உயிருக்குத் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 427 
 
 

(1991ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறுப்பினர்கள் : 

செங்கமலம்-கிராமாந்திரச் சூழலில் வாழும் குடும்பத் தலைவி கணவனை அடக்கியாள்பவள். 38 வயது. 

சிங்காரி – செங்கமலம், முத்துக்காளையின் மகள். வயது 20. 

நாட்டாண்மை – ஊருக்குப் பெரியவர். மரியாதைக்குரியவர். 50 வயது. 

முத்துக்காளை-செங்கமலத்தின் கணவன். சொந்த புத்தி இல்லாதவன். 43 வயது. 

பன்னாரி – முதியோர் கல்வித்திட்ட அலுவலர்; இளைஞர். திட்டம் வெற்றி பெறப் பாடுபடுபவர். வயது 25. 

காட்சி-1 

(நடுவம் கிராமத்தில் பெரிய ஆலமரத்தை யொட்டிய ஓர் ஒட்டுக் கட்டிட வீடு. வீட்டு வாசலில் கோழி தானியத்தைக் கொத்திக் கொண்டிருக்கிறது. வாசலில்…) 

பன் : ஐயா!…ஐயா ! … 

செங் : யாரது? 

பன்: நாந்தாங்க பன்னாரி… 

செங்: பன்னாரியா? யாருன்னு தெரியலியே! என்ன விஷியம்? 

பன் : முத்துக்காளை அவுங்க இருக்காங்களா? 

செங் : ஏண்டா! என்னமோ பேரு வச்சவன் மாதிரில்ல மண்டைல அடிச்சாப்ல சொல்றே!…எலேய்! ஒளுங்கா ஓடிரு…இல்லே தோலெ உரிச்சு உப்புக் கண்டம் போட்டுப்புடுவேன்… ஆம்மாம்! 

சிங் : என்னம்மா நீ! அவரு யாரோ எவரோ! இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறியே! ஒனக்கே நல்லா இருக்குதா?…நீ நடந்துக்கிட்ட மொறை சரியாயில்லே! 

செங் : ஏண்டி! எனக்கே புத்தி சொல்றியா? ஒனக்கு அம்புட்டு தூரம் துணிச்சலா? போடி உள்ளே!வயசு வந்த பொண்ணு வாயக் காட்டாதடி…யாருகிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும்…பெரிய வங்களுக்கு புத்தி சொல்றத இன்னையோட வுட்டுப்புடு ஒன்னச் சொல்லி குத்தமில்லே! எந் தலைவிதி! 

சிங் : ஒனக்கு, அந்தப் படைச்ச கடவுள்தான் பொறுமை யையும் நிதானத்தையும் கொடுக்கணும்… அது, இந்தப் பெறவில வரும்னு எனக்குத் தோணலை… சரி! சரி! நான் உள்ளே போய்த் தொலைக்கிறேன் …நீ மொதல்ல கத்தறத நிறுத்து! 

செங் : வாயக்கொறடி வாயாடி! உள்ளபோயும் என்ன பேச்சு? யேய் முண்டாசு கட்டினாப்புல முடி வச்சு கிட்டு, தெருக்கூத்துல இருக்றாப்ல படுதாவக் கட்டு கிட்டு நிக்ற பெரிய மனுசா!… கருமம்! போய்யா… இன்னமே இங்க நின்னுகிட்டேயிருந்தே மரியாதை கெட்டுப்போயிடும் ஆமாம்! ஜாக்ரதை! வெட்டி மடவாய்ல வச்சுப் புடுவேன்! இந்த செங்கமலத்தப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது… 

(முத்துக்காளை வந்துகொண்டே) 

முத் : என்ன செங்கமலம்? யாரு பய? ஏன் இங்க வந்து குத்துக்கல்லு மாதிரி நிக்கறான்… எதுக்கு வந் தானாம்? அவனுக்கு ஏதாவது போதாத காலமா? 

செங் : ஒன்னியத்தான் தேடி வந்திருக்கானாம்.. இந்தப் பயலுவளையெல்லாம் நம்பாதே மச்சான்! முன்ன ஒருபய இப்பிடித்தான் வந்தான்.. வூட்டுக்குள்ள போய் திரும்பறத்துக்குள்ள நம்ப கோளிக்குஞ்சு ரெண்டைக்காணோம்.. ஜாக்ரதை! கண்ட பயலுவ கிட்டல்லாம் வாய் கிளிய பேசித் தொலைக்காதே! 

பன் (தனக்குள்): போயும் போயும் கோளிக்குஞ்சுதான் திருடணுமா? (முத்துக் காளையை நோக்கி) ஐயா! நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டா இப்பிடியெல்லாம் பேச மாட்டீங்க… 

முத்: நீ யாரா இருந்தா என்னய்யா! தொறக்காதே வாயை! 

செங் : மூணாவது வூட்லதானே நாட்டாமை இருக்காரே! அவுருகிட்ட இளுத்துக்கிட்டு போய் வுடு.. பெரிய மனுஷன்… வெவரந் தெரிஞ்சவரு. இவனுவகளுக் கெல்லாம் புரியராப்லசொல்லுவாரு… நமக்கெதுக்கு ஊர்ப் பொல்லாப்பு… 

முத்: ஆமாம் புள்ளை! நமக்கு எடுத்த ஒடனே ஆத்திரந் தானெ வருது… அவரு படிச்சவரு… நெதானமா பேசுவாரு .. நாமதான் ரெண்டெளுத்து படிக்காம போய்த் தொலஞ்சுப் புட்டோம்… 

செங் : சரி! சரி ! வளத்தாம சீக்கரமா பேசிப்புட்டு வேகமா வா! ஒனக்கு நின்னாக்க நின்ன எடம் .. போனாக்க போன எடம்… ஒனக்குக் களுத்த நீட்டுன நாள்ளேருந்து எனக்கு ஒபத்திரவந்தான்!

முத் : வந்தர்ரேன் புள்ளே… உள்ளெஎலப்புள்ளி நோய்க்கு மருந்து வச்சிருக்கேன்…கிராமசேவக்கு எப்பிடியோ தெளிக்கச் சொன்னாங்க.. மறந்து தொலஞ்சுப் புட்டேன்…இந்தக் கொதிகஞ்சி சிங்காரி கிட்ட கொடுத்து படிக்கச்சொல்லி பக்குவமா தெளி! நான் வந்தர்ரேன்…நடய்யா! 

பன் : இதோ வந்து கிட்டே இருக்கேன்…

முத்: ஓடுனே! மூஞ்சி மொகரைய பேத்துருவேன்… 

பன் : (தனக்குள்) இவரப் பார்த்தாலே பாவமாயிருக்குது …எம் மூஞ்சிய பேக்கறாராம்! 

பன் : (முத்துக்காளையை நோக்கி) நாந்தான் ஒங்க பின்னாடியே வந்துகிட்டே இருக்கேனே! அப்பரம் என்ன? 

காட்சி-2 

செட் அதேதான். 

(நாட்டாமைக்காரர் வீடு முத்துக்காளையின் வீட்டிலிருந்து மூணாவது வீடு… நல்ல மாடிக் கட்டிடம்… வாசலில் கயிற்றுக் கட்டிலில் 50 வயது மதிக்கத்தக்க நாட்டாமை முகத்தில் அமைதி, அடக்கம், எளிமையுடன் மேலே ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கிறார்). 

முத்: ஐயா! 

நாட் : என்ன முத்துக்காளை! ஏது இவ்வளவு தூரம்… காரியம் இல்லாம வரமாட்டியே! அடடே பக்கத்ல பன்னாரித்தம்பியா? வாய்யா! வா! உட்காரு…எப்ப வந்தே! 

பன் : காலைலதான் வந்தேங்கய்யா! ஒங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோஷமுங்க… 

முத்: என்னங்க! நாட்டாமை கோளியும் ஆடுந் திருடுற பசங்களையெல்லாம் வாங்க போங்கன்னுகிட்டு… மரத்துல கட்டிவச்சு பட்டைய எடுக்கச் சொல்றத வுட்டுப்புட்டு… 

நாட் : யாரு எவருன்னு தெரிஞ்சுக்காம இப்பிடியெல்லாம் பேசாதீங்க! ஏதோ நம்ப கிராமத்துக்கு நல்லது செய்ய வந்த ஆளைப்போயி வாய் புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடாது. தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க.. முத்துக் காளைக்கு வெவரம் போதாது.. அவரு வெகுளி! மனசுல ஒண்ணுமே கெடையாது. 

பன் : சமூகப் பணி செய்யுறவங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் ரொம்ப சாதாரணமுங்க.. எனக்குக் கோபமோ.. வருத்தமோ கெடையாதுங்க… நல்ல வேளை ஒங்க வூட்டுக்காவது கூட்டி யாந்தாரே! அந்தவரைக்கும் நல்லது.. 

முத்: நாட்டாமே! கேக்குறேனேன்னு தப்பா எடுக்காதீங்க!  இந்த எளவெட்டப் பசங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?.சும்மா புத்தகப் புளுங்க ஒண்ணு சொல்லிப்புட்டு ஒம்பது செஞ்சதா எளுதிக்கு வாங்க…ஏதோ கேக்கவும் பேசவும் நல்லா இருக்கும்! நடைமொறைக்கு ஒத்து வராப்ல இருக்கும்னு எனக்குத் தெரியலை…நீங்க சொல்றதுக்குக் கட்டுப் படறேன்! அம்புட்டுத்தான்! 

நாட் : முத்துக்காளை! கார்த்திய மாசத்து பொரிமாதிரி பொரிஞ்சுகிட்டே போவக்கூடாது…நீங்களுந்தான் மாடு வளக்கிறீங்க.. தொண்டை அடைப்பான் நோயி மாட்டுக்கு வர்ரதை எப்பிடிக் கண்டு பிடிக்கறதுன்னு ஒங்களுக்குத் தெரியுமா? இல்லெ டெல்லி எருமையோட வளப்புப் பத்திதான் தெரியுமா? அட, மொறைதான் தெரியுமா? மாத்துப்பயிர். 

 முத் : இவுருக்கு அதப்பத்தியெல்லாந் தெரியுமுங்களாக்கும்…நீங்க அதையெல்லாம் நம்புறீங்களாக்கும்… 

நாட் : இந்த பாருங்க முத்துக்காளை! இந்தக் கிராமத்ல இத்தினி வூடுங்க இருந்தாலும் ஒங்க வூட்டத்தான் நான் தேர்ந்தெடுத்து ஆபீசருக்கு எழுதியிருந்தேன் அதைப் புரிஞ்சுக்காம…காரணம் இல்லாம ஒத்தரு ஒங்கவூட்டுக்கு வருவாரா? எல்லாம் ஓங்க நன்மைக் குத்தான், 

காட்சி-3 

(முத்துக்காளையின் வீடு) 

செங் : தம்பி பன்னாரி! நீ நல்லா இருக்கணும்.. ஒன்னிய சரியாப் புரிஞ்சுக்காம கன்னா பின்னான்னு பேசிப்புட்டேன்.. மனசுல வச்சுக்காதே…நீ மன்னிச் சிட்டதா சொன்னாத்தான் மனசு சரியாவும். 

பன் : என்னங்க! நீங்க எவ்வளவு பெரியவங்க…நீங்க போயி எங்கிட்ட இப்பிடியெல்லாம் பேசுறீங்க… கோபம் உள்ள எடத்துல கொணம் இருக்குதுங்களே! 

முத் : நாங்கூட நெனக்கலை… இம்புட்டு கொறஞ்ச நாளுக்குள்ள எனக்கு எளுத்துக்கூட்டி படிக்க வருமுன்னு…முன்னையெல்லாம் ரயில்ல போறப்ப எந்தப் பொட்டீல ஏறப்போனாலும் ரிஜர்வ் பொட்டிம்பான்…நீங்க அந்த வார்த்தைங்களை அர்த்தம் ஆவுறாப்ல சொன்னதுக்கப்பரந்தான் ஒரு தெம்பும் துணிச்சலும் வந்துச்சு…என்ன இருந் தாலும் படிச்சவன் படிச்சவந்தான்! 

பன் : இப்ப நீங்க அனுபவத்தில பேசறீங்க…அதனால ஒங்க கிட்ட இப்ப சொன்னாக்க வௌங்கிக்கு வீங்கன்னு நெனைக்கறதோட நீங்களே நாலு பேருக்கும் வெளக்குவீங்க இல்லையா? 

செங் : தம்பி! நல்லதை யாரு சொன்னாலும் கேட்டுக் குடணும்னு இப்பல்ல தெரியுது! ஒரு கடுதாசி வந்தா அத்தப் படிக்க மத்தவங்க தயவை தேடணும்…அவுங்க நேரம் பாத்து…போவணும்… கடிதாசியப் படிக்கிற அளவுக்கு வெரசா சொல்லிக் குடுத்துப்புட்டீங்க தம்பி…ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. 

பன் : இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா? படிப்புக்கு வயசு கெடையாதுன்னு! படிப்பு இருந்தா மத்ததுங் கள்ளாம் தானே வரும். கத்துக்கிடணும்னு ஆசை இருந்தாப் போதும்.. கத்துக்கிடலாம்… 

முத் : என்னங்க பன்னாரி! நானே மொதல்ல மெரண் டேன்.. நம்பளையும் இந்தச் சின்னப் பசங்களை வெரட்றா மாதிரி வெரட்டி ‘அ’ னா, ஆ’வன்னா லேருந்துதான் தொடங்குவீங்கன்னு நெனச்சேன்… இந்தப் பொடியங்கிட்ட போய் படிக்கறதான்னு வெக்கப்படக்கூடச் செய்தேன்.. நீங்க எங்க மனக நோகாம் சொல்லிக் விஷயங்களை எவ்வளவு குடுக்குறீங்க… 

பன் : இந்த மாதிரியெல்லாஞ் சொல்லி எனக்கு மண்ட கனம் வரீராப்ல செய்யாதீங்க…எங்களுக்கு குடுத்த பயிற்சியிலே இன்னும் பத்துல ஒரு பங்குகூட நாஞ் சொல்லலியே! எப்பிடியோ முதியோர் கல்வியோட நோக்கத்தை புரிஞ்சுகிட்டீங்க! மகிழ்ச்சி! 

செங் : மெய்யாச் சொல்றேங்க.. மண் வளப் பரிசோ தனை யப்பத்தி நீங்க வெளக்கமாச் சொன்னப்பரந்தான் புரிஞ்சுது… 

பன் : ஒங்களுக்கெல்லாம் ஜப்பானிய சாகுபடி மொறை தெரியுமில்லியா… 

செங்: ஆமாம்.. கொஞ்ச காலத்துக்கு முன்னே அதப்பத்தி பிரமாதமாச் சொன்னாங்க.. சும்மா சொல்லலாமா! நல்ல வெளச்சல், 

பன் : அப்படிப்பட்ட அந்த ஜப்பான்ல படிக்காதவங்களே கெடையாது! அதனாலதான் அந்த நாடு எல்லா வகையிலேயும் முன்னேறியிருக்குது… 

முத்: அதாவது படிப்புக்கும் வருமானத்துக்கும் கனக்ஷன் இருக்கு துங்கிறீங்க! சரிதானுங்களா? 

பன் : ஆமாங்க…சரியாச் சொல்லிப்புட்டீங்களே! 

முத் : கேக்குறேனேன்னு கோவிக்கப்படாது…. எத்தி னியோ மேல் நாடுங்கள்ள கூடத்தான் படிச்சவங்க நெறையபேர் இருக்காங்க…அங்கயும் கொலை, கொள்ளைன்னு குத்தங்க இருக்கத் தானெ செய்யுது… 

பன் : ரொம்ப நல்ல கேள்வி! படிப்புன்னாக்க எழுதப் படிக்கத் தெரியறது மட்டுமில்லே! அடுத்த வங்களுக்கு முடிஞ்ச வரைல நல்லது செய்யறது தான் படிப்போட நோக்கம்! நல்ல பாரம்பரியம் உள்ள நம்ப நாட்ல எல்லாரும் படிச்சவங்களா இருந்துப்புட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பத் திரிக்கும் வேலையே பெரும்பாலும் இருக்காது… எனக்கு இதுல முழு நம்பிக்கை இருக்குது… 

செங் : சரிதாங்க தம்பி! முந்தில்லாம் நாஞ் சொல்றதைத் தான் மத்தவங்க கேக்கணும்… கேக்குலீன்னா வாய்ல வந்தபடி திட்றதுன்னு செய்துகிட்டிருந்தேன். ஒரு வாட்டி நாட்டாமை கூட கண்டிச்சாரு .. எனக்கே தெரியுது…படிப்புக்கு ஒரு தனி மருவாதை இருக்கத் தான் செய்யுது… 

காட்சி-4 

(நாட்டாமைக்காரர் வீட்டில்) 

நாட் : என்ன பன்னாரி! சத்திய சோதனை எப்பிடி? 

பன் : அண்ணல் காந்தியோட அருளும் ஒங்க ஆசியும் இருக்றதாலே எல்லாம் நல்லபடியாவே போய்க் கிட்டிருக்குங்கய்யா! 

நாட் : இந்த வூர்லயே இந்த முத்துக்காளை வூட்டைத்கான் பேய் வீடுன்னு சொல்லுவாங்க.. அதுலயும் இந்த செங்கமலம், அந்த முத்துக்காளைய படுத்தறபாடு! அப்பப்பா! தாங்காது… அவ சொல்றத கேட்டுக் கிட்டு இந்தப் பய தக்கா புக்கான்னு குதிக்கிற குதி இருக்கே. அப்பாடி! அவுங்க வூட்டை சரி பண்ணினா இந்த வூரையே சரி பண்ணின மாதிரி… அந்தப் புண்ணியம் ஒங்களைத்தான் சேரும்… 

பன் : எல்லாம் பெரியவங்களோட நல்லெண்ணந்தாங் காரணம். ஐயா ஒங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? ஒங்களுக்குத் தெரியாம இருக்க து… செங்கமலத் தம்மாளே இப்ப கோர்ட்ல இருக்குற தங்களோட கேசையெல்லாம் வாபஸ் வாங்கப் போறாங்க… புல்டோஸரை வரவழைச்சு மோட்டாங்காட்டு நெலத்தை சரி பண்ணி பயிர் பண்ணப்போறாங் களாம்.. ஃபில்ட்டர் பாயிண்ட் வேற போடப் போறாங்களாம்… 

நாட் : ஆமாம்! முத்துக்காளைகூட வந்து சொல்லிப் புட்டுப் போனாப்ல… நீங்க வந்து இவ்வளவு செய்தது கூடப் போதாது…அந்தப் பொண்ணு சிங்காரிய அவுங்க படுத்துறபாடுதான் சொல்லி முடியாது…பொண்ணை வெளீல பழக விடாம வூட்டுக்குள்ளாறயே பூட்டி வச்சிருந்தா நல்லா வளக்கறதா நெனச்சுக் கிட்டிருக்காங்க…அத மாத்தணும்..இது எவ்வளவு பெரிய முட்டாத்தனம்! நாஞ் சொன்னாக்க அவ்வளவு எடுபடாது! எல்லாம் மொரடு…! 

பன்: ஆண், பெண் பழக்கத்த பத்தி நம்ப நாட்ல இருக்கற எண்ணத்த காலத்துக்கு ஏத்தாப்ல மாத்தறது அவ்வளவு சொலபமில்லே! படிச்சதா நெனச்சுகிட்டு இருக்கற செல பேருங்க கிட்ட கூட இன்னும் இந்தப் பழைய நெனப்புதானெ இருக்குங் கய்யா! 

நாட் : தம்பி! என்னைப் பொறுத்தவரைல கிராமங்கள்ள, முக்கியமா இந்தக் கல்யாணம், புள்ளைப்பேறு, புள்ளை வளர்ப்பு, வரவு செலவ, நாலு பேரு கிட்ட எப்பிடிப் பேசறது ஆக இந்த மாதிரி விஷயங்களுக் காவது ‘ஒங்களை மாதிரி ஆளுங்க இங்கெயே தங்கி அவங்களோட கலந்து வாழ்ந்து சொல்லிக் கொடுத்தா ப்ரச்சனைங்க கொறையும்னு நெனைக் கிறேன்… 

பன் : நீங்க சொல்றது ரொம்ப “சரிங்கய்யா. சட்டமோ, அதிகாரமோ மக்களைத் திருத்தாது…கல்வி தான் அதைச் செய்யமுடியும். 

காட்சி-5 

(முத்துக்காளையின் வீட்டில்) 

செங் : ஏண்டி! ஒனக்கு அம்புட்டு ஆய்ப் போச்சுதா? இந்த வெடுவெட்டிப்பய மொட்டையனத்தான் கட்டிக்கு வேன்னா சொல்றே! அது இந்தக் கட்டை இருக்குற வரைக்கும் நடக்காது… சொல்லேன் யா! வாயில் என்ன கொளுக்கட்டையா? ஒன்னோட வேற பெரிய ரோதனையாப் போச்சுது… 

முத் : ஆமாம் புள்ளே சிங்காரி ஒங்கம்மா சொல்லிப் புட்டாள்ள! பொறவு பேச்சென்ன? அவ சொல் றாப்ல நடந்துக்க! 

சிங் : என்னப்பா நீங்க! சின்னப் புள்ளேலேருந்து “அவந்தான்டி ஒம்மச்சான்னு” நீங்க அம்புட்டுப் பேருந்தானெ சேந்து சொன்னீங்க…இப்பப் போயி மனசை மாத்திக்கச் சொல்றீங்க. இது நியாயமா? என்னால அம்மா சொல்லுறதைக் கேக்க முடியாது… முடியாது. என்ன ஆனாலும் சரி! 

செங் : நியாய அநியாயத்தைப் பேசற அளவுக்கு ஒனக்கு வயது பத்தாது… பெரியவங்க சொல்றதைக் கேளு ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்… (அந்தச் சமயம் பன்னாரி வர அவரைப் பார்த்து) வாங்க தம்பி! நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் வெவரந் தெரிஞ்சவரு! இவளுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்க தம்பி பெண் புத்தி, பின் புத்தின்னு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்குறா? கருவேப்ல கொதது மாதரி ஒரே பொண்ணுங்க! 

பன் : ஒங்க சொந்த விஷயங்கள்ள கலந்துக்கற அளவுக்கு என்னை மதிக்கறதைப் பத்தி நான் பெருமைப் படறேன்…கொஞ்சம் கவனமாக் கேளுங்க .. 

செங் : சொல்லுங்க தம்பி! 

பன் : நீங்க சொல்றதுக்கு முன்னாலே எனக்கு எல்லாம் தெரியும். ஒங்க பொண்ணு மாமரத்துக் கேணில விளுந்து தறகொலை செஞ்சுக்க பாத்திச்சு! நல்ல காலமா நாட்டாமை தடுத்துச் சமாதானம் செஞ்சுப்புட்டாரு… 

முத் : அடப்பாவி பய புள்ளே! 

பன் : நானும் மொட்டையன்ங்கறவரைப் பத்தி விசாரிச் சேன். அவங்கப்பா வுட்டுப்புட்டுப் போன ஒரு ஏக்கர் நெலத்தை பத்து ஏக்கரா பெருக்கி யிருக்காரு… வயது வந்தோர் கல்வித் திட்டதல சேந்து படிச்சு புதிய புதிய மொறைகளை விவசாயத்ல பயன் படுத்துறாரு! தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பச்சத்து பத்தி அனுபவபூர்வமா பல பேருக்குச் சொல்றாரு! போதுமா? 

முத் : எந்தப் பயிருக்கு எதை வூடுபயிரா போடலாம்னு வேற தெரிஞ்சு வச்சிருக்கான்…பல பல வகையில் பாத்தா அவன் நல்லவந்தான் புள்ளே. தந்தங்கச்சு கல்யாணத்துக்கப்புரந்தான் தங்கல்யாணம்னு வேற சொன்னான். அதையும் நல்ல எடத்ல கட்டிக் குடுத்துப்புட்டான்.. நல்ல குடும்பப் பொறுப்புள்ள பயதான்… 

பன் : ஜனநாயக நாட்ல அவங்கவங்க விரும்பினவங் களைக் கல்யாணம் செய்துக்க உரிமை இல்லேன்னாக்க என்ன ப்ரயோஜனம் தோல்வியினாலயும் வெறுப்புனாலயும் தற்கொலை பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்? நாட்டுக்குத்தானெ! இளைஞர் களோட சதவீதம் கொறையாதா? 

செங் : நாட்டுக்கு எப்பிடிங்க தம்பி நஷ்டம்? 

பன் : பெண்ணு கோ ஆணுக்கோ அரசாங்கம் செலவு பண்ணின பணம் போனதுதானே! பொதுவா கிராமாந்தரப் பக்கந்தான் தற்கொலைங்க அதிகமா நடக்கறதாச்சொல்றாங்க! மனசுல தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளந்துப் புட்டா இது மாதிரி தற்கொலைங்களைக் கொஞ்ச கொஞ்சமா நிறுத்தலாம். கல்வி ஒண்ணுதான் இதைச் செய்ய முடியும்.. 

முத் : ஏந்தம் பி எல்லாரும் முதியோர் கல்வின்னு சொல்றாங்க நீங்க என்னமோ வயது வந்தோர் கல்வின்னு சொல்றீங்களே! 

பன் : 15 வயசுலேருந்து 35 வயதுள்ளவங்களுக்குள்ள திட்டந்தானெ இது! 

முத் : இப்பப் புரியுதுய்யா! நல்லாவே புரியுது! 

செங் : அது என்னமோ தம்பி! எங்க வூட்ல ஒரு அது பையனாவே வளந்துப்புட்டே! ‘நீ வந்தப்புரந்தான் எங்க வூே களை கட்டுச்சு! வயசுல சின்னவனா இருந்தாலும் ஒனக்கு மூளை சாஸ்தி! ஒன்னோட இந்த முதியோர் கல்வித் திட்டத்துக்கு எங்களோட தோட்டத்து வூட்டையே கொடுத்துப்புடறோம். 

(நாட்டாமை வருகிறார்). 

நாட் : நான் வர்ரது பூஜைவேளை கரடி மாதிரி இருக்குமோ? 

செங் : ஐயய்யே! எங்க தெய்வம் நீங்க…இல்லேன்னா இந்தத் துக்குரி ஊர் செணத்தல்லே நாற அடிச் சிருப்பா… 

நாட் : புள்ளைய கோவிச்சுக்காதீங்க! சீக்கிரமா கல்யாணத்துக்குத் தேதிய வச்சுப்புடுங்க… 

பன் : கல்யாணப் பத்திரிகையை அவசியம் அனுப்புங்க… நான் வர மொயற்சி பண்றேன்.. 

முத் : உசுருக்குக் தொனை கல்விதான்னு சொல்லி எங்க கண்ணைத் தொறந்த நீங்க ஊருக்குப் போறேன்னு சொல்றீங்களே! 

பன் : முதியோர் கல்வியோட அர்த்தத்த புரிஞ்சு கிட்டீங்க! இந்த வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்த என்னோட சினேகிதங்க வருவாங்க…மத்த கிராமங்களுக்கும் நாம்போக வேண்டாமா? 

செங் : அவசியம் போகணும் தம்பி! என்னை மாதிரி இருக்ற அரைவேக்காடுங்களையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? போய்ட்டு வாங்க! ஆனாக்க எங்களை மறந்துப்புடாதீங்க! (கண்களில் நீர் மல்க.) 

பன் : அடடே! அழுவாதீங்க! பழகினவங்கனை மறக்க முடியுமா? 

யாவரும்: (கண்ணில் வரும் நீரைத் துடைத்துக்கொண்டே) போய்ட்டு வாங்க! நீங்க நல்ல இருக்கணும்! 

பன் : நாட்டாமைய்யா! எனக்காகக் கொடுத்த பரிசுப் பொருளுங்களை கிராமத்து ஜனங்களுக்கே கொடுத்துப் புடறேன்! நாம இந்தியர்களாகவும் இருக்கணும்! இந்தியப் பொருள்களையே வாங்கணும்! கல்வி கூட இந்திய மயமாக்கப் படணும்! அதுக்கு நாம் பாடுபடணும்… ஒங்க எல்லாருடைய ஒத்துழைப்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி! வணக்கம். போய்ட்டு வர்றேன்… 

யாவரும்: வாங்க! வணக்கம்! 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *