட்டார்கள்.

“மைக்குகளில்” பிரசார மேடைகளில்; வேட்பாளர்கள், மண்ணின் மைந்தர்களின் குரலை செவிமடுத்து; எல்லோரும் இந்நாட்டு மன்னர்களான வாக்காளர்களின் சிந்தையை நிறைத்த செய்தி “நாம் வெற்றி பெற்றால் ” இப் பாடசாலையை அரசுடயைாக்கி; வசதிகளை செய்து கொடுப்போம்.” என்பதேயாகும். ஒருவர் மேடையில் முழங்க, மற்றவர் துண்டுப் பிரசுரத்தில் வெளியிட, அடுத்தவர் தனது பரிவாரங்களிடம் சொல்லி ஊரெங்கும் இதனை பறை சாற்ற…

தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பாடசாலைக்கு முக்கிய இடத்தினைக் கொடுத்து . வேரில் பழுத்த பலாவாக இருந்ததை; தேர்தல் சந்தைக்கே கொடு வந்து விட்டது. கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையினை ஒட்டிக் கொண்டிருந்த ஆசிரியர்கள்; அரசாங்க நியமனம் என்றவுடன் கிறங்கிப் போனார்கள் “கவர்மென்ட் சேவன் ‘ கை நிறைய சம்பளம் கெசுவல் மெடிக்கள் லீவு, சலுகைகள், புகையிரத ஆணைச்சீட்டு…… மகிழ்ச்சி கரைபுரண்டது.

தேர்தல் முடிந்த கையோடு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடாமல் வெற்றி பெற்றவரை பாடசாலைக்கு அழைத்துத் வரவேற்பு வைபவத் தினையும் நடத்தி பாடசாலையை பொறுப்பேற்கவும் வழி செய்து விட்டார் தேவநாயகம். பதினைந்து வருடங்களாக பட்ட வேதனைக்கு விடிவு காண வழி பிறந்தது. கிடைத்த சொற்ப வருமானத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கி, தானும் உண்டு; உடுத்து; இத்தனை காலமும் வாழ்க்கையினை ஓட்டியதே சாதனைதான்.

மாணவர்கள் அனைவரும் ஏழை தொழிலாளரின் பிள்ளைகள் தோட்டங்களில் வேறு, வரட்சி, காணி சுவீகரிப்பால் வேலை இழப்பு, இப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தோரே அதிகம். என்ன செய்வது, கட்டணம் கிரமமாக வசூலிக்க முடியாது. போதாததற்கு வறுமையில் வாடும் மாணவர்கள். இடையில் படிப்பினை நிறுத்திக் கொள்ளாமல் இருக்க உடை, உணவு, புத்தகங்கள், பஸ்சுக்கான பருவச்சீட்டு என்பனவற்றையும் பெற்றுக் கொடுத்து உதவினார். சுமைதான்! என்ன செய்வது?

பாடசாலையினை பொறுப்பேற்கும் பணி சுறுசுறுப்பாக நடந்தது அதிகாரிகள் வந்தார்கள். நிலம், கட்டிடங்கள் என்பனவைகளை அளந்து படிவடிவங்களை நிரப்பினார்கள். பின்னர் ஆசிரியர்களை அழைத்தனர். வயது, கல்வித் தகைமை, சமயம், தேசிய இனம் என்பவற்றையெல்லாம் விசாரித்து அவர்களுக்கான தஸ்தா வோஜீகளை அவர்களிடம் பெற்று தனி தனி “பைல்” களில் வைத்தார்கள். இறுதியில் தேவ நாயகம் பிள்ளையுடனான சம்பாஷனை தொடங்கியது அதிகாரி அவரின் சேவையினைப் பாராட்டி மிகுந்த மரியாதையோடு விசாரித்தார். பாடசாலையின் வரலாறு அவரின் கல்வித் தகைமை என்பவற்றையெல்லாம். கேட்டு குறிப்பெடுத்து கொண்ட அவர் “பாடசாலையினை பொறுப்பேற்பதுடன் உங்களையும் சேவையில் சேர்த்துக் கொள்ள விருக்கின்றோம்.”

யாவும் சரி நீங்கள் வம்சாவளி பிரஜையா? அல்லது பதிவுப் பிரஜையா? உங்களின் பிரஜா உரிமையினை நிரூபிப்பதற்கான படிவங்களைச் சமர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்? தேவ நாயகம் ஐம்பத்தி இரண்டாம் ஆண்டு மனு கோரப்பட்ட வேளையில் தன்னுடைய குடும்பத்தினரோடு மனு கொடுத்திருந்தார் “இந்தியாவில் நிலபுலம் உண்டா ? பணம் எப்போதாவது அனுப்பினீர்களா? எத்தனை தடவைகள் போய் வந்தீர்கள்” என்றெல்லாம் குறுக்குக் கேள்விகளை கேட்டு விசாரித்து விட்டு பின்னர், மனுவை நிராகரித்து விட்டனர்.

மீண்டும் அறுபத்து நான்கில் ஒப்பந்தம் நிறைவேறி மனு கோரப்பட்ட போது “இந்த மண்ணிலே தான் வாழ வேண்டும்” என முடிவு செய்து தனது முயற்சியில் மீண்டும் தளராத விக்கிரமாதித்தனாக விண்ணப்பம் செய்தார். மனு கிடைத்தது என்ற அட்டையைத் தவிர வேறு எது வித தகவலுமே இது வரை கிடையாது. இவருடைய மனு கடலில் போட்ட கல்லாக இன்னமும் “பைசல் ” செய்யப்படாமல் கிடக்கின்றது. ஒப்பந்தம் நிறைவேறிய போது நம்பிக்கை விளக்காக நெஞ்சில் நிழலாடிய சுடர்; இப்போது நெஞ்சில் தீப்பந்தமாக புகைய; மன வேதனை யோடு காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்.

தேவநாயகம் ஆசிரியர் அதிகாரியிடம் பவ்வியமாக கூறினார் “எனக்கு இன்னமும் பிரஜா உரிமை கிடைக்கவில்லை” அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.

அவர் இந்த பதிலினை எதிர்பார்க்கவில்லை கவலை தோய்ந்த முகத்துடன் நடுங்கும் குரலில் “மிஸ்டர் தேவநாயகம் உங்கள் நிலைக்கு வருந்துகிறேன். நீங்கள் செய்த சேவை மகத்தானது. எனினும் சட்ட திட்டங்களுக்குட்பட்டுத்தான் நாம் என் கடமையினைச் செய்ய முடியும். பிரசா உரிமை இல்லாத ஒருவரை நாம் அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ள முடியாது.

“நான் எனது றிப்போட்டை அனுப்பி வைக்கிறேன் நீங்கள் முயற்சி செய்து விரையில் உங்கள் பிரஜா உரிமையினை நிரூபிக்கப் பாருங்கள்…உங்களை போன்ற நல்லவர்களை இறைவன் ஒரு போதும் கை விட மாட்டான் கருணை உள்ளம். அதிகாரி கலக்கத்துடன் விடைபெற்றறுக் கொண்டார்.

பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாறிவிட்டது. குதூகலம் அனைவரும் புத்துணர்வில் மிதந்தனர்.

தேவநாயகம் பிள்ளை பல இடங்களுக்கும் ஓடினார். “இவரைக் கண்டு பேசினால் சரி” “அவரைக் கண்டு ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என்று சொல்லப்பட்ட மேதா விலாசங்களைப் தேடிப் போய் கால் கடுக்க நின்று தன்னுடைய நிலைமையினை எடுத்துரைத்தார். ஒரு சில பிரமுகர்கள் தன்னை பாடசாலை விழாக்களுக்கு அழைத்து மரியாதை செய்யவில்லையென இந்த வேளையிலும் சலித்துக் கொண்டனர். இரவு, பகல், உணவு, உறக்கம் என்பனவற்றையெல்லாம் மறந்து நாளும், பொழுதும்; அலுவலகங்களில் ஏறி; இறங்கினார் நம்பிக்கை பகீரத முயற்சியாக பரிணமித்தது.

பலன்; பணம் தண்ணீராக கரைந்ததேயொழிய காரியம் நடப்பதாக இல்லை. கடன்பட்டார்; அலைச்சல் மனம் சோர்ந்தார் “இந்தா, அந்த” என்று போக்கு காட்டி இழுத்தடித்தவர்கள் கடைசியில் கையை விரித்து வேறு முக்கிய அலுவல்களில் “பிசியாக” இவரை சந்திப்பதையே தவிர்த்து கண்ணாடிக் கூண்டு அறைக்குள் ஆமையாக புலன்களை அடக்கிக் கொண்டனர். தொட்ட தெற்கெல்லாம் அறிக்கைவிடும்; ஓர் அரசியல் வாதி மட்டும் இதனைச் சாட்டாக வைத்து தமிழ் தினசரியில் மாத்திரம் அறிக்கை விட்டு தன்னுடைய இன உணர்வினை வெளிகாட்டி “பிளஸ்” பாயிண்ட் தேடிக் கொண்டார்.

தேவநாயகம் பிள்ளை தன்னுடைய பிரஜா உரிமையினை நிரூபிக்காதப் படியால் அவருக்கு நியமனம் கிடைக்கவில்லை. பதினைந்து, வருடங்களுக்கு முன்பு தோட்ட தொழிலாளரின் பிள்ளைகளுக்காக ஒரு பாடசாலை ஆரம்பித்து; அதனைக் கட்டி எழுப்பி, இன்று கலாசாலையாக உயர்த்தி விட்ட அவருக்கு; இனி அப்பாடசாலையில் இடமில்லை.

இனி அவருக்கு அங்கு தன் கடமையினைச் செய்ய முடியாது. அதற்கு உரிமை இல்லை.

பாடசாலை பொறுப்பேற்கப் பட்டதை யொட்டி இன்று பாடசாலையில் ஒரு வைபவம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுத்தான் வேத நாயகம் பிள்ளை வீடு திரும்பி கொண்டிருக்கின்றார். வைபவத்தில் பலர் அவருடைய சேவையினைப் பாராட்டி புகழ்ந்தார்கள்.

தேவநாயகம் பிள்ளைக்கு பாடசாலையில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்காமல் போன விவகாரம் இப்போது பழைய கதையாகி விட்டது. புதிய அதிபர் கடமை ஏற்று விட்டார். மறக்காமல் பழைய வரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார்.

வைபவத்தில் மனம் நிறைந்த பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்; மனம் குளிரும் வார்த்தைகள். இவற்றால் நேரந்தவராமல் பற்றி எரியும் வயிற்றைத் தணிக்க முடியுமா? அடுப்பு எரிய வேண்டுமே…

பிரஜா உரிமை என்ற ஒன்று மட்டும் இருந்திருந்தால் அவருக்கு வேலை கிடைத்திருக்கும். இப்போது அவர் வேலை தேடியாகவேண்டும்.

முதுமைக் கனிந்து கொண்டு வரும் பருவம். இத்தனை காலமும் செய்த சேவை மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால் எங்கும் அடிமைத் தனங்களில் மூழ்கிச் சிக்குண்டு தவிக்கின்றான். கற்ற வாசகம் நெஞ்சில் நினைவு இழைகளை நூற்க..; அவர் உருவாக்கியப் பாடசாலையின் முகப்பில் தேசியக் கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்க…. வானிலிருந்து தவழ்ந்து இறங்கிய, சின்னச் சின்ன மேகங்கள் வாடியிட இடம் தேடிக் கொண்டிருக்க..நாளெல்லாம் பார்த்தாலும் சலிக்காத அந்த மலைச்சரிவில்; பள்ளத்தில் வளைந்து வளைந்து ஓடும் நதியின் தீரத்தில், அவர் உருவாக்கிய பாடசாலையில் வாத்ஸல்யத்தோடு பதியும் பார்வையை பெயர்த்தெடுத்து மீண்டும் தள்ளாடி நடுங்கும் கால்களுடன் படியேறுகின்றார்.

அவர்கண்கள் கொட்டும் மழையாக…

அது ஏழை அழுத, வெறும் கண்ணீர் மட்டுமல்ல.

– தினகரன், அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *