கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 33,765 
 
 

முதல் முறையாக மதனா பாலனை இழுத்துக்கொண்டு குழிக்குள் வந்து விட்டாள். நூறு முறை ‘ உள்ள வாங்கோ… உள்ள வாங்கோ…’ என கத்தி தொண்டை தண்ணி வயற்றி விட்டாலும் பாலன் வரமாட்டான்.

பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியன் ஆமி ஆட்டலறி செல் அடித்தால் .- இரண்டு நிமிடம் 25 விநாடி – எடுக்கும் அளவெட்டி மாரியம்மன் கோயிலடிக்கு வந்து விழுந்து வெடிக்க என ஒரு கணக்கு வைத்திருந்தான் பாலன்.

இந்தக் கணக்கை கண்டுபிடித்து கொஞ்ச நாள்தான் ஆகிறது.

முந்தைய இலங்கை ஆமியின் நிமிடக் கணக்கு புதிதாக வந்த இந்தியன் ஆமியிடம் ஒத்துப் போக வில்லை. பாலனின் நிமிடக் கணக்குக்கு முன்னே செல் விழுந்து வெடித்தது. பல முறை “வெடிக்கப் போகுது படுங்கோ ” என்று கூறி படுத்ததும் வெடிக்காமல் போனது .

‘புதைஞ்சு போச்சு போல’ என எழும்பி இருந்த பின் வெடித்தது.
இப்போது எல்லாம் இலங்கை ஆமி பாலனை மாட்ட வேண்டும் என்றே செல் அடிக்காமல் இருந்து விட்டார்கள்.

அந்த வேலையை இந்தியன் ஆமி செய்தது ஆனாலும் போகப் போக ஆராட்சி செய்து பாலன் நேரத்தை கண்டுபிடித்து திருத்தி விட்டான்.

அதன் பின் ‘பண்ணத்தரிப்புக்கு அடிக்கிறான் – காரை நகரில் இருந்து அடிக்கிறான்- அரைவாசி செல் வெடிக்காமலே புதையுது எங்கேயோ கடல் பக்கம் அடிக்கிறான்’. என்று அனுமானங்கள் கூறுவான். அவன் சொன்னதையே அடுத்தநாள் காலை உதயன் பத்திரிகை உறுதிப்படுத்தும். இதனால் அவ்வூரில் பாலன் ஒரு நவீன சாத்திரக்காறன் என்றே பெயர் எடுத்திருந்தான்.

அது ஒன்றும் சின்ன கிராமம் அல்ல. ‘அளவெட்டி’ யாழ்ப்பாணத்திலேயே பெரிய கிராமம் . அதனாலேயே அதனை வடக்கு தெற்கு என பிரித்திருந்தார்கள் . ‘அளவெட்டிக்குப் போனால் குளவெட்டியும் பிழைக்கலாம்’ என்பதுபோல் செழிப்பான கிராமம்.

தெற்கு அளவெட்டியில் இருக்கிறது இந்த மாரியம்மன் கோயில் . அதன் வடக்கே பனஞ்சோலையும், கிழக்கே எல்லாக் காலமும் பச்சைப் பசேல் என்றிருக்கும் தோட்டமும் , தெற்கே – தென்னை ,பாக்கு ,மா ,பிலா – என சேலைகள் நடுவே அமைந்த குடிமனைகளும் ,மேற்கே பரந்த மாஞ்சோலை நடுவே அந்தக்கால நாற்சாரம் கொண்ட பாலனின் வீடு – கோயில் குருக்களின் வீட்டிற்கு அருகில் இருந்தது.

‘ காணி நிலம் வேண்டும்’ என பாரதி ஆசைப்பட்டு பராசக்தியிடம் கேட்டது இந்த அளவெட்டி மக்களுக்கு கிடைத்திருந்தது.

பாலனின் மகிமை எல்லாம் இப்போதுதான் மதனாவுக்கு மெல்ல மெல்ல தெரிய வருகிறது. அவள் பாலனை திருமணம் முடித்த இந்த மூன்று மாதத்தில் இந்த ஒரு கிழைமையாகத்தான் இந்தியன் ஆமியின் செல் அடி பலமாக இருக்கிறது. இதை விட இன்னும் எத்தனை திறமைகள் தன் கணவன் கற்று வைத்திருக்கிறான் என எண்ணுகையில் அவள் இதழில் சிறு புன்னகை நெளிந்தாலும் இந்தக் ‘கணக்கை எல்லாம் பதுங்கு குழிக்குள் இருந்து பார்க்கலாமே’ என்பதே அவள் வேண்டுதல்.

பாலனுக்கு சொந்தமாக ஒரு பலசரக்கு கடை மாசியப்பிட்டி சந்தியில் இருக்கிறது . அங்கே வேலைக்கு என ஒரு ஆள் நின்றாலும் அப்பப்ப கடையை போய் பார்க்க வேண்டும். இப்படியான செல் அடி காலங்களில் தான் ஊரே கடையை பட்டி விட்டு வீட்டில் இருக்கும். ‘இப்போதும் இவர் குழிக்குள் வராமல் வெளியில் இருந்து நமிடக்கணக்கு பாக்கிறாரே..’ என்று மனம் நோவாள்.

மதனாவுக்கு செல்லை விட அதன் சத்தத்திற்கே பயம். எங்காவது சத்தம் கேட்டால் முதல் ஆளாய் உள்ளே வந்து விடுவாள். அதனாலேயே திருமணமாகி முதல் வேலையாய் பாலனிடம் சொல்லி முன்னைய பதுங்கு குழியை இன்னும் பாதுகாப்பாக அமைத்துக் கொண்டாள். இப்போது அயலில் உள்ளளவர்களும் இங்கேயே விரும்பி வருவார்கள் . பாலனுக்கும் எப்போதும் மனைவிக்கு அருகில் நெருங்கி இருக்க வேண்டும் என்று விருப்பம் தான் . ஆனால் கூட இருப்பவர்கள் ‘புதுப்பொண்ணு மாப்பிளையில நல்ல அக்கறையாத்தான் இருக்கிறா… – பாலனை பாருங்கோ மனிசி கூப்பிட்ட உடனே ஓடி போயிற்றான்’ என நண்பர்கள் கேலி பண்ணுவார்கள் என்ற அச்சம் .

திருமணமாகி ஒருவரை ஒருவர் புரிந்தும் புரிந்து கொள்ளாமலும் தாம் இருவரும் சோர்ந்து எடுக்கும் புதயலையும் இன்னமும் முழுமையாக உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மயக்க நிலையான காலம் அது . வலிகளும் சிலிர்க்கும் வசந்த போகம் . உணர்வுகளை உரசிப்பார்த்து வரும் பலனை அலசிப்பார்க்கும் இந்த தேன் நிலவு காலத்தில் பாலன் வெறும் மரக்கட்டை போல் கிடந்தான். உரிந்து போன சாறத்தையும் கண்டு கொள்ளாமல் குப்பறக் கிடந்தான்.

அவளை அவன் தூக்கி சுற்றி விழையாடி இருக்கிறான் . ஆனால் அவள் ஒருபோதும் அவனை தூக்கிப்பார்க்க நினைத்ததும் இல்லை. இப்போதே முதல் முறையாக படாத பாடுபட்டு பதுங்கு குழிக்கு இழுத்து கொண்டு வந்து சேர்த்தாள்.

சில நிமிடங்களுக்கு முன்.

செல் அறம்புறமாக விழுந்து வெடித்துக்கொண்டு இருந்தது. கடையை பூட்டி விட்டு சயிக்கிளில் மாசியப் பிட்டியில் இருந்து அவனது வீட்டிற்கு வேகமாக வந்து கொண்டு இருந்தான் பாலன். அவனையே எதிர் பார்த்தபடி ஏக்கத்தோடு மதனா பதுங்கு குழிவாசலில் இருந்தாள் . ஒரு காக்காய் குருவியை கூட வீதியில் காவில்லை . ஊரே ஆங்காங்கே பதுங்கிக்கொண்டது. ஒழுங்கை முடிவில் பனை ஓலை வேலியை தாண்டி பாலன் வெளிப்பட்டான். கண்டதும்

“கெதியா வாங்கோ … கெதியா… கெதியா…” என கத்தினாள் மதனா.

அவன் வீட்டு படலையை அண்மித்ததும் அண்டம் அதிரும் ஒரு இடி ஓசை காதை செவிடாக்கியது. அதைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய செல்லின் துண்டுகள் நாலா புறமும் பறந்து மா பிலா மரங்களுடே கற்கள் வீசுவதுபோல ஒரு சரசரப்பை ஏற்படுத்தியது . ஒரே புளுதியும் புகையுமாய் அடர்ந்து இருந்தது அந்த செல் விழுந்த தேரோடும் தெற்கு வீதி .

மதனாதவின் செவிப்பறை கிழிய ஆத்மா நடுங்கியது. கதறியபடி புகை ஊடே பாலனை தேடி ஓடினாள். அவன் கோயில் கர்ப்பக்கிரக கட்டிடத்திற்கடியில் குப்பறப் படுத்திருந்தான். ஒரு கணம் பதைத்த நெஞ்சு பின் அமைதியானது. கணவனின் இன்னொரு சாதுரியம் கண்டாள். ஆனால் அவனது சயிக்கிள் பார் கோயில் தேர் முட்டியில் தொங்கியபடி கிடந்தது. பதறி அடித்து அருகில் ஓடினாள்.

“என்னங்க.. என்னங்க….. உங்களைத்தான் ”
“………. ………. ………..”
“பாலன்… பாலன்… பால…ன்… ”
“……………………………………….”
பாலன் பேச்சின்றி இடந்தான். பார்த்தாள் காயம் ஏதும் உடம்பில் இல்லை. இரத்தம் வரவும் இல்லை. முடிந்தவரை எழுப்பிப் பார்த்தாள் எழும்பவில்லை. பலம் முழுதும் திரட்டி அங்கிருந்து இழுத்தே பதுங்கு குழிக்கு கொண்டு வந்து விட்டாள்.

இப்போதும் செல் அடி ஓயவில்லை.

மெல்ல அவனை பிரட்டி பதுங்கு குழிக்கு உள்ளே இழுத்தாள் . சேட்டுப் பொக்கேற்றுக்குள் ஏதோ இருப்பது போல் தெரிந்தது. கையை விட்டடுப் பார்த்தாள் மார்பு எலும்பு ஒன்று குத்திக்கொண்டு நின்றது.

“ஐயோ…….என்ர… ஐயோ……..” கதறினாள்.

கைகள் நடுங்கியது, இதயம் படபடத்தது , நடுக்கத்தோடு மீண்டும் அதை தொட்டுப்பார்த்தாள் அது நெருப்பாக சுட்டது . ஒன்றும் புரியவில்லை .
பொத்தானை கழற்றிப் உற்றுப் பார்த்ததாள். அது முறிந்த எலும்பல்ல ஒரு செல் துண்டு அவன் நெஞ்சை துளைத்து இதயத்திற்கு நேரே குத்திக்கொண்டு நின்றது .

அவளின் அண்டம் சுருங்க ஐம்புலனும் பதைத்தது.

“ஐயோ….. ஐயோ…..”

அடிவயிற்றில் இருந்த கத்தினாள். அந்த செல் துண்டை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் பார்த்தாள் . அது அவனையும் இழுத்துக் கொண்டே வந்தது. செய்வதறியாமல் அழுது புரண்டாள். மண்ணை வாரிக் கொட்டினாள்.

இதற்குள் மதனாவின் அவலக்குரல் கேட்டு அயலவர் இருவர் ஓடி வந்து விட்டார்கள்.

“ஐயோ…. அண்ணா….. நான் என்ன செய்வன் என்னண்டு பாருங்கோ… மூச்சுப் பேச்சு இல்லாம கிடக்கிறார் ” என்று கத்தினாள்.

ஒருவர் அவன் மூக்கில் புறங் கையை வைத்துப் பார்த்தார். பின் இறுகிய முகத்தோடு தலையை குனிந்தபடி நின்றார். மற்றவர் பாலனின் கையை தூக்கிப் பார்த்து விட்டு அமைதியானார் .

ஒரு மகப்பேற்றின் முடிவில் தாய்க்கு இரண்டு செய்திகள் வரும். ‘குழந்தை நலமாக பிறந்து விட்டது ‘ என்று ஒரு செய்தி மற்றையது என்ன குழந்தை என்ற செய்தி. வதனா இருவர் வாயிலும் இருந்து ஒரே ஒரு செய்தி அவளின் இந்த பூவுலகை மீண்டும் பூக்கச் செய்யும் ஒரு சொல். – அரை உயிராவது இருக்கிறது – என்று ஒரு வார்த்தை… இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் . அந்த இருவரும் அவளுக்கு படைத்தல் தெய்வங்களாக தோன்றினார்கள். மறு கணம் அவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டதும் . அவள் காது அடைத்தது , கண்கள் இருண்டு பூஞ்சலாடியது , மங்கலான வெளிச்சத்தில் முன்னே இரு இயம தூதர்கள் நிற்பது போல் தெரிந்தது .

“இந்தியன் ஆமி அலுக்கை சந்திக்கு வந்திட்டான்……… எல்லாரும் ஓடுங்கோ……”
கத்திய படி ஒருவன் ஓடினான் . அந்த இருவரும் தங்கள் வீட்டுக்கு ஓடிவிட்டார்கள்.

“தங்கச்சி பாலன் போயிற்றான் கணச்சூடு அடங்கிக் கொண்டு போகுது இனி ஆக வேண்டியதை பாருங்கோ ” என்ற அந்த வார்த்தையை தவிர அவளுக்கு அங்கே நடப்பது எதுவும் தெரியவில்லை.

விழுந்து எழும்பி அந்த ஊரே கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

‘என்னையும் தூக்கிக்கொண்டு ஓடுவான் இப்போது தானே எழும்பி நடக்காமல் படுத்திருக்கிறான். என்மேலும் ஒரு செல் விழாதா ? ‘ மண்ணை வாரி தலையில் கொட்டிக் கொண்டு கதறினாள். இப்போதும் செல் வந்து விழுந்து வெடித்துக் கொண்டு இருந்தது ஆனால் அவை எதுவும் அவள் காதில் கேட்கவில்லை.

யாரோ அவளின் முதுகை பிடித்து தள்ளி ஏதோ சென்னார்கள். திரும்பிப் பார்த்தாள் பின்வீட்டு சுதா அக்கா .

“ சுதாக்கா பாலனைப் பாருங்கோ… என்னை விட்டுட்டுப் போயிற்றான் என்ர ஐயோ… ” என்றபடி தரையில் புரணடாள். சுதா அவளை பிடித்து எழுப்பி

“வதனா இந்தியன் ஆமி கிட்ட வந்திட்டானாம் சனமெல்லாம் கந்தரோடை பள்ளிக்கூடத்திற்கு ஓடுதுகள் நிண்டால் உன்னனையும் கள்ளியங்காட்டில செய்த மாதிரி செயின் பிளக்கால ஏத்தி நெரிச்சு கொண்டு போடுவாங்கள் அழாம எழும்பி வா பிள்ள ” என்று கூப்பிட்டார்.

“நான் வரேல்ல நீங்க போங்கோ பாலனை விட்டிட்டு நான் தனிய வர மாட்டன். ஆமி வந்தா என்னையும் கொல்லட்டும்” என்று விட்டு சுதாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்தது பாலனின் கால்களைப் பிடித்தபடி அழுதாள்.

அதற்குள் பாலனின் நண்பர்கள் மூவர் செல் விழுந்து பிரிந்து தூரப் பறந்து கிடந்த தென்னை மட்டையால் வரிந்து கட்டிய படலையை எடுத்து வந்து பாலனை அதன் மேல் தூக்கி வைத்தார்கள்.

“மதனாக்கா உள்ள போய் உடுப்பு ,சாமான் ,சட்டு எடுத்தண்டு வாங்கோ திரும்பி வர எத்தின நாள் ஆகுதோ தெரியாது” என்றான் ஒருவன்.

“எப்பிடி மூன்று போர் தூக்கிறது இன்னுமொரு ஆள் வேணுமே.. ” என்றான் இன்னொருவன்.

சக்கப் பணிய குந்தி இருந்த மதனா எழும்பி ஒரு மூலையில் பிடித்தாள் .

பாலன் மதனாவின் தோளில் ஏறிவிட்டான். மதனாவையும் படலையே பாடையாக படுத்திருந்த பாலனையும் கண்ட ஊரார் வாயில் கையை வைத்தார்கள்.

வயதானவர்கள் அருகில் வந்து எதேதோ சொல்லி கண்ணீர் வடித்தார்கள்.

செல் அடி கொஞ்சம் ஓய்ந்திருந்தது . மாரியம்மன் கோயிலை தாண்டி பாலன் மாசியப்பிட்டி சுண்ணாகம் வீதியில் ஏறிவிட்டான். மீண்டும் செல் அடி ஆரம்பித்தது ஒரு செல் வீதியோரமாக இருந்த குளத்திற்குள் விழுந்தது பாலனை பிடித்து வந்த மூவரும் அப்படியே போட்டு விட்டு வீதிக்கருகில் படுத்து விட்டார்கள்.

வீதியில் விழுந்த பாலனும் உருண்டு அருகில் இருந்த சணல் செடிக்குள் ஒழித்துக்கொண்டான். வதனா அவனின் காலை இழுத்துப் பிடித்து நிறுத்த முயன்று முடியாமல் சறுக்கிக் கொண்டு அவளும் சணலுக்குள் வந்து சேர்ந்தாள்.
பாலன் வதனாவுடன் தனிமையானான்.

உயிரோடு இருந்த பாலனுக்கும் இறந்து போய் இருக்கும் பாலனுக்கும் அவள் பெரியவித்தியாசம் எதையும் காணவில்லை. உயிரோடு இருக்கையில் அவன் அவளை அடிக்கடி தனிமைக்கு இழுப்பான். இப்போது இவள் சூழ்நிலையால் இப்படி அவனோடு தனிமைப்படுத்தப்படுகிறாள் . இதுவும் அவன் விருப்பமாகக் கூட இருக்கலாம் .

இப்போதுதான் நெஞ்சால் இரத்தம் வடிய ஆரம்பித்தது அவன் உயிரை குடித்த பின்னும் அந்த செல் துண்டு அவனை விட்டுவைப்பதாக இல்லை. உருண்டு வரும் போது அது அவனது சட்டையை கிழித்து விட்டது. உதட்டில் மண் பட்டு மூக்கினுள்ளும் சென்றிருந்தது. விம்மி விம்மி அழுது துடைத்தாள்.

ஆங்காங்கே படுத்திருந்த சனம் மீண்டும் எழுந்து பாடசாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது . வதனா மீண்டும் பாலனை இழுத்தக் கொண்டு வீதிக்கு வந்தாள். அந்த படலையை எடுத்து வைத்தக் கொண்டு பாலனருகில் நின்றாள். அந்த மூவரும் வந்து சேர்ந்தனர் .

தற்காலிக முகவரிக்கு இடம் பெயர்ந்தவர்களேடு பாலனும் தற்காலிக பாடையில் ஏறினான்.

வாழ்க்கை முடிந்தவனின் பயணம் தொடர்ந்தது .

ஒரு இடத்தில் படுக்க வைத்து பார்த்து பார்த்து அழுவது போல் இல்லாமல் . சடலத்தை கொண்டு சாமி ஆடுவதுபோல் ஓடி உலுக்கி பின் விழத்தி எழுப்பி நடத்த இந்த விபரீதங்களால் வதனா வேதனையை அனுபவித்தாலும் இந்த நிகழ்வுகள் அவள் மனதில் ஒரு இனம் புரியாத மௌனத்தை ஏற்படுத்தியிருந்தது.

பாலனை இறுதி ஊர்வலத்தில் தான் தூக்கி செல்வதாலும். ஆமியிடம் இருந்து செத்த பாலனை காப்பாற்றி கொண்டு வந்து விட்டதாகவும். உற்றார் ,உறவு ,சொத்து ,சுகம் எல்லாவற்றையும் உதறிவிட்டு பாலனோடு ஊரை விட்டே ஓடி வருவதாகவும் அவள் மனம் நம்பிக்கொண்டு இருந்தது.

உயிர் விட்டு விட்டுப் போன உடலை விரைவில் சுடலையில் சுட்டு விட்டுப் போகப் போகிறது ஊர் என்ற உண்மையை இன்னும் அவள் உணரவில்லை.

இடம் பெயர்வில் இணைந்த பூதவுடல். மாசியப்பிட்டி கண்ணகி அம்மன் போயிலை சுற்றியுள்ள வயல் வெளியை கடந்து கொண்டிருந்தது.

சோலைகளுக்கு மத்தியில் கந்தரோடை கிராமத்தின் குடிமனைகள் வீதிக்கு இரு கரையிலும் இருந்தது. கல்லூரி அண்மித்தது. ஏர்க்கனவே வந்து சேர்ந்த அகதிகளால் வீதி மெல்ல மெல்ல பாரமேறியது. அவ்வப்போது கண்ணில் பட்டவர்கள் கால்களில் தட்டுப்பட்டார்கள். காற்று வெளி குறைந்து கலகலப்புகள் அதிகரித்தது.

சுற்றி நின்றவர்கள் சவமாக பாலனையும் சாவமாக வதனாவையும் பார்த்தனர்.

சிரமத்தின் மத்தியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தினுள் வந்து ஒரு பெரியவர் சொற்படி தொங்கலில் இருந்த ஒரு அறைக்கு கொண்ட சென்றார்கள்.

அது பாலர் வகுப்பறை. பாலன் மீண்டும் பாலர் வகுப்புக்கு வந்து விட்டான். வகுப்பறை கரும் பலகையில் பிள்ளைகள் அர்த்தம் இல்லாத கோடுகள் கீறி இருந்தார்கள்.
ஒரு மூலையில் ஒளிவிழாவிற்காக சிறு ஆட்டுக் கொட்டில் போல ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு யேசுநாதரின் பிறப்பு மெழுகு சிலைகள் மூலம் சித்திரிக்கபப் பட்டு இருந்தது.

நான்கு வாங்குகளை ஒன்றாக அடுக்கி அதன் மேல் உடலை வைத்தார்கள் . அந்த பெரியவரே ஒரு வெள்ளை வேட்டியை கொடுத்து வதனாவிடம் மூடிவிடச் சொன்னார். அதுவரை அங்கே இருந்தவர்கள் எழுந்து வகுப்பேறினார்கள். மீண்டும் வதனா பாலனுடன் தனித்து விடப்பட்டாள். ஆனால் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள எல்லா இலையான்களும் மதனாவுக்கு துணையாக வந்நு சேர்ந்தன. பாதையோரமாக இருந்த குரோட்டன் செடியில் சில கொப்புகளை முறித்து வந்து பாலனின் அருகில் இருந்து விசுக்கினாள்.

பொழுது இருட்டி விட்டது ஆனாலும் எங்கோ இன்னமும் செல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது அங்கும் பல வதனாக்களையும் . வதனா இல்லாத பாலன்களையும் கச்சிதமாக உருவாக்கிக் கொண்டிருந்தது.

அனேகமானவர்கள் பூரமுடியாத போர்வைக்குள் குறண்டிக் கொண்டு தூங்கி விட்டார்கள். சிலர் கொறட்டை விட்டார்கள். ஆனால் பாலன் மட்டும் குறண்டவும் இல்லை குறட்டை விடவும் இல்லை . நீட்டி நிமிர்ந்து சத்தமின்றி படுத்திருந்தான்.
சிலர் ஆங்காங்கே சிறு விளக்குகளை ஏற்றி கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

இது அவர்களுக்கு இன்னொரு இரவு அவ்வளவுதான். சிலர் பாலன் வதனா கதை பேசிக்கொண்டு இருந்தார்கள். சிலர் தாங்கள் செல்லில் இருந்து தப்பி வந்த கதை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லோரது மனதிலும் செல்லின் பயங்கரம் குடிகொண்டிருந்தது. ஆனால் பாலன் மட்டும் அந்த செல்லையே இதயத்தோடு கொண்டு வந்து பயமேதுமின்றி அமைதியாக படுத்திருந்தான்.

மூடி இருந்த முகத்தை இன்னும் ஒரு முறை வதனா திறந்து பார்த்தாள். கதறி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அங்கே யாரும் செத்த வீட்றிற்கு என வந்தவர்கள் இல்லை. அவர்கள் வந்து சேர்ந்த இடத்தை பாலன் தான் செத்தவீடாக்கி இருந்தான் . வந்த அழுகையை விழுங்கிக்கொண்டாள். அது பெரு மூச்சாகவும் கண்ணீராகவும் வெளியேறியது. வைத்தகண் வாங்காமல் பாலனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.போர்த்தி இருந்த வெள்ளை வேட்டி மேல் இலையான்கள் போட்டி போட்டபடி அமர்ந்தன

வதனா நித்திரையில் இருக்கும் போது பாலன் அடிக்கடி எதையோ தேடிக் கொண்டு இருப்பான்.

இப்போது அதை நினைத்து கண்ணீர் விட்டாள்.

திடுக்கிட்டு எழும்பி. “இந்த சாமத்தில தூங்காம என்ன செய்துகொண்டு இருக்கிறியள் ? ” கேட்பாள்.

“உன் அழகில் நான் ஏன் இப்படி பித்தாகி விட்டேன் அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடினேன் “ என்பான் பாலன்.

“அதை பகல்லையும் தேடலாமே இப்படி சாமத்தில நித்திரை முளிச்சா தேடவேணும்”.

“நீ விழித்திருக்கும் போது உன் கரு வண்டுக் கண்கள் அங்கும் இங்கும் பறந்து என் ஆராட்சியை குலைத்து விடுகிறது. கன்ன ஆய்வை கன்னகுழி தோண்டிப் புதைத்தது விடுகிறது”

“ஆனால் என் கண்ணாடி இதை யெல்லாம் காட்டவில்லையே கன்னம் தோலாகவும் முடி கறுப்பாகவும் மூக்கு மூச்சு விடுவது போலவும் அல்லவா காட்டுகிறது” என்பாள்.

“அப்படி என் கண்ணுக்கு தெரியமாட்டேன் என்கிறது ” என்பான்.

“ சரி அதை கண்டு பிடிச்சு இப்ப என்ன செய்யப்போறீங்க ? ”

“ கண்டுபிடித்து விட்டால் கொஞ்சமாவது உன் அழகின் இரகசியம் தெரிந்தவன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ” என்பான்.

“அழகு சொந்தமாக அருகில் இருப்பதில் இல்லாத பெருமையா அதன் சூத்திரம் தெரிவதில் வந்து விடப்போகிறது ”என்பாள் அவள்.

“அழகு எங்கே எனக்கு சொந்தமாக இருக்கிறது ? அதை இன்னமும் நீதானே வைத்திருக்கிறாய் ” என்பான்.

“ஆனால் நான் உங்களுக்கு சொந்தமாகத்தானே இருக்கிறேன்.” என்பாள்.

“அது போதமாட்டேன் என்கிறது”

“எல்லாம் போகப் போகப் சரிவந்துவிடும்”

“ இந்த ஜென்மத்தில உன் அழகை ஆய்வு செய்வதே எனக்கு சாபம்”

“ஒரு வேளை நான் செத்துப்போனால் என்ன செய்வீர்கள் ? ”

“அப்படி எல்லாம் சொல்லாதே வதனா. குறைஞ்சது 50 வருசமாவது ஓர் உயிர் ஈருடலாக வாழவேண்டும்”

இன்றும் அவன் உயிரின்றி வெறும் பூதவுடலாக அவள் மட்டும் உயிருடன். ஆக இரு உடலுக்கும் பொதுவில் அவளே உயிராக ஈருடல் ஓருயிராகவே …

வதனாவின் கண்ணீர் பாலனின் காது மடலை நனைத்தது .

“ சின்னஞ் சிறுசுகள் , அதோட நாலு சனம் கூடி இருக்கிற இடத்தில இப்படி பிரேத்ததை வச்சிருக்க ஏலாது அந்த பிள்ளையிற்ர கேழுங்கோ ஆரும் வர இருக்கோ எண்டு ? ” என்றது வெளியில் ஒரு குரல்.

“பிள்ளைக்கு ஒருதரும் இல்ல பாலன்ர சகோதரம் எல்லாம் வெளிநாட்டில ஆருக்கு வச்சுப் பாக்கப் போறியள் பாடையை கட்டுங்கோ கொண்டபோய் எரிச்சுப்போட்டு வருவம்” இருவர் தமக்குள் பேசிக்கொண்டனர்.

அவர்களுக்கு இங்கு வந்து இரண்டாவது பொழது விடிகிறதாம்.

பள்ளிப் பாலர் அலங்கரித்திருந்த ஆட்டுத்தொழுவத்தின் மூலையில் புதிதாக ஒரு பாலன் பிறந்திருந்தான்.

‘ஆதரவற்றவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களை மீட்க வந்தவன் ’ . என்ற மீட்பர் அன்னை மேரியின் மடியில் பிறந்திருந்தார்.

பாவப்பட்டவர்களை மீட்க வான பிதா மூலம் கருவுற்று பிறந்திருந்தார் யேசு பாலன்.

அவ்வாறே வானால் உள் நுழைந்து உணவு தூவி . பின் மீட்க வந்த பாரத தேச மீட்பர் ஏனோ இந்த பாலர்களின் உயிர் குடித்து பாவப்பட்பட இனத்தின் கருவறுத்துப் போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *