கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 192 
 
 

அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-28 | அத்தியாயம் 29-32

அத்தியாயம்-25

சுப்பய்யா வந்து போனது விடியற்காலைக் கனவு போல் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

“நீங்க இங்க விட்டுப் போகாதீங்க. கையில் பிடிக்க வேண்டியதை முழுகவிட்டுட்டேன். இப்ப ஒரு துரும்புதா இது. இதைப் புடிச்சிட்டுப் போராடணும். பழசெல்லாம் அழுகல். இருங்க. இங்கேயே இருங்க. நான் வருவேன். அய்யாவின் வழி… வரும் இளம்பயிரைத் தேடிட்டுப் போறேன். நம்புங்க…” என்று சொல்லிவிட்டுப் போய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இவளை ரங்கன் இப்போதெல்லாம் அதிகமாகக் கண்காணிக்கிறான். லாரியில் செங்கல் வந்து பக்கத்தில் அடுக்குகிறார்கள். தை பிறந்து, மா, புதிய மொட்டுகள் குலுங்க நிற்கிறது. அடிபருத்து வாடிய இலைச்சருகுகளும் பூச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை உண்டு என்று பூத்திருக்கிறது. அதைப் பார்த்து விட்டு நம்பிக்கை கொள்கிறாள்.

வங்கிக்குச் சென்று செலவுப் பணம் எடுத்துக் கொண்டு வருகையில், காந்திபிறந்த மாநிலத்தில், பூகம்பம் வந்து குஞ்சு குழந்தை நல்லவன் கெட்டவன் என்று பாராமல் பலி கொண்டது போதாதென்று மதக்கலவரம் பற்றி எரியும் செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைத் தலைப்பு என்று கடை விரிக்கின்றன. வெளியில் வரும் போதுதான், அன்றாட, வண்டி சாவு, தீப்பற்றி எரிதல், குத்து வெட்டு கொலை கொள்ளை எல்லாம் உணர்வில் குத்துகின்றன. இப்போது எல்லாம் கேட்டுப்பழகினாற்போல், மரத்துப் போயிருக்கிறது. முன்பெல்லாம், அங்கே அநீதி இங்கே அக்கிரமம் என்று போராட்டங்கள் பற்றிக் கேள்விப் படுவாள். சர்வோதய அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவளை அழைத்துக் கொண்டு கோட்டை முன் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். “அணுகுண்டு வேண்டாம்; இன்னொரு சண்டை வேண்டாம். மனிதர் ஒற்றுமையுடன் வாழ்வோம்…” என்றெல்லாம் கோசங்கள் வைத்தனர். யார் யாரோ இவளுக்கு முகமறியாத ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வேலை செய்யும் பெண்கள். ராமலிங்கம்தான் இவளை வந்து கூட்டிச் சென்றார். அந்த ஏழைத்தாயின் மகனுக்கு நியாயம் வேண்டி அழைத்து வந்த இராமலிங்கம். மணிக்கூண்டின் பக்கம் ஒரு கடை மாடியில் இருக்கிறார். அவர்தாம் சுப்பய்யாவுக்குச் செய்தி தெரிவித்தவர். மனைவியும் இறந்து, மகனும் வேற்று மதத்துக்காரியைத் திருமணம் செய்து கொண்டு போனபின் ஒற்றையாக, ‘சர்வோதயம்’ என்ற இயக்கத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்க்கப் படி ஏறுகையில், கீழே வரிசையாக இருக்கும் கடைகளில் ஒன்றான ‘பேக்கரி’யின் ஆள், “யாரம்மா? மேலே எங்கே போறீங்க?” என்று கேட்கிறான்.

“ராமலிங்கம்னு வழுக்கைத் தலை; உயரமா, முன்ன வங்கில இருந்தாங்க…”

“அவுரு இப்ப இங்க இல்லம்மா. ரூமைக் காலி செய்திட்டுப் போயிட்டாங்க!”

‘போன மாசம் பாத்தேனே?”

“ஆமாம்மா, அவுரு சொந்த ஊருக்குப் போயிட்டாரு. இப்ப அந்த ரூமெல்லாம், ‘பிரைட்’ ஒட்டல்காரரு எடுத்திருக்காரு…”

சுப்பய்யா துரும்பு என்றான், துரும்பும் நழுவிவிட்டதா? மனது சோகமாக இருக்கிறது.

திடீரென்று ஏன் போனார்? செய்யாத குற்றத்தைப் போட்டு ஒரு ஏழைப்பையனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்ததை எதிர்த்துக் கேட்கச் சொன்னாரே, அதற்காக அவரையும் வெருட்டினார்களா? இந்த இடம் வேண்டாம் என்று போய்விட்டாரா?

அவள் மடியில் பணத்துடன் உச்சி வேளை கடந்து விடுவிடென்று வீடு திரும்புகையில், உள்ளே ஆளரவம் கேட்கிறது. வாயில் வராந்தா கம்பிக் கதவு உள் பக்கம் பூட்டியிருக்கிறது. சுற்றிக் கொண்டு அவள் பின்புறம் செல்கிறாள். இரண்டு மூன்று ஆட்கள் வந்திருக்கின்றனர். பெரிய மாமரத்தின் கிளைகளை வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். பூவும் இலைகளுமாக ஒட்டக்கழிபட்டு மொட்டையாக நிற்கிறது. ரங்கன் பெரிய கிளையை இழுத்துக் கொண்டி ருக்கிறான். அவளுக்குப் பகீரென்கிறது.

பின்பக்கம் செல்லும் போதெல்லாம் சிநேகமாக விசாரிக்கும் மாமரம். அது எத்தனை, காய், கனிகள் கொடுத்திருக்கின்றன ? கண்ணமங்கலத்திலிருந்து வந்த சொத்து அது. காய் குடம் குடமாக இருக்கும். பழுத்தால் அப்படி ஒரு இனிப்பு. ஊரிலிருந்து வந்த பழத்தைத் தின்று, கொட்டையை ராதாம்மா குழந்தையாகப் புதைத்துத் துளிர்த்து வளர்ந்து கனி கொடுத்த மரம்.

“ஏம்ப்பா இதை வெட்டுறீங்க? நிறுத்துங்க? ஆயியப்பனை வெட்டுறதுக்குச் சமானம். ஏன் ரங்கா ? இப்படி அழிச்சாட்டியம் பண்றே? அது உன்னை என்ன செய்தது?”

“சேர்மன் சார்தான் வெட்ட சொன்னாரு. இது பூச்சி புடிச்சிப் போயி நிக்கிது. வெறும் குப்பை, கிட்ட போக முடியல…”

“அதுக்காவ? உன் ஆயியப்பனுக்கு நோவு வந்தா இப்பிடித்தான் வெட்டுவீங்களா? சேர்மன் சொன்னாராம்? யார்ரா அது சேர்மன், போர்மன் ? விட்டுடுங்கையா, உங்கள கையெடுத்துக் கும்புடறேன்!” அவள் அந்தக் கிளைகளின் நடுவே நின்று கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

“கிழவி, இந்த சென்டிமண்ட், நாடகமெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத நா அவுரு ஆளு. அவுரு சம்பளம் குடுக்கிறாரு இன்னிக்கு மரத்த வெட்டுன்னாரு நா செய்யிறேன். நீ தடுக்கணும்னா அவருகிட்டப் போயி இதெல்லாம் சொல்லு…”

துயரம் தாளாமல் மண்டுகிறது.

‘மரத்தை வெட்டுற கன்ட்ராக்டர்கள் வந்தால், பொம்புளங்க சுத்தி மரத்தைக் கட்டிப்பாங்க. எங்கள வெட்டிட்டு மரத்தை வெட்டுங்கம்பாங்க… அப்படி ஒரு இயக்கம் இருக்கு. அதுல தான் ராதாம்மா புருசன் இருக்கறதாச் சொன்னாங்க…’

“தம்பி! இங்க வாங்க! எங்கேயோ நடக்குற அநியாயம் இல்ல. உங்க வூட்டிலியே நடக்குது.” என்று அழுகிறாள்.

சோறு பொங்கி வைத்துவிட்டுப் போனாள். சோறெடுக்கத் தோன்றவில்லை. இன்று மரத்தை வெட்டுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும்?…

வாசலில் நின்று வெறித்துப் பார்க்கிறாள். வெயில். பார வண்டிகள், கட்டடம் கட்டும் சாதனங்கள் சுமந்து செல்லும் அந்த கிளப்பும் புகை, புழுதி எல்லாம் அவள் இயலாமையை மேலும் கூர்மையாக்குகின்றன. அப்போது தெருவில் செல்லும் பெண் ஒருத்தி, புன்னகையுடன் அவளை நோக்கி, ‘நமஸ்தே’ என்று கைகுவிக்கிறாள். கருத்து, மெலிந்த உடல், கன்னங்கள் பூரித்தாற்போல் முகம் இருந்தாலும், தாடை எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. அடர்த்தியில்லாத முடி பின் கழுத்தோடு கத்திரிக்கப் பட்டிருக்கிறது. கண்களில் ஒரு நம்பிக்கையொளி. கைத்தறிச் சேலை; வெட்டு, ஃபிட்டிங் இல்லாத ரவிக்கை நகை நட்டு எதுவும் இல்லை. காதுகளில் சிறு வளையங்கள்.

“நா உள்ள வரட்டுமா?…”

கம்பிக் கதவை நன்றாகத் திறக்கிறாள். “வாம்மா, நீ யாருன்னு எனக்குத் தெரியல. இந்தப் பக்கத்தில பார்த்ததா நினப்பில்ல. புதிசா, அங்கே கிழக்கே நிறைய வீடுகள் கட்டி வந்திருக்காங்க. நீ யாரத் தேடி வர ? யாரும்மா ?”

இவள் ஆவலும் பரபரப்பும் கட்டுக்கடங்காமல் போகிறது.

“நாங்க மேற்கே, புதிசா இருக்கும் எக்ஸ் ஸர்விஸ் காரங்களுக்கான காலனிக்கு வந்திருக்கிறோம். வந்து ஒரு மாசம் தானாகுது…”

“ஓ, அப்ப… உங்க…” என்று கேட்குமுன் இதயம் வலிப்பது போல் இருக்கிறது. கார்கில், அங்கே இங்கே என்று போர் வந்து அன்றாடம் வீரர்களின் உடல்களைச் சுமந்து பெட்டிகள் வந்தன. இந்தக் குழந்தையைப் பார்த்தால் முப்பது வயசு இருக்காது. அதற்குள்…

“இங்க யாரம்மா இருக்காங்க?”

“அம்மா இருக்காங்க. அவங்களுக்கு நடக்க முடியிதில்ல. அதா என்ன அனுப்பிச்சாங்க. வாசல்ல வராந்தா இருக்கும். எதிரே மரமெல்லாம் இருக்கும். சோலையில் நடுவே பெரிய வீடுன்னு சொன்னாங்க. ராம்ஜி மாமா, நா அப்பான்னு கூப்பிடுவேன்னாங்க…”

“கண்ணு? உங்கம்மா பேரு அநுதானே? அநு… அநு… குருகுலத்துல வேலை செய்ய வந்தா. இந்தப் படுபாவி பண்ணின தில்லுமுள்ளுல, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா. அப்ப, உங்கப்பா உங்கப்பா, ரிடயராகி வந்திட்டாங்களா? நீ… நீ… எப்படிடா, அடயாளம் தெரியாம ஆயிட்ட சிவப்பா, தலைநிறைய சுருட்டை முடியும், ரோஜாப்பூ மாதிரி முகமும் இருப்பே… கறுத்து மெலிஞ்சி… கல்யாணம் ஆயிருக்காம்மா?”

“உம். ரெண்டு குழந்தை இருக்கு…”

“அம்மாடி, அந்த ஆண்டவனே, முருகனே உன்னிய இங்க அனுப்பியிருக்காரு. என்ன செய்யுறதுன்னு திண்டாடிட்டிருந்தேன். உங்கம்மாவ நான் இப்பவே பார்க்கணும். இதே வரேன்…”

“இருங்க தாதிமா, நான் போயி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரேன்?”

“ஆட்டோவெல்லாம் எதுக்கு? இந்தப் பக்கம் தானே? நான் நடப்பேன்மா ?”

“இல்ல தாதிமா, கொஞ்ச தூரம் போகணும். நீங்க வயசானவங்க.”

“வயசா? ஏம்மா, நீ வரச்சே, நான் நடப்பேன். அந்தப் பக்கம் தானே போகணும்? அவன் அம்பது நூறும்பான். அடாவடி… அடாடா, உன்னை உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி கூடக் குடுக்காம. கிளம்புறேன் பாரு’ என்று சொல்லி உள்ளே அழைக்கிறாள்.

கூடத்தில் அந்தப் படங்களை அவள் பார்க்கிறாள்.

“ஒ… எனக்கு மங்கலா நினப்பு வருது. இங்கே பெரிய பிரம்பு சோபா… அதில தாத்தா… மடில உக்காத்தி வச்சிப்பாங்க. நான் அவர் கண்ணாடிய எடுத்துத் திறப்பேன்…”

அவள் கண்களில் நீர்மல்க, அந்தக் கன்னங்களை வழித்து, நெற்றியில் பொட்டில் சொடுக்கிக் கொள்கிறாள்.

“கண்ணு, பொழுது உச்சிக்கு வந்து இறங்குது. நீ சாப்பிட்டியோ …”

“இனிமேத்தான். குழந்தைகள் ஸ்கூல்லேந்து வர ரெண்டு மணியாகும். சப்ஜி பண்ணி சோறு பண்ணி வச்சிருக்கு. காலம ப்ரக்ஃபாஸ்ட் ஆயிருக்கு…”

‘கண்ணு, ஒரு வாய் தயிர் சோறு தாரேன். சாப்பிடுடா…” அவசரமாகப் பொங்கிய சோற்றில் உறை தயிரையும் உப்புக்கல்லையும் போட்டுப் பிசைகிறாள். ஒரு லில்வர் தட்டு இருக்கிறது. பின்னே சென்று இலையறுக்கும் மனம் இல்லை. இப்படியே, இப்படியே கிடைக்கும் இலக்கு…

தட்டில் சோறும், அப்போது போட்ட நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்துக் கொடுக்கிறாள். பின்புறம் குளியலறையில் அவள் கைகழுவச் செல்கையில் கொல்லையில் மரம் வெட்டுவது தெரிகிறது.

பெஞ்சில் அமர்ந்து கையில் தட்டை வைத்துக் கொண்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். இளநீல வண்ணச் சேலை. தூய வெண்மை ரவிக்கை. ‘சத்திய தேவதையா?’

“நீங்க சாப்பிடுங்க, தாதிமா !”

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நெஞ்சு நெகிழப் பார்க்கிறாள்.

மனது நிறைந்தவளாகத் தானும் மீதிச் சோற்றைப் பிசைந்து சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். அவள் பாத்திரங்களைக் கழுவும் வரை, அந்தப் பெண் கூடத்திலேயே படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இவள் கிளம்பும் போது, ரங்கன் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஊன்றியிருக்கிறான் “சீ! பூச்சிங்க… உடம்பெல்லாம் தடிச்சிப் போச்சி!” என்று கிளைகள் இழுக்கும் ஆள் சொல்கிறான்.

“இதை எப்பவோ வெட்டிப் போட்டிருக்கணும். அப்படித் தள்ளிப்போடு. கிரசின் ஊத்தி எரிச்சிடலாம்.”

காதில் கேட்டும் கேட்காமலும் அவள், “ரங்கா, நா கொஞ்சம் வெளியே போறன். சொல்லாம போயிட்டேன் காத! வாசக்கதவப் பூட்டிக்க!” என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். அப்போதுதான், அவன் அநுவின் மகளைப் பார்க்கிறான்.

“யாரிவங்க? அன்னிக்கு வந்திட்டுப் போனாரு… இது…? என்று அவன் யோசனையுடன் “எங்கேம்மா, இந்த பக்கம்?” என்று கேட்கையில் அவள் விடை கொடுக்காமல் நடக் கிறாள்.

“ஏம்மா, உம் பேர் மறந்திட்டது, உம் பேரென்ன?”

அவள் புன்னகை செய்கிறாள். “நிசா… நிசாந்தினின்னு பேரு. இரவு பூக்கும் பூன்னு எங்கப்பா பேரு வச்சாராம். நான் ராத்திரிதான் பிறந்தேனாம்…”

“ஆமா, பாரிஜாதப்பூ ராத்திரிலதான் பூக்கும். பக்கத்தில் அந்த மரம் இருந்திச்சி. ஒம்பது மணிக்கு கும்முனு வாசனை வரும். இப்பக்கூட இருந்திச்சி. பாம்புவந்திச்சின்னு வெட்டிப் போட்டானுவ… உங்கப்பா இப்ப வீட்டோட இருக்காரா? ரிடயராகி இருப்பாங்க…”

“இல்ல… அப்பா போயிட்டாங்க..”

அவளுக்கு அந்த சாமியார், சித்தப்பா என்று சொன்ன உறவு முறை, அவர் தங்கிய போது, கூறிய செய்தி ஊசிக்குத் தாய்த் தைக்கிறது. இவளிடம் அதையெல்லாம் கேட்கத் தெரியவில்லை. நீள நெடுக சாலையே வந்து இரு புறங்களிலும் குடியிருப்புகள். இடையே வேலைக்காக இடம் பெயர்ந்து குடும்பமும் குட்டியுமாகத் தங்கும் முட்டு முட்டான குடிசைகள்; சாக்கடைகள். ஊர்க்குப்பைகளை எல்லாம் கொண்டு கொட்டும் இடம். ஒரு காலத்தில் ஏரியல்லவா? ‘பாவிகளா! சுற்றுச்சூழல் மாசு என்று சொல்லிக் கொண்டு ! ஈக்கள் மொய்க்கின்றன. நிசா முகத்தை வாயை சேலைத்தலைப்பால் மூடிக் கொள்கிறாள். “சீ, எந்த ஊரிலேந்து இவ்வளவு கழிவையும் கொண்டு கொட்டுறாங்க?…”

‘முகத்தை அதான் மூடிட்டேன். அதனாலதான் ஆட்டோ வச்சிட்டு வரலான்னே…”

அந்த இடம் தாண்டிய பிறகு, சாலையோரங்களில் மரங்களின் பசுமை விரிகிறது. ஒரு பக்கம் கல்லூரி…”

‘இது இன்ஜீனியரிங் காலேஜ், இதுக்குள்ளதான் அம்ரித்ஸிங் அங்கில் இருக்கிறாங்க. அவருதான் இங்க… எங்களுக்கு இடம் ஏற்பாடு பண்ணினார். இதோ. இதான், வாங்க…”

“பரம்வீர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு” என்று எழுதிய வளைவு வாயிலுக்குள் நுழைகிறார்கள். பத்துப் பதினைந்து வீடுகள் தாம் முழுமை பெற்றிருக்கின்றன. வீடுகளைச் சுற்றிய தோட்டங்கள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. வரிசையாகத் தெரியும் வீடுகளில் ஒன்றில் நிசா வாயில் மணியை அடிக்கிறாள். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்காக வாயிலில் ஒரு குழாய் இருப்பதை அவள் பார்க்கிறாள். திருகுகிறாள். தண்ணீர் வருகிறது. கால்களைக் கழுவிக் கொள்கிறாள். கதவை உச்சியில் கைக்குட்டை போன்ற ஒன்றால் முடியைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிங் பையன் திறக்கிறான். ஐந்து வயசு ஆறு வயசு மதிக்கத் தகுந்த ஒரு பெண், பையன் இருவரும் தாயின் மீது கோபம் காட்டும் படி இந்தியில் பேசிய படி அவளுடைய சேலையைப் பற்றிக் கொள்கிறார்கள. “உள்ள வாங்க தாதிமா! நிகில், நித்யா, தாதிமாக்கு பிரணாம் பண்ணுங்க!…”

“அட கண்ணுகளா?” என்று குழந்தைகளைத் தழுவி முத்தமிட்டுக் கொள்கிறாள். மட்டியாக, வெறுங்கையுடன் வந்திருக்கிறாளே?. அடாடா, ஏம்மா, இங்கே பக்கத்தில கடை ஏதானும் இருக்கா? நீ கூப்பிட்ட, உடனே ஓடி வந்திட்டேன்…”

“இங்க பக்கத்தில காலேஜ் காம்பஸில இருக்கு…”

“அப்ப, நீ வழிகாட்டுறியா போயி மிட்டாய் வாங்கிட்டு வாரேன்…”

“நோ, தாதிமா, நானே சைகிள்ள போயி வாங்கிட்டு வாரேன். என்ன வாங்கட்டும், கேக், மிட்டாய்…”

“எதுனாலும் வாங்கிட்டு வா தம்பி” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். அதற்குள் அநு, அவளைப் பற்றிக் கொண்டு, முன்னறைக்கு வந்து விடுகிறாள்.

“அம்மா என்ன இது….?”

“தாயம்மா…”

அவள் தாவிப் பற்றிக் கொள்கிறாள்.

அநும்மா…!

அடர்ந்து கறுத்த முடி, நரைத்து முன்புறம் மண்டை தெரிய, முகம் முழுதும் வாழ்க்கையின் அதிர்வுகளையும் சோகங்களையும் தாங்கிய கீறல்களுடன்… பல்வரிசை பழுது பட்டு… அந்த அநுவா?…

“அம்மா…? என்னம்மா இப்படி? அடையாளமே தெரியலியே முன்னறைச் சோபாவில் உட்கார்த்தி வைக்கிறாள்.

நிசா குழந்தைகளை அழைத்துச் சென்று, ரொட்டி தயாரிக்க முனைகையில், “நாங்க ரொட்டி சப்ஜி சாப்டாச்சி?” என்று குழந்தைகள் குரல் கேட்கிறது.

“நிசா, அமர் என்னமா ரொட்டி பண்ணுறான்? நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சி. உனக்குப் பரோட்டா பண்ணி வச்சிருக்கிறான் பாரு!”

“அட…?”

நிசா ரொட்டி சப்ஜி தட்டுடன் வருகிறாள்.

அத்தியாயம்-26

“நீங்க சாப்பிட்டீங்களா, அம்மாஜி ?”

“ஆச்சும்மா. நீதான் மாவு பிசைஞ்சு வச்சிட்டுப் போயிருந்தே. அவன் மடமடன்னு ஃபுல்கா பண்ணிப் போட்டுட்டான். உனக்கு பரோட்டா பண்ணி வைக்கிறேன்னான். வாணாம்பா, அவ வந்தா சூடா பண்ணிப்பான்னேன். கேக்கல. பைங்கன் பர்த்தா பண்றேன்னு பண்ணி வச்சிருக்கு பாரு?” இவளுக்கு பக்கத்தில் குடியிருந்தவருக்கு நண்பராக வரும் சிங் குழந்தைகள், மனைவி நினைவு வருகிறது.

“ஏம்மா, இந்தப் புள்ள யாரு?”

அதற்குள் சைகிளில், கேக், மிக்ஸ்சர் வாங்கிய பையுடன் அமர் வந்து விடுகிறான்.

“டபிய்…? ப்ளம் கேக் வேணுமா, செர்ரி கேக் வேணுமா? இவன் துக்கிப் பிடிக்குமுன் இரு குழந்தைகளும் ஒடி வருகிறார்கள்.

“எனக்கு…! எனக்கு…!”

“தாதிமாக்கு!”

அவள் வாங்கிக் கொள்கிறாள்.

பையில் ஒரு பெட்டியில் இருவகை கேக்குகள் – ஆறு – ஆறு என்று பன்னிரண்டு இருக்கின்றன. ஒன்றை எடுத்து அவள் பெண் குழந்தையிடம் – நித்யா – வாயைக் காட்டு கிறது, அவள் ஊட்டுவது போல் கொடுக்க, பற்றிக் கொள்கிறது. பிறகு பையனுக்கு. இந்தா தம்பி – உன்பேர் அமாரா?…. அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா?” என்று கூப்பிட்டு அவளுக்கு ஒன்றைக் கொடுக்கிறாள். அவளும் வாயில் வாங்கிக் கொள்கிறாள். பிறகு இன்னொரு துண்டை அதுவின் வாயில் வைக்க, அது கண்ணீருடன் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு துண்டை அவளுக்கு ஊட்டுகிறாள்.

ஆண்டவனே! நீ இத்தனை கருணையுள்ளவனா? இந்தச் சின்னச்சின்ன செய்கைகளில், இவ்வளவு மனநிறைவு கிடைக்குமா?

“இந்தப் புள்ள யாருன்னு சொன்னம்மா?.”

“பக்கத்து இன்ஜீனியரிங் காலேஜ் இல்ல; அதுல புரொபசரா இருக்காரு. இவங்க மாமா கிரணோட நெருங்கிய சிநேகிதர். ஏர்ஃபோர்ஸில் இருந்தார்… அவர் மூலமாத்தான், இந்த இடமே எனக்கு செய்து குடுத்தாங்க..”

“அப்படியா ? இவுங்க எத்தினி நாளா இங்க இருக்காங்க?”

“இருக்கும் எனக்கே தெரியாது. பத்து வருசமிருக்கும்னு நினைக்கிறேன். தாயம்மா…?”

குரல் உடைந்து கண்ணீர் வழிகிறது.

“கடைசில ஒரு தீச்சொல்லைச் சொல்லி… நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன். நானே… நானே…” அவள் குலுங்கும்போது இவளுக்கு ஏதோ புரிகிறது; புரியவுமில்லை.

“நீ என்னம்மா சொல்ற…”

“ஆமாம் தாயம்மா, இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை. என் குழந்தையை எடுத்திக்கிட்டு நான் போறேன். இனிமே நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம். நீங்க என் புருசனும் இல்ல, என் குழந்தைக்கு அப்பாவும் இல்லன்னு கத்தினேன். தாயம்மா, உனக்கு மன்னிப்பே இல்லைன்னு போயிட்டாங்க. அவரை நான் மன்னிக்க மாட்டேன்னேன். அவரு நீ மன்னிக்க வேண்டாம், உனக்கும் மன்னிப்பில்லேன்னு…” குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

தோட்டக்கதவுத் தாழ் அகற்றும் ஒலி கேட்கிறது.

உள்ளே வருபவர்கள், சிங்கும் மனைவியும்…

“பிரணாம் மாதாஜி! ஞாபகம் இருக்குதா? நீங்க கோலம் போடச் சொல்லிக் குடுத்தீங்களே…?”

“அம்மா… தேவா அங்கே வந்திருந்தபோது வருவோமே?…”

அப்ப… அப்ப… அநும்மா… அந்த அவரு…

மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அரும்புப் பற்கள் தெரியச் சிரிக்கும் கோலம் தோன்றுகிறது.

“உங்களுக்கு, மக்க மனுசங்க? …”

“எல்லாம் இருக்காங்க…”

அதற்குமேல் அவள் கேட்கவில்லை. கேட்கவில்லை…

“அநுவுக்கும் புருசனுக்கும் சரியில்லை. அவங்க பிரிஞ்சிட்டாங்க..” சாமியார் சொன்ன சொல்…

“அப்பா, அவர் திடும்னு வந்துட்டார். எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியல. அனுப்பி வச்சேன்…”

“அநும்மா, நிசாவின் அப்பா பேரு என்ன சொன்ன ?…”

“கிரண்ணு வீட்ல சொல்லுவாங்க. சூர்ய கிரண் தேவ்னு பேரு. இவங்கல்லாம் தேவான்னு தான் கூப்பிடுவாங்க.”

“சிங்கு, ஏம்மா, உங்க பேரு தெரியல. நீங்கல்லாமும் எனக்கு எதுவும் சொல்லாம இருந்திட்டீங்களே?…”

“எங்களுக்கு எப்படித் தெரியும் மாதாஜி?… அவரே அங்கே வந்து தனியா இடம் பார்த்துக்கிட்டு வந்துதான் சொன்னது.”

“எல்லாம் என் பாவம்…”

“மாதாஜி, நீங்க இப்பவும் இங்கே இருக்கலாம். பக்கத்தில் வந்திருக்கிறீங்க. அநுபஹன் ரொம்ப ஒடிஞ்சி போயிட்டாங்க பாவம்… ரொம்ப… அவங்களுக்கு வந்த மாதிரி கஷ்டம் ஆருக்கும் வராது, வரக்கூடாது…”

நாங்க அந்தப் பக்கம் பைக்ல போவோம், நீங்க சில நாளைக்கு நிப்பீங்க.

“ரொம்ப நன்றி அய்யா. இந்த தேசத்துல, எல்லாம் கந்தலா குளறு படியா மனுச உறவே இல்லாம போகும் போது, நீங்கல்லா இருக்கீங்க. உங்க பய்ய ஒடிப் போயி கேக்கு வாங்கியாந்து வாயக்காட்டி வாங்கிட்டா. நல்லா இருக்கணும்… புது நாத்துங்க. நா இனி அடிக்கடி வருவே…”

“நாங்க வரோம் மாதாஜி.”

அவர்கள் மறுபடியும் வணங்கி விடைபெறுகிறார்கள்.

அவர்கள் சென்றபின், இறுக்கம் தளர்ந்து, மீண்டும் இறுக்கமாகும் உணர்வுகளில் நினைவுகளில் அவள் மிதக்கிறாள்.

“தாயம்மா, எங்கள்ள எந்த பூசை வழிபாடு செய்தாலும் ஒருவரி கடைசியில் வரும். தெரிந்தும், தெரியாமலும் அறிந்தோ அறியாமலோ நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் என்று கடவுளிடம் சரணடைவது போல் இருக்கும். சிறுபிள்ளைகளில் தும்பியைப் பிடித்து சிறகடித்துத் துடிப்பதைப் பார்க்க, பசுங்கன்றின் உடலில் சிறு கல்லை வீசி அதன் உடலில் சிலிர்ப்பலைகள் பரவுவதைப் பார்க்க என்று துன்பம் செய்வார்கள். நானோ…

“தாயம்மா, உங்களுக்குத் தெரியுமோ, என்னேமா? உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட்கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக-பார்ட்டி, ஆடம் பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக்கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார். சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்… தாயம்மா…!”

முகத்தை மூடிக் கொண்டு அவள் விம்முகிறாள்.

“அவுரு குடிக்கிறாரு பாட்டில் இருக்கு…”

“அந்த பாட்டில்ல இஞ்சி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்ட ரசம் குடுப்பேன்…”

பனிப்புகையாய் காட்சிகள்.

“மக்க மனிசா இருக்காங்களா?”

“இருக்காங்க… அந்தச் சிரிப்பில் எதுவுமே தெரியவில்லை. பழகுபவரிடம் அந்தச் சிரிப்பே ஒட்டிக்கொண்டது.”

“சித்தி அவரைக் கல்யாணம் பண்ணின்ட பிறகு, என்னை ஆயாவிடம் விட்டுவிட்டு அவளும் அப்பாவுடன் வெளியே போவாள். அப்பதான் மாமா என்னை நாக்பூருக்குக் கூட்டி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தங்கவில்லை. அவர் அங்கே ‘இங்கிலீஷ்’ ஹைஸ்கூலில் டீச்சராக இருந்தார். மாமியும் சரஸ்வதி வித்யாலயத்தில், பிறகு, எனக்குப் பத்து வயசான பின் வேலை செய்தார். கிரண் குடும்பம் ஒரு வகையில் மாமிக்கு உறவுதான். கிரண் அப்பா பண்டாரா கார்டைட் ஃபாக்டரியில் வேலையாக இருந்தார். கிரண் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தான். என் தம்பிகள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் படிப்பு முடித்து, லிட்டரேச்சர் எம்.ஏ. பண்ணினேன். டெல்லியிலேயே பப்ளிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப, அப்பாவுக்குக் குடியினால், உடம்பு கெட்டுவிட்டது. பி.பி., ஷூகர்… ஏறி, ஒருதரம் ‘மைல்ட்’ அட்டாக்கும் வந்ததால், சித்தி ரொம்பக் கட்டுபாட்டில் வைத்திருந்தாள். அதோடு, பக்தி மஞ்சரியாகி விட்டாள். பெரிய மனிதர் வீட்டு, மேம் சாப்கள், பஜனை செய்வார்கள். ‘கிட்டி பார்ட்டி’ சீட்டாட்டம், இதெல்லாம் தலைநகர் நாகரிகம். கிரண் அப்போது டெல்லியில் இருந்தான். சாதாரணமான பழக்கம், அவனை, சித்தியின் பஜனைக் குழுவில் ஒருத்தனாக அடிக்கடி ஞாயிறு பஜனைகளில் வரச் செய்தது. நல்ல குரல். தமிழ், ஹிந்தி, வெஸ்டர்ன் என்று பாடுவான். எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நாக்பூர் வாழ்க்கை, எளிய நூல் சேலை வாழ்க்கை அது ஒரு ‘மிடில் கிளாஸ்’, சாதாரண, பந்தா இல்லாத மனிதர் கொண்டது, எனக்கு அது பிடித்திருந்தது. ஞாயிறென்றால் கிரண் காலையிலேயே வருவான். நாங்கள், கலை இலக்கியம், சினிமா என்று பேசுவோம். ‘பிடிச்சிப் போச்சு, கல்யாணம் பண்ணிடுவோம்’னு தீர்மானித்து, டெல்லியிலேயே நடத்திவிட்டார்கள். அப்ப என் தாத்தா கூட இருந்தார். ஆறுமாசம் கழிச்சுத்தான் செத்துப்போனார்.

“ஆனால், அவருடன் டெல்லி குவார்ட்டர்ஸில் குடித்தனம் பண்ணப்போன பிறகுதான், அந்த வாழ்க்கை புரிந்தது.”

“என்ன சொல்ல தாயம்மா! சாயங்காலம்னு ஒண்ணு வரதே, கிளப்புக்குப் போகத்தான். என்னைப் போலிருந்த மனைவிகளும் போவார்கள். பார்ட்டி… குடி, கூத்து…

“முதல் நாள் ‘திருமண பார்ட்டி’ கொண்டாட்டமே எனக்கு வெறுப்பாகிவிட்டது. ‘என்னை ஏமாத்திட்டீங்க! சீட், ரோக்’ன்னெல்லாம் கத்தினேன். அழுதேன். வீட்டுக்கு வந்து சித்தியிடமும் அப்பாவிடமும் சண்டை போட்டேன். ‘ரிலாக்ஸ், அது, ராணுவம் கட்டுப்பாடான வாழ்க்கை. பார்டர் ஏரியாவில், அவர்கள் இந்த நாட்டைக் காக்கிறார்கள். உத்தமமான பணி. கிரண் நல்ல பையன். நீ அவனோடு இருந்து மாற்றலாம். எதோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வது உள்ளதுதான்…”

கிரண் அன்றே வந்து, அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான். அப்படியும் இப்படியுமாகச் சில மாசங்கள்…

கர்ப்பமானாள். அப்போது பங்களாதேஷ் நெருக்கடி. இவளுக்கு சித்தி வளை காப்பு செய்தாள். பட்டு சரிகை, நகை, எதுவும் இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே ராம்ஜி மாமா குடும்பம் அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய வளைகாப்பு சமயத்தில் அவர் டெல்லி வந்திருந்தார். சித்தி திட்டினாள். “காது மூக்குன்னு ஒரு நகை இல்லை. அந்த காலத்துலதான் கதர் கட்டிண்டு அழுமூஞ்சி மாதிரி இருந்தே, இந்தப் பட்டெல்லாம் நம் நாட்டுதுதானே? காது வளையத்தைக் கழற்றி எறி. உன் அம்மாவின் தோடு, நகை எல்லாம் போட்டுக்கணும்” என்று போட்டாள். அப்ப கூட அழுதேன்.

“ராம்ஜி மாமா, நீங்க சொல்லுங்க! இந்த சமயம் என் சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா ?”

“ரெண்டும்தான். ஒரு நாளைக்குத்தானேம்மா ? ‘விட்டுக் கொடு’ன்னார். அந்த முதல் பிரசவம், ஏழு மாசத்திலேயே குழந்தை பிறந்து தங்கல. கிரண் சண்டிகர்ல. இருந்தார். இதே வாழ்க்கைதான். “இனி இல்லைம் பாரு. குவார்ட்டர்ஸ். காலைக்கெடுபிடி… ஒரே மாதிரி சூழல், தடித்த லிப்ஸ்டிக், கையில்லாத ரவிக்கை, பளிரென்ற ஆடைகள், கம்பளிப் பின்னல்கள், பார்ட்டி, டின்னர், அது, இது… எல்லாம். உடனே மறுபடி கர்ப்பம். அப்போது மாமா வந்து நாக்பூருக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதான் ஆஸ்பத்திரியில் இவள் பிறந்தாள். ஒடி வந்தார். சந்தோசமாக, குழந்தையைத் தூக்கினார். “அநு, பழைய கிரண் இல்ல. புதியவன், நான் ஒரு தந்தை, நீ அம்மா”ன்னு கண் கசிந்தார், ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் குணமதை வேறொடு சாய்ப்போம்’ன்னு பாடினார். அந்தக் குரலில் மயங்கிப் போனேன். புதிய நம்பிக்கையுடன், குழந்தையையும் எடுத்துக் கொண்டு, பெங்களுருக்குப் போனேன். மாமாவும் மாமியும் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள், புதிய இடத்தில் எதுவும் தெரியல. சண்டைக்காலத்தில், எல்லைப் புறங்களில் ‘டென்ஷன்’ ஆனால் அதெல்லாம் இல்லாத போதுமா?

“மாலை நெருங்கும்போதே எனக்கு டென்ஷன். இரவு வரும் வரையிலும் அது ஏறி வெடிக்குமளவுக்கு வரும். அழுவேன். திட்டுவேன். குழந்தைக்கு ஒன்றரை வயசு முடிந்த சமயம். ஒருநாள் இரவு குடிச்சிட்டு டுவீலர்ல வரப்ப எங்கேயோ மோதி, தலையில இரத்தக்காயம். கட்டோடு வந்தார். நான் எப்படித் துடிச்சிருப்பேன்னு பாத்துக்குங்க! நான் எந்த முடிவும் எடுக்க வேண்டி இருக்கல. அன்னிக்குத்தான் அப்பா ‘அட்டாக்’ வந்து செத்துப் போன தகவல் வந்தது. சித்திக்கு நான் கிரண் மேல் குற்றம் சாட்டியது பிடிக்கல. எல்லாம் சரியாயிடும். உங்கப்பா, ஒண்னுமில்லாம வீட்டில வச்சிண்டே குடிச்சார். ஒரு அட்டாக் வந்தப்புறம் நானும் எப்படி எப்படியோ வழிக்குக் கொண்டு வந்தேன். இந்தக் காலத்தில் காந்தி சமாசாரம் எதுவும் செல்லு படியாகாது. நிவீணா உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்காதே. சர்வீஸ்ல இருக்கறதுன்னா இப்படி இருக்கத்தான் இருக்கும்…”

“ஆனால், என்னால சகிச்சிக்க முடியல. ஒரு நாள் கண்டபடி திட்டிட்டு, ‘நீ சத்தியத்தை மீறுறவன். எனக்குப் புருசனும், என் குழந்தைக்கு அப்பாவும் வேண்டாம்னு கிளம்பிட்டேன். நாக்பூருக்குப் போனேன். மாமாவின் உபதேசம் பிடிக்கல. அப்ப பவனாரில் வினோபா இருக்கிறார். அங்கே போய் ஒரு மாசம் இருந்தேன். பிரஸ்ஸில் வேலை செய்தேன். பஜாஜின் மனைவி, பெரியம்மா இருந்தார். பிரார்த்தனை, கூட்டு யோகம். எதிலும் மனசு ஈடுபடல… அங்கேருந்து தான் ராம்ஜியின் குருகுலத்துக்கு வந்தேன்…”

அவள் எங்கோ பார்க்கிறாள்.

“ ‘இன்னும் ஒரே ஒரு தடவை எனக்கு சந்தர்ப்பம் குடு அநு, ஒரே ஒரு தடவை!’ன்னு கெஞ்சினார், நாக்பூர் வந்து. நான் கேட்கல தாயம்மா, கேட்கல… ‘சந்நியாசி’ சித்தப்பாக்கு நான் கடைசி காலத்துக்கு ஒரு கால் கட்டா இருந்தேன் காங்டா குருகுலத்தில் நான் டீச்சராகச் சேர்ந்தேன். இதுவும் படிச்சது… அதுக்கப்புறம்…”

“அம்மாஜி, கஸ்தூரி வீட்டுக்குப் போறேன்றா…!” நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஓ… மணி ஆறரை ஆயிட்டுதா? மணி ஆனதே தெரியல… தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகனுமா? இங்கே இருங்களேன்?”

இவள் சங்கடப்படுகிறாள். அவள் நினைத்து வந்த இலக்கு இப்போது இன்னும் சிக்கலாக இருக்கிறது. என்றாலும், இப்போது முடிவெடுக்க முடியாது. “நா, நாளைக்குக் காலம வரேன் அநும்மா, அங்க ஆளுவ வந்து மரம் வெட்டிட்டிருந்தானுவ ஆள்தான் பாத்துக்கறான். நா, உதவாம என்ன செய்யப் போற? கடசீ காலத்துல, அந்தத் தம்பி…”

நெஞ்சு கமறிக் கண்ணிர் தழுதழுக்கிறது.

“சொக்கத்தங்கம். இந்தக் கேடு கெட்ட உலகத்துல, இப்பிடி ஒரு மனிசன் இருக்க முடியாதுன்னு ஆண்டவன் அழச்சிட்டாருன்னு நெனப்பே… விதி… விதிம்மா!… பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு… உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா…!” என்று வருந்துகிறாள்.

குழந்தைகள் டாடா காட்டி விடை கொடுக்க, நாள வரேன் என்று சொல்லி வெளி வருகிறாள்.

இருட்டு வரும் நேரம். அவள் சூழலின் நினைவின்றி நடக்கிறாள்.

அத்தியாயம்-27

பின்னால் விடுவிடென்று சத்தம் அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது…

“மாதாஜி, பிரணாம். நான்தான்!” தாடி, தலைப்பா… “அமாரின் அப்பா.”

“நான் கூடவரேன். இருட்டிப் போச்சி. வழியில கண்ட கஸ்மலங்கள்…”

அவள் சிரிக்கிறாள். “சிங்கு, நீங்க இந்தத் தமிழெல்லாம் பேசுறீங்க?” அவனும் சிரிக்கும் ஒலி கேட்கிறது. “கஸ்மலம்’ங் கறது சமஸ்கிருத வார்த்தை மாதாஜி. அப்படின்னா அழுக்கு, கச்சடான்னுதான் அர்த்தம். இங்க சென்னை பாஷையில, எல்லாம் இருக்கு. “டாப் கயன்டுபூடும், வெத்ல பேட்டுக்குவ… தெரிமா…!” என்று சொல்லி ரசித்துச் சிரிக்கிறான்.

“அதெல்லாம் வாணாம் சிங்கு, எனக்கு இத்தினி நாள் நீங்க இங்க இருக்கிறதே தெரில… இங்க ஏரி இருந்திச்சி. ஏரிவரையிலும் கூட வருவேன். இந்த வூடு இடிக்கிற சனங்கள்ளாம் அங்கங்க கீத்து மரச்சிட்டு குடி இருக்கும்.”

நாற்றம் வந்து விட்டது. முகத்தை மூடிக் கொண்டு நடக்கிறார்கள்.

ஆட்டோ. இரண்டு சக்கர வண்டிகள் போகின்றன. ஒரு பாரவண்டி பளிரென்று ஒளி காட்டி வருகிறது…

“சிங்கு, நீங்க எங்க கடவீதிக்கா வரீங்க? நீங்க பைக்குல போவீங்கல்ல? நடந்து வாரீங்க?”

“உங்களுக்காகத்தா வாரேன், மாதாஜி. உங்ககிட்டப் பேசணும்னு…”

“அப்பிடியா! அநும்மா பத்தித்தான பேசப் போறீங்க? எனக்கு அங்க ஒண்ணும் சரில்ல, சிங்கு. கடசி காலத்துல இவங்களுக்குத் துணையா இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டிருக்கிறன். அவுங்க இன்னைக்கு மரத்த வெட்டுறானுக. நாளைக்கே கடப்பாரைய எடுத்திட்டு விட்ட இடிக்க வரமாட்டானுவன்னு என்ன நிச்சியம்…?ஆமா, சிங்கு, நிசாப் பொண்ணு புருசன் எங்கே இருக்காரு, இப்பல்லாம் துபாய், சவுதின்னு பணம் சம்பாதிக்கப் போறாங்க, அப்படியா?…”

“அதைச் சொல்லதா வந்தேன். மாதாஜி. அநுகிட்ட எதும் கேட்காதீங்க. மனசு சரியில்லாம ஒரு மாதிரி இருந்து இப்பதா நல்லாயிருக்காங்க. தேவா போனபோது, அவங்க அங்கிளுக்கு நாங்க சேதி அனுப்பினோம். அநுவோட பிரதர்ஸ் ரெண்டு பேரும், யு.எஸ். போயிட்டாங்க. அவங்க சித்தியும் டில்லில இல்ல. கருணானந்த சாமியும் போயிட்டாங்க. நிசா, படிச்சிட்டு, ‘நியூதியேட்டர்’னு, கிராமங்களிலெல்லாம் ‘அவேர்னெஸ்’ கொண்டாரத்துக்காக தெருவோர நாடகம் எல்லாம் நடத்திட்டிருந்திச்சி. அதில ஒரு பிஹாரி பையன்… அவனுக்கும் இதுக்கும் லவ்னு சொன்னாங்க. ஆனா, கல்யாணம் பண்ணல. ஒருநா, பிஹார்லதா, தாகூர் ஆளுங்க நாடகம் நடக்கிறபோதே குத்திட்டாங்க. அநு… டெல்லிலதா இருக்கா… எங்க அங்கில் பாத்து, பென்சன், அது இதுன்னு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க. அப்ப இந்த ஷாக்..” இது நடப்பா, கனவா, எங்கே என்று புரியாது அதிர்ச்சியால் அவளுக்கும் கால்கள் இயங்காமல் உறைகின்றன. சில விநாடிகளில் சமாளிக்கிறாள்… முருகா…!

ரெண்டு புள்ளிங்க…

“அது, அநு, வளர்ப்புக்கு எடுத்திட்ட பிள்ளைங்க. தீவிரவாதிங்களால அப்பா அம்மாவைப் பறி கொடுத்தப் பச்சைப் பிள்ளைங்க. பஞ்சாபில ஒரு ஸ்தாபனத்து மூலமா இவ வளக்க எடுத்துக்கிட்ட பிள்ளைகள். அநுவும் நிசாவின், அவ லவர் பையன் சுதாகர் எல்லாரும் சேர்ந்து தான் எடுத்திட்டாங்க…”

எதுவும் பேசத் தோன்றவில்லை.

“மாதாஜி, நீங்க வந்திருந்தால் ஆறுதலாக இருக்கும். இப்பவும், நிசா, அந்த அதிர்ச்சிலேந்து மீளல. பீஹாரிங்க, இதையும் தீவிரவாதின்னு, முத்திரை குத்தி அரெஸ்ட் பண்ணிருப்பாங்க. ஆனா, நல்ல வேளையா, அதெல்லாம் நடக்காதபடி, வேற ஸ்தபானங்கள், சுதாகர் கொலைக்காகக் கண்டனம் செய்த இயக்கங்கள் பாதுகாத்திருக்கு. நிக்கலஸ் சாபுக்குத் தெரியும். நிசாவின் குழந்தைகள்னு சொல்லும். புருசன் இறந்திட்டார்னு, சொல்லும். இந்தப் பக்கம் ஒதுக்குப் புறமா இருக்குன்னாலும், நிசா இப்பகூட ஒரு’என்.ஜி.ஒ.’ இயக்கத்துல இருக்கு. இங்க இன்னும் பழகல. நேத்துத்தாஎங்கோ, ‘எய்ட்ஸ்’ குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பு ஹோம் இருக்குன்னு போயிட்டு வந்தா. அப்பதா உங்களப் பார்க்கச் சொல்லி நான் அனுப்பினேன்.”

வீடு வருகிறார்கள். சிங்கும் வருகிறார்.

“ஏம்மா, காலம போனவங்க… எங்க போறீங்க, யாரு வராங்கன்னு புரியல. ஆட்டுக்கு ஆடு தீவிரவாதி ஒளிஞ்சிட்டிருக்கிறானான்னு தேடுறாங்க. அன்னைக்கு ஒராளக் கூட்டிட்டு வந்து குசுகுசுன்னு பேசிட்டிருந்தீங்க. சோறு பண்ணிப் போட்டீங்க. அவரு பைய எடுத்திட்டுப் போனாரு ஆரைத் தேடிட்டு வந்தாரு, எதுக்கு வந்தாருன்னு புரியல. இப்ப இந்த ஆளு ஆரு?…”

சிங்கு பார்க்கிறார். “க்யாஜி? என்னத் தெரியல? பொத்துரி காலேஜில இருக்கிறேன். தேவா சாப் இருக்கிறப் பஜனைக்கு வந்திருக்கிறேன். புரியல?… நா தீவிரவாதி இல்லப்பா?…”

“இல்ல… இல்ல சாரு, ரொம்ப நாளாயிட்டுதா? அதாகப் போகுது பத்து வருசம். வந்திட்டுப் போயிட்டு இருந்தாதான் புரியும் ஒரு பொண்ணு வந்திச்சி. அதும் ஆருன்னு தெரியல…”

“இது பாரு ரங்கா, அது யாரும் இல்ல. உங்க சேர்மன் அய்யா கிட்ட சொல்லு. அன்னிக்கு வந்தது, சுப்பய்யா. இங்க இருந்த அய்யாவின் தொண்டர். குருகுலத்தில் சேவை பண்ணினவரு, மத்தியானம் வந்தது, அநும்மாவின் மக. போதுமா?…’

‘எனக்கொண்ணுமில்லம்மா, நீங்க சொன்னதை அவங்க கிட்டப் போயிச் சொல்றேன். எனக்கென்ன ?…”

“மாதாஜி, நா வரேன். உலகம் எப்பிடியோ போயிட்டிருக்கு. கவலைப்படாதீங்க… வரேன்…”

சிங்கு போகிறார்.

அவள் அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். உலகில் எத்தனை விதமான துன்பங்கள்! தலை முறைகள் தாருமாறாக வளர்ந்திருக்கின்றனவா ? சாலையில் போகும் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொலை செய்துவிட்டு அந்தப் பழியை ஒரு ஏழையின் தலையில் சுமத்திப் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் தலைமுறை. ஆட்சிக்காரர்களின் அக்கிரமங்களைப் புரிந்து கொண்டு, உரிமைகளுக்குப் போராட இந்த ஏழைகளுக்கு விழிப் பூட்டுவது பற்றிப் பேசுகிறார்கள். வழக்கமாக நடக்கும் கட்சிக் கூட்டங்களில், ஆனால் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் மேடை போட்டுப் பேசும் போது இந்தச் சொற்கள் செவியைப் பிளக்கும். இங்கேயும் கூட நாலைந்து ஆண்டுகள் எதிரே மைதானத்தில், ஜனவரி ஒன்றாந்தேதிக்கு முந்தையராவில் ‘கலை இரவு’ என்று நாடகங்கள், பேச்சு பட்டி மன்றம் என்று நடத்தினார்கள். இவளும் பார்த்திருக்கிறாள். தப்பட்டையைத் தட்டிக் கொண்டு சட்டையின் மேல் இடுப்பிலும் தலையிலும் சிவப்புத் துணியைச் சுற்றிக் கொண்டு பாடுவார்கள். நடிக நடிகையர் பேரைச் சொல்லி, அவருக்குப் பொண்ணு பிறந்தா கொண்டாட்டம், இவங்களுக்குப் பொண்ணு புறந்தா கோலாகலம். ஆனா குடிசையிலே குப்பாயிக்குப் பொண்ணு புறந்தா கள்ளிப் பாலும் நெல்லுமணியுமா?ன்னு கேப்பாருக. ஏழையின் முன் கடவுள் ரொட்டி ரூபத்தில தான் வருவாருன்னாரு காந்தி. எங்க கட்சியே ‘பிரியாணி’ப் பொட்டலத்தாலதா வளருது’ம்பான். ஆனால் இந்த நாடகங்கள் நடக்கும்போதே அக்கிரமங்கள் நடக்கும். விழிப்புணர்வு வந்ததாக இவளுக்குத் தெரியவில்லை. இப்படி நாடகம் போட்டு, மக்கள் விழிப்புணர்வு கொண்டு, ஆதிக்கக்காரர்களை எதிர்க்க மக்கள் கிளம்பி விடுவார்களோ என்றுதான் குத்தினார்களா?…

அந்தக் காட்சியைப் பற்றிக் கற்பனை செய்தாலே உடல் சிலிர்க்கிறது. துவளுகிறது. சங்கிரியைக் குலைத்துக் கொலை செய்த பாதகம்…

இந்த மண்ணுக்கே தஞ்சம் என்று வந்திருக்கிறார்களா?

சூது வாதறியாத பெண், தீவிரவாதிகளால் பெற்றோரை இழந்த பச்சைக் குழந்தைகளைக் கை நீட்டி அரவணைத்து வளர்க்கும் பெருங்கருணை, இந்தக் ‘கசுமால’ மண்ணில் பிழைத்திருக்குமா? இவர்களுக்கும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதா?

இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. மண்டை நரம்புக்குள் பல முரண்கள் பிய்த்துப் பிராண்டுகின்றன. பயங்கள், சோகங்கள், இழப்புகள்… ஏன் இப்படி? மண்ணில் விளையாடியது, அப்பனின் தோள் மீது அமர்ந்து திருவிழா பார்த்து, பரிசலில் ஏறிச் சென்றது, சம்பு அம்மா பிசைந்து ஊட்டிய தயிர்ச்சோறு, மொடமொடவென்ற கதர்ச்சீலை -யணிந்து, ஒரு துணையைக் கைபிடித்தது, பசுமையான தாலி அளித்த பாதுகாப்பு, முதல் பிரசவத்தின் போது, சரோ அம்மாவின் மாமியார் இவளைப் பிடித்துக் குடிலுக்குள் பிரசவம் பார்த்தது, அந்த முதல் அழுகை…

எல்லாமே இன்பமான பொழுதுகள். மாலையில் அந்தக் குழந்தைகள் கழுத்தைக் கட்டிக் கொண்டது, வாயில் கேக் வாங்கிக் கொண்டு, அவளையும் ருசிக்கச் செய்தது, எல்லாமே மனசில் பரமசுகம் அளித்த அநுபவங்கள். ஆனால், ஒரு கையகலத்துணிக்குள் பெண்ணுடம்பின் மானத்தை மறைக்கப் போராடும், அபலையாய், மூர்க்க, வெறியர்களின் சூழலில்… சத்தியங்கள்.

எப்படி? எப்படி?… முருகா! முருகா… முருகா… கண்களை மூடித் தூங்க முயற்சி செய்கிறாள். எல்லாவற்றையும் மறக்க வேண்டும். காலையில் எழுந்து கோபமோ, ஆத்திரமோ படாமல் வீடு துப்புரவாக்க வேண்டும். முருகா, உன்னைக் கூப்பிடுவதைத் தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முருகன் சூரனை ‘சம்ஹாரம்’ செய்யப் பிறப்பெடுத்தார். சம்பு அம்மாவுடனும் கமலியுடனும் சிவன் கோயில் முன்நடக்கும் இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள். சூரனுக்கு ஒவ்வொரு தலையா முளைக்கும். பிறகு, எல்லாம் போகும். மயில் வாகனத்தில் முருகன் அங்கிருந்த வீதிகளில் மட்டும் உலா போவார். இவர்கள் இருந்த தெருவுக்கு வராது. அதனால் சம்பு அம்மா அவர்களை இரவு அழைத்துப் போவாள். அந்த சிவன் கோயில் முன் மைதானத்தில்தான் காங்கிரஸ் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள்… பத்துப் பேர்கூட இருக்கமாட்டார்கள். பயம் தெரியாது. அவளும் கமலியும் உரத்து வந்தே மாதரம் என்று கத்துவார்கள். கமலி இப்போது எங்கு இருக்கிறாள்?

சிறிது நேரம் கூடக் கண்கள் சோரவில்லை. இப்படி இருந்ததே கிடையாது… வாசலில் அடிச் சத்தங்கள் கேட்கின்றன.

பால்வண்டியா போகிறது? பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் தொட்டிகளை அப்படியே இறக்குவார்கள். அருகில் சாக்கடை இருக்கும். வீட்டிலேயே மாடு கறந்தார்கள். இப்போது இல்லை. பின்புறம் நாடார் கடை ஆச்சி மாடு வைத்திருக்கிறாள். அவளிடம் தான் இப்போது உழக்குப் பால் வாங்கி தோய்க்கிறாள்… ஏதேதோ எண்ணங்கள் ஓடுகின்றன…

பேசாமல் கண்ணமங்கலம் போனால் என்ன ?… அழகாயி கோயில் இருக்கும். ஆத்தில் குளித்துவிட்டு அங்கேயே ஏதேனும் வேலை செய்து, பொங்கித் தின்றால் என்ன?…

இரவு முழுவதும் புடைத்த நரம்புகள், மண்டை கனக்கச் செய்கிறது ஊர்… கண்ணமங்கலம் எப்படி இருக்கும்? அய்யாவின் மூதாதையர் ஊர். அங்குதான் அவள் திருமணம் நடந்தது. அழகாயி, ஊர்த் தெய்வம். பக்கத்தில் பாமணி வாய்க்கால். அடுத்த பக்கத்தில் காலம் காலமான பண்ணையடிமைகளின் குடில்கள் இருந்தன. ஊர்ப் பெரியதனக்காரர்கள், மேல சாதி என்பவர்கள், ஒரே ஒரு தெருதான் ஐயமார் தெரு என்று ஒன்று இருந்தது.

நாலைந்து வீடுகள் தாம். ஏறக்குறைய அம்பது அம்பத்தைந்து வருசங்கள். அய்யாவின் பங்காளி – வகை, பெரியப்பா மகன் ஒருத்தர் தான் ஊரோடு இருப்பதாக ராஜலட்சுமி சொன்னாள். இது மிக உகப்பாக இருக்கிறது. விட்டபந்தம் – மீண்டும் தொற்றிக் கொள்ள வேண்டாம். வாய்க்கால்; காவேரி முங்கிக் குளித்து, சீலையைத் துவைத்து மரத்தில் கட்டி உலரவைத்துக் கல்லைக் கூட்டி சட்டியில் பொங்கி…

உடனே வண்டியேறிவிட வேண்டும் என்ற கிளர்ச்சியில் அவள் எழுந்திருக்கிறாள். உட்காரும் போதே தலை சுற்றுகிறது.

இதென்ன.. இப்படி? ஆட்சி…!

கையை ஊன்றிக் கொண்டு சமாளிக்கிறாள். இரவு உறக்கமில்லை என்றால், பின் கட்டைத் திறந்து கொண்டு இயற்கை வாதனையைத் தீர்த்துக் கொள்ளக் கழிப்பறை நாடும் தொல்லை வரும். ஆனால் முதல் நாள் அவள் அப்படியே படுத்திருந்திருக்கிறாள். சுவரைப் பற்றிக் கொண்டு விளக்கைப் போடுகிறாள். கதவுத் தாழைத் திறக்கிறாள். வாயில் படியைக் கடந்தாள். தலை கிர்ரென்று சுற்ற, நிலை தடுமாறுகிறது. விழுந்தது நினைவில்லை.

அத்தியாயம்-28

அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, அவள் வண்டியில் போய்க் கொண்டிருக்கிறாள். அவளை வண்டியில் ஏற்றியது, மங்கலாக நினைவில் நிழலாடுகிறது. ‘ஏம்பா, என்னிய எங்கே கொண்டு போறீங்க?…’ அவள் கேள்விக்குப் பதில் இல்லை. முன்னே யாரோ வண்டி ஒட்டுகிறான். கார்… அவள் தலையை யாரோ பற்றிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார்…? யாரோ ஒரு பெண்…

அவள் உட்கார முயலுகிறாள். ஏதோ இறுக்கிக் கட்டியிருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து விட்டாற்போல் உடல் வெலவெலத்துத் துவளுகிறது… முருகா…! இது என்ன பயணம்?…

கண்களை மூடி மூடித் திறக்கிறாள்.

“அப்பவே புள்ள வந்து கூட்டபோது மருவாதியாப் போயிருக்கலாம்ல! இப்பபாரு. காலம வந்து பாக்குற. கதவு துறக்கர உள்ள பூட்டிருக்கே. பின்னால வந்து, குதிச்சி, பாத்தா வுழுந்து கெடக்குது. வயிசானாலும் வீம்புல கொறவில்ல…”

ரங்கனின் குரல்தான்.

ஆக, முருகனே இவளை அப்புறப்படுத்துகிறான்.

எங்கே கொண்டு போகிறான் ?

குடிலில், அந்த குண்டு, சப்பை மூக்கியின் ஆளுகைக்கா?

இல்லை… மரகதம் கடித்துத் துப்பும் வீட்டுக்குள்ளா?

“நான் மாபாவி… மாபாவி. பிரும்மசரியம், ஒழுக்கம் எல்லாம் பொய்” என்று சுப்பய்யாவின் குரல் மின்னுகிறது.

“நான் பாவி, மன்னிக்கமாட்டேன்னு சொன்னேன்; நீ மன்னிக்க வேண்டாம்; ஆனால் உனக்கும் மன்னிப்புக் கிடையாதுன்னு போயிட்டார் தாயம்மா !”

அநு அழுகிறாள்.

இவள் எங்கே கொண்டு செல்லப்படுகிறாள்?

உலகத்தில் என்ன அதிசயம் என்று குளத்தில் இருந்த யட்சன் கேட்ட கேள்விக்கு தருமபுத்திரன் என்ன சொன்னான் ? நாள் தோறும் உயிர்கள் மடிவதை மனிதன் பார்க் -கிறான். ஆனால் தான் வாழ்வதைப் பற்றி கனவுகளையும் கற்பனைகளையும் சமைத்துக் கொள்வதுதான் அதிசயம் என்று தானே சொன்னார்?

அப்படி இவள் கண்ணமங்கலக்கனவில் நின்றாள். ஆறு, கோயில், நல்லநீர், மனித சிநேகம், மாசுபடாத சூழல்… ஏதோ ஒரு வாயிலில் இவள் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணும் ரங்கனும் வீட்டுப்படி ஏற்றிக் கூட்டிச் செல்கின்றனர். இவளால் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.

அங்கே ஒரு கூடத்தில், நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள்.

வீட்டில் யாரும் இருப்பதாகக் குரல் கேட்கவில்லை. ஒரு சாப்பாட்டு மேசை; அதைச் சுற்றிய நாற்காலிகளில் ஒன்றில்தான் அவளை உட்காரவைத்திருக்கிறார்கள். தலை தரிக்கவில்லை. மேசை மீது கவிழ்ந்து கொள்கிறாள்.

அப்போது தான் பார்க்கிறாள். அவள் சேலை…யில்லை, உடுத்தியிருப்பது. நீளமாக கவுன்… நைட்டி, ‘அது’ போட்டிருக்கிறாள். ‘முருகா ?’ இதென்ன கோலம் ? இதையா இவளுக்கு மாட்டிவிட்டார்கள்?

“ஏம்மா? நீ ரங்கன் பொஞ்சாதி மருதுதானே? என் சீலய ஏண்டி எடுத்திட்டு இத்தை மாட்டினீங்க? இதென்னடி கோலம், இந்த வயசில எனக்கு ?”

“கோச்சுக்காத தாயி, நீ சீலைய நனச்சிட்டுத் தொப்பயாக் கெடந்த ஒடனே அது போன் போட்டுச் சொல்லிட்டு எனக்கு ஆளனுப்பிச்சிது. ஒடம்பு நாத்தமெடுக்காது?… இது புதுசுதா… என் தங்கச்சி வச்சிருந்தா. ஆபத்துக்கு ஒண்ணில்லேன்னு துக்கி மாட்டின…” சிறிது நேரத்தில் ரங்கன் இன்னொரு பணியாளனுடன் வருகிறான்.

“நீங்க போன் போட்டப்பவே அம்மா ரூம் சுத்தமாக்கச் சொல்லிட்டாங்க…” அவளை இருவருமாக நடத்திக் கூட்டிச் செல்கின்றனர்.

கீழே பளிங்காகத் தரை. ஒரு வாயிலில் நுழைந்து ஒழுங்கை போன்ற பகுதி கடந்து ஒர் அறைக்கு வருகிறார்கள்.

அந்த அறையில் ஒரு கட்டிலில், மெத்தை – விரிப்பு – தலையணை அதில் உட்கார்த்துகிறார்கள்.

“படுத்துக்கம்மா? உம்மவன் வூடுதா. அவுரு டில்லிக்குப் போயிருக்கிறாரு சந்தோசமா இரு…!”

அவள் பதிலை எதிர்பாராமலே ரங்கனும் அவன் சம்சாரமும் போகிறார்கள். அவளுக்குத் துயரம் கரையும் கண்ணீர்கூட வரவில்லை.

‘என் ஆயுசில நான் கட்டில் மெத்தைன்னு சாயவில்லை. இப்ப, இதெல்லாமும் தண்டனையா, முருகா?’

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? கருப்பு, அசத்தியம், பொய்யின்னு துணை போக மாட்டேன்னு சொன்னது தப்பா? முருகா, என்னைக் கீழே தள்ளினியே, அப்பிடியே சாகவுட்டிருக்கக் கூடாதா?…

“ஆ… படுத்துக்குங்க பெரியம்மா! அப்புறம் நாங்கல்லாம் எப்படிப் பிழைக்கிறது?”

‘வெள்ளையில் சிறு பூப்போட்ட சல்வார் கமிஸ் அணிந்த ஒர் அழகான பெண் கழுத்தில் ரப்பர் மாலையுடன் அவளைப் படுக்க வைக்கிறாள்.

பன்னிர்ப்பூப்போல முகம். சிரிப்பு. பளீர்ச்சாயம் இல்லை. ஒரு மென்மையான மணம்; அவள் தொட்டபோது உணர்வே இதமாக இருக்கிறது.

காதுகளில் அதை மாட்டிக் கொண்டு, அவளும் நாற்காலியில் அமர்ந்து அவள் நெஞ்சை, முதுகைப் பரிசோதிக்கிறாள். கண்களை நீக்கிப் பார்க்கிறாள். இரத்த அழுத்தம் பார்க்கிறாள்.

“பெரிம்மா, நீங்க சரியாவே சாப்பிட மாட்டீங்களோ? ஒடம்புல ரத்தமே இல்ல…?’

“ஏன் சாப்புடாம?… நேத்துக்கூட அநு புள்ளங்களோட, இங்க புள்ள கேக் வாங்கியாந்து குடுத்தா…”

அவளுக்கு அதெல்லாம் புரிந்திருக்காது.

மென்மையாகச் சிரிக்கிறாள்.

“உங்க உடம்புக்கு ஒண்ணில்ல. நல்லா சாப்புடனும்; ரெஸ்ட் எடுக்கணும், தூங்கணும். ஒரு நாலஞ்சு நாள்ள சரியாயிடும். பிறகு உங்க அநு, புள்ளங்க, சிங்கா, அதென்ன சிங்கு?… அங்கே போயி ஜாலியா இருக்கலாம். இப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு சாப்பாடு கொண்டு வரும். சாப்பிடுங்க. எந்திரிச்சி நடக்கக் கூடாது. மாத்திரை கொண்டாந்து குடுப்பேன். போட்டுட்டு நல்லா தூங்குவீங்க. எதுவானும் வோணுன்ன, இத, மணி கொண்டாந்து தலப்பக்கம் ஸ்டுல்ல வைக்கிறேன். அடியுங்க. கன்னிம்மா ஒரு பொண்ணு வருவா இப்ப, அவ உங்களுக்கு எது வோணுன்னாலும் செய்வா. வரட்டுமா?…”

மென்மையாகச் சிரித்து விட்டுக் கதவை மூடிக் கொண்டு போகிறாள்.

யார் இந்தப் பெண் ? சந்திரியின் மகள்… பேரென்னவோ சொன்னாள். அர்ச்சனாவோ, என்னவோ, அவளில்லை இது. ஒரு கால் இது மரகதத்தின் மகளா? ரஞ்சிதத்தின் மருமகளா?… அந்தக் கொடியில் இப்பிடி ஒரு மலரா?… ஆனால் நஞ்சை உள்ளே வைத்திருக்கும் பூக்கூட அழகாக இருக்கிறது. இல்லை. எல்லாப் பூக்களும் தியாகம் செய்யத் தானே மண்ணில் உதிக்கின்றன?

சற்றைக்கெல்லாம் தட்டில் சாப்பாட்டுடன் கன்னியம்மா என்ற பெண்ணைக் கூட்டிக் கொண்டு, டாக்டர் பெண் வருகிறாள். நீர்ப்பாத்திரத்தை ஒரமாக இருந்த மேசை மீது வைக்கிறாள்.

“இதபாருங்க, இவதான் கன்னிம்மா. உங்களுக்கு என்ன தேவைப்படுதோ அத இவ கிட்டச் சொல்லுங்க. உங்களுக்கு இவ ஒரு பேத்தி…” அழுந்த வாரிய பின்னலும், ஒரு பூப் போட்ட மஞ்சள் வாயில் சேலையுமாக பளிச்சென்று இருக்கும் பெண், கை குவிக்கிறாள்.

“இவங்க யாரு தெரிமில்ல? எம்.பி. அய்யாக்கு அம்மா. பெரியவங்கள இப்படிக் கும்பிட்டா போதாது. நல்லா பாத்துக்கணும். சீக்கிரம் நல்ல படியா உடம்ப குணப் படுத்தணும்.”

“சரிங்க டாக்டரம்மா!”

“முதல்ல இவங்கள மொள்ள பாத்ரூமுக்குப் போகணுன்னா கூட்டிட்டுப்போ. முகத்தைத் துடைச்சிவிட்டு, சாப்பாடு குடு, பிறகு, இதா, இந்த மாத்திரை வச்சிருக்கிறேன், மூணு மாத்திரை. குடுக்கணும்…”

“சரிங்க டாக்டரம்மா.”

“அப்ப, நா வரேன் பெரிம்மா ? மாத்திரை சாப்பிட்டுட்டு நல்லாத் துங்குங்க…”

கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள்.

கன்னியம்மா, கதவைத் தாழிடுகிறாள்.

அவளை மெள்ள எழுப்பி, அருகிலுள்ள குளியலறைக்குக் கொண்டு செல்கிறாள்.

ஓ… குளியலறையா? பளபளவென்று பளிங்கு எதிரே கண்ணாடி, கழுவும் தொட்டி. கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க, கருப்பும் வெளுப்புமாகப் பம்மென்று முடி முகம் ‘அசிங்கமாக’ப் படுகிறது. எப்போதேனும் அவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாளா? புருசன் இருந்த நாட்களில் கூடக் கண்ணாடி பார்த்து முகம் சீவிப் பொட்டு வைத்துக் கொண்டதில்லை. அடங்காத முடியை ஒரு மரச்சிப்பினால் அழுந்த வாரி கையால் சுமாராக வகிடு பிளந்து. முடிந்து கொள்வாள். ஒரு ஊசி செருக வேண்டும். இப்போது முடி கூழையாகிவிட்டது. என்றாலும், இறுக முடிவதுபோல் செருகிக் கொள்வாள்…

உக்காருங்க…

“அடிம்மா. இதுல…”

உயர கால் தொங்கப்போட்டு உட்காரும் கழிப்புக்கலம்.

“கீழ வழுவழுன்னு இருக்கு, பத்திரம், உக்காந்துக்குங்க…” அவள் உட்கார்ந்து கொள்கிறாள். பல்விளக்க ஒரு பற்பசை தருகிறாள். நிற்க முடியவில்லை. அப்படியே விரலால் துலக்கிக் கொள்கிறாள். பல் பொடியோ, வேப்பங்குச்சியோ வைத்துத் துலக்கித்தான் பழக்கம். கடையில் ஏதேதோ பற்பொடிகள், கொடுக்கிறான். அவள் பற்களுக்கு ஒரு கேடும் இல்லை. அநுவுக்கு எப்படிப் பற்கள் தேய்ந்தும் விழுந்தும் முகத்தையே மாற்றிவிட்டன?

கன்னியம்மா, அவள் முகத்தைத் தேங்காய்ப் பூத்து வாலையால் துடைத்து, படுக்கைக்குக் கூட்டி வருகிறாள்.

பக்குவமாக பருப்பும் சோறும் ரசமுமாகப் பிசைந்து, முன்னே ஸ்டூலில் வைக்கிறாள்.

அழுக்குக் குளத்தில் தாமரைகளா ?…

வயது முதிர்ந்து, உடலும் உள்ளமும் நலிந்த காலத்தில், இந்தப் பரிவும் பேணுதலும் எத்துணை ஆறுதல் அளிக்கிறது?

“கொஞ்சம் தயிரூத்தி சோறு பிசையட்டுமா பெரிம்மா? இஞ்சி ஊறு காய் இருக்கு.”

“வாணாந்தாயி, எனக்குத் தாயா நிக்கிறீங்க. போதும்மா. வழக்கத்தைவுட நெறய சாப்புட்டேன். நீ போட்ட கையி…” என்று அந்தக் கையைக் கண்களில் வைத்துக் கொள்கிறாள். கையில் ஈரம் படிகிறது. சம்பு அம்மா, நீங்க இந்த ரூபத்துல வந்திருக்கீங்களா? என்னிய இந்தக் கண்ணம்மாளக் கரையேத்த கன்னியம்மா ரூபத்துல வந்திருக்கீங்களா? அம்மா, உங்களுக்கு நா ஒண்ணுமே செய்யலியே ?…” என்று விம்முகிறாள்.

மாத்திரை சாப்பிட்ட சற்று நேரத்தில் அவள் மயங்கி, உறங்கிப் போகிறாள். கனவுகள், பிரிசல்கள் எதுவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம். நேரம் என்ற உணர்வையே மிதித் தெறிந்துவிட்ட உறக்கம்.

கண்ணை மெல்லத் திறக்க உணர்வு வரும்போது, அறைக்குள் வெளிச்சம் பரவி இருக்கிறது.

உனக்கு எது தேவைப்பட்டாலும் ‘மணி அடி, கன்னியம்மா வருவாள்’ என்று டாக்டர் பெண் சொன்னது நினைவுக்கு வரவில்லை. மெள்ள எழுந்திருக்கிறாள். வயிற்றில் உள்ள பலங்களைத் தோண்டிப் போட்டுவிட்டாற் போல் பலவீனம் ஆட் கொள்கிறது. நரம்புகளே அறுந்தாற் போன்று துடித்த நிலை இல்லை என்றாலும், நிற்கத் திராணி இல்லை. மெல்ல கட்டிலில் நகர்ந்து சுவரைப் பற்றி நடந்து குளியலறைக்கு வருகிறாள். விழுந்து விடுவோமோ, பளிங்குத் தரை பாழாகிவிடுமோ? கேலி பேசுவார்களோ என்றெல்லாம் அச்சம் வதைக்கிறது. தரையின் அப்பழுக்கற்ற தன்மை பாழாகிறது. போர்க்களத்தில், கோழைக்கும் வீரம் வருமாம். அவள் எப்படியோ சமாளித்து, வாளியில் நீர்பிடித்து ஊற்றுகிறாள். கழுவ முடியவில்லை. மெள்ள எழுந்து வாய் கழுவிக் கொள்கிறாள். கண்கள் பாதாளத்தில் போய், முகம் தேய்ந்து சோர்ந்து, வீம்பும் துணிவும் அடிபட்ட சருகாய்க் காட்சி அளிக்கிறாள்.

மெள்ள சுவரைப் பற்றிக் கொண்டு படுக்கைக்கு மீள்கிறாள். ஸ்டூலில் உள்ள மணி, கவனத்தைக் கவருகிறது.

அதை அடிக்கிறாள்.

கன்னியம்மா வருவாள்; வந்ததும், ‘இந்தச் சனியன் நைட்டி வேண்டாம், எனக்கு சீலை கொண்டு வந்து தாம்மா, வெள்ளைச்சீலை… என்று கேட்க வேண்டும். கதவு திறக்கப்படுகிறது. கன்னியம்மா இல்லை. ஒட்டு மீசை வைத்துக் கொண்டாற் போல் ஒரு பணியாளன். அவன் மேசையைப் பார்க்கிறான்.

“இன்னா பெர்சு? அதா நாஷ்தா இட்டிலி சட்டினி சாம்பாரு வச்சிகிற, சாப்புடல?…” பிளாஸ்கைத் துக்கிப் பார்க்கிறான்.

“காபியும் அப்படியே கீது?… மணி ஒண்ணடிக்கப் போவுது. லஞ்ச் அவுரு வந்திடிச்சி. இந்நேரமா தூங்கின?”

“எனக்கு இட்லி காபியெல்லாம் வாணாந்தம்பி. கண்ணம்மா இல்ல? அவளக் கொஞ்சம் வரச் சொல்லுங்க.”

“யாரு அது, பெர்சு?…”

“…அ… கண்ணம்மால்ல, கன்னிம்மா. அவதா எனக்கு எதும் செய்யும்னு டாக்டரம்மா சொன்னாங்க… அவங்க இல்லியா?”

“ஆரு, அர்சிதா மேடமா? அவங்க அய்யா கூட டெல்லிக்கில்ல போயிகிறாங்க?…”

“அவங்க என் பேத்திதா. இவங்க வேறப்பா, நேத்து வந்து பாத்து, மாத்திரை குடுத்தாங்க…”

“ஓ, அவங்களா, அவுங்க உனக்குப் பாத்து மாத்திரை மருந்து குடுத்தாங்களா?”

“ஆமா. அவங்கதா கன்னிம்மாளை இங்க கூட்டி வந்தாங்க. நேத்து தூக்கமாத்திரை குடுத்திட்டாங்க போல இந்நேரம் தூங்கி இருக்கிறேன்.”

“கன்னிம்மா இங்க இல்ல, சிந்தாமணி பங்களாவுக்குப் போயிருக்கும். நான் இப்ப லஞ்ச் கொண்டாறேன். அசுவினி மேடம் ஆபீஸ் ரூமுல இருந்தா சொல்லி அனுப்புறேன்…” என்று சொல்லிவிட்டு நாஷ்தா சமாசாரங்களை எடுத்துப் போகிறான்.

இதுவரையிலும் மரகதம், மஞ்சு, சந்திரி யாருமே இங்கே வரவில்லை. பெரிய அரண்மனைகளில் இப்படித்தான் நடக்குமோ? சிந்தாமணி பங்களா என்பது மூத்தவளின் வாசஸ்தலமோ?

அவள் வாழ்ந்த உலகுக்கும் இந்த நடப்பியல் உலகுக்கும் எத்தனை வித்தியாசம்?

அவள் மகனுக்கு எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் ?

அந்த ஒட்டு மீசை சாப்பாடு கொண்டு வருகிறான்.

பெரிய தட்டில் சாப்பாடு வைத்து மேலே இன்னொரு தட்டால் மூடிக் கொண்டு வருகிறான். கட்டிலுக்கருகில் ஸ்டுலில் வைக்கிறான். தண்ணீரையும் கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

தட்டைத் திறந்து விட்டு, “பெர்சு, குர்மா பொரியல், அல்லாம் ஸ்பெசல் இன்னிக்கு. உனக்குன்னு கொண்டாந்திருக்கிறேன்… சாப்பிடு… வர்ட்டா ?” என்று போகிறான்.

மசால் நெடி மூக்கைத் துளைக்கிறது.

சிறு கிண்ணங்களில் குழம்போ, குர்மாவோ ஏதோ வைத்திருக்கிறான். பருப்பும் ரசமும் போட்டுப் பாங்காகப் பிசைந்து கொடுத்த அந்தச் சோறு இல்லை இது…

சோற்றைத் தொடவே கை கூசுகிறது. கீழே அவன் வைத்த தட்டை எடுத்து மூடிவிட்டுப் படுக்கிறாள்.

உண்ணாவிரதம் என்று அவள் அறிந்து இருந்ததில்லை. ஆனால் எத்தனையோ சந்தர்ப்பங்களில், வயிற்றுக் குணவு கொள்ளத் தோன்றியதில்லை. நேரம் இருந்ததில்லை. பசி தெரிந்ததில்லை. அவள் கால்களும் கைகளும் நன்றாக இயங்க, சுதந்தரமாக இருந்த நாட்களில் பசித்து, பட்டினி கிடந்ததில்லை.

சிறை உண்ணாவிரதம் பற்றிச் சொல்வார்கள். சுதந்தரம் வந்த பின்னரும், தொழிற் சங்கம், போராட்டம் என்று பெண்கள் சிறைக்குப் போனார்கள். உண்ணா விரதம் இருக்கும் போது, உறவினர்களை விட்டு நல்ல நல்ல பண்டங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்வார்களாம். ஆனால், உயிர் போனாலும், கோரிக்கை நிறைவேறாமல் உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ள மாட்டார்கள்.

இப்போது இவளுக்குப் பசிக்கிறது. ஆனால் எழுந்திருக்க வேண்டாம். கண்களை மூடிக் கொண்டு கிடக்கிறாள்.

எத்தனை நேரமாயிற்று என்று தெரியவில்லை.

“ஆயா…ஆயா… ? எந்திரி… கன்னிம்மா சோறு கொண்டாந்திருக்கிறேன். வாழக்காப் பெரியல். வெந்தியக் குழம்பு வச்சிருக்கிற எந்திரு, பாவம், கசுமாலங்க, கொல பட்டினி போட்டுட்டானுவ… எந்திரம்மா… மணி ஒம்ப தடிக்கப் போவுது…”

இது நிசமா, மறுபிறப்பா?…

“அந்தப் பொறுக்கி வோணுன்னே கோழிக்குருமாவும் அதும் இதும் கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கு! என்ன, ரஞ்சிதம்மா கூட்டுவிட்டாங்க. அவுங்க பங்களாலதா நா இருப்பேன். அசுவினி மேடம் கூட்டியாந்தாங்க, வந்தேன். ம், வா, பாவம்…”

ஈரத்துண்டால் முகம் திருத்தி, அவளைச் சாப்பிட வைக்கிறாள்.

“நீ சாப்பிட்டியா கன்னிம்மா ?”

“என்னப்பத்தி இன்னா ஆயா? நீங்க வயசான வங்க, சீக்காளி, சாயங்காலந்தா அசுவினி மேடம் ஃபோன் போட்டு விசாரிச்சாங்க. என்னக் காலமேயே அங்க போகச் சொல்லிட்டாங்க. இங்க, சந்திரி அம்மாதான் எலலாம் பாக்கும். அவங்க கட்சி காரியமா வெளியூர் போயிட்டாங்க…” சாப்பாடு கொடுத்து முடித்துத் துடைத்து விடுகிறாள். குளியலறைக்குக் கூட்டிப் போகிறாள்.

அப்போது கதவைத் திறக்கும் ஒசை கேட்கிறது.

அறைக்குள் அசுவினி-டாக்டர் பெண் வந்திருக்கிறாள்.

“எப்படி இருக்கிறீங்க பாட்டியம்மா ?”

“…வாம்மா, நீ நல்லா இருக்கணும். நீ சொன்னாப்புல எனக்கு ஒண்ணில்ல. மொதல்ல, எனக்கு என்னோட வெள்ள சீல ரவிக்கை வோணும்மா. நேத்து, இன்று முழுக்கத் தூங்கி இருக்கிற. குளிக்காம, கழுவாம, நா இப்பிடி சோறு தின்னதில்ல. என்ன மாத்திர குடுத்தியோம்மா, தூங்கி, பசி… சோறு… பாவச்சோறுன்னு நெனப்பே. ஆனா… ஒங்க அன்பு எனக்குப் புதிசா இருக்கு. யாரு பெத்த பொண்ணுகளோ, நீங்க நல்லா இருக்கணும். என்சீல ஒண்ணும் எடுத்துக்காம, இத்த மாட்டி… கண்ணு, எனக்கு சீல கொண்டாந்து குடுத்திரு. நல்லாப் போச்சி. நான் பாட்டுக்கு என் வழில போயிடறேன்…”

“சேலைதானே? நிச்சயமா தாரேன். இப்ப, நீங்க நடந்து போக முடியுமான்னு பாத்து சொல்லுறேன்… படுங்க…”

“கன்னியம்மா, இதெல்லாம் எடுத்திட்டுப் போ…”

அவள் குழாய் வைத்து இவளைப் பரிசோதிக்கிறாள்.

பிறகு கதவைத் தாழிட்டுவிட்டு உட்காருகிறாள். அவள் கையைத் தன் கையில் வைத்துக் கொள்கிறாள்.

“உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலியா?”

“வாணாம்மா. எங்கியோ பாடி பரதேசி மாதிரி இருக்கிற சுகம் இதுல இல்ல. நீ யாரோட மகன்னு, எனக்குத் தெரியல. மகன், மகள், உறவு, சொத்து சுகம் எல்லாம் பாவமலை மேலே நிக்கிறதுன்னு மனச்சாட்சி குத்துது. அதுனாலே தான் எல்லாம் துறந்தேன். நான் அண்டிய இடம் சத்தியம் குடியிருந்த கோயில். இப்ப அங்க, ஆசுபத்திரி கட்டுறாங் களாம்; ‘லாட்ஜ்’ கட்டுறாங்களாம். என்னப் போ போன்னு வெரட்டினாங்க- ரா முச்சூடும் தூக்கமில்ல. எப்படிவுழுந்தேன்னு தெரியல. முருகன்… என்ன நிணச்சிருக்கிறான், எந்த கதிக்கு ஆளாக்கப் போறான்னு தெரியல…”

“ஏம்மா, உங்க சொந்த மகன் வூட்டுக்குத்தானே வந்திருக்கிறீங்க?”

“சொந்தம். இந்த வயித்தல எடம் குடுத்தேன். அவங்கப் பாரு, குடிப்பாரு. ஆனா… கட்டின பொண்சாதியத் தவுர ஒரு நிழலக்கூட அந்த எண்ணத்துல நினைக்கல. அந்தப் பெரி மணிசர், பத்து நாளயப் புள்ளயக் கையிலெடுத்து, ‘மோகனதாசு’ன்னு அந்த மகாத்துமா பேர வச்சாரு. “தாயம்மா, நம்ம புள்ள பெரி…ய ஆளா வருவாம்பாரு!”ம் பாரு. அவரு எதும் பார்க்காம நல்ல படியாப் போய்ச் சேர்ந்தாரு…’

அவள் இவள் கையை அழுத்திப் பிடிக்கிறாள். அவளும் உணர்ச்சி வசப்படுவது தெரிகிறது. இவள் ரஞ்சிதத்தின் இளைய மகளா? பேரன் மனைவியா?

“கண்ணு, நீ யாருன்னு இன்னும் தெரியலம்மா ?”

“நான் யாரா?…”

கேட்டுவிட்டுப் புன்னகை செய்கிறாள்.

“நிச்சியமா தெரியணுமா?…”

“உனக்குச் சொல்ல விருப்பமில்லேன்னா வேணாம்.ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்…”

“உங்களுக்குச் சேலை கொண்டுக் கொடுக்க வேணும். வெளியில கொண்டுவிட வேணும்… அதானே?”

முருகா, எனக்கு அது போதும். ரோட்டுமேல சின்னஞ்சிறுசுகல்லாம் வண்டிகளுக்குப் பலியாகுதுங்க. அப்படி எங்கியாலும் நா ரோட்டு மேல வுழுந்திருக்கக் கூடாதா?…”

“ஆமாம் பாட்டிம்மா. இந்த முருகனுக்குக் குசும்பு ரொம்ப. என்ன செய்ய, அவுரே ரெண்டு பொண்டாட்டிக்காரரு. பத்தாததுக்கு, எக்கச்சக்கமான பக்தர்கள் வலையிலே சிக்கிட்டு பண்ணாட்டு வாணிப பேரங்களில் தவிச்சிட்டிருக்காரு. அதான் குளறுபடி பண்ணிட்டாரு…”

“நீ யாரம்மா சொல்லுற?”

“உங்க கடவுள் முருகனத்தான்…”

அவள் சட்டென்று நிலைப்படுகிறாள். இந்த இளந்தலை முறை பற்றி அவளுக்குத் தெரியாது. அவன் மகள் தானோ?

“ஏங்க, நா கேக்குற. நீங்க கும்புடற சாமி, முருகனோ, ராமனோ, ஈசுவரனோ, யாராக வானாலும் இருக்கட்டும். மூலைக்கு மூலை கோயில், கும்பாபிஷேகம், தீமிதி, காவடி, பாயசம்னு கும்பிடுறாங்களே, எங்கியானும் ஏழைக்கு நியாயம் நடக்குதா? நா கவுர்மென்ட் ஆசுபத்திரிலதா இருக்கிறேன். சீட்டுப் போடுறதிலேந்து, ஆபிரேசன் டேபுள் வரையிலும் பணம் உருவுறாங்க. மயக்கம் குடுக்குமுன்ன, பணம் கேக்குறான். இல்லேன்னா, எறக்கிவுட்டுடறான். எங்கியானும் அற்புதம் நடக்குதா?… கட்சி… கட்சிக்காக ஏழை, கட்சி மாற, புதுக்காட்சி துவக்க, எல்லாத்துக்கும் அவுங்க வேண்டி இருக்கு பதவி புடிக்க, அவங்களையே சுறண்டிக் கொள்ளையடிக்க. சினிமா, டி.வி. அது இதுன்னு எத்தினியோ வலை. அதுக்குள்ள உங்க சாமியே வுழுந்திட்டாரு…”

“கண்ணு, நீ சொல்லுறது அத்தினியும் மெய்தா…”

அவள் உருகிப் போய், ஒரு பஞ்சையின் பிள்ளையைக் காப்பாற்ற அந்த வீட்டுக்கு வந்து அவமானப்பட்டதைச் சொல்கிறாள்.

“பாட்டி, கொஞ்சம் பொறுத்துக்குங்க. உங்கள நல்லா ஆக்கி, வெளில கொண்டுவுட்டுடறேன். நீங்க, இளைய வங்கள ஒண்ணு சேத்துப் போராடத் தயாராகணும்… உங்களுக்குத் தெரியுமா? இது ‘கெஸ்ட்ரூம்’னு பேரு. எத்தினி பொண்ணுகளக் கதறக்கதறக் குலைச்சிருக்காங்க தெரியுமா? சினிமா, டி.வின்னு மயங்கி, அழகழகான பொண்ணுகள் இவங்க வலையில் விழுந்து… எங்கம்மா.” கண்கள் குளமாகின்றன.

“நிர்வாணக்காதல்’னு ஒரு படம். பேரே கழிசடை. அது வெளிவரல. எங்கக்காவுக்குச் சான்ஸ் குடுக்கிறதா, சொல்லி, இங்கே கொண்டாந்து, குலைச்சானுவ அப்பன் அன்னிக்கு, மகன் இன்னிக்கு.”

“சிவா சிவா…” என்று காதைப் பொத்திக் கொள்கிறாள்.

“தற்கொலை, யாரையோ டயரக்டரைக் காதலிச்சா, ஏமாற்றம்னு பத்திரிகைக்காரங்க மூடிட்டானுவ… எல்லா மீடியாவும் இவங்க கிட்டத்தானே இருக்கு ? அமுக்க வச்சி, மலத்தைத்தின்னு பிழைக்கிற தொழில்களாப் போயிட்டுது…”

“அம்மா, நீ வேற எதுனாலும் பேசு. ரணத்தைக் கிளறும் ஆபிரேசன் வானாம். ரொம்ப வலிக்குது… உன்னியப் போல ஒரு பத்து, நூறு ஆயிரம் பேருக சேரனும். நான் சாவக் கூடாது.”

“வாங்க. அதான் ஸ்பிரிட்..” கையை அழுத்தமாகப் பற்றுகிறாள். டொக்டொக் கென்று கதவு தட்டப்படுகிறது.

எழுந்து கதவைத் திறக்கிறாள்.

“குடிவினிங் மேடம். இப்பதா இவங்கள- பி.பி. பாக்க வந்தேன்…”

“பார்த்தாச்சில்ல?… போ!” அவள் மின்னல் போல் இவளை ஒரு கணம் பார்த்துவிட்டுப் போகிறாள்.

“அத்தே…? வாங்கத்தே…” என்றவள் அறை வாயிற்படியில் நின்று அவள் ஒழுங்கை கடந்து செல்வதையே பார்க்கிறாள். பிறகு கதவைச் சாத்திவிட்டு வருகிறாள்.

“இதுங்கல்லாம் கொஞ்சம் சந்து தெரிஞ்சாலே நுழைஞ்சு பத்திக்கும். தாசி குலம். சீரழிஞ்ச குலம். இவ பாட்டி தொண்ணுாறு வயசு, இன்னும் இருக்கா. இதுங்களல்லாம் இந்த வட்டத்துக்குள்ள நுழயவுடக் கூடாதுன்னு சொன்னா, உங்க மகன் காதிலியே போட்டுக்கிறதில்ல. நம்ம வீட்ல, சின்னஞ்சிறிசு நடமாடுற இடம்.

“இவ சிரிச்சிக்குழஞ்சி, சாதுரியமாப் பேசி, புளியங்கொம்புன்னு புடிச்சிக்குவாளுவ. லாட்ஜிலை ஓட்டல்ல வாடிக்கை வச்சிட்டு, வயித்தில வாங்கிக்கிட்டு, உங்க மகன்தான்னு சத்தியம் செய்யத் துணிஞ்சவளுக…”

அவளுக்குக் காதுகளைப் பொத்திக் கொள்ளக் கைகள் பரபரக்கின்றன. பாம்பின் கால் பாம்பறியும். இவள் அப்படி வந்தவள்தானே ?

“ஏம்மா, அநாவசியமா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணப் பழி சொல்லணும்… ? டாக்டருக்குப் படிச்சிருக்கிற பொண்ணு…”

“அத்தே, அப்படியெல்லாம் நினச்சி எடபோடக்கூடாது. இந்தக் காலத்தில இதுபோல பொண்ணுகளுக்கு வெக்கம் மானம் கூச்சம் ஒண்ணுமே கிடையாது. கூட்டத்துல தோள் உரசினாக்கூட, காது மூக்கு வச்சி, இவன் கற்பழிச்சான்னு கோர்ட்டுல துணிஞ்சி விவரிக்கும் சாதி. நாமன்னா செத்திடுவம். அதும் இவ டாக்டர்ங்ற பேருல லைசன்ஸ் இல்லாம நுழையிற வருக்கம். அதும் இது பெரிய ரவுடி. மெடிகல் படிக்கணும், இன்ன குலம், மறுவாழ்வுன்னு உதவி கேட்டு வந்தா. சூடிகையா இருக்கான்னு, இவங்க உதவி செஞ்சாங்க. அதையே சாக்கா வச்சிட்டு, அக்காவைப் பாக்க வரும். நானும் கபடில்லாம தான் நினச்சிருந்தேன்… இப்ப நீங்க கூட அன்னைக்கு அந்தப் பையனுக்காக நியாயம் சொன்னிங்களே. எந்தப் பயலோ, எவ கையையோ புடிச்சி இழுத்திருக்கிறா. விபரீதம் நடந்திடிச்சி. அத நம்ம பையன் மேல போட்டு கேசு தொடுக்கத் துண்டுனதே இவதா. ஒரு குடும்பத்துக்குள்ளியே எதிர்க்கட்சி பண்ணுது. மானம் கெட்ட சன்மங்க. இந்த வூட்டுமருவன்னு சொல்லிட்டுத் திரியிறாளாம். இவ படிச்சிப் பாஸ் பண்ணா, சர்வீஸ் பண்ணனும்…”

தன் குற்றங்களை மறைக்க, பிறர் முகத்திலும் குப்பையை வீசுவதுதான் பரிகாரமா ?… அவள் பேசவேயில்லை.

“சரி, அது கெடக்குது விடுங்க, அத்தை. கடசீல நீங்க வந்து சேந்தீங்களே, அதாம் பெரிசு. நா கும்புடாத தெய்வம் இல்ல. ஒவ்வொருத்தரும் வந்து கூப்புட்டு, நீங்க வரயில்ல. அவங்களுக்கு இதே குறையிலதான் ‘அட்டாக்’ வந்திச்சி. இத இப்ப கூட்டம்னு போயிருக்காங்க. அர்ச்சிதா கூடப் போயிருக்கு. அது யு.எஸ்.ல படிச்சிதா, அதுதா ரொம்பக் கவனம். நா, இத இப்பக்கூட ரெண்டுநா, திருப்பதிக்குப் போயி, அங்கப்பிரதட்சிணம் பண்ணிட்டு வார திருக்கல்யாணம் பண்ணி வைக்கிறேன், கேசுகீ செல்லாம் போகட்டும்னு வேண்டிட்டிருக்கிற… அங்க தங்கிருக்கிற காட்டேஜ்ல அக்காதா ஃபோன் போட்டா. அத்த தல சுத்தி விழுந்திட்டாங்க, உடனே ரங்கன இங்க கொண்டாரச் சொல்லிருக்கிறன்னு… நல்லாப் பாக்கச் சொல்லுங்க. ஸ்பெஷலிஸ்ட் சுந்தரராசை வந்து பாக்கச் சொல்ங்க, ஸ்கேன்‘கீன்’ எதுன்னாலும், என்ன செலவானலும் பாக்க வோணாம்னே. சாப்புட்டீங்களா?… துரும்பா எளச்சிட்டீங்க…”

மூச்சு விடாமல் பட்டுப்பாய் விரிக்கிறாள்.

“உங்கக்கா ரஞ்சிதம் இந்த வூட்ல இல்லையா?”

“இதே காம்பவுண்டுதா. சொல்லப்போனா, அவுங்கதா இங்க படுத்திருப்பாங்க. அக்காவுக்கு அந்த ஆபிரேசனுக்குப் பிறகு நடமாட முடியல. தெரபிஸ்ட் வராங்க கால்ல, நாலு விரல எடுத்திட்டாங்க. இப்பக்கூட அத்தையப் பாக்கணு முன்னாங்க. பாக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். உங்களுக்கு எது வோணுன்னாலும், தயங்காம கேளுங்க. நானும் உங்க சந்திரி போலதா…”

அவள் கையைப் பற்றுகிறாள்.

“எனக்கு என்னாம்மா வேணும்? இந்த எளவு ‘டிரஸ்’ எனக்கு ஒடம்பையே அறுக்குது. என் வெள்ள சீல, ரவிக்கை ரெண்டும் அங்கே அந்த வூட்டுல தகரப் பொட்டில இருக்கு. அதை ரங்கனுக்கு போன் போட்டுச் சொல்லிக் கொண்டாரச் சொன்னாப் போதும்…”

“அந்த சிலதான் வேணுமா? இப்பவே ஃபோன் போடுறேன். நான் உங்களுக்குப் புதிசா, அரை டசன் வெள்ளைச் சேலை, நல்ல மெல்லிசு ஆர்கன்டியோ, ஃபுல்வாயிலோ, செட்டா கொண்டுவரச் சொல்றேன். வயககாலத்துல நீங்க சவுரியமா இருக்கணும்…”

அவள் பேசிக் கொண்டே போகிறாள். அவள் உணர்வில் சேலையைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *