மனித வாழ்க்கையில் மாற்றம் என்பது தேவைக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் நிகழ்கின்ற இயல்பான நடைமுறை. பெரும்பாலான மாற்றங்களுக்கு அடிப்படை ஒரு செயல் அல்லது ஒரு பொருளுக்கான மாற்று ஏற்பாட்டிலேதான் உருவாகின்றது.
மனித வாழ்க்கையில் மாற்றம் என்பது தேவைக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் நிகழ்கின்ற இயல்பான நடைமுறை. பெரும்பாலான மாற்றங்களுக்கு அடிப்படை ஒரு செயல் அல்லது ஒரு பொருளுக்கான மாற்று ஏற்பாட்டிலேதான் உருவாகின்றது.
பெரிய கைப்பிடியுடன் கூடிய நீளமான குடைகள்தான் முன்பெல்லாம் புழக்கத்திலிருந்தன. பின்னர் அந்த நீளத்தைப் பாதியாகக் குறைத்து ஒரு மடிப்புடன் கூடிய குடைகள் பயன்பாட்டுக்கு வந்தன. இது முதலாவது மாற்றம். இப்போது இரட்டை மடிப்பில் குடையின் நீளத்தை வெகுவாகக் குறைத்து மக்கள் தம் கைப்பைக்குள் அடக்கிக் கொள்ள முடிகின்றது. இது இரண்டாவது மாற்றம். இவை ஒரு புறம்.
வெயில் காலத்தில் தொப்பி அல்லது குல்லாய் அணிவதும், மழைக்காலமாயின் மழைக்கோட்டு எனப்பெறும் மழைத்தடுப்பு மேலாடை அணிவதும் குடைக்குப் பதிலான மாற்று ஏற்பாடுகள். இவை மற்றொருபுறம்.
மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது என அனைத்துச் சூழலிலும் மாற்று என்பது இடம் பெறும். “சனிப்பிணம் தனிப்போகாது’ என்பது ஊரறிந்த பழமொழி. அதனால், இறந்தவரின் உடலைத் தூக்கிச் செல்லும்போது ஒரு கோழிக்குஞ்சை உடன்வைத்து எடுத்துச் செல்வதைக் காணமுடியும். இறந்தவர் உயிர்ப்பலி கருதாதவர் என்றால் ஒரு தேங்காய் – கோழிக்குஞ்சுக்கு மாற்றாக – எடுத்துச் செல்லப்பெற்று உடைக்கப்படும்.
பழங்காலத்தில் தேர்த்திருவிழாவின்போது, குருதிக் காணிக்கையை முதலிலேயே செலுத்திவிட்டால் தேர் உலாவின்போது உயிர்ச்சேதமோ, விபத்தோ நிகழாது என நம்பினர். அதனால், ஆடுகளைத் தேர்க்காலில் பலிகொடுப்பது அக்கால மரபு. உயிர்க்கொலை கூடாது என்ற சட்டம் வந்ததும் தேர்ச்சக்கரத்தின் கீழ் எலுமிச்சம்பழம் மாற்றாக அமைந்து நசுக்கப்பெற்றது. குருதி நிறம் இடம்பெற்றால்தான் மனம் நிறைவுபெறும் எனச் சிலர் எண்ணியதால் இரத்தத்திற்குப் பதில் குங்குமச் சிவப்பு அங்கே இடம் பெற்றது.
இன்றும் இருசக்கர, நான்குசக்கர வண்டிகளைப் புதிதாக வாங்கியவுடன் ஏதாவது ஒரு கோயிலின் முகப்பில் நிறுத்திச் சக்கரங்களின் கீழே எலுமிச்சம்பழ நறுக்குகளில் குங்குமம் தடவி வைப்பர். கால்நடையாகிய உயிர்ப்பலிக்கு மாற்றாகக் கனியொன்று பலிப்பொருளாக அமைவதை நோக்கினால் மனித மனத்தில் மாற்றுச் சிந்தனை நடைமுறையாக்கப்படுவதை எளிதில் உணரமுடியும்.
சொல் உதிர்ப்பில்கூடச் சொல்பவரின் மனத்தை அறியலாம். அப்போது பழகிப்போன சொல்லாடல்கள் மாற்றுச் சொற்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பெறும். மேலைநாடுகளில் அன்றும் இன்றும் ஓர் அவையில் கூடியிருப்போரைச் “சீமாட்டிகளே! சீமான்களே!’ (லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்) என்றுதான் விளிப்பர். ஒருநாள் சிகாகோ நகரில் இந்திய இளந்துறவி விவேகானந்தர் இந்தச் சொற்களால் முகமன் கூறவில்லை. வெறுமனே, எந்திரத்தனமாக எதிரிலிருப்போரை அழைக்க அவருக்கு விருப்பமில்லை. சொற்களில் ஓர் உயிர்ப்புத் தேவை என அவர் மனம் விழைந்தது. மாற்றுச் சொற்களை அறிவு தேடியது. இடிமுழக்கம்போல அந்த அவையில், “சகோதர சகோதரிகளே’ என விவேகானந்தர் கூட்டத்தாரை அழைத்தது வரலாற்றுப் பதிவானது.
சமயவுலகிலும் இதுபோன்ற மாற்றுச் சிந்தனைகள் புதிய வெளிச்சங்களைத் தந்துள்ளன. திருக்கோட்டியூர் திருத்தலத்து ஆலய உச்சியில் ஒருநாள் இராமாநுசர் நலந்தரும் சொல்லை உரத்து முழங்கித் திருப்பணி புரிந்தார். பரம்பரை பரம்பரையாக மேற்கொண்ட முறைமையை மாற்றுச் சிந்தனைவழியில் புதியதாக வடிவமைத்தது அந்நிகழ்வு.
இதனை வருணிக்கும் போழ்தில், இராமாநுசர் தன் எதிரிலிருந்தாரை நோக்கி, “ஓங்கி உலகளந்தானின் திருநாமத்தை ஓங்கி உரைத்தால் என்னவாகும்’ எனக் கேட்டதாகக் கூறுவர். “நீ நரகத்துக்குப் போவாய்’ என்பது மறுமொழி. “அப்படியானால் உயர்நலம் உடையவனின் அருமைப்பாட்டை நான் கூறும்போது செவிமடுத்தவர்கள் என்ன ஆவார்கள்’ என்பது இராமாநுசரின் அடுத்த வினா. “அவர்கட்குச் சொர்க்கம் சித்திக்கும்’ என்பது மறு தரப்பார் விடை.
இராமாநுசர் உடனே “ஆயிரம்பேர் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றால் நானொருவன் நரகத்துக்குச் செல்லத் தயங்கேன்’ என்று விடைபகர்ந்ததாக வரும் குறிப்புரைகள் கருதத்தக்கன. மரபான ஒன்றை மாற்று எண்ணங்கள் வேறொன்றாகத் தீட்டியதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும். அவரின் ஆயிரமாண்டைப் போற்றும் இந்நாளில் இந்த மாற்றுச் சிந்தனை நினைக்கப்பெற வேண்டிய ஒன்றல்லவா?
இலக்கியங்களும் மாற்றுச் சிந்தனைகளை வரைந்துள்ளன. தம் நாட்டு அரசனையே எதிர்க்கத் துணிவில்லாத பழங்காலச் சமுதாயத்தில், வேற்று நாட்டரசனுடன் வழக்காடி வென்ற ஏந்திழையாகக் கண்ணகி உயர்ந்தோரால் ஏத்தப்படுவது ஒருபதச்சோறு.
தன் மணவாளன்மீது கூறப்பட்ட பழிச்சொற்கள் பிழையானவை என்று எப்படிக் காட்டமுடியும் என்று மாற்றுச்சிந்தனையில் ஆழ்கிறாள் அவள். அதன் விளைவாகத்தான் சிலம்புடைப்பு நடந்தேறியது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது மெய்ப்பிக்கப்பெற்றது.
மாதவி தனது குலத்தின் தொழிலை அறுத்ததோடன்றித் தன்மகள் மணிமேகலைக்கு முன்னெழுத்துக் கிடைக்குமாறு கோவலனைமட்டும் கருதியதும்கூட வழக்கமான குலமரபினை மாற்றக் கருதிய சிந்தனைப் பிறப்புத்தான்.
“பிச்சையெடுத்து ஒருவன் உயிர்வாழ வேண்டும் என்பது நியதியானால் கடவுள் கெடட்டும்’ என்பது வள்ளுவரின் அறச்சீற்றம். “தனியொருவனின் பசியைக் கண்டால் உலகை அழிப்போம்’ என்பது பாரதியம். இவ்வாறு சினந்து நிற்பதைவிடப் பசித்தவனுக்கு உணவு தருவது மாற்றுவழித் தீர்வாகும் என முடிவெடுத்தது வள்ளலாரின் மாறுபட்ட சிந்தனை.
இருட்டாயுள்ளதே எனப் புலம்புவதை விட்டுவிட்டு ஓர் அகல்விளக்கை ஏற்றுவது எப்படி மாற்றுச் சிந்தனையோ அதனைப்போல அருட்பிரகாசரின் உணவு வழங்கலும் ஒரு மாற்றுச் சிந்தனைதான். வடலூரில் அணையா நெருப்பு அவர்கண்ட புதுநெறி. பாரதியும் ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்’ என்று மொழிந்தான்
மாற்றுச் சிந்தனைகளில் சிலநேரம் இழப்புகள் வந்து சேருவதுண்டு. கடந்த தலைமுறைவரையில் தமிழர்கள் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வீட்டு முற்றத்தில் சாணியுருண்டை வைத்து அதன் மீது ஒரு பரங்கி மலரினைச் செருகிவைத்தனர். மாலையில் அதனை எடுத்துச் சின்ன எருவுத்துண்டாக (வரட்டி) அமைப்பர். மாதம் முடிந்ததும், அவரவர் வீட்டுச்சிறுமிகள் அவற்றைத் திரட்டிக்கொண்டு ஆலயங்களில் சேர்ப்பித்துக் கொப்பிகொட்டி மகிழ்வர். இடத்துக்கிடம் இந்தச் செய்முறைகள் மாறுபடலாம்.
வீட்டுத் தோட்டத்தில் பரங்கி மலர் அலரவில்லை என்றால் அங்கே மாற்றாக ஒரு செம்பருத்தி மலர் எழிலூட்டும். இயற்கையோடமைந்த இம்மரபுகள் காலப்போக்கில் காணாமற்போயின. பச்சரிசி மாவால் வாசலில் கோலமிட்டவர்கள் சுண்ணாம்புப் பொடிக்கு மாறினர். ஆனாலும் உடல் உழைப்பிருந்தது.
மாற்று யோசனை புகுந்தது. அதன் விளைவாக அங்கே வண்ணந்தீட்டி வைத்தனர். இல்லையேல் ஒட்டுவில்லையைப் பொருத்தினர். அதனால் குனிந்து, நிமிர்ந்து, எழுந்து நகர்ந்து செயலாற்றும் உடற்பயிற்சியாக இருந்த கோலமிடு மரபு தொலைந்துபோனது.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்தத ஒரு செய்தியை இங்கே நினைவுகூருவது நலந்தரும். உயர் அறிவியல் ஆய்வுக்கூடப் பொறுப்பாளராயிருந்தார் அவர். அவரின்கீழ் வேலைபார்த்த அலுவலர் ஒருவர் அப்துல்கலாமிடம் வந்தார். “இன்று என் பையனை அவன் விரும்பிய இடத்திற்கு அழைத்துச் சென்று அவன் கேட்பதை வாங்கித்தர வேண்டும். எனவே ஒரு மணிநேரம் முன்னதாக இல்லம் செல்ல இசைவு வேண்டும்’ எனக் கேட்டார். “தாராளமாகச் செல்லுங்கள்’ என்பது கலாமின் கனிவுமொழி.
ஆனால் வேலைப் பளுவின் அழுத்தத்தால் அந்த அலுவலர் மாலையில் வீட்டுக்குச் செல்ல மறந்துவிட்டார். நெடுநேரம் ஆனபிறகே இல்ல நினைவு வந்தது. அப்துல் கலாமின் அறையில் ஏதோ கலந்துரையாடல் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவர் பக்கத்து இருக்கையாளரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
கலங்கிய மனத்துடன் வீட்டுக்குள் வந்தார். மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். அவரின் மனைவியோ, “அதனாலென்ன நீங்கள் அனுப்பியதாகச் சொல்லி ஒருவர் இங்கே வந்தார், பூங்கா, வணிக வளாகம் என எல்லா இடங்களுக்கும் பையனை அழைத்துப் போய்விட்டுக் கைநிறையப் பரிசுப்பொருளையும் வாங்கித் தந்தாரே’ என்றார். “நான் அப்படி யாரையும் அனுப்பவில்லையே வந்தவர் யார்’ எனக் கணவர் கேட்டார். “வந்தவர் தன்னுடைய பெயர் அப்துல் கலாம் என்று கூறினார்’ என்று மனைவி பதில் கூறினார்.
அந்த அலுவலருக்குப் பதில் தான் மாற்றாகச் சென்று அவருடைய பணிகளை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்ற அப்துல் கலாமின் மாற்றுச் சிந்தனை சிந்திக்கத் தக்கது.
இது போன்ற மாற்றுச் சிந்தனைகளின் அகல நீளத்தை உணரும் போதுதான் பழைய இலக்கியத் தொடர் ஒன்றின் அடர்த்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும். அந்தத் தொடர் “பண்புடையார் பட்டுண்டு உலகம்.’ உரிய மாற்றுச் சிந்தனைகள் உருவாகும்போது நாம் உயரவும் முடியும்; உய்யவும் முடியும்!
– ஜூலை 2016