இவர்கள் வெளியே இருக்கிறார்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 123 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது ஓரெதிர்க் கோட்பாடு அல்ல. கதையோ கட்டுரையோ என்பது பண்டிதர்க்கு மட்டுமான அவல். நமக்கு நலிவு எல்லாத் துறையிலும் என்பதை நினைத்து எழுந்த புலம்பல் இது.

இடம்: கொழும்பு மாநகரத்தில் ஒரு மண்டபம். இங்கேதான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத் ததைப் பேசிக் கொல்லுகிறவர்களின் எல்லாச் சடங்குகளுமே நடந்தேறுவது உங்களுக்குத் தெரியும்.

நேரம்: மாலை 6.30 சரியாக இல்லை .

அந்த மண்டபத்தில் கொழும்பில் பெரிய பதவிகளை வகித்த, வகிக்கிற , வகிக்கப்போகிற தமிழ்ப் பெரிய மனிதர்களும் அவர்களுடைய மனைவிமார்களும், அங்கு வர இணங்கிய அவர்களுடைய பிள்ளைகளும் குழுமியிருக்கிறார்கள். தெளித் தாற்போல் சில சிங்களப் பெரியவர்களும் இருக்கிறார்கள். வெள்ளை வெளுக்கச் சில சிந்தி மனிதர்களும் சிந்தியிருக்கிறார்கள். அடக்கமாகவும் எளிமையாகவும் தோற்ற முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் அனேகமாக முன்வரிசைகளில்.

நடுவரிசைகளில், அந்த மண்டபத்துக்கு அருகே வசிக்கிற நடுத்தர வகுப்பு மக்கள் தங்கள் முழுக்குடும்ப சகிதம் வந்து, ‘தெய்வத்தை எப்போ காண்போம்’ என்று எட்டிப்பார்த்தபடி இருக்கிறார்கள்.

பின்வரிசைகளில் கொழும்பிற்கே உரிய கல்யாணம் பண்ணிய, பண்ணாத பிரமச்சாரிக் கூட்டங்கள் இருக்கின் றார்கள். இருக்கின்றன என்றும் சொல்லக்கூடியவாறு இருக்கிறார்கள்.

ஸ்வாமிகள் மேடையில் ஏறி அமர்கிறார். சபை பரபரப்படைகிறது. நேரத்தில் மாலை மரியாதைகளை ஒரு குழந்தை செய்கிறது. ஸ்வாமிகள் அந்தக் குழந்தையை வாத்சல்யத்துடன் நோக்கி அருள்கிறார். அது ஒரு முக்கியமான குழந்தையாக இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கக்கூடும். சபையில் இருந்தபடி குழந்தையின் பெற்றோர் விரிந்த கண்களுடன் இந்த சம்பவத்தைப் பார்த்து ஆனந்தப்படுகிறார்கள்.

கீழே ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி ‘பிஸியாக’ இருக்கிறார். அவர் ஒரு முக்கியஸ்தர்.

மேலே, மேடையில் எரியும் குத்துவிளக்கைச் சரிபார்த்தபடி இன்னொருவர் முக்கியஸ்தராக முயன்று கொண்டிருக்கிறார்.

எல்லோரும் முதலில் விறைப்பாகவும் தலையைச் சற்றே ஓரேற்றக் கோணத்தில் பிடித்தவாறும் இருக்கிறார்கள்.

பெண்கள் ஸ்வாமிகளை உன்னிப்பாகப் பார்க்கிறார்கள்.

இந்தமுறை ஸ்வாமிகள் கொஞ்சம் குறைந்த வயதினர். சட்டை போட்டிருக்கிறார் – இல்லை – என்பதெல்லாம் சின்ன விபரங்கள். இருந்தாலும் அழகுதான், இல்லாவிட்டாலும் அழகுதான். தாடிக்கறுப்பு வெள்ளை முகத்தில் ஒரு சித்தர் சோபையை ஏற்படுத்துகிறது.

“ஹரிஹி ஓம்!” என்று கம்பீரமாகத் தொடங்குகிறார்.

இப்போ திமுதிமுவென்று காவியுடையணிந்த ஒரு வெள் ளைக்காரக் கூட்டம் நுழைகிறது. அதில் உள்ள பெண்கள் தபஸ்வினிகள் மாதிரித் தோன்றுகிறார்கள். மக்கள், மரியாதை யுடனும் பக்தியுடனும் வியப்புடனும் இவர்களுக்கு வழி விடுகிறார்கள்.

இந்த வெள்ளைக்காரக் கூட்டத்தில் அமெரிக்கர்கள் பெரும்பாலும்; ஜெர்மனியர், பிரிட்டிஷ் அரசின் சொந்தப் பிரஜைகள், பிரெஞ்சுக்காரர்களுடன் வேறுபல வெள்ளைக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் ஓர் உளவாளி ஸ்தாபனத்தின் நீண்ட கொடிய கரங்களின் நகங்களாக இருக்க முடியாது என்கிற ஐயம், மண்டபத்தின் வெளியே நைந்து அழுக்கேறிய உடையணிந்து, ‘இவைகளெல்லாம் என்ன?’ என்றும், ‘சுண்டல் கிடைக்குமோ?’ என்றும், வியப்புடனும் ஏங்கும் விழிகளுடனும் நிற்கின்ற கூட்டத்தைப் பார்த்தவுடன் எழுகிறது.

மேடை விளக்கின் பிரகாசத்தில் ஸ்வாமிகளுக்குப் பின்னே, இல்லை இல்லை, முன்னே தொலைவில் உள்ள இந்த மக்களைத் தெரியவில்லை. நல்லவேளை!

ஸ்வாமிகள் மிக உருக்கமாகப் பாடுகிறார்.

சுத்த கருநாடகமுமில்லை, சுத்த சினிமா ரியூனுமில்லை. இது சுத்த கருநாடக இசையென்று மயங்கி, (தங்களாலும் இவைகளை ரசிக்க முடியுமென்ற நோக்குடன்) கேட்கிற சினிமாப் பிரகிருதிகளும், ஸ்வாமிகள் பாடுவதால், இது சினிமா இசையில்லையென்று மயங்கிக் கேட்கிற கருநாடகப் பிரகிருதிகளும் இந்த மகாசபையில் கூடி இருக்கிறார்கள். சிலபேர் இப்பாட்டுக்களை நாடாவில் பதிந்துவிட முனைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை கல்குலேட்டர், ஸ்டெதஸ்கோப் அல்லது பெரிய செக் புஸ்தகங்களுடன் தான் நீங்கள் வழக்கமாகக் கண்டிருப்பீர்கள்.

வந்திருக்கிற குழந்தைகளின் சிரிப்பொலி அல்லது அழுகையொலி ஸ்வாமிகளுடைய ஹார்மோனியத்தின் சுருதியுடன் சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.

கணேசா, விநாயகா, முருகா, கந்தா, சக்தி, தாயே, நமச்சிவாய, கிருஷ்ணா இவர்கள் மாயை மண்ணாங்கட்டியுடன் இந்த இசையோடு ஸ்வாமிகள் வாயால் வந்து, பிறகு பக்தர்கள் வாயாலும் வருகிறார்கள்.

பெண்கள் வரும்போதோ அல்லது அவர்கள் தத்தம் தலைகளைத் திருப்பும் போதோ பல ஆண்களும் அவர்களைப் பார்க்கிறார்கள். பெண்கள், ஆண்களைப் பார்க்காமலிருக்க முயற்சி செய்கிறார்கள். அல்லது ஆண்கள் பார்ப்பதை அறிந்து உணர்ந்தபடி, அவர்கள் பார்க்காத நேரத்தில் ‘டக்’ கென்று பார்த்த பின் பஜனையில் சேர்ந்துகொள்கிறார்கள். சக பெண்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்பதை மனதில் வாங்கிக்கொள்ளுகிறார்கள். எல்லோருடைய மனமும் எங்கோ….எங்கோ…

ஸ்வாமிகள் இடைக்கிடையே நமோ பார்வதிபதயே சொல்லி, அவர்கள் வாய்களால் ஹர ஹர மஹாதேவா!’ சத்தம் வரப் பண்ணிக்கொள்கிறார்.

மனம் மட்டும் இன்னும் எங்கோ .. எங்கோ ……

ஸ்வாமிகள் பஜனையை முடித்துக் கொண்டு பேச்சைத் தொடங்குகிறார். சமத்காரமான பேச்சு. த்வனி பேதம் செய்து, பாட்டுகள் பாடி, கதைகள் சொல்லி, ஹாஸ்யம் பண்ணி…

பேச்சு நன்றாக இருக்கிறதென்ற கோலாகலம்!

சாராம்சம் என்ன என்பது இந்த சம்பவங்களின் முழுமை யையும் ஒட்டியே நீங்கள் குடைய வேண்டுமே தவிர, தனி யாகக் கேட்க வேண்டுமென்றால் இதோ கொஞ்சம்!

“அஸக்திரந் பிஷ்வங்க: புத்ர தாரக்ருஹாதிஷ…”

– என்ன ராகமென்று சொல்ல முடியாததொரு பல பட்டடை ராகக் குழம்பில் சங்கதிகளும், அதையொட்டி ஹார்மோனியத்தின் கட்டைகள் கிடுகிடென்று வாய்பிளந்து ஓலமும், வன்ஸ்மோர்’ அவர் மனதிலேயே கிடைப்பதால், இருமுறை தொடர்ந்து…

“நித்யம்ச ஸமசித்தத்வமிஷ்டா நிஷ்டோப பத்திஷ…”

– சுதி இறங்கி ஓய்ந்து, தனது பலத்தைச் சேர்த்துக்கொண்டு திரும்பவும் ‘பத்திஷூவில் ஒரு பிருகா.

“இது என்ன …? அசக்தீ…”

மத்திம சுருதியில் ராகமும் ஹார்மோனிய அலறலும் பற்றில்லாமல்.

சத்தம் கீழே இறங்கி….

“கடைத்தெரு வழியாக கார்லே போறோம். கடைகளில் ஆடை அணிகளெல்லாம் தொங்குகின்றன. லைட்டெல்லாம் போட்டு ஜோடனை பண்ணியிருக்கிறான். பார்த்துக்கொண்டு போறப்பவே யோசிச்சிண்டே போறோம்.

என்னா யோசனை?

இதுலே ஒண்ணு ரெண்டு வாங்கிடுவமா? அவளுக்கு வாங்கணும். அப்புறம் மகன், மகள் எல்லோருக்கும் வாங்கணும். அதுக்கெல்லாம் மேலே எனக்கு வாங்கணும்…”

கூட்டத்தில் ஒரு சிறு சிரிப்பு மலர்கிறது.

“கூட வந்த மனைவி இதுகளைப் பார்க்கிறாளான்னு பயம் வேறே வந்து, எல்லோருக்கும் இப்போ வாங்கிறதுன்னா பர்சிலே ரெண்டாயிரம் கொறைஞ்சு போகுமே….”

இப்போ எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள். “பர்சிலேயும் பற்று, கடையில் தொங்கிற துணியிலேயும் பற்று…”

இதுவரை சிரிப்பு அலையில் பங்குகொள்ளாமலிருந்த முன்வரிசை அதிகாரிகள் இப்போது ஆளை ஆள் பார்த்து கிசுகிசு மூட்டப்பட்டவர்கள் மாதிரிச் சிரித்துக்கொள்கிறார்கள்.

“இந்த மாதிரியான பற்றுகளில்லாமல் …

அஸக்திரந் பிஷ்வங்க: புத்ர தாரக்ருஹாதிஷ…”

தன் ஹாஸ்யத்தின் வெற்றியைக் கொண்டாடும் ரீதியில் உச்சஸ்தாயியில் “அஸக்திரந் பிஷ்வங்க: புத்ர தாரக்ருஹா திஷ…”

“மகன், மனைவி, வீடு இதுகளிலே எல்லாம் பற்றில்லாமல் இருக்கணுமாமே? முடியுமா? அந்த அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜாவால் முடிஞ்சுதா? மனைவிமேல் பற்று வைத்து அவள் கேட்கிற வரத்தைக் கொடுக்கும்படியாப் போச்சு. மகன் மேலே பற்று வைத்துத் தன் உயிரையும் கொடுக்க வேண்டியதாய்ப் போச்சு. மனைவி அதைக் கேட்கிறாளே இதைக் கேட்கிறாளே என்ன பண்ணலாம்? மகன் இந்த முறையாவது கிளாசிலே பர்ஸ்ட்டா வருவானா? அதெல்லாம் போகட்டும். அவன் தெருவில் பந்து விளையாடி, வீட்டு ஜன்னல் கண்ணாடியை ஒடைச்சுட்டான்னுட்டு கம்ப்ளெயிண்டு குடுக்கறானே, இவன் ஏன் தெருவுக்குப் பக்கத்திலே வீட்டைக் கட்டினான்?”

எல்லோரும் சிரிக்கிறார்கள். ஸ்வாமிகள் இதை எதிர் பார்த்ததைப் போல் கொஞ்ச நேரம் இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறார்.

“ஏங் கொழந்தைன்னதும் என்னவெல்லாம் சொல்லத் தோன்றுகிறது பார்த்தீர்களா? நியாய அநியாயமே மாறிப் போய்விடுகிறது. அதுதான், கிருஷ்ணன் கீதையில் சொல்கிறார்!

அஸக்திரந் பிஷ்வங்க: புத்ர தாரக்ருஹாதிஷு’

ஓசை தன் வாயாலும் ஆர்மோனியத்தின் வயிற்றாலும் –

“மனைவியே அப்புறந்தான் வருகிறாள்.

…. தார…”

நின்று நிறுத்தி ஒரே ஸ்வரத்தில் ‘தார’. கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் பரபரப்படைகிறார்கள்.

“ஏன்?”

குரல் உயர்வதில் சஸ்பென்சும் கூடுகிறது.

“மனைவியைக் கண்டுதானே ஐயா பிள்ளையே வரு கிறது? இந்த கிருஷ்ண பரமாத்மாவுக்குப் பயித்தியமா? மனைவியாகப் பட்டவள் தன்னோடு இணைந்து போன ஆத்மா ஆச்சே? அவளையே தள்ளிவச்சு புத்ரவை இடையில் கொண்டுவந்து முதல் ஸ்தானம் கொடுக்கறதுக்கு அர்த்தம் என்னா?

கர்மவினைப்பயன் அப்படீங்கறது நாங்கள் முன்பிறவி யிலே செய்த பாவங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத மூட்டையாய்க் கட்டி, நம்ம தலையிலே பகவான் வச்சதுன் னது இல்லை. என்ன என்ன கர்மங்களை செய்யறதுக்காக பகவான் எங்களுக்கு இந்த உடம்புச் சட்டையைப் போட்டு அனுப்பியிருக் கிறாரோ அதுதான் கர்மவினைப்பயன். இந்த லோகத்திலே ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு கர்மா காத்திருக் கிறது. ஒருத்தனுக்கு ஒரு கர்மா காத்திருக்கு.”

ஐந்து விரல்களும் விரித்த பாணியில் இடக்கைப்புறம் சபைக்குத் தெரியும் வண்ணம் இப்படி வருகிறது.

“ஒருத்திக்கு இன்னொரு கர்மா காத்திண்டிருக்கு.”

இடக்கை மாதிரி வலக்ககை. ஆனால், மற்றப்புறம் இருந்து இடக்கைக்கு நேர் எதிரே வருகிறது.

“இரண்டு பேருமா இணையறதும் ஒரு கர்மம்.”

இரண்டு கைகளினதும் விரல்களும் ஒன்றையொன்று பின்னிக்கொள்கின்றன.

“இந்த கர்ம பலன் இன்னொரு ஆத்மாவுக்குச் சட்டை போட்டுடறது. அந்த கர்ம பலன் முடிஞ்ச ஒடனே, அந்த பந்தமே ரெண்டாவது பக்ஷமானதுதான். இல்லைன்னு அதுவே ப்ரதானம்னு இருக்கிறது தாமஸ ஞானம். அதுதான் பரமாத்மா சொல்கிறார்.”

“யத்துக்ருத் ஸ்நவ தேகஸ்மிந் கார்யே ஸக்த மஹிதுகம்.”

வேகமாக மத்திம ஸ்ருதியில் சொல்லப்படுகிறது. அவசரம் எதனால் என்பது தெரியவில்லை முன்வரிசையில் பலருக்குக் கவனம் கூடுகிறது.

“இந்த லோகத்திலே, ஒரே கார்யத்தில் அதுதான் சகலமும், அதுவேதான் எல்லா சித்திகளையும் தரும் அப்படீன்னு நெனைச் சுக்கற அல்பமான ஞானம் அப்டீங்கறது கீதை. அது ஞானமே இல்லை .

தாரமாக வாய்த்தவள் தான் சகலமும்னு நெனைக்கிறது தாமஸ ஞானம்.

இப்படிப் பார்த்தால் நம்மிலே சாத்வீக ஞானம் உள்ளவா எத்தனை பேர் இருக்க முடியும்?

டார்லிங், நான் இன்னைக்கு எந்த ஷர்ட் போட்டுக்கட்டும்? எந்த டை நான் கட்டிக்கணும்? எத்தனை மணிக்கு இங்கே திரும்பி வரணும்? வந்தப்புறம் எங்கே போகணும்?”

வேகமாகச் சொல்லிக்கொண்டே போகிறார். சற்றே நிறுத்தி –

“கொஞ்சம் சில்லறை தந்துவை பொண்டாட்டி தெய் வமே!” கெஞ்சுகிற பாணியில் குரலைக் குறைத்துச் சொல்ல சபை கலகலக்கிறது.

“இப்படி இருந்தால் எப்படி சாத்வீக ஞானம் வரும்? அதுதான் பரமாத்மா புத்ரவை முதலில் வச்சு, ‘தார வைத் தள்ளிவைக்கச் சொல்கிறார்.

அஸக்திரந் பிஷ்வங்க: புத்ர தாரக்ருஹாதிஷ நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டா நிஷ்டோப பத்திஷ.”

இரண்டு மூன்று ஸ்வர வீச்சுக்குள் பாடப்படுவதால் என்ன ராகமென்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஹார்மோனியம் நல்லவேளை தொடரவில்லை. ஒரே ஸ்வரத்தில் நின்று கொள்கிறது.

“ஸம சித்தத்வம் இஷ்ட நிஷ்டோப பத்திஷ” திரும்பவும்…

“இஷ்டமானதும் இஷ்டமில்லாததும் வர்றப்போ மனம் ஆனது ஒரே நிலையில் அமைகிற பக்குவம் வந்தடையனுமாம். இப்படியான மனோநிலை வர்றப்போ கர்மம் ஒட்டிக்கிறதில்லை. ஒருத்தனுக்கென்று காத்திருக்கிற கர்மத்தை அவன் எப்படி அதை ஏத்துக்கணும்னா, வெறுப்படைந்து செய்யவும் கூடாது. அதுவேதான் சகலமும் அப்படீன்னு அதீத ஆசை வைக்கவும் கூடாது. ஆபீஸ்லே வேலை பாக்கறவர்கள் எத்தனை பேர் தங்களுடைய வேலையை வெறுப்பில்லாமல் செய்கிறார்கள்?

பியூனிடம் “இந்த பைல் கட்டை அங்கே குடுப்பான்னு” சொல்லிப் பாருங்கள். முணுமுணுப்பில்லாமல் என்றைக்காவது அவன் வாங்கிண்டு போனது உண்டா? எல்லோரையும், ஏன் தெய்வத்தையுமே சபிச்சுண்டுதான் வாங்கிக்கொண்டு போவான். பெரிய அதிகாரிகள்னு இருக்கிறவாளும் விசேஷம்னு சொல்ல முடியாது. ஒருநாள் முழுதும் செய்யிற வேலையே ரெண்டு கையெழுத்துப் போடறதுதான். அதையாவது ஒழுங்கா, கடமையுணர்ச்சியோட செய்வோமே என்பது கிடையாது. தன் அதிகாரம் செல்லுபடியாகிறதா என்கிறதையே சதா சர்வதா யோசிச்சிண்டிருந்தா எப்படி? பதவி உயர்வு எப்போ என்கிறதும் கவலை. ஆனால், வேலையில் மட்டும் இஷ்டமே கிடையாது.”

நடு வரிசைகளின் சிரிப்பில் முன்வரிசை சேர்ந்துகொள்ளவில்லை.

“இஷ்டமும் வேண்டாம், நிஷ்டோபமும் வேண்டாம். சமசித்தத்வம் வேண்டும். அப்போதான், கர்மம் எங்களை ஒட்டிக்கிறதில்லை. அப்போதான், இந்த கர்மபந்தத்திலிருந்து விடுதலை. அப்போதான் …”

வசனங்களின் வேகம் கூடிக்கொண்டு போகிற அதே நேரத்தில் ஸ்தாயியும் கூடிக்கொண்டே போகிறது.

“ஜீவாத்மாவானது அண்டசராசரத்தோடு, பஞ்சபூதங்க ளோடு பரமாத்மாவைச் சேருகிற பாக்கியத்தைப் பெறும்.”

முத்தாய்ப்பாக ஒரு சுலோகம்; ஹார்மோனியம் இல்லாமல்.

பிருகாவும் இல்லை ….

பெரிய உபந்யாசம் முடிந்ததையிட்டு சபையில் ஒரு நிவாரண பாவம் தாண்டவமாடுகிறது.

இது எப்போ முடியும் என்று காத்திருந்த நன்றியுரைப் பெரியார் மெள்ள மெள்ள உற்சாகத்துடன் மைக்கை நோக்கி வருகிறார். உற்சாகம் எவ்வளவாயிருந்தாலும் வயது விடவில்லை . உரிய வழுக்கை, கண்ணாடி, இடுப்பில் நஷனலைச் சுற்றிச் சால்வை. முன்னொருகால் கடுவன் பூனை அதிகாரியாய் இருந்து ஓய்வுபெற்றபின் போக்கடிக்கப்பட்ட, இப்போது திரும்பி வந்திருக்கிற ‘நானே நான்’ பார்வை சகிதம் சபையின் ஜனத் தொகையைப் புள்ளிவிபரம் எடுத்தபடி வருகிறார். நாடாப் பதிவுகள் இதற்குள் நின்றுபோகின்றன. ஆனால், நாடாப் பதிவுக்கு ஒருவர் மட்டும் ஆயத்தம் செய்கிறார். பதிபவரும் ஓரதிகாரி என்பது பார்க்கத் தெரிகிறது. இவர் முகத்தில் அவர் சாயலில்லை. எனவே, பெரியவரின் மகனாகவும் இருக்கலாம். மருமகனாகவும் இருக்கலாம். சபையில் பரபரப்புக் கூடுகிறது.

போகப்போகிற அவசரம். நன்றியுரை என்பது நன்றி என்னத்துக்காகவோ அதைப் போல முக்கியமானது. இருந்தாலும், அது முழுவதையும் இங்கே தந்து பாபம் தேடிக் கொள்ள முடியாது. சபைக்கு (அதாவது முன்வரிசைக்குப் பின்னால்) தெரியவந்தது என்னவென்றால்:

(1) பெரியவர் கல்வி அமைச்சின் நிரந்தர காரியதரிசியாக இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். (நான் ஓய்வுபெற்றிருக்கிறேன்.)

(2) இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மேற்கு ஜேர்மனி , அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் போயிருக்கிறார். (நான் போயிருந்திருக்கிறேன்.)

(3) அங்கே மக்கள் இவரை இந்து சமயம் பற்றிச் சொற் பெருக்காற்றும் வண்ணம் கேட்டிருந்திருக்கிறார்கள். ஆற்றியும் இருக்கிறார். (நான் ஆற்றியிருக்கிறேன்.)

(4) அங்கேயெல்லாம் ஸ்வாமிகளுக்கு நிறைய நிறையப் பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர் கண்டிருக்கிறார். (நான் கண்டிருக்கிறேன்.)

(5) ஸ்வாமிகள் தந்த விளக்கங்கள் போல , விளக்கமாய் ஒரு நூலிலுமில்லை . (நான் நிறைய நூல்களைப் படித்திருக் கிறேன்.)

(6) பெரியவரின் தந்தையார் பிரபல வழக்கறிஞரும் பிரசித்த நொத்தாரிசும், பெரிய சைவப் பெரியாருமாவார். (நான் அவருடைய மகனாவேன்.)

(7) பிரபல வழக்கறிஞரும் பிரசித்த நொத்தாரிசும் பெரிய சைவப் பெரியாரும் இவருடைய தந்தையாருமான அவர் பகவத்கீதை தினமும் பாராயணம் செய்வதுண்டு. (நான் அவருடைய மகனாவேன்.)

பெரியவர் தனது சிற்றுரையை முடித்துக்கொண்டு கீழிறங்கியவுடன் ஸ்வாமிகள் எழுந்து கொள்ள, பின்வரிசையும் நடுவரிசையில் பின்வரிசையும் போகத் தலைப்படுகின்றன. முன்வரிசையும் நடுவரிசையின் முன்வரிசையும் சிறுசிறு கூட்டங்களாக இணைந்து பிரிந்து கொள்கின்றன. ஸ்வாமிகள் காலில் இவர்கள் விழுந்து சேவித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிறார்கள். அதிகாரிகளின் குழந்தைகள், பெண்கள் பவ்யத்துடனே இதைச் செய்கிறார்கள். அதிகாரிகள் கூட்டம் கூட்டமாக நின்று மெல்ல எதை எதையோ பேசிக்கொள்கிறார்கள்.

நன்றியுரைப் பெரியாரும் ஒரு சிறுகூட்டத்தில் நிற்கிறார். “எப்படியிருந்தது பேச்சு?” என்று பக்கத்தில் ஒருவரை ஆங்கிலத்தில் வினாவுகிறார்.

“எனக்கு எல்லாம் விளங்கியது, இதைத் தவிர. ஸ்வாமிகள் நாங்கள் செய்ய வேண்டியதுதான் கர்மம் என்கிறார் அப்படிப் பார்த்தால்…”

நன்றியுரைப் பெரியார் அவசரத்துடன் குறுக்கிடுகிறார்.

இவர்கள் வெளியே இருக்கிறார்கள்

“இல்லை…இல்லை. நான் கேட்டது என்னுடைய பேச்சைப் பற்றி.”

‘ஓ!அது மிக விசேஷமானது’ என்கிற பதில், பதிலளிப்பவரின் சக்தியெல்லாம் திரட்டி வருகிறது.

“ஸ்வாமிகள் பேச்சில் ஐயப்பட நாங்கள் யார்?” தனது அகங்காரத்திற்குச் சமாதானமாகவும் இந்த தத்துவச் சுழல் களிலிருந்து விடுபடுவதாயும் தனது முத்திரை ஸ்வாமிகள் பேச்சிற்குண்டென்ற தோரணையிலும் நன்றியுரைப் பெரியார் தலையைக் குனிந்து, கண்ணைக் கண்ணாடிக்கு வெளியால் பாய்ச்சிக் கேட்கிறார். மற்றவர் தலையை ஆட்டிக்கொள்கிறார். பிறகு இருவரின் பேச்சும் குறைந்த சப்தத்துடனே நடக்கிறது. ‘வேகன்சி’ என்பது லேசாகக் கேட்கிறது.

வெள்ளைக்காரக் கூட்டம் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்த பின்னர், தங்கள் ரூரிஸ்ட் பஸ்சை நோக்கி, வந்த வேகத்தில் போகிறார்கள். கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகின்றன. ஸ்வாமிகள் ஏறுவதற்குத் தயாராக இருக்கிற பெரிய காரின் கதவை நன்றியுரைப் பொரியார் திறக்க, ஸ்வாமிகள் ஏறிக்கொள்கிறார். இந்த நெருக்கத்தில் தான் ஸ்வாமிகளின் சந்தன வாசனை மணக்கிறது. குனிந்து, ஸ்வாமிகளிடம் பெரியார் ஏதோ சொல்ல, ஸ்வாமிகள் தலையை ஆட்டிக்கொள்கிறார். இந்தக் காரைச் சுற்றிப் பெரிய இடத்து மனைவிமார்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் ஸ்வாமிகளுக்குப் பக்கத்தில் வெளுத்த, கொழுத்த சிந்திப் பெரியவர் ஒருவர் ஏறிக்கொள்கிறார். சாரத்தியமும் ஒரு வெளுத்த, நடுத்தர வயதுச் சிந்தி, முன்னால், அவருக்குப் பக்கத்தில் இந்திரா காந்தித் தலையுடன் அவர் மனைவி. கார், மாநகரத்தின் மகத்தான சாலையில் ஒளி பாய்ச்சி முன்னேறுகிறது.

இதைத் தொடர்ந்து, நன்றியுரைப் பெரியவரும் அவர் பேச்சைப் பதிவு செய்தவரும், ஸ்வாமிகளின் சிஷ்யரான இன்னொரு ஸ்வாமிகளுடன் ஒரு காரில் விரைகிறார்கள்.

குறுக்கும் நெடுக்கும் நடந்த பிஸி’ மனிதரும், குத்துவிளக் குக்கு எண்ணெய் விட்டவரும் இன்னும் மண்டபத்தில் ஓடியாடுகிறார்கள்.

சுண்டல் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, கார்கள் ஏற்படுத்தும் இயக்கத்தையும் ஒளியையும் பார்க்க, இந்த மண்டபத்திற்கு வெனியே இதுவரையும் நின்றிருந்தவர்கள் போகிறார்கள். வெறும் வயிற்றுடன் என்ன உற்சாகம்!

மின்விளக்குகள் ஒவ்வொன்றாக நிற்பாட்டப்பட்டு, பிஸி’ மனிதர் தன் காரில் ஏறிக்கொள்கிறார்.

நேரம் ஒன்பது இருக்கும்.

முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த தவப்பயனாக அண்டை அயலாரில் முக்கால்வாசிப் பேர் வெளிநாட்டவர் களாக அமைவதாக உள்ள கொழும்பின் பகுதியில், பகவான் தந்திருக்கிற ‘ நன்றியுரைப் பெரியாரின் சிறு மாளிகையில் ஸ்வாமிகள் டொன் கரோலிஸ் சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார். கண்கள் சிவந்திருக்கின்றன. தாடி வருடலின் உளவியலை மட்டுக்கட்ட முடியாமலிருக்கிறது. இயக்கம் அமைந்துபோன நிஷ்டை போலும் கீழே கம்பளத்தில் சிறுபெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

தூரத்தில் ஒருகாலத்தில் அழகாயிருந்து, இன்னும் அவ்வாறே தோற்ற சகல பிரயத்தனங்களையும் எடுக்கிற தங்கள் நாற்பதுகளின் உள்ள பெண்மணிகள் இருக்கிறார்கள். ஸ்வாமிகளின் வெறும் மேனியும், அதிலிருந்து கமழ்கிற சந்தன வாசனையும் ஜ்வலிக்கிற தேஜசும், கரிய விழிகள் மேல் நோக்கியிருப்பதால் அமைந்த அழகும், மூச்சுடன் மெல்ல எழுந்து, மெல்ல விழுகிற அகன்ற மார்பின் பொலிவும் இந்தப் பெண்களை ஏதோ செய்கின்றன. மகத்தான சாம்ராஜ்யம் முடிவுக்கு வருவதைத் தடுக்க முடியாத இயலாமையில் எழுகிற சுதி’ மீட்டப்பட்டு , ஸ்வாமி சந்நிதியில் கரைய முயல்கிறது. ஸ்வாமிகளை, வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். சக பெண்மணிகளைப் பார்க்கும் போது, கண்கள் அசைவில்லாமலே பொதுப் பாஷை பேசிக்கொள்கின்றன. பார்….! பார்….! பார்…..!

ஸ்வாமிகளுக்கு அருகில் சிஷ்யர் நிலத்தில் இருக்கிறார்.

நன்றியுரைப் பெரியவர் இடுப்பில் சால்வையுடன் கைகட்டி நிற்கிறார். அவருக்குப் பக்கத்தில் இன்னொருவர் கைகட்டி நிற்கிறார். இவர் ஓய்வுபெறப்போகிற அதிகாரி என்பது தெரிகிறது.

பெரியவரின் காதில் மெல்லக் கேட்கிறார்.

“ஸ்வாமிகள் தத்துவம் என்ன நிஷ்காம்யகர்மமா?”

நன்றியுரைப் பெரியவர் உடனே தலையை மறுக்கும் பாவனையில் ஆட்டி, “இல்லை … இல்லை …. இது அதற்கும் மேலே. இன்றைய பிரசங்கத்துக்கு வாரும் சொல்கிறேன்” என்கிறார்.

“எங்கே பேசுகிறார்?”

“இல்லை…இல்லை. நான் பேசுகிறேன்…மண்டபத்தில் விளக்கிச் சொல்கிறேன்.”

“கட்டாயம் வருகிறேன்.”

பெரியவருடன் பேசின கிளாக்கர் முன்னே போக, மற்றவர்கள் வெளியே பின்தொடர்கிறார்கள். ந. பெரியவர் இவர்கள் போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். வரும் கார்களின் ஒளிக்கற்றைகள் இந்த நால்வர்மீதும் விழுந்து அவர்களைக்

கூசச்செய்கின்றன. தொலை தூரம் போனபின்னரே தங்களுக்குள் பேசத் தொடங்குகிறார்கள்.

“நாளண்டைக்கு எண்டால் லீவுமில்லை…”

“இதைப் பார்த்தால் ஒண்டும் முடியாது. அலுவல் நடக்க வேணுமே.”

“குடுக்கிற காசுக்குப் பிழை வராதே?” ஒரு நஷனலின் பரிதாபமான, குழந்தைத்தனமான கேள்வி.

“சா… ச்சா..” தலைமைக் கிளாக்கர் உறுதியளிப்பது போதாது போலிருக்கிறது.

“இது யார் சாமியார் ” இப்போதே இந்தக் கேள்வி எழுகிறது.

“பேப்பரில் இருந்தது பாக்கேல்லியே?”

சம்பாஷணை நகரத்தின் பைசாச ஒலியில் அமுங்கிப் போய்விடுகிறது. பெரியவர் வீட்டைவிட்டு அவர்கள் புறப்படும் போது எழுந்த “கணநாதா’, கார்களின் விலக்கொலியில் ஹோன்) இவர்களுக்குக் கேட்கிறது. இவர்கள் போய் ஒழிந்த பின்னர் பஜனையும் முடிந்தது. ஸ்வாமிகள் இப்போது நின்றபடி சமூகத்தின் கடையலுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருக்கிறார். ந. பெரியார் எல்லோரையும் அறிமுகப்படுத்துகிறார். ஸ்வாமிகள் அதிகம் பேசவில்லை. ஒரு மோகனப் புன்னகையை உதிர்த்தபடி இருக் கிறார். புன்னகை எதற்காகவோ அது சரியாக நடந்தேறுகிறது.

கொழும்பின் பெண்டிர் ஸ்வாமிகளைப் பார்த்துக் கொள் கிறார்கள். திருமதி பெரியவர் மிகுந்த உற்சாகத்துடன் இருக் கிறார்கள். அலங்காரம் செய்து கொள்ளாத மாதிரி தோற்ற மளிக்கும் வண்ணம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்வாமிகளைப் பார்த்து, “என்ன வேண்டும் ஸ்வாமிஜி?” என்று கேட்கிறார்கள்.

ஸ்வாமிகள் இன்னும் அதே புன்னகையிலிருக்கிறார். அது சுவாரசியமாக இருக்கிறது. புன்னகை, திருமதி பெரியவரை நோக்கியிருந்ததே திருமதிக்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரு கணத்தில் மற்றத் திருமதிகளை நோக்கிக் கண்களைச் சுழற்றி எடுத்துக்கொள்கிறார். திடுமென்று ஸ்வாமிகள் சொப் பனத்திலிருந்து விழித்துக் கொண்டவரைப் போல எல்லோருடனும் கதைக்க முற்படுகிறார்; எல்லோரும் இவருடைய குழந்தைகள் என்பதை வலியுறுத்துவதற்காகக் குழந்தைகளே” என்று அழைப் பதுவும், தலையையும் தோள்களையும் தடவுவதுவும்… ஓ! தெய்வத்தின் என்ன தெய்வீகப் பிரதிநிதி!

கீழே திருமதிகளும் செல்விகளும் விழுந்து சேவிக்கும் போது, கழுத்தும் தோள்பட்டையும் இடுப்பும் பிக்காசோ ஓவியங்களாகப் பிரதிநிதிக்குத் தோற்றுகின்றன. திருவாளர்கள் இப்போது சேவித்துக்கொள்கிறார்கள். இந்தச் சடங்கும் முடிந்து, ஸ்வாமிகள் அவர்களை நோக்கிப் புன்னகை செய்கிறார். ஒருவர் முன்வந்து நிற்கிறார். அவருக்கு மனதில் ஏதோ கேள்வி தோன்றி யிருக்கிறது போலும்! ஸ்வாமிகள் புன்னகை, ஏதோ இந்தக் கேள்வி தனக்குத் தெரிகிறது போலவும், இது என்ன என்பது போலவும் ஆன பல சவால்களை விடுப்பதில் தன் முயற்சியைக் கைவிட்டு, “ஸ்வாமிஜீ” என்று திரும்பவும் விழுந்து சேவித்துக் கொள்கிறார்.

ந. பெரியவர் பரம திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருக் கும்போது, “போவோமா?” என்று ஸ்வாமிகள் கேட்க, அவரை அழைத்துக்கொண்டு பெரியவர் காரை நோக்கி நடக்கிறார். ஸ்வாமிகள் மிதந்து கொண்டு போய்க் காரில் ஏறுவதைப் பெண்டிர் மிகுந்த ரசனையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். அவர் காரில் ஏறி முடிந்தவுடன் ஓர் ஏக்கம் பரவுகிறது. பெண்டிர் தங்களுக்கே உரிய மௌன மொழியில், இந்த ஏக்கத்தையும் பலவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளி வெள்ளம் பாய்ச்சிக்கொண்டு முன்னேறுகின்றன. குறுக்குத் தெருக்களைத் தாண்டி, கார்கள் பெருந்தெருவில் ஏறி, ஒவ்வொன் றாகப் பெருந்தெருவில் இருந்த பஸ் தரிப்பிடத்தில் இன்னும் பஸ் கிடைக்காமல் நின்றுகொண்டிருந்த நம்மவர் நால்வரையும் தாண்டிக் கடுகி விரைகின்றன.

“இப்பதான் போயினம் போலக் கிடக்கு” என்கிறார் ஒரு கால் சட்டை.

‘ம்ம்…’ என்கிறார்கள் மற்ற அனைவரும், பஸ் வரும் திசையை நோக்கியபடி.

ஒரு காரில் …

ந. பெரியவரின் பொன்மொழிகளைப் பதிவு செய்தவர் சாரத்தியம். அவர் அருகில், முன்னால் அவர் மனைவி போலும். பின்னால் திருமதி ந.பெரியவர், ந.பெரியவர். ஸ்வாமிகள் கூட்டத்திற்குப் போகிறார்களல்லவா? இந்த ஒழுங்கு காரில் தப்பாது.

– மல்லிகை, மே 1978

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *