கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 2,764 
 
 

காவியிலே அரசியலும் உண்டு; ஆன்மிகமும் உண்டு. விடலைப் பையன்கள் முதல் வேட்டி கட்டுகிற கேரளத்தில், வெள்ளை வேட்டிக்கும் லுங்கிக்கும் இடைப்பட்ட – வீட்டிலும் வெளியிலும் அணியத்தக்க – பொது உடையாக ஆவதும் உண்டு. வீட்டோடு சாமியாராக இருக்கிற சிவபாணச் சித்தரின் காவி, கல் – குருணை நீக்கப்பட்ட அக்மார்க் ஆன்மிகக் காவி. ருத்ராட்சம் – காவி தவிர, நீண்ட ஜடாமுடி, தனக்குத்தானே பேசிச் சிரித்தல், உலகின் மீது ஒரு எளக்கநாட்டப் பார்வை, சிவபாண மோனம், அந்த நிர்விகல்ப சமாதித் திளைப்பில் சொரிந்து கொள்ள ஆட்டுத் தாடி, மோனம் கலைகையில் ஆசீர்வாதமாக உதிரும் ‘உய்யடா உய்!” ஆகியவை அன்னாரின் இன்ன பிற சாமுத்ரிகா லட்சணங்கள்.

பட்டினத்தாரின் பரம பக்தரான அவருக்குப் பொம்பளை புள்ளைகள் என்றாலே பொண்டாட்டி மாதிரி வெறுப்பு. ப்ரம்மராட்சஸிகளும், யக்க்ஷிகளும், மோகினிகளுமே பூமியில் பெண் உருவில் அவதரித்திருப்பதாகக் கருதுபவர் அவர். மொத்தத்தில் பெண் இனம் என்பதே ஆண்களை மயக்கி ரத்தம் குடிக்கக் கூடியதுதான். கடவுளுக்குச் சமமான நிலைக்கு உயரக்கூடிய தகுதியுள்ள ஆண்களை, அப்படி ஆக விடாமல் சாமான்யர்களாகவே இருக்க வைப்பதும், சம்சாரச் சாக்கடையில் சுகமாகப் புரளும் பன்றிகளாக ஆக்குவதும் இந்தப் பெண் என்ற மாயப் பிசாசுகளே!

பெண்களுடனான சிற்றின்பத்தை விலக்கி, அதற்குச் செலவாகும் சத்தை சிந்தாமல் சிதறாமல் சேமித்து, குண்டலினி யோகம் மூலம் மேலெழுப்புவதால் சித்த நிலை – சிவ நிலை அடையலாம் என்பதே அவரது உபதேசத்தின் சாராம்சம்.

‘எத்தனை பேர் நட்ட – எத்தனை பேர் தொட்ட – ‘ எனத் துவங்கும் பட்டினத்தாரின் மிகப் பிரபலமான பாடலே சிவபாணத்தாரின் தேசிய கீதம். அதன் ஈற்றடியான ‘உய்யடா, உய்யடா, உய்!’யிலிருந்து எடுக்கப்பட்டதே அன்னாரின் மேற்படி கொள்கை விளக்க ஸ்லோகம்.

இடம் – பொருள் – ஏவல்களுக்குக் கட்டுப்படாதவர் சித்தர். கல்யாண மண்டபம், எழவு வீடு, கோவில் வளாகம் எதுவாக இருந்தாலும் சரியே; தன்னைக் கண்டு மருகேதி நிமித்தம் எழுந்து நிற்கிற, கும்பிடோ அரை வணக்கமோ செலுத்துகிற, சொகாரியம் விசாரிக்கிற மெய்யன்பர்கள் எல்லோருக்கும், கட்டை விரலை உள்ளுக்கு மடக்கி நாலு விரல் அகலம் காட்டியபடி ‘உய்யடா உய்!’ ஆசீர்வாதம்தான். கல்யாண மாப்பிள்ளை, போன நிமுசம் தாலி கட்டி மனைவியாக்கியவளோடு காலில் விழுந்தாலும் அதே!

வெறும் ஆசியோடு நில்லாமல், சந்தர்ப்பம் வாய்த்தால் அந்த தேவகானம் மட்டுமன்றி, பட்டினத்தாரின் ஏனைய பாசுரங்களையும் எட்டுக்கட்டை சுதியில் எடுத்துவிட்டு, அதற்கு பதவுரை – தெளிவுரை -பொழிப்புரை சகிதம் உபன்யாசங்களையும் நிகழ்த்திவிடுவார். சுருங்கக் கூறின், பட்டினத்தாரின் டிங்கிடிப் பாடல்களைப் பரப்புவதும், அதன் மூலம்

டிங்கிடி எதிர்ப்பு விழிப்புணர்வை உருவாக்க அயராது பாடுபட்டுத் தோற்பதுமே அவரது வாழ்க்கை எனலாம்.


அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் தாம் அவதரித்த, இப்போது ஐந்து தலக்கெட்டுகளைக் கண்ட, நூற்றாண்டுச் சிலுவானம் வயதான புராதன வீட்டிலேயே சித்தர் இன்னமும் குடிகொண்டிருக்கிறார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அந்தக் காலத்தில், சித்தூர் தாலுக்கா முச்சூடுக்கும் உடமஸ்தராக (உரிமையாளராக) இருந்த சோண்டத்து ஜமீனின் உள்ளூர் அள்ளக்கையாக இருந்த அவரது அப்பாறு கட்டிய வீடு அது. அவ்வப்போதைய மராமத்துகளும் உட்புற நவீனமயமாக்கல்களும் மட்டும் பிந்தைய தலக்கெட்டுகளால் செய்யப்பட்டவை. கட்டியது முதல் நாளிது வரை ஊரில் உள்ள ஒரே கேரள பாணி நாலுகெட்டு வீடு அதுதான். இதனால் நாலுகெட்டு வீட்டுக்காரர்கள் எனக் குறிப்பிடப்படும் பெருமையையும் பரம்பரை பரம்பரையாகக் கொண்டிருந்தது அக் குடும்பம். இங்ஙனம் அந்த வீட்டால் மனிதர்கள் பெயர் பெற்றுக்கொண்டிருந்தது மாறி, ஒரு மனிதரால் அவ்வீடு பெயர் பெறும்படியாக, சித்தர் வீடு என வழக்கமானது பத்திருபது வருடங்களுக்கு முன்பிருந்தே.

ஏணிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டிய, மெத்தை எனப்படும் அதன் மேல் தளப் பகுதியில், விசாலமானதொரு அறையே சிவபாணச் சித்தர் அவர்களின் மெய்ஞானக் குகை. கீழ்த்தளத்தில் குடியிருக்கிற அவரது பூர்வாஸ்ரமங்களில் மகன்கள், மருமகள்கள் எல்லோரும் பண்ணையம் பார்க்க தோட்டத்துக்கும், லோகப் பிரசித்தி பெற்ற கட்டிப்புடி சாமியாரிணியின் கான்வென்ட்டில் படிக்கிற பேரக் குழந்தைகள் கோடை விடுமுறையில் அவரவர் அம்மாத்தா ஊர்களுக்கு ஒறம்பறைக்கும் போயிருக்க, மெய்ஞானக் குகைக்குள், மேற்சொருகிய கண்களோடு சித்தர் அவர்கள் பத்மாசனமிட்டிருந்தார். எதிரே பக்திப் பரவசத்தோடு அவரது அமெச்சூர் சீடன் தேவாங்கு, சுகாசனமிட்டிருந்தான். (சுகாசனம் என்றால் அதுவும் ஏதோ இடுப்பொடிக்கிற அஷ்ட கோணல் ஆசனம் என மிரண்டுவிட வேண்டாம். சாதாரண சம்மணத்துக்குத்தான் யோக மொழியில் அந்த கௌரவப் பெயர்).

சீனா பானா சித்தர் அவர்களின் சக்தி பீடமான சிவபாணத்துக்கு, கருமருந்தான அட்டப்பாடிப் பொட்டலத்தை விநியோகம் செய்பவன் தேவாங்கு. தற்போது அகழி என்ற பெயரிலும் அறியப்படுகிற அட்டப்பாடி மலைச்சாரல், ‘வாற்று’ (வடிசல்) எனப்படும் பட்டைச் சாராயம் காய்ச்சுதலுக்கும், சிவபாணம் என சித்தர் மொழியிலும், கோரக்கர் மூலிகை என சித்த வைத்தியத்திலும், மோகன மூலிகை என யோக சூத்திரங்களிலும் கூறப்படும் கஞ்சாவின் விளைச்சலுக்கும் பெயர் பெற்றது. வாற்று கடத்தல், கஞ்சா கடத்தல் ஆகிய குடிமக்கள் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள தேவாங்கு, அங்கிருந்துதான் சரக்குகளைக் கடத்தி வந்து விநியோகம் செய்வான்.

அப்படி அவன் கொண்டு வந்திருந்த பொட்டலங்களை அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து எடுத்து, இரு உள்ளங்கைகளிலும் ஏந்தி, பூஜைக்குக் கொடுப்பது போல பவ்யத்துடன் நீட்ட, சித்தரின் மேற்சொருகிய கண்கள் அடிப் பார்வைக்கு மாறின. “ஆஹாஹா…! அட்டப்பாடி மோகினி வந்துட்டாளா? அருமை, அருமை!” எனப் புளகாங்கித்துக்கொண்ட அவர், தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, “எல்லாம் வெளி மயக்கே; இறைவா, கச்சி ஏகம்பனே!” என்று கை கூப்பி வணங்கி, பொட்டலங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்ட பின், ப்ரசாதம் வாங்குவது போல பயபக்தியோடு பெற்றுக்கொண்டார்.

ஒரு பொட்டலத்தைப் பிரித்து, விதைகளும் காம்புத் தும்புகளும் கலந்திருக்கும் இலைச் சருகுகளை விரல் நுனிகளால் கசக்கியும், அதன் வாசனையை நுகர்ந்தும் தரப் பரிசோதனை செய்தவருக்கு, பரீட்சார்த்த ப்ரயோகம் ஒன்றையும் நிகழ்த்திப் பார்த்துவிடலாம் என்று பட்டது. பிரித்த பொட்டலத்திலிருந்து விதைகள் மற்றும் காம்புத் தும்புகளை கவனமாகப் பொறுக்கி நீக்கியவர், முற்றும் உலர்ந்துவிடாமல் வதங்கிய சருகாக இருக்கும் இலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சம்பிரதாயப்படி இடது கையில் கொட்டி, சாஸ்த்திரப் பிரகாரம் வலது கைப் பெருவிரலால் தேய்த்து நசுக்கி, பக்குவப்படுத்தலானார். காதுக் குரும்பையாட்டம் திரட்டித் தேய்த்து உருட்டிய சருகுத் திரள்கள், கையருகே இருந்த ‘கருவூரார் மாந்தரீக அட்டமா சித்து’ நூலின் மீது சேகரமாயின. பீடி ஒன்றை முனை கிள்ளி ப்ரம்மபத்திர(புகையிலை)த் தூளை உதிர்த்துவிட்டு, அதன் வெற்றுக் கூட்டுக்குள் தீக்குச்சி முனை உதவியோடு மேற்படிக் கருமருந்தை பரகாயப் பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்வித்ததும் சிவபாணம் தயார்.

“சித்தருக்கெல்லாம் சித்தன், என்னப்பன், ஆதியோகியான சிவனோட பாணம் இது. அதனாலதான் இதுக்கு சிவபாணம்னு பேரே ஆச்சு” என்றபடி அதே குச்சியில் கொளுத்திக்கொண்டு, உள்ளங்கைக்குள் கங்கு முனை உள்ளபடியாக பெருவிரல் கவட்டுக்குள் பிடித்து, இரு கைகளையும் குவித்து மூடி, புகையை ஆழ இழுத்து உறிஞ்சினார். பச்சிலை கருகும் வாசனை விரலிடுக்குகளில் கசிந்து பரவ, சித்தர் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.

“போதைலயே ராஜ போதை இதுதான்டா தேவாங்கு. அகில லோகத்துலயும் இத மிஞ்சறக்கு வேற போதை கெடையாது. தேவலோகத்துல தேவனுக ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமான்னு அப்சரசுகளையெல்லாம் ‘டில்லி முள்ளு ஆட்டம்’ ஆட உட்டுப் பாத்துட்டே,… குடிச்சு மப்பேறிக் கெடந்தானுக பாரு,… அந்த சோமபானம், சுராபானம் கூட இதுக்கு கால் தூசுக்கு சமானமாகாது. காயகல்பம், கற்பக விருட்சம் எல்லாம் இதுதான். தண்ணி, பொம்பளை, பணம், செல்வாக்கு, அதிகாரம் – எந்த போதையும் இந்த சொகத்துக்கு ஈடாகாது.

“அதனாலதான் இதப் பிரயோகம் பண்ற சாமானிய ஆளுக இதுக்குக் கொத்தடிமையாயர்றானுக. வீரியம் தாங்காம ஒவ்வொருத்தனுகளுக்கு தலைச்சோறும் நஞ்சுருது. என்னையப் பெலத்த சித்தருக, யோகீக,… நெளுவு சுளுவு தெரிஞ்சு பிரயோகம் பண்ணுனா,… மூலாதாரத்துல மூன்ரைச் சுருள் போட்டு கொறட்டையுட்டுத் தூங்கீட்டிருக்கிற குண்டலினி, மகுடீல்

புன்னாகவராளி வாசிச்சாப்புடி எணிச்சு (எந்திரிச்சு) ஆடி, பொணையலுக்கு (கலவிக்கு) நின்னாப்புடி நெட்டுக்கு நின்னு, சகஸ்ராரத்துல மாணிக்கத்தக் கக்கியே போடும்” என்றவர், இன்னொரு இழுப்பையும் இழுத்து லயித்துவிட்டு,

“பொம்பளச் சுகம் சிற்றின்பம். அதுக்கு சிங்கிள் ரூட்டுதான் உண்டும். இறைச் சுகம் பேரின்பம். அதை அடையறக்கு டப்பிள் ரூட்டு இருக்குதுடா பங்காளின்னு யோக சூத்திரங்களே மேப்புப் போட்டுக் குடுக்குது. ஒண்ணு குண்டலினி யோகம்; அது என்னெச் பாட்டி செவன். உன்னியொண்ணு, நம்ம ப்பெசல் – சிவபாணப் பிரயோகம். இது இட்டேறி சாட் கட்டு” என கஞ்சாபதேச சாரத்தையும் அருளினார்.

இழுத்துக்கொண்டிருந்த புகையின் வீரியம் நுரையீரலைக் கடந்து, ஏற்கனவே தரிப்பில் இருந்த அவரது சிறுமூளையை நோக்கிப் பாயலாயிற்று. ராமத் தவக்காயை இரையெடுத்தாப்புடி, அன்னாரின் சஹஸ்ரார ஒளிவட்டத்தை முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், அவரது மூளை அடுக்குகளுக்குள் முழி பிதுங்கிக்கொண்டிருந்த கருநாகக் குண்டலினி, இப்போது பொகைமுட்டி போட்டாப்புடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உள்ளிருக்கவும் முடியாமல், வெளியே முட்டீட்டு ஓடவும் வழியில்லாமல், பெடை பெடைச்சு மூளையைக் குடையத் தொடங்கியது. சித்தர் உச்சகட்டத் திளைப்பில் கண் சொக்கிக் கிறங்கலானார்.


வெகுநேரமாகியும் சித்தர் பெருமான் கண் திறக்கவில்லை. அவரது பொடனிக்குப் பொறத்தால உதிக்கவிருக்கும் ஒளிவட்ட தரிசனத்துக்காக சீடன் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கையில், இருந்தாற்போல அவர், “உய்யடா உய்! உய்யடா உய்!” என்று சன்னதம் கொண்டு கூவினார். என்ன ஏதென்று புரியாமல் இவனும் குருவோடு கோவிந்தாவாக உய்யடா உய்யைப் போட்டுக்கொண்டிருக்கையில், பெருமானார் காக்கா வலிப்பு வந்தவராட்டம் கையைக் காலை உதறி, பத்மாசனச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

“என்னாச்சுங் சித்தரே? ஏதாச்சு பிரசனைங்ளா?” என்று கேட்டதுதான் கோடு –

“பிரசனைன்னாலும் பிரசனை பெரும் பிரசனைடா தேவாங்கு. நம்மட தவத்தக் கலைக்கறக்கு ரம்பா, ஊர்வசி, மேகனா, திலோத்தமா நாலு தேவுடியாளுகளும் கூட்டணியா வந்துட்டாளுகடா. சுத்திச் சுத்தி வந்து டில்லி முள்ளு ஆட்டம் ஆடறாளுகளே, சாமார்த்தியம்! ஆருகட்ட? சிவபாணத்தான் கட்டயா? ‘எம்சீல் வெச்சு அடைச்சுப் போடுவன் – சாக்கரதை’ன்னு முடுக்கியுட்டுட்டன். மெய்யால இவளுகனால நம்முளுக்கு இன்னைக்கும் குண்டலினி கெட்டுச்சு. முக்கு முக்குனு முன்னூறு முக்கு முக்கி, கொரவளி முட்டும் மாணிக்கத்தக் கொண்டுட்டு வந்ததாக்கு. சித்தெ கிருமிச்சிருந்தா கக்கியே இருக்கும். ஆட்டக்கார அவுசாரிக கெடுத்தாளுக காரியத்த” என்று

ஆவேசத்தைக் கொட்டிவிட்டு, மிச்சமிருந்த சிவபாணப் பொட்டலத்தை மடித்து, மற்ற பொட்டலங்களோடு பத்திரப்படுத்திக்கொண்டார்.

“எல்லாம் அந்த இந்தரன் பண்ற ஊமைக் குசும்புங் சித்தரே! உங்களையப் பெலத்த சித்தருக, நானிக, ரிசி மினீக தவம் பண்ணுனாலே அவனுக்குப் பொறுக்காது. மனுசருகளும் அவிகளாட்ட தேவருகளாயி தேவலோகத்துக்குப் போயிட்டா, அவனோட பதவிக்கு ஆப்பு வெச்சுருவாங்களோன்னு பயம். அதனாலதான் சித்து வெடைகளைத் தாட்டியுட்டு சித்து காட்டறான் உங்ககட்டயே” என இவனும் மெப்புப் போட்டான்.

“தேவனாடா அவன்? தெல்லவாரி நாயி! கோதமரிசி பத்தினியவே கோளியாட்டக் கூகி கொத்தி மிதிச்சுட்டுப் போனவனல்லொ! ஒண்ண வெச்சுட்டே பொம்பள புள்ளைக அந்த ஆட்டமாடறாளுகொ. மேலு முச்சூடும் ஆயரம் மொளைச்சிருக்கற அவனுக்குக் கொஞ்சத்த மோளமா இருக்கும்? வெச்சுக்கறன் அவன! அம்மாவாசை சாமத்துல அண்டரண்ட மந்தரம் போட்டு, கூப்புட்டு வந்து கொறளி வித்தை காட்டாம உடப் போறதில்ல!” கறுவியவர், மடியிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார்.

சின்னக் கவுண்டர் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டால் மரத்தடிப் பஞ்சாயத்துக்குப் போகிறார் என்று அர்த்தம். சிவபாணத்தார் அதே செய்கையைச் செய்தால் ஊரை உய்விக்கக் கிளம்பிவிட்டார் என்று அர்த்தம்.


லண்டன் டெய்லர் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்களோ இல்லையோ, வெட்டி ஆப்பீசர்களுக்குக் குறைவிருக்காது.

ஜங்ஷன் எனப்படும் ஊர் மையத்தில் அமைந்துள்ள அக்கடை, பொழுது போக்க உகந்த புகலிடம். பொழுதுபோக்குநர்களுக்கு வேண்டியே கடைக்கு வெளியில் ஒரு குட்டிச் செவுத்தையும் கட்டி வைத்திருக்கிறார் டெய்லர். அதில் அமர்ந்துகொண்டு, பஞ்சாயத்து சேந்தி கிணத்திலோ குழாயடியிலோ தண்ணி எடுப்பதற்கும், கடை கண்ணிகளுக்கும், ப்ரயாணங்களுக்கும் வந்து போகிற அசலாம் புள்ளைகள், அடுத்தவன் பொண்டாட்டிகளின் அனாட்டமிகளை ரசிக்கலாம். அதில் எந்ததெந்தப் புள்ளைகள் எவனெவனை லைனடிக்கறா, எவனெவன் பொண்டாட்டி எவனெவன் கூட வேலி சாடறா என்கிற துப்பறிதலில் ஈடுபட்டுப் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் லண்டன் டெய்லர். முல்லைப் பெரியாறு விவகாரம் முதல் பாகிஸ்தான் ஊடுருவல் வரை, ஈமு வளர்ப்பு முதல் ஏவுகணை சோதனை வரை அவரோடு விவாதித்து, இந்தியாவின் எதிர்காலத்தை அஞ்சு நிமுசம் ஃபாஸ்ட்டாக்கலாம்.

ஓணம், பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போதும், பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதங்களிலும், கல்யாணம் காதுகுத்து போன்ற வீட்டு விசேஷங்களின்போதும் மட்டுமே டெய்லருக்கு வேலைத் தெரக்கு மோட்டார் போடும்படி இருக்கும். மற்ற சமயங்களில் ஒண்ணோ அரையோ வருவதற்கு

பெடல் போட்டுக்கொண்டிருப்பதுதான். எப்படியிருந்தாலும் வேலையோடு வேலையாகவோ, அல்லது அதுவே வேலையாகவோ வெட்டி நாயக்காரர்களுக்கு வளம் வெச்சுக் கொடுப்பார். விடலைகள் முதல் கெள்டு கட்டைகள் வரை அவரவர் வயதுக்கும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் தகுந்தபடி பேசக்கூடியவர் அவர். அதனாலேயே வெட்டிக் கூட்டம் அங்கு கூடுகிறது என்பது மட்டுமன்றி, அவருக்குப் பழக்கமுள்ளவர்கள் தங்கள் அலுவல் நிமித்தமான பயண மார்க்கத்தில் ஜங்ஷனைக் கடக்க நேர்ந்தால் ஒரு எட்டு அவரை வந்து பார்த்து, சொகாரியம் கேட்டுப் பாடு பழமை பேசிவிட்டுச் செல்வதும் வழமை.

சேமலைக் கவுண்டரும் அன்று சப் சி.டி. விஷயமாக க்ருஷிபவன் (வேளாண் அலுவலகம்) போய்விட்டு திரும்புகாலில் அப்படி வந்தவர்தான்.

கவுண்டர் குஷாலான பேர்வழி, அதிலும் கிளுகிளுப்பாகப் பேசுவதில் பிரியமுள்ளவர் என்பதால், அவர் வந்தாலே வெங்கலக் கடையில் ஆனை புகுந்தாப்புடி இருக்கும். “அப்பறம்ப்பா லண்டனு,… ஊருக்காள என்ன விசுவேசம்? புதுசா எந்தப் புள்ள எவங் கூட ஓடிப் போச்சு? எவம் பொஞ்சாதி கள்ளப் புருசன எக்ஸேஞ்சு ஆப்பரு பண்ணியிருக்கறா?” என்றுதான் நாயத்தையே ஆரம்பிப்பார். இன்றைக்கு ஏனோ, “அக்கினி நச்சத்தரம்ங்கறது செரியாத்தானப்பா இருக்குது. மணி அஞ்சாயும் மனுசன் வெளிய தலை காட்டப் பாங்கில்ல போ! அடிக்கற வெயில்ல அடிவாரக் காடே கருகீருமாட்ட இருக்குது” என்ற ஆவலாதியோடே நுழைந்தவர், “என்னப்பா லண்டனு,… மளக்காலம் வாறக்காள நம்ம பண்ணையம் படல் சாத்தீருமாட்ட இருக்குது. கெணத்துல ‘பொட்டு’த் தண்ணி இல்ல; கம்பரசரு வேற சுத்தமா வத்தீருச்சு; எண்ணூத்தம்பது அடி போரு போட்டும் வெங்கையாப் போச்சு. சீரளிவச் சொன்னா சீல ஏளு மொளம் கிளிஞ்சிரும்ங்கற கோப்புல, மொள்ளைலதான் வண்டியே ஓட்டிருக்குது. இந்த லச்சணத்துல சொஸைட்டீலிருந்து வேற மஞ்ச நோட்டீசுக்கு மேல மஞ்ச நோட்டீசா அனுப்பீட்டிருக்கறான்” என்று விவசாயிகளுக்கே உரித்தான புலம்பல் பாட்டையே பாடிக்கொண்டிருந்தார்.

ஆனைக்கும் அடி சறுக்கும், பூனைக்கும் பல்லு வலிக்கும் என்கிறாப்புடி, கவுண்டருக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தானே செய்யும் என்று எண்ணிக்கொண்டு, அப்புடீங்களா, அடப் பாவமே என்று மெப்புப் போட்டுக்கொண்டிருந்த டெய்லர், “உங்குளுக்குன்னாலும் தேவுலீங் கவுண்டரே,… இங்க டங்குவாரே அந்து கெடக்குதே! குடிக்கறக்கு, களுவறக்குக் கூட தண்ணியில்லாம பொம்பளைக, ஆம்பளைக எல்லாஞ் சேந்து, கொடத்த நடு ரோட்டுல வெச்சுட்டு மறியல் கிறியலெல்லாம் பண்ணிட்டல்ல இருக்கறாங்க” என ஊரார் துயரங்களையும் எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.

இன்னும் உக்கிரம் தணியாத சாயுங்காலச் சாய்வு வெயில் மொகரைக் கட்டையிலேயே அடிக்கும் என்பதால் குட்டிச் செவுத்து வெட்டி ஆப்பீசர்கள் – நிரந்தர வெ.ஆ.க்களான நடுத்தரங்கள் – புலம்பெயர்ந்து, கடையின் உட்புறத்தை ஆக்ரமித்திருந்தனர். துணி வெட்டும் நீண்ட மேஜையில் சாய்ந்தபடி ஒரு வெள்ளை வேட்டியும் ஒரு காவி வேட்டியும் நின்றிருந்தன. அதனடியே குனிந்து குறுகிச் சம்மணமிட்டபடி ஒரு லுங்கி (மூட்டியது).

இன்னொரு லுங்கி (மூட்டாதது) அயர்னிங் மேஜை மீது தொத்தி உட்கார்ந்திருந்தது. வேறொரு ‘கோரா’ (கேரளீயர்கள் உடுத்தும் வெளிர் சந்தன வேட்டி) வெளியே ஒரு ஸ்டூலில். இவர்களில் மூவர் உள்ளூர்வாசிகளான ஒழலப்பதிக்காரர்கள். மற்றிருவர், ஈழவர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய அண்டை குக்கிராமமான தேனம்பதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் படை போதாதென்று, அனுப்பூரிலிருந்து லொடக்ளாஸ் சைக்கிளில் லொங்கு லொங்குனு வருவானே அப்பாவு கோவில் மயில்சாமி பூசாரி மகன் கடைசியான்,… அதுதேன் வாரமலர்ல கூட வட்டார மொழிக் கதைகன்னு நம்மூரு கள்ளுக் கடை, சாராயக் கடையப் பத்தியெல்லாம் கதை எளுதீட்டிருப்பானே சாராசு,… அவனும் கூட காவி வேட்டியும் கருப்பு அங்கராக்குமாக வெளியே நின்று புகைவிட்டுக்கொண்டிருந்தான்.

நடைபெற்றுக்கொண்டிருந்த வறட்சிக் கருத்தரங்கத்தில் விடலைகள் அனைவருக்குமே சலிப்பு.

“அஞ்சு நிமுச டைட்டிலே பாக்க மாட்டம். நீங்க என்றான்னா அந்தக் காலத்துலயாட்ட அரை மணிக்கூர் டாக்குமென்ட்ரீல அறுத்துட்டிருக்கறீங்களே கவுண்ரே…! பார்வேடு ஓட்டியுட்டுப் படத்தப் போடுங்கொ” என்றான் தொத்துக்காலன்.

“பாத்தையாப்பா லண்டனு…! ‘எளவுக்குப் போனவ புருசனத் தின்னா; எதுக்க வந்தவ தாலியறுத்தா; எந்த நாயி எக்கேடு கெட்டு, கொங்க நாயி குட்டி போட்டா எனக்கென்னொ?’ங்கற கோப்புல, பசக பஜனைக் கச்சேரி கேக்கறானுகொ” என்று கவுண்டர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கையில், முச்சந்தியிலிருந்து, ‘உய்யடா உய்!’ என்று சிவபாணச் சித்தரின் அசரீரி ஒலித்தது.

2

ஓவர்லாக் மெஷினுக்குப் பக்கத்திலிருந்து ஸ்டூலைக் கதறச் செய்துகொண்டிருந்த கவுண்டர், தன் புளி மூட்டை உடலைத் திருப்பி, ஜன்னல் வழியே பார்வை ஓட்டினார். ஊரை உய்விக்கும் மாலை உலாவுக்காகக் கிளம்பியிருந்த சித்தர், கிழக்கு வீதிக்குப் பிரிந்து செல்லும் முன்பு, உடன் வந்த சீடனுக்கு விடையளிக்கும் முகாந்திரமாக ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. தேவாங்கு கெடாவிட்டாலும் இதே குட்டிச் சுவர்தான் என்பதால் கண்டிப்பாக இங்குதான் வருவான். ஆனால் சித்தருக்கு இங்கே எதிர்க் கட்சிகள் அதிகம். அதனால் பொதுவாக அவர் இந்த வெட்டி ஆப்பீசர் திருச்சபைக்கு வருவதில்லை. ஆயினும் கவுண்டர் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை அனுசரித்து அவரை சிறப்பு விருந்தினராக அழைக்கத் தீர்மானித்தார்.

“உங்க நேயர் விருப்பத்த நெறைவேத்திப் போடலாமப்பா. சித்தரக் கூப்புட்டம்னா பஜனைக் கச்சேரியென்னொ,… பட்டனத்தாரு ‘கான மேள'(இன்னிசைக் கச்சேரி)யே நடத்திப் போடுவாரு. ‘விளிப்புணர்வுப்

படம்னாலும் குளி சீனாச்சும் இருக்கும்’ங்கற கோப்புல, ‘எஸ்ட்டா பிட்டு’க எக்கச்சக்கமா இருக்கும்” என்றவர், கதவு நிலை வழி கழுத்தை நீட்டி, “தேனுங் சித்தரே…! சித்தெ வந்துட்டுப் போங்களே…! ஒரு சமுசியம் கேக்கறக்கு இருக்குது” என்று தூண்டிலை வீசினார்.

சித்தரின் புருவம் இவரை நோக்கி நெளிந்தது. ஜங்ஷன் சுற்றுப்புறமெங்கும் ஓங்கி உலகளந்த பார்வை ஒன்றைப் படரவிட்டவர், ஆட்டுத் தாடியை உருவியபடி அண்ணாந்து ஆகாசத்தையும் அளந்தார். பின்பு விறுவிறுவென இறங்கி லண்டன் கடையில் நின்றார். வெளி ஸ்டூலில் அமர்ந்திருந்த கோரா எழுந்து கொண்டு, “உக்காருங்க பகவானே” என்று இருக்கை கொடுத்தது. அதற்கும், “உய்யடா உய்!” என நாலு விரல் முத்திரை காட்டிவிட்டுப் பதியமிட்டுக்கொண்டார் சித்தர் பிரான். சீடன் தேவாங்கும் பக்கத்திலேயே பவ்யமாக நின்றுகொண்டான்.

“இதுக்குத்தானுங் சித்தரே உங்களயக் கூப்புட்டது. ‘தென்னுங் கவண்ரே சித்தரு எப்பப் பாத்தாலும் ‘உய்யடா உய்’, ‘உய்யடா உய்’யின்னுட்டே இருக்கறாரே,… அப்புடீன்னா என்னுங் அருத்தம்?’னு நம்ம மைனருக நம்மடகட்ட சம்சியம் கேட்டானுக. ‘அட,… அது நாஞ் சொன்னா, ‘கொங்கனுக்குத் தலையுமில்ல; கொளக்கட்டைக்கு வாலும்மில்ல’ங்கற கோப்புல இருக்கும்; நமக்கு அந்தப் பாட்டும் வேற தெரியாது; சித்தரையே கூப்புட்டுடறன்… வெகரமா, வெளக்கமாச் சொல்லுவாரு’ன்னேன். நீங்களும் பாருங் வந்தமானிக்கே ‘உய்யடா உய்’ போட்டுட்டீங்கொ!” என்ற சேமலைக் கவுண்டர், “தெங்க,… உங்க ஏத்தப் பாட்டு – எதிர்ப் பாட்ட முளுஸ்ஸ்ஸா… எட்டுக் கட்டைல எடுத்துடுங்ளே கேக்குலா” என்று உஸ்படுத்திவிட்டார்.

சித்தருக்கென்ன கசக்கவா செய்யும்? அதுவும் எதிர்க்கட்சியிலிருந்து சிறப்பு அழைப்பு விடுத்து, சரியாசனமும் கொடுத்து கௌரவிக்கிறபோது! தவிர, அவரது உபதேசங்கள் போய்ச் சேர வேண்டியதே இவர்களை மாதிரியான ஆட்களுக்குத்தானே! அதனால் அதி உற்சாகம் கொண்டு, அரைக் கட்டை கூட்டியே,

“எத்தனை பேர் – எத்தனை பேர் – எத்தனை பேர்!

உய்யடா, உய்யடா, உய்!”

– என்று நாலடிச் செய்யுளை அடி பிறழாமல், அச்சரம் பிசகாமல் ஒப்பித்தார்.

சி.பா.சித்தரின் பாடலை விட, அப்போது தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்த பெண்கள் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்ததும், பக்கத்து மளிகைக் கடைக்கு வந்த பாவாடை சட்டைச் சித்து வெடைகள் ரெண்டும் மிரண்டு காதைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியோடியதும் விடலைகளுக்கு கிளுகிளுப்புக்குரிய விஷயங்களாகிவிட்டன. பட்டினத்தாரைப் பற்றித் தெரியாவிட்டாலும் கூட, அவரது பாடல் உபதேசமான ‘உய்யடா உய்’யைப் பற்றித் தெரியாத ஆண்கள் என்று இப்போது ஊருக்குள் ஒருவருமில்லை. அந்தளவுக்கு சி.பா.சி. அவர்களால் மூலை முடுக்குகளெங்கும் அந்த அருள் நெறிகள்

பரப்பப்பட்டிருந்தன. ஏற்கனவே அப்படி பல முறை அன்னாரின் வாயால் கேட்ட பாடல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களுடனான அவரது உச்சரிப்பு, ஆரம்ப வரிகளுக்கு அவர் காட்டும் அபிநயங்கள் ஆகியவை திரும்பத் திரும்ப கேட்டும், கண்டும் ரசிக்கத் தக்கவை. அதோடு நில்லாமல் அன்னார் அதற்கு தனது பாணியிலான வியாக்கியானத்தையும் பதவுரை, தெளிவுரை, பொழிப்புரை சகிதம் வழங்கவே, கடையே களை கட்டிவிட்டது.

“நல்லாக் கேட்டுக்கங்கப்பா நாட்ராயன் கெடாய்களா! வேலி சாடி வெள்ளாமை மேஞ்சீங்கன்னாலுஞ் சேரி,… பொறம்போக்குல பூந்து அலப்புனீங்கன்னாலுஞ் சேரி,… பொம்பளைகளுக்கு ஒருத்தன் பத்தாதுங்கறதுதான் இதும்பட கருத்து” என்று சேமலையாரும் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டியதோடு, “ஏப்பா, கதை எளுதற தம்பீ…! நீயும்மு அந்த மாற லேடி பட்டனத்தாளுக, சீன்சு அம்முணீகளப் பத்தியெல்லாம் எளுதுனவன்தானொ! நாஞ் சொல்றது செரித்தான?” என்று வெளியே நின்றுகொண்டிருந்த ஷாராஜையும் சப்போட்டுக்கு இழுத்தார்.

பெண்ணிய விரோதி என்ற சந்தேகத்துக்குரிய அவனோ, இவருக்கு பதில் சொல்லாததோடு, “ஆனாட்டி இந்தப் பாட்டு மும்தாஜாட்ட தொழில்காரிகளப் பத்துனதாச்சுங்ளே…! குடும்பப் பொம்பளைகளப் பத்தி அல்லங்ளே…!” என்று சித்தரிடம் குறுக்குச் சால் ஓட்டி, பெண் மானம் காக்க வரிந்து கட்டிக்கொண்டு நின்றான்.

சித்தரிடம் பலிக்குமா கதை எளுதறவன் பாச்சா?

“அது வேண்ணா அப்புடி இருந்துட்டுப் போகுட்டும் அப்பனு. இதையக் கேளு:

‘கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து

அப்புறந் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்

ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்து உறங்குவளை

எப்படி நான் நம்புவேன்? இறைவா! கச்சி ஏகம்பனே!’

“’இது தொளில்காரிகளப் பத்திச் சொன்னதா… குடும்பஸ்றீகளப் பத்திச் சொன்னதா? ஏங்…?” என்று மடக்கிவிட்டு, மெய்யன்பர்கள் அனைவரையும் கர்வத்தோடு பார்த்துக்கொண்டார்.

“பொட்டி(பாலியல் தொழிலாளிகளுக்கு மலையாளத்தில் வழங்கும் இடுகுறிப் பெயர்)கள நம்புனாலும் நம்பலாம்; பொண்டாட்டிய நம்பவே நம்பாத! மாமா, மச்சான், ஏட்டா, பாவா ன்னு சரசமாடி, பதனெட்டு அடவும் காட்டிப் படிவெளையாடி, உன்னைய ராரோ பாடித் தூங்க வெச்சுப்போட்டு, சாமத்துல கட்டிப் புடிச்ச மானிக்குப் படுத்துட்டிருக்கற உன்ற கைய அலுங்காம வெலக்கியுட்டுட்டு, எணிச்சு(எந்திரிச்சு)ப் போயி, பொடக்காளீல பக்கத்தூட்டுக்காரன் கூட ஆய கலை 64 – ஐயும் காட்டி, டாடி மம்மி வெளையாட்டு வெளையாடீட்டிருப்பா! உய்யடா உய்!” என்று பாடலுக்கு வியாக்கியானமும் அளித்தார்.

“அது வாஸ்த்தவந்தானுங்ளே! அந்த மாற வேலி சாட்டக்காரீக நம்மூருல ஒரு ஊடு உட்டு ஒரு ஊடு உண்டும்ங்களே…! பட்டனத்தானே வந்தாலும் அசந்து போற அளவுக்கு பட்டப் பகல்லேயே பக்கத்தூட்டுக்காரன், எதுத்தூட்டுக்காரன் கூடல்லாம் படக்கம் பொட்டிக்கற (பட்டாசு வெடிக்கிற) பத்தினிமாருகள நமக்குத் தெரியும். லிஸ்ட்டே வேணும்னாலும் குடப்பன். வந்தது – போனது, அந்தது – அறுக்காதது எல்லாம் இதுல அடக்கம்.” தேவாங்கு குருவுக்குப் பின்னேர் ஓட்டினான்.

குருவும் முன்னேரை அழுத்திப் பிடிக்கத் தொடங்கிவிட்டார்.

“கதை எளுதற தம்பி சொல்றாப்புடி, ‘எத்தனை பேர் எத்தனை பேர் – ‘ங்கறது பொட்டிகளுக்குத்தான் பொருந்தும்னு வேண்ணாலும் வெச்சுக்கலாம். அவளுகளச் சொல்லித் தப்பில்ல. அவளுகளுக்கு அதேதான் தொளிலு. தன்னை உத்தமி, பத்தினி, பதிவிரதைன்னு அவளுகளும் சொல்லிக்கறதில்ல. ஆனாட்டி இந்த மாற வேலி சாட்ட வீராங்கனைகளா இருக்கற குடும்பஸ்றீகள என்ன பண்றது? ஏங்…?

“கண்ணாலமாயி புருசன் இருக்கறதுகளும் இல்லாததுகளும், அவுத்ததும் அறுத்ததுகளும்தான் அப்புடீன்னு இல்ல. கண்ணாலம் மூய்க்காத வயிசுப் புள்ளைக – காட்டு வேலை, மில்லு வேலைன்னு போறதுகளுஞ் செரி; காலேஜு போறதுகளுஞ் செரி. அத்தற (அவ்வளவு) ஏன், ஐஸ்கூல்ல எட்டாங் க்ளாஸ், ஒம்பதாங் க்ளாஸ் படிக்கறதுக மொதக் கொண்டு, இப்ப டிங்கிடியோ டிங்கிடிதான். அதும் ஒண்ணு ரெண்டு புள்ளைக, நாப்பத்தஞ்சு – அம்பது வயசுக்காரனுக கூட. செலுப்போனு, இன்ட்டர்நெட்டுன்னு சௌகரியம் ஆனப் பின்ன, இப்ப நம்மூருப் புள்ளைகளே டிங்கிடிப் படம் பாக்குதுக. பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? பாஞ்சு பண்ணையம் பாத்தர்றாளுக.

“புள்ளாச்சீலயோ கௌக்கியோ எங்கியோ காணம், பத்தாங் க்ளாஸ் புள்ளையொருத்தி வகுத்துல வாங்கி, நெறை மாசமாயும் அன்னை வரைக்கும் ஆருக்குந் தெரியாம மறைச்சிருந்து, பள்ளிக்கோடத்து பாத்ரூம்புல பிரசவமாயி, அதையும் துணீல சுத்தி அங்கயே மறைச்சு வெச்சுப் போட்டு, அலுங்காம வந்து மறுக்காவும் க்ளாஸ் ரூம்புல குக்கீட்ட விசியம் பேப்பர்ல கூட நாறுச்சே…! அந்த மாற நம்மூரு நூஸும் பேப்பர்ல வாறக்கு நெம்ப நாளாகாது” – என்று ஆழ, அகல, ஊரேகம் உழுது நெரத்திவிட்டார்.

“சித்தரு நானவானுங்கோ. அணிமாச் சித்தி, மகிமாச் சித்தி, லகிமாச் சித்தின்னு அட்டமா சித்தீக எட்டும் குடிச்சுக் கொப்புளிச்சவரு. அட்டன் டைத்துல அஞ்சாறு எடங்கள்ல பிரசன்னமாவாரு. கண்ணுக்குத் தெரியாம காத்தோட காத்தாவும் ஒலாத்துவாரு. இவடத்தால குக்கீட்டே ஈரேளு லோகத்து சந்து பொந்துலயும் நடக்கற டிங்கிடி வேலைகளையும் கண்டுக்கற நானதிருட்டி அவுருக்கு உண்டு. நாளைக்கு நடக்கப் போறத இன்னைக்கே சொல்லிப் போட்டாரு பாருங். கண்டுசனா அது நடந்தே தீரும்.

அமெச்சூர் சீடன், அமெச்சூர் குருநாதரின் தீர்க்கதரிசனங்களுக்கு சாட்சியுரைத்தான்.


அவ்வளவு நேரம் பேசிய பேச்சில் அட்டமா சித்தருக்கு ஒளிவட்டம் பீஸ் போய்விட்டிருந்தது. அடிவாரத்திலிருந்து சிவபாண பீடியொன்றை எடுத்துக் கொளுத்தி, பெருவிரல் கவட்டுக்குள் வைத்து, உள்ளங்கைக் கூடாரத்துக்குள், ஆழ்ந்த இழுப்புகளில் லயித்துவிட்டார். ப்ரம்மத்தில் ஐக்கியமாகிவிட்ட அவரது அந்தராத்மா, பழக்க தோஷத்தில் பரமாத்மாவைத் தேடி கொல்லிமலை முதல் கைலாய மலை வரை குட்டியாக்காரணம் போடத் தொடங்கிவிட்டது. எடுத்த காரியம் அரைத் தாண்டலில் நிற்கிறதே என்பதால் கிணறுப்பள்ளம் வரை போய்விட்ட அந்தராத்மாவை ரிவர்ஸ் குட்டியாக்காரணம் போட வைத்து, அதன் ஆப் பாயில் மண்டையில் ஆணியடித்து, கட்டி நிறுத்தினார்.

“பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்

கண்ணால் வெருட்டி ஸ்பேர்பார்ட்ஸால் மயக்கிக் கடிதடத்துப்

புண்ணாங் குழியிடைத் தள்ளி, என் போதப்பொருள் பறிக்க

எண்ணா துனைமறந்தேன், இறைவா! கச்சி ஏகம்பனே!”

உணர்ச்சி மயம் சித்தர் திருவாயிலிருந்து கஞ்சாப் புகையோடு கசிந்தது.

சிவபாணத்தாருக்கு கஞ்சா போதையா, பட்டினத்தார் பாடல் போதையா என்று பட்டிமன்றம் வைத்தால், “அவுரோட போதம் கஞ்சா; போதை பட்டினத்தாரு பாடல்தான்யா!” என்று பாப்பையாவே தீர்ப்பு வழங்கிவிடுவார்.

மேற்படி பாடலுக்கு அருஞ்சொற் பொருள் விளக்கமேதும் தேவைப்படாததால் அடுத்தடுத்த பாடல்கள் சரஞ்சரமாக அவரது வாயிலிருந்து கொட்டலாயின.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச் சிக்கு நாறிடும்

இத்தியாயி இத்தியாயி நாறிடும் மங்கையர்க்கோ

இங்ஙனே மனம் பற்றியதே?”

– என்று பட்டினத்தாரின் நாற்றப் பாட்டையும் எடுத்துவிட்டவர் (இங்கு இடம் பெற்றிருப்பது தணிக்கை மற்றும் பிரசுரத்துக்குத் தகுந்த திருத்தத்துக்கு உள்ளானது. அசல் நாற்றத்தை அனுபவிக்கத் துணிவுள்ளவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு மூலப் பிரதியைக் காண்க) அதற்குப் பதவுரை, தெளிவுரை வழங்கியதோடு, சொல் நயம் – பொருள் நயம் சிலாகித்து, இலக்கியச் சிறப்புரையும் ஆற்றிவிட்டார். அஞ்சாறு நாள் அன்னங் கஞ்சி காங்காமல், சலைவாய் வறள நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, காடு மேடெங்கும் பெட்டையின் பின்னே கூட்டமாக அலைந்து, தம்முள் ஒன்றை ஒன்று பல்லைக் கிஞ்சித்துக் கடித்துக் குதறி, கடைசியில் வலுவுள்ளது ஜெயித்து, கல்லெறிந்து அடித்தாலும் பிரிக்க முடியாதபடி, மணிக்கூர் கணக்காக எதிரெதிர் திசைகளில் இழுபட்டுக்கொண்டிருக்கும் மார்கழி நாய்கள் அதைக் கேட்டிருந்தாலே, ‘தூத் திருமதிர்ச்ச!’ என்று காறித் துப்பிவிட்டுப் போயிருக்கும்.

அப்பேர்ப்பட்ட ஐவேஸ் பாட்டையும், அதற்கு சித்தர் கொடுத்த கூவ விளக்கத்தையும் கேட்ட பிறகு, எந்த ஆண் மகன்தான் இச்சையோடு பெண் குலத்தை நெருங்க முடியும்?

அத்தனை நேரம் சப்புக் கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்த சேமலைக் கவுண்டருக்கே குமட்டிக்கொண்டு வந்ததென்றால், கடையிலிருந்த மற்ற ஆண்கள் – குறிப்பாக விடலைகள் – நிலையைச் சொல்லவா வேண்டும்! சாந்தி முகூர்த்த அறையாட்டம் திளைத்திருந்த திருச்சபையே, பேதி புடுங்குன வார்ட்டாம் வெலவெலத்துப் போய்விட்டது. ஒவ்வொருத்தனுக மூஞ்சியையும் பார்த்தால், கல்யாணமானவர்கள் உடனடியாக பொண்டாட்டிகளை ட்ரைவர்ஸ் பண்ணீருவார்கள் என்றும், கல்யாணமாகாதவனுக மும்பைக்கோ கடப்பாவுக்கோ ரயிலேறி, அரவானி ஆப்பரேசன் பண்ணிக்கொண்டாலும் பண்ணிக் கொண்டுவிடுவான்கள் என்றும் தோன்றியது.


வேலீல போறதுக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சு, வேட்டிக்குள்ள விட்ட தன் புத்தியைச் செருப்பாலடிப்பதா, சீவக் கட்டையால் மொத்துவதா என்று யோசித்து நொந்துகொண்டிருந்தார் சேமலைக் கவுண்டர். தண்ணியில்லாப் பாடு, வெள்ளாமைக் கருகல், கடன் தொல்லைகள் என சொந்தக் கதை சோகக் கதையாக இருக்கும் தன்னால்தான் ரசிக சிகாமணிகளின் விருப்பத்திற்கிணங்க ஜிஞ்சுனாக்குடி நாயங்களைப் பேச முடியவில்லை; சித்தரை நியமித்தால், டிங்கிடி எதிர்ப்புப் பிரச்சாரம் என்றாலும், ஜிஞ்சாலங்கடி ஜிகுமிலி சமாச்சாரங்கள் நெறக்க இருக்குமே,… பசங்க கேட்டுப் பேரின்பமடைவார்களே என்று எண்ணித்தான் அவரை அழைத்து ஆன்மிகப் பேருரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டார். அவர் என்னடான்னா கடைசியில் அஸ்திவாரத்துக்கே வேட்டு வைத்துவிட்டாரே…!

விடலைகள் வேறு, “வொய் திஸ் கொலை வெறி கவுண்ரே?” என்று, வெந்த காதில் ஆஸிட்டை ஊற்றினார்கள். குற்ற உணர்ச்சியால் கவுண்டருக்கு அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்த கட்டம் அடிச் சவ்வையும் உரித்து உப்புக் கண்டம் போடுவதுதான் என்பதால் சித்தரைப் பார்க்கவும் தெம்பில்லை. விடலைகளுக்குப் புற முதுகும், சித்தருக்குப் பொடனியும் காட்டியவாறு ஜன்னல் பார்வையாக மேற்கே திரும்பிக்கொண்டார்.

அகமறியாமப் பேசி முகமறியாம முளிச்சுக்கொண்டிருந்த அவர் இருந்தாற்போல, “அட் – டட் – டட – டடா…!” என்று ஏற்றிக் கட்டியிருந்த தொடையைத் தேய்த்தபடி உணர்ச்சிவசப்படவே, “என்னாச்சுங் கவுண்ரே…?” என்று கேட்டார் டெய்லர்.

“என்னாச்சா? என்னென்னமோ ஆகுதப்பா! அல்லி நோடு!” என்று ஜன்னல் பார்வையால் சுட்டிக்காட்டியதும், டெய்லர் சக்கரத்தை நிறுத்தி எட்டிப் பார்த்தார். வெட்டி ஆப்பீசர்களின் முகங்களும் மேற்கே திரும்பின.

சித்தர் வீட்டைக் கடந்து, கையில் ஒரு காகிதப் பொட்டலத்தோடு, அவளுக்கே உரித்தான அமர்த்தலான நடையில் மும்தாஜ் வந்துகொண்டிருந்தாள்.

பார்த்த இவர்கள் எல்லோருடைய வாய்களிலுமே ‘புளித்த புஞ்சிரி’ நெளிந்தது. நெளிந்த புஞ்சிரி நேராகி மறைந்த பின்பும், கண்கள் – கண்ட காட்சியிலிருந்து மீளவில்லை. கடைக்குள் அமர்ந்து புகை மண்டலம் பரப்பிக்கொண்டிருந்த விடலைகள் விடைத்துக்கொள்ள, வெளியே சித்தர் அருகே நின்றிருந்த சீடன் தேவாங்கு கூட கிளுகிளுத்துக் கொனிந்தான்.

“சீறும்வினையது பெண்உரு வாகித் திரண்டுருண்டு

கூறும்முலையும் இறைச்சியும் ஆகிக் கொடுமையினால்

பீறும்மலமும் உதிரமும் சாயும் பெருங்குழிவிட்டு

ஏறுங்கரை கண்டிலார், இறைவா! கச்சி ஏகம்பனே!”

– என சித்தர் சுதி பிடித்தது எவர் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.

3

ஒழலப்பதியின் பிரசித்தி பெற்ற பெருமைகளில் ஒருத்தி மும்தாஜ். முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, வேலந்தாவளம் இந்த மலையாளக் கரையோரத்தின் சிவப்புக் கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் போன தலக்கெட்டுப் பொற்காலத்தில், ‘கம்பெனி வீடு’களில் இருந்த தொழில்காரிகள் எல்லோரும் சேர்ந்து அவ்வூருக்குப் பெற்றுத் தந்திருந்த பெருமையை, இப்போது தனியொருத்தியாக இருந்து, அண்டை ஊர்களில் ஒன்றான ஒழலப்பதிக்குப் பெற்றுத் தந்துகொண்டிருப்பவள் இவள். பஞ்சாயத்து லெவல் தாண்டி ப்ளாக் லெவலுக்குப் போனாலே, ஒழலப்பதி என்று ஒரு ஊர் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிற நிலை மாறி, ஒழலப்பதி என்றாலே மும்தாஜ் ஊரா என்று கேட்கிற அளவுக்கு பாலக்காடு மாவட்டம் முழுக்க அவளது புகழ் பரவியிருந்தது.

மும்தாஜுக்கு மோகாந்திரமான முகம். அரேபியச் சரும நிறம். தொழில்காரிகளுக்கே உரித்தான மதர்த்த உடல். வாத்ஸாயன அங்க லாவண்யங்கள். அவளைப் பார்த்தால் எந்த ஆணுக்குமே ஆசை எழும் என்பது சாதாரண வார்த்தை; ஆய கலை 69 ஐயும் அவளிடம் நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்கிற அடங்கா வெறி தவிர வேறொன்றும் தோன்றாது என்பதுதான் சரி. இவை அவளது தொழிலுக்கு ஒத்தாசையாகும் அடிப்படை அம்சங்கள். அதைவிட சிறப்பம்சம், அவளது முகத்தைப் பார்த்தாலே அவள் ஒரு தொழில்காரி என்பது தெரிந்துவிடும். சில குத்தாட்ட நடிகைகள், பெரும்பாலான நீலப்பட நடிகைகள், ஒரு சில தொலைக்காட்சி நடிகைகளின்

முகத்தைப் பார்த்தாலே விபச்சாரக் களை அப்பட்டமாகத் தெரியுமல்லவா; அப்படிப்பட்ட தொழில் களை அவளது முகத்தில் அழுந்தப் படிந்திருக்கும். அறியாத எந்த ஊருக்கு அவள் போனாலும், அறிமுகமற்ற அசலூர்க்காரர்கள் இங்கு வந்தாலும், அந்த அடையாளத்தை வைத்தே அவளை இனங் கண்டுகொள்ள முடியும்.

அதனால்தானோ என்னவோ பௌடர் அப்புதல், கொண்டை நிறைய மல்லிகைச் சரம் உள்ளிட்ட மிகையலங்கார விளம்பரங்களை அவள் ஒருபோதும் செய்வதில்லை. தொழிலுக்கு ஆயத்தமாகும் மாலை நேரங்களில் மற்ற குடும்பப் பெண்கள் போலவே சோப்புத் தேய்த்து முகம் கழுவி, மெலிதாகப் பௌடர் பூசி, மணமற்ற அல்லது மணம் குறைந்த பூச்சரத்தை சாங்கியத்துக்குச் சூடி, சாதாரணமாக உலா வருவாள். வெளியூர் போகும்போது சேலை – ரவிக்கை விலை உயர்ந்ததாகவும், புதுக் கருக்கோடும் இருக்கும் என்பது தவிர அலங்காரங்களில் பெரிய மாற்றமிராது.

மும்தாஜிடம் ஒரு நற்குணம். யாரையும் தொழிலுக்கு அழைக்கவோ, கண்களில் ஜாடையிடவோ, தூண்டல் செயல்களில் ஈடுபடவோ மாட்டாள். அவர்களாக அணுகினால் மட்டுமே.

இவற்றையெல்லாம் விட வேற்றூர் தொழில்காரிகளிடமிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டுகிற ப்ரதான அம்சம் ஒன்றும் அவளிடம் உள்ளது. அவளது கடுத்த முகபாவம்.

இணக்கமின்மை, சிடுசிடுப்பு, அலட்சியம், கர்வம், உள்ளார்ந்த வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே அதில் வெளிப்படும். யாராவது அவளிடம் வீண் வாயாடினாலும், கேலி செய்தாலும், வெட்டியான சல்லாபப் பேச்சுகளுக்கு முற்பட்டாலும் பெரிய மனுசன், சின்ன மனுசன் என்று பாராமல் பதிலடி கொடுத்துவிடுவாள். தொழிலுக்கே விரோதமான முறையில் உள்ள அவளது இந்த குணம், முரண்பாடான வகையில் அதற்கு ஆதரவாகவே ஆகியிருந்தது. அவளது அலட்சியமும் செருக்குமே அவள் மீது அதிக ஈர்ப்பை ஆண்களிடத்தில் உண்டுபண்ணிக்கொண்டிருந்தன. ஆண்களை உள்ளூர வெறுக்கும் அவள், அந்த ஆண்களுடனான உறவையே தொழிலாகக் கொண்டு பிழைப்பது போலத்தான் இதுவும்.


மும்தாஜுக்கு எதிர்த்தாற்போல நடந்தும் வாகனங்களிலும் போய்க்கொண்டிருக்கிறவர்கள், இரு மருங்குகளிலும் உள்ள கடைகண்ணிகளில் இருப்பவர்கள், பேருந்துக்கோ ஆட்டோவுக்கோ காத்து நிற்பவர்கள் எனப் பலரின் கவனமும் அவள் மீதே இருந்தது. அவளை நோட்டமிடும் ஆண்களின் பார்வைகள் ஏக்கம், ஆசை, மோகம், சபலம், நிராசை, வெகாறி என்றிந்த உணர்ச்சிகளையே வெளிப்படுத்தும் என்பதும், பெண்களின் பார்வைகளில் வெறுப்பும் பொறாமையுமே மண்டிக் கிடக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். அதனால் அதைப் பொருட்படுத்தாமல்,

அமர்த்தலான அல்லிராணி நடையில், நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுமாக வந்துகொண்டிருந்தாள்.

“அட – அட – அட…! என்னா ஒரு நடை… என்னா ஒரு சைஸு…! ஏப்பா லண்டனு,… என்னுமோ ஒலகமே அவ காலடீல உளுந்து கெடக்கறாப்புடியல்லொ மதாளிச்சுட்டு நடந்து வாறா!?” சிலாகித்தார் சேமலைக் கவுண்டர்.

“ஒலகமே அவ காலடீல இல்லீன்னாலும் ஒள்ளப்பதியும் சுத்து வட்டாரமும் அவ காலடீலதானுங்ளே கவுண்ரே!” என்றபடி கழுத்தைச் சுருக்கிக்கொண்டு, பெடல் மிதிப்பைத் தொடர்ந்தார் டெய்லர்.

“ஒள்ளப்பதியும் சுத்து வட்டாரமுமென்னொ. ஜில்லா முச்சூடும் அவ பேரு பிரபலியமாச்சே! பாலக்காடு, கோயமுத்தூரு, புள்ளாச்சீலிருந்தெல்லாம் பார்ட்டீக கார்ல வந்து கூட்டீட்டுப் போறாங்களாமா!?” என்றவர், “ஏன்டா தேவாங்கு,… சித்தருக்கு நீயி சிசியன்னாலும், மும்தாஸுக்குப் பக்கத்தூட்டுக்காரன்தானொ. அவளும் வேற 75 கிலோ கஞ்சா மூட்டையாட்ட இருக்கறா. கொனை கிள்ளிக் கொளுத்தாமயா இருப்ப நீயி? பொண்டாட்டி இல்லாத நேரத்துல நெம்மாற – வல்லங்கி(பாலக்காடு மாவட்டத்தில், பட்டாசுத் திருவிழாவுக்குப் பிரசித்தி பெற்ற இரட்டை ஊர்கள்)யாட்டம் அதிர்வேட்டே வெடிச்சிருப்பயே! உனக்குத் தெரிஞ்சிருக்குமே உள் விவகாரமெல்லாம்?!” என்கவும்,

“நீங்க வேற ஏனுங் கவுண்ரே…! அவளையெல்லாம் நாம கைல புடிக்க முடியாது. லாடு லபக்கு பார்ட்டீககட்டத்தான் பொளக்கம். சில்றைச் சாவுகாசமே கெடையாது. உள்ளூர்லீன்னா ஆயரம் – ரெண்டாயரம்னு ரேட்டுங்ளாமா. அசலூர் போயிட்டா நாலாயரம், ஐயாயரம்னு சொல்றாங்கொ. ஆளுக அஞ்சாறு பேருன்னாலுஞ் செரியே. போக்குவரத்து, பிரியாணி, கோட்டரெல்லாம் எஸ்ட்டாச் செலவு. பண்ண வேண்டியது, பண்ணக் குடாததுன்னு ஏகப்பட்ட கண்டுசன் வேறீங்கறாங்கொ” என்றான் அவனும்.

“அட, அப்புடி இருக்கறதுனாலதானொ, சித்தரு சொல்றாப்புடி எத்தனை பேர், எத்தனை பேரா இருந்தாலும், அவ ஒடம்பு எப்புடி,… கட்டுக் கொலையாம, சும்மா தளதளன்னு, அய்ப்ரீடுத் தக்காளியாட்டமல்லொ இருக்கறா!” என்றவர், சித்தரை இப்போது தைரியமாக ஏறிட்டு, “ஏனுங் சித்தரே…! நீங்க சொல்றாப்புடி இவளையெல்லாம் உட்டுட்டா அப்பறம் எப்புடீங் சித்தரே உய்ய முடியும்? இவதானுங்ளே எங்குளுக்கெல்லாம் உய்வே!!” என்றதும் விடலைகள் விஸிலடிக்காத குறையாக ஆர்ப்பரித்து, “ஒரு வாசகஞ் சொன்னாலும் திருவாசகமாச் சொல்லீட்டீங் கவுண்ரே” என்று பாராட்டின.

இத்தனை நேரம் சித்தரால் நேர்ந்த இழப்பை ஈடுகட்டிக்கொண்ட பெருமிதத்தோடு தனது ரசிக சிகாமணிகளைப் பார்த்துக்கொண்ட கவுண்டர், மடித்துக் கட்டிய வாக்கில் இருந்த வேட்டி இன்னும் மேலேறும்படியாக தொடையைத் தேய்த்துக்கொண்டு, மீண்டும் மும்தாஜ் வசமானார்.

முச்சந்தியை அடைந்திருந்த அவள் வடக்கே திரும்புவாளோ, தெற்கே பார்த்துக் திரும்புவாளோ என்று வெக்குனு பார்த்துக்கொண்டிருக்கையில்,

அவள் நேரே லண்டன் டெய்லர் கடைக்கு வரவும், ‘அடிச்சுதுரா ஓணம் பம்பரு’ என்று கூத்தாடியது கவுண்டரின் திகம்பர (திக்குகளையே ஆடையாக அணிந்த) மனம். “லண்டனு,… உனக்குப் பெரிய எடத்து கிராக்கி ஒண்ணு வருதப்போ” என்றவர், “ராணியாதி ராணி, ராஜ கம்பீரி, மும்தாஸ் தம்புராட்டி பராக் – பராக்” என்று ராஜசேவகன் பாணியில் அறிவித்தார்.

கப்பலைக் கவுத்துன டைட்டானிக் நாயகியாட்டம் வந்த அவளோ, கவுண்டரைக் கண்டுகொள்ளாமல், வெயில் தாழ்ந்துவிட்டதால் குட்டிச் செவுத்தில அமர்ந்துகொண்டிருந்த கதை எழுதுகிற தம்பி மற்றும் சித்தருக்கு ஆசனம் கொடுத்த சிகாமணியை அள்ளக் கண்ணில் நோட்டமிட்டபடி, வெளி ஸ்டூலில் வீற்றிருந்த சித்தர் அருகே செருப்பைக் கழற்றிவிட்டு, உள்ளே நுழைந்து, ஓரப் பார்வையால் உள்ளிருப்பவர்களைத் தரை தட்ட வைத்தவாறு டெய்லர் எதிரே நங்கூரமிட்டாள்.

“என்ன மும்தாசு,… நானுனக்கு பராக்கெல்லாம் குடக்கறேன்,… நீ நம்மளயக் கண்டுக்கவே மாண்டீங்கறயே…” என்றார் கவுண்டர்.

“உங்களயும் கண்டுட்டுத்தான் இருக்கறன்; உங்களயாட்டம் பல பேரையும் கண்டுட்டுத்தான் இருக்கறன். ‘ஜம்பம் சலசலங்குது; மொள்ளை மொலு மொலுங்குது’ங்கறாப்புடி, நானு சித்தரூட்டுக்கட்ட வரீல புடிச்சு என்னுமோ எளக்க நாட்டம் பண்ணி எல்லாத்தையும் இளிக்க வெச்சுப்போட்டு,… இப்ப பராக்கு குடுக்கறீங்களா பராக்கு?” காட்டமாகவே பதில் வந்தது.

“என்ன மும்தாசு அப்புடிச் சொல்லிப்போட்ட? உன்னைய எளக்கநாட்டம் பண்ணுவனா நானு? ‘ஜாஜகானாட்ட நானும்மு நம்ம மும்தாச லவ்வுப் பண்ணீட்டிருக்கறன்… ஆறு நூறானாலுஞ் சேரி; அய்யிரு பொண்டாட்டி முண்டையானாலுஞ் சேரி. அவுளுக்கு டஞ்சணக்குத் தாஸ்மகால்னாலும் கட்டிக் குடுத்து, ஜஞ்சணக்கா வெச்சுக்கோணும்’னு பேசீட்டிருந்தன். அட,… தெதுக்கு இப்புடி மொறைக்கற? இருந்தாலும் உனக்கு இந்த மொறைப்பும் வெறைப்பும்தான் அளகே! அதையப் பாக்கீலதான் ஆம்பளைகளுக்கு உன்ற மேல லவ்வே சாஸ்த்தியாகுது போ!” என்றவர் சித்தரிடம் திரும்பி, “தேனுங் சித்தரே,… நீங்க பத்தும் படிச்ச கத்திரி மூளை. சாமுத்திரிகா லச்சணமெல்லாம் தெரிஞ்சவரு. மும்தாசுக்குப் பாருங் முணுக்குன்னா மூக்கு மேல கோவம் வந்துருது. இப்புடி மூக்குக்கு மேல கோவம் வந்தா இடுப்புக்குக் கீள மச்சமிருக்கும்னு சொல்றது நெசமுங்ளா?” என்று கேட்டார்.

விடலைக் காளைகளுக்கு இதைக் கேட்டதும் உச்சி குளுந்து அடி சூடாகி விட்டது. “மறுக்காவும் ஒரு வாசகஞ் சொன்னாலும் திருவாசகமாச் சொல்லீட்டீங் கவுண்ரே!” என்று புளகாங்கித்தனர்.

மும்தாஜுக்கு அதையும் கேட்டு மச்சக் கோபம் வருவதற்கு முன்பு சித்தருக்கு நெற்றிக்கண் கோபமே வந்துவிட்டது. தோள் துண்டை உருவி உதறியபடி ஆங்காரத்தோடு எழுந்தவர், “உங்குளுக்கெல்லாம் சண்டைல சாவு கெடையாதப்பா” என்று தன் ப்ரத்யேக முத்திரையால் ‘வாழ்த்தி்’விட்டு, விறுவிறுவென நடந்து பேருந்துப் பயணியர் நிழற்குடைத் திட்டுக்குப் போய்

எரிச்சலாசனம் போட்டுக்கொண்டு, இன்னொரு பாணத்தையும் கொளுத்திக்கொண்டார்.


சித்தரின் ஆவேச நடவடிக்கைகளால் மும்தாஜுக்கு வந்திருந்த கோபத்தை வெளிக்காட்ட அவசியமில்லாமல் ஆகிவிட்டது. வந்த காரியத்தைப் பார்ப்பதற்காக கையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து டெய்லரிடம் இரண்டு ஜாக்கெட் பிட்டுகளைக் கொடுத்தாள். அளவு ஜாக்கெட்டைப் பிரித்தவள், அவளுக்குப் பின்னால் இருந்த கவுண்டரோ மற்றவர்களோ காணாதபடி நின்றுகொண்டு அதைத் தையல் மிஷின் மீது விரித்து, “வேற அளவுல ஒண்ணும் மாத்தமில்ல. இங்க மட்டும் புடிக்குது” என்று சுட்டிக் காட்டினாள்.

அவள் தன் செயலை சென்ஸார்படுத்தி நின்றிருந்தாலும், டெய்லரின் பொன் முறுவல், காரியம் இதுதான் என்று கவுண்டருக்கு உணர்த்திவிட்டது. சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா? “எங்க புடிக்குதாமா லண்டனு?” என்று எட்டிப் பார்த்தார்.

வெடுக்கென்று திரும்பிய மும்தாஜ், “எங்க புடிச்சா உங்குளுக்கென்னொ? அதையெல்லாம் தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்கொ?” என்றாள் எரிச்சலோடு.

“பொது அறிவ வளர்த்திக்கலாம்னுதேன்” என்று அதற்கும் கவுண்டர் பதில் சொல்ல, திருச்சபையினர் பல்லைக் கிஞ்சினர். மும்தாஜின் முகம் மேலும் இறுகியது.

டெய்லரும் சன்னமாக ஒரு ஸ்மைல் அடித்தபடி, “போன மாசந்தான் இந்த ப்ளவுசத் தெச்சுட்டுப் போன! அதுக்குள்ள டைட்டாயிருச்சா? அதென்ன ஒவ்வொருவாட்டியும் ப்ளவுஸ் தெக்க வரும்போது அடல்ஸ் ஒன்லிலயே புடிக்குதுங்கற?! சாப்படற சத்தெல்லாம் அங்கயே போகுதா?” என்று பார்வையோட்டிவிட்டு, “எந்தளவுக்குப் புடிக்குது? எத்தற இஞ்சு கூட்டோணும்?” என்று கேட்டார்.

“எங்கட்ட என்ன டேப்பா இருக்குது,… அளந்து பாக்கறதுக்கு? நீங்கதான் அளந்து பாத்துக்கோணும்” என்று அட்டென்ஷனில் நின்றாள் அவளும்.

“அவுருதான் தெச்சுட்டிருக்கறாரல்லொ! அவுரப் போயி ஏன் இமுசு பண்ணீட்டு? இப்புடித் திலும்பி நில்லு மும்தாசு,… நானு அளந்து சொல்றன்” என்று துணி வெட்டும் மேஜை மீதிருந்த டேப்பை எடுத்துக்கொண்டு எழுந்தார் கவுண்டர்.

மும்தாஜ் அட்டென்ஷன் தளராமல் அபௌட்டேர்னில் திரும்பி, “ம்ங்…? நீங்க உங்க புள்ளைக்கு ஜாக்கெட் தெக்கீல அளந்து சொல்லுங்கொ” என்றுவிட்டு, அவரிடமிருந்த டேப்பைப் பிடுங்கி டெய்லரிடம் நீட்டினாள்.

உடும்பு புடிக்கப் போயி, கைய உட்டாப் போதும்னானாம் என்கிற கதையாகிவிட்டது கவுண்டருக்கு. அவளது அந்த பதிலடியை விட, நாலு பேர் நடுவே நாக்கைப் புடுங்கிக்கறாப்புடி கேட்டுவிட்டாளே என்பது பெருத்த அவமானமாக இருந்தது. “சேத்துல அடிச்சா நீளத் தெறிக்கும்ங்கறது செரியாத்தான் போச்சு” என்று முணுமுணுத்தபடி, ஆணி இளகி கிறீச்சிடும் ஸ்டூலில் தளர்வாக அமர்ந்துகொண்டார். “மூச்ச நல்லா இளு… நல்லா ‘தம்’ கட்டு… இன்னி மூச்ச விடு…” என்று ஐப்பீஸ் தேர்வு ரேஞ்சுக்கு டெய்லரால் அளவெடுக்கப்பட்டுக்கொண்டிருந்ததின் கண்கொள்ளாக் காட்சியைக் கூட ரசிக்க முடியவில்லை. ‘சித்தரு சொல்றாப்புடி, எத்தனை பேர், எத்தனை பேர், எத்தனை பேர்தானொ’ என்று மயான வைராக்கியம் பூண்டு, பார்வையைத் திருப்பிக்கொண்டு, பழையபடி ஜன்னல் வழி ஜங்ஷனை நோட்டமிடலானார்.


அப்போது முச்சந்தியில் ஓர் அசம்பாவிதம். தம்பதி சமேதராக மேற்கேயிருந்து வந்துகொண்டிருந்த எக்ஸெல் சூப்பர் ஒன்று, பஞ்சாயத்து சேந்தி கிணத்தருகே வளைவில் திரும்பிக்கொண்டிருந்தபோது, தடாலெனச் சரிந்து விழுந்தது. முச்சந்திப் பார்வையாக இருந்த கவுண்டருக்கு அது தென்பட்டது. “அட – டட – டடா…! வண்டி உளுந்துருச்சப்பா பாவம்!” என்று சொல்வதற்குள்ளாகவே குட்டிச் செவுத்துக் கதாசிரியன், கூட இருந்த கோரா வேட்டி, தேவாங்கு ஆகியோர் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்திருந்தனர். இவரது அறிவிப்பால் உள்ளிருந்த இதர வெட்டி ஆப்பீசர்களும் வெளிப்பட்டு, அனைவரும் சம்பவ இடத்துக்கு விரையும்போது, சுற்றுபாடிலிருந்தும் சனம் ஓடி வந்துகொண்டிருந்தது. கவுண்டர் தன் உடம்பை ஸ்டூலிலிருந்து தூக்கி எடுத்து நிறுத்துவதற்குள் டெய்லரும் மும்தாஜும் கூட அங்கே சென்று சேர்ந்துவிட்டனர். குண்டுரு குண்டுருவென இவரும் உருண்டு சென்றார்.

கிழக்கே சங்கராயபுரத்தைச் சேர்ந்த, சமீபத்தில் திருமணம் முடித்திருந்த அந்த இளம் தம்பதி, இங்கே முன்சீப்சள்ளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பில்லியனில் அமர்ந்திருந்த மனைவியின் சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி, வண்டியோடு இருவரும் விழுந்துவிட்டார்கள். முக்கில் வேகம் குறைத்து வந்துகொண்டிருக்கையில் சம்பவம் நிகழ்ந்ததால் அடி ஒன்றும் பலமில்லை. இருவருக்கும் சிராய்ப்புக் காயங்கள்தான். ஆனால் பாதிக்கு மேல் சக்கரத்தில் சுற்றி சிக்கிவிட்டிருந்த சேலையை உருவி எடுக்கப் பலர் முயன்றும் முடியவில்லை.

“இதுக்குத்தானுங் சேரி கார்டு கண்டுசனா வெக்கோணும், பொம்பளை புள்ளைக முந்தாணி – துப்பட்டாவயெல்லாம் இறுக்கிக் கட்டிக்கோணும்ங்கறது.” வேடிக்கை மனிதர்கள் சாலைப் பிரசங்கம் நிகழ்த்தியபடியிருந்தனர். பயணியர் நிழற்குடையிலிருந்து மேற்சொருகிய கண்களோடு வந்திருந்த சிவபாணச் சித்தரும் ஓரமாக நின்று, நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களை முதுகில் கை கட்டிக்கொண்டு விச்ராந்தியோடு பார்க்கலானார்.

சேலைச் சிக்கலைக் கூர்ந்தாய்வு செய்த லண்டன் டெய்லர், “வெளிய நிக்கற அளவுக்கு அதைய வெட்டி எடுத்தாத்தானுங் உண்டு” என்றுவிட்டு, “டே, தேவாங்கு. ஒரு ஓட்டமுட்டு கத்திரி எடுத்துட்டு வா” எனப் பணித்தார்.

கத்திரி வந்தது. அவரே நிதானமாக தனது தொழில் வித்தைகள் அனைத்தையும் காட்டி சேலையைக் கந்தரகோளமாக வெட்டி எடுத்தார். இடுப்பில் ஒரு சுற்றுக்கு மட்டுமே மிச்சமிருக்க, அதுவரை சக்கரத்தருகே குத்திட்டு அமர்ந்து, நெஞ்சில் முழங்கை மடக்கி பெருக்கல் குறியிட்டு மானம் மறைத்துக்கொண்டிருந்த இளம் மனைவி, எழுந்து நின்று உடுத்திப் பார்த்தாள். வெட்டி எடுக்கப்பட்ட பாகம், கைகள் காத்த மானத்தளவு எட்டவில்லை.

சக்கர வியூகமிட்டிருந்த கூட்டத்தில் சேமலைக் கவுண்டர் தலைமையிலான வெட்டி ஆப்பீசர் திருச்சபையினர் மற்றும் இதர ஆண்கள் பலரின் பசித்த கண்கள் அந்த இளம் மனைவியின் அரைகுறை ஆடை உடலை நுனிப்புல், அடிப்புல் மேயலாயின. அசலூரில், அத்தனை ஆண்கள் நடுவே, அந்தப் பெண் பரிதவித்து, கூனிக் குறுகி, மறுபடியும் பெருக்கல் குறியிட்டாள். அந்தத் துச்சாதன சக்கரம் உருவிய சேலைக்கு பதிலாக, அந்தரத்திலிருந்து சேலை சப்ளை செய்ய, முன்னாள் சேலை திருடிப் பரமாத்மாவா வரப்போகிறான்? இளம் கணவன் வேட்டி கட்டியிருந்தாலாவது, ஆபத்பாந்தவனாகி அதை அவிழ்த்துக் கொடுக்கலாம். அவனோ ப்பேன்ட்காரன். என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

அப்போது மும்தாஜ், தான் கட்டியிருந்த சேலையை சரசரவென அவிழ்த்து, “இந்தா கண்ணு,… இதைக் கட்டிக்க” என்று கொடுத்தாள்.

பாதிக்கப்பட்ட மனைவி, கணவன் இருவருக்குமே திகைப்பு. இங்கே எவரையும் அறிந்திராத அந்தக் கணவன், “என்னுங்,… நீங் கட்டீட்டிருக்கற சீலையவே அவுத்துக் குடுத்துட்டீங்? அப்பறம் நீங் எப்புடி…?” என்று கேட்டான்.

உள்பாவாடையும் ஜாக்கெட்டுமாக நின்றிருந்த மும்தாஜ், “இந்த உடுதுணி கூட இல்லாம முண்டக் கட்டையாக் கூட என்னைய இந்த ஊர்ல இருக்கற அனேக ஆம்பளைக பாத்திருக்கறாங்கொ” என்றுவிட்டு இறுமாப்புடன் மேற்கு நோக்கி நடக்கலானாள்.

பசிக் கண்கள் வெகாறியோடு இப்போது அவளுடலில் பாய்ந்தன.

“உய்யடா உய்!” என்று அவர்களை நோக்கிக் கூவிய சித்தர், முதுகில் கட்டிக் கொண்டிருந்த கையை விடுவித்து, “உனக்காக ஒரு மள பெய்யும் மும்தாசு!” என்று அவள் செல்லும் திக்கில் ஆசீர்வதித்தார்.

– வாரமலர் / 2013, ஃபிப்ரவரி 24 & மார்ச் 03 இதழ்கள்.

கதாசிரியர் குறிப்பு:

வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *