உப்புக்காத்தும் நீலபுறாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,091 
 
 

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, கூட்ட விட்டு இரை தேடி போன பிஞ்சு இன்னைக்கு  சுறாக்கு  இறையாகுதேனு அழுக கூட தெரியமா தான் சுத்துது, அந்த கடல்புறா. போன பிஞ்ச நினைச்சு இழுவாம போய் மத்த பிஞ்ச பாருனு கரையோர புன்னை மரத்த காட்டவும் எவனுக்கு வக்கில்ல அது அழுகய கேக்கவும் ஒரு நாதியில்ல அங்க தான் பருந்து ஒன்னு காத்திருக்குனு சொல்ல எவனுக்கும் வாயுமில்ல அது விதி இவ்வளவு தான்னு தேவனும் நினைக்கான் போல அவன் நினச்சுபுட்டா மறுவார்த்த ஏது. சுத்தி சுத்தி ஓயுர நேரத்துல கிழக்கா வசவான காத்து ஒன்னு அத அடிச்சு ஓரங்கட்ட பார்த்ச்சு.

அந்த உப்புகாத்து கிழக்கா கரையோரம் வீசயில அம்மியும் கொஞ்சம் ஆடி தான் போச்சு. ஆடி மாச காத்துல அமாவாசையும் சோடி சேர அந்த கடலம்மா ரெம்பவே பொங்கி போய்ட்டா. “அவ பொங்குறது இன்னைக்கு நேத்தா காலம் காலமா வந்து தான போறா அந்த பாவி மக, அவ மட்டும் இல்லையின இங்க சோறு எப்படி பொங்கும்னு” புலம்பிட்டே கிடந்தா ராக்காயி. ராக்காயிக்கு தேகம் நிலை கொள்ளல வழக்கத்தவிட கூட்டத்த கண்டதும் அவளுக்கு சந்தோஷம் தாளல.

மீன்வாடை ஒரு ஓரமா வருடையில அம்மில நல்லா வரமுளகாயா கிள்ளி போட்டு அரைக்கையில உப்புகாத்து படல் படலா மணல மேவயில கொஞ்சம் விசும்பி போன மவ எதையும் கண்டுக்குறாம அறைச்சிட்டு இருந்தா.

‘உடுப்பதற்கோ உடையுமில்லை
உண்பதற்கோ உணவுமில்லை
படுப்பதற்கோ பாயுமில்லை
பறக்குதுபார் வெள்ளத்திலே
பார்க்க பார்க்க துக்கம்
பார்த்துப் போனாலுமே ஏக்கம்’

இதையே நினச்சு வேற முனுமுனுத்துட்டே இருந்தா, அன்னிக்குனு புயல்ல சிக்கி சிதைஞ்ச வடுவ பாக்க கூட்டம் அலைமோதுச்சு. எவனுக்கு இப்படி ஆயிடுச்சேனு ஈவு இல்லமா புயலோட கைவண்ணத்த கண்டு சிலிர்த்தாய்ங்க. “ஆஹா ! என்னா அலைனு” ரசிச்சாய்ங்க அப்ப கூட அது அங்க சுத்திகிட்டு தான் இருந்துச்சு.

‘கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் நீலமும் வானமுமாதான் இருக்குது, சொல்ற மாறி ஒன்னும் காண கிடைக்கல….
இத பாக்கவ இம்புட்டு கூட்டமுனு’ இராமன் தான் செஞ்ச பாவத்த தொலைச்ச இடத்த பாக்க வந்தவன் உரக்க சொல்லி ராக்காயி கடையாண்ட இருந்த கல் அணைகட்டுல உக்காந்தான்.

“இங்காருங்கயா! என்ன இப்படி சொல்லிபுட்டிங்க, பொத்தாம் பொதுவா  பேசாதிங்கயா இந்த மண்ணு எத்தனை பேர வாழ வச்ச மண்ணு தெரியுங்களா! இந்த மண்ணு எங்க உசுரு மாறியா அப்படி பொசுக்குனு வார்த்தைய விடாதிக.

ஒரு காலத்துல இந்த கடலும் மண்ணும் அவ்வளவு பரபரனு இருக்கும் பாக்கவே கோடி கண்ணு வேணும்…
ம்ம் யாரு கண்பட்டுச்சோ இன்னைக்கு இப்படி கிடக்கு.

நீங்களா படிச்சவுக உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்ல ம்ம்” சொல்லிபுட்டு பதமா சோத்த வடிச்சிட்டு இருந்தா ராக்காயி.

“அட கோச்சுக்காதிங்கமா! நான் பார்த்தத சொன்னேன் அம்புட்டு தான் தப்பா நினைச்சுகாதிங்க….

நல்ல சில்லுனு ஒரு சர்பத் போடுங்க தாகமா இருக்கு”

“சோறு திங்கிற வேளையில சர்பத் கேக்குறீகளே இந்த பத்து நிமிசம் பொறுத்தீகனா மீன் சோறே சாப்டலாம்”

“குடியே கெட்டுச்சு போ! ஆத்தா நான் சுத்த சைவம் என்கிட்ட மீன் சாப்பாட பத்தி சொல்றீகளே”

“அடி ஆத்தி மன்னிச்சுகக! சைவ சாப்பாடு இன்னைக்கு கிடைக்குமானு தெரிலீங்களேனு”…. சொல்லிபுட்டு கத்துனா ரக்காயி.

“அடியேய்ய்ய்ய் பொட்டுகண்ணி! அங்க என்ன சைவ சாப்பாடா??” அங்கயும் இல்லயுனு கையசவுல தெரிஞ்சுகிட்டா.

“சொல்றேனேனு தப்பா நினைக்காதிக இந்த மீன் சோறு திங்களயேனு ரொம்ப வருத்தபடுவீக பாருங்க” னு சொல்லி சிரிச்சா, அந்த சிரிப்புல தான் எவ்வளவு வெகுளி. தூக்கிகட்டுன நீலசீலையும் அதுக்கு பொருந்தாத சாக்கெட்டும் பரட்டை தலைனு அவ மொத்த தேகத்துலயும் இரண்டே விசயம் தான் வெள்ளை ஒன்னு அவ சிரிக்க அப்ப தெரியுற பல்லும் இன்னொன்னு அவ வெள்ளந்தி மனசும் தான்.

“அது கிடக்கட்டும்! சர்க்காரே உதவாத இந்த ஊருல கூறைய போட்டு இருக்கிங்களே இதலாம் சகிசிட்டு இங்க கிடக்கனுமா? அத சொல்லுங்க”னு பரிதாபமா தான் கேட்டான் அந்த ஆசாமி.

“ஏய்யா பிள்ளைய பெத்துபோட்டாமேனு எவளாச்சும் சுமந்தத அறுத்து போட்டுருவாளா

இங்க வாழவே வக்கில்லனாலும் எதுவுமே கிடைக்கலனாலும் இங்க இருக்குற மனுச மக்க கட்டை இந்த உப்புகாத்துல தான் கலக்கும்.

நாங்க போறதா இருந்த அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிருக்க மாட்டோமா! இது எங்க மண்ணுயா அத எந்த கொம்பனும் தடுக்க முடியாது அது எங்க அழிஞ்சாலும் சரி”

“ஒ அது நடந்தப்ப நீங்க இங்க இருந்திகளா!”

“ஆமாங்கய்யா! ஆமா இங்க தான் கிடந்தேன்

அப்ப எனக்கு ஏழு வயசிருக்கும்..

இந்தா! இந்த சர்சுல அன்னிக்கு ஏசப்பன் திருவிழா நடந்துட்டு கிடந்துச்சு ஊரே இங்க தான் இருந்துச்சு என்னிக்கும் இல்லாமா அன்னிக்குனு காத்து வெறசா அடிச்சுசு

அன்னிக்கு எங்க ஆத்தா சத்தத்த கேக்கனுமே ஏன் ஈர குலையே நடுங்கி போச்சு அவ அந்த மாறி கொந்தளிச்சு நான் பார்த்ததேயில்ல

அப்பவே தெரிஞ்சுச்சு என்னமோ நடக்க போதுனு ஊருகாரவுக எல்லோரும் கொஞ்சம் பதுசா பயந்து போய் தான் படுத்தோம்.

விடியகால ஒரு நாலு மணிக்கு இருக்கும் அப்படி ஒரு சத்தம் பேய் மழை புயலு நரியலாம் கத்துது அம்மா ஆத்தானு ஒரே கூச்சல் காதகிளிக்க அந்த நேரம் தான் ஆத்தா பொங்குனாஆஆஆ!!!!” சொல்லி ஒரு பெருமூச்சுவிட்டா ரக்காயி. அவ கண்ணுல தான் இன்னும் பீதி தெரியுது அந்த கிலி இன்னும் அவ கண்ணுல நிழலாடுது அன்னைக்கு நடந்தத இம்மி பிசகாம அப்படியே ஒப்புவிச்சா.

“அப்புறம் என்னமா ஆச்சு” ஆசாமிக்கு ஆர்வம் தாங்கல.

“சூரியன் வந்தப்ப தான் தெரிஞ்சுசு  நம்ம நடந்தது மணல்ல இல்ல என் மக்க தலையிலனு ஒரே பொண குவியலு எங்க சாதி சணம் எல்லா கிடந்துச்சு அப்புறம் ரொம்ப நாளா கடலுக்கும் போல எங்க தொழிலையும் பாக்கல அந்த சமயம் போட் மெயில் வேற கட்டிட்டு இருந்தாக புயல்ல அதும் அடிச்சிட்டு போக பின்ன நாங்க தான் போய் வேலை பார்த்தோம்

அப்ப தான் எங்க அய்யா கிட்ட சொன்னேன் பேசமா கடலுக்கு போறதவிட்டுபுட்டு இந்த கொலுத்து வேலைய பார்ப்போம்னு சட்டுனு கோபபட்டு எறிஉளில அடிச்சாப்ல அது தான் இந்த காயம்”னு சிரிச்சிட்டே நெத்தி தழும்ப காட்டுனா அதுலயும் அவ அழகு தான் உத்தம சோழன் பெண்சாதி மாறி.

இதலாம் கேட்டு தாகத்த மறந்தவனுக்கு மறுபடியும் நாவரண்டு போக மறுக்கா கேட்டான்.

“அம்மா சர்பத் கேட்டேன்ன்……

ஆமா உங்களுக்கு எத்தன புள்ளைக”

அவன் கேட்டத கொடுத்துபுட்டு “எனக்கு இரண்டு புள்ளைக ஒன்னு கடலுக்கு போயிருக்கு இன்னொன்னு பள்ளிகூடம் போயிருக்கு” சொல்லிபுட்டு கடலயே பார்த்தா….

உசரதுல இன்னும் அது சுத்திகிட்டு தான் கிடந்துச்சு.

பிறவு மண்சட்டில பேரிக்கா கணக்கா புளிய எடுத்து கரைகயில கண்ணம்மா வந்து எத கரைக்க போறாளோனு தூரத்துல அவளயே பார்த்து கரைச்சிட்டு இருந்தா ராக்காயி.

“என்னக்கா ஊரே அடங்கி கிடந்தாலும் நீ அசர மாட்டுறியே, ஊருகாரி கடைலலாம் கருவாடு குழம்பு கொதிக்கையில இங்க மட்டும் மீன் வாடை வீசுதே”

“அடி போடி! குசலக்காரி இத கேக்கதான் வந்தியாக்கும்”

“கடலுக்கு போனவுக இன்னும் வரல
நீ எங்க இருந்து வாங்கியாந்த”

“இன்னிக்கு மவன் வந்தாலும் வருவான் அதான் விடியகாலை வெறச சந்தைக்கு போய்ட்டு வாங்கியாந்தேன் அங்கயும் ஒன்னுமே இல்லடி

உளுவை தான் கிடந்துச்சு அத தான் அள்ளி போட்டு வந்தேன்” னு சொல்லி அரச்ச முளகாயில ஊற வச்ச மீன் துண்ட பதுவா எடுத்து போட்டு கொதிக்கவிட்டா ராக்காயி நெப்பும் நிழலுமா மிதந்துச்சு நெய்யில போட்ட தேன் மாறி.

ஒரு வழியா மதிய வேளை வர கூட்டம் அலைமோதுச்சு சோறு திங்க, ரக்காயி கடை மீன் குழம்பு வாடை எட்டுதிக்கு பரவ கூட்டம் கட்டி ஏறுச்சு. கூட்டத்துக்கு பந்தி வைக்கும் நேரம் படக்குனு எந்திரிச்சு ஓடுனா ராக்காயி அவ ஓட்டத்த பார்த்த கண்ணம்மா கனிச்சு பரிமாற தொடங்குனா.

“எங்கமா இந்தம்மா இப்படி ஒடுது” னு அந்த ஆசாமி பதறி போய் கேக்க அவ சிலுப்பாம சொன்னா.

“போட்டு சத்தம் கேக்குதுல மவன் வர்றானானு பாக்க போயிருக்கும்,

ம்ஹூம் நாலு நாளுக்கு முன்ன கடலுக்கு  போனவுகளாம் வந்துடாக அவ மவன் இன்னும் வரல

இன்னும் எந்த நம்பிக்கையில போய் பாக்குறோளோ ம்ம்”

“இது என்னமா போனவுங்க வந்து தான ஆகனும்”னு கேட்டவனுக்கு எப்படி பதில் சொல்லுவா.

இராவணன் ஆண்ட மண்ண கண் எட்டுனாப்லே பாக்கலாம்னும் அப்படி பார்த்தவுக திரும்பி வந்ததில்லனும்.

ஒரு சிரிப்ப மட்டும் விட்டுபுட்டு போனவ கிட்ட வெறசா ஓடி வந்தவன் கேட்டான் “ஏய் இரக்காயி எங்க!”

“இப்ப ஏன் இப்படி பதற என்னாச்சு”

“ஸ்கூலு பிள்ளைக மேல கவர்மன்ட் பஸ்சுகாரய்ங்க ஏத்திடாய்ங்க” அதான் எங்கனு சொல்லு. கடல கை காமிச்சு வழி காட்டுனா கண்ணம்மா.

அந்த கடல பார்த்தபடி தான் அவளும் நின்னுட்டு இருந்தா யாரயோ தேடி பார்த்துட்டு இருந்தா.

உலகம் பூரா ஓடுற இந்த உப்பு தண்ணியவே பேர் வச்சு பிரிச்ச பயலுக கடலுக்கு வேலி போட்டு தடுக்க மாட்டாய்ங்கள என்ன? இப்படி இந்த கெட்ட ஈன சாதி மனுஷக கிட்ட மாட்டிகிட்டு தனிமரமா அவளும் நிக்குறா அந்த கரையில. கண்ணுக்கு தெரிஞ்ச எதிரி வந்தா கடலுக்கு போன மவன் எறிஉளி கொண்டு எறிஞ்சிடுவான் இந்த பசியெனும் எதிரி வந்தா எத கொண்டி எறியனும்னு தேவன் சொல்லலியே நினைச்சு புலம்புனா.

மிதமா ஒரு உப்புக்காத்து அலையோட வந்துச்சு அவ கால நனச்சுச்சு அவ முகத்த வருடுச்சு நீல இறகோட. அவ கண்ணு ரெண்டும் ரங்க ரங்கமா சுத்துது அந்த கடல, அதுவும் தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *