உடுக்கை விரல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 12,435 
 

தூரத்தில் பழநிமலைப் படிக்கட்டுகளும் உச்சிக்கோபுரமும் மின்சார விளக்கு ஒளியில் ஷொலிப்பது, படம் விரித்து நுனிவாலில் எழுந்து நிற்கும் நாகப்பாம்புபோல எனக்குத் தெரிந்தது. வடக்கு முகமாகப் பாய்ந்து வரும் சண்முக நதியின் நற்றாற்று மணல்திட்டில், நான் தென்கிழக்குத் திசை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து இருந்தேன்.

”முருகா… அறுபடை நாதா… நான் ஆடுற கடைசிக் கூத்து இது. இருவத்தி ஆறு நாளு நடத்துற கூத்தை, இன்னிக்கு ஒரு ராத்திரியிலேயே உன்னைச் சாட்சியா வெச்சு ஆடப்போறேன். நான் உண்மையான கூத்துக்காரனா இருந்தா, மழை எறங்கணும்; கார்வெள்ளம் எடுக்கணும்;

என்னை அடிச்சுட்டுப் போயி உன்னோடு சேர்க்கணும்…”

குமிழியிட்டு ஓடும் ஆற்று நீர்ப்பெருக்கின் சலசலப்பைத் தவிர, நிசப்தம். மனித அரவம் அற்ற பீதியூட்டும் இருள்.

நான் இடது கையில் பிடித்திருந்த வெண்கல உடுக்கையைச் சரிப்படுத்தினேன். வலது ஆள்காட்டி விரலை உடுக்கையில் இறக்கினேன்.

‘பம்… பம்… பம்…’

அடுத்த கணம், ஆகாயத்தில் இருந்து கண்களைப் பறிப்பதுபோல் ஒளிப்பிழம்பு. எரிநட்சத்திரம் அறுந்து கீழே இறங்கியது. எதிர்க்கரையில் உள்ள ஒற்றை இலுப்பைமரத்தின் பட்டுப்போன கிளையில், பொந்தணையும் குருட்டு ஆந்தைகள் அலறிக் குரல் இட்டன. தலைக்கு மேலாக வாவற்பட்சிகள் வட்டமிட்டபடி கத்தின.

எனக்கு விரல்கள் நடுங்கின. ஏதோ அபசகுனம்போல் பட்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் உடுக்கை இசைத்தேன்.

‘பம்… பம்… பம்…’

பாறை இடுக்குகள் எதிரொலித்தன. நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்தை ஆரம்பித்தேன்.

‘ஆட்டக் களத்திலே / ஆடும் கலைஞனுக்கும் /பார்க்கும் மக்களுக்கும் / குத்தம் குறை வராமே/ தீட்டு தடங்கல் வராமே / காத்துக் கருப்பு அண்டாமே/கனதிடமாக் காத்து நின்று / கூத்து நடக்க வேணுமப்போ…’

என் உடுக்கடி, வேகம் கொண்டது. அடுத்து, கூத்தின் கதைத் தெய்வங்களை கண் முன்னே எழச் செய்ய வேண்டும். பாடல் வரிகள் மனசுக்குள்ளேயே இருந்தன. நாக்கு உச்சரிக்க மறுத்தது. பாடல்கள் வெளிப்படாத அவஸ்தை. நான் எழுந்து கத்தினேன்.

”அய்யோ… சின்னண்ணா… பெரியண்ணா… அருக்காணி… தங்காயீ… பெரியகாண்டித்தாயீ… இது என்ன சோதனை?”

அப்போது என் இடது கையில் இருந்த வெண்கல உடுக்கை நழுவி, மணலில் விழுந்து புதைந்தது. நடுங்கும் வலது கைவிரல்களை நான் பார்த்தபடியே நின்றேன். அந்த உடுக்கை விரல்கள், என்னை நிர்மானுஷ்ய வெளியில் நிற்பதுபோல உணரச் செய்தன.

வெகுதான்ய வருடத்தின் கொடூரப் பஞ்சம். கிணறுகள், நெல் காயப்போடுவதுபோல வறண்டுவிட்டன. குடியானவர்கள் ஆடு-மாடுகளை விற்றுக்கொண்டிருந்தனர். விதைத் தானியங்கள் அடுப்படிக்குப் போயின. கோடைக் காற்றுக்கு, தென்னைகளும் பனைகளும் முறிந்து விழுந்துகொண்டிருந்தன.

கார்த்திகை மாதம் பிறந்தும், பூமியில் ஒரு பொட்டுத் துளி இறங்கவில்லை. இரவில் ஆகாயத்தில் விண்மீன்கள் மினுங்கிக்கிடந்தன. பகலிலும் முகில்கள் எடுப்பதே இல்லை.

முன்னிரவு. பனத்தம்பட்டி போய்விட்டு வந்த அய்யா, திண்ணையில் ஆயாசமாக அமர்ந்தார். தோள் துண்டில் முடிந்திருந்த நிலயாவரைக் காய்களை முறத்தில் கொட்டினார். நான் தண்ணீர் செம்பை நீட்டினேன். நிலவடியில் நின்றிருந்த அண்ணன் கேட்டான்…

”பெரிய எசமாங்க என்ன சொன்னாங்க?”

” ‘சனங்க பஞ்சத்துல இருக்கும்போது கூத்து எதுக்கு?’னு கேட்கிறாரு.”

”உடுக்கப் பாட்டு பாடினா மழை எறங்குமுன்னு சொன்னீங்களா?”

”அவருக்கு அதுல நம்பிக்கை இல்லை.”

”அப்ப, நிலயாவரைக் காயைத் தின்னுட்டு நாம சாவ வேண்டியதுதானா?”

அய்யா மேற்கொண்டு பேசவில்லை. நான்காம் சாமத்தில் என்னையும் அண்ணனையும் எழுப்பினார். உடுக்கைகளையும் கூத்து உடைகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினார். தென்கிழக்குத் திசை நோக்கிய பயணம். விடிந்தபோது பனங்காடைகள் கத்தின. மழையற்ற வெளி. கொக்குக் கூட்டங்கள் தரை இறங்காமல் வேறு சீமை பார்த்துப் போய்க்கொண்டிருந்தன. பகல் முழுவதும் கானல் அனலோடிய வெயில்.

வழி நெடுக எந்த ஊரிலும் உடுக்கைக் கூத்துக்கட்ட சம்மதிக்கவில்லை. ‘கூத்துக்கட்டினா மழை எறங்கும்’ என அய்யாவும் அண்ணனும் கெஞ்சியபோது சனங்கள் சிரித்தார்கள். பொழுது அந்தி சாய்ந்தது. நாங்கள் சண்முக நதியை அடைந்தோம். மணலில் தோண்டியிருந்த ஊற்றுக்குழிகளில்கூட நீர் சுரக்கவில்லை. கடுமையான தாகம்; பசி. நாங்கள் சோர்ந்துபோய் மணல்திட்டில் அமர்ந்தோம்.

இருள் சூழ்ந்ததும் பழநிமலை இருக்கும் திசையைக் காட்டி அய்யா சொன்னார்…

”நான் பாலகனா இருக்கும்போது, ஒரு பஞ்சக் காலத்துல எங்க அய்யா என்னை இங்கதான் கூட்டிவந்தாரு. அந்த ஆண்டவன் எங்களைக் கைவிடலை. அதுபோல இப்ப நான் உங்களைக் கூட்டிவந்திருக்கேன்.”

அய்யா, வெண்கல உடுக்கையை எடுத்து வெறி மூண்டவர்போல இசைக்க ஆரம்பித்தார்.

‘பம்… பம்… பம்…’

சிறிது நேரத்துக்குப் பின் உடுக்கடியை நிறுத்திவிட்டு, திடீரென எழுந்தார்.

”மழை பெய்யவேண்டி, இப்ப நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்துக்கட்டப்போறேன். மழை எறங்கினா, ஊர் திரும்புறோம். இல்லையின்னா பசி மயக்கத்துல செத்து இப்படியே மயானத்துக்குப் போறோம்.”

நானும் அண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

”இந்த மணல்ல நமக்கு முன்னால ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து கூத்து பார்க்கிறதா பாவிச்சு, நான் இப்ப கதைத் தெய்வங்களை அழைக்கிறேன்.”

அய்யா, முதலில் பெண் தெய்வங்களை அழைத்தார்.

” திருக்கோயில்விட்டு மங்கே ஆடிவர வேணுமம்மா / தவசுமரம் சோலையிட்டு / தானிறங்கி வாருமம்மா… ”

அடுத்து ஆண் தெய்வங்களை அழைத்தார்.

” கண்ணு சிவக்கலையோ… கடும்கோபம் ஆகலையோ / மீசை துடிக்கலையோ… முன் வீரம் ஆகலையோ/தூக்கி எறியலையோ… துள்ளிக் குதிக்கலையோ / இன்னும் என்ன தாமசமோ… ஆடிவர வேணுமய்யா… ”

அய்யா உடுக்கடித்து, பாடி, வட்டமாக ஆடினார். அண்ணன் உடுக்கடித்து, பின்பாட்டு பாடினான். அண்ணமார்சாமி கதை தொடங்கிவிட்டது. மணலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த எனக்கு, இது வீண்வேலை என்றே தோன்றியது. என் கனவு எல்லாம் பொள்ளாச்சி சென்று மகாலிங்கம் பஸ் கம்பெனியில் கரிப்புகை பஸ் ஓட்ட வேண்டும். அதேபோல் பிரிட்டிஷ் துரைக்கு ஜீப் ஓட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அய்யாவோ உடுக்கடிக் கூத்துக்கு என்னை வாரிசாக உருவாக்க எவ்வளவோ பிரியப்பட்டார். நான் உதாசீனப்படுத்திவிட்டேன்.

குன்றுடையானைத் திருமணம் செய்துகொண்ட தாமரை, குழந்தை வரம் வேண்டி கயிலாயம் செல்லும் இடம். அய்யா, புலம்பலும் அழுகையுமாகக் கதை கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் நீர்த்துறை பக்கம் இருந்து இருவர் வந்து நின்றனர். அவர்கள் தலையில் பெரிய மண்மொடா இருந்தது.

அய்யாவும் அண்ணனும் கூத்திலேயே குறியாக இருந்தார்கள். நான் எழுந்து இருளில் அவர்களை நோக்கி நடந்தேன். காய்ந்த கோரைகள் காலில் பட்டு நொறுங்கும் ஒலி கேட்டது. நான் நெருங்க நெருங்க, இருவரில் ஒருவன் கத்தினான்.

”இலுப்பமரத்துப் பேயேதான்டா இது… ஓடு.”

மண்மொடாக்கள் நிலத்தில் விழுந்து உடைந்தன. இருவரும் திரும்பி, மேடு ஏறி தலைதெறிக்க ஓடிப்போனார்கள். எனக்குச் சிரிப்பு வந்தது. திரும்பி வந்து பழையபடி உட்கார்ந்துகொண்டேன். கூத்தில் பொன்னர், சங்கர், அருக்காணி, தங்காயி எல்லாம் பிறந்து வளர்ந்துவிட்டனர்.

அந்தச் சமயத்தில், நீர்த்துறை மேட்டில் இருந்து தீவட்டிகள் கீழ் இறங்கி வந்துகொண்டிருந்தன. பயந்து ஓடிய இருவரும் ஊருக்குள் சென்று, ஆட்களைத் திரட்டி வருகிறார்கள் என்பது எனக்குப் புரிந்துபோயிற்று.

தீவட்டி ஆட்கள் மணற்பரப்புக்கு வந்து, எங்களைச் சூழ்ந்து நின்றார்கள். அய்யா, கூத்தில் வீரமலைக் காட்டில் இருந்து கிளி பிடித்து வந்த பின், தலையூர் காளி வளநாட்டைக் கொள்ளையிட வரும் பகுதிக்கு மாறியிருந்தார்; உடுக்கடியிலும் பாடுவதிலும் மனம் ஒன்றியிருந்தார். சுற்றி நிற்பவர்களைப் பார்த்தபடியே மிரட்சியோடு பின்பாட்டு பாடிக்கொண்டிருந்தான் அண்ணன்.

வல்லயம், குத்தீட்டி எனப் பிடித்திருந்த ஆட்களை விலக்கி, பூசாரி முன்னே வந்தார். பயந்து ஓடிய இருவரும் ஊர்த் தலைவரும் அவர் பின்னே வந்து நின்றனர். பூசாரி எங்களை உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார்…

”சாமத்துல, ஆத்துக்கால்ல உடுக்கடிக் கூத்துக் கட்டுச்சுன்னா, கண்டிப்பா அது இலுப்பமரப் பேயாத்தான் இருக்கும். ரொம்ப காலத்துக்கு முன்னால நம்ம ஊர்ப்பக்கம் எவனாவது உடுக்கடிக் கூத்துக்காரக் குடும்பம் அகாலத்துல செத்திருக்கும். இன்னிக்கு வெறிகொண்டு எந்திரிச்சு ஆடுது.”

அச்சம் எழுப்பும் சூழ்நிலை மூண்டுவிட்டதை உணராமல், அய்யா கூத்தே கதியாக இருந்தார். பூசாரி தொடர்ந்து பேசினார்.

”அப்படியே ஆராவது ரெண்டு பேர் ஊருக்குள்ள ஓடி, எல்லா வூட்லேயும் நெலவுல வேப்பங்கொலயைச் சொருகிவெச்சு, பொண்டு புள்ளைகளை எல்லாம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க. ஆரும் நடையை நீக்கி வெளியில வந்துர வேணாம். இந்தப் பேயுக இங்க இருக்கிற மாதிரி இருக்கும். சடார்னு பாஞ்சு ஊருக்குள்ள போயி காவு வாங்கிரும்.”

ஆட்கள் வல்லயத்தையும் குத்தீட்டியையும் நீட்டித் தயாரானார்கள். நான் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தேன். அந்த நேரம், கூத்தைத் திடீரென நிறுத்தினார் அய்யா.

”சாமீ… நாங்க உடுக்கடிக் கூத்துக்காரங்க. மேக்கே பூளவாடி பக்கம் இருந்து வர்றோமுங்க. மழை பெய்யணும், மக்கப் பஞ்சம் தீரணுமுன்னு என்னோட தெய்வத்து மேல நம்பிக்கை வெச்சு இன்னிக்கு நாங்க கூத்துக்கட்டறோமுங்க. எங்க கூத்து பொய்க்காம மழை எறங்குச்சுன்னா, நாங்க மனுஷங்கதான்னு எங்களை வுட்டுருங்க. மழை எறங்கலீன்னா இலுப்பப் பேயுனு நெனைச்சு, இந்த ஆத்தங்கரையிலேயே தீவட்டியால கொளுத்திக் கொன்னுருங்க.”

உடனே, உடுக்கை இசைத்துப் பாட ஆரம்பித்தார் அய்யா. கூத்தில், பொன்னரும் சங்கரும் தலையூர் காளியுடன் சண்டையிட முடிவுசெய்தனர். தீவட்டி ஆட்கள் ஆயுதங்களை மணலில் ஊன்றிவிட்டு, அதே இடத்தில் உட்கார்ந்து கூத்தைக் கவனித்தனர். நேரம் செல்லச் செல்ல அய்யாவின் உடுக்கடியும் பாடலின் தொனியும் மூர்க்கமாக மாறின. அப்போது உச்சி வானில் இருந்து பளீரென ஒரு மின்னல். நிலம் அதிர்வதுபோல ஓர் இடி. ஜலமூலையில் இருந்து தனித்த கருமுகில் கூட்டம் மேலேறி வந்துகொண்டிருந்தது.

நானும் தீவட்டி ஆட்களும், கூத்தையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தோம். அடுக்கடுக்காகக் கிளர்ந்து வந்த கருமுகில் கூட்டங்கள் விரைந்து உச்சி வானை மூடின. மின்னலும் இடியும் நிற்கவில்லை. கூத்தில் பொன்னரும் சங்கரும் போர்க்களம் புறப்படும் நேரம்… சடசடவென மழை இறங்கிற்று. கல்மாரிபோல கனமானத் துளி.

தீவட்டிகள் அணைந்து விட்டன. அய்யா, கூத்தை நிறுத்தவில்லை. பூசாரியும் ஊர்த் தலைவரும் தீவட்டி ஆட்களோடு வந்து அய்யாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். அதன் பின் எங்களை அவர்களின் கல்துறை கிராமத்துக்கே கூட்டிப் போனார்கள். வயிறார உணவு கொடுத்து ஊர் சாவடியில் தங்கவைத்தனர்.

மறுநாள் மழை ஓய்ந்து, ஏறுவெயில் வந்துவிட்டது. தலைவாசலில் இரட்டைச் சாட்டுக் குதிரைவண்டி ஒன்று வந்து நிற்பதைக் கண்டோம். அதன் பின்னே நூற்றுக்கும் மேற்பட்ட காளைமாட்டு சவாரி வண்டிகள் வந்து நிற்கத் தொடங்கின. இரட்டைச் சாட்டுக் குதிரை வண்டியில் இருந்து இறங்கிய இளைஞர், பட்டு அங்கவஸ்திரம் அணிந்து, ராஜபரம்பரைத் தோற்றத்தில் இருந்தார். இந்த ஊர்த் தலைவரும் பூசாரியும் வந்த பின்பு பேசினார்.

”நான் தாராபுரத்துக்கு வடக்கே செங்காட்டூர் பட்டக்காரர். எங்க பக்கத்திலும் மழை இல்லை… கடும் பஞ்சம். பண்டம்பாடிகளுக்கும் தீனி இல்லை. விக்கிறதுக்கும் மனசு இல்லை. என்ன பண்றதுங்கிற குழப்பத்துல, எதுக்கும் ஒருமுறை பழநி முருகன்கிட்ட வந்து வேண்டினா வழி கிடைக்குமுன்னு வண்டி கட்டிக்கிட்டு வந்தோம். சாமி கும்பிட்டுட்டு வடக்கே வரும்போது இங்க மட்டும் மழை பெஞ்சிருக்கு. தெக்க போகும்போது இங்க மழை இல்லையே என்னன்னு கேட்கலாமுன்னு வந்தோம்.”

ஊர்த் தலைவர் எங்கள் மூவரையும் கூப்பிட்டு முன்னே நிறுத்தினார். நேற்று இரவு சண்முக நதிக்கரையில் நடந்தவற்றை விவரித்தார். பட்டக்காரர், அய்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டார்.

”நீங்க எங்க மேல இரக்கப்பட்டு எங்க ஊருக்கும் வரணும்; இதே மாதிரி கூத்துகட்டணும்; எங்க பஞ்சத்தையும் போக்கணும்.”

இரட்டைச் சாட்டுக் குதிரைவண்டி செங்காட்டூர் அரண்மனை வீட்டின் முன்பு வந்து நின்றபோது, பெண்கள் விளக்குமாடத்தில் அந்திவிளக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர். இரவு ஆகாரத்துக்குப் பின்னர், வேலையாட்கள் வந்து அரண்மனையின் பின்கட்டு நடையைத் திறந்து எங்களைத் தோட்டத்துக்குள் கூட்டிப்போயினர். தென்னந்தோப்பு நடுவில் இருந்த வீட்டில் தங்கவைத்தனர். மயில்-மாணிக்கக் கொடி பந்தல் இட்ட முற்றம். வீடு எங்கும் முதிர்ந்த நெல் வாசனை. அய்யா, மறுநாளே அண்ணமார்சாமி கூத்துக்கான ஏற்பாட்டைச் செய்தார். கூத்து உடை அணிந்து உடுக்கையின் இடது பக்க நரம்பைச் சரிபார்த்துக்கொண்டிருந்த அய்யாவிடம் சென்று நான் கேட்டேன்.

”நானும் பின்பாட்டு பாடுறேன்.”

அய்யா, என்னை நிமிர்ந்து பார்த்தார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார்.

”அண்ணமார்சாமிகள் பாண்டவர்களோட மறுபிறப்பா பூலோகத்துல பொறந்திருக்காங்கன்னு ஐதீகம். அவுங்க, உசுரோடு தெய்வமாகி தேவலோகம் போனவங்க. அவுங்க வரலாற்றை நாம ஆம்பள வேஷம், பொம்பள வேஷம்னு மாறி மாறி ஆடிப் பாடிக் கூத்துக்கட்டுறோம். பார்க்கிற சனத்துக்கு நாம கூத்துக்காரங்களா தெரியக் கூடாது; கதைத் தெய்வங்களா தெரியணும்… கையெடுத்துக் கும்பிடணும்.”

அய்யா, குனிந்து கால் சலங்கைகளை அணிந்தபடியே மறுபடியும் பேசினார்.

”நான் உடுக்கடிச்சுப் பாடினா மழை எறங்கும்கிறது என் நம்பிக்கை. அதுபோல உனக்கு எப்ப நம்பிக்கை வருதோ, அப்ப

நீ கூத்துக்கட்ட வா.”

அய்யா, கால் சலங்கை குலுங்க அரங்கக் களத்தை நோக்கிப் போய்விட்டார். அன்று இரவு அய்யா ஆடியது ஆக்ரோஷமான கூத்து. சங்கரிடம் தலையூர் காளி படையினர் பயந்து ஓடும்போது மழை இறங்கிவிட்டது. காற்று அடங்கிப் பெய்த மழையில் ஊர் முழுவதும் பெருவெள்ளம். இருளில் நனைந்தபடியே தென்னந்தோப்பு வீட்டுக்கு வந்ததும், அய்யா அவருடைய வெண்கல உடுக்கையை அண்ணனிடம் கொடுத்துச் சொன்னார்.

”அண்ணமார்சாமி என்னைக் கைவிடலை. அந்தச் சத்தியவாக்கைத் தொடர்ந்து சோதிக்கவும் கூடாது. இனி நீதான் என் வாரிசு.”

அந்த மழைக்காலம் தேவைக்கு அதிகமாகவே மழையைக் கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து காலங்கள் செழித்தன. ஆண்டுகள் ஓடின. அதன் பின்பு அய்யா ஒருபோதும் உடுக்கையைத் தொடவே இல்லை. நாங்கள் பட்டக்காரர் தென்னந்தோப்பு வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொண்டோம். அண்ணன் புகழ்பெற்ற உடுக்கடிக் கூத்துக்காரனாக வளர்ந்துவிட்டான். அண்ணமார் உடுக்கடிக் கூத்தின்போது ‘படிவிளையாண்டு’ படுகளம் வீழ்பவர்களை எழுப்ப, அண்ணனைவிட்டால் வேறு கூத்துக்காரர்கள் இல்லை என்ற நிலை. அண்ணனும் என்னை பின்பாட்டு பாட, பெண் வேஷம் கட்ட அனுமதிக்கவில்லை. கூத்துக்குச் செல்லும்போது உடுக்கைகளையும் கூத்து உடைகளையும் கால் சலங்கைகளையும் சுமந்து செல்லும் ஓர் எடுபிடியாகவே வைத்திருந்தான். நானும் வேறு வழி இல்லாமல் அதைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டேன்.

அந்தச் சமயத்தில் அண்ணனுக்கு ஸ்த்ரீபார்ட் நாடகக்காரி உதயராணி பழக்கம் ஆனாள். கூத்து முடிந்து 27-ம் நாள் சடங்கான தவசு கம்பத்தை நீரில் விட்டு, காணிக்கை பெற்றதும், அண்ணன் தவறாமல் குண்டடத்தில் உள்ள உதயராணி வீட்டுக்குச் சென்று வந்தான். நான் அண்ணன் கிளம்பும் வரை அவள் வீட்டு வெளித் திண்ணையில் அவமானமும் வருத்தமும் மேலிட உட்கார்ந்துகிடந்தேன். கழுதைகள் கத்திக்கொண்டு திரியும் வீதியில் செல்வோர் எல்லாம், என்னைப் பார்த்துக் காறித் துப்புவதுபோல இருக்கும். அய்யாவுக்கு இது தெரிந்திருந்தாலும், அண்ணனைக் கண்டிக்கும் திராணி இல்லாதவராக இருந்தார்.

அந்த வருடத்தில்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. வெள்ளைக்காரத் துரையின் குடும்பத்தினர் பிரிட்டிஷ் தேசத்தில் இருந்து கப்பலில் வந்து இறங்கியிருந்தனர். கீழை நாட்டின் சடங்கு, சம்பிரதாயக் கூத்துக்களைப் பார்க்க ஆர்வம்கொண்டிருந்த துரைசாணி அம்மாவுக்காக, பட்டக்காரர் அண்ணமார்சாமி கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணன் மூன்று இரவுகளில் கதையை முடிப்பதாகத் திட்டம்போட்டு கூத்தை ஆரம்பித்தான்.

மூன்றாம் நாள் படுகளம் விழச்செய்து எழுப்பும் கூத்து. ஒரு கூத்தாடிக்குக் கடினமான தருணம் அது. அரங்கக் களத்தின் நாற்புறமும் கல்விளக்குத் தீபங்கள் சுடர்விட்டன. ஊர் வண்ணார்கள் தீப்பந்தம் பிடித்து நின்றனர். துரையும் துரைசாணி அம்மாவும் பட்டக்காரர் குடும்பத்தினரும் முன்வரிசையில் அமர்ந்து கூத்தைக் கவனித்தனர். சுற்றுவெளி ஊர்களில் இருந்து எல்லாம் சனங்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வந்து குவிந்துவிட்டனர்.

அண்ணன் முதலில் தலையூர் காளியாக உருவம் மாறி, மாயவர் அம்பு விட்டு சங்கரை வீழ்த்துவதை வேகமான தாளகதியில் உடுக்கடித்துப் பாடி, ஆடினார். கூட்டத்துக்குள் இருந்து ஆண் பார்வையாளர்கள் இருவர் சங்கர் அருளாடியாகி அரங்கக் களத்துக்கு ஓடிவந்தனர். இறப்புத்தன்மையுடன் செத்தவர்போல மூர்ச்சையாகி விழுந்தனர். படுகளம் விழுந்தவர்களை மேற்காகத் தலை வைத்து, கிழக்காகக் கால் நீட்டி மரணமுற்றவர்களைப் படுக்கவைப்பதுபோல படுக்கவைத்து, வெள்ளைத் துணியால் மூடினர்.

அண்ணன் அடுத்ததாக சங்கரின் மரணம் அறிந்த சாம்புகன் அழுதுபுலம்பும் கதைப்பாடலை உக்கிரத் தாளத்தில் உடுக்கடித்துப் பாடி ஆடினான். மூன்று ஆண் பார்வையாளர்கள், சாம்புகன் அருளாடியாகி படுகளம் விழுந்தனர். அண்ணன் கடைசியாக பொன்னர், தலையூர் காளியைப் போரிட்டுக் கொன்று, வாளில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் பாடலை, உடுக்கடித்துப் பாடி ஆடினான். ஐந்து ஆண் பார்வையாளர்கள் பொன்னர் அருளாடியாகி படுகளம் விழுந்தனர். துரைசாணி அம்மா எழுந்து வந்து படுகளம் விழுந்தவர்களின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவராகக் கத்தினார்.

”ரியலி… ஆல் ஆர் டெத்.”

”நோ… நோ…”

துரை எழுந்து வந்து சமாதானப்படுத்தி, கூட்டிப்போய் அமரவைத்தார்.

அண்ணன் பெண் வேடதாரியாக மாறி, தங்காயி பாத்திரம் ஏற்று, படுகளம் விழுந்தவர்களைச் சுற்றியவாறு உடுக்கடித்து அழுது புலம்பிப் பாடினான். பாடலின் முடிவில் பெண் பார்வையாளர்களில் ஒருத்தி அருள் பெற்று, அரங்கக் களத்துக்கு வந்து உடலை முறுக்கி நிற்கவேண்டும். அடுத்து பெரியகாண்டி, செல்லாண்டி, மகாமுனி, கருப்பணர், கன்னிமார் என, தெய்வங்களும் அருள்பெற்று வந்தால்தான், படுகளம் விழுந்தவர்களை எழுப்ப முடியும்.

பெண் பார்வையாளர்களின் மத்தியில் சலனமே இல்லை. அண்ணன் தொடர்ந்து முயற்சித்தான். நேரம் கடந்தது. வடமேற்குத் திசையில் பளீரென மின்னல். திடுமென

ஓர் இடி. கருக்கல்கள் திட்டுத் திட்டாகத் தேங்கி மேல் எழுந்து வந்தன. பட்டக்காரர் பதற்றமாகி அண்ணனிடம் ஓடிவந்தார்.

”எங்க முப்பாட்டன் காலத்துல இது மாதிரி திடீர்னு மழை எறங்கி, பெருவெள்ளம் எடுத்து படுகளம் விழுந்தவர்களை, எழுப்புறதுக்குள்ள அடிச்சுட்டுப்போயிருச்சாம். அந்த அபகீர்த்தி எனக்கும் வந்துர வேணாம்.”

அண்ணனுக்கு கண்கள் சிவந்துவிட்டன. அதிர்வுடன் உடுக்கடித்தான். வெறிகொண்டு பாடி ஆடினான். பெண் பார்வையாளர்கள் எவரும் அருளாடியாக மாறவில்லை. உச்சிவானம் முழுவதும் முகில்கள் நிறைந்துவிட்டன. மழை இறங்கும் முன்னர் உண்டாகும் சிறு புழுக்கம். துரைசாணி அம்மா பயந்து அழத் தொடங்கினார்.

”ப்ளீஸ் சேவ் தெம்… அட் எனி காஸ்ட்.”

நான் தென்னந்தோப்பு வீட்டுக்கு ஓடி, அய்யாவிடம் நடந்ததைச் சொன்னேன்.

”பொம்பள சகவாசம்… பெண் தெய்வம் எப்படி வரும்? என்னை இப்ப அங்க வந்து அவமானப்படச் சொல்றியா?”

அய்யா வர மறுத்துவிட்டார். நான் திரும்பவும் அரங்கக் களத்துக்கு ஓடிவந்தேன். சுழன்று அடிக்கும் வாடைக்காற்றுக்கு கல்விளக்குத் தீபங்களும் தீப்பந்தங்களும் அணையத் தொடங்கின. அருகில் மண்வாசம். அந்தக் கணம், நான் ஓர் உத்வேகத்தில் பட்டக்காரர் முன்னர் போய் நின்றேன்.

”படுகளம் விழுந்தவங்களை நான் எழுப்பறேன்…”

பார்வையாளர்கள் முகத்தில் ஏளனக் குறி. பட்டக்காரர், அண்ணனிடம் இருந்து வெண்கல உடுக்கையைப் பிடுங்கி என்னிடம் கொடுத்தார்.

‘பம்… பம்… பம்…’

என் நாவில் இருந்து தங்காயி புலம்பலுக்கான பாடல் பிறந்தது.

” கல்லான கோட்டையெல்லாம் நாம் சிற்றுலைப் பட்டினத்தில், கலையாதோ என்றிருந்தேன். அண்ணா… கலையா மழை பொழிய கணத்திலே கலைந்துவிழக் கண்டேன்…” – பாடலின் முடிவில் பெண் பார்வையாளர்களுக்குள் இருந்து அடுத்தடுத்து அருளாடிகள் எழுந்து, குதித்தபடி அரங்கக் களத்துக்கு வந்தனர். கூட்டம் கரகோஷமிட்டது. பட்டக்காரர் முகத்தில் புன்னகை. மழை இன்னும் இறங்கவில்லை. நான் துரிதமாகச் செயல்பட்டு, பெரியகாண்டியாக மாறிய அருளாடியிடம் படுகளம் விழுந்தவர்களை எழுப்பித் தர உத்தரவு வாங்கினேன். விரைந்து கிணற்றடி பூஜையை முடித்தேன்.

படுகளம் விழுந்தவர்களுக்கான உயிர் எழுப்பும் பாடலைப் பாடினேன்.

”நீங்க பட்ட படுகளத்து வாசலிலே… எழுப்ப வரம் வாங்கி வந்தேன்/ செத்தவர்கள் எல்லார்க்கும் செம்பூசி சிறு சூடு வாங்கி வந்தேன்…”

நான் அருளாடிகளுடன் படுகளம் விழுந்தவர்களை ஒன்பது சுற்று சுற்றினேன். தங்காயி அருளாடி தானாகக் கதறினாள்.

”அண்ணா… அண்ணா… எழுந்திருங்க அண்ணா…”

உடனே சிவமந்திரத் தீர்த்தத்தை எடுத்து படுகளம் விழுந்தவர்கள் மீது தெளித்தாள். தீர்த்தம் பட்டதும் படுகளம் விழுந்தவர்கள் ஒவ்வொருவராகத் துள்ளி எழுந்தனர். துரைசாணி அம்மா கத்திக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்.

”மிராக்கிள்… மிராக்கிள்…”

என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். பட்டக்காரர் மற்றும் பார்வையாளர்கள் கண்களில் நீர் திரண்டிருந்தது. மழை இறங்கிவிட்டது. நான் அண்ணனைத் தேடினேன். அங்கு எங்குமே அண்ணனைக் காணவில்லை. மறுநாள் பகலில் துரையும் துரைசாணி அம்மாவும் என்னைத் தேடி தென்னந்தோப்பு வீட்டுக்கு வந்தனர். தங்க ஆபரணம் ஒன்றை பரிசாக, கழுத்தில் சூட்டினர். நான் அதை அவர்களிடம் திருப்பித் தந்துவிட்டுச் சொன்னேன்…

”உங்க ஜீப்பை ஓட்டிப் பழகணும்” – இருவரும் சிரித்தனர். மூன்று நாட்களில் எனக்கு ஜீப் ஓட்டப் பழக்கிவிட்டனர். அந்த வார இறுதியில், நான் அண்ணனைத் தேடி உதயராணி வீட்டுக்குப் போனேன். கதவைத் திறந்த உதயராணி, அண்ணனைத் திட்டினாள்.

”பெரிய கூத்தனாம்… போ. இனி உன் எடுபிடிகிட்ட பின்பாட்டு பாடு.”

குதிரைவண்டி பிடித்து வீடு வரும் வரை அண்ணன் என்னிடம் எதுவும் பேசவில்லை. அன்று இரவு நடுநிசியில் ஏதோ அரவம் கேட்டு நான் விழித்தேன். கட்டில் காலடியின் அண்ணன் நின்றிருந்தான். அடுத்த கணம் என் வலது கைவிரல்களைக் கட்டில் சட்டத்தில் வைத்து அழுத்தி வீச்சரிவாளால் வெட்டினான். துண்டான ஐந்து விரல்களும் தரையில் விழுந்து சிதறின. ரத்தம் கொட்டியது. எனக்கு உயிர்போகும் வலி. எழுந்து கதறினேன். அய்யாவும் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தார். வீச்சரிவாளுடன் ஆவேசம் அடங்காமல் நிற்கும் அண்ணனைப் பார்த்ததும் சத்தமிட்டார்.

”சண்டாளா… படுகளம் எழுப்புற புள்ளையைப் பாழாக்கிட்டியே!”

அய்யா வெளியேறி, தென்னந்தோப்பின் இடையே அரண்மனையை நோக்கி ஓடினார். வீச்சரிவாளை வீசிவிட்டு அண்ணனும் பின்னே ஓடினான். நான் வலியில் துடித்தபடியே யோசித்தேன். என் நிலை கண்டால் பட்டக்காரர் நிச்சயம் அண்ணனின் வலது கைவிரல்களைத் துண்டித்துவிடுவார். நானும் வீட்டைவிட்டு வெளியேறி, தெற்கு பார்த்து ஓட ஆரம்பித்தேன். அய்யா மழை வேண்டி முன்பு கூத்துக்கட்டிய சண்முக நதி மணல்திட்டு வந்து உட்கார்ந்தேன். கைவிரல்களில் வலி, பசி, சலிப்பு, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அப்படியே மயங்கிச் சரிந்தேன்.

நான் கண் விழித்தபோது கீற்றுக் கொட்டைகையினுள் மூங்கில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தேன். கைவிரல்களுக்கு பச்சிலை கட்டப்பட்டு இருந்தது. வலி குறைந்து இருந்தது. நான் எழுந்து நடைப்பக்கம் வந்தேன். வாசல் கொழுமிச்சைமர நிழலில் குறத்திப் பெண் ஒருத்தி கூடை முறம் பின்னிக்கொண்டிருந்தாள். அழகான யுவதி. என்னைக் கண்டதும் கன்னக்குழி விழச் சிரித்தபடியே பேசினாள்.

”நாங்க மூங்கில சீவும்போது விரல்ல கத்தி பட்டா வேலாம்பட்டையும் வெட்டுக் கட்டாந்தழையும்தான் வெச்சுக் கட்டுவோம். சீக்கிரத்திலேயே புண் ஆறிடும். உங்களுக்கும் அதைத்தான் வெச்சுக் கட்டியிருக்கேன்.”

ஒரு மாதத்தில் கைவிரல் புண் ஆறிவிட்டது. ஆனால், மொன்னையான விரல்களைப் பார்க்கும்போதெல்லாம் எதிர்காலம் சூனியமானதுபோல தவித்தேன்.

அன்று வீதி வெறிச்சிட்ட மதியம். அரப்பு தேய்த்துக் குளித்த ஈரத்தலையுடன் என் அருகில் வந்து அமர்ந்த குறத்திப் பெண், எனது வலது கை மொன்னை விரல்களை வாஞ்சையாகத் தடவிக்கொடுத்தபடியே பேசினாள்.

”நீங்க பழையபடி உடுக்கக் கூத்துக் கட்டினா… உங்க கவலை எல்லாம் தீர்ந்துரும்.”

நான் குறத்திப் பெண்ணைப் புரியாமல் பார்த்தேன். அவள் மடியில் இருந்து சில மூங்கில் குச்சிகளை வெளியே எடுத்தாள். அவற்றை என் மொன்னை விரல்களில் ஒவ்வொன்றாக மோதிரத்தைப்போல மாட்டிவிட்டாள். அவை கைவிரல்போலவே இருந்தன; அசைந்தன.

”இது வெறும் மூங்கில் குச்சி இல்லை. உடுக்கை விரல். நீங்க சாகுற காலம் வரைக்கும் உடுக்கடிக்கலாம்.”

அதன் பின்னர், காலம் என்னை மாபெரும் உடுக்கடிக் கூத்துக் கலைஞனாக மாற்றியது. வானொலி மூலம் புகழ் பெற்றேன். வயோதிகம் ஆகி, கூத்துக் கட்டுவதை நிறுத்திய பின்பும் பட்டக்காரர் எனக்கு ஆதரவு கொடுத்துவந்தார். கடந்த பௌர்ணமிக்கு முன்தினம் பட்டக்காரர் இறந்துபோனார். அவரின் 16-ம் நாள் காரியம் முடிந்த நண்பகலில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பட்டக்காரரின் பேத்தி அரண்மனையையும், தோட்டத்தோடு தென்னந்தோப்பு வீட்டையும் விற்க விலை பேசினாள். அந்திமக் காலத்தில் நான் மீண்டும் தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.

அமாவாசை தினம். இருளின் அடர்வு கூடி வந்தது. நான் மணலில் கிடந்த உடுக்கையை எடுத்து மறுபடியும் இசைக்கத் தொடங்கினேன். அண்ணமார்சாமி கதைப் பாடல் பிரவாகமாகப் பிறந்தது. ஒரு நிலையில் வானில் முகில் ஏறி கனமழை பொழிந்தது. சண்முக நதியில் கரைகொள்ளாத பெருவெள்ளம். மணல்திட்டு முழுகியது. என் கழுத்துமட்டத்துக்கு நீர் ஏறும் வரை நான் உடுக்கை இசைப்பதையும் பாடுவதையும் நிறுத்தவில்லை. வெள்ளம், என்னைத் தூக்கிற்று; அடித்து இழுத்துச் சென்றது. நான் உடுக்கையை மட்டும் விடவில்லை. என் உடம்பு சிலிர்த்தது.

நடந்தது எல்லாம் வெறும் பிரமை. இயலாமையும் கோபமும் ஏற்பட்டன. சுற்றும் முற்றும் பார்த்தேன். கீழ்வானம் சிவந்து இருந்தது. நான் கீழே குனிந்து வெண்கல உடுக்கையை எடுத்தேன். உடுக்கை விரல்களையும் கழற்றினேன். இரண்டையும் ஒருசேர ஓடும் தண்ணீரில் வீசி எறிந்தேன். அவை தண்ணீரில் மிதந்து போவதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் பழநிமலையைக் குறிவைத்து நடந்தேன். படிக்கட்டில் ஏறி ஓர் இடத்தில் அமர்ந்தேன். என் முன்னாலும் நாணயங்கள் விழுந்தன. ஓர் உடுக்கடிக் கூத்து மகா கலைஞன் வீற்றிருக்கிறான் என உரக்கக் கத்த வேண்டும்போல தோன்றியது!

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *