உணர்ந்து விட்டாயா தேவனை?

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 10,487 
 
 

சேவல் கூவுகின்ற அதிகாலைப் பொழுது. மின் மோட்டாருக்கென அமைக்கப்பட்ட அந்த அறையினுள் இரவுப் பொழுதில் மறைந்து கொண்டிருந்த ஜேம்ஸ் மனதிற்குள் பெரும் கவலை ஏற்பட்டது.

தூக்கமே வரல, சாப்புடுற சாப்பாடு கூட நிம்மதியா சாப்புட முடீல, இப்புடி தெனந் தெனம் அடுத்தவென் ஒழச்ச காச அமுக்கி வாழற வாழ்க்க நமக்குத் தேவதானா, தூரத்துல ஏதோ வெளுச்சம் தெரீது, மொதல்ல இங்க இருந்து கிளம்பனும்….

இவ்வாறு புலம்பிக் கொண்டே அவ்விடத்திலிருந்து தப்பிக்க வெகு விரைவாகக் கிளம்பினான் ஜேம்ஸ்.

ஜேம்ஸ் தனது பத்து வயதில் தந்தையை இழந்தவன். அவனது தாய் தன் கணவனை இழந்த துயரில் மனநலம் பாதிக்கப்பட்டு மனநோயாளி ஆனாள். தனது தாயைக் காப்பாற்ற வேலைக்குச் சென்றான் ஜேம்ஸ். ஆனால் குழந்தைத் தொழிலாளர் என்று அனைவரும் வேலை தர மறுத்ததால் அன்று முதல் ஜேம்ஸ் திருடனாகவே வாழ்ந்து வந்து விட்டான். தனது தாயின் இந்த அவல நிலையை மட்டுமே மனதில் கொண்டு திருட்டுச் செயலில் ஈடுபட்டு வந்த ஜேம்சிற்கு அன்றைய இரவில் உறக்கம் இல்லை. உணவும் சரியாக எடுத்துக் கொள்வதில்லை. யாரும் பார்க்காத வண்ணம் ஒரு பழைய கட்டிடத்திற்குள் சென்று மறைந்து கொண்டான். அப்போது ஐந்து மணி இருக்கும். தேவாலயத்தில் மணியோசை கேட்டது.

தேவனே, நா என்ன செஞ்சேன்னு இப்புடி சோதிக்கிற, ஏ அப்பாவ எழந்தே, ஏ அம்மாவும் இப்ப ரொம்ப மோசமான நெலயில இருக்கிறா, நா வேலக்கிப் போகனும்னு தேடி அழஞ்சப்போ வயசு இல்லன்னு ஒதுக்குனாங்க, ஏ அம்மாவப் பாத்துக்க வேற வழியே இல்லாமத்தா இந்தத் திருட்டு வேலைய செஞ்சே. பத்து வருசமா போலீஸ் ஸ்டேசனும் பழய பில்டிங்குனும்’னு இப்டிக் கஷ்டப் படுறேன், இப்போ வேலக்கிப் போகப் போனா திருடனுக்கு வேலை இல்லனு ஒதுக்குறாங்க, இன்னொருத்தென் பொழப்ப அடுச்சு வாழுறதுக்கு எனக்கு மட்டும் என்ன ஆசயாவா இருக்கு, இந்தா இந்த எரநூறு ரூவா ஒரு ஸ்கூல் பிள்ளையோடயது, பஸ்சுல அவ தூங்கிட்டு வந்தப்போ மனச்சாச்சியே இல்லாம எடுத்துட்டு வந்துட்டேன், ஆனா மனசு வலிக்கிது தேவா, என்னாத்தா நீ படிக்க விடல, இப்ப நா இந்தக் காச எடுத்ததுனால அந்தப் பச்சப்புள்ளக்கி என்ன ஆகுமோனு ஒரே படபடப்பா இருக்கு, நீதா எனக்கு வழி விடனும், இனிமேலாச்சும் நா திருடனா வாழாம நல்லவனா மாறனும்; என்று கண்ணீரை வடித்துக் கொண்டே அமர்ந்தான் ஜேம்ஸ்.

மனதில் பெரும் கவலையும், தான் ஒரு தவறான செயலைச் செய்கிறேனே என்ற தாழ்வு மனப்பான்மையும் அவனை ஓரிடத்தில் இருக்க விடவில்லை. அவனால் எதுவும் செய்ய முடியாமல் அக்கட்டிடத்தின் சாளரம் ஒன்றின் அருகே வந்தான். அதில் இருந்து பார்த்த போது அந்த நகரில் உள்ள பெரிய தேவாலயம் அலங்கார மின்விளக்குகளின் பிரகாசத்தோடும் அழகோடும் தோன்றியது. அதன் அழகை இரசிக்கக் கூட அவனால் இயலவில்லை. அங்கேயே அமர்ந்தான். தனது தாய் தனிமையில் இருப்பாள் என்பதை நினைத்தான். உடனே காலை உணவு வாங்கித் தர வேண்டுமே என்று ஆலமரத்தடியில் இட்லிக்கடை அமைப்பார்களா என்று எண்ணிக் காத்திருந்தான். கையில் இருந்த அந்த இருநூறு ரூபாயில் இருந்துதான் வாங்க வேண்டுமா என்று தயக்கம் ஏற்பட்டது.

தேவா, ஏ அம்மாவ பசியில்லாம நீதா பாத்துக்கனும், நா இனிமே திருடப் போறதுல்லன்னு முடிவு செஞ்சுட்டேன், பக்கத்து ஊருக்கு வேல தேடிப் போகப் போறேன்; என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

பின் மூன்று மணி நேரங்கள் கடந்த பின் எழுந்து பார்த்தான். கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவனுக்குள் புதிதாய் ஏதோ ஒரு புத்துணர்ச்சி. வேலமரத்துக் குச்சி எடுத்துப் பல் துளக்கி விட்டு ஆற்றில் குளித்தான். வேலை தேடிச் செல்வதற்காக பக்கத்து ஊருக்குச் செல்லலாம் என்று தயாரானான். அவ்வாறு செல்லவிருக்கும் போது சாலையோரத்தில் ஒரு பணப்பை ஒன்று இருந்தது. அதைப் பார்த்த ஜேம்சுக்கு அப்போது அதை அபகரிக்கும் எண்ணமே வரவில்லை. அப்படியே அங்கேயே போட்டு விட்டு சென்றான். ஆனால் அவன் மனம் அவனை விட்டு வைக்கவில்லை. அதை எடுக்க வேண்டும் என்று இல்லை. அதை இழந்தவரிடம் அது சென்றடையுமா என்றும் வேறு யாரும் எடுத்துப் பயன்படுத்தி விடுவார்களோ என்றுமே எண்ணினான் ஜேம்ஸ். அவன் உடனே ஒரு மறைவான இடத்தில் நின்று அதனை கவனித்தான். யாரேனும் தேடுவார்களா என்று எண்ணி அங்கேயே நின்றான். யாரும் வராததை எண்ணி சற்றுக் கோபம் அடைந்தான். பின் அந்தப் பையை அவனே எடுத்தான். அதில் முதல் பகுதியில் அந்நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரின் புகைப்படம் இருந்தது. உடனே அதை எடுத்துக் கொண்டு பள்ளி இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டான். அவன் நகரை அடையும் போது சைலன் ஒலி கேட்டது. உடனே அஞ்சி ஓடி மறைந்து கொண்டான். ஆனால் அது ஆம்புலன்ஸ் என்று எண்ணியதும் தனது பழைய நினைவுகளை எண்ணி ஏளனமாகச் சிரித்தான். ஆனால் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தாலும் அந்தப் பர்சினை உரியவரிடம் கொண்டு செல்லத் துடிக்கிறோமே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டான். பின் எந்த பயமும் இல்லாமல் பள்ளி நோக்கி நடந்தான். இன்னும் இரண்டு தெருக்களைக் கடந்தால் பள்ளிக்கு சென்று விடலாம் என்று மகிழ்வோடு சென்றான். ஆனால் அதற்குள் இரு காவல்துறை அதிகாரிகள் ஜேம்சை கைது செய்தனர். அவன் கையில் இருந்த பர்சினை பார்த்ததும் மேலும் கோபமடைந்தனர். துணை ஆய்வாளரிடம் அவனைக் கொண்டு சென்ற அவர்கள் அவரிடம் ஜேம்ஸ் தலைமாயாசிரியரிடம் மயக்க மருந்து பயன்படுத்தி அவரிடமிருந்து பணப்பையைத் திருடிவிட்டதாகத் தெரிவித்தனர். ஜேம்ஸ் நடந்தவை அனைத்தையும் கூறியும் அவனை அனுமதிக்கவில்லை. தலைமையாசிரியரை அதுவரை ஜேம்ஸ் பார்த்தது கூடக் கிடையாது. பின் மறுநாளே ஜேம்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான். அவன் மீது பல வழக்குகள் இருந்ததால் அவனை யாரும் நம்பவில்லை. ஆனால் ஒரே ஒரு அரசு வழக்கறிஞர் மட்டும் ஜேம்ஸ் சார்பாக வாதாட வந்தார். தலைமையாசிரியருக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்கப் படவில்லை என்றும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தலைமையாசிரியரின் நிலையை உணர்த்தும் மருத்துவப் பரிந்துரையை சமர்ப்பித்த அவர் மேலும் ஒன்றைத் தெரிவித்தார். ஜேம்ஸ் திருடன் இல்லை என்பதை உறுதி செய்ய தலைமையாசிரியரே சாட்சியாக வர விரும்புவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீரின்றி இருப்பதால் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதன் விளைவாக நீதிபதி தீர்ப்பினை மூன்று நாட்களுக்கு பின்பு வழங்குவதாக ஒத்தி வைத்தார். மூன்றாவது நாள் ஜேம்சை நிரபராதியாக உறுதி செய்ய சாட்சியாக தலைமையாசிரியர் வந்தார். தான் அந்தப் பணப்பையை இழந்து மூன்று நாட்களுக்குப் பின்பே மாரடைப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். அதில் இருந்த பணம் எவ்வளவு என்று பேராசிரியர் தெரிவித்த போது அதே பணம் சில்லரை குறையாமல் இருந்ததை அறிந்து கொண்டு ஜேம்ஸ் திருடவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு வெளியே வந்த தலைமையாசிரியர் ஜேம்சைப் பார்த்ததும் ஜேம்சிற்கு அப்போதைய தேவை என்னவென்று கேட்டார். ஜேம்ஸ் தனது தாயின் நிலை பற்றிப் பேசினான். உடனே அதற்கு உதவுதற்காக அரசுக் காப்பகம் ஒன்றில் சேர்ப்பதற்கு வழிமுறைகளைக் கூறி அனுமதிச்சீட்டும் பெற்றுத் தந்தார். பின் மனதுக்குள் கூறிக்கொண்டார்,

தேவனே, தான் செய்வது தவறு என்று உணர்ந்து பணப்பையை என்னிடம் கொடுக்க வந்த ஜேம்சை இரட்சித்து விட்டாய், ஆனால் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி ஆபாசப் படங்களைப் பயன்படுத்தி வந்த என்னை தண்டித்து விட்டாய், பர்சில் ஆபாசப் படங்களை வைத்திருந்தேன், அதை ஜேம்ஸ் பார்க்கவில்லை, திருடுபவன் எல்லா இடத்திலும் தேடுவான், ஜேம்ஸ் அதை செய்திருந்தால்………

ஜேம்ஸ் தேவாலயத்திற்கு வரவில்லை, பைபுள் படிக்கவில்லை என்றாலும் உன்னை உணர்ந்து விட்டான், ஆனால் தவறாமல் தேவாலயம் சென்று வருபவனாக இருந்து கருத்துக்களை போதித்த நான் உன்னை உணரவில்லையே, தண்டித்து விட்டாய்……..

இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இறுதி சுவாசக்காற்று வெளியேறியது.

Print Friendly, PDF & Email

6 thoughts on “உணர்ந்து விட்டாயா தேவனை?

 1. இது சிறுகதை அல்ல
  இது எனது நெஞ்சம்
  உருகா வைத்த கதைகள்
  வாழ்த்துக்கள் என்றும் தொடரா
  இறைவன் அருள் புரியவேண்டும் ,
  ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

  1. இந்திராமைந்தன் கார்த்திக் பொன்னுமணி says:

   Thanking you very much

 2. இந்த காலங்கள்ல நெறய பேர் சாமி பேர சொல்லி ஏமாத்துறாவ. சினிமா நடிகை எல்லாம் போலி சாமியார் நம்பி கற்ப பறிகொடுக்றாவ. ஆனா கடவுள நம்புறவகள விட உணர்றவங்கள தா கடவுள் ரச்சிப்பார்னு தெளிவா உணருறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *