உயிர் விட்ட தமிழும் உறங்கும் உண்மைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 8,802 
 
 

துக்க சஞ்சாரமான கருந்தீட்டு வாழ்க்கையின் சுவடுகளையே புறம் தள்ளி மறந்து விட்டு ஆன்மீக விழிப்பு நிலை கைகூடிய உயிர் வியாபகமாய் நிலை வாசல் கதவருகே விசுவரூபமெடுத்து வந்து நிற்கும் சுந்தரியையே வெறித்துப் பார்த்த வண்ணம் செளந்தரம் ஆச்சி , திண்ணையின் மறு கோடியில் ஒன்றும் பேசத் தோன்றாது வாயடைத்துப் போய் மெளனமாக அமர்ந்திருந்தாள் வயது அதிகமாகாவிட்டாலும் ஊரிலே அவளை எல்லோரும் அப்படித்தான் ஆச்சி என்று உரிமையோடு அழைக்கிறார்கள். மடத்தடிக்குப் போய் காய் கறி வியாபாரம் செய்து வந்த களைப்பு அவளுக்கு மடத்தடியென்பது மல்லாகம் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கிற ஓர் சிறிய கொட்டகை. அங்கு பெரிய அளவில் மீன் வியாபாரமும் களை கட்டி அமோகமாய் நடக்கும் அவள் கணவன் ராசு சுருட்டுத் தொழில் செய்து கொண்டு வரும் காசு அவன் குடிக்கே செலவாகி விடுவதால் தான் அவளுக்கு இந்த நிலைமை அதிலும் ஆறும் அவளுக்குப் பெண் பிள்ளைகள்

முதல் மூன்று பெண்களும் அடுக்கடுக்காய் வயதுக்கு வந்து கன்னி கழியக் காத்திருக்கிற நிலைமை. மூத்தவள் சுந்தரிக்கு வயது இருபத்தொன்பதாகிறது. இந்த வருடம் கழிந்தால் முப்பது வயது அரைக் கிழவியாகிவிடுவாள். அதற்குள் அவள் கல்யாணத்தை முடிக்கலாமென்றால் அதிலும் பெரும் சிக்கல். அவளுக்கு வீடு தேடி ஒரு வரன் வந்திருக்கிறது. செளந்தரம் ஆச்சியைப் பொறுத்த வரை அது குபேர வரம் கிடைத்த மாதிரி அவர்கள் வலை போட்டுத் தேடினாலும் கைக்கு வராத அப்படியொரு தேவ புருஷன். அவள் நினைவில் தான் அப்படி

சுந்தரிக்கு அந்தக் குபேர பாக்கியத்தை விட இது வரை உயிரென நம்பி வாழ்கின்ற சத்திய தரிசனமான வழிபாட்டினைக் குறிக்கும் பெருமைக்குரிய தனது ஆத்மாவாகவே உள்ளத்தில் நிலை கொண்டு பதிந்து போயிருக்கும் தன்னுடைய சைவ சமயமே பெரிதென்றுபட்டது .ஓர் ஏழையாகப் பிறந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? சீ நினைக்கவே மனம் கூசுகிறது அருளம்மா டீச்சர் வீடு தேடி வரும் போதே நினைத்தாள் ஏதோ விபரீதம் நடக்கத்தான் போகுதென்று அது தனக்குத் தோண்டப்படுகிற புதைகுழி தானென்று காலம் கடந்த ஞானமாய் இப்போது தான் உறைக்கிறது அருளம்மா டீச்சர் கிறீஸ்து சேவகியாகவே இருந்து விட்டுப் போகட்டும் அதற்கு உருட்டுவதற்கு இல்லை பலிக்கடா ஆக்குவதற்கு என் தலை தானா கிடைத்தது?

அவ சைவப் பள்ளிக்கூடத்திலை பாலர் வகுப்புக்குப் படிப்பிக்கும் ஒரு சாதாரண டீச்ச.ர் இதையும் தாண்டி ஒரு கல்யாணத் தரகராக மட்டுமல்ல மதத்திற்கும் ஆள் சேர்க்கும் ஒரு கூலிப் படையாகவும் வேஷம் தரித்து அவ படியேறி வந்த போதே அம்மாவுக்கு அது உறைக்காமல் போனது ஏன்? எல்லாம் அவவின்ரை கோழைத்தனமான கையறு நிலைமை தான் ஆனால் நான் அப்படியில்லை எனக்குள்ளை அசாத்தியமான விழிப்பு நிலையிருக்கு பிறக்கிற போதே பிள்ளையார் கோவில் மணியைக் கேட்டே கண் விழிச்சவள் நான் ஒரு நாளைக்கு மறந்து போயோ வேறு காரணம் கருதியோ திருநீறு பூசாமல் விட்டால் மூதேவி பிடிச்ச மாதிரி எனக்குள்ளே வெறுமை சூழ்ந்து வருத்தும் அப்படிச் சைவ பாரம்பரிய பெருமைகளுக்காக உயிரைக் கொடுத்து வளர்ந்த எனக்கா இப்படியொரு தண்டனை?

“சுந்தரி என்ன பிள்ளை யோசிக்கிறாய்?இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்க வேணும். இதை ஏன் நீ புரிஞ்சு கொள்கிறாயில்லை?” என்று குரல் சூடேறிக் கேட்டாள் செளந்தரம் ஆச்சி

“என்ன பெரிய மாப்பிள்ளை? பாங்கிலை வேலை. கை நிறையச் சம்பளம் இtதனாலை எங்கடை வறுமை ஒழிஞ்ச ஒரு வாழ்க்கை கிடைக்குமென்று நீ நம்புறாய். என்னாலை அப்படி யோசிக்க முடியேலை. அதை விட முக்கியம் எல்லா வழிகளிலும் எங்களை நல் வழிப்படுத்தி ஈடேற்றுகின்ற சமயம் தான். எங்களுக்குக் கண் போல இருக்கிற, அதை விற்றுச் சித்திரம் வாங்க நான் ஆசைப்படேலை இது ஒரு போதும் நடக்காது “

“என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?வலிய வாற சீதேவியைக் காலால் உதைக்கிற மாதிரி இப்படி மறுத்துப் பேசுறதுக்கு உனக்குள்ளை அப்படி என்ன பெரிசாய் முளைச்சிருக்கு?

“” அம்மா! அதைச் சொன்னாலும் உனக்கு விளங்கப் போறதில்லை சைவத்துக்காக நான் உயிரையும் விடுவன் வெறும் தசை வாழ்க்கைகு ஆசைப்பட்டு அப்படி வாற ஆன்மீக பலத்தை எப்பவும் நான் இழக்கப் போறதில்லை. எனக்குக் கல்யாணம் ஒன்று நடக்காட்டாலும் பரவாயில்லை காலம் முழுக்க நான் இப்படியே இருந்திட்டுப் போறன் என்னை விட்டிடுங்கோ”

“அப்ப நீ வழிக்கு வர மாட்டியே நாளைக்கு அருளம்மா டீச்சர் வந்தால் நான் என்ன சொல்லுறது?”

“இதுக்கு வேறை ஆளைப் பாருங்கோ என்று வாயைத் திறந்து சொல்ல வேண்டியாது தான் “

“என்னாலை முடியாது நீயே இதைச் சொல்லு அவவிட்டை”

அருளம்மா டீச்சரோடு அவர்களுக்கு நீண்ட காலப் பழக்கம் அவள் ஒரு தனிக் கரக்டர் சிரிப்பொழுகப் பேசியே ஆளை மயக்குகிற சுபாவம் அவளுக்கு ஊரிலே அவளைத் தெரியாத ஆட்களே இல்லை எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் காலையில் அவள் வரும் போது தர்க்கரீதியாகக் கதைக்க வேண்டிய விடயங்கள் குறித்துத் தனக்குள் பேசி ஒத்திகை பார்க்கிற நிலைமையில் சுந்தரிக்கு இந்த உலகமே அடியோடு மறந்து போயிற்று. இரவு சாப்பிடக் கூட மனம் வரவில்லை செளந்தரம் ஆச்சி பல முறை கூப்பிட்டுப் பார்த்தும் பேசாமல் இழுத்துப், போர்த்துக் கொண்டு படுத்து விட்டாள் கவலை மிகுந்து நித்திரையாகப் பாதி மயக்கத்தில் இருந்த போது கனவில் ஒரு குரல் கேட்டது

“அக்கா எழும்பு நான் ஒரு கதை சொல்லுறன் கேக்கிறியே?”

குரல் கேட்டு அவள் கண் விழித்துப் பார்க்கிற போது இருட்டிலே முகம் தெரியவில்லை. குரல் அடையாளம் கண்டு சுரத்தின்றிக் கேட்டாள்

“என்ன தங்கா? அம்மாவுக்குத் துணையாக நீயும் எனக்குத் தர்மோபதேசம் பண்ணப் போறியே?”

தங்கா என்ற அந்தத் தங்கரத்தினம் அவளுக்கு நேரே இளையவள்

“நான் அதுக்கு வரேலை”

அப்ப எதுக்குச் சாமத்திலை வந்து என்னைக் குழப்புகிறாய்?

“இப்ப நான் சொல்ல வாறது என்னெண்டால் நீ வேண்டாமென்று உதறித் தள்ளுறியே அந்த வேதக்காரப் பெடியனைக் கட்டுறதுக்கு, எனக்கு முழுச்சம்மதம் நாளை அருளம்மா டீச்சர் வந்து உன்னைக் கேக்கேக்கை நீ பயப்படாமல் இதைச் சொல்லக்கா உனக்குப் பதிலாக நான் போறன் “

“என்ன விளையாடுறியே ? கண்ணை வித்து அப்ப நீ சித்திரம் வாங்கத் துணிஞ்சிட்டியே?”

“எதக்கா கண்? இஞ்சை பசியிலை எங்கடை வயிறெல்லாம் பத்தியெரியுது போற போக்கிலே உயிரே மிஞ்சாது இதிலை கண்ணைப் பற்றி நீ பேசுறது சுத்த அபத்தமாக இருக்கு எங்களுக்காக நீ ஒன்றும் தியாகம் செய்ய வேண்டாம் அம்மா பாவமல்லே அதைக் கூட மறந்திட்டியே தினமும் காய் கறி விக்கிறதுக்காக நடு மத்தியான வெய்யிலிலை கிடந்து மனுஷி சாகுது அதைக் காப்பாத்தவாவது இதுக்கு நீ இணங்கலாம் தானே”

“போதும் நிறுத்து எனக்கு வேலை கிடைச்சிட்டால் அம்மாவை வீட்டிலை வைச்சு ராணி மாதிரி நான் காப்பாற்றுவன். நீ ஒன்றும் எனக்கு வழி சொல்லித் தர வேண்டாம். உனக்கு இஷ்டமெண்டால் நல்லாய் அந்த வேதக்காரனோடு போ நான் ஒன்றும் உன்னைத் தடுக்க மாட்டன் இப்ப என்னைப் படுக்க விடு”

மறு நாள் அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து காய கறி வியாபாரம் செய்வதற்காக செளந்தரம் ஆச்சி புறப்பட்டுப் போனாள்.. அது அருளம்மா டீச்சரின் வருகைக்கு முகம் கொடுக்க முடியாமல் போன காரணத்துக்காகவும் இருக்கலாம்… அவள் புறப்பட்டுப் போன கையோடு சில நிமிடங்கள் கழித்து பாடசாலைக்குப் போகுமுன்பே ஆச்சியிடம் தனது வேண்டுதலுக்கான விடை கேட்டறியப் படலை தாண்டி அருளம்மா டீச்சர் வரும் போது வழக்கமாக ஆச்சி அமரும் சிம்மாசனமல்ல திண்ணை வெறிச்சோடி இருள் அப்பிக் கிடந்தது

முகம் குழம்ப உள்ளே வந்த டீச்சர் செய்வதறியாது மெளனம் கனத்து நிற்கிற போது ” வாங்கோ டீச்சர்” என்றபடி உள்ளிருந்து தங்கரத்தினம் வெளிப்பட்டு வந்தாள்

“ என்ன தங்கா நீ வாறாய்? அவசரமாய் நான் கதைக்க வந்தது ஆச்சியோடல்லே”

“எனக்குப் புரியுது டீச்சர் நீங்கள் என்ன கேக்கப் போறியளென்பது, தெரிந்ததாலே இப்ப நான் சொல்லுறன் நீங்கள் கேக்கிறதுக்கு இணங்கி மதம் மாறி நீங்கள் சொல்லுற பெடியனைக் கட்ட அக்கா சம்மதிக்கேலையென்று எனக்கு வருத்தமாக இருக்கு அதுக்குப் பதிலாய் நான் ஒரு முடிவோடு இப்ப வந்திருக்கிறன், எங்களுக்காக அம்மா படுற கஷ்டத்துக்காக நானே மனம் விரும்பி எடுத்த முடிவு தான். இது. என்ன தெரியுமோ? இதிலே எனக்கு முழுச் சம்மதம் நான் உங்கடை மதத்திற்கு வாறன். எனக்கு இதைச் செய்து வையுங்கோ”

“ சந்தோஷம் தங்கா! ஏழாலை கிழக்கிலே அவையள் பெரிய ஆட்கள் அந்தோனியின் மகன் பீட்டர் ஒரு அக்கா மட்டும் அவனுக்கு இருக்கு நீ அங்கை போனால் ராணி மாதிரி வாழலாம் முதலிலை உனக்கு ஞானஸ்தானம் நடக்க வேணும் அப்புறம் தான் சர்ச்சிலே உங்கடை கல்யாணம் வெகு சிறப்பாக நடக்கப் போகுது ஆச்சியோடை பின்னேரம் வந்து இதைப் பற்றிக் கதைக்க வேணும். இப்ப எனக்கு நேரம் போகுது நான் போயிட்டு வாறன்”

“போயிட்டு வாங்கோ டீச்சர்”

அவள் வெற்றிகரமாகச் சாதித்த களை மாறாமல் திரும்பி அறைக்குள் வரும் போது ஜன்னலடியில் முகம் கறுத்து சுந்தரி ஜடமாக வானத்தை வெறித்துப் பார்த்த வண்ணம், வெறும் நிழலாக நின்று கொண்டிருப்பதை ஓர் காட்சி அவலமாக அவள் எதிர் கொள்ள நேர்ந்தது இனியும் அவளுக்கு ஏன் இந்த மன வருத்தம் என்று பிடிபடாமல் அவளருகே போன தங்காவை முகம் நிமிர்ந்து பார்க்க மனம் கூசி உயிரையே பறி கொடுத்து விட்ட மாதிரி ஆற்றாமையோடு மனம் கலங்கி அவள் கேட்டாள்

“அடீ பாவி என்ன காரியம் செய்து விட்டு வந்து நிக்கிறாய்?இப்படிக் கண்ணை வித்துச் சித்திரம் வாங்க அப்படி என்ன அவசரம் உனக்கு வந்திட்டுது? சொல்லடி”

“அக்கா கோபப்படாதையக்கா எல்லாத்தையும் விட உனக்குச் சமயம் பெரிசாய் படலாம் எனக்கு அப்படித் தோன்றேலை அதை விடப் பசி முக்கியமல்லே அம்மா படுற கஷ்டத்துக்காகத் தான் இப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கு “

“போதும் நிறுத்து வெறும் தசை நினைவுகளுக்காக உயிரை இப்படி விக்கிறது கேவலமாகப்படவில்லை உனக்கு? போ என்ரை முகத்திலை முழிக்காதே இனி நானும் நீயும் உடன் பிறப்பு என்பதை ஒரு கெட்ட கனவாக நான் மறந்து போய் விடுறன் திருநீறு என் நெற்றியில் இருக்கும் வரை இது அழியாது”

உண்மையில் சுந்தரியின் திருநீறு வியாக்கியானம் குறித்த சங்கதிகள் உள்ளார்ந்த தெய்வீகப் பொலிவுடன் அவள் ஆன்மீகஞானத்தில் கரை கண்டு தேறிய ஒரு தீவிர இறை பக்தி கொண்ட சமய வாதியாய் இருளிலும் ஒப்பற்ற ஒளித்தேவதையாய் வானில் நிலை நின்று மின்னிச் சுடர் விடவே என்று பிடிபடாமல் மதம் மாறிக் கல்யாணம் செய்யப் போகின்ற களிப்பு மாறாமல் தங்கா கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிற மனதின் கனம் மாறாமல் அவ் அறையை விட்டு நிழல் பிரிந்து போகிற போது அவள் உயிர் தரித்து நின்ற அறையும் இருள் கவிந்து மூடிக்கிடப்பதாய் சுந்தரிக்கு உணர்வு தட்டிற்று இப்படிப் புறம் போக்கான இருளே பழக்கப்பட்ட நிலையிலும் தனது உயிர்ப் பிரக்ஞையான விழிப்பு நிலையில் உடலைக் கவ்வுகின்ற அந்த இருள் கூட அடியோடு தனக்கு மறந்து போகுமென்று அவள் மிகவும் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தாள்

தங்காவை நினைக்கும் போது கோபம் வருவதற்குப் பதிலாக அவளின் தரங்கெட்ட ஈனச் செயலை எண்ணி மனதில் கழிவிரக்கம் தான் மிஞ்சியது/ அவர்களுடைய விளையாட்டுப் பருவத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயுள்ள பனந்தோப்புக்கு வந்து பசியைப் போக்குவதற்காக அவள் பனம்பழம் எடுத்துக் கஷ்டப்பட்டுத் தோலுரித்துக் களி உண்ணும் போது களைப்பு மேலீட்டினால் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டி அந்த வியர்வை மழையோடு பனங்களியும் கலவையாய்ச் சேர்ந்து அவள் சிவந்த கன்னமெல்லாம் ஊற்றெடுத்து வழிகிற அழகைப் பார்த்தவாறே சுந்தரி மெய் மறந்து நின்ற தருணங்கள் போய் காலக் கொடுமையால் அந்தப் பசிக்கு இரையாக இப்போது அவள் எல்லாமே விட்டொழிந்து ஒரு சூனிய இருப்பு நிலையில் மதம் மாறித் தங்கள் பெருமையெல்லாம் இழந்து தனிமைப்பட்டு நிற்கப் போவதை எண்ணச் சிறு வயது ஞாபகப் பொக்கிஷமாய் மனதில் சுடர் விட்டு மின்னுகின்ற அந்த பனங்காய்ச் சொக்குச் சிவப்பழகு கூடக் கறைபட்ட பொய்யான ஒரு நிழல் தோற்றமாய் அவள் மனதை விட்டு, அடியோடு வேர் கழன்று மறைந்து போனது சோற்றுக்கு ஆசைகாட்டி அதற்காக இங்கே உயிர் விடப் போவது தங்கா மட்டுமல்ல தமிழும் சேர்ந்து சாகுமென்று அவள் பெரும் ஆற்றாமையோடு நினைவு கூர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *