கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 351 
 
 

அத்தியாயம் 25-28 | அத்தியாயம் 29-32

அத்தியாயம்-29

காலையில் விழிப்பு வந்து எழுந்து உட்காருகிறாள்.

“நீங்க உடம்பு நல்லாகணும். எழுந்து, உங்க சேலையை உடுத்து வெளியே போகணும். ஆயிரமாயிரம் பேர் உங்களைப் போல் உறுதியாகப் போராடுபவர்களைச் சேர்ப்பீர்கள்…”

இதுதானே டாக்டர் பெண் சொன்ன கருத்து?

ஆங்காங்கு இருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாகக் கிராமத்தில் இருந்து பெயர்ந்து, பூமிதேவிக்குச் சொறி சிறங்கு பற்றினாற் போல் குப்பை மேடுகளிலும் சாக்கடைத் தேங்கல்களிலும் விளையாடும் தலைமுறைகளை வளர்ப்பவர்கள்… மாறவேணும்.

“ஆயா, வணக்கம். எப்டீகிறீங்க?” கையில் பிளாஸ்டிக் பை முடமுடக்கிறது.

“நல்லாயிட்டேன் கன்னிம்மா, சீலை கொண்டாந்திருக்கியா?”

“இந்தாங்க, வெள்ள சில இல்ல. இன்னிக்கு எப்படியும் வாங்கியாந்திருவ.” அவள் பையைத் திறந்து துணிகளை எடுக்கிறாள். இரண்டு உள்பாவாடைகள்; இரண்டு வெள்ளை ரவிக்கைகள். தொட்டால் வழுக்கும் இரண்டு சேலைகள். ஒன்று வெள்ளையில் சிறு சிவப்புப் பூக்கள் போட்டது; இன்னொன்று மஞ்சட்பூக்கள் போட்டது. அவள் எட்டுகஜம் சேலை-வெள்ளையில் பின் கொசுவம் வைத்துத்தான் உடுத்துவாள். அப்படியே பழக்கமாயிருக்கிறது. கதரில் பூப்போட்ட சேலை உடுத்திய காலம் உண்டு. பிறகு உள்பாவாடை உடுத்தி ஆறுகஜம் சேலை உடுத்தினாள். கைத்தறிச் சேலைதான். பஞ்சமி இறந்து போன பிறகு அவள் வெறும் வெள்ளைச் சேலை என்று மாறிவிட்டாள். குஞ்சிதம் துணிக் கடையில், காதிபந்தாத் துணியே விற்பான். அவன் கடையிலேயே ஒரு தையற்காரன் உண்டு. அதே துணியை இவளுக்கு கழுத்து மூடி, இடுப்பு இறங்க தைத்துக் கொடுப்பான்.

காலைக்கடன் கழித்து, நீராடி, புதிய ஆடைகளை அணிந்து கொள்கிறாள். இந்த மாதிரி உடைகள் இவள் இது வரை அணிந்ததில்லை. ரவிக்கை தொளதொளவென்றிருக்கிறது கழுத்து இறங்கி, இடுப்பு ஏறி.

“இது, ரஞ்சி அம்மாவோட அம்மாவுக்குத் தச்சி வச்சது. எடுத்துக் குடுத்தாங்க. பணம் குடுத்திருக்காங்க. நான் அப்பால வெள்ள சில எடுத்தாரேன்… போயி, நாஷ்தா கொண்டாரேன்” என்று போகிறாள்.

நைட்டி உடைமாறினாலும், இந்த உடை ஏதோ சர்க்கஸ் கோமாளி போல் தோன்றுகிறது, பின் முதுகை இழுத்து இழுத்து விட்டுக் கொள்கிறாள். சிறையில் இருப்பது போல் ஓர் உணர்வு. அறையின் ஒருபுறம் குளியலறை. சிறு இடைவெளி. பின் வாயில் கதவைத் திறக்கிறாள். காலியான பூச்சு வர்ணத்தகரங்களும், செடிகளில்லா மண் தொட்டிகள், தட்டுமுட்டுகள் அடங்கிய தாழ்வரை. சிறு மண் முற்றம். அதில் புல்லும் முள்ளும் வளர்ந்திருக்கின்றன. தலைமறையும் உயர்ந்த சுவர். அந்த எல்லைச்சுவரின் மீது கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

… அசுவினி சொன்ன சொற்கள் அந்தக் கண்ணாடிச் சில்லுகளில் நிழலாடுகின்றன. அபலைப் பெண்களின் குரல்களை அவை வெளியே விடாமல் வாங்கிக் கொண்டிருக்கும்.

“இன்னாம்மா, கதவத் துறந்திட்டுக் குச்சி போவலாமான்னு பாக்குறியா?”

துக்கிவாரிப் போட்டாற்போல் திரும்பிப் பார்க்கிறாள். கன்னிம்மாதான். அகலப்பொட்டு. பளிரென்று சிரிப்பு. கழுத்தில் பருமனான தாலிச்சரடு…

“ஒண்ணுமில்லம்மா, சும்மா உக்காந்தே பழக்கமில்லையா, கதவு இருக்கேன்னு துறந்து பாத்தே…”

“வாங்க, சுடசுட பொங்கல் கொணாந்திருக்கிறேன்.” அவள் திரும்பி வருகிறாள். தட்டில் பொங்கல், சட்னி… இப்படி ஒரு காலம்… சாப்பிடுமுன், “நீ ஒருவாய் சாப்பிடு கன்னிம்மா?”

“ஐய்யே, நான்லாம் இப்ப சாப்புடமாட்டே…”

“ஏன்.? நீ ஒருவாய் சாப்புட்டாத்தா நான் எடுப்பேன். நானே குடுக்கிறேன்… வாயத் தொற?”

அவள் சிரிப்பும் சந்தோசமுமாக மறுக்கிறாள்… “அட இன்னா நீ… யார்னாலும் பாத்தாங்கன்னு வச்சிக்க, என்னியக் கழுத்தப்புடிச்சி வெளிலே தள்ளி போலீசுக்கும் குடுத்திருவாங்க. வாசல்லியே போல்சு உக்காந்திருக்கு தெரியுமில்ல?”

“இல்ல கன்னியம்மா, தெரியாமதா கேக்குற, போலீசில புடிச்சிக் குடுக்கிற அளவுக்கு நீ என்ன குத்தம் செஞ்சே, ஏன் பயப்படுற? நாம் பாத்துக்கறேன். நீ பாதி நான் பாதி சாப்பிடுவம்…”அவள் உருகிப் போகிறாள்.

“போதும், போதும், நான் எங்காத்தாளயே பாக்குறேன், அவ என்னில் எப்படியோ பாடுபட்டு, முதல்ல எனக்கு ஊட்டுவா. அப்பன் குடிகாரன். அவன் அடிச்சே செத்தா. இன்னொருத்திய வூட்ல கொண்டாந்தா. அவ என்ன இஸ்கூலுக்குத் தொரத்திட்டு எல்லாம் தின்னுக்குவா. ஆப்பக்கட வச்சிருந்தா. இஸ்கூல்ல போடுற சோறுதா. அப்பன் லாரி மோதி செத்துப் போச்சி. நஷ்ட ஈடுன்னு ஒரு லட்சம் குடுத்தாங்க. அத்த வாங்கிட்டு அவ ஓடிட்டா. எங்க பக்கத்து வூட்ல ஒராளு இருந்தாரு, அவுரு கிரீ ஆசுபத்திரில வார்டு பாயா இருந்தாரு. அப்ப ரஞ்சி அம்மாக்கு ஆபுரேசனாகி ரொம்ப ஒடம்பு காயலாவா இருந்தாங்க. பாவம், அவங்களுக்கு வூட்டோட இருந்து கவனிச்சிக்கத்தா வந்தே. அப்பதா நா மனிசி ஆயிருந்தே… அப்பிடிதா இங்க வந்த…”

இதைச் சொல்லிவிட்டு, அவளை மார்போடுதலையைச் சாய்த்து அணைத்துக் கொள்கிறாள்.

“தாயி, ஆயா, எப்பிடி வேணாலும் வச்சுக்க, நீங்க போறச்சே இந்த எடத்துலேந்து என்னியக் கூட்டிட்டுப் போயிடுங்க. உங்களுக்குக் கடசி வர ஒழச்சி, என் கண்ணா காப்பாத்துவே. இது அசிங்கம் புடிச்ச எடம்…”

கதவு தட்டப்படும் ஒசை…

சட்டென்று சுதாரித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவுத் தாழைத் திறக்கிறாள்.

வந்தவள் சந்திரி… கன்னியம்மாளை உறுத்துப் பார்க்கிறாள்.

“நீயா ? கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு என்ன ரகசியம்? நாஷ்தா குடுத்தாச்சில்ல? எல்லாம் எடுத்திட்டுப் போ?”

கல்பட்ட நாய்க்குட்டி போல சுருண்டாலும் சமாளிக்கிறாள்.

“இல்லீங்க டாக்டரம்மா, அவங்க டிரஸ் பண்ணிட்டாங்க. சாத்துன.”

“ஆமாமாம். எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே! இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும்? இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக்கய்யப் பொத்திட்டுப் போ!’ இவள் சுருண்டு போகிறாள்.

சந்திரியா! நர்ஸ் வேலைக்குப் படித்த அந்த சந்திரியா! கனடாவிலோ அமெரிக்காவிலோ யாரையோ கொச்சிக்காரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்…

“யம்மா, இங்க வர வேலைக்காரிங்ககிட்ட நீ எதும் பேச்சு வச்சிக்காத வயசு காலத்துல நீ தனியா இருக்கக் கூடாது. பெத்தவ பிச்சை எடுக்கிறா. இவன் ஏ.ஸி. காரில போறான்னு எதிர்க்கட்சிக்காரன் மேடை போட்டு அசிங்கமா பேசுறான். இப்பக்கூட, அடியாள் சுவாமியப் பாத்து ஒரு பூசை வைக்கத் தான் போயிட்டு வரேன். மாத்ருசாபம், பித்ருசாபம் இருக்குன்னு சொன்னாரு. அருள் வாக்கா வந்திட்டதேன்னு கவலையா இருக்கு…”

“உன் தம்பியாண்டானுக்கு இதிலெல்லாம் இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திட்டாப்பல போல.” இடக்காக அவள் உதிர்த்த சொற்கள் குத்திவிடவில்லை.

“ஆமா, எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்களா? காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட் -டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க? கூலிக்கு மாரடிக்குற ஆளுகதா-நீராரம் சாப்பிட்ட சேரி ஆளுவ, ரசனா, கோலா, பெப்சி கேக்குறானுவ வூட்டு வேலைக்கு வரவ, கேபிள் டி.வி. வாசிங் மெசின் இருக்கான்னு கேக்குறாளுவ. கிராமத்துல, ஒரு நேரக்கஞ்சிக்கு மாடா உழச்சவனுகள, நம்பிக்கைன்னு துக்கி வச்சிது தம்பி. அவனுவ நம்ம சோத்தையே தின்னுப்பிட்டு, நமக்கெதிரா கட்சி மாறி கொடி பிடிக்கிறானுவ…’

இவள் கையைப் பற்றி நிறுத்துகிறாள்.

“சந்திரி, இந்த வெவகாரம் கேட்க எனக்குத் தெம்பு மில்ல, திராணியுமில்ல. நான் என்னிக்குமே யாரும் கெட்டுப் போகணும் தும்பப்படணும்னு நெனக்கலம்மா. இப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிற. பித்ருசாபம், மாத்ருசாபம்னு ஏன் உறுத்தணும் ?…அவங்கவுங்க நெஞ்சைத் தொட்டுப் பாத்துத் திருந்தனும். தப்புத்தப்பாப் பண்ணி ஒரு தப்ப மூட முடியாது. இந்தத் தேசமே, சனங்களே உங்க அரசியலால பாழாயிட்டிருக்கு தாயி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடாத குறையா கேட்டுக்கிடறேன். எனக்கு இந்த மாளிகை வாசம் வோனாம். நான் போயிடறேன். கேக்கிறதெல்லாம் ஒரு வெள்ளத்துணிச் சீல. வெளில எறங்கினா இது ஒட்டாம நழுவிடுமோன்னு பயமா இருக்கு…”

கண்ணீர் மல்குகிறது.

“இத பாரு, உனக்கு இதுதான் வீடு. நீ ஒரு பத்து பைசா தேடி, புள்ளைக்கு நல்லது பொல்லாது பண்ணல. அவனே தலைதுாக்கி முன்னுக்கு வந்தன். நீ எதுக்கு ஆரு சொத் தையோ, ஆரு வச்சதையோ பாம்பு மாதரி காக்கணும்? அத்தனை அக்கரை உள்ள வங்க, அந்த மக புருசன், புள்ள. அவுக தாயாதி பங்காளியக் கூட்டு வரட்டும், என்னமும் செய்யட்டும்? நீ அங்க அட்டையா புடிச்சிட்டுகிறதுக்கு பராங்குசம் மட்டுமல்ல- வேற எல்லாருமே என்ன சொல்றாங்க தெரியுமா? அவங்களல்லாம் வரவுடாதபடி நீயே செய்திட்டியாம். எனக்கே நாக்கப் புடுங்கிட்டுச் சாவலாம் போல இருந்திச்சி. “பெரியவரு, அந்தப் பொம்புளய வச்சிட்டிருந்தாரு- அரச பொரசலா சரோ அம்மாக்குத் தெரியும். மக செத்ததும் அதா செத்திட்டாங்க. இப்ப, வூட்ட எம் பேருல எழுதி வச்சிருக்காங்க. யாரும் வரமுடியாதுன்னு சொல்றதுன்னு… சொல்றாங்க. இதெல்லாம் இன்னிக்கு அரசியல். கட்சி தலைவரா கவுரவமா, எம்.பியா இருக்கவருக்கு எத்தினி கேவலம்?” இவளுக்கு உடலே பற்றி எரிகிறது சீதை அக்கினியில் எரிந்த போது இப்படி இருந்ததா? அடிபாவி? நீ என் உதிரத்தில் ஜனித்தவளா?

பளார் பளாரென்று அவள் கன்னங்களிலும் முகத்திலும் அறைகிறாள். கை எரிகிறது.

சந்திரி விக்கித்துப் போகிறாள்.

“ஏண்டி, எலும்பில்லா நாக்குன்னா, எது வேணாலும் யாரை வேணுன்னாலும் பேசுமா? நீ நர்சு வேலைக்குப் படிச்சவடீ? ஆம்புள பொம்புளன்னு பேதம் இல்லாம எல்லாரையும் தொட்டே- அதனால உனுக்கு அத்தினி பேரும் தொடுப்புன்னு ஆயிடுமா? எந்தப் பன்னி சன்மண்டி இதைச் சொல்லிச்சு? அத்தத் தூக்கிட்டு வந்து எம்மூஞ்சில அவுத்துக் கொட்டுற நா இந்த நிமிசமே இங்கேந்து போயிடுவ. அன்னைக்கு நான் வுழுந்தா, அப்படியே சாவட்டும்னு வுடவேண்டியது தான ?… நாக்கு அழுவணும்னு நா சொல்ல மாட்டே. அன்னைக்கு, அந்த மனிசன்மேல, வுழுந்து அடிச்சி சட்டையக் கிழிச்சி காரை நொறுக்கி அவுமானம் பண்ணினானே, உன் தம்பி பெரி… அரசியல் தலவன்! அப்போ, இளம்புள்ளைங்க. கேசுகீசு ஒண்ணும் வாணாம், வுட்டுடுங்கன்னு போலீசு இன்ஸ் பெக்டர்கிட்ட சொன்னவருடி அந்தப் பெரி…மனிசர் ! அவங்கல்லாம் தெய்வம். அந்தப் பத்தினி பேரில உன் விசத்தகக்குற. பொம்புளக்கிப் பொம்புள சேத்தவாரி அடிச்சிக் குதறுற சாதியில்லடி நாங்க! அப்புடி ஆகக்கூடாது”ன்னு… கண்கள் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது.

“அந்தப் புண், கடசீ வரை ஆறல, எந்தப் பொம்புளயின்னாலும் அவளைத் தொட்டுக் குலைக்கிறது, கல்லு கட்டி சைகிள் செயின் சோடா பாட்டில் கத்திகுத் தெல்லாந்தான் நீங்க ஆரம்பிச்சிவச்ச கட்சிக் கலாசாரம். அதான் இன்னிக்கு இந்தச் சீரழிவுக்கு எல்லாரையும் கொண்டாந்திருக்கு. ஒரு கட்சிக்கும் ஒரு கொடிக்கும் இன்னைக்கு அந்த சத்தியம் இல்ல.”

இந்தச் சீலையே நெஞ்சை அறுக்குது.

இவளுடைய பொங்கெழுச்சி, புயல்போல் வந்த சீற்றம், அவளைக் கட்டிப் போட்டாற்போல் பிரமிக்க வைக்கிறது

அப்போது, எங்கிருந்தோ குரல்கள், ஐயோ, ஐயோ என்ற சோகக் குரல்கள் எதிரொலிக்கின்றன. சந்திரி சட்டென்று கதவைத் திறந்து கொண்டு விரைகிறாள்.

அவளுக்கும் புரியவில்லை. மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் நிற்கிறாள்.

ஒரு பணியாளன் வருகிறான். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுகுரலில், “அய்யா, தலைவர் அய்யா, மாரடைப்புல பூட்டாரு…” என்று செய்தி தெரிவிக்கிறான்.

அவள் புருசன் இறந்த போது, அவளைச் சுற்றி யாரும் அடித்துக் கொண்டு அழவில்லை. குருகுலமே உட்கார்ந்து, துதிப்பாடல்களைப் பாடியது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்தார்கள். அவன் திருட்டுத்தனமாகக் குடித்தான். போலீசு பிடித்துவிடும். ஆனால் ஜாமீன் வழக்கு இல்லாமலே, தண்டனை கொடுத்து விடுவிப்பார்கள். கண் கொத்திப்பாம்பு போல் உன்னைக் கவனிக்க வேண்டியிருக்கப்பா, எங்கே கிடைக்குது, சொல்லு? என்பார் அய்யா, ஒருநாள் போதையில் வரும்போதுதான் விழுந்து கல்லில் அடிபட்டு மாண்டான். ஆனால் அவன் அப்போதைய இலட்சியப்பாதையில் ஒரு முள்ளாக நெருடினான் என்று வசை பாடவில்லை. மரியாதை செய்தார்கள். இந்தத் தோட்டம் அவன் உழைப்பு; படைப்பு. தாயம்மா, இத்தனை மரங்களும், அவன்பேர் சொல்லும் குழந்தைகள் என்பார். அவள் பொட்டை அழிக்கவில்லை. இகழவில்லை; வண்ணச் சேலையை உரிந்து வெள்ளை வழங்கவில்லை. துணையை இழந்தவளுக்குக் குழந்தைகள்தாம் ஆதரவு என்று வலியுறுத்தினார்கள்.

இப்போதே, அவள் பிடித்துவைத்த களிமண்ணாக அமர்ந்திருக்கையில் பேர் பேராக வந்து, யார் யாரோ முக மறியாதவர்களெல்லாம் வந்து அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.

“இத்தை எதுக்குடி மரகதம் கூட்டியாந்தே?… கொள்ளி… கொள்ளி… கோட்டான், கழுவு போல உக்காந்திருக்கு. அப்ப லேவுடியா ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டுப் போனப்பகூட மவராசன் புழச்சி வந்து, எல்லாரையும் பாத்து விசாரிச்சாரு. அத்தினி பேருக்கும் சில துணி வாங்கிக் குடுத்தாங்க. இது கரிக்கால வச்சதும், ஒண்ணுமே இல்லாம சிரிச்சிட்டுப் பறந்து போன ஆளு, திடீர்னு மார் வலிக்கிதுன்னு சொன்னவரு ஆசுபத்திரிக்கு இட்டுப் போகுமுன்ன உசிருபோகுமா? பாவி, பாவி, மூதேவி, சண்டாளி, முதல்ல நீ செத்துத் தொலையக் கூடாதா? முழிச்சிக்கிட்டுப் பாக்குது பாரு ? பெத்த பையங்கிட்டக் கொள்ளி வாங்கிட்டுப் போவணும்னு இருக்காதா? புருசனை முழுங்கினா. பெத்த பொண்ணு, மருமவன், அல்லாரையும் வாயில போட்டுக்கிட்டா. ஒண்டின எடத்திலண்ணாலும் ஆரவுட்டா?… பிசாசு… துக்கரி…”

செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி மாரடிக்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

கண்கள் எரிகின்றன-

‘முருகா! என் மீது உனக்குக் கருணை இல்லையா? ஏனிப்படி வாட்டி வதைக்கிறாய்?’

அலையடித்து ஒய்ந்து இருள் வருகிறது, நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவளைப் பொறுத்த வரையில் ‘காலமே’ நின்று போகிறது.

உறக்கமோ, மயக்கமோ, நினைவு மறப்பது, முருகா, உன் கருணை….

இருள் படலங்கள். கரைகின்றன.

உதயக்கதிர் போல் கன்னியம்மாவின் குரல் செவிகளில் விழுகிறது.

“ஆயா. ஆயா, நான் கன்னிம்மா…”

ஆ…? கன்னிம்மா…”

அவள் கையில் ஒரு தம்ளர் இருக்கிறது.

“வாங்க. ஆயா, மூஞ்சி கழுவிகினு இந்தக் காபிய குடியுங்க. உங்களுக்கூடத் தெம்பு இருக்காது. பிசாசுங்க, பிசாசுங்க, உங்கள என்ன கோரமா சொல்லுதுங்க? பொறம் போக்கு… வாங்க…” அவளை அழைத்து முகம் கழுவ, நீராடச் செய்கிறாள். ஒரு பூப்போட்ட வாயில் சீலை கொண்டு வந்திருக்கிறாள்.

“இது என் சீலை. நீ உடுத்திக்க ஆயா…” கட்டித் தழுவி முத்தமிடுகிறாள்.

“அசுவினி மேடம் கிட்டச் சொல்லிருக்கிறேன். உனக்குச் சீல வாங்கி எப்படீன்னாலும் தந்திருவாங்க. நாம போயிரலாம். நாளைக்கி…”

“நாளைக்கி வேணாம். இப்பவே போகலாம் கண்ணு. என்ன எப்டீன்னாலும், டேசன்ல கொண்டு வுட்டுடு… அது போதும்.”

அவள் குனிந்து மெதுவான குரலில், “நீ உம் புள்ளயப்பாக்க வோணாமா? கண்ணாடிப் பொட்டில ஐஸ் வச்சி, ஆகாசத்தில பறந்து வருது. சனமோ சனம், மாலையும் பூவுமா நிக்குதுங்க. டெல்லிலேந்து அமைச்சர் பெரியவங்கல்லாம் வாராங்க. முதலமைச்சர் வருவாரு. எல்லாக் கட்சித் தலவருங்களும் வராங்க. டி.வி. காமிராவா வந்திருக்கு. அதெல்லாம் பாக்க வாணாமா?…”

“எனக்கு ஒண்ணும் பாக்க வாணாம் கன்னிம்மா. இந்த எடத்த வுட்டு எப்பிடின்னாலும் வெளில கொண்டு போ. அவங்க வேற அம்மான்னு இங்க வந்து என்னப் பாக்க, போட்டோ புடிக்க வாணாம்….”

“சரி, இந்த காபியக் குடிச்சிக்க, நா வாரேன்…”

காபியைப் பருகுகிறாள்.

“நீ யார் பெற்ற மகளோ? இப்ப நீதான் எனக்கு மகள் மகன், அப்பன் அம்மை, எல்லாம் கண்ணு?…”

“அழுவாத, அழுவாத ஆயா, அநாதைக்கு அநாதை துணை. நா உன்னோட வருவேன். எந்நேரமும் இந்தப் புள்ளிங்க சீண்டல்; உனக்குக் குருமா சோறு கொண்டாந்திச்சே, அந்தக் கசுமாலத்துக்கு பெரிசு என்னக் கட்டி வச்சித் தாலி போட வச்சிருக்கு. மூணுவாட்டி இந்தச் சந்திரி அம்மாவே மாத்திரை குடுத்துக் கலச்சா, பாவி, பெறகுதா தாலி- நீ வா, அசுவினிமேடம் ரொம்ப நல்லவங்க. பெரியம்மா. ரஞ்சியம்மாவும் நல்லவங்கதா. ஆனா, இவுங்கல்லாம் விசம். எப்டீன்னாலும் போயிடுவம்…”

வெளி உலகெல்லாம் அலை ஒய்ந்து, துடிப்புகள் மங்கிய இருள் நேரத்தில், ஒரு போர்வையைப் போத்தி அவளைக் கன்னியம்மா எப்படியோ ஒழுங்கை, சந்து, என்று கூட்டிச் செல்கிறாள். பின்னே ஒரு சிறு திட்டி வாயில். கதவு திறந்ததும் ஒரு வீதி-அரவம் அடங்கிய தெரு. அசுவினி ஓர் ஆட்டோவுடன் நிற்கிறாள். அவள் கையில் ஒரு பை இருக்கிறது.

‘கன்னிம்மா, பத்திரம்…. நா சொன்னதெல்லாம் நினப்பிருக்கா?…”

“சரி மேடம். பாத்துக்க. பெரியசாமி, பத்திரமா கூட்டிட்டுப் போயி ஸ்டேசன்ல எறக்கிடுங்க!”

அவன் கையில் ரூபாய் நோட்டை வைக்கிறாள்.

அவர்கள் அந்த எல்லையை விட்டுச் செல்கிறார்கள்.

அத்தியாயம்-30

இருளே பிரியவில்லை. கன்னியம்மா அவள் கையைப் பற்றி, எழும்பூர் ரயில் நிலையப் படியில் உட்கார்த்தி வைக்கிறாள். எதிரே, எதோ பஸ்கள் உறுமுகின்றன. பயணிகள் ஏறுகின்றனர். தேநீர்க்கடையில் சுருசுருப்பாக வியாபாரம் நடக்கிறது. ஏதேதோ ஊர் பெயர் சொல்லிக் கொண்டு ஆட்களை அழைக்கிறான் ஒரு பையன்.

“ஒரு டீ வாங்கியாரட்டுமா ஆயா?”

“வாணாம்பா, உனுக்கு வாங்கிக் குடிச்சிக்க…”

அவள் எழுந்திருக்கவில்லை. மின் வண்டிக்குச் செல்லும் பாலத்திலும் கீழும் பரபரப்பு. விடிந்து விட்டது. தபதபவென்று கூட்டம். ரயில் பெட்டிகளில் இருந்து இறங்கி ஒடி வருகிறது. திடீரென்று காக்கிச் சட்டைப் போலீசு எங்கிருந்தோ வந்து மொய்க்கிறது. கன்னிம்மா இவளை உள்ளே பெஞ்சியில் கொண்டு உட்கார்த்துகிறாள். பையை அவளிடம் கொடுத்து ‘பத்திரமா வச்சிக்க, நான் டிக்கெட் எடுத்திட்டு வாரேன், எதனாலும் வாங்கியாரேன். இத நிக்கிற வண்டிதா போவும்கிறாங்க. பத்திரமா இரு…” அவள் போகிறாள்.

சூரியன் பளிரென்று தெரிகிறது.

இந்த நிலையத்தில் நேராகக் கார் உள்ளே வரும். இவள் இப்போது உட்கார்ந்திருக்கும் இடத்தில் கார் வருமா? எதுவும் தெரியவில்லை.

கண்ணமங்கலமா, கிளியந்துறையா?… சம்பு அம்மாவோடு இருந்த பூவனூரா?

எந்த ஊர்? எந்த ஊருக்கு அவள் சீட்டு எடுத்திருக்கிறாள்: கண்ணமங்கலம், ஆத்து மேட்டில், மறுபக்கம் பெரிய வாய்க்கால், வாய்க்கால் மேட்டில் கோயில், முன்புறம் பெரிய மைதானம். பெரிய அரசமரம். வேப்பமரம். மேற்கே ஆற்றுப் படித்துறையில் இதே போல் மரமுண்டு. அங்கே பிள்ளையார் இருப்பார்.

அழகாயி கோயிலை அடுத்து, வாய்க்காலின் மறுபுறம் குடிசனங்களின் ஊர். அதை அழகாபுரி என்றே சொல்வார்கள். அய்யா குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்கள் அந்தப் பகுதி முழுவதும் இருந்தன. எல்லாவற்றையும், அந்தக் குடிமக்களுக்கே வழங்கி, கீழ்ச்சேரி என்ற பெயரையும் வினோபா அடிகள் வந்த போது மாற்றி வைத்தார்… அந்தக் கோயில் முன் அவர்கள் திருமணம் நடந்தது. அவள் சேரிச்சாதிதான். ஆனால், புருசர் அய்யாவுக்கு உறவுள்ள மேல்சாதி. அந்த இடங்களை ‘சமீன்’போல் ஆண்ட சாதி, எத்தனையோ முறைகள் அழகாயி திருவிழாவுக்கு அம்மாவுடன் அவள் சென்றிருக்கிறாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஊருக்குச் செல்லவில்லை. அய்யாவும் காலமான பிறகு, அவருக்குச் சிற்றப்பா மகனாகும் முறையில் ராமலிங்கம் என்பவர் வந்தார்.

“தாயம்மாவா? எப்படிம்மா இருக்கே?…” என்றார்.

“ஊரே, நம்ம உறவெல்லாம் காலி, எவனெவனோ கட்சி வந்திருக்கிறா. ஈசுவரன் கோயிலுக்கு ஒருவேளைப் பூசைக்கு வரும்படி இல்ல… அழகாபுரின்னு பேர வச்சி நிலம் நீச்சுக் குடுத்து வாழவச்சாரே, எல்லாம் எடுபட்டு பணம் சம்பாதிக்க, அங்க இங்கேன்னு பூடிச்சி. அவவ சாமி பேரச் சொல்லி, அருவா கத்தி எடுக்கிறானுவ.போன பஞ்சாயத்துத் தேர்தல்ல, ஊரே ரெண்டு பட்டுப் போயிடிச்சி. எதோஇருக்கிற…’ என்று சொன்னது நம்பிக்கைக் கனவுகளின் இடையே கரும்புகைத் திரள் போல் நினைவில் உயிர்க்கிறது.

முன்பு, அழகாயி திருவிழாவில், நான்கு மூலைகளிலும் குட்டியறுத்து இரத்தபலி இடுவார்களாம். முத்துக் கருப்பப் பூசாரியின் மீது அம்மன் ஏற, அவர் குட்டியறுத்து இரத்தம் குடிப்பாராம். அவளுக்குத் தெரிந்து அதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் அந்தப் பூசாரியைப் பார்த்திருக்கிறாள். சந்தனமும் குங்குமமும் தரித்து அவர்களை வரவேற்பார். கோயில் வளைவில் பொங்கல் வைப்பார்கள்… பாட்டு கூத்தெல்லாம் நடக்கும். அந்தப் பூசாரி மகன் சிவசாமி படித்தான். தஞ்சாவூர் தமிழ்க் கல்லூரியில் வேலை பார்ப்பதாக அய்யாவைக் காண வந்தான்.

ஏதேதோ நினைவுகள்.

“பாட்டி! பாட்டி!…”

அவள் திடுக்கிட்டவள் போல் பார்க்கிறாள். ஒரு பெண் போலீசு. கையில் எதையோ பெரிய சோடா உடைப்பான் போல் வைத்து அவளை, அந்தப் பையைத் தடவுகிறாள்.

நிலையம் கொள்ளாமல் கூட்டம். “பையில என்ன வச்சிருக்கிற …”

அவளுக்கே தெரியாது. திறந்து காட்டுகிறாள். இருண்டு புதிய வெள்ளைச்சேலை, உள்ளாடை, ரவிக்கை, ஒரு கவரில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள்; இன்னொரு பையில், கன்னியம்மாளின் சீலை துணிகள். “எங்கே போற?”

“கண்ணமங்கலம். எம்பேத்தி டிக்கெட் எடுத்திட்டா, சாப்பிட எதானும் வாங்கியாரன்னு போனா…”

வண்டிப் பெட்டிகளில் சாக்குக் கட்டியால் புரவலர், கலைச் செம்மல், நாடு போற்றும் தமிழாளர், அடலேறு, இளவழுதி அய்யா மறைவு… என்று செய்தி எழுதுகிறார்கள். தபதவென்று வெளியே கூட்டம் வாழ்க, வாழ்க என்ற மோதியடித்துக் கொண்டு ஒடுகிறது.

வெள்ளைக் குர்த்தாவும் கால் சட்டையுமணிந்த இளம் பிள்ளை ஒருவனும், அதே போல் உடையணிந்த ஒரு பெண்ணும் அங்கே வருகிறார்கள். “பாட்டியம்மா, இங்க உட்காரலாமா?” பையை மடியில் வைத்துக் கொண்டு அவள் இடம் கொடுக்கிறாள். அந்தப் பையன் அழகாகப் புன்னகை புரிந்து ‘தாங்க்யூ’ என்று நன்றி சொல்கிறான். ஆனால் நெருக்கியடித்து உட்காரவில்லை. “இந்த வண்டிதா விழும்புரம் போவுதா?” என்று கேட்டுக் கொண்ட குஞ்சும் குழந்தையும் சாப்பாட்டுப் போகணியுமாக ஒரு குடும்பம் முன்னேறுகிறது.

நேரமாக ஆக, இவளுக்குக் கவலை மேலிடுகிறது. கன்னியம்மாவைக் காணவில்லையே?

இன்னும் யார் யாரோ இளைஞர், வருகிறார்கள். படித்தவர், படியாதவர், கூட்டம் நெருக்குகிறது. மாடிப்படிகள் அதிரும் கூட்டம். பத்திரிகை, புத்தகம், காபி, டீ, தண்ணீர் வாணிபங்கள் நடக்கும் மேடை.

“ஏம் பாட்டி, உங்க பேத்தி வரலியா இன்னும்?… நீங்க போற வண்டி, அதா அந்த பிளாட்ஃபாரத்திலேந்து போயிடிச்சி…”

“அப்பிடியா ? எனக்குத் தெரிலியே ? இப்ப வாரேன்னுதா போனா…”

“பணம் குடுத்திருக்கீங்களா?”

“இல்ல தாயி…”

“இப்ப டிக்கெட் இருக்குதா?…”

“இல்லியே?…” அழுது விடுவாள் போலிருக்கிறது.

“ஒரே கூட்டம். எங்கேயானும் மாட்டிட்டிருக்கும். சரி, உங்களுக்கு நா சீட்டு வாங்கிட்டு வரேன். இத வண்டிபொறப்படும். விழுப்புரத்துல எறங்கி மாயவரம் வண்டில போங்க!” அவள் இவளிடம் எதுவும் கேட்காமல், சென்ற மறு நிமிடத்தில்லேயே ஒரு பயணச் சீட்டு வாங்கி வந்து கொடுக்கிறாள். நூறு ரூபாய் நோட்டு-“சில்லறை இல்லையே?…”

“பரவாயில்லை.” என்று அவளிடமுள்ள ஆறு பத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறாள். பிறகு அவளை, அங்கு ஒரு பெட்டியில் ஏற்றி விடுகிறாள்.

போலீசு… பொம்பிளைப் போலீசிடம் இவளுக்கு அநுபவம் இல்லை. பார்த்திருக்கிறாள். போலீசென்றால் அஞ்சி ஒளிந்த நாட்கள், ‘போலீசிடம் புடிச்சிக் குடுத்திடு வாங்க’ என்று சொன்ன கன்னியம்மா, எங்கே? நிசமாக போலீசிடம் புடிச்சிக் குடுத்துவிட்டார்களா? முருகா?

கூட்டம் குஞ்சும் குழந்தையும் இளவட்டமும், பளீர் வண்ணங்களுமாக நெருங்குகிறது. அவள் சன்னலடியில் ரயிலடி மேடையை ஆதூரத்துடன் கன்னியம்மாவுக்காகத் துழவும் கண்களுடன் நிற்கையில் மோதித்தள்ளுகிறார்கள். ‘கக்கூசுக்கு’ப் போகும் வழியில், கொழுக்கட்டைக்குள் அவியும் பருப்பு பண்டம் போல் அடைபட்டிருக்கிறாள். வெள்ளை உடுப்பு-பச்சை சிவப்புக் கொடிக்காரர் விரைந்து அடுத்த பெட்டிக்கு முன்னேறுகிறார்… அதோ கன்னிம்மா…

அவள் எப்பிடித்தாவி ஏறினாள் என்று தெரியவில்லை. ஏறிவிட்டாள். படியில் நிற்கும் நாமக்காரர் அவளை இழுத்து உள்ளே தள்ளிவிட்டார். வண்டி வேகம் பிடிக்கையில் அவள் மனம் இறுக்கம் தளர்ந்து லேசாகிறது “கண்ணு, நீ வந்திட்டியா? என்னிய அந்தப் போலீசுகாரம்மா டிக்கெட் வாங்கிக் குடுத்து ஏத்திவுட்டாங்க. நீ எங்கம்மா போயிட்ட?…”

அவள் குரல் அந்தச் சந்தை இரைச்சலில் எடுபடவில்லை. அந்தச் சன நெருக்கடி வாடையில், அழுத்தத்தில், சுடர் விட்ட மனிதநேயம்… நாமக்காரர் பட்டை நாமம், திருப்பதிப் பெருமாளா? சிக்குவாடை வீசும் ஒரு பெண்இடுப்பில் குழந்தையுடன் இடிக்கிறாள். கக்குசு வாடை, நெடியடிக்கிறது.

கன்னியம்மா எப்படியோ எத்தனையோ பேச்சுக்களை ஏற்று அவளிடம் வந்து விடுகிறாள். ஒரு பெஞ்சியில் துணி விரித்து இரண்டு குழந்தைகளை விட்டிருக்கிறாள். நெருக்கமாக இரண்டு பெஞ்சுகளிலும் மக்கள். கீழே, குண்டான் சட்டி, பெட்டி, பை என்று சாமன்கள். வழியில் ஒரு கொய்யாப்பழக்கூடை இருக்கிறது. ஒரு கைக்குட்டை வியாபாரி, முறுக்கு வாணிபம் செய்யும் பெண் பிள்ளை…

இவர்களெல்லாம் எப்போது எப்படி ஏறினார்கள்?

“ஆயா, இது பாசஞ்சர் வண்டி. பெரி… வண்டில இட்டுட்டு நேரா மாயவரத்துல எறங்கி பஸ்ஸில் போகலான்னு அசுவினி மேடம் சொன்னாங்க மட்டி, டிக்கெட் எடுத்தே, வண்டி ஒம்பதரைன்னாங்க. அதுக்கு உக்காரன்னு இடம் போடணுமா, தெரியல. வண்டிலியே பாரும்மா, இருக்கும்னாரு, ஒருத்தர். சரின்னு பாத்தா, அந்த வண்டி அந்த பிளாட் ஃபாரத்துல போயிட்டுது. உன்னக் கூட்டிக் காம நா எப்பிடிப் போறது? அந்தக் காசு பூரப் போச்சி. திரிம்ப வந்து வெளில ரெண்டு டிக்கெட் எடுத்தே. உன்னிய போலீசுக்கார அம்மா கூட்டிட்டுப் போறதப் பாத்து, விழுப்புரம் ரெண்டுன்னு டிக்கெட் எடுத்திட்டு ஒடியாரேன்… அசுவினி அம்மா, ஆயிரம் ரூவா குடுத்தாங்க. அஞ்சு நூறு எடுத்து வேஸ்டாக்கிட்ட பையி பத்திரம்.”

கபடமில்லாமல் இவளும் நடந்ததைச் சொல்கிறாள்.

“தாயி, இந்நேரம் அடிபட்டுச் சாவ இருந்தியே!…”

“போவட்டும். எப்படியோ, வண்டில ஏறிட்டம்?”

வண்டி ஊருகிறது; நிற்கிறது; கூட்டம் ஏறுகிறது பிதுங்குகிறது. இவளை பெஞ்சியில் இருக்கும் பிள்ளைகளை நகர்த்தி, கன்னியம்மா உட்கார்த்தி வைக்கிறாள்.

கீழே, லோலாக்கும் பெரிய மூக்குப் பொட்டுமாக, ஒரு பெண், குண்டானிலிருந்து புளிச்சோறு எடுத்து அட்டைத் தட்டில் வைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறாள்.

இவர்கள் எல்லோரும் எங்கோ கல்யாணத்துக்குப் போகிறார்கள். நாலைந்து இளம் பெண்கள், விடலைப் பிள்ளைகள், நடுத்தர வயசு சம்சாரி- இரயில் பயணத்தின் சந்தோசங்களை அநுபவிக்கிறார்கள்.

ஒரு இரண்டுங்கெட்டான் பிள்ளை உட்கார்ந்த படியே மரச்சட்டம் நனைய, சிறுநீர் கழிக்கிறது.

“அய்ய, இன்னாமா, இதுபாரு, அது வெளிக்கிருந்திருக்கு இப்படியே சோறு வைக்கிறீங்க?”

கன்னியம்மா கத்துகிறாள்.

கைகழுவக் கூட நீரில்லை. ஒன்றரை இரண்டு வயசு இருக்கும். மண்டை தெரியும் முடியை வாரி உச்சியில் கட்டி நாடாவும் பூவும் வைத்து அலங்கரித்திருக்கிறாள். கன்னத்தில் நெற்றியில் கரிய பொட்டுகள்.

பெண்… இக்கட்டான நிலைமைகளை அவளே சமாளிக்கிறாள்.

சட்டியையே கழற்றித் துடைத்தாற் போல் சன்னலுக்கு வெளியே வீசுகிறாள். பிறகு பிள்ளையுடன் கழிப்பறைப் பக்கம் போகிறாள். அங்கே தண்ணிர் கொஞ்சம் வந்திருக்க வேண்டும்.

“தண்ணியே கொஞ்சூண்டுதா வந்திச்சி… வூட்டேந்து புறப்பிடறப்ப இருக்காம, இங்க வந்து அம்மாளக் கஷ்டப் படுத்தலாமா?…”

அதற்கு ஒரு முத்தம்.

அந்த ஆண் பெரியவனாகி இவளை வாழவைப்பானா?

கன்னியம்மா எதையோ நினைத்தாற் போல் சிரிக்கிறாள்.

“எதுக்குமா சிரிக்கிற?…”

“இல்ல, போலீசுக்காரிங்க, மூட்டமுடிச்செல்லாம் தடவினாங்க. நாய வுட்டு மோந்து பாக்க சொன்னாங்க அந்த பிளாட் பாரத்துல நெனச்சேன். சிரிப்பு வந்திச்சி.”

“இன்னாமோ அவுங்க கடமை. இந்த சனங்க, நம்மைப் போல கபடில்லாம காதுகுத்து, கலியாணம்னு போகுது! என்னியே அவ தடவிப் பாத்தா…”

மனதுக்குள் இந்தக் கூட்டத்தில் குண்டு வைக்கும், குத்தியெறியும் தீவிரவாதி இருப்பானா? ஆனால், எவன் ஒழுக்கம், எவன் ஒழுக்கமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? பெண்… பெண் குழந்தைதான் வாழ வைக்கிறது. இவளிடம் அந்த ஒட்டு மீசையோ, கிருதா மீசையோ, ‘ஆயா’ என்று பரிவு காட்டவில்லை…

காந்தி மூணாம் வகுப்பு ரயிலில் தான் போவாராம். இப்ப மூணு கிடையாது எத்தனையோ இருக்குதாம். ஆனா, ‘ரெண்டு’ன்னு நிறுத்திருக்காங்க. சாமி நீங்க போயி அம்பது வருசத்துக்குமேல ஆச்சி. இப்ப அருவமாவானும் வந்து இந்தப் பொட்டில பாருங்க சாமி! இந்த தேசம் எப்படி இருக்குன்னு?

விழுப்புரம் வரும் போது பொழுது சாயும் நேரம்.

அடேயப்பா? என்ன கூட்டம்?…

ஒரு மாதிரி இறங்குகிறார்கள். தள்ளுமுள்ளு, அவசரங்கள்…

ஒரே தலைகளாகத் தெரியும் மனிதக் கூட்டம்.

பள்ளிப்பிள்ளைகளின் சீருடைகள்; சல்வார் கமிஸ்கள்; கறுத்த அங்கிகளுக்குள் மூச்சு விடும் வலைகளுடன் துலுக்கப் பெண்கள்… வெள்ளை உடுப்பு கார்டு சுருட்டிய கொடி களுடன் போகிறார். புரவலர், கலைக்கோ, எழுத்துச் செம்மல், தலைவர், இளவழுதி மறைவு… கறுப்பு எழுத்து அச்சு- நோட்டீசுகள் ஒட்டப் பட்டிருக்கின்றன.

அவன் புகழ் நாடெங்கும் அலையடிக்கும், இரங்கல் பாடும் கட்சிக் கொடிக்கூட்டம்.

அவளை மெள்ள அழைத்துச் சென்று, ஒரு இருக்கை தேடி உட்கார வைக்கிறாள் கன்னியம்மா.

யார் யாரோ போகிறார்கள். அறிமுகமில்லாதவர்கள்; இந்த நாட்டு மக்கள். இவர்களை சத்தியப்பாய் கொண்டு ஒருங்கிணைக்க முயன்றார்.

கன்னியம்மா, ஒரு காகிதத்தில் நான்கு வடைகளும், பிளாஸ்டிக் பை குடி நீருமாக வருகிறாள்.

“இக்குணூரண்டு போண்டா, மூணு பத்து ரூபாங்குறான். அதுக்கு சட்டனி கிடையாதாம். பேமானி!” என்று திட்டிக் கொண்டே அதைப் பை மீது கீழே வைக்கிறாள். ஒரு பிளாஸ்டிக் பையைப் பல்லால் கிழித்துத் தண்ணிரைத் திறக்கிறாள். “ஆயா, கையக் கழுவிக்குங்க…” கொஞ்சம் கையில் விட்டு அவள் முகத்தைத் துடைக்கிறாள்.

“யம்மா, இது குடிக்கிற தண்ணி இல்ல?”

“குடிக்கிறது கழுவுறது அல்லாத்துக்கும் இதுதா. ரயில்ல, அத்தினிகாசு டிக்கெட்டுக்குப் புடுங்கினா, கழுவத் தண்ணி இருந்திச்சா? இப்ப எங்க தண்ணி தேடிட்டுப் போக?… நாலரை மணிக்கு வண்டி இருக்காம். நாம உடனே போகணும். நா வெளியே போயி டிக்கெட் எடுத்திட்டு வர.” அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்கிறாள். படி ஏறாமல் இருப்புப் பாதை கடந்து, வண்டியில் ஏற்றி விடுகிறாள். உட்கார இடம் கிடைத்து விடுகிறது. நெருக்கம்தான். சாய்ந்தாற்போல் கண்களை மூடிக் கொள்கிறாள்.

வண்டி எப்போது புறப்படுகிறதென்று தெரியவில்லை. அடிபிடிகள், கூச்சல், நெருக்கங்கள் உறைக்காத ஆசுவாசம்.

இருட்டி இரவாகிவிட்டது. சிதம்பரம், சீர்காழி என்று குரல்கள் கேட்கின்றன. வண்டி எங்கே நிற்கிறது, புறப்படுகிறது என்று அவள் கண்களைத் திறக்கவில்லை “முருகா… நீ நல்லது தா செய்யிவே, என்னிய எப்படிக் கொண்டு போவணும்னு, நீதா நெனக்கிற!…”

“பாவிப் பயலுவ எழவு சினிமா, ஊரு உலகத்தைக் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது. ஏதோ படமாம். பத்து ரூபா குடுத்து டாலர் வாங்கி மாட்டிகிட்டு, நூறு இருநூறுன்னு டிக்கெட் வாங்கிட்டு அழியிது. கும்பிகாயுது. ஒழவு, நடவுன்னு புழைக்கத்தண்ணி இல்ல. கட்சிக்காரனுவ கொடி புடிச்சிக் கிட்டு இந்த இளசுகளை அடி வெட்டுன்னு திசை திருப்ப -றானுவ நேத்து எவனோ செத்திட்டானாம். அதுக்குன்னு ஒரு பய மண்ணெண்ணை ஊத்திக்கிட்டு எரிய நிக்கிறானாம். அப்பன் ஆயி லபோலபோன்னு அடிச்சிட்டு சாவுக்குப் போவ தாலிய வச்சி துட்டுக் குடுக்கிறா.”

அவள் கண் விழித்துப் பார்க்கிறாள். மூலையில் அரைக்கை வைத்த அழுக்குப் பனியனும் வேட்டியுமாக ஒரு முதியவர் மஞ்சள் பையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அவர் வாயிலிருந்துதான் சொற்கள் வருகின்றன.

மீண்டும் கண்களை மூடுகிறாள்.

வண்டி கடக்கென்று நிற்கிறது. “அல்லாம் எறங்குங்க, ஏறங்குங்க!”

“இது இனிமே போவாதாம். எறங்கி, பஸ் புடிச்சிப் போகணும். ஏம்மா, எங்க போவணும்?”

“நாங்க புதுக்குடி போயி அப்பால கண்ணமங்கலம் போவணும்?”

“இது புதுக்குடில நிக்யாதா?”

“நிக்கும். ஆனா, இன்னாமோ போராட்டமாம். ரயில் பாதையில் நின்று ராத்திரியில மாறியல் செய்யிறாங்க! போகாதுன்னு கார்டு சொல்லிட்டுப் போறாரு…”

இறங்குகிறார்கள், பஸ் நிறுத்தத்துக்கு வெளியேறும் கும்பலுடன் கலந்து கொள்கின்றனர். விளக்குகளைச் சுற்றிப் பூச்சிகள்… கன்னியம்மாளின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கிறாள். படி ஏறி இறங்கி வருகையில், எழும்பூரில் கண்ட பையன், அந்தப் பெண், இன்னும் அவர்களைப் போல் நாலைந்து பேர்கள்… இவங்களும் எங்கே போகிறார்கள்? அவர்கள் இந்தியில் பேசிக் கொண்டு முன்னே நடக்கிறார்கள்.

கசகசவென்ற பஸ் நிறுத்தம்.

“ஏம்பா, புதுக்குடி போற பஸ்…”

“இல்ல… நாகபட்ணம், திருவாரூர்” என்று ஏதேதோ பேர் சொல்கிறான். “கும்மாணம் பஸ் போயிடிச்சி. இனி காலம நாலுமணிக்குத்தான்…”

பஸ் நிறுத்தத்தின் பக்கம், இரவு கடைகளில் சொய்யென்று தோசை போடுகிறான். கூட்டம் மொய்க்கிறது. உறுமி விளக்கடிக்கும் பஸ்கள். குடிக்க, கழுவ தண்ணீரில்லை. கீழே சகதியாக ஈரித்த கும்பி அழுக்கு.

கழிப்பறையில் இயற்கைக்கடன்-வெளியேற்ற முடியாத நாற்றம். கன்னியம்மா, அந்தத் தங்கும் கூடத்தில் ஓர் இடம் பிடித்து உட்கார்த்தி வைக்கிறாள். இரண்டு வாழைப்பழம் வாங்கி வருகிறாள். சூடான பால் என்று விரல் நீள தம்ளரில் இனிப்பாகக் கொண்டு வந்து கொடுக்கிறாள். காலையில். காலையில் போய்விடலாம். “முருகா… இந்த அத்தினி சனங்களையும் கரையேற்று!” கண்களை மூடுகிறாள்.

கன்னியம்மா யாரிடமோ விசாரிப்பது செவிகளில் விழுகிறது.

“கண்ணமங்கலமெல்லாம் போவாதம்மா. புதுக்குடியே போவுதோன்னு சந்தேகம். அங்கெல்லாம் ஒரே கலவரம். பஸ்ஸையே மறித்து நிறுத்தி, வெட்டிப் போட்டுட்டானுவ!…”

புற்றுக்குள் கைவிட்டுவிட்டாளா? பாம்புகள் வந்து சுற்றிக் கொள்கின்றன. கன்னியம்மா ஏதும் பேசவில்லை.

பொழுது நன்றாகவே விடிகிறது. கீழ்வானில் உதயம் சிவந்து, சாலையில் பொற்கிரணங்களைப் படிய விடுகிறது. நம்பிக்கைக் கதிர்கள் அவளை இதமாகத் தடவுகின்றன. ஒரத்து இருக்கை. இருவர் இருக்கை.

“கண்ணமங்கலம் போகுதாப்பா ?” குங்குமப் பொட்டளிந்த நடத்துனன், வெளியே இறங்கி வெற்றிலைச் சாற்றைத் துப்புகிறான்.

“புதுக்குடி ரோட்டுல எறங்கிக்க?”

கன்னியம்மாளிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு சீட்டைக் கிழித்துக் கொடுக்கிறான். டிக்கெட்… டிக்கெட்…

“மானரேந்தல், மல்லிகாபுரம் அதெல்லாம் போகாது, நிக்காது. புதுக்குடி ரோட்டுல எறங்கிக்குங்க?”

ஒரு மொட்டைப்பயல் தேநீர் கொண்டு வருகிறான். கன்னியம்மா இரண்டு தேநீர் வாங்குகிறாள்.

பல் விளக்கவில்லை, கழுவவில்லை. தேநீரருந்துகிறாள். கன்னியம்மாளைப் பார்த்துக் கசிகிறாள்.

தாய், தெய்வம். புடம் போட்ட சொக்கத்தங்கம். இவளுக்குத் தனி வழி அச்சம் இல்லை. எந்த முரடனும் எந்தக் காமுகனும் இவளுக்குப் புதிதல்ல… அழகாயியே வந்து இவள் உருவில் அழைத்துச் செல்கிறாளோ?…

புதுக்குடி சாலையில் இறங்குகிறார்கள். வழியில் அசாதாரணமான அமைதி தெரிகிறது. ஓட்டுப் பள்ளிக் கூடச் சுவரில் அசிங்கமான ஆண் பெண் கிறுக்கல்கள் கண்களில் படுகிறது. ஓட்டல், பெட்டிக்கடை, சுவரொட்டி, தட்டிகள் கிழிக்கப்பட்ட கொடும்பாவி எரிக்கப்பட்டசிதிலங்கள். ஒட்டலுக்குள் இரண்டு போலீசுக்காரர் செல்கின்றனர்.

கண்ண மங்கலம் திரும்பும் வழியில் ஈகாக்கை இல்லை.இவர்கள் நடக்கிறார்கள்.

அத்தியாயம்-31

கண்ணமங்கலம் கிராமம் என்பது பெரிதில்லை. காலையில் இருந்து உள்ளே வந்து ஊத்தங்கரையோடு சென்று, பிறகு பெரிய சாலையில் பேருந்துகள் செல்லும், அதுவும் முன்பு கிடையாது. இந்தத்தடம் வந்த பிறகு அவள் ஒரே ஒரு தடவைதான் வந்திருக்கிறாள். ராதாம்மாவுக்கு உடல் நலம் இல்லை என்று தெரிந்த பின் அப்படி வந்து, அங்கிருந்து ஒரு மாட்டு வண்டியில் ஊர் வந்தார்கள். அழகாயிக்குப் பூசை வைத்து நேர்ந்து கொண்டார்கள். புதுக் குடிச்சாலையில் இருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் இருக்கும். முன்பெல்லாம் வழியில் கட்டிடங்கள் இருக்காது. ஒரே சோலையாக இருக்கும். பூவரசு, வாதமடக்கி, வேம்பு எல்லாமே இருக்கும். அழகாயி கோயிலுக்குக் குறுக்கே சென்றுவிடலாம். ஆனால் இப்போது அந்தப் பசுமைகள் இல்லை. ஆளே இல்லாத பன ஒலைக் குடிசைகள், முள் படல்கள் தெரிகின்றன. சாலையில் கண்டாற் போல் ஒரு ஒட்டுப் பள்ளிக் கூடம். துவக்கப்பள்ளி என்று விள்ளுகிறது, பலகை. அதன் இடிந்த திண்ணையில் இரண்டு ஆடுகள் படுத்திருக்கின்றன. ஓர் அடி குழாய். அங்கிருந்து பார்த்தால் பசுமையான வயல்கள் தெரியும். வெள்ளையும் சள்ளையுமாகக் கட்டிடங்களே தெரிகின்றன. தெருவீடுகளை ஒட்டிய கொல்லைகளில், தென்னமரங்கள் மட்டை தொங்கக் காய்ந்திருக்கின்றன. ஈசுவரன் கோயில் கோபுரம் தெரிகிறது. வழியில் ஏதேதோ கடைகள்… சாம்பு, காபித்துள், சரம் சரமாகத் தொங்குகின்றன. அந்த ஒரு கடைதான்

திறந்திருக்கிறது. நேராக வாய்க்கால். அந்தப் பாலம் தாண்டினால், ஆற்றுமேடு வரும் வரை தென்னந்தோப்பும், வெற்றிலைக் கொடிக்கால்களும் இருக்கும். ஏதோ வீடுகள், மட்டும் தெரிகின்றன. குடை ஆன்டெனா…

அவர்கள் முன் ஒரு போலீசுக்காரன் வருகிறான். தொந்திதெரிய, நடுத்தர வயசுக்காரன். கையிலுள்ள தடியால் தரையைத்தட்டி, “நில்லுங்க ? எங்க வரிங்க?” என்று அதிகாரமாகக் கேட்கிறான். கன்னியம்மா பேசவில்லை.

இவள் யோசனை செய்கிறாள். சட்டென்று, ‘அழகாயி வூட்டுக்கு’ என்று சொல்கிறாள். அதற்குள் கன்னியம்மா சமாளித்து, “ஆ, எங்கத்த வூடு இருக்கு” என்று தொடருகிறாள்.

“அத்த வூடா? ஆரு, பேரு சொல்லு!”

“அதா அழகாயின்னு சொன்னேன்ல; அழகாபுரிப் பக்கம்…”

“அழகாபுரிப்பக்கம் ஆரும் போகக்கூடாது. நடங்க, ஸ்டேஷனுக்கு ?”

“ஏய்யா? எதுக்கு நாங்க ஸ்டேஷனுக்கு வரணும்? எங்க மக்க மனுசங்கன்னு இருக்கமாட்டாங்களா? நா வாக்கப் பட்டது இந்த ஊருதா. இது பேத்தி, நாங்க பட்டணத்தி லேந்து புறப்பட்டு, ஒரு நேர்ச்சக்கடன்னு வாரோம். இங்கியே தங்குவோம். உங்களுக்கு தியாகி எஸ்.கே.ஆர். தெரியுமாங்க?”

“இதபாரு, இந்தத் கதயெல்லாம் வாணாம். இங்க இப்ப தியாகியுமில்ல, ஆருமில்ல. ஊருக்குள்ள ஆருவரதானாலும் எங்களுக்குத் தெரியணும். நட ஸ்டேஷனுக்கு. கலவரம் நடந்த ஊரு, சேதி தெரியாது?”

“நாங்க என்னப்பா பேப்பர் படிக்கிறது? நேத்து ராத்திரி வண்டிய நடு வழியிலே நிறுத்திட்டாங்க. அங்கேந்து பஸ் புடிச்சி காலம புதுக்குடி வந்தோம். ரயில் பாதையில் தண்டவாளத்துல நின்னு மறிக்கிறாங்கன்னாங்க. இப்ப பஸ்ஸு ரோட்டோட போவுது. சனங்கள ஏம்பா இத்தினி கஷ்டப் படுத்தணும்?”

“இதெல்லாம், இன்ஸ்பெக்டர்ட்ட வந்து சொல்லு…”

சரி, வெவரம் இல்லாத ஆளாக இருக்கிறான். என்ன கலவரம் நடந்து இவ்வளவுக்கு ஆயிருக்கும்? பட்டணத்தில் தான் துப்பாக்கி, கொள்ளை வண்டி மோதிச் சாவு அன்றாடம் அரங்கேறுது. கிராமத்தில வந்து, தங்கி எதானும் நல்லது செய்யலாம் என்று பசுங்கனவுகளில் மிதந்தாளே?

வாய்க்கால் கரை ஓரத்தில், ஊத்தங்கரை எல்லையில் புதிய போலீசுச்சாவடி இருக்கிறது. கூரைதான். தீயணைப்பு வாளி. சைகிள். எங்கிருந்தோ முளைத்தாற் போல் ஓர் அழுக்குக் கவுனுடன் ஒரு பெண் குழந்தை அவர்களைப் பார்க்கிறது. போலிசுப் பயம் இல்லையோ?

அந்தக் காவலன், மேசையடியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரியின் முன் விறைப்பாக வணக்கம் தெரிவிக்கிறான்.

அந்த அதிகாரி இளம் பிள்ளையாக இருக்கிறான்.

“ஸார், இவங்க அழகாபுரிப் பக்கம் வராங்க..”

அவன் அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான். பிறகு மரியாதையாக, “என்னம்மா? யாரு நீங்க? எங்கிருந்து வந்திருக்கிறீங்க!” இவளுடைய வயதுக்கும், நலிவுக்கும் மதிப்புக் கொடுக்கிறான்.அங்கே ஒரு பெஞ்சு இருக்கிறது. “உக்காந்து பேசுங்கம்மா, யாரு நீங்க?”

“தியாகி குடும்பம் அய்யா. காந்தி, நேரு எல்லாம் வந்திருக்காங்க. சரோ அம்மா, காந்தி கிட்ட பேசிருக்காங்க. கலியாணம் பண்ணி, புருசம் பொஞ்சாதியா வாழாம, தேசத்துக்குன்னு செயில் போனாங்க. ஈசுவரன் கோயில் வீதிங்க… அய்யா, அம்மா ரெண்டுபேருக்கும் இதா ஊரு.”

காவலன் இடைமறித்து, “ஏதேதோ கதை சொல்லுதுகள்” என்று அவசரப்படுகிறான்.

“கதை இல்ல, தம்பி நிசம்… தியாகி எஸ்.கே.ஆர். அவுங்க காலத்துலதான் அழகாபுரின்னு பேரு வச்சாங்க. நிலமெல்லாம் வினோபா வந்தப்ப பூதான இயக்கமா, அந்தக் குடி மக்களுக்கே எழுதி வச்சாருங்க… சரோஜினி அம்மா. அவரு அப்பாவுக்கு ஒரே வாரிசு…” கண்கள் கசிகின்றன.

“என்ன பேரு சொன்னீங்க?”

“தியாகி எஸ்.கே.ஆர். சின்னி கிருஷ்ணன் அப்பா, இவுரு பேரு இராம சந்திரன். எஸ்.கே.ஆர்னா எல்லாருக்கும் தெரியும்.”

“நீங்க அவுங்களுக்குச் சொந்தமா? இந்தப் பொண்ணு யாரு..?”

“அவுங்க நிழலை அண்டி, சத்தியக் குடையில் மூணு தலைமுறையா வாழ்ந்தவ. காந்தி சொன்ன பிறகு, வாழ்ந்து பெத்த ஒரே மக போயிடுத்து, அம்மா அய்யா எல்லாம் போயிட்டாங்க. எம் பேத்தி இது. அங்க நாட்டு நடப்பு, மக்கமனுசங்க எதும் புடிக்கல. இத்த ஒரு கலியாணம் கட்டிவச்சே. அவ… பாவி, கூசாம, செய்யாத அக்கிரமமெல்லாம் செய்யிறான. பச்சையா இருக்கிற மண்ணுன்னு வந்தே, இங்கியும் எரிஞ்சி கெடக்கிது… ஒண்ணுமே புரியலங்க…”

“சரி, சரி, அழுவாத இந்த மூட்டைய வாங்கி வையிப்பா. சைகிள எடுத்திட்டுப்போயி, புதுக்குடி ஒட்டல்லந்து பிளாஸ்கில் காபியும் பத்து இட்டிலியும் வாங்கிட்டு ஜல்தி வா!” ஒரு நூறு ரூபாய் நோட்டை வைக்கிறான். சரி என்று மறுபடியும் விறைப்பாக ஒரு வணக்கம். தெரிவித்துவிட்டுப் போகிறான். அப்போதுதான் இன்னும் இரு காவலர்கள் சைகிளில் வந்திறங்கி வணக்கம் தெரிவிக்கின்றனர்.

“பெரிம்மா, நீங்க இருங்க…”

“காபி ஸார்!’ என்று வந்த காவலன் பிளாஸ்கைத் திறந்து கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

“அந்தப் பெரிம்மாக்குக் குடு!” என்றவன், கன்னியம்மாளைக் கூப்பிடுகிறான். “நீ வாம்மா, எங் கூட ?” என்று அழைக்கிறான். அவள் எதுவும் கேட்காமல போகிறாள்.

அடபாவி, இட்டிலி காபி வாங்கிட்டுவான்னு நூறு ரூபாத்தாளக் குடுத்திட்டு, அவள மட்டும் எங்கே கூட்டிட்டுப் போறான்? அவள் பதைபதைப்புடன் எழுந்திருக்கிறாள்.

“ஏ கெளவி, உக்காரு! உனக்குத்தா காப்பி. குட்சிக்க!”

“ஐயா எம்பேத்தி அவ. அவள எதுக்கு எங்க கூட்டிட்டுப் போறாரு, உங்க எஸ்.ஐ.? அவள் காபியையும் வெள்ளைச் சீலையையும் மறந்து வெளியே விரைகிறாள்.

ஆனால் அந்தக் காவலன் இவளைப் பற்றிக்கொண்டு வந்து உட்கார்த்துகிறான். “இப்படிக் குந்துங்க. பெஞ்சி போட்டிருக்கில்ல? உங்க பேத்திக்கு ஒண்ணும் ஆவாது; பயப்படாதிய.”

“ஒண்ணும் ஆவாதா? என்னிய இங்க உக்காத்தி வச்சிட்டு…”

மேலே பேசச் சொற்கள் வரவில்லை.

நிலை கொள்ளவில்லை. பார்த்தால் நல்லபிள்ளை மாதிரி இருந்தானே? பாவி? பிணந்தின்னிக் கழுகு கூடப் பார்க்க அழகாகத்தான் இருக்குமோ? அவளுக்குத் துணை நான், எனக்குத் துணை அவள்ன்னு வந்தமே? அழகாயி, இது உனக்கே நல்லாயிருக்கா? நீ இங்க தெய்வமா இல்லியா? ஊரே சூனியம் புடிச்சாப்புல இருக்கு. பஸ்ஸில என்னமோ வெட்டிப் போட்டா, குத்திப் போட்டான்னானுவ…

உடம்பே துடிக்கிறது. அந்தப் பாவத்தில் இருந்து இந்தப் பாவத்துக்கா?

காபியில் ஈ வந்து குந்துகிறது.

அவள் அதையே வெறித்துப் பார்க்கிறாள். கன்னிம்மா, நீதான் அழகாயி. நீ ஆங்காரியாயிடுவ, உனக்காக நான் பயப்படல அழிஞ்சி போயிடுவிங்கடா?…

அவன் மட்டும் தொப்பியைத் தலையில் இருந்து எடுத்துக் கொண்டு குனிந்து உள்ளே வருகிறான்.

இவளுடைய பொங்கல் வெடிக்கிறது.

“ஐயா, எம் பேத்தி எங்க? அவள என்ன பண்ணினிய?… இப்படி நீங்கல்லாம் பொம்புள வெறிபுடிச்சி அலையுற தாலதா நாடு இப்படி ஈரமில்லாத பாலவனமாயிடிச்சி. குடும்பக் கட்டுப்பாடுன்னு, லட்சலட்சமா கருக்கொல பண்ணிப் போட்டீங்க. வெறி அதிக மாயிடிச்சி. அது கொறயல. பூமாதேவி தாங்குவாளா? பாவிங்களா? இந்த மண்ணு, தண்ணி மரம் மட்டை எல்லாம் உங்க ஒழுக்கத்துல தாய்யா துளிக்கணும். அன்னாடம் கொலை, ஆத்தாளே, பெத்தது பொண்ணுன்னா அழிக்கிறா. ரத்தவெறி.”

அவள் கையை அவன் பற்றுகிறான். அழுத்தமாகப் பற்றி உட்கார வைக்கிறான். அவனுக்கும் கை நடுங்குகிறது.

“உணர்ச்சி வசப்படாதீங்க பெரியம்மா. நீங்க சொல்லுற குற்றச் சாட்டுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. ஏனுன்னா ஆதிக்கம் செலுத்தும் ஆண்வர்க்கமா பொறந்திருக்கிறேன். உங்க முன்ன வெக்கப்படுறேன், ஆணாப் புறந்ததுக்காக. உங்க பேத்தியால எங்களுக்கு உதவ முடியும். நீங்க காபி குடியுங்க, உங்களைக் கூட்டிட்டுப் போற…”

“எனக்குப் புரியலியே தம்பி, அவ உதவறத என்னாலயும் முடியும். நாந் தப்பாப் பேசிட்ட போல…”

“தப்பாப் பேசல. நாயமாத்தான கேட்டீங்க. இங்கே மூணு நாளக்கு முன்ன ரத்தக்களரி. அழகாபுரத்திலேந்து ஒராம்புள, ஊத்தங்கரை மேச்சாதிப் பொண்ணக் கூட்டிட்டுப் பஸ்ஸிலே போயிட்டான். பஸ்ஸ மறிச்சிப் போட்டு, ஊத்தக்கர ஆளுவ அவங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டானுவ. தடுக்க வந்தவங்களுக்கெல்லாம் அடி, உதை, பஸ் டிரைவரும் கண்டக்டரும் ஓடிட்டாங்க. ஓடனே அடுத்த நாள், அழகாபுரி ஆளுங்க ராவே புகுந்து ஊத்தங் கரையில அந்த தெருவையே எரிச்சாங்க… போலீசு, நாங்க என்ன செய்ய முடியும்? அழகாபுரில ஒரு தெருவே கைது பண்ணிருக்கிறோம். ஊத்தங்கரைக்காரங்களும்தான்… காபி குடிச்சிக்குங்க… வாங்க…” அவள் அந்தக் காபியை அருந்துகிறாள். பிறகு அவனே அவள் கையைப் பற்றி அழைத்து வருகிறான். வாய்க்காலில் அங்கங்கே முட்செடிகளும், புல்லும் பரவிக்கிடக்கிறது. அதைக் கடந்து அங்கே தெருவுக்குள் நுழைகிறார்கள். எல்லாம் மச்சு வீடுகள்; ஒன்றிரண்டு மாடி வீடுகளாக மாறி இருக்கின்றன. அதைக் கடந்து ஒற்றையாக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் ஏழெட்டு தெரிகின்றன. ஒரு வீட்டில் இருந்து யாரோ குழந்தை எட்டிப் பார்த்து விட்டு உள்ளே ஓடுகிறது. ஒரு வீட்டுக்குள் அவளை அவன் அழைத்துச் செல்கிறான். செருப்பில்லாமலே நடந்து பழகிய அவளுக்குக் கால்களில் முள் தைத்தால் வலித்த தில்லை.

குடிசைகளாக இருந்த அழகாபுரி, மச்சு வீடுகளாக இருக்கின்றன. டி.வி. சாதனத்துக்கான உச்சிக் கொடிகள் இருக்கின்றன. உள்ளே… தரையில், பாய்களிலும் கந்தய் சேலைகளிலும் வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும், தீக்காயப் பட்டும், உடல்கள், சின்ன அறையில் நான்கு பேர். பாதி உயிர் போகும்- போன நிலையில் ஒரு கிழவனுக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தை. காய்ச்சல் கொதிக்கக் கண் முடித் துவண்டிருக்கிறது. அதன் தாய், மண்டையில் அடிபட்டுக் கிடக்கிறாள். ஏதோ ஓர் அழுக்குத் துணி இரத்தக்கறையுடன் முடியோடு ஒட்டிக்கிடக்கிறது. பதினைந்து பதினாறு வயசுப் பிள்ளை ஒருவன் கால் ஒடிந்தநிலையில் இருக்கிறான். கிடைத்த துணியைச் சுத்தி இருக்கிறார்கள். கன்னியம்மா, முற்றத்தில் அடுப்பெரிய விட்டு, ஒரு மண் சட்டியில் எங்கிருந்தோ நீர் கொண்டு வந்து சூடு செய்கிறாள். பிறகு, கந்தல் துணிகளை நனைத்து ரத்தக்காயங்களை, அந்தப் பெண் பிள்ளை முகத்தைத் துடைக்கிறாள்.

அவன் ஒன்றும் பேசாமல், அடுத்த வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு ஒரு நிறை கருப்பிணி கண் விழிக்காமல் கிடக்கிறாள். ஒரு இளைஞன் கண் விழித்தாலும், பசி, பசி, வலி வலி என்று சாடை காட்ட முடியாமல் முனகுகிறான். கைகள் இரண்டும் கட்டுப் போட்டிருக்கிறான். இரத்த வீச்சம் கப்பென்று மூச்சைப் பிடிக்கிறது. அங்கே ஒரு பெண், நர்சம்மா போல், இரட்டைப் பின்னல் போட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறாள். இட்டிலியை ஒரு இலையில் வைத்துப் பிய்த்துக் கொடுக்கிறாள்.

“டெட்டால் வாங்கி வரச் சொன்னனே, வரல?…”

“போட்டேன் சார். நாத்தம் இங்கல்ல. வேற பக்கம், பின்னாலேந்து வருது. கோயில் கிணத்திலேந்து தண்ணி கொண்டாந்தார் கான்ஸ்டபிள்.”

“ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வண்டி இல்ல. இத இப்ப வரும், அப்ப வரும்ங்கறாங்க… அடிபட்டுக் கிடக்கிற வங்க என்ன சாதி, என்ன ஊரு?…”

“இந்தம்மாதான கவலையாயிருக்குது. குழந்தையின் துடிப்பு வயத்தில் கேக்கல. அதிர்ச்சியா இருக்கிறாங்க. அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்” அவர் தலையைக் குனிந்து கொண்டு வெளிவருகிறார்.

“உங்க பேத்திய சமயத்தில் கூட்டி வந்தீங்க. நாங்க கலவரத்த அடக்கத்தான் வந்தோம். ஆனா, இந்தப் பாவங்களை எப்பிடி வுட? காக்கிச்சட்டைக்குள்ளயும் மனசு இருக்கு. காக்கி போடாட்டியும் வெறி இருக்கு சொந்த பந்தம் ஏது என்னன்னு பாராம ஓடுறவங்க ஓடிட்டாங்க. பிடிபட்டுப் போனவங்க, உள்ள கோர்ட்டு கேசு இருக்கு. ஆனா, இவங்க?…”

அப்போது அங்கே, வயதானவர் ஒருவர், வாயிலில் நிற்கிறார்.

“என்ன, தாயம்மா? நினப்பு இருக்கா?…”

“ஐயா சாமி, இதென்னய்யா கோலம்…?”

“அதெல்லாம் ஒண்ணும் கேக்காதிய. இவுரு எஸ்.ஐ. சொல்லி அனுப்பிச்சாரு, இப்படின்னு வந்திருக்காங்கன்னு. பேத்தியயும் கூட்டிட்டு வந்திருக்கிங்கன்னாங்க. நானும் ஆசுபத்திரிக்கு இவங்களக் கொண்டுட்டுப் போவணும்னு பாக்குற. அவவ… மென்னு முழுங்கறானுவ இருக்கிற லாரி, காரு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கட்சித் தலவர் போயிட்டார்னு ஓடுறானுவ…”

அவர் கண்கள் இடுங்க, வியப்புடன் “நீங்க எப்டீம்மா வந்தீங்க?” என்று விசாரிக்கிறார்.

அவள் கையெடுத்துக் கும்பிடுகிறாள். “அதெல்லாம் இப்ப வாணாம் அய்யா. வர்ற வழி எல்லாம் சங்கட்டம். அம்மா வயித்தில இருக்கற குழந்தை, நேரம் வரப்ப எத்தினி சங்கடப்பட்டு வருது? அழகாயி மேல பாரத்தப் போட்டுட்டு வந்தோம். இங்க வந்தது… வெளி உலகக்காத்து, மூச்சு புதுசா வுடுறாப்பல இருக்கு. அய்யா…”

“நா ஒடனே இவன புதுக்குடிக்கு அனுப்பிச்சி, மருந்து கட்டுக் கட்டத் துணி, எல்லாம் கொண்டாரச் சொன்னே. எல்லாரும் கதவப் பூட்டிட்டு ஓடிட்டானுவ புதுக்குடிலகூட தீவைப்பு, அடிதடி…”

குரலைத் தாழ்த்தி ‘இந்தத் தெருவிலியே, உங்க மகங்கட்சி தாதா ஒருத்தன் இருக்கிறான். போலீசு புடிச்சிட்டுப் போயிருக்கு. வீட்ல பழைய சீலை துணி எல்லாம் தேடிக் கொண்டாந்து போன ஒரு பொம்புள போலீசுகான்ஸ்டபிள், மல்லிகாபுரம் ஊரு. பொம்புளன்னா, அதுக்கு இயல்பா ஒரு பரிவு, மென்மை இருக்கு. தண்ணி பொதுக் கிணத்துக்கு எவ்வளவு தொலவுக்குப் போகணும்? அந்த காலத்துல வாயக்கால்ல தண்ணி வரும்… ரெண்டு வருச மாச்சி. எல்லா எழவும் அரசியலாக்கிட்டானுவ… நீங்க சொன்னாப்புல சமயத்துக்கு வந்தீங்க…”

மனம் நெகிழ்ந்து போகிறது.

அன்றிரவு கருப்பிணிப் பெண் இறந்து விடுகிறாள். அவள் புருசனும், அவன் தாயும், அவள் சகோதரனுக்கும் சொல்லி அனுப்பி வந்து சேர ஒரு முழு நாளாகிறது. அதற்குள் ஒரு போலீசு வண்டி வந்து, அடிபட்டவர்களை ஏற்றிச் செல்கிறது.

அவளைக் கொண்டு சுடலையில் இறுதிச் சடங்கு செய்வதற்கும் போலீசுதான் முன் நிற்க வேண்டி இருக்கிறது. அவளும் போகிறாள்.

சுடலை, இன்னும் கிழக்கில் இருக்கிறது. முன்பு அங்கே படுகைக்காடு போல் இருக்கும். வாய்க்காலுக்கும், ஆற்றுக்கும் இடையே மூட்டம் தெரியும். இப்போது காடு இல்லை. வாய்க்கால் மூட்டோடு சென்று இறுதி முடித்து ஆற்று மேட்டில் இறங்கி, அங்கே குட்டை போலிருக்கும் தேங்கிய நீரில் குளிக்கிறார்கள். ஈரத்துடன் அவர்கள் வரும்போது, அழகாயி கோயிலின் சுவர் தெரிகிறது. புதிய வண்ணக் கோபுரம்.

முன்பு சுற்றுச்சுவர் கிடையாது. பெரிய திடல் இருக்கும். அதில்தான் பொங்கல் வைப்பதும் உடுக்கடித்துப் பாடும் போதும், கூத்துக்கட்டும் போதும் சனங்கள் கூடி இருப்பார்கள். பின்னாலிருந்த பெரிய வேப்பமரம் இல்லை. வாய்க்காலோரம் இருந்த அரசும் வேம்பும் கூட இல்லை. பிள்ளையார் மட்டும் அநாதையாக இருக்கிறார். அங்காயி சிறைவைக்கப்பட்டாற் போல் சுற்றுச் சுவர், வாயிற்கதவுக்குள் இருக்கிறாள். ஊரே, கோயில் முன் நிற்கக் கால் கழுவ, அவளுக்குத் தெரிந்து, தோண்டப்பட்ட கிணறு, சுற்றுச் சுவருக்குள் சிறைப்பட்டிருக்கிறது. இந்தக்கரைகளில், வீடுகட்ட கடைகால் தோண்டினால் மணல் பரிந்து தண்ணிர் வந்துவிடும். அப்படி உறை இறக்கிய கிணறு…

“அவள் வெளியில் நின்று பார்க்கிறாள்.

சூலத்தை மட்டும், ‘கேட்டுக்கு’ வெளியே யாரோ, அச்சுறுத்துவது போல் நட்டு வைத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் ஓர் இளைஞர் கூட்டம் அங்கு வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் அவள் பார்த்த பெண், இளைஞன். பிறகு மாயவரத்தில் இறங்கி இவர்கள் பஸ்ஸுக்குச் செல்கையில் கூட்டமாகச் சாலையில், முதுகில் சுமைப் பைகளைப் போட்டுக் கொண்டு நடந்தவர்கள்.

அவர்கள் வரும் போதே, வழியில் உள்ள முட்செடிகளை, வாய்க்காலில் படர்ந்த முட்களை அப்புறப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஒருவன் கோயில் முன் நட்ட சூலத்தை அசைக்கிறான். எடுத்து ஒருபுறம் வைக்கிறான்.

“ஆயுத கலெக்ஷன். மூன்று வாள், வேல்கம்பு, இப்ப சூலம்…” என்று கறுப்பாக, உச்சியில் முடி கட்டிக் கொண்டு, கழுத்தில் காமிராவுடன் தெரியும் பெண் இந்தியில் பேசுகிறாள். புரிகிறது.

“காலித்! இத்த நீ தொட்ட, வெட்டிடுவாங்க? அது அப்படியே இருக்கணும்..” என்று சொல்கிறான் போல் இருக்கிறது. ‘காலித்’ என்று பெயருக்குரிய இளைஞன், அந்த சூலத்தைத் தூக்கி ஓங்கி சம்ஹாரம் பண்ணும் பாவனையுடன் பார்க்கிறான்.

“தாயே, அருள்புரி… நாங்கள் இனி அஹிம்சை விரதம் மேற் கொண்டு, இந்த ஆயுதங்களை உன் காலடியில் போடுகிறோம். நீயும் போட்டுவிடு…” என்று ரயிலடியில் பார்த்த பெண் தமிழில் உரக்கச் சொல்கிறாள்.

“என்ன சொல்றா இவ?” என்று மற்றவர் சாடை காட்ட அது, ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது நெஞ்சு நிறைகிறது.

நேராக கன்னியம்மா, கழுவிச் சுத்தம் செய்திருப்பாள் என்று அந்த வீட்டுப் பக்கம் வருகிறாள்.

அந்த வீட்டின் முன், துணிகள் கசக்கிப் போட்டி ருக்கிறாள். அவள் வேறு சீலை உடுத்திருக்கிறாள்.

“ஆயா, வாங்க. எங்க குளிச்சீங்க? இத இவங்க பக்கத்து வூடு உள்ள கிணறு இருக்கு. குளிச்சி, துணியெல்லாம் கசக்கி உலத்திட்டேன். இந்தச் சீல, முன்ன வந்தாங்களே, அவங்க அனுப்பிய மூட்டயில இருந்திச்சி. ஜாக்கெட் அதையே போட்டுட்டேன். உங்களுக்கு ஒரு சீல, ஜாக்கெட் கூட இருக்கு…”

“நப்ப மூட்ட போலீசு டேசன்ல இருக்கு. கன்னிம்மா, அத்தக் கேட்டு வாங்கியாரனும் இல்ல? உன் துணிமணி இருக்கு…?”

“ம். கேட்டே, அந்த போலீசுகாரரு, அதா நம்ம முதல்ல வெரட்டினாரே, அவுரு “அப்டீல்லாம் தந்திட மாட்டம், அதுக்குள்ள நீங்க வெடிகுண்டு கத்தி வச்சிருக்கீங்களான்னு பரிசீலனை பண்ணிட்டு பிறகுதா தருவம்…”ன்னாரு.” –

அந்தப் பக்கத்து வீட்டுக்காரியே அவர்களுக்கு உள்ளே அழைத்து, இலையில் பொங்கிய சோறும் குழம்பும் படைக்கிறாள். “காய் எதும் இல்லம்மா. ஊறுகாய் வேணுமா?”

“வாணாம்மா… இதே நல்லாருக்குது. நீங்கல்லாம் இங்கியே தா இருக்கீங்களா தாயி?”

“ஆமாம்மா. எங்க வூட்டுக்காரர போல்சு புடிச்சிட்டுப் போயிருக்கு. பயம்மா இருக்கு. டி.வி.லயும் சினிமாலியும் காட்டுறாப்புல ஆயிடிச்சி. அந்தப் பைய பெரி படிப்புப்படிச்சா. துபாய்க்குப் போயி, முஸ்லிமாயிட்டான்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் எங்களுக்குத் தெரியலம்மா. வசதிதா. படிச்சிட்ட பயங்க முன்னுக்கு வந்து வசதியாயிட்டாங்க. ஊத்தங்கரையில மேலத்தெரு பொண்ணு, அதும் இதோட பட்டணத்தில படிச்சிச்சாம். அவனக் கட்டுவேன்னு சொல்லிருக்கு. அவப்பா, பெரியப்பா, வியாபாரம், அது நொடிச்சிப் போச்சின்னாலும் வீம்பு. முறைப் பய்யனத்தான் கட்டணும்ன்னிருக்கா. அவ அம்பது சவரன் போடணும்னாளாம். இவுரு வூட்ட வாசல வித்து அவனக் கட்ட நிச்சியம் பண்ணியாச்சி. இவங்க ராவுக்கு ராவே புதுக்குடி போயி, காருல போனாங்கன்னாங்க. ஆளுவ பஸ்ஸில புகுந்து அழகாபுரி ஆளுங்க அஞ்சு பேர வெட்டிப்புட்டாங்க. பொண்ணையும் வெட்டிட்டானுவ…”

அவளுக்குக் கேட்க முடியவில்லை. வாயில் போட்ட கவளம் இறங்க மறுக்கிறது.

இப்பிடி ஒரு சாதிக் கொடுமையா இந்த ஊருல…?

“சாதி எதும் தெரியாமதா இருந்தம் அம்மா. சின்னச் “சாதி, நீ என்னடா? ன்னு வீம்புதான். அன்னிக்குப் படிப்பில்ல, வசதியில்ல. இப்பகூட வசதியில்லாம, பன ஒலக் குடிசயில இருக்குராங்க. தண்ணியில்ல, ஒழவில்ல, பொழப்பில்ல. எடுபட்டுப் போவுதுங்க. கட்டிடம் கட்ட கூலி வேலன்னு. வயசுப் பொண்ணுகள்ளாம் எங்கியோ போயி டவுனில பிழைக்கிதுங்க…தா, காவேரி ஏரிப் பாருங்க! சித்திர வையாசி, மாசி மார்கழி எல்லாம் ஒண்ணுபோலக் கெடக்கு அல்லாம் கச்சிதாம்மா இப்ப’ன்னு முடிக்கிறாள்.

“ஓங்கூட்டுக்காரரு என்ன வேலை செய்தாரு?”

“இஸ்கூல்ல வாத்தியாரு. எங்க மாமா, பெரிய வூட்டு மணியமா இருந்தாங்க. புதுக்குடிக்குப் போய் வருவாரு, பஸ்ல மாட்டிக்கிட்டாரு கேசொண்ணுமில்ல. வுட்டுட்டாங்க. ஆனாலும் கலவரம் முடிஞ்சிச்சி, வந்திருவாங்க..” சாதி, சமயம், கட்சி…

விளக்கு வைக்கும் நேரம் பக்கத்து வீட்டு அகிலாவிடம் எண்ணெய் திரி வாங்கிச் சென்று, கோயிலில் விளக்கேற்றுகிறார்கள். வெளி மாடத்தில் உள்ள அகலில் ஒன்றும், இன்னொன்றைப் பிள்ளையார் முன்பும் கன்னியம்மா ஏற்றுகிறாள்.

அத்தியாயம்-32

“வாங்க வாங்க… நீங்க இங்க சாப்பிட வருவீங்கன்னு மத்தியானமே சொன்னேன். இந்நேரமாச்சி?” என்று இராமலிங்கம் வரவேற்கிறார்.

“எப்படிங்க? வீட்டிலேந்து அவங்கல்லாம் போன பிறகு, கழுவி கிழுவி எல்லாம் சுத்தம் பண்ணினம். போட்டது போட்டபடி கெடக்கு ஓடியிருக்காங்க. அந்த ரெண்டு வீட்டிலும் ஆரும் இல்ல. எதோ திட்டத்துல கட்டின வீடாம். அரசு, ஆட்சி மாறிட்டதாம், குடி இருக்க வுடலயாம்… போலிசுக்காரத் தம்பி நல்லவரு…”

“இந்த வூர்ப்பையன் தாம்மா, கருப்புசாமிப் பூசாரி மக, சிவசாமி தெரியுமா? அவம் பையன். கடேசிப் பையன். போலிசுன்னு சொல்றம், பந்தோபஸ்து காவல்னு உசிரைப் பணயம் வச்சிட்டு ட்யூட்டி பண்றானுவ. எதேனும் அங்கொண்ணு இங்கொண்ணு அடாவடி இருக்கும். ஆனா, மொத்தக் கட்சிகளும் ஆட்சியும் லஞ்சப் பணத்துல அமையும் கலாசாரத்துல என்ன நடக்கும்?…”

“உக்காரம்மா, ஏன் நிக்கிற? என்ன சாப்புட்டீங்க?” அவள் சொல்கிறாள்.

பெரிய கூடம். மேலே உயர்ந்த கட்டுமானம். குழல் விளக்கை உள்ளிருந்து வரும் பணியாளன் பொருத்துகிறான்.

“ட்யுப் வாங்கிட்டு வந்து பொருத்தினியா? எப்ப?” என்று அவர் கேட்கிறார். “மத்தியானம் சைக்கிள்ள புதுக்குடி போயி வந்தேன்” என்று அவன் சொல்கிறான். உயர, காந்தி படம்… அய்யா படம், அவருடைய தாயார், தகப்பனார் படங்கள் இருக்கின்றன.

“நாமட்டும் இந்த வூட்டுல அதே குடும்பத்தின் தலை முறையாக இருக்கிறேன்…”

“அப்ப பொம்புளங்க யாரும், இல்லய்யாய்யா?”

“பொம்புள ஆம்புள ஆரும் இல்ல. சம்சாரம் போயிட்டா. மூணு புள்ள, ஒரு பொண்ணு. பொண்ணும் போன வருசம் தவறிப்போயிட்டா. ஒரு புள்ள டெல்லில இருக்கிறான். ரெண்டுபேர் யு.எஸ்.ல இருக்காங்க பேத்தி, மகவயித்துப் பேத்தி வந்திருக்கா. விவசாய, விதை வீரிய விதைன்னு ஆராய்ச்சி பண்ணி அமெரிக்கால பட்டம் வாங்கியிருக்கா. இப்ப இங்கே வந்திருக்கிறா. ஹைதராபாத்ல வேலை எடுத்திட்டிருக்கா…”

‘கலியாணம் கட்டலியா?…”

“இந்தக் காலத்துல, அவங்கவங்க சொதந்தரம்… தவுர, கலியாணம் பண்ணி நகை நட்டப் போட்டுக்கிட்டு, புருசன் கூட ஜாலியா இருக்கணுன்னுற ஆசையவுட, இந்த மாதிரி இளந் தலைமுறைகள், புதுசான சமூக உணர்வோட செயல்படுறாங்க. எல்லாரும் புதிசா விஞ்ஞானம் படிச்சாலும், ஆகாசத்துல பறக்கிறதோ, அணு யுத்தம் பண்ணுறதோ பெரிசுன்னு நினக்கல. இந்த நாட்டு வறுமைகள் ஏன் தொலையல, ஏன் வெட்டு குத்துன்னு வாராங்க? ஏன் இந்தப் பன்னாட்டு முதலைகளுக்கு இரையாறாங்கன்னு சிந்திக்கத் தொடங்கிட்டாங்க. இன்னிக்கு இந்த கிராமங்கள் தேடி வந்திருக்கு ஒரு கூட்டம். நீங்க பாத்திருப்பீங்களே? அங்கே சம்பாதிச்சி, நிதி திரட்டி, தாய் நாட்டு சமூக சேவைக்கு வந்து செயல்படுறாங்க.”

மனசு பொல்லென்று பூக்கிறது.

“நம்ம பேரப் பொண்ணு எதுங்க? ஒரே சைசில அஞ்சாறு பொண்ணுங்க இருக்காங்க…”

“சாதி இனம், மதம் இல்ல, முஸ்லிம் கிறிஸ்தவர் இருக்காங்க கறுப்பா ஒரு பொண்ணு எடுப்பான பல்லோட முடியக் கட்டிட்டுப் பாத்திருப்பிங்களே?…”

“ஆமா, அதான் பேத்தியா?”

“அது மத்ய பிரதேசத்து ஆதிவாசிப் பொண்ணு. ஃபோட்டோ கிராஃபராம். நம்ப முடியல. சுதந்தர பாரதத்தில கண் முன்ன நிறைய அழிவுகளைத்தான் பார்க்கிறோம்னு எனக்கு மனசு ரொம்பத் தாங்கலா இருந்தது. நீங்க பாத்திருப்பீங்க, அழகாபுரி நிசமாவே அழகாபுரியாத் தான் இருந்திச்சி. சாராய கலாசாரம், டி.வி. சீரழிவு, வந்து தா முன்னேறப் பாக்குறவங்களையும் காலவாரி இழுக்குது… நீங்க வரப்ப, பன ஓலக்குடிசைப் பாத்திருப்பீங்களே? அதெல்லாம் சம்பாதிச்சும் சாராயத்திலும் லாட்டரிச்சீட்டிலும் சீரழியும் சனங்கள்…”

இவர்கள் பேசும் போதே அவர்கள் எல்லோரும் வரும் அரவம் கேட்கிறது.

“அழகாயி கோயில்ல மண்டபம் கட்டிருக்காங்க, புதுசா வர்ணம் எல்லாம் அடிச்சிருக்காங்க. ஆனா, ஒரு பெரிய வேப்பமரம் உண்டு. பெரிய எடத்த அடச்சி, புள்ளயாரை வெளியே தள்ளி, எதுக்கு மதில் எழுப்பி கேட்டுப் போட்டு, பூட்டுப் போட்டிருக்காங்க அய்யா? கெணறுகூட உள்ள அம்புட்டுக்கிச்சி, பொங்கல் வைக்கிறது, கூத்துக்கட்டுற தெல்லாம் இல்லியா?…”

“உள்ளுக்குள்ள பலிபீடம், சூலம் எல்லாம் இருந்திச்சி. இருக்கும். பெரிய உண்டியல் பொட்டி இருக்கு முன்னெல்லாம் அழகாயி ஏழையா இருந்தாம்மா. மிஞ்சிமிஞ்சி வெள்ளில கண் மலர்தாம் போடுவாங்க. சுத்தி நந்த வனமா இருந்திச்சி. வாய்க்கால்கரை பூர அடுக்கரளி பூத்திருக்கும் கலர்கலரா, வள்ளை ரோசு, சேப்புன்னு. இப்ப இருக்கா?”

“இல்லீங்கையா…”

“ஊத்தங்கரக்காரர் தா இப்ப கோயில் நிர்வாகம் முழுசும். கறுப்பு துட்டு சேத்தவனெல்லாம், அம்மனுக்கு திருவாசி, அது இதுன்னு வெள்ளிதங்கம் போட்டாங்க. திருவிழாவுக்கு எங்கேந்தோ, ரிகார்ட் டான்ஸ் போல பொம்புளகளக் கூட்டி வந்தாங்க. சாராயம் சண்டைன்னு ஆயி ஒரு வருசம் வெட்டு குத்துல திருவிழாவே நடக்கல. சின்ன காம்பவுண்ட பெரிசாக்கி பெரிய கதவு போட்டுட்டுப் பூட்டிட்டாங்க. நம்ம தெரு கோயில் விசயத்தில் எதுவும் காதுல போட்டுக்கிறதில்ல. இங்கே நாலாவது வூடு… மின்ன, உங்களுக்குத் தெரியாது, நம்ம ஒறவுதா உம் புருசனுக்குக் கூட சொந்தம் உண்டு. அவங்கல்லாம் அப்பவே ஊரை வுட்டுப் போயி, பூட்டியே கெடந்திச்சி. அத்த வெலக்கி வாங்கிட்டு, இப்ப கூட குடை-ஆன்டெனா இருக்கும். கேபிள் டி.வி வச்சான். அவன்தான் எதே ஒரு கழகக்கட்சி. இப்ப எதுன்னு தெரியாது. ஒருநா ராவுல புள்ளாரப் பேத்து, வாய்க்காக்கரை மரத்தடில வச்சிட்டானுவ. உண்டிப் பொட்டி உடச்சிருக்கு. டாய், டூய்னு சண்ட நாறிச்சி. கோர்ட்டு கேசுன்னு போனானுவ முன்ன, அழகாபுரத்து ஆளுதா, வள்ளுவகுலம், நல்லபையன், தமிழ் படிச்சவன், அவந்தா தமிழ்ல பூசை பண்ணுவா. அவனை வேணான்னு பழிபோட்டுட்டு, மல்லிகா புரத்திலேந்து ஒரு அய்யர் பய்யனைக் கொண்டாந்து வச்சாங்க. அவன் சைக்கிள்ள வந்து, அங்கியே ஒரு பொங்கலப் பொங்கி, பூசை பண்ணுவான்னு சொன்னாங்க. இப்ப, அந்த திருட்டுக் கல்யாணத்துக்கு அவன் உடந்தை. துபாய்ப் பையன் துலுக்கனாயிட்டான். அவனை இந்த அய்யர் பையன், ஒரு ஸ்கூல்ல படிச்ச சிநேகம்னு ஒரு பட்டாச யாரோ கொளுத்திப் போட, அந்தப் பய்யன் எந்த திக்கில ஓடினான்னு தெரியல…” அவள் மவுனமாக இருக்கிறாள்.

எல்லோரும் உள்ளே வருகிறார்கள். ஒரு பெஞ்சும் ஒரு பழைய கால பிரம்புபின்னிய சாய்வு நாற்காலியும், இரண்டு மர நாற்காலிகளும் இருக்கின்றன. ராமலிங்கம் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறார். தாயம்மா பெஞ்சில் அமர்ந்திருக்க, கன்னியம்மா, ஒட்டி நிற்கிறாள்.

அவர்கள் எல்லோரும் பெஞ்சிலும் தரையிலுமாக உட்காருகின்றனர்.

“எல்லாம் பாத்தீங்களா?”

“பார்த்தோம். மூணு அரிவாள், குத்துகம்பு… என்ன அது?” என்று அந்தப் பெண், தமிழில் பேசியவள் கேட்கிறாள்.

“இவதா, எம்பேத்தி. செங்கமலம். இதா… விக்ரம்… உங்க வீட்டுப் பேரன், ஒரே வாரிசு”

“இது சூஜி… மத்யப்பிரசேத்திலேந்து வந்திருக்கு இது, லீலா, ஒரிசா, இவன் தினு… வங்காளம், இது, மாயா… மணிபுரி… இதோ இந்த வீட்டு சிங்காரம்… உசரமா பாக்குறாரே? அவரு காலித்…”

எல்லாரும் அவள் காலைத் தொட்டு, வணங்குகிறார்கள்.

எல்லாரையும் முகத்தை வழித்து திருஷ்டிகழிக்க நெஞ்சு குழைகிறது.

“நீங்க எல்லாரும் எங்கேந்து வரீங்கய்யா?”

“காலித், தினு, லீலா, இவங்கல்லாம் ஏற்கெனவே இங்க பிராஜக்ட்ல பங்கெடுத்துக்கிட்டிருக்கிறாங்க. நீர் பராமரிப்பு, துருவாருதல், இறால் பண்ணை எதிர்ப்புன்னு இயக்கங்கள்ள சம்பந்தப்பட்டிருக்கிறாங்க. அடிப்படையில், நமக்கு ஜனநாயக உரிமை இருக்கு. எங்க தாத்தா பாட்டி காலத்திலேயே வந்தாச்சி. அப்ப ஏன் வறுமை தொலையல? இந்தக் கட்சிகளெல்லாம் ஏன் எல்லாப் பிரச்னைகளுக்கும், சரியா தீர்வு காணாமல், இருக்கு. மக்களெல்லாம் நாம சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறோம்னு உணரல? ஏன் இவ்வளவு லஞ்சம்? சாராயம்… எங்க அமைப்பு, ஒரு கிராமத்துல சாராயமே இல்லாம மாத்தி முழு வெற்றி பெற்று இருக்கு அது மாதிரி பெண்களுக்கு, விழிப்புணர்வு கொண்டு வந்து மாத்தற திட்டம். முதல்ல, வன்முறைய மாத்தணும்… இங்க தமிழ்நாட்டில் இருபத்தஞ்சு வருசம் போல மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததாம்…? தாத்தா சொல்றாரு…”

“ஆமாம்மா, இருந்திச்சி. எங்கோ சில மீறல்கள் இருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், ஆபீசுகள்னு, குடி ஒழிஞ்சிருந்தது. திருட்டை ஒழிக்க முடியல. அந்த புத்தி எப்பிடியோ வருது. அதுக்காக காவல் துறையே வேணாம்னு சொல்றாப்புல, மதுவிலக்க எடுத்தாங்க…”

“ஆமா, இப்ப அதைவிட்டுடுங்க. தாத்தா, ஊத்தங்கரைக் காரங்களும் அழகாபுரிக்காரங்களும், வெட்டிக்கிட்டாங்க. யாருக்கு நஷ்டம்? இதை உணரச் செய்யணும். இந்த ஊரு ஆளுக, அந்த ஊரு ஆளுகள சேத்து வச்சி… என்னென்ன குறைன்னு புரிஞ்சிட்டு, நல்ல குடியாட்சி மக்களாக உரிமையுடன் செயல் படச் செய்வோம்…”

“அப்ப நீங்கல்லாம் வெவ்வேறு இடத்திலேந்துதா வந்திருக்கீங்களா?”

“எல்லாரும், இந்த நாட்டுல பிறந்தவங்கதா பாட்டி ஆனா, இந்த விக்ரம், தினு இரண்டு பேரும் அமெரிக்காவில் இருந்து வந்திருக்காங்க. அநேகமாக எல்லாரும் படிக்கனும், ஆராய்ச்சின்னு போனோம். ஆனா இப்ப, எங்க பிறந்த நாட்டுக்கு எதானும் பண்ணனும்னு வந்திருக்கிறோம், ஆயா…”

அவளுக்கு எதுவும் பேச முடியாத நிறைவில் மனம் துளும்புகிறது.

“விக்ரம் தம்பி, என்ன உங்களுக்கு நெனப்பிருக்கா?… இத்தினி நாளா நா உங்களப்பாப்பனான்னு கெடந்தே உங்க தாத்தா வச்ச சொத்து… அது அழியிது. மரத்த வெட்டினாங்க.” துக்கம் தொண்டையை அடைக்கிறது.

“தாயம்மா, அவங்க வச்ச சொத்து என்னிக்குமே அழியாது. ஆராலும் அழிக்க முடியாது, நம்ம காலத்துல அது நிரூபணமாகுது. இம்சையில் இருந்து அஹிம்சைதான் வர முடியும். இருட்டுக்குப்பின் உதயம்தான்னு இந்தப் பிள்ளைங்க நிரூபிக்கிறாங்க”

“கோயில் கதவு சாத்திருக்கு. சூலத்தை கேட்டுக்கு முன்னாடி நட்டு வச்சிருக்காங்க. எதோ, பயங்கரமா…”

“இவுரு அத்தையும் ஆட்டிப் படுக்க வச்சாரு. ஆக, பூட்டின கதவுக்கு முன்ன எங்களுக்குப் புதரிலும் அங்கும் இங்கும் கிடச்ச ஆயுதங்கள கோயிலுக்கு முன்ன போட்டு நாங்க சரணடஞ்சிட்டோம்… தாத்தா !”

விக்ரம் சொல்கிறான்.

“அதுவும் சரிதான். இப்ப காந்தி இல்ல; வினோபா இல்ல; ஐய பிரகாஷ் நாராயணனும் இல்ல…”

விக்ரம் அவளையே பார்த்துப் புன்னகை செய்கிறான். அவருக்கு அசைப்பில், ராதாம்மா மாதிரி, அவள் தந்தை மாதிரி, தாய் மாதிரி தோன்றுகிறது.

“முன்ன, உங்களுக்கு நினப்பிருக்கா?… நான் குழந்தையா இருக்கையிலே, அம்மா, ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு கலைடா ஸ்கோப்… வாங்கிக்குடுத்தா. கண்ணுல வச்சி திருப்பித் திருப்பிப் பாத்திட்டிருந்தேன். இங்கே, எல்லாரிட்டயும் காட்டினேன். நீங்க எனக்கு சோறுட்டினீங்க. அதை வச்சிப் பாத்தீங்க. பிறகு, அத உக்காந்து நானே ஒட்டின காகிதம், போக தண்ணில போட்டு வெளயாடி எல்லாம் பிரிச்சிட்டேன். கண்ணாடித்துண்டெல்லாம் கொட்டிப் போச்சு, உங்ககிட்ட ஒட்டித்தா ஒட்டித்தான்னு அழுதேன்…?”

அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

அவன் அதே சம்பவத்தை இந்தியில் சொல்கிறான். புரியாதவர்கள் இப்போது சிரிக்கிறார்கள்.

ஆனால் தாத்தா இந்தக் கலகலப்பில் கலந்து கொள்ளவில்லை.

“நம்ம கலாசாரம், அஹிம்சை, எளிமை, ஒழுக்கம் எல்லாம் இப்படித்தான் பிடிப்பு விட்ட கண்ணாடித் துண்டுகளாயிட்டன. ஆனா இளைய வாரிசுகள் அன்னிக்கு வெள்ளைக்காரனை எதிர்த்து, எல்லாரும் ஒரே இலட்சியத்தில் கூடினாப்பில வந்திருக்கிறீங்க. அதுதான் ஆறுதல்…” என்று ஆழ்ந்த குரலில் பேசுகிறார்.

“அன்றைய மாதிரி இல்லை” என்று காலித் சொல்லும் போது, செங்கமலம் ஆமோதிக்கிறாள்.

“நம் வரலாற்று ஆராய்ச்சி அண்ணன் சொல்வது சரி. சுதந்தரப் போராட்டத்தில் வெள்ளையனை வீழ்த்தனும் என்ற குறிதான் பொது, முதல்ல, அது துப்பாக்கி கலாசாரத்தில் தான் வெளிப்பட்டது. ஹிட்லர், ஜப்பான்னு, நேதாஜியின் ஐ.என்.ஏ. வரை போச்சு. காந்தியின் அஹிம்சையின் இலக்கு பிரிட்டிஷ்காரனை மட்டும் அப்புறப்படுத்தியது… இது அப்படியில்லை.

“சரியாச் சொல்லணும்னா பெரும்பான்மையான பேருக்கு அப்பவும் சுதந்தரத்தப் பத்தி எந்தத் தெளிவும் திட்டவட்டமான கருத்தும் இல்லன்னு தோணுது. அப்படி இருந்தால், இப்பவும், சுதந்தரம்னா என்ன, மனிதருடைய அடிப்படை உரிமைகள் என்னன்னெல்லாம் எதுவுமே தெரியாத அதே பெரும்பான்மையை வச்சி குடியாட்சிங்கறபேரில, ஒரே குப்பை கூள மக்களாச் சிதறவிட்டிருக்காது… இப்ப எனக்கெல்லாம் இந்தப் பராம்பரியம் பற்றி, உணர்வு பூர்வமா ஒண்ணுமே தெரியாது. ஆனா, நான் ஒம்பது வருசமா வெளிநாட்டில இருக்கிறேன். அப்பப்ப வருவேன். அப்பாகூட ஒருவாரம், அங்கே இங்கேன்னு வரப்பதான் பிரச்னைகள் புரியிது. காவேரி, வாய்க்கால், கோயில், நம் கொள்கைகள், மனிதநேய உறவுகள் எல்லாம் சிதைந்து போன பிறகுதான் அருமையாகத் தெரியிது…”

“சிதையாது… கொண்டு வருவோம்… மீட்போம்” என்ற தொனியில் சூஜி-கையை உயர்த்திக் காட்டுகிறாள்.

“எதை, சாதி, மதம், தீண்டாமை, பெண் ஒடுக்கல், இதெல்லாமா? இவை யெல்லாமும் இங்கே இந்திய கலாசாரப் பண்பா இருந்திருக்கு, மறக்காதே!” சிரிப்பு, கூடவே கடுமையான முகங்கள்.

“அதாவது, பழையன சிலது கழித்து, புதியது புகுத்தி…”

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கையில், கன்னியம்மா, சிங்காரம், காலித், லீலா ஆகியோர் பின்புறம் நழுவி விட்டதைக் கவனிக்கவில்லை.

“தம்பி, நீங்க…” என்று தாயம்மா துவங்குமுன் அவன் அருகில் வந்து கைபற்றிக் கொள்கிறான். “என்னப் போயி நீங்க நாங்கன்னு? நா உங்க பேரன்…”

“சரி, சரி… ராசா… நீங்க..”

“இதானே, ராசாவும் வாணாம். நீங்க போன வாரம், அநு ஆன்டியப் பாத்தீங்களாம். உங்க வீட்ட எதோ மல்டிநேஷனல் நிறுவனத்துக்கு வுடறாங்க, மரத்த வெட்டினாங்- கன்னு சொன்னீங்களாம்…”

“நீ வூட்டுக்குப் போனியாப்பா? குருகுலத்துல உங்க தாத்தா வாழ்ந்த காலம் நினைப்பு இருக்குன்ன. இப்ப பாத்தியா?”

“நான் போகல. நான் நேர ராஜாப்பூர் போன பஹ்ரி கட்வால பக்கம், அப்பா அங்கதா, சிப்கோ மூவ்மென்ட்ல ஆக்டிவா போராடிட்டிருக்காரு. பிளாஸ்டிக்குப் பைய சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வூட்டுவதுன்னு. அவரோட நிறையப் பேர் இருக்காங்க. சுப்பய்யான்னு ஒருத்தரப் பார்த்தேன். அவுரு உங்ககூட ஏதோ கோயிலுக்கு வந்தாராம். வெறி நாயி கடிச்சிச்சாம்…”

“அப்பா, எல்லாம் சொல்லிட்டானா?…”

“ஆமா, தம்பி, அங்க நீங்க போய், ஒரு வெறி நாய் ஒழிப்பு மூவ் மென்ட் செயல் படுத்துங்கன்னாரு. எதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார்…”

“நீ வீட்டுக்குப் போகலியா?”

“செங்கமலமும் நானும் வாசலோடு போனோம். சாமானெல்லாம் லாரில ஏத்திருந்தாங்க. நேரா அநு ஆண்டியப் பார்த்தோம்…”

“அவங்க உங்களுக்குத் தெரியுமா… இல்ல, உனக்குத் தெரியுமா?”

“நிசாவும், வினோதும் எனக்கு ரொம்பப் பழக்கம். நிசா ஸ்டேட்ஸ்ல, ‘தியேட்டர்’ ஸ்டடீஸ்க்கு வந்திருந்தா, எதோ ஸ்காலர்ஷிப்ல. வினோத் அருமையான ஆக்டர். ரெண்டு பேரும் டெடிகேஷனோட ஈடுபட்டவங்க. ஸஃப்தர் ஆஷ்மியக் கொன்னாப்புல அவனக் கொன்னிட்டாங்க… இந்த நிறுவனங்களுக்கு எதிரா, தட்டிக்கேட்டா, உடனே தீவிரவாத முத்திரை விழுந்திருது. அதுவும் செப்டம்பர் 11க்குப்பிறகு, இந்த பயம், நிரபராதிகளையே தீவிரவாத விலங்குக்குள் தள்ளுது… அதா, ரொம்ப கவனமாச் செய்ய வேண்டியிருக்கு. அப்ப எனக்கு, ஐ மீன், அநு ஆண்டியோட பேசுறப்ப, நீங்க இங்க வந்திருப்பீங்கன்னு தெரியாது. உங்க மகன் வீட்டுக்கு அனுப்பிட்டதாகவும் மயங்கி விழுந்ததாகவும், அம்ருத்சிங் அங்கில் விசாரிச்சிட்டு வந்து சொன்னாராம். அது கூட, உங்க மகன் இறந்த சேதி சொன்னப்ப நீங்கதா இறந்திட்டீங்களோன்னு குழம்பி ஃபோன் போட்டாங்களாம். ரெஸ்பான்ஸே இல்லைன்னாங்க…”

“நாங்க போனதுல, அந்த ஆன்டிக்கு ரொம்ப சந்தோசம். இப்ப நிசாகூட எங்க ப்ராஜக்ட் எதுலானும் ஆக்டிவா செயல் படுறேன்னிருக்கா. அவங்களுக்குப் பூவனூர் போகணும் ஆசை. தாத்தா, அங்கே அவங்க அத்தை அந்த காலத்து ஃப்ரிடம் ஃபைட்டராமே? டி.பி வந்து இறந்து போனாங்களாம்… ரொம்ப ‘டேர் டேவில்’னு சொன்னாங்க ட்வென் டீஸ்ல, வீட்டுக்குள்ள ஒரு தாழ்த்தப்பட்ட அரிசனப் பெண் குழந்தைய எல்லோருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாம கொண்டு வந்து வளர்த்தாளாம்… எங்க சம்பு அத்தைய நான் படத்துலதான் பார்த்திருக்கிறேன். எங்கம்மாவும் அவளும் ஒண்ணா சாப்பிட்டுப் படுத்து, படிச்சி… அந்த காலத்துல தாலுகாபீசு முன்ன போயி, ‘மகாத்மா காந்தி ஜே’ன்னு கத்தினாளாம்?”

பூஞ்சாரல் விசிறி அடிக்கிறது… “அநும்மா, கமலி மகளா நீ?…”

“ஏம் பாட்டி அழுறீங்க…?” “ஒண்ணுமில்ல தாயி, அந்த தயிரியம், நேர்மை, துணிச்சல், எல்லாம் உங்களுக்கு வரும். வந்திருக்கு…”

“என்ன, எல்லாம் பேசிட்டிருக்கீங்க? வாங்க, வாங்க… சுடச்சுட சப்பாத்தி… சப்ஜி, ரெடி… வாங்க, வாங்க தாத்தா, பாட்டி, ஹேய்…”

காலித் கையில் இலைகளுடன் அழைக்கிறான். தலை எண்ணி இலை போடப் படுகிறது.

“எல்லாரும் உட்கார்ந்தால் எப்பிடி? ரொட்டி யார் பண்ணுவாங்க?”

“நாங்க பண்ணிப் போடுவோம். கரம், கரம்…”

“கரமா கரம் வேண்டாம். எல்லாம் பண்ணி முடியுங்க. நாங்க சாப்பிட்டுட்டுப் போடுறோம்.”

மதியம் சமைத்து வைத்த சோறு, குழம்பு சப்பாத்தி, பொரியல், இப்போது செய்த காய்-சப்ஜி என்று கலந்து பரிமாறி, கலந்து பேசி…

அவளை உட்கார வைத்துப் போடுகிறார்கள்.

“அடாடா, வாங்க தம்பி … என்ன கையில?”

“இது, அவங்க, பெரியம்மாவுடைய பை. அதைக் குடுத்திட்டுப் போகலான்னு வந்தேன். அவங்களுக்கும் அவங்க பேத்திக்கும் நன்றி சொல்லணும்…” போலீஸ்காரத் தம்பி… எஸ்.ஐ…

“அடாடா… கைகழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

“நீங்களும் உக்காந்து சாப்பிட்டுப் போங்க தம்பி!” என்று ராமலிங்கம் உபசரிக்கிறார்.

“இல்லீங்க. பிறகு ஒரு நாள் பார்க்கலாம். நான் வீட்டுக்குப் போய் ஆறு நாளாவுது. குழந்தையும் அவளும் என்ன ஆச்சோன்னு கவலப்பட்டுட்டிருப்பாங்க. இப்ப மாசம் வேற. ஆயா, உங்க சேலை, எல்லாம் பத்திரம். பாத்துக்குங்க…”

“ஐயா… என் வெள்ள சீல, அந்தப் பொண்ணு குடுத்தது, சத்தியம், அதக் கற படாம… கொண்டு வந்திட்டீங்க… நன்றி, நன்றி ஐயா !”

(முற்றும்)

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *