அப்பாவோடு கோவிலுக்குப் போய்வந்த கையோடு பாடப் புத்தகங்களை வைத்துக்கொண்டு போர்ட்டிகோவில் உட்கார்ந்தான் மகேஷ்…
அவனுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை.
கோவிலில், அப்பாவிடம் கோவில் குருக்கள் சொன்னதே மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. ‘அவர் ஏன் அப்படிச் சொன்னார்?’ என்பதைச் சிந்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.
“குருக்களண்ணா…!”
“வாங்கோ…! வாங்கோ…! ஏதும் விசேஷமா…!”
“ம்…! வர்ற வாரம் எனக்கு ஜன்ம நக்ஷத்ரம் வருது. ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு அபிஷேகம் பண்ணலாம்னு…!”
“பேஷா…! பண்ணிட்டாப் போறது…!” சொல்லிக்கொண்டே உள்ளே எழுந்து சென்றார். கர்பக் கிருஹத்தில் கற்பூர ஆரத்தி காட்டினார். அப்பா பத்து ரூபாய் நாணயம் ஒன்றை மகேஷ் கையில் கொடுத்து தட்டில் போடச் சொன்னார்.
சிப்பத்திலிருது கிள்ளி எடுத்து. அப்பாவின் வலது கையில் திருநீற்றைப் போட்டார். மகேஷின் நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிவிட்டார். மீண்டும் உள்ளே போனார். ஒரு தேங்காய் மூடியை எடுத்து அதற்குள், நிர்மால்ய புஷ்பமும், விபூதி குங்கும பொட்டலத்தையும், எலுமிச்சம் பழத்தையும் திணித்தார்.
இரண்டு கைகளையும் சேர்த்துக் திருவோடு போல் ஏந்திய அப்பாவின் கைகளில் தேங்காய்மூடிப் பிரசாதத்தைப் போட்டார்.
“அபிஷேக சாமான்கள் லிஸ்ட் தரேளாண்ணா…” விநயமாகக் கேட்டார் அப்பா
“ம்…! சாயரக்ஷை தரேனே…!”
“இன்னும் கொஞ்ச நேரத்துல பொறப்பட்டு, கிராமம் வரைக்கும் போறேன். நாளைக்கு வந்துடுவேன்… வந்து வாங்கிக்கறேனே…!”
“சிவ சிவ…! ஊர்ல எவ்ளோ உயர்ந்த சிரேஷ்டமான குடும்பம் உங்களுது…! நீங்க அலையறதாவது…! நானே ஆத்ல கொண்டு வந்து கொடுக்கறேன்… நீங்க உங்க ப்ரொக்ராம் படி புறப்படுங்கோ…” என்றார் குருக்கள்.
‘அப்பா குருக்கள் சொன்னதை மறுக்கவில்லை. ஏற்றுக் கொண்டார். அப்படியானால் அப்பா உயர்ந்த மனிதரா…? இந்த வீட்டில் இருக்கிற எல்லோரும் உயர்ந்த மனிதர்களா…? எதனால் அப்படிச் சொன்னார் குருக்கள். உயர்ந்த மனிதர்கள் என்பதற்கு என்ன அளவுகோல்….?’ என்றெல்லாம் கேள்விகள் அடுக்கடுக்காக மகேஷின் மூளையை ஆக்ரமித்திருந்ததால் படிப்பில் கவனம் செல்லவே இல்லை.
‘நாளைக்குப் பள்ளிக்கூடம் செல்லும்போது ‘பிரபந்தம் ஸ்ரீனிவாசன்’ சாரிடம்’ கேட்கவேண்டும்…’என்று எண்ணிக் கொண்டான்.
அந்த முடிவுக்கு வந்ததும் அந்தச் சிந்தனையிலிருந்து வெளிவந்து, புத்தகத்தைப் பிரித்தான்.
“அய்யோ…” என்ற பலமான அலறலும் அதற்க்குப் பின்னணி இசைப் போல ‘க்…ளீ….ங்…ங்…ங்…” என்று கண்ணாடி உடையும் ஓசையும் இணைந்து கேட்டது.
இரண்டாம் கட்டில் காமாட்சி விழுந்துவிட்டதைப் பார்த்தான் மகேஷ். “ஆன்ட்டி…!” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான்.
முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து பீஸ் பீஸாகச் சிதறியிருந்தது.
சத்தம் கேட்டு, “காமாட்சி, என்னடீ ஆச்சு…?” அலறியபடியே கிச்சனிலிருந்து ஓடி வந்தாள் அம்மா.
‘செர்வண்ட் மெய்ட்’ காமாட்சி, குற்ற உணர்வோடு நடுங்கியபடி நின்றாள். அடிபட்ட இடங்களைத் தடவிவிட்டுக்கொண்டாள்.
“ஏண்டீ… பாத்து வரமாட்டே…! வழக்கம்போல வெள்ளிக்கிழமைக்கு நீதானே அலசிவிட்டே…!” என்றாள் அம்மா.
“…..”
என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தலை குனிந்து நின்றாள் காமாட்சி.
“வெள்ளிக்கிழமையும் அதுவுமா கண்ணாடியை போட்டு உடைச்சிட்டியே… வீடு வௌங்குமா…? உனக்கெல்லாம் கால்ல ஒரு கண்ணு வைக்காம விட்டானே ஆண்டவன்… அவனைச் சொல்லணும்…!” என்று பாடிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டாள் அம்மா.
அம்மாவைத் தொடர்ந்து பாட்டி கொல்லைக்கட்டிலிருந்து வந்து விட்டாள். அவள் பங்குக்கு இரைந்தாள். “ஏண்டீ காமாட்சி…! நீ ஒரு பொம்பளைதானே…! பொம்பளைக்கு பொறுமை வேண்டாமோ…! அதுவும் கண்ணாடியை கொண்டு போகும்போது ஜாக்கிரதையாப் போக வேண்டாமோ…? அவ்ளோ மெதப்பு… நல்லா வெளங்கிடும்…!” என்று கரித்துவிட்டுப் போனாள்.
“வெள்ளிக் கிழமையும் அதுவுமா… இப்படி ஆகாத காரியம் பண்ணிட்டு நிக்கறயேடீ…! உலக்கை மாதிரி நிற்காம எடத்தைச் சுத்தம் பண்ணு…!” அடுத்தபடியாக, அங்கு வந்த பெரியம்மா, தன் பங்குக்குச் அதிகாரம் செய்துவிட்டுப் போனார்.
விழுந்து அடிபட்ட வலியைவிட நூறு மடங்கு வலித்திருக்கும் ‘மெய்டு காமாட்சி’க்கு. என்று நினைத்தான் மகேஷ்.
காமாட்சிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அடிபட்ட இடங்களை லேசாக அமுக்கிவிட்டுக்கொண்டாள். பிளாஸ்டிக் முறத்தையும் வாருகோலையும் எடுத்துக்கொண்டு கால் தாங்கியபடியே வந்தாள். உடைந்த கண்ணாடித் துண்டுகளை எச்சரிக்கையோடு எடுத்து, இடத்தைச் சுத்தம் செய்தாள்.
சுத்தம் செய்து முடிப்பதற்காகவே காத்திருப்பவர் போல் அப்பா அங்கு வந்தார்.
“வழுக்கி விழுந்துட்டியா காமாட்சி…”
“ஆமாங்கய்யா…”
“ஜாக்கிரதையா வரப்படாதோ…?”
“சாக்கிரதயாத்தான் வந்தேனுங்கய்யா…வளுக்கி விட்டுருச்சுங்கய்யா…”காமாட்சியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“…….”
சிறிது நேர மௌனம்.
மவுனத்தை அப்பாதான் உடைத்தார் “காமாட்சி… அந்தக் கண்ணாடியோட விலை தெரியுமா உனக்கு … 200 ரூபா. போன மாசம்தான் வாங்கி மாட்டினேன்.”
“…”
என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக கண்ணீர் வடித்தபடி நின்றாள் காமாட்சி.
“இந்த மாசம் உன் சம்பளத்துல 200 ரூபாய் பிடிச்சுக்குவேன்… வருத்தப்படாதே…!” என்றார் அப்பா கூலாக.
“…”
காமாட்சி பதில் ஏதும் சொல்லவில்லை.
அம்மா, பெரியம்மா, பாட்டி, அப்பா எல்லோரும் மெய்டு காமாட்சியிடம் நடந்து கொண்ட முறையை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தான் மகேஷ். ஒன்றும் பிடிபடவில்லை.
‘அப்பாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்…’ என்ற முடிவுக்கு வந்தான்.
“அப்பா…”
“சொல்லு மகேஷ்”
“ஸ்லிப் ஆகி விழுந்துட்டாங்க மெய்டு. அவங்களுக்குப் போய் 200 ரூபாய் சம்பளத்துல பிடிக்கறது சரியாப்பா…?”
“மகேஷ்… நீ சின்னப் பையன். உனக்கு இதெல்லாம் புரியாது. அப்படிச் செஞ்சாதான் எதிர்காலத்துல இது போல தப்பு நடக்காம எச்சரிக்கையா இருப்பாங்க. வயசான உனக்கேப் புரியம். இப்போ நீ சீக்கிரமா போய் ரெடியாகு. நீ என்னோட கார்ல கிராமத்துக்கு வரேதானே…?”
அப்பாவோடு காரில் கிராமம் நோக்கிப் போகும்போதும் மகேஷ் மனதில் மெய்டு காமாட்சியைப் பற்றியே மனம் யோசித்தது.
“உயர்ந்த சிரேஷ்டமான குடும்பம் உங்களுது…!” என்று சொன்ன கோவில் குருக்களும் மனத்திரையில் வந்து வந்து போனார்.
ஓய்வெடுப்பதற்காக ஒரு பத்து நிமிஷம் சாலை ஓரமாய் மர நிழலில் கார் நிறுத்தினார் அப்பா.
“அது என்னப்பா?” சுட்டு விரல் நீட்டிக் கேட்டான் மகன்.
“அதுவா…! சூளை போட கல் அறுக்கறாங்க…?”
“அப்படின்னா?”
“வீடு கட்ட செங்கல் உபயோகப் படுத்தறோம்தானே..!”
“ஆமாம்…”
“அந்தச் செங்கல் இப்படித்தான் தயாராகுது… பார்க்கலாம் வா…” என்று சொல்லிக்கொண்டே கல்லறுக்கும் தளத்திற்கு மகேஷை அழைத்துச் சென்றார்.
“களிமண்ணை நல்லா மிதிச்சி மிதிச்சிப் பதப்படுத்தறாங்க பாரு…”
“……” பார்த்தான்.
“பிசைந்த களி மண்ணை வண்டீல போட்டுக் கொண்டு போறாங்களா…”
“…ம்…”
“ஒரு கட்டமான அமைப்புல போட்டு அமுக்கறாங்க பாரு…”
“ம்… ஆமாம்…!”
“அதுக்குப் பேரு ‘ஆசு’.”
“ஆசா…? ‘அச்சா’ப்பா…?”
“‘அச்சு’ன்னுதான் வெச்சிக்கோயேன்…!” என்று சொல்லிக்கொண்டே அப்பா ஆர்வ மிகுதியால், அப்பொழுதுதான் அறுக்கப்பட்டுத் தரையில் கிடந்த பச்சைக் அடுக்கை கவனிக்காமல் முன்னே நடக்க… ‘தொபுகடீர்…’ என்று ‘குண்டக்க… மண்டக்க…’ விழுந்தார்.
ஆங்காங்கே மண் சுமந்தும், மண்பிசைந்தும், கட்டாயம் அடுக்கியும், தள்ளுவண்டி தள்ளிக்கொண்டும், குடத்தில் தண்ணீர் சுமந்தும், இப்படி பல விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர்கள், அனிச்சையாய் பதறியடித்து ஓடிவந்தனர்.
காலையில் வீட்டில் வேலைக்காரி காமாட்சி விழுந்தது மகேஷின் நினைவுக்கு ஒரு கணம் வந்து போனது.
“சா……ர்…..!.”
“அய்யோயோ…”
“அடியாத்தீ…”
“அடடடடடடா…”- என்ற அநுதாபக் கூக்குரல் எழுப்பியபடி ஓடி வந்தனர்.
“பாத்து கவனமா வரக்கூடாதுங்களாய்யா… தப்பு என்மேலத்தான் நான் சொல்லியிருக்கணும்!” என்று தப்பை தன் தலையில் போட்டுக்கொண்டார் கல் அறுத்துக் கொண்டிருந்தவர்.
முழங்கை, முகரை, முட்டி, முகம், என சேறு அப்பிக் கொண்டுக் கிடந்த அவரைக் கைத்தூக்கி எழுப்பிவிட்டார்கள்.
“அடி கிடி படுலயே..?” பாசமாய்க் கேட்டார்கள்.
“த்ஸௌ..த்ஸெள..? கவனமா வந்திருக்கக் கூடாதா…”
“முழங்காலை நல்லா உதறுங்க சார்…”
“யாரது…! சண்முகமா… பார்த்துக்கிட்டு நிக்கறது…? போயி ஒரு அன்னக்கூடைல தண்ணி பிடிச்சி வந்து அய்யா கை காலெல்லாம் சேறு தொடச்சி விடு…”
“அய்யா…! இந்தாங்க இந்தத் துணியால துடைச்சிக்கங்க…”
மேலும் அக்கம் பக்கத் திடல்களிலிருந்தெல்லாம் கூட்டம் கூடுவதற்குள் அவசர அவசரமாகச் கால் தாங்கியபடி காரை நோக்கிச் சென்றார் அப்பா.
முற்பகலில் வீட்டில் மெய்ட் காமாட்சி கால்தாங்கி நடந்து வந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளைச் சுத்தம் செய்த காட்சி நினைவில் வந்து போனது மகேஷ்க்கு.
அப்பா விழுந்ததால் நசுங்கி உருவிழந்த பதினைந்து இருபது பச்சைக் கற்களைப்பற்றி நினைத்துப் பார்த்தான் மகேஷ்.
‘தெரிந்தோ தெரியாமலோ அவைகளை நசுக்கி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டாரே அப்பா. அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகவே தெரியவில்லையே…!’
ஆனால் நசுக்கப்பட்டு நஷ்டமான பச்சைக் கற்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அப்பாவின் மேல் கரிசனமும் அனுதாபமும் காட்டும் இந்த மனிதர்களை ஆச்சரியத்தோடு பார்த்தான் மகேஷ்.
“அய்யா…! இந்த இளநீரைக் குடிங்க…!” என்று திடலில் இருந்த தென்னையில் பறித்ததை கொண்டு வந்து பாசத்தோடு கொடுத்தார் ஒருவர்.
இங்கு உள்ள எல்லாரையும் தன் குடும்பத்தாரோடு ஒப்பிட்டுப் பார்த்தான் மகேஷ்.
கோவில் குருக்கள் அறியாமையால் ஏதோ சொல்கிறார். இந்தப் பாட்டாளி மக்களே உயர்ந்த மனிதர்கள் என்று உறுதியாகத் தோன்றியது மகேஷ்க்கு.
அடுத்த முறை கோவிலுக்குப் போகும்போது குருக்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அறியாமையைப் போக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான் மகேஷ்.
– 28.04.2022