கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 6,758 
 
 

அறை ஜன்னல் வழியே ராமு பார்த்தான். தெருமுனையில் கார் கண்ணுக்குத் தென்படவில்லை. மணி பார்த்தான். ஐந்து. அடிவயிற்றில் சுள்ளென ஒரு வலி உண்டாகி மறைந்தது. தினம் காலையில் இப்படித்தான் வலிக்கிறது. சமயத்தில், டாய்லெட் போகும்போது ரத்தம் வருகிறது.

சென்னையைத் தாண்டி, மகாபலிபுரம் போகும் வழியில் ஒரு கிராமத்தில், தொடர்ந்து நாற்பது நாட்களாகப் படப்பிடிப்பு. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்து முடித்து ஐந்து மணிக்குள் தயாராக இருக்கவேண்டும். எப்போது வேண்டுமானாலும் தெருமுனைக்கு கார் வரலாம்.

அதோ, கார் ஹாரன் சத்தம் கேட்கிறது. அழுக்கடித்திருந்த ஜீன்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு, வெளியே வந்தான். எதேச்சையாக லெட்டர்பாக்ஸைப் பார்த்தான். கடிதம் இருந்தது. அம்மா! எடுத்து பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.

கார் வேகமாகப் பறந்தது. இன்னும் ஏழு பேரைத் திணித்துக் கொள்ள வேண்டும். அசோஸியேட் இருவரும் முன் சீட்டில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொள்ள, மற்ற ஐந்து உதவி இயக்குநர்களும் பின் சீட்டில் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார வேண்டும்.

ராமு கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

‘தம்பி ராமு, நான் சவுகரியமாக இருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு குறையவில்லை. நீ எப்படி இருக்கிறாய்? எதைப் பற்றியும் கவலைப்படாதே! மல்லிகாவைப் பெண் பார்த்துச் சென்றிருக்கிறார் கள். கல்யாணத்துக்குக் குறைந்தது முப்பதாயிரம் ரூபாய் தேவை. உன் அண்ணன் பத்தாயிரம் தருவதாகச் சொல்லி இருக்கிறான். உன்னால் முடிந்ததை அனுப்பி வை. இப்போ தைக்கு என் மருத்துவச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினால் சந்தோஷப்படுவேன்…’

ராமுவின் கண்கள் கசிந்தன. ஆயிரம் ரூபாய்! எங்கே போவது! சம்பளம் கிடையாது. தினம் ஐம்பது ரூபாய் பேட்டா. அது கூட, கடந்த நான்கு நாட்களாகக் கிடைக்க வில்லை. லாஸ்ட் அசிஸ்டென்ட்டுக்கு பேட்டா வேண்டாம் என்று புரொட்யூஸர் சொல்லிவிட்டதாகக் கேள்வி.

மற்ற உதவி இயக்குநர்களையும் ஏற்றிக்கொண்டு, மோகனூர் கிராமத்துக்குள் கார் நுழைந்தபோது, பளிச்சென்று விடிந்திருந்தது. கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி, ஒரு பள்ளிக் கூடத்தின் அருகில் இருந்த மைதானத்தில் செட் அமைத்திருந்தார்கள்.

எட்டு வீடுகள், ஒரு சிறிய கோயில், சாமி சிலைகள், செயற்கை மரங்கள்.. கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட் அது. முக்கால்வாசி படம் இந்த செட்டில்தான். க்ளைமாக்ஸில் அனைத் தையும் கொளுத்தவேண்டும். அதனால்தான் இந்த இடத்தைத் தேர்வு செய் திருந்தார்கள்.

ராமு, அம்மா கடிதம் கவலையில் யோசனையாக நின்றிருந்தபோது, ‘‘ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை யாருடா எண்றது? எங்கடா அவன்?’’ என அசோஸியேட் ரமேஷின் குரல் அலறலாகக் கேட்டது.

ராமு கையில் நோட்டோடு ஓடிச் சென்று, படப்பிடிப்புக்கு வந்திருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பெண்களைக் கணக்கெடுத்தான். ஒவ்வொரு முகத் தையும் பார்த்துப் பெயரைக் குறித்துக் கொண்டான். அவர்களில் நான்கு பேர் இதுவரை படப்பிடிப்புக்கு வராத முகங்கள். வழக்கமாக வரும் நான்கு முகங்கள் மிஸ்ஸாகி இருந்தன. கோ-ஆர்டினேட்டரை அழைத்து விசாரித்தான்.

அவர் தலையைச் சொறிந்தார். ‘‘அவங்களுக்குப் பாண்டிச்சேரில ஷ¨ட்டிங்! கன்டின்யுட்டி கேர்ள்ஸ். அனுப்பியே ஆகணும். தம்பி, இதை ரமேஷ்கிட்ட சொல்லிடாதீங்க. கும்பலோட கோவிந்தா… ஒண்ணும் தெரியாது. யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க’’ என்றார்.

ஆனால், ரமேஷ் எமகாதகன். கண்டுபிடித்துவிட்டான். காரணம், அதில் ஒரு பெண் அவனுக்கு வேண்டப்பட்டவள். அவள் காணா ததை வைத்து, இன்னும் மூன்று பேர் மிஸ்ஸாகி இருப்பதையும் கண்டுபிடித்துவிட்டான்.

‘‘ஏய்.. இங்க வா!’’ என்று அதிகாரமாக ராமுவை அழைத்தவன், எடுத்த எடுப்பில், ‘‘நாலு பேர் வரல. என்னடா கணக்கெடுக்கிற தேவடியா பையா!’’ என்றான். ராமுவுக்கு மளுக் என்று கண்களில் நீர் ததும்பியது.

தினமுமே ஏதாவது ஒரு வகையில் இப்படிப் ‘பாட்டு’ வாங்குவது சகஜம் தான் என்றாலும், இன்றைக்கு அது அதிகம் இருக்கும்போல் தெரிந்தது.

யோசனையுடன் கையில் கிளாப் போர்டை வைத்துக்கொண்டு நின்ற போது ஷாட் ரெடியாகி, இயக்குநர் ‘கிளாப் இன்’ என்றார். சுதாரித்து, திடுமென உத்தேசமாக கேமராவுக்கு எதிரே கிளாப்பை நீட்டினான். நீட்டிய பிறகுதான், மானிட்டர் பார்க்க வில்லையே… என்ன லென்ஸ் என்பதைக் கவனிக்கவில்லையே என்று உணர்ந்தான். ஆனாலும், அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. குருட்டாம் போக்கில் சரியான இடத்தில் கிளாப்பை நீட்டியிருந்தான்.

ஆபரேட்டிவ் கேமராமேன் ‘கிளாப்’ என்றதும், நம்பரைச் சொல்லிவிட்டு கிளாப் அடிக்க… ராமு முகத்தில் அறை விழுந்தது. அது ஹீரோவின் கை என்பதும், கிளாப் அடிக்கும்போது சாக்பீஸ் துகள் ஹீரோவின் கண்களில் பட்டுவிட்டதால் அவர் டென்ஷனாகி அவனை அறைந்துவிட்டார் என்பதையும் பிறகுதான் உணர்ந்தான்.

சில விநாடிகள் படப்பிடிப்பு தடைப் பட்டது. ஹீரோ கண்களை கசக்கியபடி ஓரமாக ஒதுங்கி நின்றார். இயக்குநர் ராமுவை முறைத்தபடி முணுமுணுத்தார். அனைவரும் ராமுவை வேடிக்கை பார்க்க… அவமானமாக இருந்தது.

இரண்டு ஸீன்கள் எடுத்த பிறகு, இயக்குநர் லொகேஷனை மாற்றினார். பள்ளிக்கூடத்தின் பின்பக்கம் பசுமையாக இருக்க, அந்த இடத்தில் ஷாட் வைத்துக்கொள்ளலாம் என்றார்.

அந்த இடம் குப்பை மேடாகவும், மாட்டுச்சாணம் நிறைந்தும் இருந்தது. ஹீரோ அங்கே வரத் தயங்குவார் என்பதால், சுத்தப்படுத்தத் தொடங்கி னார்கள். செட் அசிஸ்டென்ட் எனப்படுபவர்கள் பரபரப்பாக இயங்கினார்கள்.

‘‘ஏம்ப்பா… அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்ன பண்றீங்க… சீக்கிரம்ப்பா! லைட் இறங்குதுல்ல?’’ என்று கடுகடுத்தார் ஒளிப்பதிவாளர். அடுத்த கணம் ஐந்து உதவி இயக்குநர்களும் ஆளுக்கொரு துடைப்பக்கட்டை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைக் கூட்டத் தொடங்கினார்கள்.

சூரியன் வேகமாக விடைபெற்று நகர்ந்துகொண்டு இருக்க, கடைசியாக ஹீரோயின் க்ளோசப் ஷாட்களை எடுத்துக்கொண்டிருந்தார் இயக்குநர். கடைசி அரைமணி நேரம் மிகுந்த பரபரப்பாக இருக்கும். படு ஸ்பீடாக ரன்னிங் கிளாப் காட்டிக்கொண்டு இருந்தான் ராமு.

‘‘பாரேன் அவ முகத்த… கொஞ்ச மாச்சும் எக்ஸ்பிரஷன் இருக்கானு. கான்க்ரீட் சுவர் மாதிரி வெச்சிருக்கா!’’ – ரமேஷ் தாழ்ந்த குரலில் கமென்ட் அடிக்க, கேமராமேன் மட்டும் சிரித்தார். ராமு அதைக் கவனிக்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கொள்ள, அந்த முகத் திருப்பலை கேமராமேன் கவனித்துவிட்டார்.

திடுமென இயக்குநர், ‘‘என்ன லுக்குப்பா?’’ என்றார். அதாவது, அந்த க்ளோசப் காட்சியில் ஹீரோயின் எங்கே பார்த்து டயலாக் பேசவேண்டும் என்று அர்த்தம்.

பேட் வைத்திருந்த ரமேஷை நோக்கி இந்தக் கேள்வி வீசப்பட்டது என்றாலும், அவன் அந்தக் கேள்வியைக் கவனிக்காத மாதிரி கையில் இருந்த அட்டையில் கவனம் செலுத்த, சட்டென கேமராமேன், ‘‘ராமு, என்ன லுக்?’’ என்றார்.

ராமு திணறிப் போனான். இந்த லுக் விவகாரமெல்லாம் புரிவதற்கு இரண்டு, மூன்று படங்களாவது வேலை பார்த்திருக்கவேண்டும். எனவே, விழித்தான்.

‘‘இந்த சின்ன விஷயம்கூடத் தெரியலே… நீயெல்லாம் டைரக்டராகி என்னத்த கிழிக்கப்போறே?’’ என்றார் கேமராமேன். பார்வையால் அதை ஆமோதித்தார் இயக்குநர்.

‘‘ரைட் லுக் சார்!’’ – தனது எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியில், இயக்குநரின் சந்தேகத்துக்கு பதிலளித்தான் ரமேஷ்.

ராமுவுக்குத் தொண்டை அடைத்தது. அத்தனை பேருக்கு முன்னால் திரும்பத் திரும்ப அவமானம்!

மணி ஆறைத் தொட, ‘பேக்கப்’ ஆனது.

காலையிலிருந்தே வயிற்றைக் கலக்கிக்கொண்டு இருக்க, சட் டென்று அங்கிருந்து அவசரமாக நகர்ந்தான் ராமு. தொலைவாகச் சென்று, வயிற்று பாரத்தைக் குறைத்துக்கொண்டு குளத்தில் கால் கழுவிக்கொண்டு திரும்பி யவன், திடுக்கிட்டான். யாரையுமே காணோம். அசிஸ்டென்ட் டைரக் டர்களை ஏற்றிச் செல்லும் கார் போயிருந்தது.

ராமு அதிர்ந்து போனான். ரமேஷக்கு இன்று இவன் மேல் என்ன கோபமோ, தெரிய வில்லை… பழி வாங்கிவிட்டான். யோசித்தபடி நின்றிருந்தான் ராமு. இங்கிருந்து ஈ.சி.ஆர் மெயின் ரோடு பத்து கிலோ மீட்டர்கள். அங்கே போய் பேருந்து பிடித்து, ரூம் போய்ச் சேர, இரவு எப்படியும் பன்னிரண்டு மணி ஆகிவிடும். எனவே, இங்கேயே தங்கிவிடுவது உத்தமம் என்கிற முடிவுக்கு வந்தான் ராமு.

கோயில் செட்டுக்குள்ளேயே படுத்துக்கொள்ளலாம். காலை ஐந்து மணிக்கெல்லாம் புரொடக்ஷன் வண்டி வந்துவிடும். அதுவரை தூங்குவது கஷ்டமில்லை.

அம்மாவின் கடிதத்தை மறுபடியும் எடுத்துப் படித்தான். மனதுக்குள் ஏதோ பிசைந்தது. மடித்து பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்தபோது, தூரத்தில் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. குளிர்காற்று வீசியது.

மழை வரப் போகிறது என்பதை உணர்ந்தான் ராமு. அடுத்த விநாடியே, அந்த விபரீதம் சுள்ளென அவன் மூளையைத் தாக்கியது. இப்போது மழை பெய் தால் செட் அத்தனை யும் நாஸ்தியாகிவிடும். மழை பெய்ய வாய்ப் பில்லாத ஜூன் மாதம் என்பதால்தான், திறந்த மைதானத்தில் செட் போட்டிருந்தார்கள். இப்போது மழை பெய்தால்…

செலவு செய்த தயா ரிப்பாளரும், பார்த்துப் பார்த்து இருபது நாட்கள் செட்டை வடிவமைத்த ஆர்ட் டைரக்டரும் நினைவில் வந்தார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்யப்பட்ட கோயில் மற்றும் சிலைகள்… தண்ணீர் பட்டால் உருக்குலைந்து போய் விடுமே! இன்னும் இருபது நாள் படப்பிடிப்பு இருக்கிறதே!

லேசாக தூறல் விழ, ராமு கலங்கிப் போனான். அடுத்த விநாடி… கிராமத்தை நோக்கி ஓடினான். பேய் ஓட்டம். கிராமத் தில், படப்பிடிப்புக்கு உதவி செய்தவர் வீட்டுக்குள் நுழைந்து, ‘‘சார், மழை வருது! செட் நாசமா போயிடும். உதவி பண்ணுங்க சார்..!’’ என்று பதறினான்.

அடுத்த சில நிமிடங்களில் தார்ப்பாய், பாலிதீன் சாக்கு, கோணிப்பை சகிதம் ஆண்களும் பெண் களுமாக இருபது பேர் திரண்டார் கள். ஒரு டிராக் டரில் ஏறி, செட்டை நோக்கி விரைந்தார்கள்.

விறுவிறுவென செயல் பட்டார்கள். கோயிலைப் பெரிய பெரிய பாலிதீன் கவர் போட்டு மூடினார்கள். சிலைகளைப் பெயர்த் தெடுத்து பள்ளிக் கூடத்தின் உள்ளே கொண்டு வைத்தார் கள். வீடு செட் மீது சாக்கை விரித்துப் போட்டார்கள். செட்டை பத்திரப் படுத்தும் வரை பொறுமையாக இருந்த வானம், பிறகு பிய்த்துக் கொண்டது. மழை அடித்துக் கொண்டு ஊற்றியது. காற்றும் மழையுமாக ஊழித்தாண்டவம்! சரியாக ஒரு மணிநேரத்துக்குப் பின் மழை ஓய்ந்தது.

ராமு, நெஞ்சம் நெகிழ அனை வருக்கும் நன்றி சொன்னான். அனைவரும் விடைபெற்றுச் சென்றதும், செட்டை சுற்றிச் சுற்றி வந்தான். தரையில் மட்டும் தண்ணீர் குளம் கட்டி நின்றது. மற்றபடி செட்டுக்கு எள் முனையளவும் சேதாரமில்லை.

அதிகாலை ஐந்து மணி. வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டுக் கண் விழித்தான் ராமு.

ஒரு காரில் ஆர்ட் டைரக்டரும், அவரது உதவியாளர்களும், தயா ரிப்பாளரும் வந்திருந்தார்கள்.

‘‘நேத்து நீ போகலியா?’’ என ஆச்சர்யத்துடன் கேட்டார்கள். ராமு தலையை ஆட்டினான். பின்பு, நடந்ததைக் கூறினான். பத்திரமாக பேக் செய்யப்பட்டு இருந்த சிலைகளை அவர்கள் பார்த்தார்கள். பாலிதீன் கோணி யால் மூடப்பட்டிருந்த கோயிலைப் பார்த்தார்கள். செட் சேதாரம் இன்றி இருந்தது அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தது.

ஆர்ட் டைரக்டர் ராமுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். தயாரிப்பாளர் கண்களில் கண்ணீர். ஆர்ட் டைரக்டர் செல்லில் இயக்குநர் நம்பர் போட்டு, விவரம் சொல்லிவிட்டு செல்லை அவனிடம் நீட்டினார்.

‘‘வெரிகுட் ராமு! அசிஸ் டென்ட்னா இப்படித்தான் இருக் கணும். நான் உடனே அங்கே வர்றேன்’’ என்றார் டைரக்டர்.

உதவியாளராகச் சேர்ந்த இந்த ஆறு மாதத்தில் அவர் அவனிடம் பேசிய முதல் வார்த்தை. அதுவரை அப்பிக் கிடந்த சோர்வு சட்டென விலக, ராமுவின் மனதுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி… நம்பிக்கை!

கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.

– ஜூன் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *