கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 8,976 
 
 

அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு பல்லவன் அதிகாரிகள் பயணச் சீட்டு சோதனை செய்து கொண்டிருந்தனர். பின்னால் போக்குவரத்து தடை பட்டு நிற்கும் வண்டிகள் ஓயாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.. இரைச்சல் தாளாமல் சாலை ஓரம் செல்லும் பொழுதுதான் அந்த நிகழ்வை கவனித்தேன்.

அந்தப் பெண் 6″x 6″ பூந்துவலை கைக் குட்டையால் மூக்கை வினோதமாகப் பிழிந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் பார்த்தபின்தான் புரிந்தது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது… கைப் பேசியில் யாருடனோ பேசப் பேசப் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்… வயது சுமார் இருபதுக்குக் கீழ்.. மா நிறம்…. எதிர்கால நடுத்தரவர்க்கம்….

எனக்கு அந்த பெண் அழுவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது… சட்டென்று சென்று ‘என்ன?’ என்று கேட்கவும் தயக்கமாகவும் இருந்தது… அந்த இடத்தை விட்டு அகலலாம் என்றால் நான் செல்ல வேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை…. கைப்பேசியை எடுத்து ‘ஓலா ஆப்’ தடவினேன்…. இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப தடுமாறி இருப்பிடம் அறிந்து, செல்லும் இடம் கேட்டது… எவ்வளவு முயன்றும் அதற்குமேல் ‘ஆப்’ நகரவில்லை….. கடுப்பில் அடுத்து வந்த ஏதோ வண்டியில் ஏறிவிட்டேன்…..”

****

சித்திர குப்தன் தன் தொலை நோக்கியில் பார்த்துக் கொண்டிருக்க பின்னால் வந்த எமதர்மன்,

“என்ன சிகு…. வேடிக்கை……” என, திடுக்கிட்டு எழுந்தான் சித்திர குப்தன்

“ஒன்றுமில்லை எமதர்மரே….”

“ஒன்றுமில்லை என்றால் ஏனிந்தப் பதட்டம்….”

“அதில்லை மன்னா… பூலோகத்தில் ஒரு இளம் பெண்….”

“அதானே பார்த்தேன் வேலையைப் பார்க்காமல் பூலோகத்துப் பெண்களை ரசித்துக் கொண்டிருக்கிறீர் … போய் வேலையைப் பாரும்….”

“இந்த சின்ன வயதில் அந்த உயிர் பறிக்க வேண்டியிருப்பதை எண்ணி வருந்தினேன்…எதோ காதல் தோல்வி போல் இருக்கிறது… உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறாள்….”

“நம் வேலையில் வீண் பச்சாத்தாபம் கூடாது சிகு… உடனே கால தூதர்களுக்குச் செய்தி அனுப்பி காரியத்தை முடியும் …”

“சரி மன்னா…”

****

கைப்பேசியை சட்டைப் பையில் வைக்க முனைந்த போது நான் செல்லவேண்டிய இடம் தேடிய ‘ஓலா ஆப்’ திரை வினோத நிறம் மாறி, அதில் அந்தச் செய்தி பளிச்சிட்டது.,.

சிகு டு காதேதூ(காலதேவன் தூதன்): “பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண் – ஓவர்”

நான் அதிர்ச்சியில் உறைந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே

காதேதூ டு சிகு – “அடையாளங்கள் – ஓவர்”

சிகு: “அழுது கொண்டிருப்பாள், கையில் 6×6 பூந்துவலை கைக்குட்டை, காதல் தோல்வி – ஓவர்”

காதேதூ: “காதல் தோல்விக்கெல்லாம் அவ்வளவு எளிதில் இக்காலத்தில் உயிர் விட மாட்டார்கள் – ஓவர்”

சிகு: “காலதேவன் கட்டளை. உடனே முடிக்கவும் – ஓவர்”

காதேதூ: “முடித்துவிட்டுக் கூப்பிடுகிறேன்- ஓவர்”

****

நான் அதிர்ச்சியில் மீண்டும் உறைந்தேன். ‘ஓலா ஆப்பில்’ உலாவிக் கொண்டிருந்த கைப்பேசி எப்படி எமலோக அலைவரிசையில் கலந்தது. இவர்கள் அந்தச் சின்னப் பெண் உயிரைப் பறித்து விடுவார்களோ? நான் பதை பதைத்தேன், எப்படியாவது அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும்… அடுத்த நிறுத்தத்தில் இறங்கி எதிர் திசை சென்ற பேருந்தில் எறிக்கொண்டேன். நல்ல வேளை அதிக தூரம் சென்றிருக்கவில்லை… இன்னும் சில நிமிடங்களில் அந்த நிறுத்தம் வந்துவிடும்…

கைப்பேசியைப் பார்த்தேன் அந்த விநோத வண்ணம் இருந்தது. இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது… இறங்கவேண்டிய இடம் நெருங்க நெருங்க என் பதட்டம் கூடியது. எதிர் புறம் பார்த்தேன். ஒரு பேருந்து சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தது. மீண்டும் அதிகாரிகள் பயணச் சீட்டு சோதனை நடத்துகின்றனர் போலும்………

அந்தப் பெண்ணைப் பார்வை தேடியது… மெல்ல நடந்து, நின்று கொண்டிருந்த பேருந்தின் முன்புறமாக சாலையை கடக்கத் துவங்கியிருந்தாள்.., பேருந்தின் வலப்புறம் வேக வேகமாக வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன…. ஏதோ ஒன்று அவள் மீது மோதி விடுமோ. தெய்வமே அவளை நிற்கச் சொல்ல வேண்டுமே…

நான் நிறுத்தத்தில் வேகமாக இறங்கி சாலையின் குறுக்கே ஓடும் பொழுது கைப்பேசியில் “நெருங்கி விட்டோம்….” என்ற செய்தி வந்தது. கைப்பேசியிலிருந்து பார்வையை எடுக்காமல் அந்தப் பெண்ணை நொக்கி கை ஆட்டிக் கொண்டே குரல் கொடுக்க வாயைத் திறந்த போது

“அம்மா….!!!!!”

வேகமாக வந்த கனரக வாகனம் மோதி காற்றில் மிதக்க, கைப்பேசி சிதறி தூள் தூள் ஆனது…

“ஓவர்….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *