உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 6,841 
 
 

“இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் தாங்க முடியாத பட்சத்தில் அது வெடித்திருந்திருக்கும் இந்த முறையும் அவன் போனை எடுக்காமல் இருந்திருந்தால்.

“ஹலோ, சோரி சார்… ரொம்ப சோரி. ரொம்ப இக்கட்டான நெலம. அதனாலதான் போன எடுக்க முடியல. இன்னும் பத்தே நிமிஷத்துல வந்து சேந்துருவேன் சார்,” நான் ஹலோ சொல்லக்கூட இல்லை; என்னைப் பேசவிட்டிருந்தால் இன்னேரம் காதில் தக்காளி முளைத்திருக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறான் ஜகன்.

“இங்கப் பாரப்பு, இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வந்து சேரல…” திரண்டு வருகிற சினத்தைக் கட்டுப்படுத்தி முறைசெய்து அடுக்கி வைக்கத் தவறுகிற நேரத்தில் இந்த மாதிரி வார்த்தைகள் கட்டுக்கோப்பை இழந்து தடுமாறி கடைசியில் சூன்யத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அவன் மீண்டும் வாக்குறுதி அளித்தான். “இங்க வேல முடிஞ்சிரிச்சி சார். இப்ப கெளம்பினேன்னா சரியா பத்தே பத்து நிமிஷத்துல வந்து சேந்துடுவேன்,” இவனுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதை அவன் இதுவரை கொடுத்து வைத்திருந்த வாக்குறுதிகளை நிறுத்துப் பார்த்ததில் தெரிந்துவிட்டிருந்தது. எனக்கோ வேறு என்னதான் சொல்வதென்று தெரியவில்லை. எது எப்படியோ, இப்போதைக்கு இந்தப் பையனிடம் வார்த்தைகளை அளந்துதான் பேசியாக வேண்டும். தற்சமயம் என் குடுமி அவன் கையில்!

“நீங்க இப்ப எங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க சார்?”

“ஓல்ட் க்ளேங் மெக்டோனல்ஸ் ரெஸ்டாரண்டு முன்னுக்கு கார் பார்க்கிங்ல நின்னுகிட்டு இருக்கேன். இன்னும் பத்தே நிமிஷத்துல நீ மட்டும் வர்ல…” மீண்டுமொரு சூன்யம். இந்தச் சூன்யத்தை எனது சுய அறிவோடு ஏற்படுத்திக்கொண்டதுதான். மீதி வாக்கியத்தை, கொல செஞ்சிருவேன், அறைஞ்சி புடுவேன், ஏசிபுடுவேன்னா முடிக்க முடியும்? இருந்தாலும் ஓர் எச்சரிக்கைக்காக இழுத்துவிட்டேன். இழுத்துவிட்டதில் நானும் எச்சரிக்கையாக இருந்தேன்.

“கடிகாரத்தப் பாத்துக்கிட்டே இருங்க. பத்து நிமிஷத்துக்கு ஒரு நிமிஷம் கூடப் போச்சின்னா என்ன என்னான்னு கேழுங்க,” இவன் கொடுக்கிற வாக்குறுதிகள் இருக்கே, கேக்கக் கேக்க இனிமையாக இருக்கும், தலையில் அடித்து சத்தியம் பன்னிச் சொல்லுவான்; ஆனால், செய்து தொலையமாட்டான்.

போனை படக்கென வைத்துவிட்டான்.

அடக்கடவுளே, இவ்வளவு நேரம் போன் பண்ணதை ஏன் எடுக்கவில்லை என்று கேட்ட மறந்துவிட்டேனே…

இதற்கெல்லாம் மூர்த்தியை உதைத்தால்தான் சரியாவரும். நான் பாட்டுக்கு சிவனேயென்று இத்தனை நாளாக தான்யூ பெங்கிடம் போய்கொண்டிருந்தேன். தமிழன்டா தமிழன்டா என்று மண்டையைக் கழுவி இந்த உருபடாத மூதேவியிடம் கொண்டுவந்து தள்ளிவிட்டுவிட்டான்.

தான்யூ பெங் சீனன்தான். எனக்கும் அவனுக்கும் எந்த ஒட்டு உறவும் கிடையாதுதான். அவனுடைய கடைக்குள் நுழைந்த கஸ்டமர் பிச்சைக்காரனாக இருந்தாலும் “தௌக்கே” என்று உயர்த்தினாலும் தெருவில் பார்க்கும்போது நம்மை கிருமிபோல் பார்ப்பவன்தான். ஆனாலும் அவனிடம் தொழிலில் சுத்தமும் சுறுசுறுப்பும் இருக்கிறது. எனக்கு வேண்டியது வேலை முடியவேண்டும்; அவனுக்கு வேண்டியது பணம். இரண்டும் இடம்மாற தாராளமாக நடந்துவிட்டுப் போகிறது வியாபாரம்!

இது மாதிரி கூத்துகளுக்காகத்தான் முன்கூட்டியே எந்தத் தமிழன் கடைகளுக்கும் நான் காலடி எடுத்து வைப்பதில்லை. சீனன் கடை லட்சணத்தோடு நம்மாளுங்க கடை லட்சணத்தை நிற்கவைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நாட்டு பொருளாதாரம் சொல்லுமைய்யா தீர்ப்பு!

கண் முன்னுக்கு “வருக, வருக” பலகை இல்லாமலேயே அழைத்துக்கொண்டிருந்தது மெக்டோனல்ட் ரெஸ்டாரண்ட். ஐந்து மணிக்கெல்லாம் வந்து கிழித்துவிடுவதாகச் சொல்லியிருந்ததை நம்பி வந்து சேர்ந்து இரண்டு மணி நேரம் நின்றதுதான் மிச்சம். இரவு வெளிச்சத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக விழுங்க ஆரம்பிக்க வயிறு ஏற்கனவே விழுங்கியிருந்தைக் கரைத்துவிட்டு அடுத்த விழுங்களுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது! மெக்டோனல்ட் “வாங்க வாங்க” என்று அழைக்கிறது.

போனால் இருபது வெள்ளி செலவுதான். பசியைக் கொஞ்ச நேரத்துக்குப் பதுக்கிவைத்துவிட்டால் சரியாகிவிடும். இன்னும் பத்து நிமிஷம் தானே!

பதுக்கி வைக்கிற சமாச்சாரமா பசி? ப்ளட் ப்ரஷர் மாத்திரை சாப்படனும் வேற. சாப்பிடாமல் மாத்திரையை எப்படி சாப்பிடறது? வேற ஏதாவது ஒட்டுக்கடை… எதுவுமே கண்ணுக்குத் தெரியலையே!

எனக்கு வருகிற வெறிக்கு கண்ணில் படுகிற எல்லாவற்றையும் உடைத்துவிடலாம் போலத் தோன்றுகிறது. வரட்டும் அவன்; இரண்டில் ஒன்று பார்ப்பதே சரி. பத்து நிமிடம் என்று நிமிடத்தைத் தருமம் செய்கிறான் பயல்.

பசி ரொம்பவும் அதிகமாகிவிடும் போலயிருக்கிறது. இருபது வெள்ளி போனால் போகிறது. முதலில் போய்ச் சாப்பிடலாம் என்று தோன்ற அந்தப் பணக்காரக் கடைக்குள் நுழைந்துவிட்டேன் கையில் இருபது வெள்ளிக்கு மேல்தான் கட்டாயமாக இருக்கும் என்ற அதீத நம்பிக்கையில்.

இரண்டு மூன்று பட்சனங்களை ஆர்டர் செய்து வாங்கி கொண்டு காலியான மேசையைத் தேடிக் கண்டுபிடித்து உட்கார்ந்தேன். சாப்பிடுகிற வேலைக்கு நடுவே மூர்த்திக்கு போன் செய்யலாம் என்று தோன்றியது.

“சொல்லுப்பா…”

“என் வாயில நல்லா வந்துரும்டா மூர்த்தி! நான் உங்கிட்ட கேட்டனா தமழனுக்கு வியாபாரம் கொடுக்கப் போறேன்னு? நா பாட்டுக்கு ஒழுங்கா சீனங்கிட்ட கொடுத்து வேலைய ஸ்மூத்தா முடிச்சிக்கிட்டு இருந்தேன். பையனோட ஃப்ரண்டுன்னு சொல்லி இந்தப் பையங்கிட்ட அனுப்பச் சொல்லி நச்சரிச்ச. இப்பப் பாரு. தெருவுல கொண்டாந்து நிப்பாட்டிப்புட்டான்,” மெக்டோனல்ட் பர்கர் வாயில் மிதப்பதை மறந்து கேட்டுவிட்டேன்.

“என்னடா சொல்லுற? பையன் நல்ல பையன்தான்டா. அப்படி என்னத்த உன்ன ஏமாத்திட்டான்?” மறுமுனையில் மூர்த்தி.

“யோவ், அவன் நல்லவனா கெட்டவனான்றது என்னோட கவல இல்லய்யா! எனக்கு என் கம்பியூட்டர் திரும்பக் கெடைச்சா போதும். நான் கொண்டுபோய் சீனங்கிட்டயே செஞ்சிகிறேன். எவ்ளோ வேல பெண்டிங்ல இருக்கு தெரியுமா?” மூர்த்தி கேட்கின்ற நிலையிலும் நான் பேசுகின்ற நிலையிலும் இருப்பது சாதகமாகிப் போய்விட அவனை திட்டித் தீர்த்தேன்.

“இதென்னாடா வம்பா போச்சி! சரி சரி. நான் இப்பவே எம்பையங்கிட்டச் சொல்லி என்னான்னு விசாரிக்கச் சொல்றேன்,” என்றான். “உன் பையங்கிட்டயா? அவன் எங்க இருக்கான் இப்ப?,” இதையெல்லாம் கேட்டு வைத்துக்கொள்வது நல்லது இல்லையா? “கூட்டாளிங்களோட வில்லு படம் பாக்கப் போறதா சொல்லிட்டுப் போனான். படம் இன்னேரத்துக்கு முடிஞ்சிருக்கனும். சரி சரி. நீ போன வைய்யி. நான் பாத்துக்கிறேன்,” என்று அழுத்தமான ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

எனக்கு கலவரமாகத் தொடங்கியிருந்தது. உண்மையிலேயே ஜகன் வருவானா இல்ல கம்பியூட்டர அபேஸ் பன்னிக்கிட்டு போய்விடுவானோ என்ற ஐயம் வேறு அவ்வப்போது தலைதூக்கி எட்டிப்பார்த்தது. இல்லாவிட்டால் கிட்னியை உருவுவது மாதிரி எதையாச்சும் உருவி மட்டமான ஜாமான போட்டு வைத்திடுவானோ என்றும் அந்த ஐயம் பரிணாமித்தது. ஒரு வேளை அதனால்தான் இவ்வளவு தாமதமாக்குகிறானோ?

நான்கு நாள் வேலை அப்படியே ஸ்தம்பித்துக் கிடக்கிறதே. அடிக்கடி தான்யூ பெங் கண்முன் வந்து சென்றான்.

நானும் சாப்பிட்டே முடித்துவிட்டேன்; இன்னும் அவன் வந்த பாட்டைக் காணோம். மெக்டோனல்டை விட்டு வெளியே வந்து மீண்டும் கார் நிறுத்துமிடத்துக்குச் சென்றேன். போனை எடுத்து மறுபடியும் ஜகனுக்கு லைனை விரட்டினேன். முதல் முயற்சி தோல்வி; இரண்டாவதும்; மனம் தளரவில்லை; மூன்றாவது முறையாக விடாமல் போன் செய்தேன். இந்த முறை எடுத்தான்.

“ஏன்டா நீ இப்ப வரியா இல்லியா? மூனு மணி நேரமா நின்னுகிட்டு கெடக்கேனே எனக்கு என்னா வேற வேல இல்லைன்னு நெனச்சியா? எங்க இருக்க இப்ப நீ?” மெக்டோனல்ட் பர்கர் மூலம் உள்வாங்கிய காரத்தையும் கதகதப்பையும் பேச்சில் கிடத்தினேன். இருபத்தோரு வெள்ளி இப்படியும் வேலை செய்கிறதே. அதுவரை பரவாயில்லை.

“இதோ வந்துட்டேன் சார். வர்ர வழியில மோட்டர்ல எண்ண முடிஞ்சி போயிருச்சி. தள்ளிக்கிட்டே வந்து பெட்ரோல் ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்து எண்ண ஊத்திட்டு இப்பதான் கெளம்பறேன். பாதி தூரம் வந்துட்டேன். நீங்க மெக்டோனல்ட் ரெஸ்டோரண்ட் முன்னுக்கு பார்க்கிங்லதான இருக்கீங்க. தோ வந்துட்டேன்,” என்று சொல்லி மடக்கென போனை வைத்துவிட்டான்.

குமுறல் முழுமையாக வெளியாகாமல் குமைந்துகொண்டே இருந்தது. “இனிமே எந்தப் பயலுகளையும் நம்பவே கூடாது. கரெக்டா கலரக் காட்டிடுறானுங்க,” என் இத்தனை ஆண்டுகால வரலாற்றிலேயே நான் நம்பி டீலிங் வைத்துக்கொள்வது இரண்டே தமிழ் வியாபாரிகள்தான். ஒன்று, ஒர்க்ஷப் வைத்திருக்கிற ஜானகிராமன், இன்னொன்று புளிச்சகீரை விற்கிற ராமாயி கெழவி. இவர்கள் இரண்டு பேரைத்தான் கண்ணியமான வியாபாரிகள் என்று என்னால் மார்க் போட முடியும். மற்ற எத்தனையோ நம்மவர்களை சந்தித்து மூக்குடைந்து வந்ததுதான் மிச்சம். இதோ மீண்டும் இன்னொரு மூக்குடைப்பு!

அதோ இதோ என்று என் வயிற்றெரிச்சலையெல்லாம் ஒட்டு மொத்தமாக வாரிக்கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான் ஜகன்(மோகினிப்பிசாசு). நல்ல வேளை; சாப்பிட்டவுடனேயே ப்ளட் ப்ரஷர் மாத்திரையை விழுங்கிவிட்டிருந்தேன்.

“சோரி சார், உங்கள ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன். ரியல்லி சோரி சார்” மூச்சுக்கு மூச்சு சார் சார் என்று சருக்கி விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான். ஆனால், அதற்கெல்லாம் அசராத அசுரன் நான்.

அவனது எண்ணெய் வடிகிற முகத்தைப் பார்க்கக்கூட எனக்கு விருப்பமில்லை. “தோ பாரப்பு, உங்கிட்ட என் கம்பியூட்டர ரிப்பேருக்குக் கொடுத்து நான் பட்டதெல்லாம் போதும். செஞ்சிட்டியோ இல்லியோ, எனக்கு மொதல்ல என் ஜாமாவத் திருப்பி குடுத்துரு. நான் பழையபடி சீனங்கிட்டயே குடுத்து செஞ்சிக்கிறேன்.”

“அப்பிடியெல்லாம் இல்ல சார். நான் இன்னைக்குக் காலாங்காத்தாலயே எல்லாத்தயும் செஞ்சி முடிச்சிட்டேன். எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க வந்து தாராளமா எடுத்துக்கிட்டு போவலாம். வாங்க என் கூட,” என்று மோட்டரை உசுப்பேற்றி வழிகாட்டினான் பாதையை. வேறு வழியென்ன? போக வேண்டியதுதான் அவன் பின்னாலேயே!

எப்படி எப்படியோ வளைந்து நெளிந்த சாலையைச் சமாளிக்க துவண்டு போன என் வண்டி குத்துயிரும் குலையுயிருமாய் வந்து சேர்ந்தது அவனது வீட்டுக்கு. ஐய்யாருடைய வீடும் அலுவலகமும் ஒன்றுதானாம்!

கொண்டுவந்து கொடுத்தான் என் கம்பியூட்டரை. இருட்டில் சரிசெய்துகொள்ள சந்தர்ப்பம் கைவிரித்துவிட்டது. எப்படியோ, பொருள் மீண்டும் கைக்குக் கிடைத்த நிம்மதி.

இடையிடையே ஏதோ முனுமுனுத்துச் சந்தோசப்பட்டுக்கொண்டே இருந்தான் ஜகன். என்ன முனுகல் அது என்று காதை கருத்தாகச் செலுத்தியபோதுதான் விளங்கியது புதுப்பாட்டு என்று. “தீந்தளக்கு தில்லானா, தீந்தளக்கு தில்லானா,”

நொடிகள் சில நெட்டித் தள்ளிய பின்புதான் ஞாபகத்துக்கு வந்தது எனக்கு. “அட, இது வில்லு படத்தோட பாட்டு இல்ல?” என் ஞாபக சக்தி எனக்கு போட்டுக் கொடுத்துவிட்டது.

“ஒகோ, அப்படியா சங்கதி” என் மனம் அனுமானித்தது.

“சார், செலவு கொஞ்சம் கூடிடுச்சி. இன்னொரு எக்ஸ்ட்ரா இருவது வெள்ளி சார்…” என்று இழுத்தான். எனக்கு இருக்கிற டென்ஷனில் இவனுடைய எக்ஸ்ட்ரா ச்சார்ஜி மண்டைக்கு மணியடித்துவிட்டது. பாக்கெட்டில் இருந்த இருபத்து ஆறு வெள்ளியில் இருபத்து ஒன்று மெக்டோனல்ட் செகப்புத் தலைக் கோமாளி முழுங்கிவிட்டான். இருப்பது ஐந்தே வெள்ளிதான். இவர் செய்து வைத்திருக்கிற வேலைக்கு எக்ஸ்ட்ரா ச்சார்ஜி வேற!

“இப்ப என் கைய்யில இருந்த காசு முடிஞ்சிபோச்சி. நாளைக்கு வீட்டுக்கு வா தரேன்,”

இப்போது நான் அரசியல் செய்ய வேண்டிய நேரம்!

(17 மே 2009 மலேசிய நண்பன் நாளிதழ் ஞாயிறு பதிப்பில் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *