இளைய பாரதத்தினன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,467 
 

ஏறக்குறைய ஒருமாத காலம் டெல்லியில் முகாம் செய்திருந்த பின்னர், சென்னையிலிருந்த தம் வீட்டுக்கு அன்றுதான் திரும்பியிருந்தார் திரு. ஆத்மநாதன் ஐ.ஏ.எஸ்.

“சார், போஸ்ட்!” என்று வாசலிலிருந்து குரல் வந்தது.

“துரை உள்ளே வரமாட்டார் போல் இருக்கிறது; வெளியிலேயே இருந்துதான் குரல் கொடுப்பார்போல் இருக்கிறது!” என்று முணுமுணுத்த அவர், ‘அபராஜிதா, அபராஜிதா! என்று குரல் கொடுத்தார்; பதில் இல்லை ; “அசோக், அசோக்!” என்றார்; அதற்கும் பதில் இல்லை; “எல்லாரும் இதற்குள் எங்கே போய் விட்டார்கள்?” என்று கேட்டுக்கொண்டே தம் அறையை விட்டு அவர் வெளியே வந்தார்.

அன்று மாலை ‘மாதர் சங்க’த்தில் தான் நிகழ்த்தவிருந்த அரும்பெரும் உரையை அவசரம் அவசரமாகத் ‘தயார்’ செய்து கொண்டிருந்த அவருடைய மனைவி அனுசூயா, ‘ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?’ என்பது போல் எரிச்சலுடன் தலை நிமிர்ந்து, “அவர்களெல்லாம் பத்து நிமிஷத்துக்கு முன்னால்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனார்களே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்றாள்.

அவளுடைய பொறுமையை மேலும் சோதிப்பதுபோல் “அவர்கள்தான் பள்ளிக்கூடம் போனார்கள்; சமையற்காரன் எங்கே போய்விட்டான்?” என்றார் அவர்.

“அவன் வேலைதான் முடிந்துவிட்டதே, எங்கேயாவது அரட்டை.படிக்கப் போயிருப்பான்!”

“தோட்டக்காரன்?”

“அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்துவைத்து, ‘அவுட்- ஹவு’ஸை ஒழித்துக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், அதைவிட்டு அவன் எங்கே வெளியே வருகிறேன் என்கிறான்?” என்றாள் அவள்.

அவர் திரும்பினார்; அவள் மறுபடியும் உரை ‘தயா’ரிப்பதில் மூழ்கினாள்.

‘டிரிங்…டிரிங்…!’

சைக்கிள் மணியைத் தொடர்ந்து “சார், போஸ்ட்!” என்ற குரல் மீண்டும் வாசலிலிருந்து ஒலித்தது.

அந்த ‘நாமம் போட்ட பெரியவ’ராக இருந்தால் நேரே உள்ளே வந்து காதும் காதும் வைத்தாற்போல் தபாலைக் கொடுத்துவிட்டுப் போவார். இவன் யாரோ தெரியவில்லை, வெளியே இருந்தபடியே குரல் கொடுக்கிறான்!’ என்று முணு முணுத்துக் கொண்டே வராந்தாவுக்கு வந்த ஆத்மநாதன், “உள்ளேதான் வாயேன்!” என்றார் வாசலில் கொஞ்சம் வாலிப மிடுக்கோடு நின்றிருந்த தபாற்காரனை நோக்கி.

“வெளியே ‘நாய்கள், ஜாக்கிரதை!’ என்று போர்டு போட்டிருக்கிறதே சார், நான் எப்படி உள்ளே வருவேன்?” என்றான் அவன்.

“இந்தக் காலத்து நாய்கள்கூடச் சாப்பிடுவதற்கு மட்டுந்தானே வாயைத் திறக்கின்றன? நீ தைரியமாக உள்ளே வா!” என்றார் அவர், தம் வீட்டு வேலைக்காரர்களின் மேல் தமக்கிருந்த அதிருப்தியை நாயின் வாயிலாகக் காட்டிக் கொண்டே.

அதைப் பற்றி அவனுக்கு என்ன?- அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

“ஆமாம், முன்பெல்லாம் ஒரு ‘நாமம் போட்ட பெரியவர்’ இந்தப் பக்கம் வருவாரே, அவரை எங்கே இப்போது காணோம்?”

“அவர் ‘ரிடைய’ராகிவிட்டார் சார், அவருடைய மகன்தான் நான்!”

“ஐ ஸீ!”

“மோட்டார் டயர் ‘ரிடைய ‘ரானால் ‘ரீட்ரெட்’ செய்து மறுபடியும் உபயோகிக்க முடிகிறது. மனிதன் ‘ரிடைய’ரானால் அவனை எங்கே சார் ரீட்ரெட்’ செய்ய முடிகிறது?” என்றான் அவன் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனத்துடன்.

“அது முடியாதுதான்; ஆனாலும் தபாற்காரன் மகன் தபாற்காரனாகத்தானா ஆகவேண்டும்? ‘குலத்தொழில் கல்லாமல் வரும்’ என்கிறார்களே, அது மாதிரியல்லவா இருக்கிறது இது? ஏன், இப்பொழுதுதான் மத்தியானம் சாப்பாடு இலவசம், படிப்பு இலவசம், எல்லாம் இலவசம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, நீ எஸ். எஸ். எல், ஸி. வரையிலாவது படித்து, குறைந்த பட்சம் ஒரு குமாஸ்தாவாகவாவது ஆகியிருக்கக் கூடாதா?”

“அதெல்லாம் அரசியல் வாதிகளின் பிரசாரத்துக்குப் பயன்படும் அளவுக்கு அடித்தளத்திலுள்ள மக்களுக்கு எங்கே சார், பயன்படுகிறது?”

“ஏன் பயன்படவில்லை?”

“அவர்கள் இன்னும் ‘இரண்டு கால் பிராணிக’ளாகத் தானே இருந்து கொண்டிருக்கிறார்கள்? இல்லாவிட்டால் மாதம் நூறு ரூபாய்கூடக் கிடைக்காத வேலையில் இருந்து கொண்டு என் அப்பா என்னையும் சேர்த்து ஏழு பிள்ளைகளையும் இரண்டு பெண்களையும் ‘நவக்கிரகங்கள்’ மாதிரி பெற்று வைத்திருப்பாரா? அதனால் என்ன ஆயிற்று? இன்று அவருக்கும் கஷ்டம்; எங்களுக்கும் கஷ்டம். அன்பு இருக்க வேண்டிய இடத்தில் அலுப்பும் சலிப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் எல்லாருக்கும் மூத்தவனான என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிவிடவே அவர் எத்தனையோ பேரிடம் தலையைச் சொறிந்து கொண்டு நின்றிருக்கவேண்டுமே!”

இதைக் கேட்டதும் ஏனோ தெரியவில்லை, ஆத்மநாதனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர் சிரித்துக் கொண்டே, “ஆமாம் ஆமாம், அதிலும் தீபாவளியும் பொங்கலும் நெருங்கும்போது அவருடைய தலை அடிக்கடி நமைக்க ஆரம்பித்துவிடும். சொறி, சொறி’ என்று சொறிந்து கொண்டே வந்து நிற்பார்!” என்றார்.

“உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடமிருந்து இனாம் வாங்குவதென்றால் சும்மாவா, சார்? தலையையும் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும்? உங்கள் காலிலும் விழுந்து எழுந்திருக்க வேண்டுமே!” என்றான் அவன் பெருமூச்சுடன்.

இது அவருக்கு என்னவோபோல் இருந்தது. “சரிசரி, நீ கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போ!” என்றார் சற்றே சிடுசிடுப்புடன்.

அவன் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அந்த ஆண்டு தீபாவளி வழக்கம்போல் நெருங்கிக் கொண்டிருந்தது. கடை வீதிகளில் மட்டுமல்ல; ஆத்மநாதன் போன்ற பெரிய மனிதர்களின் வீடுகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் முன்கூட்டியே கேட்டுக் கொண்டிருந்தது.

குமாஸ்தா வீட்டுக் குழந்தைகளே பட்டாசு வெடிக்கத் தீபாவளி வரும்வரை காத்திருக்காதபோது, அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகளா காத்திருக்கும்? அவை அடம்பிடித்து வாங்கி வெடித்தால், இவை அடம் பிடிக்காமலே வாங்கி வெடித்துக் கொண்டிருந்தன.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே சகதர்மினி சகிதம் கடை வீதிக்குச் சென்று, தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் வேண்டிய புத்தாடைகளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் ஆத்மநாதன். இன்னும் வேலைக்காரர்களுக்கு எடுக்க வேண்டியதுதான் பாக்கி. ‘அதைத் தீபாவளிக்கு முதல் நாள் எடுத்துக் கொண்டால் போச்சு!’ என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, பற்றுத் தேய்க்கும் பாப்பாத்தி வந்து அவருக்கு எதிரே நின்று தலையைச் சொறிந்தாள்.

“என்ன?” என்றார் ஆத்மநாதன்.

“இந்த வருசம் எனக்குத் தீபாவளிப்புடவை வேண்டாமுங்க!” என்றாள் அவள்.

“ஏன்?” என்றார் அவர்.

“இன்னொரு வீட்டிலும் நான் பத்துத் தேய்க்கிறேன் இல்லைங்களா? அந்த வீட்டிலே எனக்குத் தீபாவளிப் புடவை வாங்கிட்டு வந்திருக்காங்க!”

“அதற்காக?”

“நீங்க புடவைக்குப் பதிலாப் பணமாக் கொடுத்திடுங்க!”

“எதற்கு?”

“என் பொண்ணுக்கு ஏழெட்டு வயசு ஆயிடிச்சிங்க. இதுவரையிலே அவ வெட்கம்னா என்னன்னே தெரியாம திரிஞ்சிக்கிட்டிருந்தா…”

“இப்போ?”

“பாவாடை, ஜாக்கெட் இல்லாம அவள் வெளியே போகமாட்டாளாம்!”

“நல்ல வேடிக்கைதான்! வெட்க மென்றால் என்னவென்று தெரியும் வரை உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் துணிமணிவாங்கிக் கொடுக்க மாட்டீங்களா, என்ன?”

“மாட்டார்கள், சார்! ‘மானமும் மரியாதையும் இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கட்டும், நமக்கு வேண்டாம்’ என்று நினைப்பவர்கள் சார், அவர்கள்!”

இந்த ‘இடைச் செருகல்’ யாருடையது என்று தெரியாமல் பாப்பாத்தி மட்டுமல்ல, ஆத்மநாதனும் திடுக்கிட்டுத் திரும்பினார். கையிலிருந்த அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டை அவருக்கு முன்னாலிருந்த ‘டீபா’யின் மேல் வைத்துவிட்டு நின்றான் அந்தத் தபாற்காரப் பையன்.

“நீதானா?” என்றார் அவர்.

“ஆமாம் சார், நானேதான், சார்!” என்றான் அவன்.

“இந்த வேலை எத்தனை நாட்களாக?”

“எந்த வேலை?”

“வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலைதான்!”

“இரண்டு மாத முயற்சிக்குப் பிறகு இன்றுதான் சார், எனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது!”

“இதை முடித்துக் கொண்டு நீ தபாலாபீசுக்குப் போகிறாயா?”

“ஆமாம் சார், அது முடிந்ததும் நேரே சைனா பஜாருக்குப் போய்விடுகிறேன்.”

“எதற்கு?”

“கைக்குட்டை விற்க!”

“தேவலையே, ஒரே நாளில் இரண்டு வேலைகள் பார்ப்பதோடு ஒரு வியாபாரமும் செய்கிறாயே நீ?”

“எல்லாம் என் அப்பாவின் அருள்.”

“உன் அப்பாவின் அருளா!”

“ஆமாம், சார்! அவர் என்னை மட்டும் பெற்று வைத்திருந்தால் எனக்குத் தபாற்காரன் வேலையே போதும்; எனக்குப் பின்னால் எட்டுப் பேரையல்லவா அவர் பெற்று வைத்திருக்கிறார்? அவர்களுக்கெல்லாம் தீனி போட வேண்டுமே சார், தீனி!” என்று சொல்லிக் கொண்டே அவன் சைக்கிளில் ஏறிப் பறந்தான். “வேடிக்கையான பையன்!” என்று சொல்லிக்கொண்டே அவர் பாப்பாத்தியின் பக்கம் திரும்பி, “உனக்குப் பணந்தானே வேண்டும், உன் பெண்ணுக்குப் பாவாடை, ஜாக்கெட் வாங்கிக் கொடுக்க? அப்படியே தருகிறேன். போ!”, என்று சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு எழுந்தார்.

‘வருகிறேன், வருகிறேன்’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்த தீபாவளி ஒருநாள் வந்தேவிட்டது. ‘கங்கா ஸ்நானம்’ முடிந்ததும் தம் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கி மகிழ்ந்த ஆத்மநாதன், “வாடா, உனக்குத்தான் முதலில்!” என்று சமையற்காரனை அழைத்தார். வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டே வந்து அவன் நின்றான். அவனிடம் ஒரு வேட்டியையும் ஒரு துண்டையும் எடுத்து அவர் கொடுக்க, அவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

அடுத்தாற் போல் தோட்டக்காரன் தம்பதியரை அழைத்தார் அவர்.

அவர்களும் வழக்கம் போல் வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றனர். அவர்களிடம் வேட்டி, துண்டுடன் ஒரு புடவையையும் எடுத்து அவர் கொடுக்க, அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

அவர்களுக்கு அடுத்தாற் போல் பாப்பாத்தியை அழைத்தார் அவர். அவளும் வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டு வந்து நின்றாள். அவளிடம் இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தார் அவர். அதைப் பெற்றுக் கொண்டு அவள் அவரை வணங்க, அவர் அவளையும் ஆசீர்வதித்து அனுப்பினார்.

அப்போது வழக்கம் போல் அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டைக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் வைத்து விட்டு அந்தத் தபாற்காரப் பையன் திரும்பினான்.

“ஏண்டா, வேட்டி துண்டு இல்லா விட்டாலும் உனக்குத் தீபாவளி இனாமாவது வேண்டாமா?” என்றார் அவர்.

“மன்னியுங்கள், சார்! என் அப்பாதான் ‘தன்னை மதிக்கத் தெரியாதவ’ராக வாழ்ந்து விட்டார், நானாவது ‘என்னை மதிக்கத் தெரிந்தவ’னாக வாழ வேண்டாமா, சார்?-அதிலும் இந்த இனாம் இருக்கிறதே இனாம், அது பிறரை மதிக்க, பிறருக்கு மரியாதை காட்டத்தான் உதவுகிறதே தவிர, மதிக்க தனக்கு மரியாதை காட்டிக் கொள்ள உதவுவதில்லை, சார் அப்படி நீங்கள் என்னை வாழ்த்தத்தான் வேண்டுமென்று நினைத்தால் ‘மனம் உயர’ என்று வாழ்த்துங்கள், சார்” என்று சொல்லிக்கொண்டே வந்து அவன் அவரை வணங்கி நின்றான்.

“அது என்ன மனம் உயர?” என்றார் அவர், ஒன்றும் புரியாமல்.

“அவ்வை ‘வரப்புயர’ என்று ஒரு சமயம் யாரையோ வாழ்த்தவில்லையா, சார்? அந்த மாதிரிதான் இதுவும். வரப்புயர்ந்தால் நீர் உயரும்; நீர் உயர்ந்தால் பயிர் உயரும்; பயிர் உயர்ந்தால் களத்தில் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் மக்கள் உயர்வார்கள்; மக்கள் உயர்ந்தால் மன்னன் உயர்வான்; மன்னன் உயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயர்ந்தால் உலகம் உயரும். அதே மாதிரி மனம் உயர்ந்தால் மானம் உயரும்; மானம் உயர்ந்தால் மரியாதை உயரும்; மரியாதை உயர்ந்தால் தன்னம்பிக்கை உயரும்; தன்னம்பிக்கை உயர்ந்தால் ஒருவன் இன்னொருவனிடம் எதற்கும் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கமாட்டான் அல்லவா?” என்றான் அவன்.

இப்போது அவருக்குப் புரிந்து விட்டது – அவன் ‘முந்திய பாரதத்தினன்’ அல்ல, ‘இளைய பாரதத்தினன்’ என்று. அதற்குமேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை; அவன் விரும்பியபடியே ‘மனம் உயர’ என்று மட்டும் அவனை வாழ்த்தி அனுப்பினார்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *