இவர்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 6,889 
 
 

இவர்கள்..!

(கரு 1 கதை 3)

1

மாலை. கடைசியாய் எடுத்த பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே தாமோதரனுக்கு அதிர்ச்சி, ஆனந்தம்.

‘கண்ணா ! லட்டுத் தின்ன ஆசையா !? ‘ சட்டென்று மூளைக்குள் மின்சார பல்பு பிரகாசமாக எறிய….. மீண்டும் படித்தான்.

‘ஐயா! நான் நிர்மலா. சிறு வயதிலிருந்தே ஆங்கில கல்வி வழியில் படித்து வந்ததால் தமிழ் எனக்குக் கஷ்டம். சுமாருக்கும் கீழ். தமிழைத் தவிர மற்ற பாடத்தேர்வுகளை நன்றாக எழுதியுள்ளேன். தாங்கள் திருத்தும் இந்த விடைத்தாளில் எனக்குப் பாஸ் மார்க் போட்டு என்னை வெற்றி பெறச் செய்தால் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு என்னையே அர்ப்பணிக்கத் தயாராய் உள்ளேன். தாங்கள் மதிப்பெண்கள் அளிப்பதற்கு வசதியாய் சரியோ தவறோ…. தேவையான கேள்விகளுக்கு பதில் எழுதி பக்கங்களை நிரப்பியுள்ளேன். என் வேண்டுகோளை முடித்ததும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற அணுக வேண்டி கைபேசி எண்.8675758234 திருச்சி.’

‘அட ! காரியம் இன்னைக்கே ஜெயம் !’

‘கண்ணா ! ரெண்டாவது லட்டுத் தின்ன ஆசையா ?!’ அடுத்தப் பல்பும் குதூகலத்துடன் எறிய…..தாமோதரன் மேம் போக்காக படித்துவிட்டு எண்பது மதிப்பெண்களை அள்ளி வீசிவிட்டு வெளியே வந்து அவசர அவசரமாக கை பேசி எடுத்து எண்களை அழுத்தி……

”ஹலோ நிர்மலா !” அழைத்தான்.

”மன்னிக்கனும். நான் நிர்மலா இல்லே நிர்மல். நான் திருச்சி இல்லே திண்டுக்கல். மதிப்பெண்கள் போட்டதற்கு நன்றி வணக்கம்.” அவன் பேசி வைத்தான்.

தாமோதரன் வேர்வை வழிந்த முகத்தை அழுந்தத் துடைத்தான்.

—————————-

2

தாமோதரன் வீட்டில் நுழைந்த அடுத்த விநாடியே …

”நிர்மலா !” கர்ஜித்து…. வந்தவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.

”வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் பெத்த மகளைப் போட்டு வெறித்தனமா எதுக்கு இந்த அடி அடிக்கிறீங்க ? ” மனைவி பார்வதி குறுக்கே பாய்ந்து தடுத்தாள்.

”நான் தமிழ்ல மட்டம். மார்க் போட்டு பாஸ்பண்ண வைத்தால் என்னையேத் தருவேன்னு விடைத்தாள்ல எழுதி இருக்காள். படிச்ச எனக்குக் கொதிச்சுப் போச்சு. பெத்த அப்பன் கையில கெடைச்சதால தப்பிச்சாள். இல்லே நல்லவன் கையில கெடைச்சாலும் தப்பிப்பாள். அதுவே ஒரு பொறுக்கி கையில கெடைச்சிருந்தால்…..என்ன நிலைமைன்னு யோசனைப் பண்ணிப் பாரு.” கத்தினார்.

பார்வதி ஸ்மதம்பிக்க….. நிர்மலா தலைகுனிந்தாள்.

————————-

3

தாமோதரன் வீட்டில் நுழைந்த அடுத்த விநாடியே…

”நிர்மல் !” அழைத்து….. வந்தவன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைய…

அவன் அதிர்ந்தான். புரியாமல் ஸ்தம்பித்தான்.

”எதுக்கு வயசுக்கு வந்தவனை இப்படி அடிக்கிறீங்க ? ” பார்வதி பாய்ந்தாள்.

”அவன் தமிழ் விடைத்தாளை இன்னைக்கு நான் திருத்தினேன். நான் பொண்ணு. தமிழ்ல மட்டம். அதிகம் மதிப்பெண்கள் போட்டு பாஸ் பண்ண வைத்தால் நான் என்னையேத் தருவேன்னு எழுதி, கைபேசி எண்ணையும் குறிச்சிருக்கான். என்ன ஏமாத்தல் வேலை இது ? ” கத்தினார்.

”அது ஏமாத்தல் இல்லேப்பா? ஜொள்ளுக்காரனுக்கு செருப்படி!” சொல்லிவிட்டு நிர்மல் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

தாமோதரன் அயர்ந்தார். சிலையாக நின்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *