அத்தியாயம் 1-4 | அத்தியாயம் -5-8
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தொண்ணுறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை, அநுபவித்த அந்நாளை மக்கள், அன்றைய மகிழ்ச்சி அநுபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள், நுகர்பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதிதேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம், அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் ‘திணிப்பு’ தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், ‘உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டுவிட்டிருந்தது. வறுமைக்கோடு மேலே மேலே உயர்ந்து, மக்கள் தொகையின் அதிக விழுக்காட்டைத் தன் வரையறைக்குக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது. அந்த அடித்தளத்துக்கு இன்றியமையாத தேவைகளாகப் பெருகியிருந்த சாராய, சூது, பெண்வாணிப விவகாரங்கள், கோட்டு வரையறை கடந்த உச்சாணிவரை கோலோச்சிக் கொண்டிருந்தன. நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக அழிவுகள் சாம்ராச்சியப் படையெடுப்பையும் விஞ்சிக் கொண்டிருந்தன. நம் அறிவியல் மேம்பாடுகள், ‘ராக்கெட்’ ஏவுகணை, விண்வெளி ஆய்வு, வீரிய விதைக்கண்டுபிடிப்பு என்ற சாதனையாளரால் மட்டும் பெருமை பெறவில்லை. இத்தகைய தொழில் நுட்பங்கள், உலகளாவிய மோசடிகளாலும், பெண் வாணிபங்களாலும் ‘வாணிபம்’ நடத்தும் அளவுக்கும் ‘பெருமை’ பெற்றிருக்கின்றன.
இந்தச் சூழலிலும், அரசியல் கட்சிகளின் பதவி பிடிப்புக் கூட்டணிச் சதுரங்க ஆட்டக்காய் நகர்த்துதலின் இடையே ஒரு முக்கியப் புள்ளியாக, சுதந்தரப் பொன்விழா அரங்கேற்றப்பட்டது. புத்தாயிரம், புதிய நூற்றாண்டு என்ற எதிர்பார்ப்பும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விறுவிறுப்பூட்டியது. அரசு சார்ந்தும், சாராமலும், சேர்ந்து கிடந்த மேற்பரப்புக்கு ஒரு காபி குடிக்கும் விறுவிறுப்பு உற்சாகம் ஊட்டியது. சின்னத்திரை, பெரிய திரைகள், பத்திரிகைகள், நட்சத்திர இரவுகளை உருவாக்கி, தேசபக்திப் பாடல்களை அரங் கேற்றின. கண் பார்வையும் மங்கி, செவிப்புலனும் கூர்மை குறைந்து, இக்கால நடப்பியலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், வாழும், சுதந்தரப் போராட்ட கால முதியவர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் அரை குறையாக உதிர்க்கும் நினைவுகளைப் பதிவு செய்து மக்கள் தொடர்பு சாதனங்கள் கடமையை நிறைவேற்றின. இந்தக் கொண்டாட்டங்களில், சுதந்தரப் போராட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும், ஒரே இலட்சியத்துடனும் வேகத்துடனும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு மனிதரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், சுதந்தரம் வரும் என்ற விடிவெள்ளி உதயமாகும் போதே, நாடு துண்டாடப்பட்டதும், குறிக்கோள்களை எட்டும் பாதைகளில் இருந்து குறுகிய இடைவெளிகளில் போராளிகள் தள்ளப்பட்டதும் குழுக்களாகப் பிளவுகள் ஏற்பட்டதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின.
காந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தன்னலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.
‘ஸ்டாலின் குணசேகரன்’ என்ற ஈரோட்டு வழக்கறிஞர், தம் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற தலைப்பில், ஒர் அரிய நூலைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நண்பர், இதற்காக நாடு முழுதும் மக்களைச் சந்தித்தும், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் என்று அலைந்து திரிந்து தேடியும் தகவல்கள் திரட்டுகையில் அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். ஆர்வமுடன் விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளைப் பற்றிய செய்திகளை விவரிப்பார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களைப் பற்றிய நூல்கள், நாடு தழுவியும், பல்வேறு பிராந்தியங்கள் சார்ந்தும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நூல்களிலெல்லாம், தமிழகம் சார்ந்த வீரர்களின் போராட்டம் பற்றிய விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப் படவில்லை என்ற உண்மை புலனாயிற்று. எனவே அவருடைய பெருமுயற்சியின் பயனாக, பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட நூறு கட்டுரைகள், சுமார் ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்ட நூல் இரு தொகுப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டு விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற தலைப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.
இந்த அரிய தொகுப்பு நூலைப் படித்தபின், சுதந்தரப் போராட் டங்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்போ, அனுபவங்களோ எதுவும் இல்லை என்ற நிலையிலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து, எழுபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் இந்நாள் வரை, இந்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாய், பார்வையாளராய், ஒர் எழுத்தாளராய் மலர்ந்த உணர்வுகளுடன் இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்த கொண்டிருக்கிறேன் என்ற தன்னுணர்வு ஏற்பட்டது. நான் அறிந்த பழகிய பலரும் என் மன அரங்கில் உயிர் பெற்றார்கள்.
இந்திய சுதந்தரப் போராட்டம் என்பது, உலகிலேயே முதன் முதலாக, அஹிம்சை நெறியில் மக்களை ஒன்று திரட்டி, அந்தப் பேருணர்வில் விளைந்த ஆற்றிலனாலேயே, அந்நிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த வரலாறாகும். அதைச் சாதித்தவர், இந்த இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராகிய காந்தியடிகள். அந்த 1947ம் ஆண்டு, ஆகஸ்ட்-14-15 நாள்ளிரவுக் கொண்டாட்டங்கள் நடந்த போது நான் சென்னையில் இருந்தேன். புதிய இளமை; புதிய விடிவெள்ளி. மக்களின் அந்த மகிழ்ச்சியை, அந்த ஆரவாரங்களை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, குடிசையில் இருந்து கோமான் வரையிலுமான மகிழ்ச்சிப் பிரதிபலிப்பை நானும் அநுபவித்தேன்.
இந்நாட்களில் கொண்டாட்டம் என்றால், குடி, கூத்து, விரசமான ஆட்டபாட்டங்கள் என்பது நடைமுறையாகி இருக்கிறது; குற்றமற்ற அந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை, ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே’ ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று’ பாடல் முழங்கும் சூழலை மறக்கவே இயலாது.
1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும் இந்நாள், முற்றிலும் வேறுபாட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி-சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கைகளைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்குநீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்பாடும் சூழலில் உருவாயிற்று.
காந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல், 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு, 3. நாணயமான வாணிபம், 4. ஒழுக்கம் தலையாய கல்வி, 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பினால் எய்தும் செல்வம், 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழுநெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நல்கும் உயிர்ச்சத்தை உறிஞ்சிவிடும் என்றார்.
இந்த நெறிமுறைகளில்- வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.
பொது உடமைச் சித்தாந்தம் தனிமனித அடிப்படையில் உருவாகவில்லை. அது ஒர் இயக்கமாகவே செயல்படுத்தும் தத்துவமாகிறது.
ஆனால் தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே ‘சத்தியக் கிரகப்போர் செயல்படுத்தப்பட்டது.
வறுமையும், எழுத்தறியா அறியாமையும் பல்வேறு சமய கலாசாரங்களும் இருந்தாலும், பாரத கலச்சாரம் என்ற பண்பாடு இருந்தத் துணைக் கண்டத்து மக்களை ஒர் ஆலமரமாக, விழுது களாக, ஒன்றுபடுத்தித் தாங்கி நின்றது.
இந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள், நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல வாழ்வில் குரேதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும் இரைபடுவதற்கு என்ன காரணம்? கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று? இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை’ என்று சகமனிதரைச் சாகவைக்கும் பிளவுகளில், அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகணைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாதனை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர், ஊருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.
இந்த அவலங்களுக்குத் தீர்வு இல்லையா? எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம்? எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா? உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றி யிருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில், பாரத விடுதலையைப் பற்றிய ஊக்கம் பெற்ற தலைவர்கள், அந்நிய மண்ணில் தான் கிளர்ச்சி பெற்றனர். வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.
இந்நாட்களில், புதிய கல்வியும் தொழில் நுட்பமும் பெற்ற இளைஞர் பலர், நம் வேர்களைத் தேடப் புத்துணர்வு பெற்றிருக்கின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இயக்கங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியாமையையும் வறுமையையும் அகற்ற, அவற்றுக்குக் காரணமான ஊற்றுக் கண்களைத் தகர்க்க, செயல்படத் தொடங்கி இருக்கின்றன. நலிந்த இடங்களில் எல்லாம், புதிய ஊக்கமும் விழிப்புணர்வும் ஊட்ட, இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. சிப்கோ இயக்கத்தில் இருந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எழுத்தறியாமை ஒழிப்பு, சிறார் தொழில் சிறுமைகளைதல், சாதி சமய மோதல்களில் நிகழும் குரூர வன்முறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குக் காரணமான சமூக அவலங்களைக் களைதல், என்றெல்லாம் பல இலக்குகளில் இளைஞர் பலர் செயல் படத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர்ந்து அந்நாட்களில் கூலித் தொழில் செய்து சிறுமைப் படச் சென்ற தலைமுறையில் இருந்து, இந்நாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கும் இளைஞர் வேறுபட்டவர்கள். இந்நாட்களில் தலையெடுத்து நிமிரும் இளைஞர் நம்பிக்கைக்குகந்தவர்களாய், புதிய புதிய துறைகளில் சாதனைகள் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்கள் தம் வேர்களைக் கண்டறிந்து, புதிய ஆற்றலுடன், பாரதத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வார்கள்.
மகாபாரதமும், இராமாயணமும், பாரதத்தின் பெருமை சொல்லும் இதிகாசங்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் இவ்வுலகில் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அழிவு, உயிர்ப்பு இரண்டையும் மாறி மாறிக் காட்டும் காலத்துக்கு முடிவோ எல்லையோ இல்லை.
இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தரகாண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.
இந்நூலை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகம் தமிழகத்தில் பெருமைக்குரியதாகும். இப்பதிப்பகத்தைத் துவங்கிய அமரர் கண. முத்தையா அவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; சிறந்த இலக்கிய அறிஞர்; இந்தப் பதிப்புத் தொழிலின் வாயிலாக, மொழிக்கும், இலக்கியத்துக்கும் சேவை செய்தவர் மட்டுமல்லாமல், தம் உயர் பண்புகளையும் அச்சேவையின் வாயிலாக உணர்த்தியவர். விடுதலைப் போராட்டத்தை அந்நிய மண்ணில் செயல்படுத்த இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அணுக்கத் தொண்டராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்த அவர், இலக்கிய மேதை ராஹுல் சாங்க்ருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைத் தமிழாக்கம் செய்து தமிழருக்கு அந்த இலக்கிய மேதையை அறிமுகப்படுத்தியவர். அவருடைய நினைவலைகள் ‘முடிவுகளே தொடக்கமாய்’ நூல், இந்நாட்களின் சாதிமதப் பூசல்களால் நொந்து போன இதயங்களுக்கு நன்னீரலைகளாகத் திகழ்கின்றன. சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு, அப்பெரியார், என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்து ஆதரவளித் தார். அந்த ஊக்கமும், பேராதரவும், இந்நாள் வரை, என் இலக்கிய வாழ்வில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், வணிக நோக்குடன் வெளியாகும் பத்திரிகைகளை நாடாமலிருக்கவும் எனக்குத் தெம்பளித்திருக்கின்றன. அவருடைய வழித் தோன்றல்களாக, இந்தப் பதிப்பகப் பணியைச் செம்மையுடன் தொடரும், திருமிகு. மீனா, அகிலன் கண்ணன், செல்வி உமா ஆகியோர் இந்நாள் என் நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்திருப்பது போன்றே, இந்த ‘உத்தரகாண்டம்’ நூலையும் அருமையாக அச்சிட்டு வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் வாசகப் பெருமக்கள், இதை வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி, வாழ்த்துக்கள்.
– ராஜம் கிருஷ்ணன்
அத்தியாயம்-1
வாசலில் வண்டி வந்து நின்று கதவு அறைபடும் ஒசை கேட்கிறது. முற்பகல் நேரம். தாயம்மாள் கூடத்தில் மேலே மாட்டப்பட்ட காந்தியடிகள் படத்தை, சிறு மேசையில் ஏறித் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அன்றாடம் அதைத் துடைப்பது, அவளுக்கு ஒரு வழிபாடாக இருக்கிறது. காந்தியடிகளின் படத்துக்குக் கீழே, ஐயாவின் படமும் அம்மாவின் படமும் இருக்கின்றன. அவற்றுக்குச் சற்றுக் கீழே, ராதாம்மாவின் படம்.
இவர்கள் யாரும் இன்று இல்லை. ஆனால் இவர்களுடைய வாழ்நாளின் நினைவலைகள் அவள் உள்ளக் கடலில் மாயவேயில்லை.
அழுக்குப்படியாமல் துடைப்பது மட்டுமே அவள் செய்யும் பணி. பொட்டு, பூ மாலை என்று எதுவும் இல்லை.
அய்யா இருந்த நாட்களில், காந்தி படத்தைக் கையால் நூற்ற நூலினால் மலர்மாலை போல் செய்யப்பட்ட மாலை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. அய்யா நூற்பதை விட்ட பின்னரும், மதுரை ஆசிரமத்திலிருந்து, ஒவ்வொரு காந்தி ஜெயந்தி நாளிலும் நஞ்சுண்டையா வருவார். பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையை இசைப்பார். அய்யா, படுக்கையோடு விழுந்தபின், நஞ்சுண்டையா அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார். பேசவே மாட்டார்கள். அய்யா இறந்தபின் உடனே வந்தார். அடுத்த ஆண்டுக்கு அவரும் இல்லை…
மின்னல் கோடுகளாக நினைவலைகளின் தாக்கத்தில் அப்படியே பெஞ்சியின் மீது நின்ற அவள், சட்டென்று இறங்க முயன்று சாயுமுன் இருகரங்கள் அவளைத் தொட்டுத் தாங்குகின்றன.
கூச்சத்தில் குறுக இறங்கி நிலை பெறுகிறாள்.
“ஒ. இவனா?…” வெறுப்பு முகத்தைச் சுளிக்க மேலிடுகிறது.
‘என்னை ஏதற்கடா தொட்டுத் தாங்கினாய்? உன்னைப் பத்துமாதம் இந்த வயிற்றில் வைத்துக் கொண்டு, பால் கொடுத்து, பாசம் காட்டி வளர்த்ததற்காக அணு அணு வாய்ச் சிதைந்து கொண்டிருக்கிறேன்…’ என்று மனம் குமைகிறது.
“வாங்கையா? வாங்க?” என்று கொல்லைப்புறம் இருந்து வரும் ரங்கசாமி, மேலே சுழலும் விசிறிக்கான விசையைப் போடுகிறான். கூடத்தில் நாற்காலி ஏதுமில்ல. அகலமான பெஞ்சு ஒன்றுதான் இருக்கிறது. அய்யா கடைசி நாட்களில் அதில் தான் படுத்திருந்தார். அந்தக் கூடத்தில் உத்தரக்கட்டைக் கொக்கிகளில் தொங்கிய தேக்குமர ஊஞ்சல் அது. ராதாம்மா உட்கார்ந்து ஆடுவாள். தேனாம் பேட்டை வீடும் சுற்றுப்புறங்களும் “சேவாகுருகுலம்” என்றான பிறகு, அந்த ஊஞ்சல் இங்கு வந்தது. இந்த விடும், சுற்று வட்டம் மனைகளும் அம்மாவின் பிறந்த வீட்டு வழியில் வந்தவை.
“உக்காருங்கையா? விசிறில காத்தே வரல.”
அவள் துடை துணியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்து, அடுப்பைப் பார்ப்பது போல பாவனை செய்கிறாள்.
ராகிக்கூழோ, ஒர் அரிசிப் பொங்கலோ தான் இவள் சமையல்.
ஏதேனும் காய், கீரை-மோர்.
ரங்கசாமி சமையற்கட்டின் வாயிற்படியில் நிற்கிறான். “எதுனாலும் வாங்கிட்டு வரட்டுமாம்மா?”
“என்ன வாங்கணும்? பச்சக் கொத்துமல்லி துவையல் அரச்சிக்கிறேன். எனக்கு ஒண்ணும் வாங்கித் தரவேணாம்!” நறுக்கென்ற துண்டிப்பு.
“ரங்கசாமி ?”
“ஐயா?” என்று அவன் ஓடி வருகிறான்.
“சில்லுனு கொஞ்சம் மோர். அம்மா..!”
உள்ளே வந்து அடைந்த அவளைக் கொக்கி போட்டு இழுக்கிறானா? உழக்குத் தயிரைக் குறுக்கி, பானையில் இருந்த நீரை ஊற்றி, உப்பும் சீரகத்துள்ளும் துரவி தவலைச் செம்பில் கொண்டு வந்து பலகையில் வைக்கிறாள்.
என்ன வீராப்பானாலும், வயிற்றுச்சதை அசையாமலில்லை. இவனை அவள் எப்போது பார்த்தாள்? இந்தப் பக்கம் ஏதோ விழா- கல்யாணம் என்று வந்ததாகச் சொன்னான். மாலை சால்வை என்ற வரிசைகளை ஒரு கட்சிக் காரன் அவளுக்குத் தெரிவதற்காக வாங்கிக் கொண்டு நின்றான். இவள் அப்போது வாசல் மேல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.
அப்பனைப்போல் கறுப்புத்தான். எடுப்பான முகம். சாதிப்பேன் என்ற திமிர் தெரியும் பார்வை. கட்சிக்கரை வேட்டி.
இவள் அலட்சிய பாவத்துடன் விசிறிக்கட்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்கீங்கம்மா? உங்க மருமவதா பாத்துட்டு, கூட்டிட்டு வாங்கன்னு நச்சரிக்கிறா. மஞ்சு கல்யாணத்தப்ப வந்திட்டு உடனே கிளம்பிட்டீங்க. புது வீடு வசதியா கட்டிருக்கு உங்க இஷ்டப்படி கிணத்துல எறச்சி ஊத்திட்டுக் குளிக்கலாம். வயசு காலத்துல, மகன் செல்வாக்கா இருக்கறப்ப நீங்க இப்ப இருக்கலாமா?..” என்று கெஞ்சினான்; குழைந்தான்.
ஆப்பிலும் மலை வாழையுமாகத் தட்டுக்கள் வந்தன.
“இதெல்லாம் இங்க எதுக்குக் கொண்டாரீங்க? எனக்கு கூழுகுடிச்சித்தா பழக்கம். எனக்கு எதுவும் வானாம். இதெல்லாம் கொண்டு போயி அதா அங்க ரோட்டோரம் கட்டிடம் இடிக்கிற ஏழைக்கும்பல் குஞ்சும் குழந்தையுமா பிழைக்க வந்திருக்கு. கொண்டு கொடுங்க!” என்று திருப்பினாள்.
ஆனால் அன்று பார்த்த அந்த உருவமா? அவனா இவன்? ஐம்பதைத்தானே கடந்திருக்கிறான்? எழுபது எழுபத்தைந்து என்று மதிப்பிடும் அளவுக்கு எப்படிச் சோர்ந்து போனான்? மழையும் காற்றும் வெயிலும் புரட்டிப் போட்டதாகச் சொல்ல முடியாது. சொகுசு கார்; ஏ.ஸி. என்று ஏதேதோ சொல்கிறார்கள். உழவோட்டி, சேற்றிலும் சகதியிலும் ஊறி, கால் வயிற்றுக் கஞ்சியும் கள் மொந்தையும், பண்ணையடிமையின் உலகில் முழு வாழ்வையும் கழித்த பாட்டன் அவளுக்கு நினைவு தெரிந்து தொண்ணுறு வயதிலும் இப்படித் துவளவில்லையே?
“தாயம்மா? உங்காயா நல்ல செவப்பு. அதா நீயும் செவப்பா இருக்கிற… ஏந்தெரியுமா?” என்று ஒரு பல் தெரியச் சிரிப்பான்.
“அட, சீ! நீ எதும் பேசாதே? பச்சப்புள்ள கிட்டப் போயி இதெல்லாம் பேசிக்கிட்டு!” என்று சின்னாயி அதட்டுவாள். அந்தப் பாட்டன் பொடுக்கென்று செத்துப் போனான்.
அடிமை வருக்கம் மேல் படியில் வந்ததும், மேல் படிக்குரிய எல்லாக் கசடுகளும் படிந்து விடுமோ? அவளுக்குத் தோன்றவில்லையே? மேலும் இவன் மேல் வருக்கத்தில் தானே கண் விழித்தான்?
அவன் மோரைக் குடித்துவிட்டுக் குளிர்ச்சியை அநுபவிப்பவனாக முகம் கனியப் பார்க்கிறான்.
“பானைத் தண்ணி ஊத்திக் குடுத்தியாம்மா? என்ன இருந்தாலும் பானைத் தண்ணி சுகம் சுகம்தான். ஃபிரிடஜ்ல வச்சத எடுத்தா தேள் கொட்டுறாப்புல இருக்கும். வெளில வச்சாலும் தாகம் அடங்காது…”
“உப்புத் தின்னுறவனுக்கு வெளில வச்சாலும், ஃபிரிட்ஜூக்குள்ளாற வச்சாலும் தாகம் அடங்காது?”
சுருக்கென்று ஊசிக் குத்து பாய்கிறது.
பேச்சு எழவில்லை.
ஆனால் அவள் மனம் புலம்புகிறது.
‘மேல் படி’யில் தான் அந்த அய்யா கண் விழித்தார். படிகளைத் தட்டி, எல்லோரும் சமம் என்று பெரிய கைகளை நீட்டி எல்லோரையும் அணைத்துக் கொள்ளவில்லை?
இதழ்கள் துடிக்க மேலே படங்களைப் பார்க்கிறாள்.
காந்தி…மகான் காந்தி…மகாத்துமா காந்தி… அந்தச் சொல்லின் காந்தியில், கீழ் வரிசையில் உள்ள அய்யாவும் அம்மாவும் தங்கள் வாழ்க்கையையே காணிக்கையாக்கினார்கள்.
அவர்கள் புழங்கிய மண்; தண்ணிர்…கிணறு. இன்றும் அதில் நீர் அடியில் தெரியும் பாறையைக் காட்டிக் கொண்டு பளிங்காய், ஊற்றுக் கண்களால் வாழவைக்கிறது…
“அம்மா. உன்னைக் கூட்டிட்டுப் போகணும்னு வந்திருக்கிறேன். ‘புது விட்டில் உன் அடிபடனும்னு கெஞ்சிக்கிறேன்.” அவள் காலைப் பிடிக்கவும் விழைகிறான்.
“ஏய், இந்தக் காலுல விழற சாகசமெல்லாம் வேணாம். நா எதுக்கு அங்க வரணும்? எனக்கு ஒரு உறவும் யாருடனும் இல்ல. நீ என் வயித்தில் குடியிருந்த தோசத்துக்கு என்னை எப்பவோ பெருமைப் படுத்தி கவுரவிச்சிட்ட அதுவே எனக்கு இந்த சன்மம் முச்சூடும் போதுமப்பா!’
“அம்மா. நீங்க இப்படிப் பேசலாமா? அரசியல்ங்கறது, சொந்த பந்தத்துக்கு அப்பாற்பட்டது. நீங்க ஆயிரம் மறுத் தாலும், நா உங்க மகன்ங்கறது இல்லாம போயிடுமா? ரஞ்சிதம் படுபடுக்கையாயிருக்கா. அவதா அம்மாளை எப்படின்னாலும் கூட்டிட்டுவாங்க. அவங்க மனசெரியும்படி நடந்து போச்சு, வாஸ்தவந்தா. ஆனா அதுக்குப் பிறகு எத்தனையோ மாறிப்போச்சி. நேத்து பரம விரோதியா இருந்தவன்லாம், இன்னைக்கு அரசியல் மேடையிலே கட்டித் தழுவி சொந்தம் கொண்டாடுறா. தாய் மகன் தொடர்பு, பெத்த மக்கள் தொடர்பு விடுமா, விடாது.” என்று என்னைக் கட்டாயப் படுத்தி அனுப்பிச்சிருக்கா. அவ பேச்சுக்கு மதிப்புக் குடுக்கக் கூடாதா?”
அவள் பார்க்கிறாள். இவன் மகா சாமர்த்தியக்காரன். நாடகம், வசனம், சினிமான்னு ஊறியவன். அரசியலில் சூது வந்திட்டதுன்னு, அன்றைக்கு அய்யா உதறித்தள்ளினார். அந்த அரசியல் மக்களை நல்ல மனிதர்களாக்கும் ஒழுக்க இலட்சியத்தை முதலில் வைத்தது. இவர்கள் அடிப்படையே வேறு தூ…! மனசுக்குள் காறி உமிழ்ந்து கொண்டு அவள் சமையலறைப் பக்கம் திரும்புகிறாள்.
“அம்மா… அம்மா…”
அவன் அவள் பின் வந்து காலடியில் விழுகிறான்.
“இதபாரு. இந்த நடிப்பெல்லாம் எனக்கு வேண்டாம். என்னால் இந்த நிழலை விட்டுவர முடியாது.”
தொண்டை கம்மி, கண்கள் கலங்குகின்றன.
“சரி, அதைப்பத்தி நா இப்ப எதும் பேசல. பேயானாலும் தாய்ம்பாங்க. ரஞ்சிதத்துக்கு நாளைக்கு ஆபரேசன். அதுக்கு முன்ன உங்களைப் பார்க்கணும்னு சொல்றா…”
அப்படி உருகுபவள் என்றேனும் வண்டியெடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? இனி என்ன ஆபரேசன்? முப்பத்திரண்டு வயசிலேயே கர்ப்பப்பையை எடுத்துப் போட்டாயிற்று. பெரிய பையனே அப்பனின் வாரிசாக சரித்திரம் பண்ணிக் கொண்டிருப்பதாக அவள் செவிகளில் விழுகிறது- அடுத்த பெண்தான் மஞ்சு. இரண்டுக்கும் ஒரே மாசம்தான் வித்தியாசம். அது பதினெட்டாகுமுன் ஒரு காதலில் விழுந்து, வயிற்றில் வாங்கிக் கொண்டு, கல்யாணம் பண்ணினார்கள்… அது என்னவோ டிவோர்சாம்.
குப்பைகள் மேலே மேலே சேர்ந்தால், அடங்காத துர்நாற்றத்தில் ஆவியடிப்பதுபோல் இருக்கிறது.
“அம்மா, இப்படி, முன்னும் இல்லாமல், பின்னும் இல்லாமல் நீ எதற்காக இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கணும்? எஸ்.கே.ஆர். இருந்த வரை சரி. அவர் போய் பதினாறு வருசமாயிடிச்சி. வாரிசுன்னு யாரும் இல்லை. இது டிரஸ்ட்டைச் சேந்தது. அந்தப் பரசுராமன் நீ கட்டிக் காக்குறதாக நினைக்கும் இலட்சியத்தை என்னிக்கோ குழிதோண்டிப் புதைச்சிட்டான். உன்னை ஒருநாள், வேலைக்கார நாயே, வூடு சொந்தம்னு நினைக்காதே, வெளியே எறங்குன்னு சொல்லு முன்ன, நீ முடிவெடுக்கணும்!”
அவள் ஒருகணம் திகைக்கிறாள். அவன் சொல்வானோ, சொல்லமாட்டானோ, இவன் சொல்கிறான்.
நெஞ்சு கொதிக்கிறது.
“தாயம்மா, நீ தகுந்த பேர வச்சிட்டு, இங்கே ஏழைப் பெண்கள் தொழிற் கூடம் எதானும் வைக்கணும். நான் உயிலில் எழுதி இருக்கிறேன். கடைசி வரையிலும் நீதான் இருந்து கவனிக்கணும். ராதாம்மா பேரை வைத்து நடத்தணும். எங்கெங்கோ பெண் குழந்தைகளைக் கொல்லுறாங்களாம். அந்த அவநம்பிக்கையைக் கிள்ளி எறியணும்.”
அவருடைய சொற்கள் ஒலிக்கின்றன.
அப்போது பெரிய டிஃபன் காரியருடன், ரங்கன் அய்யாவுக்குச் சாப்பாடு கொண்டு வருகிறான்.
“கிருஷ்ணா ஹோட்டல் முதலாளி ஐயாவைப் பார்க்க வரேன்னாருங்க..” ரங்கன் குழைந்து நிற்கிறான். இவன் போய்ச் சொல்லி இருப்பான். சாராய, லாட்ஜ் சாம்ராச்சியம் என்பது தெரியும். ‘இவனெல்லாம் அரசியல் மேடைகளில் புகழ் மாலைகளைத் தேடுகிறாங்க!’ என்று அய்யா புழுங்கிக் குமைந்தார். அவன் பஞ்சாயத்து, நகராட்சி என்று தேர்தல் காலங்களில் அவரைக் காண வருவான். “தாயம்மா நல்ல தண்ணிர் ஊற்றிக் கழுவு! கறைபடிந்த தடங்கள்” என்பார்.
இன்று பெரிய சாலையில் பெரிய ஒட்டல் கட்டி விட்டான். காரோடு வந்து தங்குறாங்களாம்.
“அய்யா, சாப்பாடு வைக்கட்டுங்களா?…”
பெரிய பெஞ்சின் பக்கம், சிறிய மேசையைப் போட்டு அவன் பின்பக்கம் வாழை இலை அறுக்கச் செல்கிறான். ஆனால் அதற்குள் தலைவர் விடுக்கென்று திரும்பி கோபத்துடன் வெளியே நடக்கிறார். அவருடைய மேல் வேட்டியின் விசிறியில் காரியரின் நீண்ட ஆணி மாட்டி, அது நிலைகுலையச் சரிகிறது. குப்பென்ற மசாலா வீச்சமும் வறுத்த அசைவமும், தாயம்மாளின் உள்ளக்கனலை வீசி விடுகின்றன.
அத்தியாயம்-2
கார்க்கதவு பட்டென்று அறைபடும் ஒசை கேட்கிறது.
கோபம்… கோபம் பாவம்… அது நீசத்தனமான செயல்களுக்கு வழி வகுக்கும். அவளும் கோபப்படுகிறாள்.
“ஏய் ரங்கா ? என்ன எழவுடா இது ? எதுக்குடா இதெல்லாம் இங்க கொண்டு வந்த?…”
அவன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான். சேவாகுருகுல அறங்காவலர் குழுதான் அவனை இங்கு நியமித்திருக்கிறது. அய்யா இறந்தபின், கிராமத்திலிருந்து வந்தவன்தான். இந்தப் புள்ளியைச் சுற்றி இவன் உறவுகள் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு நகரச்சந்திக்கு வந்திருக்கின்றனர். “இந்த நகரத்தில் குடியிருப்பவர் அதிகமானவர்கள் கிராமங்களில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக வந்து வேர்விட்டவர்கள்தா… எங்கப்பாவுக்கப்பா அந்தக் காலத்தில் வியாபாரம்னு வந்தார். டவுனில் மளிகைக்கடை வைத்தாராம். எங்கப்பா, சித்தப்பா அத்தை எல்லோருமே ஊரைவிட்டு வந்து குடியேறினாங்க…” என்று அய்யா படுக்கையோடு விழுந்த நாட்களில் அந்தக் கதை எல்லாம் சொல்வார். பதினாறு வயதில் கல்யாணத்தைப் பண்ணி வைத்து, பையனை மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனவு கண்ட அப்பாவைமீறி, அவர் கனவைப் பொய்யாக்கினார். காங்கிரசில் சேர்ந்து கதர் உடுத்தும் விரதம் ஏற்றதும், கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழிப்பு என்றெல்லாம் மகன் அன்றைய நடை முறை சட்ட திட்டங்களை உடைத்தார். இந்த வீடு, அவரை மணம் புரிந்த பத்தினி தெய்வத்துக்குச் சொந்தமானது. அந்நாளில் அரிசி மண்டி மொத்த வியாபாரம் செய்த குடும்பத்தின் ஒரே வாரிசு. ரங்கூனில் இருந்து வேர்பற்றிய குழந்தையும் குட்டியுமாக வந்த குடும்பங்களை வரவேற்று ஆதரித்த காலத்தில் கட்டப்பட்ட வீடு. தாயம்மாவுக்கு அப்போது இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கும். பானை பானையாகப் பொங்குவார்கள். பெரிய துண்டுகளாகக் காய்களை நறுக்கிப் போட்டு, பருப்புடன் வேக வைத்துக் குழம்பு காய்ச்சுவார்கள். இந்தக் கிணற்று நீரை இரைத்து இரைத்து சந்தோசமாக மனித நேய அநுபவங்களைக் கொண்டாடிய காலம் அது. அம்மாவும் அய்யாவும் சேர்ந்து ஈடுபட்ட பெரிய தொரு கொண்டாட்டம் அது. நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். சாதி மதம், ஏழை பணக்காரர் என்று பாராமல் வயிற்றுப் பசியை அவிக்கும் நெருப்பு அது.
ஆனால் இப்போது இவள் மன நெருப்பை அவிக்க எந்த வழியும் தெரியவில்லை.
“நம்ம தாயம்மாவுக்குப் புள்ள பெறந்திருக்கு. முதரெண்டும் பொண்ணுன்னு இருந்திச்சி. இப்ப பையன்…”
நாட்டுப் பிரிவினையின் போது, காந்தி மகான் தன்னந்தனியாகக் கலவரப்பட்டு வெட்டும் குத்துமாக இருந்த இடங்களில் செருப்பில்லாமல் நடந்தாரென்று, அய்யாவும் அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தார். சோகமாக இருந்த நாட்கள். சேவா குருகுலத்துக்குள் இருந்த குடிலில் தான் இவள் பெற்றிருந்தாள். கார்ப்பரேஷன் ஆசுபத்திரி மருத்துவச்சி, சிந்தாமணி வருமுன் இவன் பிறந்துவிட்டான்… பத்துப் பதினைந்து நாட்களிருக்கும். உள்ளே வந்து அம்மா குழந்தையை வெளியில் எடுத்துச் சென்றாள். குடில் வாசலில் அய்யா…
“என்ன பேரு வச்சிருக்கீங்க?”
இவளுக்குக் குரல் செவிகளில் விழுந்தது…
அவள் புருசனும் பக்கத்தில்தான் நின்றிருந்தான்.
“அய்யா, நல்ல பேரா வையுங்க..”
“அதுசரி, நீ முதல்ல, இனிமே காள்ளுசாராயம் பார்க் கிறதில்லேன்று பிரதிக்ஞை எடுத்துக்க… என்ன? பொண்ணுக பிறந்து சம்சாரி ஆனபிறகு பனந்தோப்புக்கள்ளைத் தேடிட்டுப் போக மாட்டேன்னு நினைச்சேன். நாங்களும் இங்க ஒவ்வொரு குப்பமா போயிப் பிரசாரம் பண்ணுறோம். எங்க நிழலிலேயே இருந்திட்டு நீ மொந்தை போட்டுட்டு வரது வெட்கமாயிருக்கு…”
“இனிமே இல்ல சாமி…”
“இந்த இனிமேக்கு உயிர் உண்டா? நந்தனார் சரித்திரம் தெரியுமா உனக்கு? கள்ளுமொந்தைச் சூழலிலே பிறந்து, சிதம்பரம் போகணும்னு கனவு கண்டார். நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேம்பாராம். திருநாளைப் போவார்’னு சொன்னாங்களாம். அது போல் உன்னை ‘இனிமே குடிக்காதவர்’னு சொல்லவா?”
“இல்ல சாமி. நிச்சியமா இனிமே குடிக்கமாட்டேன்…”
“எப்படினாலும் நீ குடிக்க முடியாம வழி பண்ணிடுவோம். ஏன்னா, சுதந்தர சர்க்கார் வந்திடும். உடனே மது விலக்குச் சட்டம் நெறிப்படுத்துவோம்!”
“அப்படி வந்திட்டா, எத்தனை ஏழைகள் மனம் குளிரும்?…” அப்போதுதான் ராதாம்மாவின் குரல் கேட்டது.
“அப்பப்பா, குழந்தையை ஏங்கிட்டக் குடும்மா…”
வாணாம்மா, பூக்குழந்தை எப்படியேனும் துக்கினால் குழந்தைக்கு வலிக்கும். கழுத்து நிற்க நாளாகல…”
“அப்ப நா உக்காந்துக்கறேன். என் மடில வையி…”
இப்போது நினைத்தாலும் தாயம்மாளின் நெஞ்சுருகிக் கண்கள் கசிகின்றன.
“இவனுக்கு ‘மோகன்தாஸ்’னு பேர் வைக்கிறேன். மோகன்தாஸ்! மோகன்தாஸ்…”
“அய்யா! இது காந்திஜி பேரில்ல, அப்ப?”
“ஆமாம்மா. நம்ம நாட்டுக்கு சுதந்தரம் வந்து, சாதி மதம், பட்டினி, பசி, எல்லாம் ஒழிய, நிறையப் பேர் அவர் போல வளரணும். சுதந்தரம் வந்த பிறகு நாட்டை வழி நடத்த நிறையப்பேர் அவர் மாதிரி வரணும்.
“மோகன்… மோகன்… மோகன்னு கூப்பிட்டா நல்லா இருக்கும்.”
அம்மா புள்ளையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள்.” உம்புள்ளைக்கு அய்யா காந்தி பேரை வச்சிட்டார். அவன் அமோகமா இருக்கணும் தாயம்மா!”
‘மோகன்தாசு, மோகன்தாசு, மோகன்தாசு’ என்ற அந்தப் பூஞ்செவியில் தாய் ஒலி எழுப்பினாள்.
ஐந்து மாதம் ஆனபோது, அவள் சமையல் கூடத்து மூலையில் கந்தலில் போட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருப்பாள்.
மோகன், மோகன்… என்று, பஞ்சமியும் சந்திரியும் கொஞ்சுவார்கள்.
‘மோகன் ? என்று சத்தமாக ராதாம்மா கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பான். அவன் படிக்க வந்த போது, குடில் பள்ளி பெரிய குருகுலப் பள்ளியாக வளர்ந்துவிட்டது…
ஒன்பதாவது படிக்க வெளியே சென்றுவிட்டான்.
அப்போதே பேரை மாற்றிக் கொண்டுவிட்டான். அப்போது புருசன் உயிருடன் இல்லை. எந்த அடிப்படையை அவள் நிலையான தென்று நம்பினாளோ, அது ஆட்டம் கண்டுவிட்டது. பஞ்சமி பள்ளிப் படிப்பு முடித்து, கிராம சேவிகா பயிற்சியும் முடித்து, காஞ்சிபுரம் பக்கம் சேவிகா வாக வேலை பார்க்கையில் கல்யாணமாயிற்று. கிராமத்துப் பையன்தான். ‘எலக்ட்ரிகல்’ வேலை தெரிந்து தொழில் செய்தான். படப்பைப் பக்கம் குடும்பம் வைத்திருந்தார்கள். சந்திரி பள்ளி முடித்து நர்ஸ் படிப்புக்குச் சேர்ந்திருந்தாள்.
“அம்மா, தம்பி பேரை மாத்திக்கிடிச்சி!…”
பஞ்சமியும் மருமகனும் தீபாவளிக்கு வருவார்கள் என்று, பலகாரம் சுட மாவரைத்து வந்திருந்தாள் அவள்.
“என்னடீ சொல்ற?”
“ஆமா. இத பாரு, நோட்டுப் புத்தகத்திலெல்லாம் எழுதிட்டிருக்கு!” அவள் துணுக்குற்றுப் பார்த்தாள்.
இளவழகன்… இளவழுதி, இளவரசன்…
“ஸ்கூல்ல பேர் மாத்திட்டானா?”
“தெரியல. ஆனா, அவன் மோகன்தாஸ் காந்தியில்ல. அது மாத்திரம் நிசம்.”
அப்போதே அவள் மருண்டு நின்றாள். ஆதாரக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட, குருகுலம் பள்ளியில் அவன் படிக்க விரும்பவில்லை. இவர்கள் குடிசை, அந்த வளாகத்தில் தான் இருந்தது. பள்ளி வகுப்புகள் ஏறி ஒன்பது, பத்து என்று வந்துவிட்டது. அங்கேயே சாப்பிட்டுத் தங்கிப் படிக்க, முப்பது பிள்ளைகள் போல இருந்தார்கள். மரத்தடியில் பராங்குசம், மருதமுத்து, சுசீலாதேவி எல்லாரும் வகுப்பெடுப்பார்கள். ஆங்கிலம் தமிழ் இந்தி எல்லாப் பாடங்களும் உண்டு. சுதந்தர இந்தியாவின் குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரிய தலைவர்கள் அங்கே வருவார்கள். அம்பர் சர்க்காவில் நூல் நூற்று, ஏழைப் பெண்களுக்குத் தொழில் புரிய வசதி செய்திருந்தார். ராதா அம்மாவுக்கு எளிய முறையில் அங்குதான் கல்யாணம் நடந்தது. மருமகன், கப்பலில் போகும் என்ஜினியராக இருந்தார். ‘சுதந்தர இந்தியாவின் கடற்படையில் வேலை’ என்ற பெருமையுடன் அம்மா சொல்வாள்… பையன் அவள் அதிகார வட்டத்துக்கப்பால் அப்போதே நழுவிவிட்டான். நெடுநேரம் கண்ணாடியின் முன் தலைவாரிக் கொள்வதும் மோவாயில் மீசை அரும்புவதைப் பெருமையுடன் தடவிக் கொள்வதும் வயசுக் கோளாறு என்று பொருட்படுத்தவில்லை. தீபாவளி பொங்கல் என்றால் அய்யாதான் அவர்கள் எல்லோருக்கும் கதர் வேட்டி சேலை சட்டை வாங்கித் தருவார்.
“போம்மா! எனக்கு இந்தச் சட்டையும் அரை டவுசரும் பிடிக்கல. எங்கிட்ட காசு குடு, நான் எனக்குப் புடிச்சதை வாங்கிக்கிறேன்.” இதுதான் முதல் படி அவன் உயரமாக வளர்ந்த பிறகு வேட்டி, துண்டு சட்டை என்றுதான் வாங்கித் தந்தார். அவன் அவர்கள் முகத்தில் படாமல் நழுவினான்.
அவன் சிகரெட் பீடி குடிப்பதையும், மூச்சுவிடாமல் வசனங்களைப் பேசுவதையும், அவனுக்கென்று ஒரு நண்பர் குழாம் இருப்பதையும் பஞ்சமி புருசன் கந்தசாமிதான் அவ்வப்போது வந்து சொன்னான். பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. நாடகம் பார்ப்பது, எழுதுவது, பேசுவது என்று ஈடுபாடு காட்டியதில், ஒன்பதில் தேற வில்லை. அழகரசன் என்று ஒரு பையன் இவனைத் தேடி வருவான். அப்பன் பர்மாவில் இருந்து வந்தவன். இங்கே வந்தபின் கல்யாணம் கட்டி குடும்பமாக இருக்கிறான். தையல் கடை வைத்திருந்தான்.
அவன்தான் கருப்புச் சட்டைக் கட்சி.
அவள் அந்த ராசமணியைத் தேடிச் சென்றாள்.
தேனாம்பேட்டைச் சந்தில் ‘கதிரவன் தையலகம்’ என்று பலகை மாட்டி இருந்தான். ஒட்டுத் திண்ணையில் அவன் மிசின் வைத்துத் தைத்துக் கொண்டிருந்தான். கீழே ஒரு பொடிசு பித்தான் தைத்துக் கொண்டிருந்தான்.
மிசின் ஒட்டத்தோடு, அவன் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். அவளுடைய வளாகத்துக்கு வெளியேயுள்ள ‘தமிழ்’ மொழியே அவளுக்குப் புரியாது. ஏனெனில் அவர்கள் கிராமத்தில் இப்படி ‘கீது, கிறாரு’ என்ற மொழி பேசிக் கேட்டதில்லை.
“ஏம்ப்பா, ராசமணி இருக்கிறாரா?”
அவன் நிமிர்ந்தான். அடர்ந்த முடி பின்பக்கம் விழுந்தது. அடர்ந்த மீசை, “ஏம்மே? நாந்தா ராசமணி?”
ஒரு கணம் திகைத்துவிட்டு, “ஏம்ப்பா, நான் தாயம்மா… என்னைத் தெரியல? அப்பாரு செளக்கியமா? ரொம்ப நாளாயிடிச்சி, உன்னையும் எனக்கு அடையாளம் தெரியல, எனக்கும் உன்னை அடையாளம் தெரியல…” என்றாள்.
“அடே…டே…ஆமாம்! தியாகிவூட்டு வேலைக்காரங்களாச்சே? இளவழகு இப்பதா காஞ்சிவரம் புறப்பட்டுப் போச்சி. உம்புள்ள ஒரு அருமையான நாடகம் எழுதிருக்கு. அத்தப்பத்திப் பேசத்தா, தலைவரு கூப்பிட்டனுப்பிச்சாரு. நாந்தா புதுச்சட்டை தச்சிகுடுத்தேன். போட்டுட்டுப் போயிருக்கு…”
அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. இது முளை இல்லை, வேர்விட்டு விட்ட பயிர் என்று தெரிந்து கொண்டாள். அவன் குருகுலப் பள்ளியை விட்டு வெளிச் செல்லத் துடித்த காரணம் அப்போது தெரியவில்லை. இந்தக் கதர், பிரார்த்தனை, உடற்பயிற்சி, இந்தி, தமிழ், ஆங்கிலம் என்ற மரத்தடி வகுப்புகள் எல்லாமே பிடிக்கவில்லை. எப்போது முரண்டு செய்யத் தொடங்கினான் என்றே குறிப்பாகச் சொல்ல முடியாது. காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க மாட்டான். உடற்பயிற்சி ஆசிரியர் மருதமுத்து அவனை வீட்டின் முன் வந்து காதைத் திருகி அழைப்பார்.
“எந்நேரம் துரங்குறான்? எந்திரிடா ?” என்று சந்திரி பாயில் இருந்து தள்ளி உருட்டுவாள். சிற்றப்பன் ஒருவன் அவ்வப்போது காணங் குப்பத்தில் இருந்து வருவான். ரிக்ஷா ஒட்டுபவன். குடிகாரன். அவள் புருசனைக் கெடுத்தவனே அவன்தான். “ஏண்டி பொட்டச்சிறுக்கி, முதல்ல பிறந்திட்டா, நீ மகாராணியா? சாண்பிள்ளைன்னாலும் ஆம்புள. அது செத்த நேரம் தூங்கட்டுமே?” என்று அதட்டுவான். இது தாயம்மாளின் செவிகளில் அநேகமாக விழாது. ஏனெனில் அதிகாலையில் எழுந்து அவள் குடிலைச் சுற்றிய இடங்களில் சாணி தெளித்துப் பெருக்குவாள். பத்துப் பசுக்கள் உள்ள கோசாலை இருந்தது. சாணி சுமந்து போட எருக்குழி உண்டு. பால்கறந்து, தயிர், மோர் வேலைகள் இருக்கும். சமையற்கட்டில் அங்கேயே உறையும் மாணவிகளும் ஆசிரியர்களும் வேலை செய்வார்கள். பெரிய கிணறும் இருந்தது. உடலுழைப்பு மிக முக்கியமாகக் கருதப்பட்டது.
ஆனால் அவள் பையன் பிறவியிலேயே யாரேனும் தனக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தி எழுத்துக்களை, பாடங்களை பஞ்சமி எழுதிக் கொடுப்பதும் இவன் கொண்டு போவதுமாக இருந்ததை ஆசிரியர் சுப்பையா கண்டுபிடித்துவிட்டார். பஞ்சமி ஏழிலோ எட்டிலோ படித்துக் கொண்டிருந்தாள். “நீ இரண்டு நாட்களுக்கு, அந்த வகுப்பிலேயே உட்கார்ந்திரு இங்கே வரவேண்டாம்” என்று அவளுக்கு வகுப்பில் நுழைய முடியாதபடி தண்டனை கொடுத்தார். இந்தப் பயலை செமையாக உதைத்து, வகுப்பில் இருந்து அத்தனை பாடங்களையும் எழுத வைத்தார்.
ஆனால் அவனைத் திருத்த முடியவில்லை. காசு எங்கே வைத்தாலும் களவு போயிற்று. அவளுக்கு இவனை அய்யா முன் கொண்டு நிறுத்தத் துணிவு வரவில்லை. அந்தக் கால கட்டத்தில், குடும்பத் தலைவன், இறந்து போன புதிது. அவன் சுதந்தரம் வந்ததும் பெரிதாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.
“சுதந்தரம் வந்திடிச்சில்ல? அய்யா எப்படியும் மந்திரி ஆயிடுவாரு தாயம்மா, நீதான் எனக்கு இந்தத் தோட்டக் காரன் வேலை இல்லாம, கவுரவமா அவருகிட்ட ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லணும். சுதந்தரச் சர்க்காரில் ஒரு டவாலி சேவுகன். சிவப்புப்பட்டைவில்லை போட்டுட்டு தலைப்பா கட்டிட்டு நான் நிப்பேன். இத்தினி வருசமா, இந்தக் குடும்பத்துக்கு நானும் உழச்சிருக்கிறேன்.” என்று ஒருநாள் அவன் சொன்னபோது அவளுக்குத் துக்கிவாரிப் போட்டது.
அந்த வீட்டிற்குப் பெரிய பெரிய தேசத்தலைவர்கள் அவளுக்குத் தெரிந்து வந்திருக்கிறார்கள். நாடு அடிமைப் பட்டுக் கிடந்த போது, சிறைவாசம் அநுபவித்தவர்கள்; பெண்டு பிள்ளைகளை மறந்தவர்கள் உனது எனது, சாதி, மதம் என்ற பாகுபாடில்லாமல் அந்த வீட்டை அறச்சாலையாகக் கருதியவர்கள், எல்லோருமே வந்தார்கள். தேசப் பிரிவினை, மகாத்மாவின் மரணம் இதெல்லாமே சுதந்தர சந்தோஷத்தில் பீடித்த கருநிழல்களாகிவிட்டன. தாயம் மாளுக்கு அப்போதெல்லாம் இதைப்பற்றிய விவரங்களோ, உணர்வுகளோ இல்லை. அவர் தேர்தலுக்கு நிற்கவுமில்லை. எந்தப் பதவியையும் ஏற்கவுமில்லை. பதவி ஏற்கவில்லையே தவிர, ஏழை எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும், அவர்களுக்காகப் பள்ளிகள் நிறுவ வேண்டும் என்பதற்கெல்லாம் முன் நின்றார் என்பது தெரியும். குரு குலம் பள்ளியில் அவன் படிக்க முரண்டு செய்து ஆறாவதில் தவறியபோது, அய்யாவேதான் அவனுக்குச் சீட்டு சிபாரிசும் கொடுத்து, மாம்பலம் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். அப் போதே சம்பளம் இல்லாத இலவசக் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டது.
அவள் ராசமணியைப் பார்த்துவிட்டு வந்த சேதி அவருக்குத் தெரிந்திருக்கிறது “ஏம்மா? பையன் நல்லாப் படிக்கிறானா?”
அவள் தலையைக் குனிந்து கொள்ள வேண்டி இருந்தது. குறுகிப் போனாள். சுதந்தரம் வந்து முதல் தேர்தல் வந்து இரண்டாவது தேர்தலும் நடக்க இருந்ததென்று நினைப்பு. இவள் சமையற் கொட்டகையில் வேலை செய்து கொண்டிருக்கையில் யார் யாரோ வருவார்கள்; பேசுவார்கள். நேருவே அய்யாவைத் தேர்தலில் நிற்கச் சொல்லி இருக்கிறார்; நிற்பார் என்றார்கள்.
அந்தக் காலம் அது.
“என்னம்மா, பேசல?…” அவள் எதைச் சொல்வாள்? கதரை விட்டுக் கறுப்பணிந்தது சொல்வாளா? காசு திருடுதல், பொய் பேசுதல், புகை குடித்தல் ஆகிய மூன்று தீமைகளைப் பற்றிக் கொண்டதைச் சொல்வாளா?
“அய்யா, அவனை அனுப்பிச்சி வைக்கிறேன், கண்டிச்சி வையுங்க, உங்க பார்வையை விட்டு அனுப்பிச்சதே சரியில்லய்யா!” என்றாள் நெஞ்சு தழுதழுக்க.
அவர் சிரித்தார்.
“இதே போன்ற தப்புகளை மகாத்மா காந்திகூட அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இந்த வயசு அப்படியானது. அவன் வயசில் ‘கோட்டை’த் தாண்டனும்னு ஒரு வேகம் வரும். துடிக்கும் வயசு, தாண்டட்டும். ஆனால் தாண்டுற போதும், ஒடுற போதும் ஒழுக்கம்ங்குற தறி கெட்டுப் போயிடக்கூடாது. அதுதான் தாயம்மா, முக்கியம்..” பையன் தறிகெட்ட தடத்தில் போகிறான் என்று எப்படிச் சொல்வாள்? தறிகெட்ட தடம், பொய், களவு, சூது, கள், புகை…
பதினான்கு பதினைந்து வயசு கட்டுப்படுத்த வேண்டிய வயசு, அப்பன் எடுத்துக்காட்டாக இருக்கவில்லை. அவன் குடித்துவிட்டு வந்ததும் இவள் திட்டியதையும் அவனே அறிந்திருக்கிறான். அம்மாவின் மீதும் சகோதரிகள் மீதும் மதிப்பு இல்லை…
இவள் பேசாமல் நிற்கையில் அவர் தொடர்ந்து பேசியது நினைவில் மின்னுகிறது.
நானும் அந்த வயசில் பெற்றோரை எதிர்த்துப் போனேன். எனக்குப் பதினாறு வயசில், சரோஜாவைக் கல்யாணம் செய்து வைத்தாங்க. அப்ப அவளுக்குப் பன்னிரெண்டு வயசு, சொந்த பந்தமுள்ள குடும்பம்தான். சொத்து பத்து, வியாபாரம்னு சம்பந்தம் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு இல்லாத உயர்ந்த படிப்பு நான் படிக்கணும்னு சேர்த்தாங்க. ஆனா, அவங்க என்னை மேல் நாட்டுக்குக் கல்வி பயில அனுப்பி வைத்து வெள்ளைக்காரன் மெச்ச பதவி அடையணும்னு நினச்சது நடக்கல. காந்தி வந்திட்டார். படிப்பை விட்டுப் போராட்டம். பிறகு தொடர்ந்து வக்கீல் படிப்பு. சட்ட மறுப்பு, சத்யாக்கிரகம்னு, முழுசுமாக மாறிப் போச்சு. சரோஜாவுடன் பேசியது கூட இல்லை. அவளே, என் வழியைத் தேர்ந்து, கள்ளுக்கடை மறியல், கதர்ப்பிரசாரம்னு போட்டிபோட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போனாள். இதெல்லாம் நினைச்சிப் பார் தாயம்மா?…”
“அய்யா, நீங்க எதானும் வழி காட்டுவீங்கன்னா, இப்படிச் சொல்றீங்களே?”
“இல்லே தாயம்மா. எனக்கு இப்ப ஒண்னு புரியிது. விடுதலைப் போராட்டத்தில் யாரும் எங்களைக் கட்டாயப் படுத்தி இழுத்துவிடல. ஆனால், காந்தி மகானின் வாழ்க்கை, சத்திய சோதனை. அந்த காந்தி, அவர் பேச்சு, நடப்பு எங்களையறியாமல், ஒரு தியாக வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. ஒட்டு மொத்தமாக இந்த தேசத்தின் குரல், சாதி, மத, பாஷை, எல்லாத்தையும் மீறி சுயராச்சியம்னு முழக்கியது இப்ப. அந்த இலக்கு வரு முன்னரே, குரல்களில் பிசிறடிக்கிறது எனக்குத் தெரியிது. பையனைத் திருடினியான்னு கேட்டா எகிறிப்பான். சிகரெட் ஊதுறியான்னு நான் கேட்டாலும் அவன் என்னைத்தான் வெறுப்பான். இந்தப் பள்ளிக் கூடத்திலேயே உணவு ஒழுக்கம், உடற்பயிற்சி, பிரார்த்தனை எல்லாம் எதற்கு?… ஒழுக்கம்ங்கறது வெளில இருந்து வலியுறுத்துவதாக இருந்தால் வராது. அகக்கட்டுப்பாடு வேணும்…”
இப்படிச் சொல்லிவிட்டு அவர் யோசனையில் ஆழ்ந்து விட்டார். தாயம்மாள் கண்களைக் கட்டிக் கொண்டு எங்கோ நிற்பது போல உணர்ந்தாள்.
‘மோகன்தாசு’ என்று வைத்த புள்ளி உயிர் பெற்றதும் தன்னையே அழித்துக் கொண்டது. இந்த ‘இளவழுதி’க்கு சுயம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் மேலும் மேலும் தப்புகள் செய்திருப்பானா?
வேட்டி விசிறலும் நடை அரவமும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகின்றன. ரங்கன் பின்புறத்திலிருந்து ஓடி வருகிறான்.
“வாங்க, வாங்க சார்…!”
யாரிவன்? வாட்டசாட்டமாக, வெள்ளை முழுக்கைச் சட்டை, கரை வேட்டி, மேல் வேட்டி, தங்கச்சங்கிலி மோதிரங்கள், நெற்றியில் ஒற்றை நாமம், கிருதா, மீசை.
“அம்மா, வணக்கம்!” என்று குனிந்து அவள் எதிர்பாரா விதமாகக் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறான். ஏதோ ஒரு சென்ட்வாசனை அழையா விருந்தாளியாக மூக்குக்குள் இவன் புகுந்தது போல் நுழைகிறது. “புரவலர் அண்ணாச்சியப் பாக்க வந்தேன். வந்திருக்கிறதா ரங்கன் சொன்னான். சாப்பாடு அனுப்பினேன். வரேன்னு சொல்லி அனுப்பினேன். அம்மா நலமாயிருக்கிறீங்களா?”
கார் டிரைவர் போலிருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழை பிளாஸ்டிக் பைளைச் சுமந்து வருகிறான். அவளிடம் அவற்றைக் கொடுக்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.
“அம்மாவைப் பார்க்க வரணும்னு அடிக்கடி என்ன, தினமும் நினைக்கிறதுதான். வேலை நெருக்கடி, முடியல. எங்கம்மா இருந்த நாள்ள, தியாகி அய்யாவைப் பத்தி ஒரு நாக்கூடப் பேசாம இருந்ததில்ல. அவங்க போனப்ப கூட நீங்க வந்திருந்தீங்க. கஷ்டப்பட்டு எங்களை முன்னுக்குக் கொண்டு வந்தவங்க. இப்ப அவங்க ஆசில நல்லா இருக்கிறம். அம்மா பேர் வச்சித்தான் முதல்ல ஆச்சி மளிகைன்னு ஆரம்பிச்சோம். இப்ப புரவலர் அண்ணாச்சிதா, சூப்பர் மார்க்கெட்டையும் ரூஃப் கார்டன் ஒட்டலையும் திறந்து வச்சாங்க. சிவலிங்கம் பயல்கிட்ட அழைப்புக் கொடுத்து உங்களை கூட்டிட்டு வரச் சொன்னேன். நீங்க வரல…”
சுரீலென்று உணர்வில் தைக்கிறது, ஆனாலும் குரலில் காரம் காட்டவில்லை.
“சர்வோதயா தலைவர், ராதாகிருஷ்ணனை அழைச்சிட்டு பார்க்கில் வந்து, அத்தனை ரிக்சாக்காரங்களையும் கூட்டி வச்சோம். அப்ப, அத்தினி பேரும் இனி குடிக்கிற தில்லன்னு சத்தியம் பண்ண வச்சோம். திருட்டுச்சாராய மும், உசந்த ஒயினும் விக்கப்படாதுன்னு உங்கிட்ட சத்தியம் வாங்கணும்னு அந்தப் பெரியவரையும் கூட்டிட்டு உங்க வீட்டுப்படி ஏறி வந்தேன். நினப்பிருக்கா?…”
“ஏம்மா, நினப்பில்ல? அப்படிப் பொய் சொல்ற ஆளில்ல நானு. இந்தக் கடை வைக்க, ஏழுமலை தெருவில, தியாகி அய்யா உதவி செய்துதான் தொடங்கினோம். முதமுதல்ல, உடம்பு முடியாம, ரிக்சாவில வந்து, மஞ்சளும் குங்குமமும், அரிசியும் பருப்பும் வாங்கினாங்க. அதெப்படிம்மா மறக்கும்? அய்யா வளர்த்த தியாகக் கட்சி இன்னிக்கு இல்ல. நீங்க சாராயம் காச்சக்கூடாது, குடிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கி என்ன பிரயோசனம் ? காச்சி வித்து மாமூல் குடுக்கலன்னா போலீசுகாரன் ஏதோ ஒரு பொய்க்கேசைப் போட்டு உள்ள தள்ளுறான். அவன் ப்ொஞ்சாதி ஏங்காலுல தான் வந்து விழுவா. கரிமங்கலம் கிராமம்பூரா போலீசு ஆதரவில்தான் தொழில் நடக்குது. நம்ம புரவலர் அண்ணாச்சி கிட்ட இதெல்லாம் ‘டிஸ்கஸ்’ பண்ணனும்னு தா வந்தேன். அதுக்குள்ள புறப்பட்டுப் போயிட்டாங்க போலிருக்கு?…”
அவள் உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் பேசவில்லை.
“அப்ப வரேம்மா. வணக்கம்…” வந்தது போல் திரும்பிச் செல்கிறான்.
ரங்கன் பின்னால் வழியனுப்பச் செல்கிறான்.
“அய்யாவப் பார்க்கணும்னு வந்திருக்காங்க. சொல்லி அனுப்பிச்சாங்க. நீங்கதா வந்தவங்களை…” சொல்லத் துணியாமல் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான்.
“நீ ஒண்ணும் எனக்கு வெளக்கவாண்டாம். டிபன் காரியர் சோத்தை எங்கே கொண்டு போனியோ, அங்கேயே இதெல்லாம் கொண்டுபோ! பாவப்பட்ட சோறு பண்டம் பழம் எதும் இங்கே வாணாம்.”
உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ நீறு பூத்து அவிந்தாற் போல் கிடந்த பொறி கிளர்ந்து பொறிப் பொறியாய்ச் சுடர்ந்து தகிக்கிறது.
இவன், போலீசு சரியில்லை என்று இழுத்து மூடுகிறான். போலீசு, எங்கிருந்து வந்ததுடா? ஆட்சிக்காரனை மீறிப் போலீசு எதற்குடா, ஏழையை அடித்துக் கள்ளச்சாராயம் காய்ச்சச் சொல்லுறான்? ‘மாமூல்’னு யாருக்கடா வாங்குறான்? படுபாவிகள் சுதந்தர நாள், காந்தி ஜெயந்தின்னு அடுக்கடுக்காக் கொண்டாடுறான்! தாய்க்குலம், அன்னைக்குலம்னு, பேச்சுக்குப் பேச்சு பூசுறான். பாவிக, எத்தினி பொண்ணுங்களைத் தொட்டு சீரழிக்கிறானுவ! அந்தக் காலத்து நாடக மேடைகளில், சுந்தராம்பா, கிட்டப்பா, விசுவநாத தாஸ்னு பாடினாங்க. அப்பவும் போலீஸ் இருந்தது. நாடகக்காரன் குடிப்பான். விடிய விடியப் பாட்டுப் பாடி பேசி நடிப்பான். மேடையில் பெண்ணுங்களைத் தொடக்கூட மாட்டாங்க. அப்படி நடித்த ஜோடிகள் கூட, நிசவாழ்க்கையில் கற்பு விரதம் காத்ததுண்டு. தெரிந்தும் தெரியா மலும், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்பவன், மனச் சாட்சியை ஒட்டு மொத்தமாகத் துடைத்தவன்தானே?
புரவலராம், அண்ணாச்சியாம்! யாருக்குப் புரவலர்? புரவலர், புலவர் எல்லாம் ஒண்ணுதானா? என்ன இழவோ, யார் கண்டார்கள்? எல்லாருக்கும் பட்டம்.
“ஆச்சியம்மா?. இப்படிக் கூப்பிடுபவள் சங்கரிதான்.
“ஒரு வாழஇல தரீங்களா? சம்முகம் வந்திருக்கிறான். ஊருக்குப் போறான். சோறு கட்ட ஒரு எல வேணும்…”
“தரேனே?…”
விடுவிடென்று உள்ளே செல்கிறாள். கிணற்றடி முற்றம் அகலமானது. அதற்கு அப்பால் கழுவும் நீர்வீணாகாமல் இருக்க வைத்த வாழை. மொந்தன், குலை தள்ளி இருக்கிறது. கன்றிலிருக்கும் இலையை இழுத்து, வேலி வழி வந்த ஆடோ மாடோ கடித்திருக்கிறது. எம்பி, கத்தியால் அவளே ஒர் இலையை அரிகிறாள். பால் சொட்டுகிறது.
“மெள்ள. வெள்ள சீல, ஆச்சி. கரை விழுந்திட்டா போகவே போகாது…” சொல்லிக் கொண்டே வாங்கிக் கொள்கிறாள்.
“எதுக்கு இத்தினி பெரிசு? சோறொண்ணும் வாணாம் அத்தைன்னுதா அவஞ்சொல்லுதா. எனக்கு மனசு கேக்கல. இம்புட்டுப் புள்ளயா இருக்கறப்பவே அவம்மா விட்டுப் போட்டு ஆபீசுக்குப் போயிடுவா. புனாவிலதா அப்ப இருந்தம். இப்ப அண்ணனும் மதனியும் டில்லிக்கு அந்தால இருக்காங்க. சம்முவத்துக்கு இங்கதா, பக்கத்துல பொத்துர்ல இன்ஜினிரிங் காலேஜில எடம் கிடைச்சி, படிப்பு முடிச் சிட்டுப் போறான். ஒட்டி வளர்ந்த புள்ள. இனி செறகு முளச்சி எங்கோ பறந்து போகும்.”
“அண்ணம்புள்ள, பாசமா வச்சிருக்கே. பாசமா இருக்கும்மா, வருத்தப்படாத” என்று இவள் ஆறுதல் சொல்கிறாள்.
“நானே சொல்லிக்கக்கூடாது ஆச்சி. புனாவிலை இருந்தப்ப எங்கண்ணன் அப்பப்ப சிகரெட் குடிக்கும். பார்ட்டின்னு… அதுவும் உண்டு. மதனி எங்களுக்குக் கேக்காம திட்டுவா. எங்கம்மா படுக்கையோடு கெடந்தா. அப்பா செத்த பிறகு ஆறு வருசம் இருந்தா; எதோ ஆச்சி. நா இங்கியே கெடந்து கழிச்சிடுவ, அஞ்சு வருசமாச்சு, இங்க வந்து. இனி இதா இடம்…”
இவள் இலையை இரண்டாக்கிக் கொடுத்து விட்டு ஊமையாகப் பின் தொடருகிறாள். நடை முடிந்து வாசல் மேல் திண்ணைப் படி இறங்கு முன் சங்கரி திரும்புகிறாள். சிறுகூடு. முன் நெற்றியில் சில நரைமுடிகள் விழுகின்றன. நல்ல சிவப்போ கவர்ச்சியோ இல்லை. நெற்றியில் சிறு குங்குமப் பொட்டும் அதற்குமேல் சிறிது திருநீறும் அவள் மங்கலத் தன்மைக்குச் சாட்சியமாக இருக்கின்றன. ஆனால் கழுத்தில் கயிறு இல்லை. ஒரு மணி மாலையும் ஒரிழைச் சங்கிலியும் தெரிகின்றன. பாஷனில்லாமல் கழுத்து மூடிய ரவிக்கை; நூல் சேலை…
“ஆச்சி, காஞ்சிபுரம் ரோடில, புதிசா ஒர் அம்மன் கோயிலும், ஆசிரமும் கட்டிருக்காங்களாம். ராஜராஜேஸ்வரி அம்பாளாம். அம்பாளின் பதினாறு வடிவங்களை சலவைக்கல் மண்டபத்தில் வைத்து பூசை நடக்குதாம். சுத்தி மரமும் சோலையுமா மனசுக்கு ரொம்ப எதவா, அமைதியா இருக்குதாம். பஸ் போற வழிதானாம். ரேவதி டீச்சர் பெளர்ணமி பெளர்ணமி போயிட்டு வராங்க. அவங்க என்னியக் கூப்பிடத்தான் செய்றாங்க… ஆனா, அவலுட்டுக்காரர் மத்தவங்க கூட நா எப்பிடிப்போக? ஆச்சி, நீங்க வாறீங்களா? ஒருநா போயிட்டு வருவோம்?”
“போலாம்மா, போனாப் போச்சி” என்று வழியனுப்பி வைக்கிறாள்.
சங்கரி, இதே நீளத்தில், பழைய வீட்டில் இருக்கிறாள். இந்தத் தெருவுக்குப் பேரே பழையனுர் தெருதான். இந்தப் பெரிய வீடு அம்மாளின் வழி வந்த சொத்து. அப்போ தெல்லாம், சுற்றிலும் எதிரே பனமரங்கள் இருந்தன. மாந்தோப்பு. எல்லாம் ருமானி மாம்பழம். மாந்தோப்பைக் காப்பவர்கள் என்று குடிசை வீடுகள் இருந்தன. பின்னால் ஒரு குளம் இருந்தது. பக்கத்தில் புற்று இருந்தது. எதுவுமே இப்போது நினைவில்லாதபடி மாறிவிட்டது. கோடியில் இப்போது, மூன்றடுக்கில் இந்தப் பதினைந்து வருஷங்களில் வெங்கடேசா பள்ளிக் கூடம் வந்திருக்கிறது. பழைய கடை வீதியில் சுதந்தரம் வந்த வருசத்தில் அய்யா திறந்து வைத்த பஞ்சாயத்துத் துவக்கப்பள்ளி இப்போது, நகராட்சி பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. எல்லா மூலைகளிலும் இங்கிலீசு பள்ளிக்கூடம் தான். எங்கேயோ பொத்துரு காலேஜ் என்று இன்ஜினிர் படிப்புப்படிக்க சங்கரியின் அண்ணன் பிள்ளையையும் அவளையும் இங்கே குடிவைத்தார். அவள் வாசலில் உட்கார்ந்திருக்கையில் பார்ப்பார். இடப் பக்கம் வயல்களாக விரிந்திருந்த இடங்களை வீடுகளும் ஏதேதோ கட்டிடங்களும் விழுங்கிவிட்டன. இந்த நாலைந்து ஆண்டுகளில் சாலை போட்டுவிட்டார்கள். காலை ஏழரை மணி, எட்டுமணி என்று கல்லூரி பஸ்கள் போகின்றன. பெண் பிள்ளை ஆண் பிள்ளை வித்தியாசம் இல்லாமல் முதுகில் பில்ட் போட்ட மாதிரி சுமையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு எதிரே நிற்கும். எதிர்ச்சாரியில் வரிசையாகக் கடைகள்- கட்டிடங்கள் இப்போதுதான் முளைக் கின்றன. கடைகள் என்றும், வங்கி வருகிறதென்றும் சொல் கிறார்கள். பள்ளிக் கூடத்தை நடத்தும் பத்மதாசன், தெலுங்கா, தமிழா, கன்னடமா, இந்தியா என்று தெரியாது. பள்ளிக்காகப் பொது இடங்கள் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு விட்டான். மாந்தோப்பு, குடிசைகள் எல்லாம் இல்லை. குளம் இருந்த இடமும் அவர்கள் வசம். புற்றைச் சுற்றி ஒரு கோயில் எடுத்து, பக்திமான் என்று காட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்த வீட்டு அய்யா படுக்கையோடு இருந்த நாட்களில், காலமாவதற்கு ஒருமாதம் முன்பு வந்தான். கருவலாக, ஒட்டைக்குச்சிபோல இருந்தான்.
கைத்தறித்துண்டும், வாழைப்பழமுமாக வந்தான். பழத்தை வைத்துவிட்டு, ‘நமஸ்காரம்’ என்று பணிந்தான்.
“வாங்க. உக்காருங்க..” என்றவர் மெதுவாகத் தலையணையைச் சரி செய்து கொண்டு உட்கார்ந்தார்.
“எப்பேர்ப்பட்ட தியாகி நீங்கள்? உங்கள் தியாகங்களில் நாங்கள் வாழ்கிறோம். நீங்கள் இங்கே ஊர் உலகம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்றறிந்ததும் நான் கண்ணிர் விட்டேன்…”
இப்படிச் சொல்லிக் கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் கைத்தறித் துண்டை, வணக்கத்துடன் அவர் கைகளில் வைத்தான்.
“இதெல்லாம் இப்ப எதுக்கு? நீங்க…”
“சொல்றேன். எங்களுக்குப் பூர்வீகம் கேரளம்னு சொல்லு வாங்க. ஆனால் தாத்தா காலத்தில் மகாராஷ்டிரம் போயிட்டாங்க. தாத்தா, திலகரின் கேஸரியில் இருந்தாராம். எல்லாரும் போயிட்டாங்க. எங்கம்மா கன்னடம். அவங்கப்பா யுத்த காலத்தில் கன்ட்ராக்ட் எடுத்து நிறையச் சம்பாதித்தாராம். எங்கப்பா அநாதை போல் அவர்கள் குடும்பத்தை அண்டி படிச்சு, மகாத்மா சொன்ன மாதிரி ஜாதி மத பேதமில்லாம வாழனும்னு லட்சியம் வச்சிருந்தார். அந்த நடவடிக்கைக்காகவே, சாதி வெறியர்கள் அவரை ஒரு நல்ல வயசில் வெட்டிப் போட்டுட்டாங்க. எங்கம்மா என்னை அழைச்சிட்டு யு.பிக்குப் போய், மகாதேவி வர்மா தெரியிம்ல? அவுங்க கல்வி ஸ்தாபனத்தில் இருந்து என்னைப் படிக்க வச்சாங்க. எனக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில், இளைஞர்களை அறிவியல் கல்விபெற வாய்ப்பளிக்க நல்ல பள்ளிக் கூடம் வைக்கணும்னு ஆசை. ஆசை என்ன, இலட்சியமே அதுதான். உங்க குருகுல நிர்வாகி, பராங்குசம் எங்க வித்யா பீடத்துக்கு வந்திருந்தார். அவர்தான் இங்கே வந்து நீங்கள் கல்விப்பணி செய்யணும்னு சொன்னார். நான் நேராக இங்கே உங்களைப் பார்க்க வந்திட்டேன்…”
“அப்படியா?. நல்ல கருத்துத்தான். ஆனால் அந்தக் காலத்தில நாங்கள் கல்வி ஒரு மனிதரை, ஒரு குழந்தையை முழு மனிதராக்க வேண்டும்னு நினைச்சோம்.”
“இப்பவும் அதேதான். நான் நேராகக் குருகுலம் ஸ்கூலைப் பார்த்திட்டுத்தான் வரேன். ரொம்ப ஆச்சரியம், அங்கே, இந்தி, இங்கிலீஷ் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க. அங்கேயிருந்து போகும் பிள்ளைகள் ஐ.ஐ.டி.க்கு நேராகப் போகும் அளவுக்குக் கல்வித்தரம் இருக்கு”
ஐயா ஒன்றுமே பேசவில்லை.
“…நான் தொந்தரவு செய்ய விரும்பல கல்விப் பணிக்கு இந்த இடம் ஒதுக்கித்தரணும். நான் கவர்மென்ட் மூலமா, வேண்டிய ஏற்பாடு செய்ய முடியும். கல்விப் பணிக்கு, தியாகி அய்யா, நன்கொடையாகத் தந்து உதவணும்…”
குரல் தழதழத்தது –
“ஐயாவப்பத்தி, ஒரே வாரிசான அம்மா, அந்த சகோதரியின் மறைவு எல்லாம் கேள்விப்பட்டு உருகிட்டேன். இந்த முழு பாரத நாட்டிலும், இப்படி ஒரு தியாகி இருக்க முடியுமா?”
உள்ளிருக்கும் அழுக்கை, நான்கு நாட்கள் குளிக்காத வியர்வையை மறைக்கத்தான் மருக்கொழுந்து சென்ட்டைப் பூசுவார்கள்? குறிப்பிட்ட ஒரு பத்திரிகை வரும்போதே அந்த சென்ட்மணம் வீசும். ராதாம்மா உடம்பு சரியாக இல்லாத நாட்கள்.
“தாயம்மா, இந்தப் பத்திரிகைக்கு ஏன் இப்படி சென்ட் போடுறான் தெரியுமா?… என்று கேட்பாள்.
“சென்ட் விளம்பரத்துக்கு இதில சென்ட் போடுறானா?”
“இல்ல தாயம்மா. இதில் இத்தனை அழுக்கு குப்பைகள் அச்சாயிருக்கு. அத்தைப் படிக்க இப்படி ஒரு சென்ட்டை போட்டு இருக்கிறாங்க…” இதெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகிறது? அறங்காவலர் குழு என்பார்கள். பராங்குசம் வந்து அய்யாவிடம் கையெழுத்து வாங்கிச் செல்வான். பிறர் பார்க்கும் போது மிக மரியாதையாக அவளிடம் நடந்து கொள்வான். அய்யாவும் அவனும் பேசும் போது அவள் கேட்கக் கூடாது என்று கருத்தாக இருப்பான். போகும் போது அவளை உறுத்துப் பார்த்து உறுமுவது போல் கருவிக் கொண்டு செல்வான். அவனுடைய சந்தனக் கீற்றும், காவி வண்ணக் கதர் சட்டையும் அந்த நடப்பின் கபடங்களை மூடும் வேசம் என்று தோன்றும்.
பள்ளிக்கூடம் விட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. தொங்குபைகள் ஆட, கோழிக்குஞ்சுகளைப் போல் பிள்ளைகளை அடைத்துக் கொண்டு தடதடவென்ற சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் வண்டி ஒடுகிறது. உதிரிகள் போல் ஆட்டோ ரிக்சாக்களில் சில குழந்தைகள் செல்கின்றன. சொர்ணம் ஒரு பிஞ்சை இடுப்பில் ஏற்றிக் கொண்டு, கையில் புத்தகப்பை, தண்ணீர் குப்பி வகையறாக்களுடன் வருகிறாள். சொர்ணத்தின் புருசன், மாதா கோயில் பக்கச் சந்துக் குடிசைக்காரன். ரிக்சா ஒட்டிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒரு பெண் சாதி இருக்கிறாள் என்று தெரியாமல், இவளையும் சேர்த்துக் கொண்டான். அவன் குடித்தான். இவள் இட்டிலிக்கடை போட்டுக் குடிக்கக் காசு கொடுத்தாள். கரைவேட்டிக் கட்சிகள் ரிக்சாக்காரர் சங்கம் இவனை ஒரு நல்ல குடிமகனாக்கி, தேர்தல் காலங்களில் ஆட்டோரிக்சா வாங்கும் கனவை வளர்த்தன. கைவசம் இருந்த ஒட்டை ரிக்சாவும் பறிபோக, குடித்துக் குடித்துச் செத்தான். நல்ல வேளையாகக் குழந்தை இல்லை…
படி தாண்டிப் போகுமுன் இவளைப் பார்த்துக் கொண்டு திரும்புகிறாள். “அம்மா, கொஞ்சம் குடிக்கத் தண்ணீதாங்க. இந்த வருசம் என்ன இப்படிப் பூமி காயுது, இன்னும் பங்குனியே பிறக்கல…”
இவள் உள்ளே செல்கிறாள். இன்னும் சாப்பிடாமலே நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த உணர்வு பசியாய்க் கிளர்ந்தெழுகிறது. தண்ணிரைச் செம்பில் எடுத்துக் கொண்டு வருகிறாள். குழந்தையைக் கீழே இறக்கி இருக்கிறாள்.
“இந்தாம்மா…”
‘எனக்குத் தண்ணி…” என்கிறது பிஞ்சு.
‘இந்த வெங்கடேசுவரா பள்ளியில் ‘பொடி’ நிறமல்லவா? இது ‘ரோஸ்’ நிறமாயிருக்கு? எந்த ஸ்கூல்?”
“இது குட் செப்பர்டம்மா… நீளப்போயி, செந்தில் ஸ்டோர் பக்கம் சந்துல இருக்கு…”
“அங்கதான மோகன் ஸ்கூல்னு ஒண்ணு இருந்திச்சி?”
“மோகன் வித்யாலயா பெரிசாயி, பார்க் பக்கம் மூணு மாடி கட்டிட்டாங்க. அங்கதான் பல் டாக்டர், கண் டாக்டர், தோல் டாக்டர் எல்லாரும் ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. இந்த ஸ்கூல், மின்ன ஜூலி டீச்சர் இல்ல, கான்வென்ட்ல…? அவங்க மருமக நடத்துது…”
“எனக்குத்தண்ணி” என்று பிஞ்சு நினைவு படுத்துகிறது. வெள்ளை ‘ரிப்பன்’ அவிழ்ந்து தொங்க, முடி கட்டையாகப் பிரிந்திருக்கிறது. செம்புத் தண்ணிரில் கொஞ்சம் உறிஞ்சு குழாய்க் குப்பியில் ஊற்றிக் கொடுக்கிறாள். பிறகு, தான் குடிக்கிறாள்.
“வாரேம்மா!” என்று வெண்பற்கள் தெரிய நன்றிச் சிரிப்பு மலரத் திரும்புகிறாள்.
“இந்தப் பக்கம் போற…?”
“அதா. செவந்திபுரம் புத்துக்கோயிலண்ட போகணும்.” மூன்று வயசு நிரம்பாத குழந்தைக்குப் படிப்பு…
“நீ அங்கே வேலை செய்றியா?”
“ஆமாம்மா, இவங்கம்மா போஸ்ட் ஆபீசில வேலை பாக்குறாங்க. வூட்ல இவங்க பாட்டி இருக்கு. புச்சா வூடு கட்டிட்டு வந்திருக்காங்க. நா முன்ன இவங்க ஏழுமல தெருவில் ஸ்கூல் பக்கத்தில இருந்தப்ப வேலை செய்துகிட்டிருந்தேன். இப்ப இவங்க பொழிச்சலூருக்கு மாத்திட்டாங்க. எனக்கு அங்கேந்து இத்தக் கொண்டாந்து விட்டுட்டுப் போறது கஸ்டமாத்தானிருக்கு. காலம அவங்க பைக்ல ஆபீசுக்குப் போறப்ப ஸ்கூல்ல கொண்டாந்து விட்டுடுவாங்க. இப்ப நாங் கொண்டுவிட்டுவ…”
“அப்பா எங்கே வேலை பண்ணுறாங்க?”
“அவரு சவுதிக்குப் போயிருக்காரு. கிழவிதா வூட்ல…”
“பதனமாப் போய்ச்சேரு…”
அவள் போகிறாள்.
சுதந்தரம் வந்ததும் தேனாறும் பாலாறும் ஒடும் என்று நம்பிய ஏழைகளை நினைக்கிறது மனம்.
நினைப்பில் கஞ்சிக்கான பசியும் அமுங்கிப் போகிறது.
அத்தியாயம்-3
பின் பக்கம் மாமரத்தடியில் சருகுக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன. குட்டை, குளம், புற்று எல்லாம் போன பிறகு, இந்த வீட்டைச் சுற்றி அறங்காவலர் குழு, ஒரு கம்பி வேலி போட்டிருக்கிறது. கம்பி வேலிகளில் நொச்சி, தூது வளை, ஆடாதொடை போன்ற எல்லா மூலிகைகளும் கிடைக்கும். ஒரு பக்கம் ராதாம்மாவின் நினைவாக இன்னமும் மருதோன்றிச் செடிகள் வேலியைக் காக்கின்றன. இந்த மருதோன்றி அரைத்து வைத்த ஒரு மணியில் பற்றி விடும். இரவு சாப்பிட்டுப் படுக்கு முன் அரைத்து வைத்து விட்டுக் காலையில் எழுந்ததும் கைகளும் கால்களும் சிவப்புப் பவழங்களைக் கோத்து ஒட்டினாற்போல் அழகு மிளிரும் அதிசயத்தைக் குழந்தைகள் அநுபவிக்கும். பைசா செலவில்லாத அழகு… இது அரைப்பதற்கே பயன்பட்ட கல்லுரல் இன்னமும் கிணற்றடியில் கிடக்கிறது.
இந்தக் காலம் எப்படி மாறிப்போயிற்று? யார் மீதோ கோபம் பொங்குகிறது. யார் மீது? யார் மீது?
பறட்டுப் பறட்டென்று பெருக்குகிறாள்.
“அம்மா ?…”
ரங்கன்தான்.
“ஏம்ப்பா, வைக்கோல் பிரிக்காரன் வந்திருக்கானா?”
“இல்லம்மா. சாயபு மவுத்தாயிட்டாராம்.”
அவள் துடைப்பத்தைக் கீழே போடுகிறாள்.
“யாரு… தியாகி சாயபுவா? ஒரு மாசம் முன்ன சைக்கில் ரிக்சாவில் ஏறிட்டு வந்தாங்க. அய்யாவின் நினைவு நாள்னு…”
“என்னமோ நெஞ்சு வலிக்கிதுன்னாப்புல. ஒருநா சங்கரி நர்சிங் ஹோம்ல வச்சிருந்தாங்களாம். அங்கியே ரா போயிட்டாராம். இத, ரமணி வந்திருக்கு…”
அந்தக் காலத்து மனிசன், ஒரே மனிசன்… போயிட்டீங்களா? என்று மனம் குன்றுகிறது.
இந்த ரமணி பால் பாக்கெட் போடுவான். அப்படியே படித்துக் கொண்டிருந்தான்.
“ஏம்ப்பா ? எந்த வீட்டில இருக்காங்க ? மகன் வீட்லதானா?”
“மெயின் ரோடுக்கப்பால, பேரன் சித்திக் வூட்டிலதான் வச்சிருக்காங்க. அவுருதா உங்ககிட்ட சொல்லிட்டுவரச் சொன்னாங்க…”
“ஓ, மருந்துக்கடை வச்சிருக்கான்னு சொன்னாங்க. ஜமிலா புள்ள.”
“ஆமா. அந்த மருந்துக்கடையிலதா நா வேலை செய்யிறேன்…”
“ஓ…” அவள் பேசாமல் அவனைப் பின் தொடர்கிறாள்.
இவள் அந்த ‘மெயின் ரோடை’த் தாண்டிப் போய் வெகுநாட்களாகிவிட்டன. பழைய சாலையா அது? அது வெறும் பொட்டலாக இருந்த காலத்தை அவள் அறிவாள். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், இராணுவ வண்டிகள் செல்லத்தான் அந்தச் சாலை பெரியதாகப் போடப்பட்டதாக அய்யா சொல்வார். அருகில் விமான தளம், பயிற்சிக் கூடம். என்று சூழலே மாறிற்று! இப்போதெல்லாம் அந்தப் பக்கம் செல்லவே முடியாது. அருகே இரயில் நிலையம், மிகப் பெரிதாக இறக்கை விரித்துக்கொண்டு இரு புறங்களிலும் படிகளும் தளங்களும்மாக மனித நெருக்கடிக்குச் சாட்சியாக இருக்கிறது. பேருந்து நிலையம் என்று ஒதுக்கிய இடம் பிதுங்கி எங்கே பார்த்தாலும் பேருந்துகள், கடைகள் என்று மனித – இரண்டு சக்கர, மூன்று சக்கரங்களின் போக்குவரத்து நெரிசல்கள். ஆனாலும் இந்தப் பெருவழிச்சாலை துப்புரவான, ஆரோக்கியமான வணிக வீதிகளைச் சந்திக்கும் சாலையாக இல்லை. என்னென் னமோ கடைகள். இவளுக்குத் தெரிந்ததெல்லாம் காபிக் கிளப், வெற்றிலை பாக்கு சோடாக் கடைகள், மளிகை, வீட்டு சாமான் கடைகள், துணிக்கடைகள், தையல் கடைகள்தாம். அந்த அடிப்படையே இல்லை. ஒரு கஜம் மல்துணி என்றால் துணிக்கடைக்காரருக்குத் தெரியவில்லை. இவளுக்குக் கைத்தறி முழு வெள்ளைச் சேலை கூடக் கிடைப்பதில்லை. குஞ்சிதம் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.
நடுச்சாலையில் கோழி உரிக்கிறான். மாட்டுச்சதையைக் கண்டம் போடுகிறான். வண்டியில் சமையல் நடக்கிறது. காலை, மதியம், இரவு உணவு வகைகள் இங்கேயே. சாலை கடந்து, ரயில் பாதையும் கடந்து ரமணி அவளைக் கூட்டிச் செல்கிறான். கிளைத் தெருவொன்றில் கடைகள் திறக்கும் நேரம். ஜமீலா மெடிகல்ஸ் என்ற பெயர் விளங்கும் சிறு கடை திறக்கவில்லை. அருகே, டாக்டர் யமுனாதேவி, குழந்தை நல, பெண்கள் மருத்துவர் என்ற பலகையும் தெரிகிறது.
அந்த சந்தில்தான் மரணம் நிகழ்ந்த வீடு என்பதை அறிவிப்பது போல் ஆட்கள் தெரிகின்றனர். சாயபுவின் மூத்த மகன் அகமது தான் பெரிய சாலையில் மளிகைக் கடை நடத்தி வந்தான். குடும்பம் ஒன்றாகத்தான் இந்த வீட்டில் இருந்தது. இரண்டாவது மகனுக்குச் சிங்கப்பூரில் இருந்து பணக்காரர் ஒருவர் சம்பந்தம் கிடைத்ததும், குடும்பம் பிளவு பட்டுவிட்டது. மூன்று பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கம் ‘பிஸினஸ்’ என்று போய் விட்டார்கள். ஏழெட்டு வருசத்துக்கு முன்பே அவர் வந்து இதைச் சொல்லி வருத்தப்பட்டார். ஜமீலாவின் புருசன் சிறு வயசிலேயே இறந்துவிட்டான். இந்தப் பையனைப் படிக்க வைத்து, இந்தக் கடையும் வைத்திருக்கிறான். இந்த மருந்துப் படிப்புத்தான் படித்திருக்கிறான் என்றார்.
பேரன் பெண்சாதி பாசமாகத் தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனுக்கு இரண்டு பிள்ளைகள்.
தாயம்மாளைக் கண்டதும் பேரன் பெண்சாதி அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழுகிறாள். வழக்கமான துக்க விசாரணைகளில், எல்லா இனத்தவரையும் அவள் பார்க்கிறாள். ரமணியின் அம்மா, பொட்டும்பூவும் இழந்த கைம்பெண். ஆயிஷாவின் செவிகளில், வந்தவர்களுக்குக் காபி கலந்திருப்பதாகத் தெரிவிக்கிறாள். ஊதுவத்தி, மாலைகள் என்று சூழல் இறந்த வீட்டுக்குரியதாகத் தெரிவித்தாலும், துயரும் ஆன்ம சாந்திக்குரிய அமைதியுடனேயே தோன்றுகிறது.
சந்துக்கு வெளியே கார்கள் வந்து நிற்கின்றன. இந்தச் சூழலில், ஏதோ விபரீதம் புகுவது போல் இவளுக்குச் சுருக்கென்று உறைக்கிறது. காஜிபோல் அவர்கள் மதச்சடங்கு செய்பவர் வருகிறார்.
தாயம்மாள் மெள்ள வெளியேறுகையில், சீதாவையும் பத்மநாபனையும் பார்க்கிறாள்.
“மாமி? எப்படி இருக்கிறீங்க? கால செத்தமுன்ன தான் ரமணி ஃபோன் பண்ணினான். சாயபு மாமாவை நான் பத்து நாளைக்கு முன்ன யதேச்சையா பஸ்ஸ்டாப்புல பார்த்தேன். “என்னம்மா, எம்மு? எப்படி இருக்கே?”ன்னு கேட்டாரு. அப்பா இறந்து போனப்ப வந்திருந்தாரு. இவங்ககிட்ட எப்பவும் பிரியமா, “எப்படிப்பா இருக்கே, சீதா நல்லா இருக்கா? அவங்கம்மா குடிசைப் பிள்ளைங்களுக்கு எழுத்தறிவுத் தொண்டு பண்ணுறதாத் தெரிஞ்சிட்டேன். அவங்கள ஆதரவா வச்சுக்குங்கப்பா, ஆண்டவன் நல்லதே பண்ணுவான்னு சொல்வாங்க…”
சீதா இவளிடமே துக்கம் விசாரிப்பவள் போல் மடை திறக்கிறாள். சாயபுவின் சொந்தக் குடும்பத்துக்கு அவரிடம் நெருக்கம், ஜமிலாவின் பையனுடன் சரி. இவர் சுதந்தரப் போராட்டத்துடன் நிற்கவில்லை. சமூக சமத்துவம் சார்ந்த ஒரு விடுதலைப் போராட்டங்களிலும் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டார். சுதந்தரம் வரும்போதே அரசியல் கட்சி காந்தியின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாத செயல்பாடுகளில் பிளவுகளுக்கு இடம் கொடுத்த காரணத்தால் அரசியல் பதவி, ஆட்சி என்ற எல்லைகளை விட்டு விலகியே தொண்டில் ஈடுபட்டவர், அவள் கண்டிருந்த தியாகி. ஆனால் இந்த சாயபு அய்யா, சமத்துவ சித்தாந்தத்தின் பக்கம் உறுதியாக நின்று தெழிற் சங்கப் போராட்டங்களில் முழு முனைப்பாகச் செயல்பட்டவர். அந்தக் கட்சியே பிளவு பட்டதும் இவர் உளம் உடைந்து போனார்.
எப்ப பாத்தாலும் “என்னம்மா, எம்மு ? எப்படியிருக்கே?” ம்பாரு இப்பக்கூட. நா சின்னப்பிள்ளயா இருக்கையில, அப்பா ரொம்பத் தீவிரம். எங்க வீட்டுக்கு சாயபு மாமா, மணி மாமா, செந்தில் மாமா, ராசு மாமா எல்லாரும் வருவாங்க. எனக்கு சொந்த உறவுக்காரங்களும் தெரியாது, சாதி மத பேதமும் தெரியாது. அப்படி இருக்கறச்சே, இவங்க கட்சி பிரிஞ்சதும், சாயபு மாமா, மணி மாமா வந்தாக்க, அவங்ககூட பேசக் கூடாதுன்னு அம்மாகிட்ட அப்பா சொன்னாங்க. எனக்குப் புரியல. அப்புறந்தான் தெரிஞ்சிச்சு. நாங்க வெளையாட்டுல கட்சி- சோடி சேருறாப்பல, இதுவும்னு நினைச்சிட்டேன். அப்ப எங்கண்ணன் ரமணா, “சீதா, நாமெல்லாம் எம்மு. சாயபுமாமா, மணிமாமால்லாம் அய்யி. ஜயி, எம்மு. எம்முதா நல்லவங்க. ஐயி கெட்டவங்க”ன்னான். ‘சீ போடா, சாயபுமாமா எப்ப வந்தாலும் என்னைக் கூட்டிட்டுப் போயி மிட்டாயும் மிக்ஸ்சரும் வாங்கித் தராங்க. அவங்க ஒண்ணும் கெட்டவங்க இல்ல!.’ன்னேன். அன்னிக்கு சாயங்காலம் சாயபு மாமா வந்தாங்க. நான் வழிமறிச்சிட்டு, “மாமா, எனக்கு ஒண்ணு தெரியணும். நீங்க எம்தானே?”ன்னேன்.
“மாமா, சிரிச்சிட்டு, எம்முன்னா என்னம்மா’ன்னாரு.
“எம்முன்னா நல்லவங்க, ஐயின்னா கெட்டவங்க. நீங்க நல்வங்கதானே?”
அவங்க பெரிசாச் சிரிச்சாங்க. எங்கம்மா உள்ளேந்து ஓடி வந்தாங்க.
“வாங்கண்ணே. ஏண்டி போக்கிரி? இப்பிடியா கேக்கிறது? உள்ள வாங்க. இவங்க போக்கு புடிக்கல. பிள்ளைங்ககூட இப்பிடி நினைக்கும்படியா சொல்லிக் குடுப்பாங்க? நீங்க மனசில வச்சிக்காதீங்கண்ணே”ன்னு சொன்னது எனக்கு இப்ப போல நினப்பு வருது.”
“அம்மா அண்ணங்கிட்டத்தா இருக்காங்களா?”
“இருக்காங்க. இவங்க கட்சி கிட்சி இல்லேன்னாலும், ஏழைப்பிள்ளைங்களத் தேடிட்டுப் போயி படிப்பு சொல்லிக் குடுக்கிறாங்க. பொண்ணு சம்பந்தமா போராட்டம்னு வந்திட்டா கலந்துக்குறாங்க. இதெல்லாம் ரமணா சம்சாரம் அதா அண்ணிக்குப் புடிக்கல. பனிப்போர் சமாசாரம்தான்.”
“சரிம்மா, நீ பாத்திட்டுவா. எதோ நம்ம காலத்துல மிச்சமிருந்த ஒரு தொடர்பு அதும் முடிஞ்சி போச்சி.”
எம்மு, அய்யி…
சிரிக்கும்படி இருந்தாலும், துயரம் தான் முட்டுகிறது. கிளையும், பூவும், காயும், கனியுமாகத் தாங்கிய மரத்தில் இருந்து, எல்லாம் விடுபடுகின்றன. மரத்தின் வேரில் பூச்சி பிடித்துவிட்டதா?
அரிவாளும் சுத்தியலும் சின்னமிட்ட கட்சி பற்றி அவளுக்குத் தெரியும். சுதந்தரப் போராட்டத்தில் ஒன்றாகப் போராடியவர்கள் வருவதற்கு முன் பிரிந்து போனார்கள். வெடி மருந்து, சதி என்று பலரும் சுதந்தரம் வந்த பின்னரும் கொடிய சிறை தண்டனை அநுபவித்தார்கள். கேரளத்து ராமுண்ணி தூக்கு மேடைக்குப் போய், விடுதலை பெற்று வந்தவர். கட்டைக்குட்டையாக, குடையை இடுக்கிக் கொண்டு அய்யாவைப் பார்க்க வருவார். எப்போதும் மகிழ்ச்சி கூத்தாடும் முகம். பேச்சு “தாயம்மா அக்கா? எப்படி இருக்கிறீங்க? சுகமா?” என்று விசாரிப்பார்.
“தியாகி சார்? எனக்கு உங்களப் பார்க்கிறப்ப வல்ய சந்தோஷமாகும். ஏன் தெரியுமா?”
“தெரியலியே!”
“பால்யத்தில் விவாகம் கழிச்சும், ரொம்பக் காலம் பார்யையின் முகம்பாராமல் ஸ்பரிசம் இல்லாமல் இருந்ததும், அவங்களும் சத்யாக்கிரகம்பண்ணி ஜெயிலுக்குப் போனதும் எத்ர ஒரு பாக்கியம்: இம்சையை விட அஹிம்சைக்கு வலிமை அதிகம்; அதை நான் உங்களையும், சரோஜனி ஏடத்தியையும் பார்க்கிறப்ப தெரிஞ்சிப்பேன்…”
“தம்பி, நான் உங்களைப் பார்க்கிறப்ப, குற்ற உணர்வு கொள்கிறேன். ஏன் தெரியுமா? சுதந்தர சர்க்காரின் சிறைக் கொடுமைகளை நீங்கள் அநுபவித்தீர்களே? நீங்கள் மட்டும் கடைசி நேரத்தில், விடுதலையாகிவிடவில்லை என்றால்…”
அவர் சிரிப்பார் மகிழ்ச்சி பொங்கி வரும் “ஓ, அது எந்தொரு கிளைமாக்ஸ், வாழ்க்கையில்? நாற்பது வயசில் நான் மறுஜனனம் ஆகி, சுதந்தர பூமியில் வாழ்க்கையைத் தொடங்க அடி வைத்தபோது, கையில் காசில்லை, தங்க நிழலில்லைன்னு கவலைப்படலை. அதே விடுதலை சந்தோஷம் சொல்லி முடியாது. வெளியெங்கும் சிநேகம் நிறைஞ்ச ஜனங்கள். என் அநுபவங்களே மறுவடிவம் எடுத்தப்ப எல்லாரும் எனக்குப் பிரியப்பட்டவர்களானார்கள். பிரேமையை நான் கல்யாணம் செய்து கொண்டேன். எண்டே பையனுக்கு அச்சன் நாராயணன் பெயர்தான். பிரேமை, நான் பத்திரிகையில் எழுதியதைப் பார்த்து, என்னைத் தேடிவந்தவள். காலமே எல்லாம் செய்து கொடுத்திட்டு ஆஸ்பத்திரி ஜோலிக்குப் போகும்.”
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ந்து அநுபவிக்கும் ராமுண்ணி தான் ராதாம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் எல்லோரும் பம்பாய் சென்றிருந்த போது ஒருநாள் பதறிப்போய் வந்தார்.
“தாயம்மா அக்கா?. நாள் கேள்விப்படுவது நிசமா?… மோளுக்கு லுகேமியாவாமே?”
அந்தப் பெயர் சடைப்பூரான் போல் செவிகளில் நுழைந்தது.
“ஐயோ இதென்ன ஒரு சோதனை? தியாகி சாருக்கு, சரோஜினி எடத்திக்கு இப்படி ஒரு சோதனை வருமா? எனக்கு நேத்து, ஒரு சினிமாக்கதைக்கு வசனம் எழுதணும்னு நடராசன் வந்து கூப்பிட்டான். அப்ப உங்க மகனப் பத்திப் பேச்சு வந்திச்சி. அவுரு படத்தில ஒரு சில்லறை வேசமிருக்கு, வரீங்களான்னு கேட்டாரு. ஐநூறு, ஆயிரம்னாக்கூட எனக்குக் காசுதான். அதுக்காக, நான் எந்த ஒரு இடத்துக்கும் போய் நிக்கத் தயாராயில்ல’ன்னேன். அப்பத்தான் அவன் சொன்னான், இந்த மாதிரின்னு; உங்க மகன், ஒரு பெண் சாதி குழந்தைகன்னு இருக்கையிலே, இன்னொண்னும் கட்டி, அரசியலில் இருக்கிறவங்களுக்கெல்லாம் ஒழுக்கம் தேவையில்லன்னு ஒரு சட்டமால்ல வச்சிட்டாங்க ? இப்பக்கூட, புதுசா பின்னணி பாடுற ஒரு பொண்ணுகூ…அடசீ! அதவிடுங்க. நீங்க, பெத்தபுள்ள, அவர் பதவி, பணம், செல்வாக்கு எல்லாத்தையும் ஒதுக்கிட்டு இருக்கிறது எவ்வளவு பெரிய விசயம்?”
“நீங்க அதையெல்லாம் இப்ப எதுக்கு நினைப்பூட்டுறீங்க?… ராதாம்மா நோயி, நா வேண்டாத தெய்வமில்ல. ஒரு புழு பூச்சிக்குக் கூடத் தீம்பு நினைக்காதவங்க… அய்யா, நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கணும், அதுவரை பிரும்ம சரியம்னு இருந்தாங்க. அம்மா மனசு ரொம்ப இடிஞ்சி போனாங்க. அப்ப காந்தி வந்திருக்காங்களாம். அய்யா பாத்திட்டு வந்த பிறகு, அம்மா, தனியாப் பாக்கணும்னு போனாங்களாம். பாபுஜி, இவங்க இப்படி விரதம்னு சொல்றாங்க. எனக்கு ஒரே ஒரு புள்ள வேணும். பெண் ணாகப் பிறந்ததன் பலனை, தாயாக அநுபவிக்கணும்னு சொன்னாங்களாம். உடனே காந்திஜி கூப்பிட்டனுப்பி ஆசீர்வாதம் பண்ணினாராம். அதுக்குப் பிறகு இந்தப் பொண்ணு பிறந்ததும் தந்தியடிச்சுத் தெரிவிச்சு, அவுரே ராதாபாயின்னு பேருவக்கச் சொல்லி பதில் தந்தி குடுத்தாராம்..” என்று தொண்டைக்கரகரக்கச் சொன்ன போது, “அப்படியாம்மா? எவ்ளோ பெரிய விசயம்? அந்தக் காலத்துல, எங்க இயக்கத்துல யு.ஜில- இருப்பம். அப்ப எங்களுக்குப் பாதுகாப்புக் குடுக்கிற குடும்பத்தில் வயசுப் பெண்கள், இருப்பாங்க. அவங்கதா, பல சமயங்களிலும் தெரியாம சாப்பாடு கொண்டாந்து குடுப்பாங்க. போலீசின் துப்பாக்கியவிட, பசிக் கொடுமை பெரிசு. பின்னால அந்தப் பொண்ணுங்க பேருக்கோ, கட்சிக்கோ களங்கம் வரக் கூடாதுன்னு அந்தத் தோழர்கள், சாதி, மதம், ஏழை பணக்காரர், படித்தது படியாதது என்று வேத்துமையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பகிரங்கமா கல்யாணம் பண்ணிட்டாங்க. கட்சி-கொள்கை வலுப்பட்டது. அந்தக் கட்சி பிளவு பட்டது, சோகம்..” என்று வருந்தியது நினைவில் மின்னுகிறது.
“ஆயர்: புள்ள கிட்ட சொல்லிட்டு வந்திட்டியா?… ரோடு மேல போற?” என்ற கூச்சலில் திடுக்கிட்டு சாலை ஒரம் வருகிறாள். ரயில் கேட் வரவில்லை. சாலை முழுதும் பெரிய பேருந்துகள், இரு சக்கர மக்கள் ஊர்வலங்கள், உறுமும் லாரிகள், ஆட்டோ வாகனங்கள்… டக்கென்று சிமிட்டிப் பலகை போடப்பட்ட நடை பாதையில் ஏறுகிறாள். வரிசையாகக் கடைகள். ‘நடைபாதை’ என்று போடப்பட்ட சிமிட்டிப்பலகைகள் வரிசையாகப் பெயர்க்கப்பட்டு இடுக்குகளில் குடியிருக்கும் குடும்பங் களைக் கரையேற்றிக் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள், பழைய பத்திரிகைகள் என்று அடுக்கி வாணிபம் செய்யும் கடைக்கும், ஜிராக்ஸ் என்ற பலகையின் பின் உள்ள இடுக்குக்கும் இடையே ஒரு குழந்தை அழுது கொண்டி ருக்கிறது. வெயில் பட்டுப் பட்டுச் சவுங்கிப் போன மாதிரி யான முகமுடைய பெண் ஒருத்தி, இடுப்பில் பிளாஸ்டிக் குடத்தில் நீருடன் வருகிறாள்…
“எந்தா.. அம்மே. தியாகி எஸ்.கே.ஆர். வீட்டம்மையில்ல?” இவருக்கு நினைவுப் பொறி தட்டுகிறது.
அவள் உள்ளே செல்ல வழிவிடுவது போல் கீழே அழும் பெண் குழந்தையை இடுப்பில் எடுத்துக்கொள்கிறாள்.
“நீ. சிவலிங்கத்தின் சம்சாரமில்ல?”
“ஆமாம். நல்ல நினைப்பு வச்சிருக்கிறீங்க…” என்று குழந்தையை வாங்கிக் கொண்டு, “உள்ள வாங்கம்மா, வாங்க..” என்று கூப்பிடுகிறாள்.
“நான் இப்ப உள்ள வர்றதுக்கில்லம்மா. உன் பேரு மறந்து போச்சி. நான் இப்ப ஒரு துட்டிக்குப் போயிட்டுவரேன். வேண்டப்பட்ட ஒருவர் இறந்து போயிட்டார். இங்க தான் பக்கத் தெருவில்-”
“ஓ… மருந்துக்கடை சாயபுவா?. நேத்தே காலம, உடம்பு சரியில்லன்னு சங்கரி நர்சிங் ஹோமுக்குக் கூட்டிப் போனாங்க. ராமுண்ணிசேட்டன் மோன் இன்ஜினிரிங் காலேஜில படிக்கிது. அதைப்பாக்கணும்னு சொன்னாராம். இப்பதா, குழாயடில, மரகதம் ஆயா சொல்லிட்டிருந்தது. அவங்க நைட் முடிச்சிட்டுப் போகுது…”
என்ன சொல்கிறாள் இவள்?…
சிவலிங்கத்தின் சம்சாரம், கொழுகொழுவென்ற கன்னங்களுடன் இருந்த பெண் வற்றித் தேய்ந்து, கண்கள் பாதாளத்தில் இறங்க. பேச்சில் மலையாள வாடை வீச…
“எந்தா அம்மே அப்படிப் பார்க்கிறது? நான் சுந்தரிதா. சிவலிங்கத்தின் சம்சாரமான்னு கேட்டீங்க.”
குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு அதன் இரு குஞ்சுக்கரங்களையும் சேர்த்து, “பாட்டிக்கு வணக்கம் சொல்லு.” என்று ஒரு சிரிப்பை இழைய விடுகிறாள்.
‘நீ முன்ன சீலை உடுத்திருந்தேம்மா. இப்ப இந்தக் கவுனு போட்டிருக்கிறியா. புரியல. ஆமா, நீ ராமுண்ணி சேட்டான்னு சொன்னே. யாரு, தூக்கு தண்டனையிலேந்து மீண்டு வந்து கலியாணங்கட்டிக் கிட்டிருந்தாரு, அவரு போயி ஏழெட்டு வருசமாச்சி போல. அவுரு மகனா?…”
“ஆமம்மா. அவரு போனப்ப பையன் எய்த் படிச்சிட்டி ருந்தது. அதுக்கு மின்னயே அவருக்கு உடம்பு சரியில்லாம போயி, ரொம்பக் கடனாயிட்டது. துபை ஆசுபத்திரில நல்ல வேலை வந்திச்சி. ஆனா புள்ளைய அழச்சிட்டுப் போக முடியல. சாயபு அய்யாதாப் பாத்து, ஹோம்ல சேர்த்தாரு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போயிப் பாப்பாங்களாம். மாசாமாசம் அம்மை பணம் அனுப்பிச்சிக் குடுக்கும் போல. பையனைப் புள்ளலூர் இன்ஜினிரிங் காலேஜில சேத்தி ருக்காங்க. படிக்கிதோ, படிச்சிரிச்சோ தெரியல…” அவள் பேசி முடிக்கும் வரையிலும் குழந்தையின் கை இவளைக் கும்பிட்டுக் கொண்டே இருக்கிறது.
தன்னிச்சையான செயல் போல், அவள், புடை வைக்குள் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் குழந்தை கையைப் பிரித்து வைக்கிறாள்.
“அய்யோ, இதெல்லாம் எதுக்கம்மு ?” என்று மொழிந்த சுந்தரி, “தாங்க்ஸ் சொல்லு, குட்டி, தாங்க்ஸ் சொல்லு?” என்று குழந்தை கையை நெற்றியில் மலர்த்தி வைக்கப் பணிக்கிறாள்.
கரப்பான் பூச்சியைத் தொட்டுவிட்டாற்போல் இருக்கிறது. இருட்டு அறையில் பட்டாம்பூச்சி பறக்காது. கரப்பான் பூச்சி.
சிவலிங்கம் அவள் கண்களில் வெகு நாட்களாகப் படவில்லை. அன்றையப் பொழுதில் அவள் பார்த்த மனிதர்கள், சந்திப்புகள், துக்கத்துக்குச் சென்ற இடத்தில் வந்து விழுந்த செய்திகள்.
எதையுமே அவளால் சீரணம் செய்து கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும், கிணற்றில் இருந்து நீரிறைத்து, வாளி வாளியாக ஊற்றிக் கொள்கிறாள். சாயபு… ஒரு பந்தம் போய்விட்டது.
ராமுண்ணி, உடம்பு சரியில்லாமல், நடக்க முடியாமல் படுத்திருப்பதாக, சாயபு தான் வந்து சொன்னார். அவருடனே அவள் பழைய மாம்பலம் வீட்டில் பார்க்கச் சென்றாள். சாக்கடையும் கொசுக்களும் நிறைந்த பகுதியில் ஒரு பழைய ஒட்டு வீட்டில் இருந்தார். அவர்கள் சென்ற போது, பையன் பள்ளிக் கூடம் சென்றிருந்தான். பிரேமா, அவள் பணி புரிந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தாள்.
“குனிஞ்சு வாங்க தாயம்மா, இந்த வாசல் இடிக்கும்” என்று அவர் எச்சரித்த குரல் கேட்டு, நாடாக் கட்டிலில் படுத்திருந்த ராமுண்ணி எழுந்து உட்கார்ந்தார். சிரித்தார். ‘இந்த நாட்டின் சிறந்த மனிதர்களை, உயர்ந்த மனிதர்களைத் தலை குனிய வைக்கும் வாசல் இது.”
சாயபுவும் சிரித்தார். பையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களையும் பிஸ்கோத்துப் பொட்டலத்தையும் அருகில் இருந்த சுவரலமாரியில் வைத்தாள். சாயபு கட்டிலில் ஒரு பக்கம் உட்கார்ந்தார். “உட்காருங்கம்மா?” என்று அவளை உபசரித்தார்.
“மூணு மணிக்கு பிரேமை வந்திடுவா. அந்த நாற்காலிய இழுத்திட்டு உட்காருங்க.”
எப்போதும் மகிழ்ச்சி பொங்கிப் பூரித்து வரும் முகம், சோக உருவமாக இருந்தது. பேச்சே எழவில்லை. சிறிது நேரத்தில் விம்மி விம்மி அழலானார். “அம்மே, நான் தூக்குக் கயிற்றில் முடிந்திருக்கலாம்… இந்த பாரத சமுதாயம், கனவு கண்ட, சமத்துவ, ஜனநாயக, அஹிம்சைச் சமுதாயம் அந்தக் கனவு துண்டுதுண்டாய் போயிட்டதம்மா…” என்று அழுதார்.
அத்தியாயம்-4
காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்க வில்லை. ஆனால், தங்கள் கனவுகள் உடைந்து சிதறுவதைக் காண முடியாமல், அந்த நொறுங்குதலுக்குச் சாட்சிகளாக இருக்க விரும்பாமலே கண்களை மூடிவிட்டார்களே? ராமுண்ணி இறந்த போது, ஐயா இறந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவருக்கு வாரிசு போல் அவருடைய பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதாக உலகுக்கு அடித்துக் கூறுவதுபோல், அந்த மரணத்தைப் படம் எடுக்கச் செய்து, விளம்பரப் படுத்தினான் பராங்குசம், சாதிமதம் தெரியாமல் அநாதையாகப் பிச்சை எடுத்த தலையெழுத்தை அழித்து, ராமகிருஷ்ணர் விடுதியில் சேர்த்து ஒழுக்கப்பிடிப்பு படிக்க வைத்தார் என்று அம்மா சொல்வார். அவளுக்குத் தெரிந்து அவன் சேவாகிராமத்தில் ஆதாரக்கல்விப் பயிற்சி பெற்று வந்தவன். சுப்பய்யா, மருதமுத்து, சுசீலா என்று தங்கள் மிக விசாலமான தோட்டத்தில் ஆங்காங்கு கூரைக் கொட்டகை போட்டு, குருகுல வித்யாலயத்தைத் துவக்கிய போது, இந்தப் பெரிய வீட்டில் பர்மா அகதிகளின் புகலிடத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த அவள் தேனாம்பேட்டை இல்லத்துக்குப் பெயர்ந்தாள்.
சரோஜாம்மாவின் மூதாதையர் வீடு இது. பெரிய சிவப்புக் கல் தோடும், பிடிபிடியாகச் சங்கிலியும் வளையல்களும் அணிந்திருந்த பாட்டியை அவள் சிறு வயதில் பார்த்திருக்கிறாள். கண்ணமங்கலம் கிராமத்தில் அங்காயி திருவிழாவின் போது வருவார்கள். பாட்டனையும் தெரியும். பெரிய மீசையும், திறந்த மார்பில் உருத்திராட்சமுமாக இருப்பார். அவருடைய படம் கூட இன்றும் மாடியில் உள்ள படங்களிடையே இருக்கும். அந்தப் பாட்டன் முன்பே இறந்துவிட, பாட்டி காது தொள்ளையாக, உருத்திராட்ச மாலைக் கழுத்தாக, வெற்றுக்கைகளாக மாறிப் போனாள். இங்கிருந்த பனந்தோப்புகளில் கள்ளுக்காகக் கலயங்கள் கட்டக் கூடாதென்று, அம்மாவோடு பாட்டியும் சின்னம்மா, பெரியம்மா என்ற சொந்தங்களும் கூடக் காவல் இருந்திருக்கிறார்கள்.
பர்மா அகதிகள் வந்திறங்கிய போது, இது புகலிடமாக மாறியது. தொண்டர்கள் குழந்தையும் குட்டியுமாக இங்கே அழைத்து வருவார்கள். இங்கே கொல்லையில் கோசாலை இருந்தது. பால் கறப்பதும், தயிர் கடைவதும், வீட்டில் தவலை தவலையாக வடிப்பதும் குழம்புக்கு உரலில் மசாலை அரைப்பதுமாக நித்திய கல்யாணம். பூந்தமல்லிப் பக்கமி ருந்து ஒர் ஐயங்கார் சுவாமி தையல் இலை கொண்டு வருவார். ஆயிரக்கணக்கில் வாங்குவார்கள். சாலை முழுதும் ஆலமரங்களில் இருந்து விழும் இலைகளைச் சுத்தம் செய்து, ஈர்க்கு ஒடித்துத் தைக்கும் தொழிலில் சீவனம் செய்தார்கள்… இப்போது?
பூதான முனிவர் வந்த போது பலரும் ஒடியொளிந்தார்கள். அய்யா, பொன் விளையும் பூமியை, இல்லாதவர்களுக்கென்று வழங்கினார். இப்போது அப்படி அவர் வழங்கிய காவேரி ஆற்றுப்பாசனத்து விளை நிலங்களை அரசியல்வாதியான மேல் சாதி ஆதரவுடன், எவனோ அநுபவிக்கிறானாம். இவள் செவிகளில் எத்தனையோ செய்திகள் விழுகின்றன. குருகுல வித்யாலயா வளைவில் அவள் கால் வைத்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இந்த வீடு, சுற்றுப் புறங்களெல்லாம் ‘டிரஸ்ட்’ என்றுதான் செய்திருக்கிறார்கள். மகளின் பிரிவுத் துயரம் தாங்காத சரோஜினி அம்மை, ஒராண்டுக்கு மேல் இருக்கவில்லை. அவர்கள் இருவரும் போன பின், அய்யா சிறகொடிந்த பறவையானார். அவர்கள் போனது மட்டுமில்லை; இந்த நாட்டு அரசியலில், அவர்கள் கண்டிருந்த கனவுகளும் நொறுங்கிப் போனதுதான்.
ராதாம்மாவுக்கு அவள் காலமான போது ஒரு பையன் இருந்தான். அய்யாவைப் பார்க்க அந்த மருமகன் ஒரே ஒரு தடவை வந்தார். “குழந்தை நல்லாயிருக்காங்களா?” என்று மட்டும் துக்கம் தொண்டையடைக்கக் கேட்டாள். அவள் அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்ததாகக் கூட நினைவு இல்லை. அவள் திருமணம் முடிந்ததும், மஞ்சட் கதர்ச் சேலையும், பூமாலையும் தாலியுமாக, அதே மாதிரி கதர் வேட்டி உடுத்திய மருமகப்பிள்ளையிடம் அவளை அறிமுகம் செய்வித்ததை எப்படி மறப்பாள்: “எங்க தாயம்மா. அம்மா எங்கே போவாங்களோ, வருவாங்களோ, நேரம் தவறாமல் என்னை ஊட்டி வளர்த்தது தாயம்மா தான். இந்த வீட்டுக்கு எப்போதும் உயிர் தரும் தாயம்மா. இந்தச் சரணாலயத்தில் எத்தனை பறவைகள் வந்தாலும் தாயம்மா கவனிச்சிப்பா” என்று சொன்னதும் அவர்கள் இருவருமாக அவளைப் பணிந்ததும், சிறிதும் நிறம் மாறாத காட்சி.
இந்தச் சரணாலயம் வெறுமையாகிவிட்டது. அறங்காவலர் குழுத்தலைவன் பராங்குசம்தான். அய்யாவின் மறைவுக்குப்பின், கீழிருந்த மரப்பீரோக்கள் முதல், படங்கள் புத்தகங்கள் எல்லாமே மாடிக்குப் போய்விட்டன. பெரிய பாத்திரம் பண்டங்கள் எல்லாமும் போய்விட்டன. கூடத்தில் காந்தி படமும், பெரிதாக்கப்பட்ட அம்மாவின் படமும், ராதாம்மாவின் படமும் ஏற்கெனவே இருந்தன. அய்யாவின் படத்தையும், குருகுலத்தில் இருந்து கொண்டு வந்து மாட்டச் சொன்னாள். அய்யா இருந்த போதும் மறைந்த பின்னரும் வெள்ளிக்கிழமை மாலைகளில் பிரார்த்தனை பஜனை நடந்து கொண்டிருந்தது. பின் ஒவ்வொருவராக… பர்மா நிக்கொலஸ், சாயபு, ராமுண்ணி, குஞ்சும்மா, சுபலட்சுமி, ராமசுப்பிரமணியம். பிறகு. ஏதோ வசந்த காலச் சாரல் போல் பக்கத்தில் வந்து குடியிருந்த மிலிடரிக்காரர்…
பராங்குசம் அனுப்பித்தான் அவர் இங்கே வந்தார். காடாகக் கிடந்த இடத்தை அவரே சுத்தம் செய்தார். கம்பி வேலி கட்டினார். இந்த வீட்டுக்கும் ஓர் அரண் போல் அது அமைந்தது. வேலியில் மூலிகைச் செடிகளை அழகாக விட்டு, ஒழுங்கு செய்தார். கொவ்வைக் கொடிகளை அடர்த்தியாகப் படரும்படி பின்புறம் மாமரம் வரையிலும் கட்டினார். இந்த வேலையில் தாயம்மாவும் பங்கு கொண்டாள். “நீங்க எதுக்கும்மா, வயசானங்க. ஆள்வச்சி செய்துக்குங்கன்னுதா, சொன்னாங்க. நா ஒரு ஆள்தானே?…”
நல்ல சிவப்பு; ஒட்ட வெட்டிய கிராப்பு. மீசை எள்ளும் அரிசிபோல் இருந்தாலும் அழகாக வெட்டி இருந்தார். அடிக்கடி பல்லால் கடித்தபடி, வரிசை பற்கள் தெரியச் சிரித்தார். ஒரு பனியனும் காக்கி அரை நிஜாரும் தான் உடை.
“அய்யா, நீங்க இத்தே பெரிய வீடு இருக்கையிலே, எங்கே போய்த் தங்கிட்டு வரிங்க? இங்க வீடு கட்டுற வரை யிலும் நம்ம வீட்ல தங்கிக்கலாம், சாப்பாடு நான் செய்து தாரேன். அசைவம் தான் கிடையாது. சைவம். ஒரு சோறு சாம்பார் பொரியல் ரசம் செய்வேங்க..” என்றாள்.
அதற்கும் ஒரு சிரிப்பு. ஆனால் அவர் சாப்பிட வர வில்லை. “வீடு ஒன்றும் பெரிதில்லை. ஒரு கூரைக் குடில் தான் போட்டுக் கொள்ளப் போறேன், மா. நாலு நாள்ள சுவர் எழுப்பிடுவாங்க காலேஜ் பக்கம் என் சிநேகிதங்க இருக்காங்க. பஞ்சாபுக் காரங்க. அவங்க ஒருவாரம்னாலும் தங்கனும்பாங்க!” என்றார்.
“எங்கே, பொத்துரு காலேஜிங்களா?”
“ஆமா. அதா வரிசையா இருக்கே?..” என்றார்.
சரசரவென்று ஒரே வாரத்தில் சுவரெழுப்பி, பூசி, தரையை உயர்த்தி சிமிட்டியூசி, மேலே அழகாகக் கூரை போட்டுவிட்டார். தோட்டமாக மாற்ற, பூச்செடி விதைகள், வேம்பு நாற்று, எல்லாம் வைத்தார். இந்த வீட்டு எல்லையில் தாவரவேலி இருந்தாலும் பின் பக்கம் மாமரத்தடிக்குப் போக முடியும். பின்புறம் புற்றுக் கோயில் வரை எல்லை இருந்தது.
இந்த வீட்டுக்குள் வந்து, படங்களின் கீழிருந்த பெஞ்சியில், காலையில் பூத்த பூக்களைக் கொண்டு வைப்பார். காசித்தும்பை, ஒற்றை, இரட்டை என்று வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கின. செம்பருத்திச் செடிகள், கன்றாகவே கொண்டு வைத்திருந்தார். வாசல் பக்கம், ஒரு மூங்கில் பிளாச்சுக்கதவுதான். வாசலில் ஒரு சாய்வு நாற்காலி-துணி போட்டு மடிக்கக் கூடியது, அதைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து ஏதேனும் படித்துக் கொண்டிருப்பார். உள்ளே அவர் சமைத்துச் சாப்பிட்டதில்லை. தெருநாய்க்குட்டி ஒன்று அவரைச் சுவீகாரம் செய்து கொண்டிருந்தது. காலையில் அவர் நடந்து போனால் அதுவும் போகும். அது ஆறு மாதத்தில் பெரிய நாயாக வளர்ந்துவிட்டது.
“இங்கே வெள்ளிக்கிழமை பஜனை செய்வீங்களாமே?” முதல் நாளே அவர் கேட்டார்.
“ஆமாங்கையா. அய்யா எத்தனை வருசமாகவோ நடத்திட்டிருந்தாங்க. அவரு போனப்புறமும், அவங்கல்லாம் வராங்க. யார் வந்தாலும் வராவிட்டாலும், சாயபு அய்யாவும் குஞ்சம்மாவும் விடாம வருவாங்க..” என்றாள்.
அடுத்த வெள்ளியன்று வீடுகட்டும் வேலை முடிந்து அவர் சிநேகிதர் வீட்டுக்குப் போய்க் குளித்து, வெள்ளைச் சட்டை, பனியன் அணிந்து, ஒரு சைகிளில் ஒரு பானையையும், கொண்டு வந்தார். அன்றைக்கு நிறையப் பேர் பஜனைக்கு வந்து இருந்தார்கள். நிக்கலஸ், சந்தானம், ராமமூர்த்தி, என்று வராதவர்களும் வந்திருந்தார்கள். அவருடைய பஞ்சாபி நண்பன் சிங், அவர் மனைவி, இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். அந்தக் கல்லூரி வளாகத்தில் இருந்து வந்திருந்த ராமசாமி ”ஸார், ரொம்ப நல்லாப் பாடுவார். கடம் வாசிப்பார்; மிருதங்கம் வாசிப்பார்.” என்று சந்தோசமாகச் சொன்னார். சிங் உடனே, “வெஸ்டர்ன், இந்துஸ்தானி, எல்லாம் பாடுவாங்க!” என்றார்.
அவளுக்கு அன்றைய பஜனை மிகவும் சந்தோசமாக இருந்தது. அய்யாவும், அம்மாவும், ராதாம்மாவும் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட்டார்கள். அய்யாவுக்கு மிகவும் பிடித்த ‘ஹரி துமஹரோ’ பாட்டை அவர் தனியாகப் பாடினார். ஒரு இங்கிலீஷ் பாட்டும் இடம் பெற்றது. எல்லோரும் ராம்துன் பாடினார்கள். அந்தக் கூடத்தில் தொங்கிய ‘பல்ப்’ வெளிச்சம் போதவில்லை என்று நினைப்பாள். அன்று அப்படித் தோன்றவில்லை. இந்த பஜனையில் சுண்டல் கிடையாது. கர்ப்பூரம், மணி அடித்தல் எதுவுமே கிடையாது. பழங்கள் கொண்டு வருவார்கள். அதைப் பங்கிட்டு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். ஆங்காங்கு குடிசைகளில் உள்ள பிள்ளைகள் சில சமயங்களில் வரும்… அவர் பொறி கடலை வாங்கி வைத்திருந்து கொடுப்பார்.
“அய்யாக்கு, மக்க மனுசங்க..?” என்று அவள் கேட்டாள்.
“எல்லாம் இருக்காங்க…” என்று மனம் துளும்பும் பாவத்துடன் கண்கள் மூட விடை கூறினார்.
அதற்குமேல் எங்கே இருக்காங்க, எதற்கு நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீங்க என்று கேட்க, தூண்டித் துருவ அவளுக்குத் தெம்பு இல்லை. அப்போதெல்லாம் கொட்டிலில் ஒரு கறவைப் பசு இருந்தது. உழக்குப்பால் எடுத்துக் கொண்டு சென்று “அய்யா, பால் கொண்டாந்திருக்கிறேன். காச்சிருக்கிறேன். காபி, டீ எதுனாலும் போடட்டுமா?” என்று கேட்டபோது அவர் சிரித்தார்.
“நான் பால், காபி எதுவும் சாப்பிடுறதில்ல. சுத்தமான தண்ணிர், அதுதான் குடிப்பேன். உங்கள் கிணற்று நீர் அம்ருதம்” என்றார்.
அவள் மலைத்தாற்போல் நின்றாள்.
“சாப்பாடுதான் வேணாம்னு தெரிவிச்சிட்டீங்க. நீங்க இங்க சமைக்கிறாப்பலவும் தெரியல. ஒரு கஞ்சி, கிஞ்சி… எங்கய்யாவுக்குக் கேழ்வரகு முளை கட்டிக்காய வச்சு அறைச்சுக் கஞ்சி வைப்பேன். நானும் அதான் குடிக்கிறது. உங்களுக்கு வச்சித் தரட்டுமா?’ என்றாள்.
இதற்கும் ஒரு சிரிப்பு மறு மொழியாக வந்தது.
“அம்மா, நீங்க எனக்குத் தாயாக இருக்கும் வயசில் இருக்கிறீங்க. இந்த வயசில் மகன்தான் உங்களுக்கு எல்லாம் செய்து காப்பாத்தணும். மணிக் கூண்டுக்குப் பக்கத்தில், ராமையா சந்தில் ஒரு அம்மா மெஸ் மாதிரி வச்சிருக்காங்க நோயில் விழுந்த புருசனைக் காப்பாத்தி, புள்ளையைப் படிக்க வைக்க இப்படித் தொழில் பண்ணுறாங்க. சும்மா பணம் குடுத்தா அது அவங்களுக்குக் கெளரவமாகாது. அங்கே தான் சாப்பிடுறேன். தப்பா நெனைச்சுக்காதீங்க!” என்றார்.
அப்போது ரங்கசாமி இங்கே வேலைக்குச் சேர்ந்து ஒருவருசம் தானாகி இருந்தது. பஞ்சமியின் புருசன் வகை என்று சொல்லிக் கொண்டு புதுக்கோட்டைப் பக்கமிருந்து, இவன் அம்மா இவனைக் கூட்டிக் கொண்டு அவளிடம் வேலைக்குப் பரிந்துரை செய்யக் கோரி வந்தாள்.
பஞ்சமி, இரண்டு தரம் கருவுற்று முழுப்பிள்ளை பெறவில்லை. மூன்றாம் பேற்றில், பிள்ளையோடு மாண்டு போனாள். அவள் அண்டியிருந்த குடும்பத்திலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் புயலடித்துச் சோர்ந்த நேரம். வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்து குத்திவிட்டது. அவள் புருசன் பிறகு அங்கே இருக்கப் பிடிக்காமல் ஊரோடு போனான். அவனுக்குச் சொந்தமாம். அந்தப் பையன் நல்ல பையன். ‘எலக்ட்ரிக்’ வேலை செய்து கொண்டு, சேவிகா வேலை செய்த பஞ்சமியுடன் அன்பாகக் குடும்பம் பண்ணினான். குடி, கிடி, சூது ஒரு மாசு மருவில்லாத பிள்ளை.
தலை முழுகிய போது கண்ணீரும் அருவியாக வந்தது. நல்லவர்களுக்கு மட்டும் ஏன் நல்ல வாழ்வு அமைவதில்லை? அவள் பெற்றதில் நல்ல கொடி எச்சமில்லாமல் பட்டுப் போயிற்று. இவன் பராங்குசத்தின் ‘சிபாரிசில்’ இங்கு வந்திருக்கிறான் என்று தெரியும். ஒப்புக்கு இவளுக்கு ஒரு சேதி, அவ்வளவுதான். மாதா கோயில் வளைவில் கங்கக்கிஅவள் புருசன், இவன் மனைவி, அம்மா என்று குடும்பம் வைத்து ஊன்றிவிட்டான். ‘அம்மா’வின் நெருக்கத் தொடர்பு, தன்னைத் தவிர வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்பது போல் நடந்தான். ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற அய்யா மிக நெருக்கமாக இவளிடம் உறவு பாராட்டுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் கவடும் சூதும் நிறைந்த தன்மையை அப்போதுதான் அவள் உணரத் தலைப்பட்டாள்.
– தொடரும்…
– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.